Wednesday, May 14, 2008

அமெரிக்க வரன்

"நமஸ்காரம், வாசுகி அம்மா. எப்பிடி இருக்கீங்க? உங்க மகளுக்கு ஏதாவது வரன் வந்ததா?".

"ஏதாவது இல்லை, ஸ்வாமி. அமெரிக்க வரனா வரனும். நான் தினம் வந்து இந்த முருகனை வேண்டிக்கிறேன், ஒரு அமெரிக்க வரனா கிடைக்கணும்னு. இன்னும் இந்த முருகன் மனசு வெக்கலை".

"என்ன வாசுகி அம்மா, முருகனுக்கு கல்யாண உற்சவம் செய்யப் போறிங்களாமே".

"ஆமாம், சிவகாமி. உங்களுக்கு போன் பண்ணிணேன். லைன் கிடைக்கல. தப்பாம வந்துடனும்".

"அப்படியா, நல்லது. கட்டாயம் வரேன். அப்படியாவது முருகன் மனசு வைப்பானென்று பார்க்கறீங்க".

"சரியா சொன்னீங்க."

"நீங்க பேசனதையெல்லாம் கேட்டேன். நல்ல மாப்பிள்ளையாக நம்ப ஊருலயே பாருங்க".

"உங்களுக்கென்ன, சுமதியம்மா. நீங்க உங்க பிள்ளைகளுக்கெல்லாம் அமெரிக்கா, பிரான்ஸ்னு பார்த்து கொடுத்துட்டீங்க. பொண்ணோட பிரசவம், மருமக பிரசவம்னு அமெரிக்கா, பிரான்ஸ் பார்த்துட்டீங்க."

"அங்க போயி அவங்க படற கஷ்டத்த எல்லாம் பார்த்துட்டுதான் சொல்றேன். பாவம் நம்ம வீட்டுப்பிள்ளைங்க. இங்க சுகமா, சொகுசா வளர்ந்துட்டு அங்க போய் கஷ்டப்படறாங்க. பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க, பெருக்கிக்கூட்ட, இஸ்திரி போட, ஏன் சமையலுக்குக்கூட இங்க ஆள் இருக்கு. பாவம் இதெல்லாம் அவங்களே செய்யணும். இதற்குமேல் டிரைவர் வேலை வேற. குழந்தையெல்லாம் இருந்தா இன்னும் நெறய வேலை. நிம்மதியா ஒரு வாய் சாப்பிட கூட நேரம் கிடைக்கறதில்லை. எல்லா வேலை செய்ய மெஷின் இருந்தாலும்கூட, அவங்க தானே அதையெல்லாம் போடனும்."

"நீங்க என்ன சொன்னாலும் அமெரிக்கா வரன் போல வருமா?'

"சரி, சரி. உங்க விருப்பம் போல நடக்கட்டும்".

"நீங்களும் முருகன் கல்யாணத்துக்கு வந்துடுங்க."

முருகன் கல்யாண உற்சவம் வெகு ஜோராக நடந்தது. மறுநாள் காலை, "அம்மா, தபால்", என்று ஒரு குரல் ஒலித்தது. "வாசுகி அம்மா. நீங்க எதிர்பார்க்கிற அமெரிக்க வரனாய் இருக்கட்டும்" என்றார் தபால்காரர். "அப்படி இருந்து நல்லபடியாக கல்யாணம் முடியட்டும். உங்களை நல்லா கவனிக்கிறோம்", என்றபடியே வாசுகியம்மா அவசரமாக தபாலைப் பிரித்தார்கள். அதற்குப் பிறகு எல்லாம் மின்னல்வேகத்தில் நடந்து, மகள் அமெரிக்கா கிளம்புவதில் முடிந்தது.

நாட்கள் பறந்தன. வாசுகி அம்மாள் வாரந்தோறும் மகள் போனுக்காக காத்திருந்து பேசி மகிழ்வார்கள். ஒரு வாரம் மகள் போனுக்காக காத்திருந்தபோது, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சினிமாவை நிறுத்தி, பரபரப்பாக நியுயார்க் நகரின் உலக வர்த்தக மையத்தில் நடக்கின்ற விமானத் தாக்குதலை ஒளிபரப்பினார்கள். "அம்மா, தாயே, அகிலாண்டேஸ்வரி. இது என்ன சோதனை. நீதான் என் பிள்ளைகளை காப்பாத்த வேண்டும்", என்று புலம்பியபடி தன் கணவரைக் கூப்பிட்டார்கள். அவர்கள் மருமகன் அந்த கட்டிடத்தில் வேலை செய்வதால், இருவரும் மிகப் பதட்டத்துடன் மகளுக்கு போன் செய்ய முயன்றார்கள். வெகு நேரம் முயன்றும், அவர்களுக்கு இணைப்பே கிடைக்கவில்லை. சுமதியம்மாவிற்கு போன் செய்து அவர்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா என்று விசாரித்தார்கள்.

மறுநாள் மகளிடமிருந்து போன் வந்தது. "அம்மா கவலைப் படாதீங்க. நாங்க பத்திரமாக இருக்கிறோம். நாங்க அன்னைக்கு லீவு போட்டுவிட்டு பிட்ஸ்பர்கில் உள்ள பெருமாள் கோயிலுக்கு போயிருந்தோம்" என்றாள் அவள்.

"நல்ல வேளை. அந்த பெருமாள்தான் உங்களை காப்பாத்தினார். டீவில ஒவ்வொரு நாள் ஒரு சேதி வருது. எதோ பாரஸ்ட் பயர்னு சொல்றாங்க. ஒரு நாள் எல்லார்க்கும் வேலை போகுதுனு சொல்றாங்க. ஒரு நாள் பூகம்பம்னு சொல்றாங்க. ஒரு நாள் யாரோ சுட்டுட்டாங்கனு சொல்றாங்க. இப்படி நாள்தோறும் ஒரு பயங்கரமான செய்தியை கேட்டு எங்களால இருக்க முடியலை. பேசாம மாப்பிள்ளையை இங்கயே ஒரு வேலை பார்த்துக்கிட்டு வந்துடச் சொல்லு".

5 comments:

  1. உங்க கருத்தை அழகாக ஒரு கதையில் வடிவில் சொல்லியிருக்கீங்க.. நல்லா இருந்துச்சு!

    ReplyDelete
  2. நல்ல நடை. சுருக்கமாக முடித்ததனால் நச்சென இருந்தது. மேலும் எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நிகழ்வுகளின் கதை அருமை.

    ReplyDelete
  4. வாங்க தமிழ் மாங்கனி. பாராட்டுக்கு நன்றி. ப.பா.சவில் ஆரம்பிச்சிருக்கீங்க போல. கலக்குங்க.


    ஜெயகாந்தன், சதங்கா - நன்றி. மேலும் எழுத முயற்சிக்கிறேன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!