நவராத்திரி ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில் சற்று விவரம் தெரிந்தவர்களுக்கு - ரொம்ப வயதானவர்களுக்கு என்றும் சொல்லலாம் - நினைவுக்கு வரும் ஒரு ஊர் பண்ருட்டி. இப்போதெல்லாம் பண்ருட்டி என்றால் பலாப்பழமும், முந்திரியும், மின்சார அமைச்சர் ராமச்சந்திரனும், கூடவே கொஞ்சூண்டு நாகுவும்தான் உங்களுக்கெல்லாம் நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஒரு காலத்தில் மண் பொம்மைகளுக்கு புகழ் பெற்றது பண்ருட்டி. உண்மையான கொலு (எங்களூர்) மண்பொம்மையில்தான் வைக்க வேண்டும் தெரியுமா? சந்தேகமிருந்தால் இங்கே படித்துக் கொள்ளுங்கள் நவராத்திரி கொலு பொம்மை தத்துவம். நான் அடுத்த வாரம் கொலுவலம் வரும்போது இந்தப் படிக்கணக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போகிறேன்.
சரி - பண்ருட்டிக்குப் போவோம். பண்ருட்டி பெயர் காரணம் பற்றி எனக்குத் தெரிந்தது. பண்ருட்டியின் சரியான பெயர் பண்ணுருட்டி. அந்தக் காலத்தில் பாணர்கள் வாழ்ந்து பண் உருட்டி, உருட்டி ஊருக்கு பண்ணுருட்டி என்ற பெயர் வந்ததாம். அவற்றில் இருந்து ஒரு சில பண் எடுத்து விடு என்று சிலர் கேட்கலாம். அடுத்த மாதம் இங்கே ஒரு இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அதில் ஒரு அரைமணி நேரம் கேட்டிருக்கிறேன். அது கிடைத்தால் நீங்களே எங்களூர் பண்ணின் பெருமையை அனுபவிக்கலாம்.
பண்ருட்டி ஒன்றும் அவ்வளவு பெரிய ஊர் இல்லை. ஊரைச் சுற்றி கடில நதி ஓடுகிறது. சரி - ஒரு காலத்தில் ஓடியது. இப்போது போனால் விவசாயிகள் ஆக்கிரமித்து ஆக்கிரமித்து ஆறையே காணோம். சென்ற முறை போனபோது என் பிள்ளை கேட்கிறான் ஏனப்பா விவசாய நிலங்கள் மேலே உங்களூரில் பாலம் போட்டிருக்கிறீர்கள் என்று. அதுதானடா பண்ருட்டியில் விசேஷம் என்று சொல்லி வைத்தேன். ஊரின் வடக்கே வெண்ணை உருகும் முன் பெருகிய தென் பெண்ணையாறு. அதில் இப்போது மண்தான் பெருகுகிறது. இன்னும் கொஞ்ச நாளில் ஆற்று மண்கூட இருக்காது என நினைக்கிறேன்.
ஊரின் கிழக்கிலும் வடக்கிலும் செம்மண் படிந்த நிலம். அதனால்தான் மா, பலா, முந்திரி அமர்க்களமாக வளர்ந்திருக்கும். அதுவும் தரையில் குடை விரித்து உட்கார்ந்திருக்கும் முந்திரியின் அழகே அழகு.
நான் துவக்கப் பள்ளியில் படிக்கும்போது பள்ளிக்கருகே இருக்கும் வீதிகளில் எல்லாம் வசித்தவர்கள் பொம்மை செய்யும் கலைஞர்கள். வீதிகளின் இருபுறமும் களிமண் பொம்மைகள் காய்ந்து கொண்டிருக்கும். நான் உயர்நிலைப்பள்ளி போகும்போதே அதெல்லாம் மாயமாகி விட்டது. நான் படித்தது முத்தையர் பள்ளி. நம் வெங்கட் செட்டியாரின் மாமனார் படித்ததும் அந்தப் பள்ளிதான். நான் மூணாப்பு படிக்கும்போது நடந்த நிகழ்ச்சி போன வாரம் என் நினைவுக்கு வந்தது.
அந்த நாட்களில் அணி பிரித்து விளையாடும்போது இருவர் இருவராக 'குழு பிரிந்து' கொண்டு வருவோம். இரண்டு பேர் தனியாகப் போய் ஆளுக்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டு வந்து நிற்கும் அணித் தலைவர்களை கேட்போம். முக்கால்வாசி - சிவாஜி வேணுமா, எம்ஜியார் வேணுமா. சிவாஜி. சரி நான் உன் பக்கம். இவன் எதிர் பக்கம். எனக்கு சிவாஜி, எம்ஜியார் போரடித்து விட்டது. நானும் இன்னொருவனும் போய் 'குழு பிரிந்தோம்'.
"தென்னரசு - பட்டாடி வேணுமா, லாயிட் வேணுமா"
"பட்டாசு."
பட்டாசு இல்லடா, பட்டாடி!. மன்சூர் அலிகான் பட்டாடி!!
பக்கத்தில் அரைத் தூக்கத்தில் இருந்த கண்ணம்மா டீச்சருக்கு ஒரே ஆச்சரியம். டேய் - இங்க வா. என்ன பேர்லாம் சொன்னே?
பட்டாடி, லாயிட் டீச்சர்.
ஏன்டா - அவங்க யாருன்னு உனக்குத் தெரியுமா?
பட்டாடி இந்திய கிரிக்கெட் கேப்டன். லாயிட் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கேப்டன் டீச்சர்.
சென்ற வாரம் பட்டாடி இறந்து போனார். எனக்கு கிரிக்கெட் என்று ஒரு விளையாட்டு தெரிந்த நாட்களில் கேப்டனாக இருந்தவர். கேப்டன் என்றால் பட்டாடிதான் என்று இருந்த நாட்கள் அவை. (தொடரும்)