Monday, June 08, 2009

நமட்டுச் சிரிப்பு

அண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கே அவரின் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கையில் வேலை, சம்பாத்தியம் என்பது பற்றி பேச்சு வந்தது. எதற்காக சம்பாதிக்கிறோம்? என்று பொதுவாக கேள்வி எழ, நானும் முந்திக்கொண்டு செலவழிக்கத்தான்! என்றேன். அந்த பெரியவரும் விடாமல் எதற்கு செலவழிக்கனும்? என்று கொக்கி போட, நானும் உடனே வாழத்தான்! என்றேன். பெரியவர் சிறிது நேரம் மௌனித்து ஒரு நமட்டுச் சிரிப்பு உதிர்த்து விட்டு வேறு விஷயத்திற்கு பேச்சை மாற்றினார்.

அன்று இரவு படுக்கையில் அந்தப் பெரியவரிடம் பெசியனவற்றை மனது லேசாக அசை போட.. ஏதோ ஒன்று மனதுக்கு புலப்படாமல் தொல்லை தந்தது. அந்த பெரியவரின் நமட்டுச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்? பதில் காண முயன்றும் முடியாமல் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு எப்படியோ தூங்கிப்போனேன்.

மறுநாள் காலையில் வீட்டின் அருகில் இருந்த காபிக் கடைக்கு வாகனத்தில் சென்று சூடாக ஒரு காபி வாங்கி 5 வெள்ளி மொழி எழுதி விட்டு காபியை சுவைத்துக்கொண்டு இருக்கையில்..அந்தப் பெரியவரின் நமட்டுச்சிரிப்பு திரும்பவும் நினைவில் வந்து தொல்லை தந்தது. பதில் தெரியாமல், ஏன்டா அந்தப் பெரியவரிடம் பேசினோம் என்று நொந்து கொண்டு, வேக வேகமாக காபியை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். சமையல் அறையிலிருந்து "பால் தீர்ந்துவிட்டது. தயிர் போட பால் வேண்டும். கொஞ்சம் சீகிரமாய் போய் வாங்கிட்டு வாங்க" என்று மனைவி அறைய, உடனே வாகனத்தை கிளப்பி Costco விற்கு விட்டேன்.

கடைக்கு உள்ளே நுழைந்ததும், பள பளவென மின்னிக்கொண்டு 64 அங்குல HDTV என்னை பார் என்றது. ஆஹா.. நம்ப வீட்ல இருக்கிற 2 தொலைக்காட்சி பெட்டிகளும் வாங்கி 2 வருடம் ஆகிவிட்டதே, மேலும் நமது மூன்றாவது படுக்கை அறையில் தொலைக்காட்சி பெட்டி இல்லையே.. 200 வெள்ளி குறைத்து வேறு போட்டிருக்கான்.. சரி வாங்கு என்று மூளை உத்திரவு போட, முதுகு வலிக்க எப்படியோ அந்த தொல்லைபெட்டியை கூடையில் கிடத்தினேன். அடுத்த சந்தில் நுழைந்தால்.. அங்கு ஒரு நீல நிற சட்டை வா! வா! வசந்தமே என்று கூப்பிட, நானும் நம்பகிட்ட இந்த நிறத்தில் சட்டை இல்லையே என்று யோசித்து, ஒரு சட்டையை எடுத்து கூடையில் வைத்தேன். இப்படி ஒரு வழியாக கடையை ஒரு வலம் வந்து காசாளரிடம் 1200 வெள்ளியை சிரித்துக்கொண்டே கடன் அட்டையில் கொடுத்துவிட்டு வாங்கினவற்றை முதுகு வலிக்க வாகனத்தில் முக்கி முனகி ஏற்றிக் கொண்டிருக்கையில். சிரிப்பு மணிபோல் செல்போன் அடிக்கவே, எடுத்து Hallo கூட சொல்லி முடிக்கலை. அடுத்த முனையில் இருந்து "ஏங்க.. பால் வாங்க போய் ஒன்றரை மணியாச்சி..எங்க இருக்கீங்க?" என்று மனைவி குரல் கேட்டதும் நினைவிற்கு வந்தேன். சிறிது யோசித்து "நண்பர் ஒருவரை சந்தித்தேன். அதான் கொஞ்ச நேரமாகிவிட்டது. இதோ இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன்" என்று ஒருவழியாக "உண்மை" சொல்லி மூச்சு விட்டதும் பால் வாங்க மறந்தது மூளையை எட்டியது. உடனே அடித்து பிடித்து திரும்பவும் ஓடி ஒரு பால் புட்டியை எடுத்துக்கொண்டு costco வின் திருப்பதி வரிசையில் திரும்பவும் நின்று வாங்கி ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். பிற்பகலில் மனைவி எங்கோ போக வேண்டும் என்று சொன்னது நினைவில் வரவே.. வெறும் பால் புட்டியை மட்டும் எடுத்துக்கொண்டு வாங்கிய மற்றனவற்றை வாகனத்திலேயே விட்டு விட்டு உள்ளே சென்றேன்.

மதிய உணவு அருந்திவிட்டு மனைவி வெளியே கிளம்பிவிட.. நான் புதிய தொலைகாட்சி பெட்டியை எடுத்துவந்து 1 மணி நேரமாய் மாட்டி விட்டு களைப்பில் சிறிது அசந்து படுக்கையில் சாய்ந்தேன். ஒரு அரை மணி நேரம் தூங்கியிருப்பேன். ஏதோ கெட்ட கனவு வந்து எழுப்பி விட்டது. இரண்டங்கெட்ட நிலையில் உட்கார்ந்திருந்த போது திரும்பவும் அந்த பெரியவரின் நமட்டு சிரிப்பு வந்து எரிச்சலூட்டியது. இதற்கு எப்படியாவது இன்று அர்த்தம் கண்டாக வேண்டும் என்று முடிவெடுத்தேன். திரும்பவும் அவருடன் பேசியவற்றை நினைவு கூர்ந்தேன். சம்பாத்யம், செலவழித்தல், வாழ்வதற்கு.. ஒரு வேளை நாம் செலவழிப்பன எல்லாம் வாழ்வதற்காக என்பதில் அந்த பெரியவருக்கு உடன்பாடு இல்லையோ? வாழ்வதற்கு அவசியம் உணவு, உடை, உறையுள்.,,, ஏதோ கொஞ்சம் புரிந்தார் போல் தோன்ற, வேகமாக எனது அலுவலக அறைக்கு சென்று கடந்த இரண்டு மாத வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டை அறிக்கையும் எடுத்து ஒவொன்றாக ஆராய்ந்தேன். வீட்டு கடன், வாகன கடன், மளிகை செலவு, துணி செலவு இப்படி நீண்டு கொண்டே போனது. அனால் எல்லாம் இந்த உணவு, உடை, உறையுள் என்னும் வாழ்க்கைகு அவசியம் என்ற கோட்டிற்கு உள்ளேயே இருந்தது. ஆஹா. நாம் ஏதும் அனாவசியமாக செலவு செய்வதில்லை என்று மகிழ்ந்து.. ஒருவேளை அந்தப் பெரியவர் நாம் அளந்து செலவு செய்பவன் என்று தெரியாமல் அப்படி சிரித்திருக்கலாம் என்று நினைத்து.. அந்த புரியாத நமட்டு சிரிப்புக்கு அர்த்தம் தெளிந்ததாக எண்ணி ஒருவழியாக நிம்மதியானேன்.

மாலையில் சிறிது நடந்துவிட்டு திரும்புகையில் புதிதாய் வாங்கியுள்ள தொலைகாட்சி பெட்டியை மனைவி வந்ததும் காட்டி அசத்தனும் என்ற நினைப்புடன் வீடு திரும்பினேன். களைப்பு போக நன்கு குளித்து விட்டு புது பொலிவுடன், ஒரு காபி போட்டு கையில் எடுத்துக்கொண்டு புதிய தொலைகாட்சி முன் அமர்ந்தேன். அன்று இந்திய குடியரசு தினம். முன்னாள் ஜனாதிபதி திரு ஆ பி ஜே அப்துல் கலாம் அவர்களை நகைச்சுவை நடிகர் விவேக் எடுக்கும் நேர்முக பேட்டி ஓடிக்கொண்டு இருந்தது. விவேக் கேட்ட நகைச்சுவை கலந்த சுவையான கேள்விகளுக்கு ஜனாதிபதி சுவையாக பதிலளித்தார். "நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போதும் 4 சட்டை மட்டுமே வைத்து இருந்ததாக கேள்விபட்டேன். உண்மையா? ஏன் இந்த எளிமை?" என்று விவேக் அடுத்த கேள்வி கேட்க, அப்துல் கலாம் அவர்கள் "எனக்கு அவசியமானது அவ்வளவுதான்!" என்று கச்சிதமாக பதில் கூறி நன்கு சிரித்தார். அந்த சிரிப்பு கேட்டதும் எனக்கு யாரோ தலையில் சுத்தி வைத்து ஓங்கி அடித்து போல தோன்றியது. எல்லாம் தெளிந்ததாக இருந்த நிலை போய் பலபலவற்றை எண்ணி மனம் குழம்பியது. சிறிது சிறிதாக உண்மை புலப்பட அந்த நமட்டு சிரிப்பிற்கு உண்மையில் அர்த்தம் விளங்கியது.

வாழ்கை வாழ 10 சட்டை அவசியம். 100 சட்டை அனாவசியம். கிராமத்தில் மிரசுதாராக இருந்த தத்தா, உடுத்திருந்த துணியை குளிக்கும் பொது துவைத்து காயவைத்துவிட்டு நேற்று துவைத்து வைத்திருந்த துணியை எடுத்து உடுத்திக்கொண்டு வயலுக்கு செல்லும் காட்சி நினைவுக்கு வந்தது. ஒரு தொலைகாட்சி பெட்டி அவசியம். மூன்று அனாவசியம். ஒரு கைகடிகாரம் அவசியம். ஒன்பது அனாவசியம். ஒன்றோ இரண்டோ காலணி அவசியமாகலாம். பத்து அனாவசியம். வீட்டில் வாங்கி வைத்துள்ள german காபி போட்டு குடிப்பது அவசியமாகலாம். அருகில் இருக்கும் காபி கடைக்கு வாகனத்தில் சென்று 5 வெள்ளி கொடுத்து காபி குடிப்பது அனாவசியம். இப்படி எண்ண அலைகள் எங்கெங்கோ ஓட வீட்டை சுற்றி பாத்தேன். தலை சுற்றியது.

புதிதாக வாங்கிய தொலைகாட்சி பெட்டியை அதன் பெட்டியில் போட்டு வாகனத்தில் வைத்தேன். ஒரு படுக்கை அறை முழுக்க வெகு நாட்களாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த துணிகளை ஒரு பையில் போட்டு வாகனத்தில் ஏற்றினேன். உடுத்தாமல் வருடங்களாக தொங்கிகொண்டிருந்த துணிகள் மற்றும் தேவையில்லாத பல சாமான்களை வாகனத்தில் ஏற்றினேன். எட்டு பேர் அமரும் அந்த வாகனம் அவசியமில்லாத விஷயங்களால் நிரம்பி வழிந்தது. வாகனத்தை நேரே Costco விற்கு விட்டேன். தொலைகாட்சி பெட்டியை திரும்பக் கொடுத்தேன். அடுத்து நேராக Goodwill கு செலுத்தினேன். எல்லா அனாவசியங்களையும் தானம் செய்துவிட்டு திரும்புகையில் அங்கிருந்த வயதான பெரியவர் ஒருவர் நன்றிப் புன்னகையோடு கையசைத்து வழி அனுப்பினார். இந்தப் புன்னகையின் அர்த்தம் உடனே விளங்கியது.

வாகனத்தில் ஏறி கிளப்பியதும் ஒலி நாடாவிலிருந்து பாமா விஜயம் படத்திலிருந்து " வரவு எட்டணா.. செலவு பத்தணா" என்று பாட்டு வாகனத்தை நிறைத்தது. எனக்குள் சிரித்துவிட்டு, அந்தப் பெரியவரின் நமட்டுச் சிரிப்பையும் இந்தப் பெரியவரின் நன்றிச் சிரிப்பையும் அசை போட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்!!

Sunday, June 07, 2009

மீனாவுடன் மிக்சர் - 3 {வெள்ளிக்கிழமையா? பூசாரியை கூப்பிடுங்க.}

"உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"

என் உச்சி மீது வான் இடிஞ்சால்லாம் நான் பயப்பட மாட்டேங்க. அது பாட்டுக்கு விழுந்திட்டு போகட்டும்னு விட்டுடுவேன். நான் பயத்துல நடுங்கறது ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் தான். அது தான் வெள்ளிக்கிழமை.

வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தாலே நான் 'உலக மகா கோழை' அப்படீங்கற பட்டத்தை வாங்க தயாராயிடுவேன். ஊர் உலகத்துல எல்லாரும் வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தா "அப்பாடா, இனி ரெண்டு நாள் வேலைக்கு போக வேண்டாம், ஸ்கூல் போக வேண்டாம்"னு சந்தோஷமா இருப்பாங்க. நான் மட்டும் அம்மன் கோவில் பூசாரியை வேப்பிலை அடிக்க கூப்பிடும் நிலையுல இருப்பேன். என்னோட இந்த பயத்துக்கு என்ன காரணம்னு சொல்லறேன் கேளுங்க.

என் குழந்தைகளுக்கு 102 டிகிரி ஜுரம் வந்தா, அது வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான் வரும்னு ஒரு தீர்கதரிசியோட தீர்மானத்தோட என்னால சொல்ல முடியும். திங்கள் லேந்து வெள்ளி சாயந்திரம் வரை ஒரு பூச்சி பொட்டு கூட கடிக்காம மிகச்சிறந்த உடல் நிலையில் இருக்கும் என் குழந்தைங்களுக்கு வெள்ளிகிழமை ராத்திரிக்குள் ஜுரம், வாந்தி, பேதி, தலை வலி, வயித்த வலி, பல் வலி மற்றும் இதர பல உடல் உபாதைகள் வரக்கூடிய வாய்ப்பு மிக மிக அதிகம். ஐந்து மணிக்கு குழந்தை வைத்தியர் ஆபீஸ் இழுத்து மூடியாச்சா என்று உறுதிப்படுத்திண்டு தான் எல்லா உபாதைகளும் ஆரம்பிப்பது போல இருக்கும்.

அது மட்டும் இல்லைங்க. வாழ்க்கைக்கு எங்களுக்கு அதி அவசியமா தேவைப்படும் எல்லா இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தா சொல்லி வச்சா மாதிரி பட்டுன்னு உயிர் விட்டுடும். வெய்யில் காலத்தில் குளிர் சாதன பெட்டி வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான் விறைத்து போய் நிற்கும். குளிர் காலத்தில் வெப்ப நிலை பெட்டி பொசுங்கி சாம்பலாவது வெள்ளி அன்று தான். பாத்ரூம் பைப்பெல்லாம் உடைஞ்சு வீட்டை வெள்ளத்துல ஆழ்த்துவது சர்வநிச்சயமா வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான். ரிப்பேர் செய்பவர்கள் இனி இரண்டு நாள் கழித்து திங்களன்று தான் வேலைக்கு வருவார்கள் அப்படீன்னு உறுதிப்படுத்திண்ட பின்பு தான் எங்கள் வீட்டு துணி துவைக்கும் இயந்திரம் வேலை செய்வதை நிறுத்தும். உயிரில்லாத இந்த இயந்திரங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு புத்திசாலித்தனம் வருதுன்னு எவ்வளவு யோசனை பண்ணியும் எனக்கு புரியலைங்க.

என் கணவரின் புத்தம் புது நூறு டாலர் சூட்டில் அரை கப் சாம்பாரை நான் கொட்டினால் அது சர்வ நிச்சயமா வெள்ளி இரவாய் தான் இருக்கும். Dry Cleaners கடை திறந்திருக்கும் போது ஏன் இப்படி நடக்கமட்டேங்கறது அப்படீங்கற என் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கலைங்க. மொத்ததுல என்னை கதறடிக்க கூடிய திறன் வெள்ளிக்கிழமையிடம் தான் இருக்கு.

அய்யய்யோ மறந்தே போயிட்டேனே....இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பக்கத்து அம்மன் கோவில் பூசாரி இன்னும் கொஞ்ச நேரத்துல வேப்பிலைய எடுத்துண்டு வந்துடுவாருங்க.

போகறத்துக்கு முன்னாடி இந்தாங்க கொஞ்சம் மானசீக மிக்சரை சாப்பிட்டுண்டே போங்க.

-மீனா சங்கரன்

Friday, June 05, 2009

கில்லாடி பசங்க...

இந்த டென்னிஸ் போட்டியின் முடிவைப் பாருங்க...

Doubles: Arjun Karthikeyan-David Caravati (MG) d. Jayanth Shekhar-Barani Sankar 6-4, 6-0.

பார்த்தவுடன் தோணிச்சி இப்ப வர வர தமிழ்ச் சங்க டென்னிஸ் போட்டிங்கள்ள மத்தவங்களும் விளையாடறாங்கன்னு...  இது எந்தப் போட்டின்னு சொல்லுங்க பாக்கலாம்?

டட்டடாய்ங்........


வர்ஜினியா மாநில உயர்நிலைப்பள்ளி டென்னிஸ் பந்தயம்!  இறுதிப் போட்டியில் மோதியது நம்ம பேட்டையில் இருக்கும் மில்ஸ் காட்வின் உயர்நிலைப் பள்ளியும், டீப் ரன் உயர்நிலைப் பள்ளியும். அதில் இரட்டையர் குழுவில் எல்லாம் நம்ம தமிழ்ச் சங்கப் பசங்கதான். மாநில இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட அர்ஜுன் கார்த்திகேயன், ஜெயந்த் சேகர் மற்றும் பரணி சங்கர் அனைவருக்கும் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள். வெற்றிவாகை சூடிய அர்ஜுனுக்கு ஒரு ஷொட்டு!


 செய்தித்தாளில் வந்ததை இங்கே படிக்கலாம்!

பதிவு இரண்டு : மின்சாரம் அது சம்சாரம்!!

மின்சாரம் அது சம்சாரம்

முந்திய பதிவைப் படித்து, பாராட்டியும் ஊக்கமும் தந்து மறுமொழிகள் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி கூறி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். உண்மையில், அந்தப் பதிவை எழுதிய நேரத்தில் இருந்த மகிழ்வை விட மறுமொழிகளை படிக்கும் போது மேலும் மகிழ்வை உணர்ந்தேன். நன்றி!

தொடர் பதிவு என்று சொல்லிட்டோமே. அடுத்து என்ன எழுதுவது என்ற கவலை. எனது பட்டியலை தேடி எடுத்துப் பார்த்தேன். ஆ.. மாட்டிகொண்டது தலைப்பு!

பாகம் இரண்டு : மின்சாரம் அது சம்சாரம்!!

முதலில் மின்சாரம் அது சமாச்சாரம் என்று தான் தலைப்பு வைக்க எண்ணினேன். பிறகு மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் ஏதோ ஒற்றுமை வேற்றுமைகள் இருப்பதாக மனதிற்கு பட்டது. மின்சாரம் தொட்டால் அதிர்ச்சிதரும். சம்சாரம் தொடாமலே அதிர்ச்சி தரும். மின்சாரம் அறிவியல். சம்சாரம் அறியாவியல். என்னடா தலைப்பிலேயே பிரச்னை பண்ண ஆரம்பித்து விட்டானே என்று யோசிக்காதீர்கள். எல்லாம் கடைசியில் நன்மையில் முடியும் என்ற நம்பிக்கையில்...

15 வருடமாக உடனிருந்தும் என்னை கொஞ்சமாவது புரிந்து வச்சிருக்கிங்களா என்று சம்சாரம் ஒரு புறம் முனகிக் கொண்டு இருக்க.. மாதா மாதம் ஏறிக்கொண்டே செல்லும் மின்சார செலவு ஒரு புறம்.. இதெல்லாம் புரியாத புதிர் என்று இவ்வளவு நாட்கள் விட்டுவிட்டேன். பொறு பொறு! சம்சாரத்தை 15 வருடமாகத்தானே தெரியும். மின்சாரத்தை 40 வருடமாக தெரியுமே. மேலும் மின்சாரம் அறிவியல் ஆயிற்றே. சரி. கொஞ்சம் அலசினால் புரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் களத்தில் இறங்கினேன்.

பல இணைய பக்கங்கள் சென்று மின்சார செலவை குறைப்பது எப்படி என்று படித்தேன். எந்தெந்த மின்சார கருவிகள் எவ்வளவு மின்சாரம் குடிக்கிறது என்று ஆராய்ந்தேன். வீட்டில் ஒவ்வொருவரின் மின்சார உபயோக பழக்கங்களை நோட்டமிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக மின்சார புதிர் விளங்க ஆரம்பித்தது.

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம்.. ஆனால் எனக்கு பல விஷயங்கள் புதிதாக இருந்தது.
வீட்டுக்கு முன் தானாக எரியும் இரவு விளக்கிற்கு மாத செலவு 2 வெள்ளி. ஒரு முறை துணி உலர்த்தும் இயந்திரத்தை உபயோகித்தால் 35 காசு. ஒரு மணி நேரம் காற்று குளிர்விப்பான் உபயோகித்தால் 42 காசு. சாதாரண மின் விளக்கிற்கு பதில் கச்சிதமான மின்குழல் விளக்கு உபயோகித்தால் 75% மின்சாரம் மிச்சம்.

சரி இதெல்லாம் தெரிந்து என்ன லாபம். செயலாக்க வேண்டுமே. வீட்டில் முடிந்த அறைகளில் மின்விசிறி மாட்டினேன். வசந்த காலங்களில் சூரியன் தாழ்ந்ததும் சன்னல்களை திறந்தும் பகல் நேரங்களில் சன்னல் திரைகளை மூடியும் காற்று குளிர்விப்பான் உபயோகப் படுத்துவதை முழுவதுமாக தவிர்க்க முடிந்தது. மாலை வேளைகளில் இயற்கை காற்றும் சுவாசிக்க முடிந்தது. குளிர்பதனப்பெட்டியில் தேவையான அளவு பனிக்கட்டி சேர்ந்ததும் பனிக்கட்டி செய்வானை நிறுத்தலாம். கொத்து விளக்கில் சில விளக்குகளை அகற்றினேன். முடிந்தவரை துணி உலரும் இயந்திரம் உபயோகிப்பதை குறைத்து சில துணிகளை கொடியில் உலர்த்தினோம். துணியும் பொலிவுடன் இருந்தது. வீட்டின் சீதோஷண நிலையும் மேம்பட்டது. இது போன்ற மேலும் பல முன்னேற்றங்கள் செய்த பின் வழக்கமாக 100 முதல் 180 வெள்ளி வரை ஆகும் மாதாந்திர மின்சார செலவு இப்போது 50 வெள்ளிக்குள் அடக்க முடிந்தது. அப்பாடா ஒருவழியாக மின்சாரத்தை புரிந்து கொள்ள முடிந்ததே என்ற கூடுதல் சந்தோஷம். எல்லாவற்றிற்கும் மேலே இயற்கையை காக்கும் போராட்டத்தில் நம்மால் ஓர் சிறு பணியாவது செய்ய முடிந்ததே என்ற மன நிறைவு.

மேலும் விவரங்களுக்கு கீழிருக்கும் இணைய முகவரிகளை சொடுக்கவும்.
http://michaelbluejay.com/electricity/
http://dom.com/

உங்களில் இந்த சமாச்சாரத்தில் மேலும் புது அனுபவங்களும் வழிகளும் தெரிந்து இருப்பின், தயவு செய்து தெரிவிக்கவும். கேட்டு தெரிந்து கொள்ள எப்போதும் நான் தயார்!

Thursday, June 04, 2009

மீனாவுடன் மிக்சர் - 2 {ராக்பெல்லர் மாமி எங்கே? நரிக்கொரவாஸ் எங்கே?}

சில வருஷங்களுக்கு முன்னாடி நான் கலிபொர்னியாவில் வசித்த போது ஒரு தோழியின் தங்கைக்கு கல்யாணம் நிச்சயித்து பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலிலேயே செய்வதா சொன்னாங்க. ஒரு மாதம் முன்பே கல்யாண பத்திரிகை குடுத்து எங்களை அவசியம் வர வேண்டும் அப்படீன்னு சொல்லிட்டு போனாங்க.

உங்களைப் பத்தி எனக்கு தெரியாதுங்க. எனக்கு நம்மூர் கல்யாணம்னாலே ஒரு தனி குஷி. அதுவும் அமெரிக்காவில் நான் பார்க்க போற முதல் இந்திய கல்யாணம் இது தான். சின்ன வயசில் எழுத்தாளர் சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' ங்கர புத்தகத்தை நான் படிச்சு படிச்சு கிழிச்சதுல என் தொல்லை தாங்காம ஒரு நாள் அந்த புத்தகம் சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு சந்நியாசம் வாங்கிண்டு போயிடுத்துங்க.

அமெரிக்காவுல கல்யாணம்னா சும்மாவா? பெண் வீட்டுக்காரங்களுக்கு தான் எத்தனை வேலை இருக்கும்? இந்தியாலேந்து வண்டி(விமானத்த தான் சொல்லறேங்க) வச்சு எத்தனை சாமான் கொண்டு வரணும்? எத்தனை பேரை கூட்டிண்டு வரணும்? அதான் நம்ம எழுத்தாளர் சாவி அமெரிக்காவில் கல்யாணம் செய்தா என்னென்ன பண்ணனும்னு அவர் புத்தகத்துல பிட்டு பிட்டு வச்சிருக்காரே.

* தட்டானை வரவழைச்சு கல்யாண பெண்ணுக்கு வேண்டிய ஒட்டியாணம், வங்கி, வளையல்கள், ஹாரம், திருமாங்கல்யம் போன்ற நகைகளை செய்தாகணும்.
* வயசான பல பாட்டிகளை கூட்டி கொண்டு வந்து அப்பளம் இட்டு காய வைத்து கல்யாண விருந்துக்கு தயார் பண்ணியாகணும்.
* இட்ட அப்பளங்களை காய வைக்க பெரிய கட்டடங்களோட மொட்டை மாடியை வாடகைக்கு எடுத்தாகணும்.
* மடிசார் கட்டிக்க ஆசைப்படற பெண்களுக்கு, (ராக்பெல்லர் மாமி உட்பட) அதை சொல்லித்தர பாட்டிகளை ஏற்பாடு செய்தாகணும்.
* புரோகிதர்களை வரவழைத்து அவங்க தங்கரத்துக்கு இட வசதிகள் செய்து கொடுத்தாகணும்.
* வைதீக காரியங்களுக்கு மடியா தண்ணி வேணும்னு சொல்லற புரோகிதர்களுக்கு புதுசா கிணறு வெட்ட ஆட்களை வரவழைக்கணும்.
* மாப்பிளையை கார்ல ஊர்வலமா அழைச்சுண்டு போற ஜானவாச ரூட்டுக்கு கவர்மென்ட் பர்மிட் வாங்கணும்.
* ஜான்வசத்தில் மாப்பிள்ளை காரின் பின்னாலே காஸ் விளக்கு தூக்கி கொண்டு நடக்க இந்தியாவுலேந்து நரிக்கொரவர்களை வரவழைக்கணும்.
* நலங்கில் பெண்ணும், மாப்பிள்ளையும் உருட்டி விளையாட தேங்காய் வரவழைக்கணும்.
* கல்யாண சத்திரம் வாசல்ல கட்ட வாழை மரம் வரவழைக்கணும்.
* பந்தியில் பரிமாற வாழை இலை வரவழைக்கணும். வடு மாங்காய் வரவழைக்கணும். வெள்ளைக்காரர்கள் பந்தியில் உட்கார்ந்து வடு மாங்காய் சாப்பிட்டு விரலை கடித்து கொண்டால் அவங்க கைக்கு பேண்ட் ஐட் போட தேவையான first aid boxes வரவழைக்கணும்.

நினைக்கவே எனக்கு மலைப்பா இருந்தது. என் தோழி வீட்டுக்கு போன் பண்ணி கல்யாண ஏற்பாடுகள் பண்ண எந்த உதவி வேணும்னாலும் சொல்லுங்க செய்யறேன் அப்படீன்னு சொன்னதுக்கு எல்லாம் 'under control' அப்படீன்னு சொன்னாங்க. சரி தான். நிறைய ஆள்பலம் இருக்கும் போல இருக்குன்னு நானும் விட்டுட்டேன்.

கல்யாண நாள் கிட்ட நெருங்க நெருங்க எங்க வீட்டு கல்யாணம் மாதிரி எனக்கு ஒரே பரபரப்பு. தினமும் நான் அலமாரியை திறந்து நாலு தரம் கட்ட வேண்டிய பட்டு புடவைகளையும் நகைகளையும் சரி பார்த்து வைப்பதை பார்த்து என் கணவருக்கு ஒரே குழப்பம். அமெரிக்காவில் பட்டுப் புடவை கட்டிண்டு ஜானவாச கார் பின்னாடி நடக்கவும், நலங்கு போது கலாட்டா பண்ணி பாட்டு பாடவும், வாழை இலை கட்டி மாக்கோலம் போட்டிருப்பதை பாக்கவும் ஒரு குடுப்பினை வேண்டாமா? 'வாஷிங்டனில் திருமணம்' கதை போல நடக்கவிருக்கும் கலிபோர்னியா கல்யாணத்தை பாக்க எனக்கிருந்த ஆர்வம் அவருக்கு புரியலை.

கல்யாணத்துக்கு முதல் நாள் பெண் வீட்டுக்காரங்களை விட அதிக கவனத்தோட நான் ஜானவசத்துக்கு ரெடியாகி கொண்டிருந்த போது எதேச்சையா என் வீட்டுக்கு வந்த இன்னொரு தோழி என்னை பாத்து குழம்பி போய் நின்றாள். விசாரிச்சா கல்யாணத்துல ஜானவாசமே கிடையாதாம். அது மட்டுமில்லை. அடுத்த நாள் கல்யாணம் ரொம்ப சிம்பிளா தாலி மட்டும் கட்டி அரை மணியில முடிஞ்சுடுமாம். அப்புறம் எல்லோரும் ஹோட்டலுக்கு போய் buffet சாப்பாடு சாப்பிட்டு போகணுமாம்.

என்ன அக்கிரமம்க இது? ஒரு ஜானவாச கார் கிடையாதாம். கார் பின்னாடி நடக்கற ஊர்வலம் கிடையாதாம். ஊர்வலத்துக்கு காஸ் விளக்கு தூக்கிண்டு நடக்கும் நரிக்குரவங்க கிடையாதாம். மடிசார் கட்டிய ராக்பெல்லர் மாமி கிடையாதாம். உட்கார வச்சு வாழை இலைல பரிமாரற விருந்து கிடையாதாம். ரொம்ப ஏமாத்தமா இருந்துதுங்க. எனக்கு இருந்த கோவத்துல ஆசை காமிச்சு மோசம் பண்ணினதுக்கு திருவாளர் சாவி மேல கேஸ் போடலாமான்னு கூட யோசனை பண்ணினேன். நல்ல காலம் அப்படியெல்லாம் செய்யாமல் விட்டேன். இல்லேன்னா இப்போ அவர் பேரை சொல்லி ப்ளாக் எழுதினத்துக்கு என் பேர்ல கேஸ் போடுவாங்களே.

-மீனா சங்கரன்


Wednesday, June 03, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (நான்காம் பாகம்)

பயண நாள் நெருங்கி விட்டது (இரு வாரங்களே உள்ளன)

அய்யோடா சாமி. இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு. சரி இன்னிக்காவது பெட்டிகளெல்லாம் எடுத்து பரத்துவோம்னு பார்த்தோம். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு பெரிய, முக்கியமான, வேலைய மறந்துட்டோமே. திடீர்னு ஒவ்வொரு பட்டியலையும்   ஒவ்வொருத்தர் கையில எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பக்கமா போய் ஷாப்பிங் ஆரம்பிச்சோம். போன weekend முழு நேரமும் இதுலேயே ஓடி போச்சு. இதுல சில சாமான்கள் ஸ்டாக் வேற இல்ல. எப்படி இருக்கும். இந்த மாதிரி எவ்வளவு பேர் கிளம்பி/கிளம்பி கொண்டு  இருக்கோம்? எல்லாரும் அதே பொருட்கள். அதே கடைகளில் தானே ரவுண்டு கட்டி வாங்குகிறோம். எப்படி கிடைக்கும்ங்கரேன்? எங்கள மாதிரி சோம்பேறியா இல்லாம, ஒரு படை எங்களுக்கு ஒரு வாரம் முன்னாடியே கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்கய்யா ! (வடிவேலு ஸ்டைல்).

ஷாப்பிங் எல்லாம் ஓரளவிற்கு முடிஞ்சு ஒரு வழியா பொருட்களையும் பெட்டிகளையும் சேர்த்து வெச்சு பார்த்தோம். இப்போ தான் எங்களோட சபதங்களுக்கெல்லாம் வெச்சாங்கடா ஆப்பு! ஒரு எண்ணம் ஸ்திரமாக நிர்ணயமானது.

முதல் ரவுண்டு பாக்கிங்லியே பெட்டிகள் எண்ணிக்கை சும்மா அசால்டா ஐந்தை தொட்டது. ஒவ்வொன்றிலும் எடையாவது குறைச்சல் என்கிறீர்களா? ம்ம் ஹ்ம்ம். எல்லாம் வெகு எளிதில் 50lbs தொட்டாச்சு. இப்போ தான் எங்களுக்கு ஆறாவது பெட்டியே இல்லை என்கின்றன  ஞானோதயம் வந்தது. இனி பெட்டி ஒண்ணு வாங்கி அதுல இன்னும் கொஞ்சம் சாமான்களை அடைக்கணும். கையில் எடுத்து செல்லும் பெட்டிகளுக்கும் ததும்பி வழிகின்றன.

இனி ஸ்டாக் வந்தப்பறம் கடைசி நிமிஷத்துல இன்னொரு முறை முயற்சி செய்யணும். அதுகளுக்கு வேற எடம் வெச்சுக்கணும் பெட்டிகள்ல. இது என்ன சோதனை.

ஈஸ்வரோ ரக்ஷது.

ஏர்லைன் கம்பெனிகள் 70 பவுண்ட்டிலிருந்து 50 பவுண்டிற்கு மாற்றியும் இந்நிலை. தலைக்கு ஒரு பேக் என்ற நிலைமை வந்தாலும் வந்துவிடும் போல, வெகு விரைவில். நாங்களாவது 50lbs ல நிறுத்திட்டோம். சிலர் அதுல கூட கொசுருக்கென்று  கொஞ்சம்  கூடுதலா  அடைக்கறாங்கபா.

நாராயணன்

இனிவரும் பாகங்கள்:
ஐந்தாம் பாகம்: பயணத்துக்கு தயார்.
அதற்குப் பின் வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.

Tuesday, June 02, 2009

மீனாவுடன் மிக்சர் - 1

தொலைக்காட்சியில் 'அனுவுடன் காப்பி' (அதாங்க Koffee with Anu) என்று ஒரு தொடர் வருகிறதாமே? கேள்விப்பட்டேன். அனுவோட காப்பி குடிக்கரச்ச மீனாவோட மிக்சர் சாப்பிட கூடாதா? அப்படி நினைச்சு தான் இப்படி ஒரு பேர் வச்சிருக்கேன். ர்ய்மிங்கா வேற இருக்கு.

இந்தாங்க கொஞ்சம் மானசீக மிக்சரை சாப்பிட்டு கொண்டே மேற்க்கொண்டு படிங்க.

---------------------------------------------------------------------------------------------
சூளுரைத்து சொல்கிறேன். இது என் சபதம்.

எல்லாருக்கும் கனவுகளும் ஆசைகளும் உண்டு. கண் மூடி கனவுகளில் திளைக்கையில் சிலருக்கு வைர வைடூரியங்கள் தெரியலாம். சிலருக்கு எழுபது இன்ச் தொலைக்காட்சிப் பெட்டி தெரியலாம். சிலருக்கு சமீபத்தில் வெளி வந்த புது மாடல் செல் போன் தெரியலாம். இன்னும் சிலருக்கு ஐரோப்பாவில் விடுமுறை நாட்களை கழிப்பது போல தெரியலாம். எல்லாமே வெளியே சொல்லி கொள்ளும்படியான அழகான கனவுகள்.

எனக்கு கனவில் தெரிவதெல்லாம் ஒரு கிண்ணத்தில் சாம்பார் வடை தான். அதுவும் சரவண பவன் ஹோட்டல் சாம்பார் வடை. சின்ன வெங்காயம் வாசனை மூக்கை துளைக்க (சத்தியமாக எனக்கு கனவில் வாசனை வருதுங்க), மின்னும் எவர்சில்வெர் கிண்ணத்தில் மேலே பொடிப்பொடியா நறுக்கின வெங்காயமும் கொத்தமல்லியும் மிதக்க சரவண பவனோட சாம்பார் வடை சமீப காலமாக என் கனவில் வந்து என்னை ரொம்ப தொல்லை செய்கிறது. யாராவது கேட்டால் என்ன நினைப்பார்கள்? "ஐயோ பாவம், பல வருடங்களாக பட்டினி போல இருக்கு" என்று நினைக்க மாட்டார்களா? இந்த கனவை எப்படியாவது மாற்றி ஆக வேண்டும் என்று நேற்று இரவு படுக்க போவதற்கு முன் மனக்கண்ணில் அழகான பட்டு புடவைகளும் ஜொலிக்கும் நகைகளையும் கொண்டு வந்து பார்த்து விட்டு படுத்தேன். நாலு பேரிடம் சொல்லி கொள்வது போல் ஒரு கனவு வர வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணி விட்டு தூங்கினால் என்ன கனவு வந்தது சொல்லுங்கள்? அதே கிண்ணம், அதே வடை, அதே சாம்பார்.

இன்னும் பதிமூன்றே நாட்களில் இந்தியாவில் இருப்பேன். இன்றிலிருந்து இரண்டாவது திங்கள் விடிகாலை மூன்று மணியளவில் விமானம் சிங்காரச் சென்னையில் இறங்குகிறது. விமானத்தளத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சரவணபவன் ஹோட்டலில் இறங்கி சாம்பார் வடை சாப்பிட்டு விட்டு செல்லலாமா என்று நான் கேட்டதற்கு வீட்டில் கீழ்ப்பாக்கத்தில் வேண்டுமானால் நிறுத்தி விட்டு செல்லலாம் என்று சொல்கிறார்கள். என் மூளை மிகப்பெரியது இல்லை தான். ஒத்துக்கொள்கிறேன். அதற்காக மூளைக் கோளாறு மருத்துவமனையில் எனக்கு சிகிச்சையா? இது கொஞ்சம் அதிகமாக தெரியவில்லை?

ஒரு விஷயம் எனக்கு நன்றாக புரிந்து விட்டது. இவர்களை எல்லாம் நம்பினால் என் சரவண பவன் சாம்பார் வடை ஆசை படு குழியில் தான் விழப்போகிறது. என் காலே எனக்குதவி என்று ஊருக்கு சென்ற மறுநாள் ஒரு ஆட்டோ பிடித்து சரவணபவனுக்கு போய் சாம்பார் வடைக்கு ஒரு சலாம் போட்ட பிறகு தான் தங்கமாளிகை பக்கம் நகை வாங்க செல்லுவேன். சூளுரைத்து சொல்கிறேன். இது என் சபதம்.

சப்தம் வரும் நேரம் (அரைப் ப‌க்க‌க் க‌தை)

வழக்கத்தை விட நரேன் அன்று பரபரப்பாக இருந்தான்.

இரண்டு நாட்களாக கேட்காமல் இருந்த சப்தம் மீண்டும் இன்று. நேரம் நடுநிசியைத் தாண்டிவிட்டிருந்தது. ச‌மைய‌ல‌றையின் பின்ப‌க்கம் இருந்த அறையில் ட‌க், ட‌க் என்று அந்த ச‌ப்த‌ம். ரொம்ப‌ நாட்க‌ளாக‌வே அந்த‌ அறையைப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில்லை. ச‌மீப‌ கால‌மாக‌, அந்த‌ அறையில் ஆள்ந‌ட‌மாட்ட‌ம் இருப்ப‌து கேட்டு அதிர்ச்சியுற்றான்.

"ஏங்க, ஏதாவ‌து காத்து க‌ருப்பா இருக்குமோ ?" என்று ப‌ய‌ந்த‌ ம‌னைவியை, "எதுக்கும் கொஞ்ச‌ நாளைக்கு உங்க‌ அம்மா வீட்டில் இரு" என்று அனுப்பினான்.

'எப்படியும் இந்த முறை மிஸ் பண்ணிடக்கூடாது. இருக்கும் நேரமும் மிகக் குறைவே. ஒரே அடி, அடி துல்லியமா தலையில் விழணும்... காத்தாவது கருப்பாவது ...' மனதைத் தயார் படுத்திக் கொண்டான் ந‌ரேன்.

பக்கத்து அறைக்குச் சென்று, சமயலறைக் கதவை மெல்ல சாத்தினான். இரண்டு வழிகள் இந்த அறைக்கு. ஒரு வழியை அடைத்தாயிற்று, மற்றொன்று அந்த அறையில் மற்றொரு புற‌ம் இருந்தது. அங்கு கதவு காற்றில் மெல்ல ஆடிக் கொண்டிருந்தது. கீற்று போன்ற‌ வெளிச்ச‌ம் க‌த‌விடுக்கில் தெரிந்த‌து.

'காத்தாவ‌து க‌ருப்பாவ‌து என்று சொல்லிகிட்டாலும், நெஞ்சுக்குழி அடைத்துக் கொண்ட‌து' ந‌ரேனுக்கு. டொக் டொக் என்ற‌ சப்த‌ம் மேலும் அதிக‌ரித்த‌து. மிக‌வும் க‌வ‌ன்த்துட‌ன், சிறிய‌ சப்த‌ம் கூட தான் எழுப்பாம‌ல், ச‌ப்த‌ம் வ‌ந்த‌ திசையை நோக்கி முன்னேறினான்.

கிட்டே நெருங்கி, ஒரே போடு ... சில நொடிகளில் ச‌ப்த‌ம் அட‌ங்கி விட்டிருந்த‌து.

"ரொம்ப‌ நாளா டார்ச்ச‌ர் ப‌ண்ணுச்சே அந்த‌ எலி, அது காலி. நீ தைரியமா புற‌ப்ப‌ட்டு வ‌ர‌லாம்" என்று ம‌னைவிக்கு ஃபோன் செய்தான் நரேன்.

ஹையா(யோ) இந்தியா போறோம் (மூன்றாம் பாகம்)

பயண நாள் நெருங்கி விட்டது (ஒரு மாதமே உள்ளது)

ஒரு காலத்துல இந்த நாள் வருவதற்கு முன்னமே பெட்டிகள் எல்லாம் தூசு தட்டி பரத்தி வைத்து, ஒவ்வொன்றிலும் ஒரு 15% பாக்கிங் முடிந்திருக்கும். அப்போதெல்லாம் ஹையா இந்தியா போறோம் என்கின்ற உணர்ச்சி. இப்போ என்னடான்னா இன்னும் அந்த உணர்வு கூட இல்லை, நாள் நெருங்குகின்றதே என்று.

ஆனால் இந்தியாவிற்கு வாங்கி செல்ல வேண்டிய பொருட்களின் எண்ணிக்கையும், அந்தப் பட்டியல்களும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. ஒரு யூகம் செய்தாலே நம்முடைய பெட்டிகளின் எண்ணிக்கை கூடுகின்றதை உணர முடிகிறது. எங்களது சபதம் #1, #2, #3 நிறைவேற்ற முடியாது என்பதற்கான அறிகுறிகள் வெளிப்பட துவங்கியுள்ளது. இதன் கூடவே இன்னும் ஒரு பட்டியலும் உருவாகிக்கொண்டிருக்கிறது. அதாங்க, நாம் இந்தியாவில் இருந்து வாங்கி வர வேண்டிய பொருட்கள்.

இங்கிருந்து போகும் பொருட்களில் பல விதம். (நான் அவசியம், அனாவசியம் என்ற வாதத்திற்குள் நுழைய போவதில்லை). எல்லாமே ஒவ்வொரு விதத்தில் நியாயம்தான்.
  1. இந்தியவில் இருந்து வரும் பட்டியலில் உள்ள பொருட்கள்.
  2. நாம், அங்கிருப்பவர்களுக்கு தேவையுள்ளதாக இருக்கும் என்றோ, அன்பளிப்பாகவோ, தயாரிக்கும் பட்டியலில் உள்ளது. இந்த வகை தான் என்னை குழப்பத்தில் ஆழ்த்தும் . மீண்டும் மீண்டும் அதே பொருட்கள்தான். பாதாம், ஜிப் லாக், சோப்பு, சீரியல், ஓட்மீல், ரெய்சின்....இதெல்லாம் நுகரும் பொருட்கள். ஓரிரு மாதங்களில் தீர்ந்ததும், இந்தியாவில் இருப்பவர்கள் அங்கு கிடைக்கும் பொருட்களுக்கு திரும்பி போய்விடுவார்கள். ஏன் தான் எடுத்து செல்கிரோமொன்னு தோணும். அங்கு கிடைக்காத பொருட்களை எடுத்து சென்றாலாவது பயன் உண்டு. அனால் நம்ம திருந்தவே மாட்டோம்.
  3. நாம் அங்கிருக்கும் பொழுது நம்முடைய உபயோகத்திற்கென்று எடுத்து செல்வது.
  4. இங்கிருக்கும் நமது நண்பர்கள் அவர்களது நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ நம் மூலம் குடுத்தனுப்பும் பொருட்கள்
இந்த பட்டியல்கள் குவிந்த வண்ணம் இருக்க, இன்னும் ஷாப்பிங் பண்ண தொடங்கவில்லை என்று நினைத்தால் தலை சுற்றுகிறது. இத்தொடரின் நாலாம் பாகத்திலாவது இந்நிலை மாறியிருக்குமா?

பொறுத்திருந்து பாருங்கள் வேடிக்கையை.
நாராயணன்

இனிவரும் பாகங்கள்:
நான்காம் பாகம்: பயண நாள் நெருங்கி விட்டது (இரு வாரங்களே உள்ளன)
ஐந்தாம் பாகம்: பயணத்துக்கு தயார்.
அதற்குப் பின் வரும் பாகங்கள் இந்தியாவிலிருந்து தொடரும்.

Monday, June 01, 2009

ஹையா(யோ) இந்தியா போறோம் (இரண்டாம் பாகம்)


டிக்கெட் வாங்கும் படலம்:


இந்திய போவதென்பது உறுதி ஆகிவிட்ட நிலையில் அடுத்து வரும் தலை வலி, பயண டிக்கெட் வாங்குவது. இதிலென்ன சார் பெரிய கஷ்டம் இருக்க முடியும்னு நீங்க நினைக்கலாம். அது அவ்வளவு சுலபமா என்ன? எங்கள் வீட்டில் என்றுமே இது எளிதில் சாதித்த ஒரு விஷயம் அல்ல.


பயணம் செய்யும் தேதி ஓரளவிற்கு யூகம் வந்த உடன், எங்களுக்கு தெரிந்த டிராவல் எஜன்ட் நம்பர் எல்லாம் தூசு தட்டி எடுத்து ஒரு பட்டியல் போட்டோம். எமக்கு தெரிந்தவர்களுக்கு தெரிந்த ஏஜன்ட் நம்பர்களையும் அதில் சேர்த்து ஒவ்வொரு ஏஜண்டாக கூப்பிட்டு எல்லோரிடமும் எங்களுடைய பயண திட்டத்தை அறிவித்து டிக்கெட் தேடும் பணியை அவர்களுக்கு குடுத்தோம். அனால் குழ்ப்பம் என்னவென்றால் ஒவ்வொரு ஏஜண்டும் ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். தலையே சுற்றுகிறது.


ஒரு வழியாக முடிவுக்கு வந்து டிக்கெட் வாங்கியதும் இந்த தலை வலி முடிந்தது என்கிறீர்களா? இல்லை. இப்போ தான் நமக்கு தெரிந்தவர்கள் பலர் அவர்களுக்கோ அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கோ கிடைத்த விலையை சொல்லி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவர்.


போனால் போகட்டும் போடா என்ற பாடலை நினைவிற்கு கொண்டு வந்து தேர்த்திக்கொள்ள வேண்டியது தான்.


இந்தியாவிலே இருக்கும் உறவினர் எல்லோருக்கும் நமது பயணத்தை பற்றிய விவரங்கள் அறிவித்த உடன் அதோட நிற்காமல் அவர்களுக்கு இங்கிருந்து வாங்கி வர வேண்டிய பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதன் பட்டியல் போட்டு அனுப்ப சொல்கிறோம்.


ஆஹா..இப்போ தான் காமெடி ஆரம்பம்.


மேலும் அடுத்த பாகத்தில்...

நாராயணன்