Sunday, June 15, 2008

ஜிலேபி ஜில்பா

தமிழ்மணத்தில் ஜூடாக ஜிலேபி விற்பனை ஆகிக் கொண்டிருப்பதாக நாம் நண்பன் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சதங்கா வம்புக்கு இழுக்கிறார் நம்மை.

நம் பதிவர்கள் இதுபோல் நாட்டுக்கு அவசியமான சேவையில் ஈடுபடுவார்கள் என்றுதான் நம் ஞான திஸ்டியில் மின்னாடியே தெரிஞ்சுதே! அதான் நான் அப்பவே எய்திட்டேன். வுடு ஜூட்!!!

மற்றபடி கடமை தவறாமல் நான் ஜிலேபி சுத்த அழைப்பது.... முரளி, பித்தன், பரதேசி!

Monday, June 02, 2008

Excel in Excel - Shortcuts

பொட்டி தட்டும் எல்லோரும் பயன்படுத்தும் ஒரு மென்பொருள்களுள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் எக்ஸெலிற்கு தனி இடம் உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அதில் சில உபயோகமான, எளிதான குறுக்கு வழிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ந‌ம் ப‌ய‌ன்பாட்டிற்கு ஏற்றார் போல் விரைவாகச் செய்ய எக்ஸெலில் சுருக்கு வ‌ழிக‌ள் / மாற்று வ‌ழிக‌ள் என‌ப் ப‌ல‌ வ‌ழிக‌ள் ஏராளம் இருக்க‌, ந‌ம்மில் அநேக‌ர் இன்னும் எலிக‌ளைத் தான் அதிக‌ம் க்ளிக்குகிறோம்.

உதாரணத்திற்கு: அதிகம் பயன்படுத்தும் Format Dialog.



1. எலியை இழுத்து, Format, அதன் பின் Cells க்ளிக்குவோம்.
2. இதைச் சுலபமாய் "Ctrl மற்றும் 1" அழுத்தி விரைவாகப் பெறலாம்.

ஒரு கட்டத்தில் இன்றைய தேதி வேண்டும். என்ன செய்யலாம் ?

1. இன்றைய தேதியைத் தட்டச்சிடலாம்.
2. ஆனால், மிகச் சுலபமாக "Ctrl ;" அழுத்தினால் போதும்.

தேதியைப் பார்த்தாச்சு. தற்போதைய நேரம் வேண்டுமெனில் ?

"Ctrl :" அழுத்தினால் போதும்.

ஒரு சின்ன அட்டவனை போடுகிறோம். அதில் மேலிருக்கும் தகவல் கீழும் வருமெனில், உதாரணத்திற்கு படத்தில் உள்ள தேதி:



1. மீண்டும் தட்டச்சிடலாம்.
2. or "Ctrl C" and "Ctrl V" செய்யலாம்.
3. மேல் குறிப்பிட்ட இரண்டையும் விட எளிதாகப் பெற "Ctrl D" அழுத்துங்கள்.

இதே போன்று, இடப்பக்கம் உள்ள ஒன்றை வலப் பக்கம் பிரதியிட "Ctrl R" அழுத்தினால் போதும்.

ஒரு அட்டவனை முழுதும் எழுத்தின் அளவுகளை மாற்ற வேண்டும். எங்கிருந்து வேண்டுமோ, அங்கே க்ளிக்கி அட்டவனை முடியும் வரை இழுத்து, பின் format பண்ணுவோம்.

இதை எளிதாய் செய்ய: அட்டவனையினுள் ஒரு கட்டத்தைக் க்ளிக்கி, "Ctrl A" அழுத்தினால், அட்டவனை முழுதும் select ஆகிவிடும். வேண்டிய மாற்றங்களைச் செய்து கொள்ளுங்கள்.



மொத்த பக்கத்தையும் format செய்ய மீண்டும் ஒரு முறை "Ctrl A" அழுத்திக் கொண்டு, வேண்டிய மாற்றங்களைச் செய்து கொள்ளுங்கள்.

மேலே பார்த்தவை சுருக்கமாக கீழே:






















Ctrl 1 Opens Formatting dialog
Cntl ; Today's Date
Cntl : Time now
Ctrl D Copy Down
Ctrl R Copy Right
Ctrl A within a table, selects the entire table
Ctrl A twice selects the entire work sheet


தொடரும் ...

Sunday, May 25, 2008

தடயம் - மர்மத்தொடர்

தடயம் மர்மத்தொடரின் பதினோராவது அத்தியாயத்தை இங்கே படிக்கலாம்.
http://kalaichcholai.blogspot.com/2008/05/11.html

முரளி.

Tuesday, May 20, 2008

சிட்டுக்குருவி




எங்கிருந்து வந்தாய் என் அருமைச் சிட்டுக்குருவி!
உன் அழகிய வால் அறுந்த காரணம் என்னவோ சிட்டுக்குருவி

வீரப்போர் வெற்றியின் அடையாளமா சிட்டுக்குருவி
பிறப்பின் பிழையா சிட்டுக்குருவி

எதுவாய் இருந்தாலும் உன் சுறுசுறுப்பைக் கண்டு
நான் மகிழ்ந்து போனேன் சிட்டுக்குருவி
வால் போன துயரத்தில் வாடி நிற்காமல் சிட்டுக்குருவி
பறந்து வந்து வற்றலைப் பற்றிச்செல்கிறாய் சிட்டுக்குருவி

உன் தன்னம்பிக்கையை பாராட்டுகின்றேன் சிட்டுக்குருவி !

வலைச்சரத்தில் சதங்கா!


வலைச்சரத்தில் சதங்காவை இந்த வார ஆசிரியர் ஆக்கியிருக்கிறார்கள்! முதல் பதிவில் ரிச்மண்ட் வாழ்க்கையையும்(என்னையும்) நினைவு கூர்ந்திருக்கிறார் மறக்காமல். நன்றி சதங்கா!! மேலும் அவர் எழுதிய பதிவுகளில் அவருக்கு பிடித்தவற்றையும் அழகாகப் பட்டியலிட்டிருக்கிறார்.

இரண்டாவது பதிவில்  அவர் மனதில் நின்ற பதிவுலகில் படித்த கவிதைகளையும், கவிஞர்களையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். கல்யாணத்திற்கு சில நாட்களே இருக்கும் மயக்கத்தில் உள்ள எனது நண்பன் மகேஷிலிருந்து ஆரம்பித்து கலக்கலாகப் போகிறது அவரின் அறிமுகம்.

மூன்றாவது பதிவில் கதைகளை அறிமுகப் படித்தியிருக்கிறார். நான்காவதிற்கு எங்கே போகிறார் எனப் பார்ப்போம். :-)

வலைச்சரத்தில் சதங்காவின் மீதமுள்ள நாட்களுக்கான பதிவுகளை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து தூள் கிளப்ப வாழ்த்துக்கள்! 

Saturday, May 17, 2008

தடயம் - மர்மத்தொடர்

தடயம் மர்மத்தொடரின் பத்தாவது அத்தியாயத்தை இங்கே படிக்கலாம்.
http://kalaichcholai.blogspot.com/2008/05/10.html


முரளி.

Wednesday, May 14, 2008

அமெரிக்க வரன்

"நமஸ்காரம், வாசுகி அம்மா. எப்பிடி இருக்கீங்க? உங்க மகளுக்கு ஏதாவது வரன் வந்ததா?".

"ஏதாவது இல்லை, ஸ்வாமி. அமெரிக்க வரனா வரனும். நான் தினம் வந்து இந்த முருகனை வேண்டிக்கிறேன், ஒரு அமெரிக்க வரனா கிடைக்கணும்னு. இன்னும் இந்த முருகன் மனசு வெக்கலை".

"என்ன வாசுகி அம்மா, முருகனுக்கு கல்யாண உற்சவம் செய்யப் போறிங்களாமே".

"ஆமாம், சிவகாமி. உங்களுக்கு போன் பண்ணிணேன். லைன் கிடைக்கல. தப்பாம வந்துடனும்".

"அப்படியா, நல்லது. கட்டாயம் வரேன். அப்படியாவது முருகன் மனசு வைப்பானென்று பார்க்கறீங்க".

"சரியா சொன்னீங்க."

"நீங்க பேசனதையெல்லாம் கேட்டேன். நல்ல மாப்பிள்ளையாக நம்ப ஊருலயே பாருங்க".

"உங்களுக்கென்ன, சுமதியம்மா. நீங்க உங்க பிள்ளைகளுக்கெல்லாம் அமெரிக்கா, பிரான்ஸ்னு பார்த்து கொடுத்துட்டீங்க. பொண்ணோட பிரசவம், மருமக பிரசவம்னு அமெரிக்கா, பிரான்ஸ் பார்த்துட்டீங்க."

"அங்க போயி அவங்க படற கஷ்டத்த எல்லாம் பார்த்துட்டுதான் சொல்றேன். பாவம் நம்ம வீட்டுப்பிள்ளைங்க. இங்க சுகமா, சொகுசா வளர்ந்துட்டு அங்க போய் கஷ்டப்படறாங்க. பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க, பெருக்கிக்கூட்ட, இஸ்திரி போட, ஏன் சமையலுக்குக்கூட இங்க ஆள் இருக்கு. பாவம் இதெல்லாம் அவங்களே செய்யணும். இதற்குமேல் டிரைவர் வேலை வேற. குழந்தையெல்லாம் இருந்தா இன்னும் நெறய வேலை. நிம்மதியா ஒரு வாய் சாப்பிட கூட நேரம் கிடைக்கறதில்லை. எல்லா வேலை செய்ய மெஷின் இருந்தாலும்கூட, அவங்க தானே அதையெல்லாம் போடனும்."

"நீங்க என்ன சொன்னாலும் அமெரிக்கா வரன் போல வருமா?'

"சரி, சரி. உங்க விருப்பம் போல நடக்கட்டும்".

"நீங்களும் முருகன் கல்யாணத்துக்கு வந்துடுங்க."

முருகன் கல்யாண உற்சவம் வெகு ஜோராக நடந்தது. மறுநாள் காலை, "அம்மா, தபால்", என்று ஒரு குரல் ஒலித்தது. "வாசுகி அம்மா. நீங்க எதிர்பார்க்கிற அமெரிக்க வரனாய் இருக்கட்டும்" என்றார் தபால்காரர். "அப்படி இருந்து நல்லபடியாக கல்யாணம் முடியட்டும். உங்களை நல்லா கவனிக்கிறோம்", என்றபடியே வாசுகியம்மா அவசரமாக தபாலைப் பிரித்தார்கள். அதற்குப் பிறகு எல்லாம் மின்னல்வேகத்தில் நடந்து, மகள் அமெரிக்கா கிளம்புவதில் முடிந்தது.

நாட்கள் பறந்தன. வாசுகி அம்மாள் வாரந்தோறும் மகள் போனுக்காக காத்திருந்து பேசி மகிழ்வார்கள். ஒரு வாரம் மகள் போனுக்காக காத்திருந்தபோது, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சினிமாவை நிறுத்தி, பரபரப்பாக நியுயார்க் நகரின் உலக வர்த்தக மையத்தில் நடக்கின்ற விமானத் தாக்குதலை ஒளிபரப்பினார்கள். "அம்மா, தாயே, அகிலாண்டேஸ்வரி. இது என்ன சோதனை. நீதான் என் பிள்ளைகளை காப்பாத்த வேண்டும்", என்று புலம்பியபடி தன் கணவரைக் கூப்பிட்டார்கள். அவர்கள் மருமகன் அந்த கட்டிடத்தில் வேலை செய்வதால், இருவரும் மிகப் பதட்டத்துடன் மகளுக்கு போன் செய்ய முயன்றார்கள். வெகு நேரம் முயன்றும், அவர்களுக்கு இணைப்பே கிடைக்கவில்லை. சுமதியம்மாவிற்கு போன் செய்து அவர்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா என்று விசாரித்தார்கள்.

மறுநாள் மகளிடமிருந்து போன் வந்தது. "அம்மா கவலைப் படாதீங்க. நாங்க பத்திரமாக இருக்கிறோம். நாங்க அன்னைக்கு லீவு போட்டுவிட்டு பிட்ஸ்பர்கில் உள்ள பெருமாள் கோயிலுக்கு போயிருந்தோம்" என்றாள் அவள்.

"நல்ல வேளை. அந்த பெருமாள்தான் உங்களை காப்பாத்தினார். டீவில ஒவ்வொரு நாள் ஒரு சேதி வருது. எதோ பாரஸ்ட் பயர்னு சொல்றாங்க. ஒரு நாள் எல்லார்க்கும் வேலை போகுதுனு சொல்றாங்க. ஒரு நாள் பூகம்பம்னு சொல்றாங்க. ஒரு நாள் யாரோ சுட்டுட்டாங்கனு சொல்றாங்க. இப்படி நாள்தோறும் ஒரு பயங்கரமான செய்தியை கேட்டு எங்களால இருக்க முடியலை. பேசாம மாப்பிள்ளையை இங்கயே ஒரு வேலை பார்த்துக்கிட்டு வந்துடச் சொல்லு".

Monday, May 12, 2008

தோட்டக்காரன்

விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். கசக்கிய கண்களுடன், வாசற் கதவை திறந்து வெளியே பார்த்தேன். ஒருவரும் இல்லை. வானம் மட்டும் லேசாக தூறிக் கொண்டிருந்தது. காற்று தான் கதவைத் தட்டியதோ என்று எண்ணியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டேன். யாரும் வந்து போனதற்கான அறிகுறி எதுவும் இல்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று எதிர்த்தாற் போல இருந்த மரத்தைப் பார்த்தேன். ஆஹா என்ன அழகு! கழுவினாற் போல் ஒரு அழகிய பச்சை நிறத்துடன் நின்றிருந்தது. இறைவனின் படைப்பில் எது தான் அழகு இல்லை?

மீண்டும் படுக்கப் பிடிக்காமல், காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து விட்டு பூஜை புனஸ்காரங்களை முடித்து அலுவலகத்திற்கு செல்ல தயாராகி இருந்தேன். சிறிது நேரத்தில் அருமை மனைவி, காலை சிற்றுண்டியுடன் வந்தாள். சாப்பிட்டு விட்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

என் சக நன்பன் ஒருவன் அவனது மேஜையில் இருந்த ரோஜா செடியின் காய்ந்த இலைகளை கிள்ளி விட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அவன் பராமரிக்கும் விதத்தை வியந்து பார்த்தவாறே இருந்தேன். என் வீட்டின் முன் நின்றிருந்த மரத்தின் அதே கழுவிய பச்சை நிறம் இப்பொழுது அந்த செடியில் இருந்தது. சிறிது நேரம் நன்பனிடம் உரையாடி விட்டு என் மேஜைக்கு வந்து உட்கார்ந்தேன். என் கவனம் மீண்டும் அந்த மரத்தை சுற்றியே வந்தது. யார் அந்த மரத்துக்கு இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் விடுகிறார்கள்? என் மனம் விசுவரூபம் எடுத்து உலகெங்கும் பரவியது. இந்த மரம் மட்டும் இல்லை, மலைகளிலும், காடுகளிலும், ஆற்றோரங்களிலும் வளரும் மரங்களை யார் பராமரிக்கிறார்கள்?

இயற்கையா? இறைவனா?
யோசித்துப் பார்க்கிறேன், ஒன்றும் முடிவுக்கு வர முடியவில்லை. காற்றும் மலையும் தான் இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் ஊற்றுகிறதோ? என்ன தான் உரம் போடுகிறார்கள்? யார் போடுகிறார்கள்? யார் படைத்தார் இந்த காலங்களை? காற்றின் அசைவுகளை?
இறைவன் என்னும் தோட்டக்காரனோ?
அப்படி என்றால் "வறட்சி" என்பது என்ன? அவனின் சோம்பேறித்தனமா? புயல், வெள்ளம் என்பது அவனின் படைப்பு பிடிக்கவில்லை என்று அழிக்கும் விதம் தானோ? இது தான் அவன் பராமரிக்கும் விதம் என்றால், நாம் காண்பது அவனின் தோட்டத்தைத் தானே. அவன் தோட்டக்காரன் என்றால் அந்த தோட்டம், நாம் வாழும் உலகம் தானோ? அப்படி என்றால் அந்த தோட்டத்திற்கு யார் சொந்தக்காரன்?
இயற்கையா? இறைவனா?

தோட்டத்தின் பலனை அனுபவிப்பவன் தானே, அதன் சொந்தக்காரன். அப்படி என்றால், இந்த உலகை அனுபவிப்பவர்கள் நாம் தானே? ஆக நாம் தானே தோட்டத்திற்கு சொந்தக்காரர்கள். நாம் தோட்டத்தின் சொந்தக்காரன் என்றால் இறைவன் நம் தோட்டக்காரனோ?

நாம் யார்? இறைவன் யார்?

- வெங்கடேசன் செட்டியார்

ரிச்மண்டில் 2002ல் நடந்த இலக்கியப் போட்டியில் பங்கேற்ற படைப்புகளில் என்னைக் கவர்ந்த ஒன்று. இதை அவ்வப்போது படித்துக் கொண்டிருப்பேன். மற்ற படைப்புகளை இங்கே காணலாம்.

Friday, May 09, 2008

குழந்தைகள் ஓவியப் போட்டி

குழந்தைகள் சேவை நிறுவனமான CRY மே 17ம் தேதி நம் ஊரில் ஒரு குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடத்தவிருக்கிறது. போட்டி Echo Lake Park, Shelter1ல் 11ல் இருந்து 2 வரை நடக்கும்.

மேல் விவரங்களுக்கு இங்கே பாருங்கள்.

Thursday, May 08, 2008

எங்க வீட்டு ரோஜாக்கள்

வசந்த காலம் வந்திருக்கு இங்கே :-) வசந்தத்தில் புல்லு சரியா வெட்டாட்டி யார் வருவாங்கன்னு கடைசி படத்துல பாருங்க