Monday, June 07, 2010

வீண் வழக்குகள், வெட்டி செலவுகள்

சென்ற 27-5-2010 தினமலர் பத்திரிகையில் ஒரு செய்தி அதன் சாரம் இதுதான்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் கருட வாகனம் புறப்படும் தினத்தன்று கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள்(ஒரு தென்கலை வைணவ ஆச்சாரியார்) சன்னதியில் கருட வாகனத்தை நிறுத்தி அவருக்கு (மணவாள மாமுனிக்கு ) சடாரி மரியாதை நடைபெறுகிறது. இந்த வழக்கம் நீண்ட நாட்களாக அமுலில் உள்ளது.
இந்த சடாரி மரியாதை மனவாள மாமுனிக்கு செய்யக்கூடாது, அது வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு விரோதமானது என்று கூறி காஞ்சிபுர நீதிமன்றத்தில் வடகலை பிரிவை சேர்ந்த சீனிவாசராகவன் என்பவர் 1991-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தார்.
காஞ்சிபுர நீதிமன்றம் வழக்கை விசாரித்துவிட்டு அவருடைய மனுவை தள்ளுபடி செய்தது. . அவரும் வடகலை வைஷ்ணவ சம்பிரதாய சபை என்ற அமைப்பும் சேர்ந்து காஞ்சிபுர நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மேல்முறையீடு செய்தனர். உயர்நீதி மன்றமும் இவர்களுடைய மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உடனே அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தனர்.

19 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியிருக்கிறது. .மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது மட்டும் அல்லாமல் கீழ் நீதிமன்றத்து தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு கூறியிருக்கிறது.

மணவாள மாமுனிக்கு சடாரி மரியாதை செய்யும் வழக்கம் சரியானதே என்றும் அது எந்த வகையிலும் வைணவ சம்பிரதாயத்துக்கு எதிரானது அல்ல என்றும் உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பில் கூறியிருக்கிறது. மேலும் வழக்காடியவர்களின் குறுகிய நோக்கத்தையும் தீர்ப்பில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

மணவாளமாமுனிகள் என்ற வைணவ ஆச்சாரியர் 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தென்கலை வைணவ பிரிவின் முக்கிய ஆசாரியர்களில் ஒருவர்.

இன்றும் வைணவர்கள் தினசரி துதிக்கும் நித்யானுசந்தானம் என்ற நூலில் உள்ள உபதேச ரத்னமாலை என்ற பாசுரங்களையும் திருவாய்மொழி நூற்றந்தாதி முதலிய பாசுரங்களையும் இவர்தான் இயற்றினார், யதிராஜவிம்சதி என்ற வடமொழி நூலையும் இவர் இயற்றியிருக்கிறார். சில தொகுத்து வெளியிட்டிருக்கிறார். சில முக்கிய வடமொழி நூல்களுக்கு விளக்க உரை எழுதியிருக்கிறார்.

சில கால இல்வாழ்க்கைக்கு பிறகு துறவறம் பூண்ட மணவாளமாமுனிகள் பல திருக்கோயில்களை புதிப்பித்து ,சமயப்பிரசாரம் செய்து வாழ்ந்து எழுபதாவது வயதில் அமரர் ஆனார். தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள அழ்வார்த்திருனகரியில் பிறந்த மணவாள மாமுனிகள் ஆந்திராவில் திருப்பதிக்கு வடக்கே சென்று நான்கு வைணவ மடங்களை தோற்றுவித்தார். தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பல சமூகத்தினர் வைணவத்தை தழுவ வழி செய்தார்.

இவர் போன்ற பல ஆசாரியர்களுக்கு திருவிழா நாட்களில் சடாரி மரியாதை செய்யும் முறை பல வைணவ தலங்களில் வழக்கில் உள்ளது.
வைணவ ஒரு பிரிவினர் குறிப்பிட்ட ஆச்சாரியார் மாற்று பிரிவை சேர்ந்தவர் என்பதற்காக அந்த முறையை எதிர்த்து 19 ஆண்டு காலம் வழக்காடியுள்ளதை பார்க்கும்போது நாம் என்ன நினைப்பது? இந்த வழக்கில் எவ்வளவு பேருடைய பணமும் காலமும் விரயமாகி இருக்கிறது என்று எண்ணி பார்த்தால் வியப்பாக இருக்கும்.

பொதுவாக இத்தகைய விஷயங்களில் நீதிமன்றங்களுக்கு செல்பவர்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். பலர் ஒய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகள். பலர் வழக்கறிஞர்கள். டாக்டர்கள். மற்ற பல துறைகளில் உள்ள பணக்காரர்கள். இவர்களுக்குத்தான் இது போன்ற மத விஷயங்களில் நேரத்தை செலவிடவும் சிறு வேற்றுமையை கூட பெரிது படுத்தி அதை பூதாகாரமாக ஆக்கி ஊரை இரண்டுபடுத்தி விளையாட நேரம் உண்டு. இவர்களில் பலர் இதைத்தான் ஆன்மீகம் என்று நம்புகிறார்கள்.

இந்த விவகாரங்களில் காஞ்சிபுரம் பேர் போன ஊர். கோயில் யானைக்கு எந்த நாமம் போடுவது, எந்த சன்னதியில் எந்த பிரிவினருக்கு முதல் தீர்த்த மரியாதை போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் கடந்த காலத்தில் நீதிமன்றம் போய்தான் தீர்வு காணப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது போன்ற சில வழக்குகள் லண்டனில் உள்ள பிரிவிகௌன்சில் வரை சென்றதுண்டு.
இந்த சம்பிரதாய முறைகள் பற்றி காலும் தெரியாமல் தலையும் தெரியாமல் வெள்ளைக்கார நீதிபதி கொடுத்த தீர்ப்பை சொல்லி தர்மம் ஜெயித்தது என்று தனக்கு தானே மகிழ்ந்து போனார்கள். இவர்களெல்லாம் வெள்ளைக்கார துரைமார்களுக்கு அடிமை சேவகம் செய்யவே அவதாரம் எடுத்தவர்கள். இவர்களிடம் அகப்பட்டுக்கொண்டு வைணவம் விழி பிதுங்கிக்கொடிருக்கிறது.

வைணவ சமயத்தின் இரு பிரிவுகளுக்கு காரணமான தத்துவம் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. இவர்களில் பலர் முரட்டு பக்தர்கள், ஆனால் ஞான சூன்யங்கள். .வெறும் அடையாளத்தையும் குறியீடுகளையும் வைத்து சண்டையிடும் படித்த பேதைகள். தான் என்ற அகம்பாவம் இவர்களிடம் பல உருவங்களில் மதமாக சாதியாக, சாதிப்பிரிவாக வடிவெடுத்து இருக்கிறது.

இந்த படித்த மேதைகள் பத்து பேர் எங்காவது கூடினால் ஒரே வீடிக்கைதான் . அன்றைய ஹிந்து நாளிதழில் என்ன செய்தி வந்திருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தங்களுக்கு தெரிந்த அரசியல் பேசுவார்கள், அரசியல்வாதிகளை எல்லாம் திட்டித் தீர்ப்பார்கள், காலம் கெட்டுப் போச்சு என்று அங்கலாய்த்து கொள்வார்கள். ஆங்கிலம் கலந்த தமிழில் யார் உயர்ந்த குரலில் பேசுகிறாரோ அவரே வாதத்தில் வெற்றி பெற்றதாக நினைத்து மகிழ்ந்து போவார்.

எங்கு பார்த்தாலும் வளர்ந்து விட்ட வன்முறையைப்பற்றி சொல்லி எல்லாவற்றுக்கும் ஒசாமா பின் லேடன் தான் காரணம் என்பார்கள், உண்மையில் இவர்கள் ஒவ்வொரிடமும் ஒரு பின்லேடன் ஒளிந்து கொண்டிருக்கிறான்.

மற்ற மதத்தாரை அழிப்பதற்கு துப்பாக்கி ஏந்தும் துணிவு பின்லேடனுக்கு இருக்கிறது. இவர்களுக்கு அந்த துணிவு இல்லை, இதுதான் வித்தியாசம்.

இவர்களெல்லாம் எப்படியாவது தொலையட்டும், இது விஷயமாக நமக்கு தோன்றும் ஒரு முக்கிய கேள்வி இதுதான். இந்த குப்பை வழக்கில் தீர்ப்பு கொடுக்க 19 ஆண்டு கால அவகாசம் தேவையா? எத்தனையோ வழக்குகளை அனுமதிக்கும் போதே தள்ளுபடி செய்யும்போது இந்த வழக்கு எப்படி உச்சநீதி மன்றம் வரை அனுமதிக்கப்பட்டது?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பொன்னான நேரத்தை இந்த குப்பை வழக்குகளில் செலவிட வேண்டிய அவசியம் என்ன?அவர்களுக்கு வேறு உருப்படியான வேலை இல்லையா என்று கேட்க தோன்றுகிறது

உச்ச நீதிமன்றத்திலும் பல மாநில உயர்நீதிமன்றங்களிலும் பலஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. 20 வருடங்களுக்கு மேலாக தீர்ப்பு ஆகாமல் நிலுவையில் உள்ள வழக்குகளே உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருப்பதாக பத்திரிகை செய்தி வருகிறது.

இது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு நினைவுக்கு வருகிறது. டெல்லியில் திலக்நகர் பகுதியில் உபகார் என்ற சினிமா தியட்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் இறந்து போனார்கள். இறந்தவர்களில் பலர் இளம் தம்பதியினர், மற்றும் குழந்தைகள். .
அந்த அரங்கத்தின் மின்சார சாதனங்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணை அறிக்கை கூறியது.

உண்மை என்னவென்றால் டெல்லி மின்சார வாரியம் இந்த அரங்கின் மின்சார அமைப்பு முறையை சோதனை செய்து விட்டு திருப்திகரமாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளது. அதனால் தியேட்டரில் படம திரையிடப்படுவதை தடை செய்து மின்சாரவாரியம் உத்திரவு போட்டது. .வாரியத்தின் உத்திரவை எதிர்த்து தியேட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வாரியத்தின் உத்திரவுக்கு இடைக்கால தடையும் தியேட்டர் நிர்வாகம் பெற்றது. வழக்கு தொடர்ந்தது. 13 ஆண்டு காலமாக வழக்கு நிலுவையில் இருந்தது.

ஒரு நாள் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 50 உயிர்களை பலி கொண்டது. .

13 ஆண்டு காலமாக ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் இடைக்கால தடை உத்திரவை மறுபரிசீலனை செய்யக்கூட நேரம் ஒதுக்கவில்லை. இதன் விளைவாக 50 உயிர்கள் பலியாக நீதிமன்றத்தின் தாமதம் காரணமாக அமைந்தது.

JUSTICE DELAYED IS JUSTICE DENIED என்பது மட்டுமல்ல. தாமதமான நீதிமன்ற நடவடிக்கைகள் உயிர் பலியில் முடியும் என்பதற்கு இந்த வழக்கு நல்ல உதாரணம். தாமதத்தால் ஏற்படும் விபரீதங்கள் பல சமயங்களில் தெரியாமல் போய்விடுகிறது.

இப்படி பல வழக்குகள் தாமதம் ஆவதற்கு காரணம் நேரடியாக குப்பையில் சேர்க்கப்படவேண்டிய பல சாதிவெறி மனுக்களுக்கு மரியாதை கொடுத்து அதை வழக்கு ஆவணமாக மாற்றி அதன் மீது வருடக்கணக்கில்
விவாதங்களை அனுமதித்துக் கொண்டிருப்பதுதான் என்று கூறலாம்.

- மு.கோபாலகிருஷ்ணன்

3 comments:

  1. மிகவும் உருப்படியான பதிவு.
    KEEP IT UP.

    ReplyDelete
  2. போபாலில் 1984 ல் விஷ வாயு பரவி சுமார் 3800 பேர் உடன் இறந்தனர். சுமார் 38000 பேர் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக‌
    இறந்தனர். இன்னமும் சுமார் 100000 க்கு மேற்பட்டவர் சொல்லமுடியாத அவதி பட்ட்னர். இன்னும் பலர் அந்த அவதியிலிருந்து மீளவில்லை.

    இந்த கேசுக்கான ஜட்ஜ்மென்ட் இப்போதுதான் வந்திருக்கிறது. இந்தியாவில் பொறுப்பு வகித்த நபர்களுக்கு
    2 ஆண்டு தண்டனை ( அதுவும் நெக்லிஜன்ஸ் என்ற குற்றம் தான்) கொடுத்துவிட்டு, அவர்களுக்கும் ஜாமீன்
    தந்துவிட்டது.

    யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் பற்றி ஒன்றும் கூறப்படவில்லை.

    இது தான் சட்டம். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை விவாத்திப்பதிலேயே 26 வருடங்கள் கழிந்து விட்டன் பாருங்கள்.
    இதுபற்றிய தகவல்களை இன்றைய நாளிதழ் ஹிந்துவில் அறிய இந்த லிங்கை பாருங்கள். தொடருங்கள்.

    http://www.hindu.com/2010/06/08/stories/2010060858160100.htm‌



    சுப்பு ரத்தினம்.
    http;//vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  3. Now the worry is Civil Nuclear Code also will aim to protect NEGLIGENCE and ERRORS. Such cases may take 260 years to deliver judgement!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!