சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.
ஆண்டாளுடைய திருப்பாவையில் இரண்டாவது பாசுரத்தின் பொருள் பற்றிய சந்தேகத்தை என்னிடம் கேட்டார்.
மார்கழி மாதம் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய நோன்பு பற்றி பாடுகிறாள். திருப்பாவையின் முதற் பாடலில் மார்கழி மாதம் பிறந்து விட்டதைப் பற்றியும் அந்த மாதத்தில் நோன்பு இருந்து திருமாலை வேண்டி பெற விருக்கும் செல்வங்கள் பற்றியும் பாடுகிறாள். இரண்டாவது பாடலில் நோன்பு இருக்கும் முறை பற்றி பாடுகிறாள்.
“பாற்கடலில் துயில் கொண்டுள்ள திருமாலின் பெருமையைப் பாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்."
(திருப்பாவை பாசுரம் எண். 2)
என்று பாடுகிறார். ஆண்டாள் இந்த பாசுரத்தில் திருக்குறளைத்தானே குறிப்பிடுகிறார் என்று கேட்டார்.
இதே கேள்வியை சில மாதங்களுக்கு முன் வேறொரு நண்பரும் கேட்டார். அவர்களுடைய ஐயம் நியாயமானதுதான் என்று எனக்கும் தோன்றியது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு பொறுப்புள்ள தமிழ் அறிஞர் ஆண்டாள் திருக்குறளைத்தான் குறிப்பிடுகிறார் என்று எழுதியிருந்த கட்டுரையை படித்தேன். அவர் எழுதியது அறியாமையில் அல்ல.தவறான நோக்கத்தோடு பாட்டின் பொருளை புரட்டி எழுதியிருக்கிறார். அவர்களைத் திருத்த முயற்சி செய்வது நம் நோக்கம் அல்ல. அந்த முயற்சி நம்முடைய நேரம் வீணாவதில்தான் முடியும்.
நண்பர்களின் ஐயத்தை போக்க வேண்டிய கடமைக்கு திரும்புவோம்.ஆண்டாள் தீக்குறளை என்று இங்கே கூறுவதை புறங்கூறல் என்ற தீய குணத்தை என்று பொருள் கொள்ள வேண்டும். ஒருவர் இல்லாதபோது அவர் பற்றி ஒருவர் தெரிவித்த கருத்துகளை அவரிடமே போய் சொல்வதை குறளை என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. இங்கே குறள்-ஐ அல்ல. குறளை என்பது ஒரு தனிச் சொல்.
கோள் என்று சாதாரண மக்கள் மத்தியில் வழக்கில் உள்ள சொல் இலக்கியத்தில் குறளை என்று குறிப்பிடப்படுகிறது. தமிழில் கோள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்றும் ஒரு பொருள் உண்டு. சென்று ஓதோம் என்ற பாடல் அடியை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். அப்படியானால் இந்த குறளை என்ற சொல் இலக்கியத்தில் கோள் என்ற பொருளில் கையாளப்பட்டிருப்பதையும் எடுத்துக் காட்டினால் சந்தேகம் முழுமையாக விலகும்.
மணிமேகலை சங்க காலத்துக்கு பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூல். அந்த நூல் ஆசிரியர் சீத்தலை சாத்தனார் ஆண்டாளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். மணிமேகலை முழுவதும் பௌத்த மதப் பிரச்சாரம் மேலோங்கி நிற்கும். அந்த நூலில் ஆசிரியர், மனிதன் சொல், செயல், மனத்தால் செய்யும் பத்து குற்றங்களைப் பட்டியல் இடுகிறார்.
கொலை, களவு, காமத்தால் மனிதன் மூன்று குற்றங்களை உடலால் செய்கிறான். பொய், குறளை, (புறம் கூறல் ) கடுஞ்சொல், பயனில்லா சொல் பேசுதல் ஆகிய நான்கு குற்றங்களை சொல்லால் செய்கிறான். பொறாமை, கோபம், பிறருக்கு தீங்கு நினைத்தல், ஆகிய மூன்று குற்றங்களை மனத்தால் செய்கிறான் என்று பட்டியல் இடுகிறார்.
கொலையே, களவே, காமத்தீ விழைவு,
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்,
பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்,
சொல், எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்.
வெக்கல், வெகுளல், பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னில் உதிப்பான மூன்றும் பத்தும் குற்றம்
(மணிமேகலை)
ஆக ஆண்டாளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த புலவர்கள் குறளை என்ற சொல்லை பயன்படுத்தியிருப்பதைப் பார்த்தால் உண்மை விளங்கும். காலப் போக்கில் குறளை என்ற சொல் வழக்கொழிந்து போய்விட்டிருக்கிறது. அதே பொருளை குறிக்கும் வேறு சொல் வழக்கில் இருக்கலாம். வைணவர்கள் மற்ற சமய இலக்கியங்களை பரந்த மனப்பான்மையோடு பார்ப்பவர்கள் என்று சொல்வதற்கில்லை.
பல வைணவ சமயப் பிரச்சாரகர்கள் தவறிக் கூட பிற சமய இலக்கியங்களை மேற்கோளாகக் கூட சொல்ல மாட்டார்கள். சைவ சமயப் பிரச்சாரகர்களும் அப்படியே. சில தனித் தமிழ் இயக்கப் பேச்சாளர்கள் பாரதியின் பெயரைக் கூட சொல்லமாட்டர்கள்.
அது தமிழ்நாட்டை பிடித்த நோய்.
ஆனால் ஆண்டாள் அந்த குற்றத்தைச் செய்ததாக சொல்வது சரியல்ல. வைணவ உரை ஆசிரியர்கள் வள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் பெருமையோடு, குறிப்பிட்டிருக்கிறார்கள்.என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சைவ சமயமும் இப்பொழுது வள்ளுவரை தன் பக்கம் ஏற்றுக் கொண்டு விட்டது. இடைக் காலத்தில் சில நூற்றாண்டுகள் நிலவிய சமயக் காழ்ப்பு உணர்ச்சி இந்த நூற்றாண்டில் இல்லை என்று சொல்ல வேண்டும். திருக்குறளை உரையுடன் மலிவுப் பதிப்பு வெளியிடும் நல்ல காரியத்தையும் சில சைவ மடங்கள் செய்து வருகின்றன.
நீண்ட வரலாறு கொண்ட எந்த மொழியிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வது இயல்புதான். இந்த வகையில் வழக்கிழந்த சொற்கள் காலப் போக்கில் திரும்பவும் மாறுபட்ட பொருளில் வழங்கப்படுவதும் உண்டு. தமிழ் மொழி வளமான மொழி. சொல்வளமும், பொருள்வளமும் மிக்க மொழி. பரந்த நிலப்பரப்பில், பல்வேறு இயற்கைச் சூழலில் வாழும் மக்கள் பேசும் மொழி. ஒரே பொருளை குறிக்க பல சொற்களைக் கொண்டு இயங்கும் மொழி தமிழ்நாட்டில் வடபகுதியில் வழக்கில் இருக்கும் சில சொற்களுக்கு தென் மாவட்ட மக்களுக்கு பொருள் தெரியாமல் போகக் கூடும். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வழக்கில் இருக்கும் வட்டாரச் சொற்களும் உண்டு. எல்லைப் புற மாவட்டங்களில் வழக்கில் இருக்கும் சில சொற்களின் மீது மற்ற மொழிகளின் செல்வாக்கு இருக்கும்.
கிராமங்களில் வாழும் விவசாயிகள் தானியங்களை அளக்க பயன்படுத்தும் அளவைகள் கூட மாவட்டத்துக்கு, மாவட்டம் வேறுபாடும். சென்னையில் மெதுவாக என்று சொல்வதை மதுரை மாவட்டத்தில் பைய்ய என்று கூறுவார்கள். பைய்ய என்ற சொல் இலக்கியத்திலும் பயின்று வருவதைப் பார்க்கலாம்.
"பைய்யவே சென்று பாண்டியர்க்கு ஆகவே"
என்று ஞானசம்பந்தருடைய தேவாரம் கூறும்.
தேவாரம் என்றவுடன் இங்கே இன்னொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும்தேவாரம் என்றவுடன் சிவனடியார்கள் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்புதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் கடந்த காலத்தில் இந்த சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் உண்டு. மன்னர்கள் அரண்மனையில் தங்களுடைய தினசரி வழிபாட்டுக்காக கட்டிக் கொள்ளும் சிறிய கோயிலை தேவாரம் என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள்.
இந்த வகையில் ஒரு சொல் காலப் போக்கில் வழக்கொழிந்து, பிறகு அதே சொல் வேறு பொருளைக் குறிப்பதாக அமைவதும் உண்டு. இன்று நாற்றம் என்ற சொல்லை துர்நாற்றத்தைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்துகிறோம். ஆனால் சங்க காலத்திலும் பிற்காலத்திலும்,
அந்த சொல்லை பூவின் வாசனை உட்பட எல்லா நறுமணங்களையும் குறிப்பிட பயன்படுத்தியிருக்கிறார்கள் தூக்கி எறிய வேண்டிய பயனற்ற பொருள்களின் குவியலை குப்பை என்ற சொல்லால் இன்று நாம் குறிப்பிடுகிறோம். ஆனால் பழங்காலத்தில் முன்னோர்கள் குவித்து வைக்கப்பட்ட எல்லா செல்வத்தையும், தானியங்களையும் குப்பை என்றே குறிப்பிட்டார்கள். நெல் குவித்து வைக்கப்பட்டால் அது நெற்குப்பை. வளமான வயல்களைக் கொண்ட ஊர்களுக்கு நெற்குப்பை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
இரண்டு பொருள் தரும் சொற்களும் தமிழில் அதிகம் உண்டு. இந்த வகை சொற்களைக் கொண்டு நகைச்சுவையோடு பாடல்களைப் பாடிய புலவர்கள் பலர் உண்டு. அத்தகைய புலவர்களில் காளமேகப் புலவர் முக்கியமானவர். தமிழில் பல பொருள்களை குறிப்பிடும் சொற்களும் உண்டு. சொல்லை பயன்படுத்தியிருக்கும் இடத்துக்கு தக்கபடி பொருள் கொள்ள வேண்டும். உதாரணமாக வண்ணம் என்ற சொல்லை குறிப்பிடலாம்.அந்த சொல்லை பயன்படுத்தி ஒரு அற்புதமான கவிதையை கம்பர் கொடுத்திருக்கிறார். அந்த கவிதையை சற்று ரசிக்கலாம்.
கௌசிக முனிவருடைய மனைவி அகலிகை மீது இந்திரனுக்கு தீராத மோகம். ஒரு நள்ளிரவில் முனிவருடைய ஆசிரமத்துக்கு அருகில் வந்து சேவல் போல குரல் கொடுக்கிறான். இந்திரன். முனிவர் பொழுது விடிந்து விட்டதாக நினைத்து எழுந்து குளிப்பதற்காக நதிக்கரைக்கு போகிறார். அந்த நேரத்தில் இந்திரன் முனிவருடைய உருவத்தில் உள்ளே நுழைந்து அகலிகையை அடைந்து விடுகிறான். நதிக் கரையை நெருங்கிய பிறகு இன்னும் விடியவில்லை என்பதை உணர்ந்த கௌசிக முனிவர் ஆசிரமத்துக்கு திரும்புகிறார்.
உள்ளே நுழைந்தவர் இந்திரனையும் தன் மனைவி அகலிகையையும் அலங்கோலமான நிலையில் பார்த்து விடுகிறார். உடனே கோபத்தில் முனிவர் இந்திரனுக்கு சாபம் கொடுக்கிறார். அகலிகையை கல்லாகப் போகும்படி சாபம் கொடுக்கிறார். தன்னை அறியாமல் தவறு செய்து விட்ட அகலிகைக்கு சாப விமோசனமும் கொடுக்கிறார். பிற்காலத்தில் ஒரு மகாபுருஷனுடைய கால்பட்டு சாபம் நீங்கி மனித உருவம் பெறுவாள் என்பதுதான் அந்த சாப விமோசனம்.
தன்னுடைய யாகத்தை காப்பதற்காக அயோத்தியிலிருந்து ராமனையும், இலக்குவனையும் அழைத்து வந்த விசுவாமித்திரர் அவர்களுடைய பாதுகாப்பில் யாகத்தை வெற்றிகரமாக முடிக்கிறார்.
தாடகையை வாதம் செய்து யாகத்தை பாதுகாத்த ராம இலக்குவனோடு, விசுவாமித்திரர் காட்டில் நடக்கிறார். வரும் வழியில் ராமனுடைய கால் பட்ட ஒரு கல்லிலிருந்து ஒரு பெண் உருவம் தோன்றுகிறது. எழுந்த அந்த பெண் ராமனை வணங்கி நிற்கிறாள். ராமன் திகைத்துப் போய் நிற்கிறான். கௌசிக முனிவரின் சாபத்தையும் முந்தைய விவரங்களையும் அறிந்த விசுவாமித்திரர் ராமனிடம் எல்லாவற்றையும் விளக்கமாக கூறுகிறார்.
இதுதான் கம்பராமாயணத்தில் அகலிகைப் படலத்தின் சுருக்கம். தொடக்க காலத்திலிருந்து எல்லாவற்றையும் கூறிய பிறகு முத்தாய்ப்பாக விசுவாமித்திரர் கூறியதாக அமைந்த கடைசிப் பாடலை சற்று பார்ப்போம்.
"இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம், இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணமன்றி, மற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே, உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன், கால் வண்ணம் இங்குக் கண்டேன்."
வண்ணம் என்றால் முறை, நிறம், திறமை என்று பலபொருள் உண்டு. இந்த பொருளை பொருத்தி கவிதையை திரும்பப் படியுங்கள். இதுதான் கம்பன் தமிழ். இப்படி எத்தனையோ பாடல்கள் உண்டு.
மு.கோபாலகிருஷ்ணன்.
அருமையான தெளிவான விளக்கம்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
அன்பு அய்யா மு.கோ.,
ReplyDeleteஅருமையான பதிவு. காலத்திற்கு ஏற்ற பதிவு.
இங்கு சொல் மட்டும் மாறுவதில்லை. தவறான புரிதலாலும், மேதாவி தனத்தாலும்
கலாச்சாரமும் மாறுகிறது. நல்ல வழிகாட்டுதல். உங்கள் மேற்கோள்களும் மிக்க அருமை.
நன்றி
வேதாந்தி
மு.கோ. சும்மா சொல்லக்கூடாது, சின்னதா ஒரு கேள்வி கேட்டேன்னு இப்படி ஒரு விளாவரியான் விளக்கத்தோடு ஒரு பதிவை நீங்க போடுவீங்கன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை. அது எப்படி பாட்டெல்லாம் புத்தகம் இல்லாம டக்கு டக்குன்னு எடுத்து விடரீங்கன்னு தெரியலை.
ReplyDeleteவழக்கம் போல பதிவு நல்லா இருக்கு, அசத்திட்டீங்கன்னு சொன்னா சரியில்லை. உங்க ஒவ்வொரு பதிவும், ஒவ்வொரு ரத்தினம் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றையும் விஞ்சும் திறம் கொண்டவை என்பதை அனுபவிக்கும் பல பேர்ல நானும் ஒருத்தன்.
நன்றியுடன்,
முரளி.
//தமிழ் மொழி வளமான மொழி. சொல்வளமும், பொருள்வளமும் மிக்க மொழி. பரந்த நிலப்பரப்பில், பல்வேறு இயற்கைச் சூழலில் வாழும் மக்கள் பேசும் மொழி. ஒரே பொருளை குறிக்க பல சொற்களைக் கொண்டு இயங்கும் மொழி //
ReplyDeleteஇவ்வரிகள் படிக்கையிலே, 'சிரமாறு உடையான்' ஞாபகத்திற்கு வருகிறது.'
//சென்னையில் மெதுவாக என்று சொல்வதை மதுரை மாவட்டத்தில் பைய்ய என்று கூறுவார்கள். பைய்ய என்ற சொல் இலக்கியத்திலும் பயின்று வருவதைப் பார்க்கலாம்.//
பொதுவாக இதை வைத்து ஒரு நகைச்சுவையும் கூட உண்டு. தெற்கில் இருந்து வடக்கு சென்ற ஒருவர், பேருந்தில் பயணச்சீட்டு தந்து, 'சில்லரை இல்லையே' என்ற நடத்துனரிடம், 'பரவாயில்லை பையக் குடுங்க' என்றிருக்கிறார்.
ஒரு குறும்பதிவில் எவ்வளவு நுணுக்கமான செய்திகள். அற்புதம் !!!
//தமிழ் மொழி வளமான மொழி. சொல்வளமும், பொருள்வளமும் மிக்க மொழி. பரந்த நிலப்பரப்பில், பல்வேறு இயற்கைச் சூழலில் வாழும் மக்கள் பேசும் மொழி. ஒரே பொருளை குறிக்க பல சொற்களைக் கொண்டு இயங்கும் மொழி //
ReplyDeleteஇவ்வரிகள் படிக்கையிலே, 'சிரமாறு உடையான்' ஞாபகத்திற்கு வருகிறது.'
//சென்னையில் மெதுவாக என்று சொல்வதை மதுரை மாவட்டத்தில் பைய்ய என்று கூறுவார்கள். பைய்ய என்ற சொல் இலக்கியத்திலும் பயின்று வருவதைப் பார்க்கலாம்.//
பொதுவாக இதை வைத்து ஒரு நகைச்சுவையும் கூட உண்டு. தெற்கில் இருந்து வடக்கு சென்ற ஒருவர், பேருந்தில் பயணச்சீட்டு தந்து, 'சில்லரை இல்லையே' என்ற நடத்துனரிடம், 'பரவாயில்லை பையக் குடுங்க' என்றிருக்கிறார்.
ஒரு குறும்பதிவில் எவ்வளவு நுணுக்கமான செய்திகள். அற்புதம் !!!
உங்கடை கதையைக் கேட்டால் எந்த ஒரு நாட்டிலையும் தமிழ்ப் பேச்சு வழக்கிலை குறளை எண்ட சொல்லு வழுவாகத் தன்னும் மாறிச் சாறிப் புழக்கத்திலை இல்லை எண்ட மாதிரிக் கிடக்கே?
ReplyDeleteசின்னதொரு எடுத்துக்காட்டு:
"சும்மா சும்மா அவனவன் சொல்லிற குறளிக் கதையளைக் கேட்டுப்போட்டு இஞ்சை வந்து அலம்பாதை"