Monday, June 07, 2010

வீண் வழக்குகள், வெட்டி செலவுகள்

சென்ற 27-5-2010 தினமலர் பத்திரிகையில் ஒரு செய்தி அதன் சாரம் இதுதான்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் கருட வாகனம் புறப்படும் தினத்தன்று கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள்(ஒரு தென்கலை வைணவ ஆச்சாரியார்) சன்னதியில் கருட வாகனத்தை நிறுத்தி அவருக்கு (மணவாள மாமுனிக்கு ) சடாரி மரியாதை நடைபெறுகிறது. இந்த வழக்கம் நீண்ட நாட்களாக அமுலில் உள்ளது.
இந்த சடாரி மரியாதை மனவாள மாமுனிக்கு செய்யக்கூடாது, அது வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு விரோதமானது என்று கூறி காஞ்சிபுர நீதிமன்றத்தில் வடகலை பிரிவை சேர்ந்த சீனிவாசராகவன் என்பவர் 1991-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார்.
காஞ்சிபுர நீதிமன்றம் வழக்கை விசாரித்துவிட்டு அவருடைய மனுவை தள்ளுபடி செய்தது. . அவரும் வடகலை வைஷ்ணவ சம்பிரதாய சபை என்ற அமைப்பும் சேர்ந்து காஞ்சிபுர நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மேல்முறையீடு செய்தனர். உயர்நீதி மன்றமும் இவர்களுடைய மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உடனே அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தனர்.

19 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியிருக்கிறது. .மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது மட்டும் அல்லாமல் கீழ் நீதிமன்றத்து தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு கூறியிருக்கிறது.

மணவாள மாமுனிக்கு சடாரி மரியாதை செய்யும் வழக்கம் சரியானதே என்றும் அது எந்த வகையிலும் வைணவ சம்பிரதாயத்துக்கு எதிரானது அல்ல என்றும் உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பில் கூறியிருக்கிறது. மேலும் வழக்காடியவர்களின் குறுகிய நோக்கத்தையும் தீர்ப்பில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

மணவாளமாமுனிகள் என்ற வைணவ ஆச்சாரியர் 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தென்கலை வைணவ பிரிவின் முக்கிய ஆசாரியர்களில் ஒருவர்.

இன்றும் வைணவர்கள் தினசரி துதிக்கும் நித்யானுசந்தானம் என்ற நூலில் உள்ள உபதேச ரத்னமாலை என்ற பாசுரங்களையும் திருவாய்மொழி நூற்றந்தாதி முதலிய பாசுரங்களையும் இவர்தான் இயற்றினார், யதிராஜவிம்சதி என்ற வடமொழி நூலையும் இவர் இயற்றியிருக்கிறார். சில தொகுத்து வெளியிட்டிருக்கிறார். சில முக்கிய வடமொழி நூல்களுக்கு விளக்க உரை எழுதியிருக்கிறார்.

சில கால இல்வாழ்க்கைக்கு பிறகு துறவறம் பூண்ட மணவாளமாமுனிகள் பல திருக்கோயில்களை புதிப்பித்து ,சமயப்பிரசாரம் செய்து வாழ்ந்து எழுபதாவது வயதில் அமரர் ஆனார். தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள அழ்வார்த்திருனகரியில் பிறந்த மணவாள மாமுனிகள் ஆந்திராவில் திருப்பதிக்கு வடக்கே சென்று நான்கு வைணவ மடங்களை தோற்றுவித்தார். தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பல சமூகத்தினர் வைணவத்தை தழுவ வழி செய்தார்.

இவர் போன்ற பல ஆசாரியர்களுக்கு திருவிழா நாட்களில் சடாரி மரியாதை செய்யும் முறை பல வைணவ தலங்களில் வழக்கில் உள்ளது.
வைணவ ஒரு பிரிவினர் குறிப்பிட்ட ஆச்சாரியார் மாற்று பிரிவை சேர்ந்தவர் என்பதற்காக அந்த முறையை எதிர்த்து 19 ஆண்டு காலம் வழக்காடியுள்ளதை பார்க்கும்போது நாம் என்ன நினைப்பது? இந்த வழக்கில் எவ்வளவு பேருடைய பணமும் காலமும் விரயமாகி இருக்கிறது என்று எண்ணி பார்த்தால் வியப்பாக இருக்கும்.

பொதுவாக இத்தகைய விஷயங்களில் நீதிமன்றங்களுக்கு செல்பவர்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். பலர் ஒய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகள். பலர் வழக்கறிஞர்கள். டாக்டர்கள். மற்ற பல துறைகளில் உள்ள பணக்காரர்கள். இவர்களுக்குத்தான் இது போன்ற மத விஷயங்களில் நேரத்தை செலவிடவும் சிறு வேற்றுமையை கூட பெரிது படுத்தி அதை பூதாகாரமாக ஆக்கி ஊரை இரண்டுபடுத்தி விளையாட நேரம் உண்டு. இவர்களில் பலர் இதைத்தான் ஆன்மீகம் என்று நம்புகிறார்கள்.

இந்த விவகாரங்களில் காஞ்சிபுரம் பேர் போன ஊர். கோயில் யானைக்கு எந்த நாமம் போடுவது, எந்த சன்னதியில் எந்த பிரிவினருக்கு முதல் தீர்த்த மரியாதை போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் கடந்த காலத்தில் நீதிமன்றம் போய்தான் தீர்வு காணப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது போன்ற சில வழக்குகள் லண்டனில் உள்ள பிரிவிகௌன்சில் வரை சென்றதுண்டு.
இந்த சம்பிரதாய முறைகள் பற்றி காலும் தெரியாமல் தலையும் தெரியாமல் வெள்ளைக்கார நீதிபதி கொடுத்த தீர்ப்பை சொல்லி தர்மம் ஜெயித்தது என்று தனக்கு தானே மகிழ்ந்து போனார்கள். இவர்களெல்லாம் வெள்ளைக்கார துரைமார்களுக்கு அடிமை சேவகம் செய்யவே அவதாரம் எடுத்தவர்கள். இவர்களிடம் அகப்பட்டுக்கொண்டு வைணவம் விழி பிதுங்கிக்கொடிருக்கிறது.

வைணவ சமயத்தின் இரு பிரிவுகளுக்கு காரணமான தத்துவம் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. இவர்களில் பலர் முரட்டு பக்தர்கள், ஆனால் ஞான சூன்யங்கள். .வெறும் அடையாளத்தையும் குறியீடுகளையும் வைத்து சண்டையிடும் படித்த பேதைகள். தான் என்ற அகம்பாவம் இவர்களிடம் பல உருவங்களில் மதமாக சாதியாக, சாதிப்பிரிவாக வடிவெடுத்து இருக்கிறது.

இந்த படித்த மேதைகள் பத்து பேர் எங்காவது கூடினால் ஒரே வீடிக்கைதான் . அன்றைய ஹிந்து நாளிதழில் என்ன செய்தி வந்திருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தங்களுக்கு தெரிந்த அரசியல் பேசுவார்கள், அரசியல்வாதிகளை எல்லாம் திட்டித் தீர்ப்பார்கள், காலம் கெட்டுப் போச்சு என்று அங்கலாய்த்து கொள்வார்கள். ஆங்கிலம் கலந்த தமிழில் யார் உயர்ந்த குரலில் பேசுகிறாரோ அவரே வாதத்தில் வெற்றி பெற்றதாக நினைத்து மகிழ்ந்து போவார்.

எங்கு பார்த்தாலும் வளர்ந்து விட்ட வன்முறையைப்பற்றி சொல்லி எல்லாவற்றுக்கும் ஒசாமா பின் லேடன் தான் காரணம் என்பார்கள், உண்மையில் இவர்கள் ஒவ்வொரிடமும் ஒரு பின்லேடன் ஒளிந்து கொண்டிருக்கிறான்.

மற்ற மதத்தாரை அழிப்பதற்கு துப்பாக்கி ஏந்தும் துணிவு பின்லேடனுக்கு இருக்கிறது. இவர்களுக்கு அந்த துணிவு இல்லை, இதுதான் வித்தியாசம்.

இவர்களெல்லாம் எப்படியாவது தொலையட்டும், இது விஷயமாக நமக்கு தோன்றும் ஒரு முக்கிய கேள்வி இதுதான். இந்த குப்பை வழக்கில் தீர்ப்பு கொடுக்க 19 ஆண்டு கால அவகாசம் தேவையா? எத்தனையோ வழக்குகளை அனுமதிக்கும் போதே தள்ளுபடி செய்யும்போது இந்த வழக்கு எப்படி உச்சநீதி மன்றம் வரை அனுமதிக்கப்பட்டது?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பொன்னான நேரத்தை இந்த குப்பை வழக்குகளில் செலவிட வேண்டிய அவசியம் என்ன?அவர்களுக்கு வேறு உருப்படியான வேலை இல்லையா என்று கேட்க தோன்றுகிறது

உச்ச நீதிமன்றத்திலும் பல மாநில உயர்நீதிமன்றங்களிலும் பலஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. 20 வருடங்களுக்கு மேலாக தீர்ப்பு ஆகாமல் நிலுவையில் உள்ள வழக்குகளே உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருப்பதாக பத்திரிகை செய்தி வருகிறது.

இது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு நினைவுக்கு வருகிறது. டெல்லியில் திலக்நகர் பகுதியில் உபகார் என்ற சினிமா தியட்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் இறந்து போனார்கள். இறந்தவர்களில் பலர் இளம் தம்பதியினர், மற்றும் குழந்தைகள். .
அந்த அரங்கத்தின் மின்சார சாதனங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணை அறிக்கை கூறியது.

உண்மை என்னவென்றால் டெல்லி மின்சார வாரியம் இந்த அரங்கின் மின்சார அமைப்பு முறையை சோதனை செய்து விட்டு திருப்திகரமாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளது. அதனால் தியேட்டரில் படம திரையிடப்படுவதை தடை செய்து மின்சாரவாரியம் உத்திரவு போட்டது. .வாரியத்தின் உத்திரவை எதிர்த்து தியேட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வாரியத்தின் உத்திரவுக்கு இடைக்கால தடையும் தியேட்டர் நிர்வாகம் பெற்றது. வழக்கு தொடர்ந்தது. 13 ஆண்டு காலமாக வழக்கு நிலுவையில் இருந்தது.

ஒரு நாள் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 50 உயிர்களை பலி கொண்டது. .

13 ஆண்டு காலமாக ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் இடைக்கால தடை உத்திரவை மறுபரிசீலனை செய்யக்கூட நேரம் ஒதுக்கவில்லை. இதன் விளைவாக 50 உயிர்கள் பலியாக நீதிமன்றத்தின் தாமதம் காரணமாக அமைந்தது.

JUSTICE DELAYED IS JUSTICE DENIED என்பது மட்டுமல்ல. தாமதமான நீதிமன்ற நடவடிக்கைகள் உயிர் பலியில் முடியும் என்பதற்கு இந்த வழக்கு நல்ல உதாரணம். தாமதத்தால் ஏற்படும் விபரீதங்கள் பல சமயங்களில் தெரியாமல் போய்விடுகிறது.

இப்படி பல வழக்குகள் தாமதம் ஆவதற்கு காரணம் நேரடியாக குப்பையில் சேர்க்கப்படவேண்டிய பல சாதிவெறி மனுக்களுக்கு மரியாதை கொடுத்து அதை வழக்கு ஆவணமாக மாற்றி அதன் மீது வருடக்கணக்கில்
விவாதங்களை அனுமதித்துக் கொண்டிருப்பதுதான் என்று கூறலாம்.

- மு.கோபாலகிருஷ்ணன்

Sunday, May 30, 2010

தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடல்

செம்மொழி மாநாட்டுக்காக ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த பாடல்:




பாடல் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த மாதிரி தமிழ்பாடலுக்கு ஆங்கிலப் பாணியில் இசையமைத்து ஒவ்வொரு கையிலும் இரண்டு, மூன்று விரல்களை நீட்டிக்கொண்டு பாடினால், தமிழே மறந்துவிடும் போலிருக்கிறது.  மீசைக்காரரே  சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்று சொல்லியிருக்கிறார், நீ என்னடா மடிசஞ்சி என்கிறீர்களா? அதுவும் சரிதான். இது மாதிரி எல்லாம் விரல் நீட்டிக்கொண்டு பாடுவார்கள் என்று தெரிந்திருந்தால், மீசைக்காரர் சேரநாட்டிளம் பெண்களுடன் நிப்பாட்டியிருப்பார் :-) அவர் சொன்னதுக்காத்தானோ கர்நாடக சங்கீதத்தில் சுந்தரத் தெலுங்கை இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

அதெல்லாம் போகட்டும்... செம்மொழி என்றால் என்ன? :-)

மாநாட்டு தீம் சாங்'காம். தீம் சாங்குக்கு செம்மொழித் தமிழில் என்ன? கடைசியில் கலைஞரைக் காண்பிக்காமல் இருந்தால், விட்டிருப்பார்களா? :-)

ஒரு தமிழ் பில்ட்- அப்புக்காக சுடிதாரைத் தவிர்த்திருக்கக்கூடாதா?  (முரளிக்கு தமிழ் நுணுக்கமான மொழின்னு பின்னூட்டம் போட ஒரு பிட் இங்கே. மற்றவர்களுக்கு புரிகிறதோ?)

தாவணியில் போனால், கம்ப்யூட்டர் கம்பெனியில் உள்ளே விடுவார்களோ?? 

Tuesday, May 25, 2010

மீனாவுடன் மிக்சர் - 21 {நல்ல செய்தியா? கிலோ என்ன விலை?}

வர வர காலையில் எழுந்து செய்திகளை பார்க்கவே பயம்மா இருக்கு. படுக்கையிலிருந்து எந்தப் பக்கமா எழுந்தாலும், முக்கியமா என் முகத்தை முதல் வேலையா காலையில் கண்ணாடியில் பாக்கறதை ஞாபகமா தவிர்த்தாலும் கூட தலைப்பு செய்திகள்ல ஏனோ ஒரு நல்ல விஷயம் கூட பார்க்க முடியறதில்லை.

பூகம்பம், சுனாமின்னு இயற்க்கை ஒரு பக்கம் ஆக்ரோஷ தாண்டவம் ஆடினா, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்னு சின்ன குழந்தைகளிலேர்ந்து பெரியவங்களோட மனசு வரை விஸ்வரூபமா ஆக்ரமிச்சிருந்த ஒரு மனிதன் திடீர்னு உஜாலா விளம்பரத்துல போட்டியிடும் எதிர் கம்பெனியின் துணி போல சாயம் வெளுத்து தான் ஒரு சராசரி மனிதனுக்கும் கீழ் தான்னு சர்வநிச்சயமா நிரூபிக்கிறார். மனசு வெறுத்து போய் அடுத்த சேனல் மாத்தினா மத வெறி கொண்ட தீவிரவாதிகள் நாலு பேர் தாங்க செய்யற அராஜகத்தை மார் தட்டி உலகத்துக்கு அறிவிக்கிறாங்க. கிளிக், கிளிக், ரிமோட் வஞ்சனை இல்லாமல் தன் பாட்டுக்கு தினந்தோறும் கெட்ட சேதிகளை நம் பக்கமா சும்மா அள்ளி தெளிக்குது.

சரி, செய்திகளும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்னு பொழுது போக்குக்கு டிவியில் வர்ற தமிழ் சீரியல்களை சந்தோஷமா பார்ப்போம்னு ஒரு எண்ணத்துல உக்காந்தீங்கன்னா, மனிதன் இயல்பில் நல்லவன் தான் அப்படீங்கற உங்க எண்ணத்தில் ஒரு லாரி மண் விழறது நிச்சயம். அவ்வளவு வில்லத்தனம் இந்த தமிழ் சீரியல் கதாபாத்திரங்களுக்கு. தான் நல்லா இருப்பது அவங்க வாழ்க்கையோட குறிக்கோள் இல்லை. சுத்தி உள்ளவங்க நல்லா இல்லாம இருந்தா போதும், அதுவே அவங்க பிறந்த பயனை அனுபவிச்ச மாதிரி. வீட்டு மருமகள் அழ அழ பெருக்கெடுக்குற சந்தோஷத்தில் அவங்க திக்கு முக்காடி வயத்துல பால் வார்த்து ஈ கூட மொய்க்க விட்டிடுவாங்க. அவ்வளவு தீசத்தனம்!

சுபீட்சமா நாலு விஷயம் இனி காதில் விழும் ங்கர ஆசை நிராசையாகி காந்தித் தாத்தாவின் குரங்குகள் மாதிரி இனி கண்ணையும், காதையும் இழுத்து பொத்த வேண்டியது தான்னு பலரைப் போல நீங்களும் நினைக்க தொடங்கியிருந்தீங்கன்னா நிச்சயமா மேற்கொண்டு படிங்க. எனக்கு தெரிஞ்ச ஒரு உண்மைக் கதையை உங்களுக்கு இப்ப சொல்லறேன்.

இன்ஜினியரிங் காலேஜ்ல ஒண்ணா படிச்சு முடிச்சு வெளியேறிய ஒரு பத்து நண்பர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழியே பிரிஞ்சு போய் வாழ்க்கையை ஆரம்பிச்சு இன்னிக்கு ஒரு பதினெட்டு வருஷம் ஆச்சு. (ஏதுடா சமீபத்துல வந்த ஆமீர் கான் படத்து கதை மாதிரி தெரியுதேன்னு யோசனை பண்ணறவங்களுக்கு நான் சொல்ல விரும்பரதெல்லாம் 'வைட்டீஸ் ப்ளீஸ்'.)

ஒரு சராசரி மனிதனோட வாழ்க்கையில கல்யாணத்துக்கு பின்னாடி நடக்கற எல்லாமே - குழந்தைகள், அவங்களுக்கான சேமிப்பு திட்டங்கள், பேங்க் புண்ணியத்தில் வாங்கற அழகான வீடு, குழந்தைகளை பாட்டு, கராத்தே வகுப்புகளுக்கு அழைத்து போய் வர நல்ல ஒரு கார் - இவங்க எல்லோர் வாழ்க்கையிலும் நடந்தது.

காலேஜை விட்டு வெளிய வந்து பிசியா அவங்கவங்க ஒவ்வொரு பக்கம் சம்சார சுழல்ல சிக்கி சுத்திகிட்டிருந்த போதும் விடாம யாஹூ மற்றும் கூகிளாண்டவர் புண்ணியத்துல பதினெட்டு வருஷமா தங்கள் நட்பை விடாமல் அடவு காத்து வராங்க இந்த நண்பர் குழு. வருஷத்துக்கு ஒரு முறை இவங்கள்ல ஏழு, எட்டு பேராவது தத்தம் குடும்பங்களோட தீபாவளியை ஒட்டி சந்தித்து லூட்டி அடிப்பது இப்போ ஒரு வழக்கமா ஆயிட்டுதுன்னே சொல்லலாம்.

மூணு வருஷங்களுக்கு முன்னாடி இவங்களிலே ஒருத்தருக்கு ரத்த புற்று நோய்ன்னு செய்தி வந்த போது ஆடிப் போய் இந்த குழு உட்கார்ந்தது கண் சிமிட்டும் நேரம் தான். நெஞ்சை அழுத்திய சோகத்தை சமாளித்து நிமிர்ந்தவங்க நண்பனுக்கு எப்படி உதவலாம்னு அதில் தீவிர யோசனைல இறங்கினாங்க. வைத்திய செலவுக்கு பணம் திரட்ட வேண்டிய அவசியம் புரிஞ்ச போது அவங்கவங்க சேமிப்பிலேர்ந்து ஒரு பெருந்தொகையை நண்பனுக்காக ஒதுக்கியதோடு இல்லாம இந்த நண்பர் குழு தெரிந்தவங்க தெரியாதவங்கன்னு ஒருத்தரை விடாம எல்லோர் கிட்டயும் உதவிக்கு கையேந்தினாங்க. அதை விட முக்கியமா மனைவிமார்களோடு சேர்ந்து எல்லோரும் எலும்பு மஞ்சை தானம் செய்ய தாங்க பதிவு செய்துகிட்டதோட தெரிந்தவங்க எல்லோரையும் பதிவு செய்ய தூண்டினாங்க. இதெல்லாம் என்ன பெரிய விஷயம்னு நீங்க கேட்டீங்கன்னா ரொம்ப கரெக்ட். இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை தான். ஏன்னா பல வருஷங்களாக பழகியிருக்கும் ஒரு நண்பனுக்கு துன்பம்னா இது போல உதவி யாரா இருந்தாலும் செய்வாங்க தானே?

நான் சொல்ல வந்த விஷயமே வேற. இந்த நண்பர் குழுவில் ஒரு நாலு பேர் எங்க ஊரை சேர்ந்தவங்க. இவங்க தங்கள் நண்பனுக்கு உதவி தேவைன்னு ஊர்ல கேட்டாங்களோ இல்லையோ, முகம் அறியா அந்நியர்களான ரிச்மன்ட்வாசிகள் பலர் பிரியத்தோடு முன்வந்து நிதி உதவி செய்ததோடு எலும்பு மஞ்சை தானம் (bone marrow donation) செய்யவும் உடனடியா அவங்கவங்க குடும்பங்களோட வந்து பதிவு செய்துகிட்டாங்க. நோயுற்று படுத்திருந்தவருக்கு இவங்கல்லாம் யாரு? எதனால அவருக்கு இவங்க உதவினாங்க? கட்டபொம்மன் பாஷையில 'மாமனா மச்சானா?' முகம் அறியா ஒருவரிடம் ஏனிந்த வாஞ்சை?

மூணு வருஷம் நோயோடு கடுமையா போராடி வெற்றி பெற்று இன்று தன் குடும்பத்தோடு நல்ல படியாக வாழும் அந்த நண்பரின் வாழ்க்கை மனித நேயத்துக்கும், நமக்கெல்லாம் உள்ளோடிருக்கும் கருணைக்கும், மனிதாபிமானத்துக்கும் ஒரு சான்றிதழ்னு நான் நினைக்கிறேன்.

'தங்கம்', 'தென்றல்' சீரியல்லாம் பார்த்து அடுத்த முறை பிழிய பிழிய அழும் போது இந்த கதையை மறக்காம நினைச்சுக்கங்க.

-மீனா சங்கரன்

Wednesday, May 19, 2010

உஷார் உஷார் - திருடர்கள் ஜாக்கிரதை

I'm sorry I didn't inform you about my traveling. I am presently in Glasgow, Scotland, United Kingdom and I'm stuck here.

I was mugged on my way to the hotel and my money,credit cards,phone and other valuable things were taken off me at gun point.

I need you to lend me some money , I need to sort out my hotel bills and get my tickets straightened out .

I would be glad if you can help me and I promise to pay you back Immediately I get back home .

Waiting to hear from you.

Thanks

மேற்கண்ட மின்னஞ்சல் சமீபத்தில் நமது ரிச்மண்ட் வாழ் அன்பர்களுக்கு வந்தது நினைவிருக்கலாம். அப்போது இது ஒரு திருட்டு கும்பலின் கைவரிசை என்று எல்லோரும் சற்று அசிரத்தையாக இருந்து விட்டோம். இந்த வாரம் எனது நண்பரின் நண்பர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்கிழமை) மதிய உணவிற்கு எனது நண்பருடன் ஒரு உணவகத்திற்கு செல்லும் வழியில் அவர் "என் ஃப்ரெண்டோட கசினோட கணவர், லண்டன்ல சஸ்ஸெக்ஸ் ங்ர ஒரு இடத்திற்கு பொயிருக்காரு அங்க அவரை அடிச்சு அவர் கிட்ட இருக்கரத எல்லாம் சுருட்டிட்டு ஓடிட்டாங்களாம், என் ஃப்ரெண்டுக்கு அவர் ஈ-மெயில் போட்டு பணம் கேட்டு இருக்கார், எப்படி எல்லாம் நடக்குது பாருங்கன்னு" சொன்னார். எனக்கு உடனே மேற்கண்ட மின்னஞ்சல் நினைவுக்கு வர, அவருக்கு அதைச் சொல்லி நண்பர் கிட்ட சொல்லி பணம் எதுவும் அனுப்ப வேண்டாம், அந்த உறவினரிடம் பேசிய பிறகு மத்ததை செய்யலாம்னு சொல்ல அவர் உடனே நண்பரை அணுகி பணம் அனுப்புவதை தடுத்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு லண்டனில் இருந்த உறவினருடன் தொடர்பு கொண்டு அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பதை உறுதிப் படுத்தி கொண்டுள்ளார்.

உங்கள் யாருக்கேனும் இப்படி ஒரு மின்னஞ்சல் வரும் பட்சத்தில், நன்கு விசாரித்த பிறகே செயலில் இறங்கவும்.

கடைசித் தகவல்: இந்த போலியான தகவலைத் தந்து பணம் கறப்பவர்கள் இந்தியாவில் மஹாராஷ்ட்டிரத்திலிருந்து இயங்குவதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

பின்குறிப்பு: இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தவுடன் பணம் அனுப்பியே தீருவேன் எனறு குதிப்பவர்கள் பணம் அனுப்பிய கையோடு நமது தமிழ் சங்கத்திற்கும், நமது கோவிலின் கட்டுமானப் பணிக்கும் கொஞ்சம் பணம் அனுப்பினால் சந்தோஷம்.


முரளி.

Tuesday, May 18, 2010

செம்மொழி மாநாடு சில சிந்தனைகள்


 
            உலகத்தமிழ்  செம்மொழி  மாநாடு வருகிற  ஜூன் 22   தொடங்கி ஐந்து  நாட்கள் கோயம்புத்தூர்  நகரில் நடைபெறவிருக்கிறது . அதையொட்டி சில சிந்தனைகளை  பதிவு  செய்ய வேண்டியிருக்கிறது .
 
              நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு அரசியல்  சாயம் அதிகமாக பூசப்படும்  என்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது . ஏற்கனவே ஆளும்  கட்சியின் சுவரொட்டிகளும்  பிரசுரங்களும்  தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும்  தெருக்களை அலங்கார (அலங்கோல)படுத்திக்கொண்டிருக்கிறது . மாநாடு சம்மந்தப்பட்ட எல்லா பிரசுரங்களிலும்  தமிழ்நாட்டு அரசியலுக்கே  உரித்தான  தனி நபர்  துதிபாடல் மேலோங்கி  நிற்கிறது .ஜூன் மாதம் முதலமைச்சர்  பிறந்த நாள் வருகிறது  என்பது எல்லோருக்கும்  தெரியும்.  அதையொட்டியே மாநாடு ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிலர் கூறுகிறார்கள் .
 
            நமக்குள்ள கவலையெல்லாம் எந்த தனிநபருக்கு துதி உச்சஸ்தாதியில் பாடப்படுகிறது என்பதல்ல.
 
         தமிழ்மொழி வளர்ச்சிக்கும்  அதன் செம்மொழி அந்தஸ்துக்கும் கடந்த காலத்தில் குரல் கொடுத்த எல்லா தனி நபர்களும்  இந்த மாநாட்டு நேரத்தில் நினைவு கொள்ளப்படுவர்களா என்பதுதான் .அவர்களுக்கு துதி பாட வேண்டியதில்லை . தமிழ் வளர்ச்சியில்  அவர்களுடைய 
பங்களிப்பு கறாரான  முறையில் மதிப்பீடு செய்யப்படுமா  அவர்கள் நினைவில் கொள்ளப்படுவர்களா  என்பதுதான் நம்முடைய கேள்வி.
 
         அப்படியானால் தமிழ் மொழியை  முதல்முதலாக  செம்மொழி என்ற வார்த்தையால் அலங்கரித்து தமிழ் தனித்து இயங்கும் வல்லமை பெற்ற மொழி என்று 
கூறிய பரிதிமாற்கலைஞர் நினைவில் கொள்ளப்படவேண்டிய  பலரில்  ஒருவர்.  தமிழ்ப்பற்று காரணமாக சூரியநாராயண  சாஸ்த்ரி  என்ற தன் பெயரையே  பரிதிமாற்கலைஞர்  என்று மாற்றிக்கொண்டவர் அவர். .தனித்தமிழ் இயக்கத்தின்  முன்னோடி என்று கூட அவரை
குறிப்பிடலாம்.
 
          இன்று தனித்தமிழ் இயக்கம் என்ற பெயரால்  மொழி புராணங்களை  அடிப்படையாகக்கொண்ட  மூட நம்பிக்கைகளை மொழித்துறையில் திட்டமிட்டு வளர்த்துக்கொண்டிருக்கும் பகுத்தறிவுவாதிகளை  ஒதுக்கிவிடலாம்.  ஆனால் ஒரு காலகட்டத்தில் தமிழின் பெருமையை அதன் நியாயமான  இடத்தை உறுதி செய்ய தனித்தமிழ் இயக்கம் தேவைப்பட்டது.  அந்த இயக்கம் மற்ற மொழிகளின் மீது வெறுப்[பை வளர்க்காமல்  தமிழ் மொழியின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டியிருந்தது  ஆனால் இன்று தனித்தமிழ் இயக்கம்  வடமொழி எதிர்ப்பு  கூட்டமாக  சுருங்கிப்போய்விட்டது .மொழி  வைதீகம் பேசுவதையும்  மற்றமொழிகளை  தீட்டு  மொழியாக கருதி அந்த தீட்டு  படாமல் தமிழை வளர்ப்பதாக  பாசாங்கு செய்கிறது .தமிழ் மொழி வரலாற்றில் மற்ற மொழிகளின் பங்களிப்பை நிராகரிப்பது என்ற பாதையில் திசை மாறி  போய்க்கொண்டிருக்கிறது.                .
 
        வேகமாக உலகமயமாக்கல்  என்ற இன்றைய  உலகச்சூழலில்  தமிழ் மட்டுமல்ல , உலகத்தில்  எந்த மொழியும் தனித்து  இயங்க முடியாது என்பதுதான்  உண்மை.
 
          ஆனால் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழின் பெருமையை மீட்டு எடுக்க அத்தகைய இயக்கம் தேவைப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.
 
            அன்றைய நிலையில் தமிழ் மொழியின்  பெருமையை முழங்கியவர் பரிதிமாற்கலைஞர்  பல தமிழ் நாடகங்களை எழுதி மேடை ஏற்றினார்..பல ஆங்கில நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.
 
       அன்று தமிழ் மொழி  கல்லூரிகளில் பாடமொழியாகக்கூட இடம் பெறவில்லை. அந்த நிலையில் உயர்கல்வியின்  ஒரு பகுதியாக தமிழ் மொழி கல்லூரி பாடத்திட்டத்தில்  இடம் பெற வேண்டும் என்று சொல்வதற்கு கூட 1920 களில்ஒரு சிலரே  இருந்தனர் .
 
    அந்த நிலையில் கல்லூரிகளில் தமிழுக்கு இடம் வேண்டும் என்று குரல் கொடுத்து பேசியபடியே தன் உயிரை கொடுத்தார் ஒருவர்.
 
     அவர்தான் மாதவய்யா என்ற  எழுத்தாளர். பத்மாவதி சரித்திரம் என்ற நாவலை எழுதியவர் என்ற செய்தி மட்டுமே மாதவைய்யவைப்பற்றி இன்றைய தலைமுறையினருக்கு
தெரியும்.. எழுத்து துறையில் ஈடுபடுவதற்கு முன் இவர் மத்ய அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்தார்,  அந்த பதவியை விட்டு விலகி பத்திரிகை துறையில் இறங்கினார்.சென்னை பல்கலை கழகத்தில் செனெட் உறுப்பினராக இருந்தார். .இவர் உணர்ச்சி மிக்க பேச்சாளர்.
 
       கல்லூரி பாடத்திட்டத்தில் தமிழ்மொழிக்கு தகுதியான இடம் வேண்டும் என்று பல காரணங்களை கூறி செனெட் கூட்டத்தில் விளக்கமாக நீண்ட நேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
 
   பேசிவிட்டு  உட்கார்ந்தவுடன் அவருடைய  உயிர் பிரிந்தது. ..இறக்கும்போது அவருடைய வயது  53.
 
    உண்மையில் தமிழுக்காக உயிரை  கொடுத்தார் என்று கூறுவது  பொருத்தமாக இருக்கும். .தமிழ் நாவல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராக  போற்றப்படும்.மாதவையா பல நாவல்களை எழுதியிருக்கிறார் . தமிழ் மொழியில் முதல் சரித்திர நாவலான விஜயமார்தாண்டன் என்ற நாவலையும் இவர்தான் எழுதினார்.
 
    ஷேக்ஸ்பியர் நாடகமான ஒதேல்லோவை தமிழில்  மொழி பெயர்த்தார். .இவருடைய நாவல்கள் வெறும் பொழுதுபோக்குக்காக  இல்லாமல் அன்று பேசப்பட்ட  பல சமுகப்பிரசினகளை பற்றிய பல கருத்துக்களை விவாதிப்பதாக அமைந்திருந்தது.
 
             தமிழ்நாட்டில் கல்வி வளர்சிக்காக பிரசாரம் மேற்கொண்டார்.  பால்ய விவாகத்தை  எதிர்த்தும்  விதவைப்பெண்கள் மறுமணத்தை ஆதரித்தும் தன்னுடைய பஞ்சாமிர்தம் என்ற பத்திரிகையில் எழுதினார்.பெண்கள் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.
 
      தமிழ் மொழி ஆராய்ச்சியில் விருப்பு வெறுப்புகளுக்கு இடம்  கொடுக்காமல் பல சாதனைகளை புரிந்த எஸ்.வையாபுரி பிள்ளை நினைவில் கொள்ளப்படவேண்டிய மற்றொரு தமிழ் அறிஞர் .
 
   பிள்ளையவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்கு படித்துவிட்டு தமிழ் ஆராய்ச்சியை முழுமையான தொழிலாகவும்  தொண்டாகவும் மேற்கொண்டார். இந்திய மொழிகளில் இதுவரை எந்த மொழிக்கும் கலைச்சொல் அகராதி தொகுக்கப்படவில்லை.  இந்த நாட்டில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படும் இந்தி மொழிக்கும் அதுதான் கதி. ஆனால் தமிழ் மொழிக்கு கலைச்சொல் அகராதி தொகுத்து வெளியிட்ட பெருமை வையாபுரி பிள்ளைக்கு உண்டு. இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அவருடைய   வயது  36. பத்தாண்டுகளில் அந்த பெரும் வேலையை செய்து  முடித்தார்.
 
       பன்மொழி அறிஞரான பிள்ளையவர்கள் ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியிருக்கிறார்.
 
     தனித்தமிழ் இயக்கத்தவர்கள் முன் வைத்த பல கருத்துகளை நிராகரித்து விட்டு துணிவோடு தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள உறவு பற்றி விஞ்ஞான அடிப்படையிலான கண்ணோட்டத்தில் பல முடிவுகளை தெரிவித்தார். இதனால் குறுகிய நோக்கம் கொண்ட தமிழ் பற்றாளர்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டார்.
 
       தமிழ்மொழியின் நீண்ட நெடும் வரலாற்று காலத்தில் கலந்த பிறமொழிச்சொற்களை பற்றி  விளக்கியிருக்கிறார். பிறமொழிச்சொற்கள் ஒரு மொழியில் கலப்பதற்கான காரணங்களை விளக்கினார். .அவசியமானால் மற்ற மொழிகளிலிருந்து சொற்களை ஏற்றுக்கொள்ளும் முறை பற்றி தொல்காப்பியத்தை ஆதாரம் காட்டி விளக்கினார்.
 
   கண்மூடித்தனமான பிறமொழி வெறுப்போடு  கூடிய தமிழ்பற்று மொழியின் தேக்கத்தில் முடியும் என்று வாதிட்டார். தமிழ்பற்று என்ற பெயரில் தமிழ்நாட்டு இளைஞர்களை கிணற்று தவளைகளாக்கும்செயலிலிருந்து அவர்களை காக்க வேண்டும். என்றார் பிள்ளை.
 
  இத்தகைய தமிழ் அறிஞர்களுடைய பங்களிப்பு பற்றி பரிசீலனை செய்யும் வாய்ப்பை உலகத்தமிழ் மாநாடு ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.  
 
     தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு செய்த நல்லறிஞர்கள் பட்டியல் மிகப்பெரியது..இங்கே உதாரணத்துக்கு மட்டுமே சில பெயர்களை குறிப்பிட்டேன். அவர்கள் அனைவரையும் நினைவில் கொள்ளும் நல்ல நேரமாக உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அமையும் என்று உளமார நம்புகிறோம்.
                                                           
                                                                                                                 - மு .கோபாலகிருஷ்ணன்

Saturday, May 15, 2010

ரிச்மண்ட் தமிழ் சங்க புத்தாண்டு விழா

தமிழ் சங்கத்தின் புத்தாண்டு விழாவில் இருந்து சில வீடியோக்கள். இருட்டில் எனது செல்பேசியில் யூஸ்ட்ரீம் மென்பொருளால் எடுத்தது - அதனால் வீடியோக்களின் தரம் மிகக்குறைவுதான்... அனைத்து நிகழ்ச்சிகளும் சரியாக வரவில்லை. முக்கியமாக பேச்சு, பாட்டை ரசிக்கலாம்.

பேச்சுப்போட்டியின் தலைப்பு: 
திருமணத்திற்கு பிறகு சுதந்திரத்தை அதிகம் இழப்பது ஆண்களா, பெண்களா

பெண் தரப்பில் லாவண்யா:
 

 ஆண் தரப்பில் நடராஜ மூர்த்தி:
 

 ஆண்கள் தரப்பில் சத்தியவாகீஸ்வரன்:



பெண்கள் தரப்பில் வெங்கட்:






பெண்கள் தரப்பில் பார்கவி:





ஆண்கள் தரப்பில் சத்தியவாகீஸ்வரன்:





நடுவர் முத்துவின் தீர்ப்பு:



ரவி, பரத், லாவண்யா வழங்கிய பாட்டுக்குப் பாட்டு போட்டி:







Sunday, April 11, 2010

அரிது, அரிது...

எச்சரிக்கை: இந்தப் பதிவை சொஞ்சம் மெல்லிய இதயம் படைத்தவர்கள் தவிர்ப்பது அவர்களின் இதயத்திற்கு நல்லது. கொஞ்சம் கடினமாகவோ கனமாகவோ ஆகலாம்.  இந்தப் பதிவு கொஞ்சம் நீளமாகப் போகலாம். குறுக்குவழி இங்கே...

இன்று மாலை எங்கள் வீட்டருகில் நடந்து சுற்றிக் கொண்டிருந்தோம். சாலையில் நான் ஒரு இலை போல கிடந்த ஒரு வஸ்துவை மிதிக்க இருந்தேன். புது மாதிரியாக இருந்ததால் குனிந்து பார்த்தேன்.எச்சரிக்கையைத் தவிர்த்த மெ.இ.ப. - படத்திற்காக என்னைத் திட்ட வேண்டாம்.



அற்பாயுசில் மரணித்த ஒரு பறவைக்குஞ்சு. அருகில் ஒரு தடயமும் இல்லை.  தொடர்ந்து நடந்தோம். அனைவர் மனதிலும் அந்தப் பறவைக்குஞ்சுதான். எப்படி இது நடந்திருக்கும் என்று யோசித்தோம். பல யூகங்கள்.

பறவைக்குடும்பம் கூடு மாற்றி போகும்போது இந்தக் குஞ்சை கீழே தவறவிட்டிருக்கலாம். பறவையினங்கள் சின்னக்குஞ்சை வைத்துக் கொண்டு ஜாகை மாற்றுவது கேள்விப்பட்டதாயில்லை.

வேறு ஒரு பெரிய பறவை முட்டையைத் திருடியோ அல்லது குஞ்சைத் திருடியோ போகும்போது கீழே தவற விட்டிருக்கலாம். ஆனால் பக்கத்தில் உடைந்த முட்டையோ எதுவோ இல்லை. பருந்து போன்ற பறவை இந்தக் குஞ்சைக் கவர்ந்து தன் குஞ்சுகளுக்கு ஊட்டப் போகும்வழியில் தாய்ப்பறவையுடன் சண்டையில் கீழே போட்டிருக்கலாம்.

இந்தக்குஞ்சு பக்கத்து மரங்களில் எங்கேயோ இருந்த கூட்டில் இருந்து வெளியேற முயன்று கீழே விழுந்திருக்கலாம். சற்று நகர்ந்து சாலையில் வந்து சூட்டில் செத்திருக்கலாம்.

இப்படியெல்லாம் பேச்சு போனது.  அப்போது பசங்களிடம் அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது பற்றி ஒரு சொற்பொழிவாற்றினேன். பேச்சை மாற்றுவதற்காக என் பெரிய மகன் சொன்னான். என்ன ஆயிற்றோ என்னவோ, அந்தக் குஞ்சு இப்போது இறைவனிடம் சேர்ந்து ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதனால் அதைப்பற்றி இனிமேல் கவலைப்பட வேண்டாம் என்றான். உடனே சிறியவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. சொர்க்கத்திலும் அது குஞ்சாக இருக்குமா பெரியதாக இருக்குமா?  என் பதில்: வயதெல்லாம் உயிருடன் இருக்கும் போதுதான். செத்த பிறகு வயதெல்லாம் இல்லை. எல்லா ஆத்மாவும் சமம்தான்.(நமக்குதான் செத்த பிறகு என்ன நடக்கும் என்பது தெள்ளத்தெளிவாயிற்றே?).

பெரியவன் நக்கல் ஆரம்பமாயிற்று. அப்படியா? விபத்தில் நசுங்கி செத்தவர்களின் ஆத்மா பாதி நசுங்கி இருக்கும் என்று நினைத்தேன் என்றான். நசுங்கல் எல்லாம் உடலுக்குத்தானடா.நசுங்கிய உடல் எல்லாம். அதைத்தான் புதைத்தோ எரித்தோ விடுகிறோமே. மேலே போவது எல்லாம் ஆத்மாதான் என்றேன். மரணத்திற்கு பிறகு நடப்பது என்ன என்று யாருக்குத் தெரியும், எப்படித் தெரியும் என்றான் சிறியவன். பெரியவன் சொன்னான் ஒரு ஒளி மாதிரியோ என்னவோ தெரியலாம். யாராவது எழுதி வைத்து விட்டு செத்திருந்தால் நன்றாக இருக்கும் என்றான். ஆனால் ஒரு வாக்கியத்தை பாதியில் விட்டுவிட்டு இறந்துவிட்டால், படிப்பவர்கள் இன்னும் மண்டையை உடைத்துக் கொள்வார்கள் என்று பல பாதி வாக்கியங்கள் கற்பனையில் மூழ்கினான்.

அரிது, அரிதுக்கு திரும்ப வந்தேன். பாருங்கடா. மனிதராய்ப் பிறப்பது ரொம்ப கடினம். அதுவும் ஊனமில்லாமல் பிறப்பது இன்னமும் கடினம் என்றேன். அதனால் மனித உயிர் என்பது ஒரு அபூர்வமான வரம். அதை உதாசீனம் செய்யாமல் அனுபவிக்க வேண்டும் என்றேன். அப்படியா, எங்கே தினம் ஓட்டம், சைக்கிள் என்று லெக்சர் அடிக்கப் போகிறாயோ என்று பார்த்தேன் என்றான் பெரியவன்.

வீடு வந்து சேர்ந்தோம். போங்கடா என்று கணினியில் உட்கார்ந்தேன். இட்லிவடை ரொம்ப நாளுக்குப் பிறகு முனிக்கு கடிதம் எழுதியிருப்பதை படித்தேன். சிதம்பரம் கழுத்து சுளுக்குமளவுக்கு திருப்பி மின்னலை(அது யார்?) சைட் அடிக்கும் படம் இருந்தது. அதற்கு மேலே ஹெல்ப் என்று ஆங்கிலத்தில் ஒரு சுட்டி.  சும்மா கிளிக்கி அதிர்ந்தேன். கண்கள் கலங்கின. அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது.

ஒரு பிழையும் இல்லாமல் அரிதாகப் பிறந்த ஒரு சுட்டிப் பிறப்பின் நிலை. அதுவும் பண்ருட்டி அருகில் கச்சராப்பாளையத்தில்.  சுமன் என்ற சுரேந்தர் ஒரு குச்சியை எடுத்து அதிக மின்சக்தி செல்லும் கம்பியைத் தட்டியிருக்கிறான். அவ்வளவுதான். கை, கால்கள் பொசுங்கிவிட்டன.  இதற்கு மேல் நீங்களே கதிரின் பதிவில் படித்துக் கொள்ளுங்கள்.  படிப்பதோடு நின்று விட வேண்டாம் கட்டாயம் உதவ வேண்டும்.

கைகால் பொசுங்கியும் அவன் புன்னகை பொசுங்கவில்லை.  இனியும் அந்தப் புன்னகை பொசுங்காமல் இருப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.


உதவி செய்ய விவரங்கள்:
முகவரி :
P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kacharapalayam post
kallakurichi tk
villuppuram dt

 
விவரங்கள், சந்தேகங்கள், தகவல்களுக்கு - கதிரின் தொலைப்பேசி: 9791460680 


பணம் அனுப்ப:

Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan

இந்தியன் வங்கி தளத்திலிருந்து கதிர் எடுத்த விவரங்கள் கீழே

Name : KACHARAPALAYAM
IFSC - CODE : IDIB000K001
MICR - CODE : 606019007
CIRCLE : CUDDALORE
Address : 10 - F, Gomuhi Dam Road
Kacharapalayam
Vadakkanandal Post

PIN : 606207
District : VILLUPURAM
State : TAMIL NADU
Phone : 4151234234

Email : kacharapalayam@indianbank.co.in

அமெரிக்காவில் இருப்பவர்கள் வரிச்சலுகையுடன் நன்கொடை அனுப்பலாம். உங்கள் காசோலையை  கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
Channels of Glory
404 E Laurelwood Dr
Bloomington, IN 47401
 
காசோலையை 'Channels of Glory' பெயருக்கு அனுப்பவும். காசோலையில் குறிப்பு எழுதுமிடத்தில் 'Towards Suman, Kacharapalayam, India" என்று எழுத மறக்காதீர்கள். பிறகு கதிருக்கு Channels of Glory க்கு அனுப்பிய தொகை என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிடுங்கள். அவருடைய எண்: +91-9791460680

என் பதிவுலக நண்பர் செந்தழல் ரவி அவருடைய பதிவில் சொன்னது:

சிறுவனுக்கு உதவுங்கள்

கதிர் பதிவை அப்படியே கொடுத்துள்ளேன். உங்களால் ஆன உதவிகளை செய்யுங்கள். முடிந்தால் அந்த சிறுவனை போய் பார்த்து ஆறுதலாக பேசிவிட்டு வாருங்களேன்..!!! நானாக இருந்தால் அதைத்தான் செய்திருப்பேன்...!!

ரவி சொன்னதும்தான் உறைக்கிறது. அந்தக் குஞ்சை சாலையிலிருந்து அகற்றி புதைத்திருக்கலாமோ?

Thursday, April 08, 2010

மீனாவுடன் மிக்சர் - 20 {வா வா வசந்தமே}

அப்பாடா! ஒரு வழியா வசந்த காலம் ஆஜர். கடந்த ஆறு மாசமா வெளியே வராதான்னு ஊர்ல எல்லாரும் ஏக்கமா எட்டி பாத்துகிட்டு இருந்த சூரியன் இப்போ தான் மனமிரங்கி பரம விசிறிகளான எங்களுக்கு காட்சி தர முன் வந்திருக்கான். வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பிக்கற நேரம் இது.

நாலு மாசமா அலட்சியப்படுத்தினதில் தெருவுல எல்லார் வீட்டு தோட்டமும் எங்க வீட்டு தோட்டத்தோட போட்டி போட்டுக்கிட்டு 'நீ மோசமா, நான் மோசமா'ன்னு பல்லிளிச்சது போன வாரம் வரைக்கும் தான். நேத்து காலையில் எதேச்சையா ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தா என்ன ஒரு ஆச்சர்யம்! ஹாரி பாட்டர் மந்திரக்கோல் ஆட்டி 'ஜீபூம்பா' ன்னு சொன்னா மாதிரி எங்க வீட்டை தவிர எல்லார் வீட்டு வாசலிலும் வண்ண பூச்செடிங்க அழகழகா பூத்து என்னைய பார்த்து 'உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே' ன்னு அழகு காட்டுது. எங்க வீட்டு கிட்டே வரும் போது மந்திரக்கோலுக்கு சார்ஜ் போயிருக்குமோ? Stock market shares வாங்கி போடற எண்ணம் இருக்குறவங்களுக்கு இது நல்ல தருணம். Lowes மற்றும் Home Depot கம்பனிங்க பூச்செடி வித்தே Wallstreet ட்டை வலுவாக்கராங்கன்னு கேள்விப்பட்டேன்.

வயசில் சின்னவங்க, பெரியவங்கன்னு வித்யாசம் பாராட்டாம எல்லோர் முட்டியையும் ஒரே மாதிரி பதம் பார்த்துகிட்டு இருந்த குளிர் காலத்தை அடிச்சு விரட்டிட்டு ஒயிலா வசந்த காலம் எட்டிப் பார்க்கும் போது இந்த மாதிரி உற்சாகமா பூந்தோட்டமோ இல்லை காய்கறித் தோட்டமோ மக்கள் போடறது நாம எல்லாரும் நடைமுறைல பாக்கற ஒரு விஷயம் தான்.

ஆனா எங்க ஊர் மக்கள் வசந்தம் வந்ததும் தோட்ட வேலையை விட உற்சாகமா இன்னொரு விஷயம் செய்வாங்க. அது தான் உடல்பயிற்சி. சூரியன் சாயல்ல வட்டமா ஒரு பெரிய ஸ்டிக்கர் பொட்டை பார்த்தா கூட போதும், ஏதோ பூச்சாண்டி குச்சி எடுத்துகிட்டு துரத்தரா மாதிரி தெருவில் இறங்கி ஓட ஆரம்பிச்சிடுவாங்க. விடிகார்த்தால காப்பி டீ கூட குடிக்காம ஜட்டியை விட கொஞ்சம் பெருசா ஒரு நிஜார் மாட்டிகிட்டு தலை தெறிக்க ஓடற சில மக்களை நிறுத்தி விசாரிச்சதுல இதுக்கு ரெண்டு முக்கிய காரணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். ஒண்ணு புத்துணர்ச்சி. மற்றது உடல் எடை குறைப்பு.

இவங்க ஓட்டமா ஓடி கொட்டற வியர்வையை ட்யூப் போட்டு பக்கெட்டில் பிடிச்சா நாலு ரோஜா பூ செடிக்கு ஒரு வாரம் தண்ணி விடலாம். இதுல எங்கேர்ந்து புத்துணர்வு வரும்னு எனக்கு புரியலை. ஹமாம் சோப்பு விளம்பர அறிவுரையை கடைபிடிச்சா தானா புத்துணர்வு வந்திட்டு போறது. இதுக்கு போய் தலை தெறிக்க ஒடுவானேன்? எங்க குடும்பத்தில் புத்துணர்ச்சி பெற நாங்க நம்பகமான ஒரு formula கண்டு பிடிச்சு வச்சிருக்கோம். ஒரு கப் பில்டர் காப்பி + ஒரு தட்டு 'ஜானகி' பிராண்ட் தேன்குழல் = புத்துணர்ச்சி. இதை patent பண்ணலாமான்னு கூட ஒரு யோசனை இருக்கு. பார்ப்போம். God is great.

உடல் எடை குறைப்பை பத்தி நான் இன்னிக்கு அதிகம் ஒண்ணும் சொல்லரத்துக்கு இல்லை. ஏன்னா அது ஒரு சோகக் கதை.(மேல சொன்ன பார்முலாவை படிச்சீங்க தானே?) அது மட்டும் இல்லை. அடுத்த மாதம் நடக்க இருக்கும் தமிழ்புது வருஷ கலை நிகழ்ச்சிகளிலே 'stand up comedy' பண்ணறேன்னு முந்திரிக்கொட்டை மாதிரி நான் கையை வேற தூக்கிட்டேன். என்னோட இந்த சோகக்கதையை பத்தி அங்கே பேச நாலு பாய்ன்ட் எடுத்து வச்சிருக்கேன். அதை எல்லாத்தையும் இங்க போட்டு ஓடைச்சிட்டேன்னா அப்புறம் மேடைல ஏறி ''வந்தே மாதரம்' ன்னு உரக்க சொல்லிட்டு அழுகின தக்காளி மழையில் நனைய ரெடியாக வேண்டியது தான். சொதப்பினா ஊர் மக்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்திட மாட்டாங்களா?

சரி அதை விடுங்க. வசந்த காலம் வந்தாலே பொதுவா எல்லா வீட்டுத் தலைவிகளுக்கும் ஒரு வினோதமான உந்துதல் வரும். பத்து வருஷ coma விலேர்ந்து திடீர்னு கண்ணை திறந்து 'அடடா இப்படி குப்பைத்தொட்டிக்குள்ள போய் வாழரோமே' ன்னு உணர்ந்தவங்க மாதிரி வசந்த காலம் வந்து பளிச்சினு வெய்யில் அடிச்ச உடனே வீட்டை சுத்தம் செய்யறதில் இறங்கிடுவாங்க. சுத்தம் பண்ணறேன்னு சொல்லி வீட்டில் உள்ள எல்லா அலமாரி சாமான்களையும் இழுத்து வெளியே போடறது இந்த சீசனுக்கே உண்டான ஒரு விசேஷம்.

அது மட்டும் இல்லை. வீட்டுத் தலைவிகளோட தானதர்ம உணர்வுகள் தலை தூக்கி நிற்கற நேரம் வசந்த காலம் தான். கணவர், குழந்தைகளோட உடம்பில் போட்டிருக்கிற துணிகளை மட்டும் விட்டு வச்சிட்டு மிச்ச எல்லாத்தையும் மூட்டை கட்டி 'salvation army' இல்லைனா 'goodwill' கடைங்களுக்கு தானம் செஞ்சுடுவாங்க. ரெண்டு வாரம் முன்னாடி வாங்கின புத்தம் புது துணிமணி எல்லாம் கூட இந்த மூட்டைக்குள்ள தான் இருக்கும். எல்லாத்தையும் எடுத்து தானம் பண்ணிட்டு Macy's கடைல spring sale ன்னு அடுத்த வருஷம் தானம் பண்ண வேண்டிய துணி மணி மற்றும் இதர சாமான்களை வாங்கரதுல பிசியாயிடுவாங்க. எனக்கு எப்படித் தெரியும்ன்னு கேக்கறீங்களா? நேத்து தான் நான் பத்து மூட்டை சாமான்களை தானம் செஞ்சேன். என் கணவரோட சட்டை வைக்கும் அலமாரி நான் துடைச்ச துடைப்பில வைரம் மாதிரி மின்னரதுன்னா பாருங்களேன்! கொடை வள்ளல் கர்ணனோட தங்கச்சின்னு என் கணவர் (பெருமையா ???) சொன்னது என் காதுல நல்லாவே விழுந்தது.

Kohl's கடைலேர்ந்து 20% off வசந்த கால தள்ளுபடி கூபான் இன்னிக்கு தான் வந்திருக்கு. இதுவே நவராத்திரி காலமா இருந்ததுன்னா குங்குமச்சிமிழ் எடுத்துகிட்டு கொலுவுக்கு கூப்பிட Kohl's கடைக்கு போயிடுவேன். ஏன்னா நம்ம மக்கள் எல்லாம் கூபான் பிடிச்சிகிட்டு அங்கே தானே இப்போ இருப்பாங்க?

-மீனா சங்கரன்

Tuesday, March 16, 2010

மீனாவுடன் மிக்சர் - 19 {முன் நெத்தி வழுக்கையாகாமல் பீ.எச்.டீ. பட்டம் வாங்குவது எப்படி?}

டாக்டர் பட்டம் வாங்கணும்னு கொஞ்ச நாளாவே ஒரு நப்பாசை எனக்கு. டாக்டர் மீனா அப்படீன்னு சொல்லிக்க ஒரு கெட்டப்பா இருக்குமேன்னு பாக்கறேன். அதுக்காக பத்து வருஷம் கஷ்டப்பட்டு முன் நெத்தி வழுக்கையாற வரைக்கும் படிச்சு டாக்டர் பட்டம் வாங்குன்னு சிரமமான அறிவுரையெல்லாம் எனக்கு குடுக்காதீங்க. நடக்கற விஷயமா ஏதாவது பேசுவோம். சுலபமா டாக்டர் பட்டம் வாங்க ரெண்டு வழி தான் இருக்கு.

தமிழ்நாட்டு ஆளும்கட்சியில எம்.எல்.ஏவா சேர்ந்து ஏதாவது புது தனியார் பல்கலைகழகம் திறக்கும் போது போய் ரிப்பன் வெட்டி குடுத்தாக்க அவங்களே ஒரு ஜிலு ஜிலு பொன்னாடை போர்த்தி டாக்டர் பட்டமும் குடுத்திடுவாங்க. இது ஒரு வழி. ஆனா அரசியல் எனக்கு சரி வராது. ஏன்னா கட்சில சேர்ந்த உடனேயே எல்லோரும் மரியாதை காரணமா 'அம்மா மீனா' அல்லது 'மீனாம்மா'ன்னு பவ்யமா கூப்பிட ஆரம்பிப்பாங்க. அதெல்லாம் வயசை அனாவசியமா கூட்டி காமிக்கும். எனக்கு தேவையா சொல்லுங்க?

ரெண்டாவது வழி தினப்படி நாம பிரமாதமா செய்யற ஒரு விஷயத்தையே எடுத்து அதுல பீ.எச்.டீ குடுப்பாங்களான்னு ஆராயணும். எப்படியும் செய்யற ஒரு வேலைக்கு பட்டம் குடுத்தாங்கன்னா எவ்வளவு சுலபம்? இந்த வழி தான் சரின்னு எனக்குப்பட என்னோட தினசரி வேலைகளை அலச ஆரம்பித்தேன். உலகத்துல எந்த ஒரு பல்கலைகழகமும் பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது, வீடு சுத்தம் செய்வதுக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அவசியம் குடுக்க வேண்டிய சில துறைகள் தான் இவைன்னு மனப்பூர்வமா நான் நம்பறேன். செய்து பார்த்தா தானே தெரியும் அந்த கஷ்டம்? கணக்கும், இலக்கியமும், விஞ்ஞானமும் ஒரு வீட்டு தலைவியோட வேலைகளோடு போட்டியிட முடியுமா? ஆனா டாக்டர் பட்டம் இதுல கொடுப்பாங்கன்னு நம்பறது நடப்புக்கு ஒத்து வராத முட்டாள்தனம்.

சரி வீட்டு வேலை இல்லாத, ஆனா தினமும் நான் செய்யற ஒரு விஷயம் என்னன்னு யோசனை பண்ணின போது தான் மண்டைக்குள்ள பளிச்சுன்னு ஒரு பல்ப் எரிஞ்சுது. அத்தி பூத்தா மாதிரி எப்பவாவது தான் எரியும் இந்த பல்ப் ஆனா எரிஞ்சா பிரகாசமா எரியும். தெனமும் கண் முழிச்சிருக்குற நேரத்துல பாதி நேரம் இதை தான் செய்யறேன். கடந்த ரெண்டு வருஷமா அரும்பாடு பட்டு இந்த துறையோட நெளிவு சுளிவுகளை எல்லாம் முழுசாக கத்து தேற முயற்சி செய்து வர்றேன். என்னை விட இந்த ஒரு கலையை எங்க ஊரில் இன்னும் பலர் பல வருஷங்களா ரொம்ப அருமையா செய்யறாங்க. அப்படி என்ன பெரிய கலைன்னு கேக்கறீங்களா?

கையில் நசுங்கின அலுமினியப் பாத்திரம், உடம்பில் கசங்கி கந்தலான துணி - இவை இல்லாமலேயே பிச்சை எடுப்பது. என்ன? இந்த கலையை பத்தி கேள்விப்பட்டதில்லையா நீங்க? கவலை டபேல். விலாவாரியா நான் சொல்லேறேன் கேளுங்க.

ஊரில் ஒரு புது கோவில் கட்ட திட்டமா? நிதி வசூல் செய்யாமல் கோவில் கட்ட முடியாதா? நம்ம அபிமானக் கடவுள் (அபிமான நடிகர்னு சொல்லி தான் இது வரை கேள்விப்பட்டிருப்பீங்க) சந்நிதி கொண்டு வர என்ன வேணா செய்ய தயாரா இருக்கோமா? எங்க பிச்சை தொழில் அப்படி தான் ஆரம்பிச்சது. அப்புறம் இந்திய கலாச்சாரத்தை வளர்க்க அருமையான கர்னாடக இசை கலைஞர்களை அழைத்து ஊரில் நிகழ்ச்சிகள் போட முடிவு எடுக்கப்பட்ட போது ஒரு சின்ன விஷயம் இடிச்சது. கஜானா காலி, வேறென்ன புதுசா? மறுபடியும் தூக்கினோமே கண்ணுக்கு தெரியாத அந்த அலுமினிய பாத்திரத்தை. இதையெல்லாம் தாண்டினா குழந்தைங்களோட பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டியாகணும். பள்ளிக்கூடத்துக்கு பாப்கார்ன் வித்து வித்து (பாதி பாப்கார்னை நாங்களே தின்னு தின்னு) வாய்ல எப்பவுமே உப்பு கரிக்கரா மாதிரி ஒரு பீலிங்.

முதல்ல நீங்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா, இந்த பிச்சைக் கலையை சிறப்பா செய்து வர்ற நாங்க எல்லோருமே சில பல கௌரவமான பிச்சை டெக்னிக்குகளை கையாளுவதில் வல்லவர்கள்னு. அனாவசியமா யாரும் எங்களை தெருவோரமா நின்னு போற வர வண்டிகளை நிறுத்தி 'அய்யா, அம்மா...பார்த்து கொஞ்சம் போடுங்க'ன்னு தலையை சொரியும் கும்பல்னு நினைச்சுடக் கூடாது பாருங்க. அப்படி என்ன பெரிய டெக்னிக்? தட்டை தூக்கிண்டு தெருவுல சுத்துவதுக்கு பதில் மாத்தி மாத்தி போன் மேல போன் போட்டு மக்கள் கழுத்தை அறுக்கறது தான். "கோவிலுக்கு அம்பது டாலர் தான் தர முடியுமா? அதுக்கென்ன நோ ப்ராப்ளம்ஸ். ஆனா கர்நாடக இசை வளர்க்கும் குழுவுக்கு மட்டும் ஒரு நூறு டாலர் குடுத்துடுங்க சரியா? உங்க வீட்டு பக்கமா இன்னிக்குஎனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நானே வந்து உங்ககிட்ட காசோலை வாங்கிக்கவா?" சிரிச்சு சிரிச்சே பணத்தை உருவிட மாட்டோம் நாங்க!

ஊர் மக்களை நினைச்சா சில சமயம் பாவமா கூட இருக்கு. எந்த பக்கம் திரும்பினாலும் அவங்க பேன்ட் பாக்கெட்ல கை விட்டு பர்ஸ் எடுக்க ஒருத்தர் ரெடியா இருக்கோம். என்ன தான் செய்வாங்க அவங்களும். அன்னிக்கு கூட தெரிஞ்சவங்களா தெரியுதேன்னு கை தூக்கி நான் ஹலோ சொல்லறதுக்குள்ள ஒரு குடும்பம் பயந்து போய் பின்னங்கால் பிடரில இடிக்க திரும்பி ஓடிட்டாங்க.

என் தமக்கை ஆங்கில இலக்கியத்துல பீ.எச்.டீ முடித்து டாக்டர் பட்டம் எடுத்தவள்னு இங்க ரொம்ப பெருமையோடு உங்ககிட்ட சொல்லிக்கிறேன். எங்க குடும்பத்தோட முதல் டாக்டர் அவள் தான். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு மேல் படிப்பை தொடர்ந்து எம்.பில் மற்றும் பீ.எச்.டீ எடுத்து எங்களுக்கெல்லாம் சொல்லொணா பெருமை சேர்த்தவள் அவள். எங்க குடும்பத்தோட டாக்டர் கோட்டா அவ தயவுல முடிஞ்சு போச்சு. ரொம்ப திறமைசாலி என் தமக்கை. முன் நெத்தி வழுக்கை ஆகாமலேயே பீ.எச்.டீ பட்டம் வாங்கிட்டான்னா பாருங்களேன்! பெரிய எதிர்ப்பார்ப்புக்கள் எதுவும் என்னிடம் இல்லாததால தான் குறுக்கு வழியில் சுலபமா பிச்சை எடுத்தே பீ.எச்.டீ எடுக்க முடியுமான்னு இன்னிக்கு நான் ஒரு ஆழ்ந்த சிந்தனைல இருக்கேன்.

எங்க ஊர் பக்கம் வர்றதா இருந்தீங்கன்னா, அடுத்த மாதம் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 16 ஆம் தேதி மாண்டலின் சகோதரர்கள் (ஸ்ரீநிவாஸ் மற்றும் ராஜேஷ்) கச்சேரிக்கு கண்டிப்பா வந்துட்டு போங்க. டிக்கட் விலை தலா இருபதே டாலர் தான். மேலும் விவரங்களுக்கு இங்கு சொடக்கவும் - www.richmondrasikas.org.

அப்புறம் எங்க ஊர் கோவில் கட்டி முடிச்சப்புரமா எப்படி இருக்கும்னு பார்க்க ஆசைப்பட்டீங்கன்னா இங்கே சொடக்குங்க - http://www.hinducenterofvirginia.org. நீங்களா ஆசைப்பட்டு இந்த கோவிலின் விரிவுபடுத்தும் பணிக்கு நிதி உதவி செய்ய விரும்பினீங்கன்னா நான் உங்களை தடுக்கவே மாட்டேன். உங்க சவுகரியம் எப்படியோ பார்த்து செய்யுங்க (பாத்து மேல போட்டு குடுப்பான்னு யாரோ எங்கயோ சொல்லி கேட்ட மாதிரி இல்லை??).

எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கும்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?


-மீனா சங்கரன்