Sunday, May 31, 2009

மட்டை தேங்காய் தெரபி

என்னை மறை கழண்ட கேஸ்னு அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. அடிக்கடி டென்ஷன் ஆகற ஆளா இருந்தீங்கன்னா நீங்க கூட இந்த தெரபியை முயற்சி பண்ணலாம். அது என்ன மட்டை தேங்காய் தெரபி ன்னு கேக்கறீங்களா? அதை ஒரு கதை மூலம் உங்களுக்கு சொல்லறேன். தமிழ் சினிமாவில் flash back காமிக்க வட்டமா ஒரு சக்கரம் சுழன்று சுழன்று போகும் பாத்திருக்கீங்களா? இப்போ உங்க மனக்கண்ல அத பாத்துகிட்டே இந்தக் கதையை கேளுங்க. இது ஒரு உண்மை சம்பவம்.

------------------------------------------------------------------------
"இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு. சீக்கிரம் சமையல் கடையை முடியுங்கோ." பெரியப்பா சொல்லிட்டு பரண் மேல் ஏறி மட்டை தேங்காய்களை இறக்க ஆரம்பித்தார். அப்பா பூஜை அறையில் கணீர்னு ருத்ரம் சொல்லறது கேக்கறது. கடிகாரத்தை பார்த்தேன். இன்னிக்கு தினத்தை விட அப்பா ரொம்ப நேரமா பூஜை பண்ணறா. காரணம் எல்லோருக்கும் தெரியும். அது தான் இன்னும் அரை மணில ஆரம்பிக்கப் போறதே.

"ஸ்கூல் ஹோம்வர்க் எல்லாம் முடிச்சாச்சா? இன்னும் அரை மணியில ஆரம்பிச்சிடும். அப்புறம் உங்க யாரையும் பிடிக்க முடியாது. இப்பவே முடுச்சு வச்சுண்டா உங்களுக்கு தான் நல்லது" அம்மா அங்கலாய்ச்சிண்டே சமையல் அறைக்கு போறா. "இன்னிக்கு மைசூர் பாக் கிண்டிப் பார்ப்போம். சமையலோ சீக்கிரம் முடிஞ்சுடும். என்ன சொல்ற?" பெரியம்மா அம்மாவிடம் கேட்பது காதில் விழுந்தது. "இன்னும் அரை மணியுல இவாள்ளாம் பிசியாயிடுவா. நம்பள யாரும் புடுங்க மாட்டா. அப்போ ஸ்வீட் கிண்டலாம்." அம்மாவும் பெரியம்மாவும் சர்க்கரைப்பாகு எந்த பதத்துல இருக்கணும்னு வாதம் பண்ணறது கோடியாத்து வரைக்கும் கேட்டிருக்கும்.

"வாசல்ல தாழ்பா திறக்கற சத்தம் கேக்கறது. யாருன்னு பாருங்கோ." பெரியப்பா உள் அறையிலேர்ந்து சத்தம் போடறா. எட்டிப் பார்த்தேன். எதிர் ஆத்து மாமா வந்துண்டு இருந்தார். பூஜையை முடிச்சிண்டு அப்பா அப்போ தான் வெளியே வந்தார். "வாங்கோ கோபாலகிருஷ்ணன் சார். பூஜை இப்ப தான் முடிச்சேன். பிரசாதம் எடுத்துக்கோங்கோ." அப்பா தட்டை நீட்டினார். "ஒ இன்னிக்கி ஸ்பெஷல் பூஜையா? வெரி குட் வெரி குட். God is great. கடவுள் துணை நமக்கு இன்னிக்கு ரொம்ப வேணும் சார். இன்னும் இருபது நிமிஷம் தான் இருக்கு. சரியான நேரத்துல எங்காத்துல கரண்ட் போயிடுத்து. மாப்பிள்ளைகள் ரெண்டு பெரும் வேற இதுக்குன்னே இன்னிக்கு வந்திருக்கா." மாமா குரல் கவலையில் கனத்திருந்தது. "அதுக்கென்ன, எல்லாரையும் அழைச்சுண்டு இங்கே வந்துடுங்கோ." அப்பா சொல்ல கூடத்துல நுழைந்த பெரியப்பாவும் ஆமோதித்தார். "இதோ போய் எல்லோரையும் கூட்டிண்டு வந்துடறேன். ரொம்ப தேங்க்ஸ் சார்." மாமா வேக வேகமா சொல்லிட்டு கிளம்பினார்.

நாலு நாற்காலியையும் பின்னால் தள்ளி விட்டுட்டு கூடத்தில் மூணு பாயை தரையில் விரித்து போடும் போதே பக்கத்தாத்துலேந்து என் தோழி ஷோபா வந்து சேர்ந்தாள். அடுத்த பத்து நிமிஷத்தில் அப்பா, பெரியப்பா, நான், என் அக்கா, தங்கை, ஷோபா, எதிராத்து மாமா, ரெண்டு அக்காக்கள், அவங்க கணவர்கள், குழந்தைகள்னு கூடத்துல இருபது பேர் ஆஜரானோம். டீவியை ஆன் பண்ணிட்டு பெரியப்பா உட்கார்ந்தார். ரொம்ப டென்ஷனா இருந்தார். இந்தியா பாகிஸ்தான் கிரிகெட் மேட்ச் அப்படின்னாலே அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் டென்ஷன் தான்.

டாஸ் ல இந்தியா பேட் செய்ய வேண்டி வந்தது. கவாஸ்கர், ஸ்ரீகாந்த் தான் ஆரம்ப மட்டையாளர்கள். ஸ்ரீகாந்த் வழக்கம் போல பெவிலியன்லேந்து வரும் போது அண்ணாந்து சூரியனை பார்த்துண்டே மைதானத்துக்குளே வந்தார். சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அப்பா ஏதோ சுலோகம் முனுமுனுத்துண்டே பூஜை அறைக்குள் போவது தெரிந்தது. ஆட்டம் ஆரம்பிக்கரத்துக்குள்ள இப்படி டென்ஷன் படராறேன்னு நான் நினைக்கரச்சையே எதிர் ஆத்து மாமா "முருகனின் நாமத்தை சொல்லேண்டா; அந்த முகுந்தன் மருகனை வேண்டினேண்டா; சரவண பவனை கூப்பிடடா; அந்த கார்த்திகேயனை கேளேண்டா" அப்படின்னு பாட ஆரம்பிச்சார். பெரிய முருக பக்தர் அவர். சகலத்துக்கும் முருகனை கூப்பிடுவார்.

ஸ்ரீகாந்த் முதல் பந்தில் ஆறு அடித்து அமர்க்களமாக ஆரம்பிக்கிறார். எங்க எல்லோர் முகத்திலேயும் பரம சந்தோஷம். திடீர்னு எதிர் ஆத்து அத்திம்பேர் ஒரு கையளவு வெங்கடாசலபதி படத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து டீவீயில் ஸ்ரீகாந்த் முன் காமிக்கிறார். பாகிஸ்தான் பௌலேர் படம் டீவியில் வந்தவுடன் சடக்குன்னு வெங்கடாச்சலபதி படத்தை மறைச்சுட்டார். ரொம்ப தீவிர கிரிகெட் பிரியர்னு புரிஞ்சிண்டேன். ஸ்ரீகாந்த் இரண்டாவது பந்தை சுழன்று அடித்து நாலு ரன்கள் குவித்தார். திரும்பிப் பார்த்தேன். பெரியப்பா துண்டால் நெத்தி வேர்வையை துடைக்கறது தெரிந்தது. அடுத்த பந்தை தட்டி விட்டுட்டு ஒரு ரன் ஓட பார்த்து ரன் அவுட் ஆகத் தெரிந்தார் ஸ்ரீகாந்த். நல்ல காலம் மயிரிழையில் தப்பித்தார். டென்ஷனில் முகம் சிவக்க எழுந்த பெரியப்பா தனக்கு தெரிந்த இரண்டு கெட்ட வார்த்தையால் ஸ்ரீகாந்தை திட்டியபடி வேக வேகமாக சமையல் அறைக்கு சென்றார். பரணில் இருந்து காலையில் இறக்கிய மட்டை தேங்காய் ரெண்டை எடுத்துண்டு கொல்லைபுரத்துக்கு சென்று வெறி வந்தது போல அரிவாளால் தேங்காய் உரிக்க ஆரம்பித்தார். சமையல் அறை ஜன்னல் வழியா பார்த்த அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம். ராத்திரி அவியலுக்கு தேங்காய் இல்லைன்னு கவலையா இருந்தா. இந்த கிரிகெட் மேட்ச் முடியரதுக்குளே பத்து தேங்கயாவது நிச்சயம் உரிச்சிடுவான்னு சந்தோஷத்துல வேலையை கவனிக்க போனா. தேங்காய் உரிச்சு முடிச்சதும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்த பெரியப்பா மறுபடியும் கூடத்துக்கு சென்று உட்கார்ந்தார்.

-----------------------------------------------

அவ்ளோ தாங்க கதை. மட்டை தேங்காய் தெரபி புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். இல்லைனா பரவாயில்லை விட்டுருங்க. அப்படி ஒண்ணும் தலை போற விஷயமில்லை.

-மீனா சங்கரன்

படம் பாரு கடி கேளூ - 29


மேஜர் புறா: சே! சே! சே! அது என்னய்யா உன் "boot" ல வெள்ளை வெள்ளையா "spots"? சரியா பாலீஷ் பண்றதில்லே?
வீரர்: அது வந்து.. வந்து.. நீங்க தான் சார்.. மேலே பறக்கும் போது அப்படியே என் "boot" மேலே...
மேஜர் புறா: என்ன மேலே கீழே? நிறுத்துய்யா! அந்த காலத்துல இருந்து நாங்கள்ளாம் இப்படியா? பறந்து பறந்து 'delivery' பண்ணினோம் (லெட்டர்களை). டிப் டாப்பா இல்லேன்னா டிஸ்மிஸ் பண்ணிடுவேன்!

முடி யாது? முடியாது

நானும் ஒரு பேரு வச்சுக்கலாம்னு யோசிச்சு ஒரு பேரு கண்டு பிடிச்சு வச்சுக்கிட்டேன். பெயரைப் பற்றி அலசாமல் என் படைப்புகளை அலசவும்.

என் பேர் வேதாந்தி.

வேலை இல்லாதவன் தான் வேதாந்தம் பேசுவான். ஒரு வகையில் எனக்கும் அது பொருந்தும்.முடி யாது? முடியாது. - அர்த்தம்


என் மகளுக்கு தான் முடி மேல் எவ்வளவு ஆசை.
முடி வெட்ட மறுக்கும் அவளுக்கும்
முடியாது என மறுக்கும் என் மனைவிக்கும் தான் தெரியும்.
இங்கே பிறந்தது என் வேதாந்தம்.
என்னால் முடிந்தது அவ்வளவு தான்
என் கொஞ்ச முடி மேல் ஆசையால் வேதாந்தம் எழுத ஆரம்பித்தேன்.
முடி மேல் யாருக்கு தான் ஆசை இல்லை
முடி சூடா மன்னருக்கும்
முடியே இல்லாத வழுக்கையருக்கும்
முடி யாது என்று எண்ணும் வேதாந்திக்கும்
முடியாது என்று மறுக்கும் என் மகளுக்கும்
வரலாறு சொன்னதோ முடியால் தொல்லை
முடியாத மொகலாயர் செய்தனர் கொலை
முடி யாது என்று ஆராய்ந்தால் இல்லை ஓர் எல்லை
முடி மேல் யாருக்குத்தான் ஆசை இல்லை
அன்று அரசன் தான் அலைந்தான் முடி சூட
இன்று அரசியல்வாதி அலைகிறான் முடி சூட
அன்றைய மங்கையர் முடிந்தால் முடி அழகு
இன்றைய மங்கையர் முடியாமல் முடி அழுக்கு
இது தான் இன்றைய இழுக்கு என்பார் வழக்கு பேசுபவர்
அது தான் இன்றைய இலக்கு என்பர் மறுசாரார்

ஒரு முடியை தேடினான் வராகன்
மறு முடியை தேடினான் நான்முகன்
முடியில் இருந்து விழுந்தாள் தாழ் முடியாள்
முடியை பார்த்தேன் என்றதால் இழந்தாள் முடியை
முடியால் எவ்வளவு தொல்லை

எனக்கோ எப்படி முடிப்பது என்பது தான் எல்லை
அதனால் முடிக்கிறேன் என் சொல்லை
உங்களுக்குத் தான் எவ்வளவு தொல்லை
முடியாது என்று சொல்லாமல் நீங்க்ளும்
முடி யாது என்று வேதாந்தம் பேச வாருங்கள் என்னுடன்.

வேதாந்தி

Saturday, May 30, 2009

"வேலை" இல்லாத நேரத்தில் நான் அறிந்தது, கற்றது, சாதித்தது

'வேலை' போய் 3 மாதம் ஆகிவிட்டது. வேலை தேடும் படலம் தொடரும் வேளையில், என்னடா இத்தனை நாட்களில் என்னதான் சாதித்தோம் என்ற எண்ணம் சில நேரங்களில் வந்து அலைகழிக்கும். நேற்று அந்த எண்ணம் மிக அதிகமாக, உடனே ஒரு வெள்ளை தாளை எடுத்து இந்த நாட்களில் நான் அறிந்தவைகள், கற்றவை மற்றும் சாதித்தவைகளை பட்டியலிட்டேன். எனக்கே ஆச்சரியம்! பட்டியல் நீண்டு கொண்டே போனது.

சிறிது காலமாக தமிழில் எழுத இருந்த ஆசையினால், இன்று அந்த பட்டியலில் இருந்தவைகளை உங்களுடன் ஒவொன்றாக பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றவே - இந்த முயற்சி. சிலருக்காவது உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்!

பாகம் ஒன்று : காய்கறி தோட்டம்
நீண்ட நேரம் கணணி முன் உட்கார பிடிக்காத எனக்கு, வேறு பொழுது போக்கு தேவைப்பட்டது. மேலும் செலவை குறைக்க வழிகளை யோசிக்கையில் இந்த வருடம் வீட்டிற்கு வேண்டிய காய்கறிகளை நாமே பயிரிடலாமே என்று உதிக்க, சிறிது சிறிதாக ஆரம்பித்தேன். காய்கறி வளர்ப்பு முறைகளையும் அதன் பயன்களையும் பற்றி இணையத்திலும் நுலகத்திலும் நிறைய படித்தேன். பல காய்கறிகள் செடியில் இருந்து பறித்த 24 மணி நேரத்தில் நிறைய சத்துக்களை இழந்து விடுவதாக அறிந்தேன். உதாரணத்துக்கு மக்காசோளம், பீன்ஸ் போன்றவை பறித்த சில மணி நேரங்களில் 50 சதவீதம் சர்க்கரை சக்தியை இழந்து விடுகிறது. ஏன்டா இத்தனை நாளாக பெண்டாட்டி சமையலை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்று மண்டைக்கு விளங்கியது.

இப்போது தோட்டத்தில் முள்ளங்கி, கீரை, மக்காசோளம், காரட், பீன்ஸ், மிளகாய், குடை மிளகாய், இஞ்சி, பூண்டு, வேண்டை, வெந்தயகீரை, பூசணி, வெள்ளரிக்காய், கொத்தமல்லி, தக்காளி, கத்தரிக்காய், அவரைகாய், வெங்காயம் என்று செடிகள் அழகாக வளர்ந்து கொண்டு வருகிறது.

சக்தான ருசியான காய்கறி கிடைப்பது மட்டுமில்லாமல், செடிகள் வளருவதை பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு எல்லாம் மேலாக நான் எதிர்பார்க்காத சில பயன்கலை உணர ஆரம்பிக்கிறேன். என்னுள் பொறுமை வளர்ந்துள்ளது - என் பெண்டாட்டி கிட்ட தான் இதை நீங்கள் கேட்டு தெரிந்துகொள்ளணும். செடி வளர்ப்பில் நாட்டம் உள்ள நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளர்கள். தோட்டத்துக்கு நிறைய அழகான பறவைகள் வருகின்றன. இயற்கையை இன்னும் அதிகமாக ரசிக்க ஆரம்பித்துள்ளேன். வேலையில் இருந்து ஓய்வுபெற்றபின் என்ன செய்வது என்ற எனது நீண்ட நாள் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது!!

"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடு மனிதரின் மொழியே தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடு மனிதற்கு மொழியே தேவையில்லை"

இதை படிக்கும் உங்களில் காய்கறி மற்றும் புசெடி வளர்ப்பதில் ஆர்வம் இருப்பின், ஏதேனும் உதவி தேவையெனின் தெரிவிக்கவும்.

உங்களால் முடியும் - உதவ நான் தயார்!!

ஹையா(யோ) இந்தியா போறோம் (தொடர் - முதல் பாகம்)

ஒவ்வொரு முறையும் இந்தியா போகலாம்னு ஒரு யோசனை வந்த ஒடனே மட மடன்னு சில எண்ணங்கள் விரைந்தோடி வருகிறது. சென்ற முறை இங்கு வந்திறங்கியதும் எடுத்த சில சபதங்கள் நினைவிற்கு வருகின்றது. நம்முள் சிலர்/பலர் எங்களின் இதே ஆதங்கங்களை அனுபவத்திருக்க கூடும். மறுமொழிகளின் மூலம் பகிர்ந்து கொள்ளவும்.

1. அடுத்த முறையாவது குறைந்த பட்ச எண்ணிக்கை(அவசிய பட்ட அளவு) பெட்டிகளை எடுத்து செல்ல வேண்டும். ஏன் தான் இப்படி முக்கி மொணகி எடுத்து செல்கின்றோமோ?

2. அடுத்த முறை இந்தியாவிலேயே கிடைக்கின்ற சாமான்களை அள்ளி செல்வதை தவிர்த்தால் இதை நம்மால் சாதிக்க முடியுமே.

3. இரோப்பாவில் நாம் சற்று நேரத்திற்காக (transit) வந்திறங்கும் விமான தளங்களில் ஒரு மூலயிலிரிந்து இன்னொரு மூலைக்கு நாம் கையில் எடுத்து செல்லும் பெட்டிகளை (hand luggage) மூச்சு திணற திணற இழுத்து செல்லும் அவலம் எண்ணியாதும் இனிமேலாவது இந்த எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் என்று எடுத்த சபதம்.

4. அடுத்த முறையாவது எடுத்து செல்லும் பேட்டிகள் அனைத்தும் சற்று சிறியதாக இருக்கட்டும். சென்ற முறை பயணத்தில் அடிபட்ட/இடிபட்ட சில பெட்டிகளுக்கு  ஒய்வு குடுத்து வாகும் பெட்டிகளை சற்றே சிறியதாக வாங்க வேண்டும் என்ற கனவு/நினவு.
5. இம்முறையாவது நிறைய சுற்றுலா இடங்களை பார்க்கவேண்டும்.

6. முடிந்த வரை எல்லா விதமான மாம்பழங்களும் ஆசை தீருமளவிர்ற்கு தின்று மகிழவேண்டும்.


7. எல்லா உறவினர்களையும் கண்டு அவர்களுடன் சிறிது நேரமாவது பொழுது கழிக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கு அந்த உறவுகளையெல்லாம் உணர்வு படுத்தவேண்டும்.

8. சிறு வயதில் நம்முடன் விளையாடிய, பள்ளிக்கு சென்ற நண்பர்களை எல்லாம் சந்திக்க வேண்டும்.

9. நிறைய இசை நிகழ்ச்சிகளுக்கும், சினிமா படங்களுக்கும் சென்று மகிழ வேண்டும்.

10. இதுபோல் பல பல

இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம்  குறிப்பிடத்தக்கது என்னவென்றால் , எமது பயணங்களின் நடுவே யாரெல்லாம் இந்திய செல்வதாக அறிவித்திருக்கிரார்களோ அவர்களுக்கெல்லாம் எங்களுடைய மேல் குறித்திருக்கும் ஞான திருஷ்டியை போதனை வடிவில் குடுத்திருக்கிறோம் (அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும்).

இந்த எண்ணங்களையெல்லாம் நினவு கூர்ந்து இம்முறை முடியுமா என்ற கேள்விக்கு இனி வரும் பாகங்களில் பதில் சொல்கிறேன். ஒரு யூகம் வந்திருக்கும் உங்களுக்கு. இருந்தாலும் பொறுத்திருங்கள், பதில் அறிய.

இனிவரும் பாகங்கள்:

இரண்டாம் பாகம்: டிக்கெட் வாங்கும் படலம்/அவலம்
மூன்றாம் பாகம்: பயண நாள் நெருங்குகின்றது (ஒரு மாசமே உள்ளது)
நான்காம் பாகம்: பயண நாள் நெருங்கி விட்டது (இரு வாரங்களே உள்ளன)
ஐந்தாம் பாகம்: பயணத்துக்கு தயார். (இரண்டே நாட்கள் உள்ளன)

பின் வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.

நாராயணன்

Friday, May 29, 2009

துப்பறியும் சாம்பு இப்பொழுது எங்கே?

ரொம்ப சுறுசுறுப்புன்னு சொல்ல முடியாட்டாலும் என்னை யாரும் இது வரை சோம்பேறின்னு சொன்னது இல்லைங்க. அடிக்கடி துடைச்சு துடைச்சு சுத்தம் பண்ணாட்டாலும் வீட்டுக்கு நாலு பேர் வரப்போறாங்கன்னு தெரிஞ்சா உடனே வாழும் அறையில் (living room) இறைஞ்சு கிடக்கிற பத்து விளையாட்டு சாமான்கள், அரை டஜன் நாய் பொம்மைகள், ஐந்தாறு அழுக்கு காலணி உறை, நாலு தலையணை, இரண்டு கதை புத்தகங்கள் மற்றும் பற்பல கலர் ரிமோட் கண்ட்ரோல்கள் எல்லாத்தையும் அள்ளி எடுத்துட்டு போய் பக்கத்து அறையில் போட்டு கதவை இழுத்து தாளிட்டு சுத்தம் செஞ்சிடுவேங்க. வீட்டுக்கு வர்றவங்க மூக்கில் விரல் வச்சு ஆச்சர்யப்படுவாங்க. என் நல்ல பேருக்கு பங்கம் வராமல் என்னுடைய நாய் பக்கத்து அறை வாசலில் உட்கார்ந்து யாரையும் உள்ளே போக விடாமல் காவல் இருக்கும். இப்ப நானே அந்த அறைக்குள் போக பயந்து போறதில்லைங்க.

அப்படிப்பட்ட நான் வீடு நிறைய கூடைகளில் தோய்த்து மடிக்காமல் துணி மணிகளை அப்படியப்படியே போட்டு வைத்திருப்பதை பார்த்து நீங்க ஆச்சர்யப்படறது எனக்கு புரியுது. என்னை மட்டும் இல்லை. எல்லா வீட்டு தலைவிகளையும் கேட்டு பாருங்க. அதுக்கு ஒரு காரணம் தான் சொல்லுவோம். முடிவேயில்லாத ஒரு வேலையை எப்படீங்க செய்ய முடியும்? ஒரு வழியா ஐந்தாறு கூடை துணிகளையும் வாஷிங் மஷினில் போட்டு துவைத்து, காய வைத்து, மடித்து அலமாரியில் வைத்து விட்டு திரும்பினால், எங்கிருந்தோ இன்னும் ரெண்டு கூடையில் அழுக்கு துணி வந்து உட்கார்ந்து என்னை பார்த்து கை கொட்டி கெக்கலிக்குதுங்க. பல வருஷங்களா 'நீயா நானா பார்ப்போம்' அப்படீங்கற வீராப்பில் நான் அழுக்கு துணியுடன் தனியாக போட்ட குஸ்தியை பார்த்து பரிதாபப்பட்டு என் கணவர் என்னை ஒதுங்கச் சொல்லி இப்போது அவர் இந்த போரில் இறங்கியிருக்கார்.

சில வருடங்களுக்கு முன்னாடியெல்லாம் ஆர்வத்துடன் துணி துவைச்சு மடிச்சு வெப்பேங்க. எதையும் சாதிக்க முடியும்னு நம்புகிற வயசு அப்போது. ஆனால் இப்பல்லாம் பெருகி வரும் அழுக்கு துணிகளை வெல்ல எனக்கு சக்தி இல்லைன்னு ஒத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்து விட்டது. இந்தப் பக்குவம் வந்ததால தான் "துவைத்த துணியை மடிச்சு அலமாரியில் வைத்து என்ன செய்ய போகிறோம்? நம் தலை அந்தப்பக்கம் திரும்பியவுடன் அது குதித்து அழுக்கு கூடையில் உட்கார போகிறது. அதனால் மடிக்காமல் கூடையிலே இருக்கட்டும்" னு விட்டுட்டேன்.

ரொம்ப காலமாவே ஒரு சந்தேகம் எனக்கு. நான் தான் எங்க வீட்டில் துணிகள் வாங்குவேன். அளவாத்தான் வாங்குவேன். அப்படி இருக்கையில் ராத்திரியோட ராத்திரியாக எப்படியோ துணிமணித்தொகை வீட்டில் பெருகிக் கொண்டு வருகிறது. நாலு துணி இருந்த அலமாரியில் இருபது துணி இருக்கிற மாதிரி தோன்றுகிறது. இந்த மர்மத்தை துப்பு துலக்க எனக்கு நேரமும் இல்லை. புத்திசாலித்தனமும் பத்தாதுங்க. இந்த வேலைக்கு துப்பறியும் சாம்புவைத் தான் கூப்பிடலாம்னு இருக்கேன். அவர் தொலைபேசி எண் உங்ககிட்ட இருக்கா?

-மீனா சங்கரன்

பின் குறிப்பு: தமிழ் சங்கம் தளத்துல அழுக்கு துணிக்கு என்ன வேலைன்னு முகம் சுளிப்பவங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் "மன்னிச்சிடுங்க.....எத்தனை யோசனை பண்ணியும் வேறு விஷயம் கிடைக்கலை" :-)

பித்தனின் கிறுக்கல்கள் – 35

நட்சத்திர வாரம்.
தமிழ்மணத்தின் நட்சத்திர வாரத்தின் முக்கியமான மூன்று விஷயங்கள் ஒன்று நாகு தொடர்ந்து பல விஷயங்களை ஒரே வாரத்தில் எழுதியது, இரண்டு, மீனா சங்கரன் அவர்களின் எழுத்து அறிமுகம். சற்று சிரமப்பட்டால் அவர் சிறந்த நகைச்சுவை எழுத்தாளராக மாறி நம்மையெல்லாம் கலங்கடிக்கக் கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. மூன்று, நாராயணன் அவர்கள் தமிழில் பின்னூட்டமிட்டது. முதல் முதலாக அவர் என்னுடைய ஒரு பதிவிற்கு ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டார், இப்போது அழகு தமிழில் பின்னூட்டமிட்டுள்ளார். அவர் எழுதியதும், நாகு எழுதியதும் பல எனக்கு புரியவில்லை எனவே அதைப் பற்றி நான் ஏதும் சொல்லப் போவதில்லை. நாராயண்ன் தான் உட்பட பலருக்கும் ‘தான் ஒரு சுப்புடு” என்ற எண்ணம் இருக்கிறது என்றது சற்று விவாதத்திற்கு ஏதுவானது.

நாகு, நான் மீனா அவர்களின் முதல் படைப்புக்கு பின்னூட்டமிட்டதும் என்னை வர வைத்ததற்காக மீனாவை பாராட்டியது கொஞ்சம் ஓவர். நான் யார் எழுதினாலும் எழுதாவிட்டாலும் தவறாமல் நமது வலைப்பூவை தினமும் தரிசித்து விடுவேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். நான் நமது வலைப்பூவில் எழுதாவிட்டாலும் முடிந்த வரை எனது வலைப்பூவில் அவ்வபோது சில பதிவுகளை பதிந்தே வந்திருக்கிறேன்.

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள்
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்து முடிவுகள் அமெரிக்க தேர்தல் முடிவைப் போலவே எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. 60000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல், கொலையாளி என்று தீர்ப்பளிக்கப் பட்ட சிபுசோரன் போன்றோரும், ஊழல் என்றால் உடன் நினைவுக்கு வரும் லாலு போன்றோரை வைத்து ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களோடு வெற்றியைத் தந்து தனது தலையில் தானே சேற்றை வாறி இறைத்துக் கொண்டுள்ளது இந்திய ஜனநாயகம். இதில் சென்னையில் எந்த வேட்பாளருக்கு ஒட்டை பதிவிட்டாலும் அது தி.மு.க வேட்பாளர் பெயரில் லைட் அடிக்கிறது என்ற புகாரைத் தொடர்ந்து 18 இடங்களில் மறு வாக்கு பதிவு நடந்தது. இந்த ஓட்டுப் பதிவு எந்திரங்கள் ஊழல்களுக்கு அப்பாற் பட்டவை என்று சில வருடங்களுக்கு முன்பு தனது தலைமேல் அடித்து சத்தியம் செய்தார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா.

இந்த பதிவு வெளிவரும் நேரம் மு.க. அழகிரி, ராஜா, தயாநிதி மாறன், நெப்போலின (நடிகர்) போன்றோர் மத்திய அமைச்சர்களாகியிருப்பார்கள். இது தேசத்தின் அடுத்த துரதிஷ்டம். இந்த கூட்டத்திற்குத் தலைவர் மன்மோகன் சிங். இதைப் பார்க்கும் போது எனக்கு அலிபாபாவும் 40 திருடர்கள் படம்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு அலிபாபா அவனுக்கு எதிராக 40 திருடர்களா என்று வியந்தது அந்தக் காலம், இப்போது ஒரு பொது ஜனம் அவனுக்கு எதிராக 59 திருடர்கள் சர்வ சாதாரணமாக அமைச்சர்களாக வலம் வரப் போகிறார்கள்.

இது இப்படி இருக்க தோற்றதற்குக் காரணம் சரியான கூட்டணி இல்லாதது என்பதைப் பற்றி யோசிக்காமல், வருண் காந்தி பேசியதால் ஓட்டு போய் விட்டது, மோடி அடுத்த முறை பிரதமராக வருவார் என்று இப்போதே ஆருடம் சொன்னது என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள் பா.ஜா.காவினர். அதற்கு பதில் இந்துத்வா மீது நம்பிக்கை அதீதமாக இருக்கிறதால் இனி பா.ஜா.கா வினர் அனைவரும் வேட்டி சட்டைக்கு பதில் கோமணம் மட்டும் கட்டிக் கொண்டு கையில் ஒரு கமண்டலம் எடுத்துக் கொண்டு, தலையில் ஒரு மொட்டை, கழுத்தில் ஒரு உருத்திராட்சக் கொட்டை, நெற்றியில் ஒரு பெரிய பட்டை என்று 5 வருடம் பார்லிமெண்ட்டை இடம் வலமாக அங்கப் ப்ரதட்சணம் செய்து வந்தால் ஓட்டு கிடைக்கலாம் என்று யோசிக்கலாம். ஒரு தலைவன் எப்போது தோற்கிறானோ அப்போதுதான் வெற்றியின் மீது அதீத பற்று கொள்கிறான் என்று படித்திருக்கிறேன். அது பொய் என்று பா.ஜா.கா வினர் காட்டியிருக்கின்றனர். 70 களில் இந்திரா காந்தி ஜனதா கட்சியிடம் தோற்ற பிறகு, படிப்படியாக அவர்களைப் பிரித்து சரண்சிங்கை ஆதரிப்பதாகச் சொல்லி ஜனதாவை உடைத்து அவரையும் கவிழ்த்து மீண்டும் ஆட்சிக்கு வந்து இந்தியாவை சாகும் வரையில் ஆண்டது இப்படி காரணம் தேடிப் பிடித்தல்ல. எப்போது ஒருவன் தனது தோல்வியை மற்றவர் மீது சுமத்த முற்படுகிறானோ அப்போதே அவன் மீண்டும் தோற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட்டான் என்று அர்த்தம். இதை புரிந்து கொண்டால் பா.ஜா.க சீக்கிரம் ஆட்சிக்கு வந்து விடலாம்.

ஜகஜ்ஜால சாமியார்.
இந்தியாவில் பகுத்தறிவு இல்லை அதனால் போலிச் சாமியார்களிடம் மாட்டிக் கொண்டு இந்த சமுதாயம் கெட்டு குட்டிச் சுவராகியிருக்கிறது என்று இனி யாரும் சொல்ல முடியாது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமுதாயம் தனது அறிவை மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது எனவே இவர்கள் ஒரு போலிச் சாமியாரிடம் (ஆசாமி) ஏமாந்து போயிருக்கிறார்கள் என்பது முதல் வெக்கக் கேடு, இந்த சாமியார் ஒரு டுபாக்கூர் என்பது இவருடைய சொற்பொழிவுகள் சிலவற்றை யூ.ட்யூப்பில் பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது இருந்தும் இவரால் பல அறிவாளிகளை ஏமாற்ற முடிந்திருக்கிறது என்பது இரண்டாவது வெக்கக்கேடு. இத்தனை செய்தும் இவரால் இன்னமும் அமெரிக்காவில் தலை மறைவாக இருக்க முடிகிறது என்பது மூன்றாவது வெக்கக்கேடு.

“என்னய்யா, சும்மா வழ வழன்னு இழுக்கறே, அந்தச் சாமியார் யாருன்னு சொல்லு” என்று நீங்கள் அடிக்க வருவதற்குள் சொல்லி விடுகிறேன். ஜார்ஜியா மாகாணத்தில் இந்துக் கோவில் ஒன்றை நிர்வகிக்கும் செல்வம் அண்ணாமலை தான் அந்த ஜகஜ்ஜால சாமியார்.
இவரது கோவிலைப் பற்றிய பத்திரிகை ‘சித்தி’ பிரதியை நமது ரிச்மண்ட் கோவிலில் இருந்து எடுத்து வந்து பார்த்த போது இவரைப் பற்றி தெரியவந்த்தது. அதில் இவர் ஒரு சித்தர் என்பது போல சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.
சமீபத்தில் ஜார்ஜியா மாகாணம் வழியாக ரிச்மண்ட் வரும் வாய்ப்பு வந்த போதே இந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும், எப்படி நம்மை போல இருக்கும் ஒருவர் தன்னை ஒரு சித்தர் என்று கூறிக் கொள்கிறார் என்பதை நேரில் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன், அது முடியாமல் போகவே அந்த கோவிலைப் பற்றியும் அதன் நிர்வாகியான இவரைப் பற்றியும் வளைதளத்தில் சோதித்ததில் தன்னைத் தானே சித்தர் என்றும் மருத்துவர் என்றும் அழைத்துக்கொள்ளும் இவரைப் பற்றி பலப் பல மோசடி குற்றச்சாட்டுக்களும், பாலியல் குற்றச்சாட்டுக்களும் இணைய தளத்தில் குவிந்திருக்கின்றன என்பது தெரிய வந்தது.

யூட்யூபில் இருக்கும் இவரது இந்த ஒளிப்பதிவை பார்த்தால் இவர் எப்படிப் பட்டவர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பேசுகிற 10 நிமிடத்தில் இவர் சொல்ல வருவது ஒன்றும் இல்லை, இதற்கு எதற்காக இவர் இத்தனை பேசுகிறார் என்பது தெரியவில்லை.

இவர் மீது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு, தான் ஒரு சித்தர் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது, பலரது க்ரெடிட் கார்டுகளை அவர்கள் அனுமதியின்று உபயோகப் படுத்தியது, பணம், பணம் மற்றும் பணம், மேலும் பணம் என்று அலைந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் விவரங்கள் வேண்டுவோர் இந்த தொடர்பை க்ளிக்கினால் தெரிந்து கொள்ளலாம். http://www.soulcast.com/post/show/201873/"Doctor-Commander"-Selvam-Sitter-is-a-fraud,-felon,-womanizer,-child-molester
இவரைப் பற்றி அட்லாண்டா மாநகரத்தின் ஃபாக்ஸ் (FOX) தொலைக்காட்சியில் பல பகுதிகளாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவைகள்: பகுதி – 1 பகுதி – 2 பகுதி – 3 பகுதி – 4 பகுதி - 5
இணைய தளத்தில் இருக்கும் ஒளிப்பதிவை பார்க்கையில் இவர் கொஞ்சம் நடிகர் விஜயகாந்தின் சாயலில் இருக்கிறார். இவரிடம் ஏமாந்ததாக ஒரு சிலரே வெளிவந்து புகார் சொல்கின்றனர், மற்றவர்கள் ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை. இந்தக் கோயிலில் இருக்கும் திருமணம் மற்றும் பல விசேஷங்களுக்கான மண்டபத்தில் யாரும் எதையும் கொண்டுவந்து உண்ணலாம். இதில் எதையும் என்பது குறிப்பிடத்தக்கது. புலால் உண்ணலாம், மது அருந்தலாம், புகை பிடிக்கலாம். இதை இவரே தொலைக்காட்சி நிருபரிடம் சொல்ல அதை ஒரு மறைவான காமிரா மூலம் பதிந்திருக்கிறார்கள்.
சிவன் சொத்து குலநாசம் என்பார்கள் பெரியோர். இவர் செய்யும் அத்தனை செயல்களும், ஒரு சிவன் கோவிலில் இருந்து என்பது பெரிய வெக்கக்கேடான விஷயம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com

Wednesday, May 27, 2009

ஆஸ்தான புலவரும் சின்னத் திரையும்! (மூன்றாவது பாகம்)

காட்சி - 3
உணவு இடைவேளைக்கு பின் தர்க்கம் தொடர்கிறது
எலியூர் அரண்மனை ராஜ சபை

காவலாளன்: எலி பிடிக்கும் பூனையின் எதிரி அவன் வீரன், பராக்ரம சூரன், தான் உண்ட மீதியை தானம் செய்யும் வள்ளன், பளபள உடை அணியும் அழகன், அவன் எலியூர் மன்னன் அழுமூஞ்சிவர்மன் பராக் பராக் பராக்.

எலியூர் அரசன்: வெளிநாட்டு புலவரே, ஆஸ்தான புலவரின் மூன்றாவது கேள்விக்கு விடை சொல்லி தர்க்கத்தை தொடர தாங்கள் தயாரா?

வெளிநாட்டு புலவரே: ஆமாம் மன்னா.

எலியூர் அரசன்: ஆஸ்தான புலவரே மீண்டும் ஒரு முறை மூன்றாவது கேள்வியை கேளுங்கள்.

ஆஸ்தான புலவர்: அப்படியே ஆகட்டும் மன்னா. புலவரே, சின்னத் திரையில் கதாநாயகிகளாக வரும் பாத்திரங்கள் அதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வெளிநாட்டு புலவர்: விளம்பரங்களில் நடித்து பற்பல சாமான் விற்கும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஆஸ்தான புலவர்: தவறு. அவர்கள் அதற்கு முன் பெரிய திரையில் முன்னிலை கதாநாயகிகளாக நடித்து திருமணமான அடுத்த நாளிலிருந்து அழகையும் கவர்ச்சியையும் இழந்ததாக முத்திரை குத்தப்பட்டு அக்கா, பெரியம்மா, சிறிய தாயார் போன்ற பாத்திரங்களுக்கு ஒதுக்கப்பட்ட சோகத்தில் நொடிந்து போய் நடித்து கொண்டிருந்தார்கள்.

எலியூர் அரசன்: சபாஷ்! சபாஷ்!

ஆஸ்தான புலவர்: நன்றி அரசே! இதோ எனது அடுத்த கேள்வி. ஒரு மெகா தொடரை இன்று பார்த்த பின்பு ஒரு வருடம் சென்ற பின்பு மறுபடி பார்த்தால் கதையில் மாற்றம் இருக்குமா இருக்காதா?

வெளிநாட்டு புலவர்: அது எப்படி ஒரு வருடத்தில் மாற்றம் இல்லாமல் போகும்? நிச்சயம் ஒரு வருடத்தில் பல சம்பவங்கள் முடிந்திருக்கும்.

ஆஸ்தான புலவர்: அது தான் இல்லை. வாரத்தில் ஒரு முறை அரைமணி நேரம் வரும் தொடரில் இருபத்தெட்டு நிமிடம் விளம்பரங்கள் போட்டு இரண்டு நிமிடம் மட்டுமே தொடர் வருவதால் ஒரு வருடத்தில் கதை நகர சிறிதும் வாய்ப்பில்லை.

இதோ எனது கடைசி கேள்வி புலவரே. கொலைக் காட்சி போன்ற ஒரு முக்கியமான காட்சியில் வில்லன் கத்தியை உயர்த்தி பிடித்து குத்துவதற்கு முன்பு அதிர்ச்சி தருவது போல பின்னணி இசை வரும். அப்பொழுது என்ன நடக்கும்?

வெளிநாட்டு புலவர்: இதற்கு விடை எனக்கு தெரியாது புலவரே. உங்கள் புலமைக்கு நான் தலை வணங்கி இந்த தர்க்கத்தை நீங்களே வென்றீர் என ஒத்துக் கொள்கிறேன். உங்களது கடைசி கேள்விக்கு நீங்களே பதிலையும் சொல்லி விடுங்கள் ஐயா.

ஆஸ்தான புலவர்: இதோ அதன் பதில் புலவரே. ஒன்றுமே நடக்காது. மறுபடி அடுத்த வாரம் தொடரும் என்று கூறி நேயர்களை நோகடிப்பார்கள். அவ்வளவு தான்.

வெளிநாட்டு புலவர்: நான் தோற்று விட்டேன் மன்னா. உங்கள் நாட்டு புலவரின் அறிவாற்றலின் முன்பு நான் தலை குனிகிறேன் அரசே. இனி நான் எலியூர் பக்கம் எந்த ஒரு தர்க்கத்திற்கும் வர மாட்டேன் என்று கூறி விடை பெறுகிறேன்.

எலியூர் அரசன்: சென்று வாரும் புலவரே. சின்னத் திரையை கரைத்து குடித்திருக்கும் எங்கள் புலவரிடம் தோற்றது உமக்கு இழிவு அல்ல. பெருமை தான். ஆஸ்தான புலவரே, நன்று செய்தீர், இந்நாட்டின் பெருமையை உயர்த்தினீர். உங்களின் சின்னத் திரை மெகா தொடர்களின் பண்டிதத்தை பாராட்டி 'மெகா புலவர்' என்று பட்டம் அளித்து இந்த பத்து பொற்காசுகளை சமானமாக அளிக்கிறேன்.

ஆஸ்தான புலவர்: கொடைவள்ளல் அழுமூஞ்சிவர்மா! உங்கள் அல்பத்தனத்துக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கேன். வாழ்க எலியூர் மன்னன்! வளர்க அவன் புகழ்!

(முடிவுற்றது)
---------------------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

Tuesday, May 26, 2009

நட்சத்திர வாரத்தின் சாதனை

தமிழ் மணத்தில் நட்சத்திர வாரம் என்பது ஒரு மிகப் பெரிய கெளரவம் அதை ஒரு சாதாரண விஷயம் போல அசத்தி இருக்கிற நாகுவிற்கும், ஒத்துழைத்த சதங்கா, மீனா சங்கரன் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாகுவின் இரண்டாவது மலையேறுதலுக்கு முன்பு அவரிடம் கூகுள் சாட் மூலம் பேசிக்கொண்டிருந்தேன் அவரோடு பகிர்ந்து கொண்ட முக்கியமான விஷயம் தமிழ் மணத்தின் இந்த கெளரவமும் அதை மிகச் சரியாக பயன் படுத்திக் கொண்டதும்.

இனி வாரம் ஒரு பதிவு நமது வளைப்பூவில் வெளியாக முயல்வோம். எனக்கு வேலை பளு அதிகமாக இருப்பதால் அதிகம் எழுத முடிவதில்லை இது இன்றைய கால கட்டத்தில் தேவையான ஒன்று என்று நினைக்கிறேன். இருந்தாலும், எழுதுவதை நிறுத்தாமல் எழுதி முடிக்கவேண்டிய மர்மத்தொடரிலிருந்து, மர்ம நாடகம், சமீபத்தில் எனது நண்பர் பெரியபுராண கதைகளை எனது பாணியில்(!) எழுதும்படி எனக்கு கொடுத்த வேலைவரை உள்ள அனைத்தையும் விரைவில் செய்து முடிக்க முயலுகிறேன்.

மீனா: உங்கள் பாணி மிக அருமை. உங்களின் இந்தியப் பயணத்தை ஒரு நகைச்சுவை கட்டுரையாக எழுதினால் அருமையாக இருக்கும்.

முரளி இராமச்சந்திரன்.

என்னடா இது உடுப்பிக்கு வந்த சோதனை?

நாமதான் உடுப்பி ரெஸ்டாரெண்டுன்னு அடிச்சிக்கனும். உடுப்பில மக்கள் என்ன சாப்பிடறாங்க தெரியுமா? கூகுள்ல உடுப்பி ரெஸ்டாரெண்டு மெனுன்னு தேடினா என்ன வந்து நிக்குது பாருங்க...