Tuesday, May 29, 2007

படம் பாரு கடி கேளு - 8


சிவப்பு முட்டாக்கு: என்னடீ இது சைதாப்பேட்டை மாதிரியே இல்லையே! கடை பேரெல்லாம் தெலுங்கில் எழுதியிருக்கே.
ரோஸ் முட்டாக்கு: நான் அப்போவே நினைச்சேன். ரொம்ப நேரம் ஓட்டுறாளேன்னு. இவ தான் "சைதாப்பேட்டை எனக்கு தண்ணி பட்ட பாடு கண்ணை மூடிக்கிட்டே ஓட்டுவேன்" னு சரடு விட்டா.

படம் பாரு கடி கேளு - 7


யோவ்! என் மேலிருந்து எறங்குய்யா. உன்னை நாய் துரத்துச்சுன்னா நான் என்னய்யா பண்றது? நானே இந்த ஊர்வலம் எப்போ முடியும் ஆணி படுக்கையிலிருந்து எப்போ எந்திரிக்கலாம்னு இருக்கேன். நாய் துரத்துதாம் நாயி.

Friday, May 25, 2007

பிரமிக்க வைக்கும் பிரபலங்கள் - 1

இந்த வீடு வாங்கி, அது ஆச்சு அம்பது வருசம். கல்யாணம் முடிஞ்சு வாங்கின வீடு. எவ்வளவோ இடங்களுக்குப் போனாலும் என் வீடப் போல வராது. என்ன தான் பணம் வச்சிருந்து பங்களாக்கள் இருந்தாலும் நான் இன்னும் இந்த வீட்டில தான் வசிக்கிறேன்.

வீட்டுப்பக்கத்தில கொஞ்ச நிலம் வாங்கி அதை வாடகைக்கு விட்டுட்டேன். அதில கொஞ்ச வருமானம் வர ஆரம்பிச்சது. பங்குச் சந்தையில இறங்கினேன். எனக்கு இந்த கைத்தொலைபேசி, மடிக் கணிணி கச்சடாவெல்லாம் வச்சிக்கனும்னு இஷ்டமே இல்லை. (இந்தக் காலத்து பசங்கள நினைத்து சொன்னாரா என்று தெரியவில்லை !)

வேலைக்குப் போய்ட்டு, கார ஓட்டிகிட்டு நேரா வீட்டுக்கு வந்தன்னா, பாப் கார்ன் வச்சிக்கிட்டு தொலைக்காட்சியில மூழ்கிடுவேன்.

எனக்கு இந்த பர்ட்டிகெல்லாம் போய் சோசியலைஸ் பண்றதுல விருப்பம் இல்லை.



இப்படிச் சொல்பவர் திரு. Warren Buffet அவர்கள் [Greatest Stock Market Investor of the Modern World].


இவரைப் பற்றிய பிரமிப்புகள்:

  • முதல் பங்கு வாங்கிய வயது பதினொன்று. பின்னாளில் அதுவே தாமதம் என்று நினைத்தாராம்.

  • பதின்மூன்று வயதில் வருமான வரி கட்டியது.

  • பதினாலு வயதில் ஒரு சிறு பண்ணையை (செய்தித் தாள் விற்ற காசில்) வாங்கி வாடகைக்கு விட்டது.

  • பதினைந்து வயதில் நண்பர் ஒருவருடன் சேர்ந்து pinball game machine வாங்கி புழக்கத்தில் விட்டு, சில மாதங்களில் மேலும் இரண்டு மெசின்கள் வாங்கியது.

  • பல வருடங்கள், நலிந்த / நலிவுறும் பல நிறுவங்களை வாங்கி வெற்றிகரமாக செயல்படுத்தியது. உதாரணம் Berkshire Hathaway, GEICO.

  • இவரது Berkshire Hathaway நிறுவனத்தின் கீழ் தற்போது 63 நிறுவங்கள் செயல்படுகின்றன.

  • உலகில் இரண்டாவது பணக்காரர் என்ற பெருமை பெற்றது.

  • சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலர்களில் 80% (37 பில்லியன் டாலர்கள்) charity க்கு கொடுப்பதாக அறிவித்தது.

  • இவரது ஆஸ்தான சீடர் திரு. Bill Gates அவர்கள்.

  • இன்னும் பல பிரமிப்புக்கள் ...

  • கடைசியா, இவரது ஆண்டு சம்பளம் 100,000 டாலர்கள் மட்டுமே. இவரை ஒத்த மற்றவர்கள் வாங்கும் சம்பளம் 9 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  • இவரைப் பற்றி மேலும் பிரமிக்க இங்கே க்ளிக்கவும்.


    ------------------------

    அனைவருக்கும் வணக்கம் !

    முதல் முயற்சியா இதப் பண்றேன். இந்த மாதிரி எல்லாரும் பண்றது தான். என்ன, ஒரு சின்ன வித்தியாசம் தலைவர்களின் படங்களை வரைந்து பதியலாம் என்று ஒரு எண்ணம். உங்க கருத்துக்களை வரவேற்கிறேன்.

    சண்முகா.

    Monday, May 21, 2007

    வரப்பு உயர்ந்த வீடு

    காலக்கோட்டை புளியமரம் எறங்கு என்று சவுண்டு விட்ட கண்டக்டர், தொடந்து விசிலடிக்கவும், நாளுக்கு சில முறை சாய்ந்தே வரும், ஒரே அரசுப் பேருந்து தள்ளாடி நின்றது. சிலர் இறங்கவும், பலர் ஏறவும், சிறு புழுதி பரப்பிக் கிளம்பியது. இறங்கியவர்களில் பாலுவும் ஒருவன்.

    விடுமுறை என்றால் அது கண்டிப்பாக நண்பன் பாண்டியின் வயல் கிணற்றில் குளிக்காமல்க் கழிந்ததில்லை. பாண்டியின் வயலைக் கடந்து தான் அப்பேருந்து வந்தது. கேணி நிறம்பி வழிந்ததைக் கண்டு சந்தோசப்பட்டான் பாலு. ஆனால், அரையாண்டு விடுமுறைக்கு வரும்போது கூட அவ்வளவு வித்தியாசம் தெரியவில்லை. இப்போது வயல்வெளிகளைச் சுற்றி ஏதோ பெரிய மாற்றம் இருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை.

    சுற்றிப்பார்த்தால், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறு சிறு குன்றுகள். சின்ன அருவி கூட உண்டு எங்க ஊர்ல. மதுரயச் சுத்தி, திண்டுக்கல்லுக்கு அப்புறம் எங்க ஊர் தான் குளுகுளுனு இருக்கும்னு இந்தப் பக்கத்து ஆளுகளுக்குத் தெரியும் என்ற நினைவுகளுடன் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடக்க ஆரம்பித்தான் பாலு. அக்ரகாரம் தாண்டி, பெருமாள் கோனார் வீடு தாண்டி, காமராஜ் தெருவில் நுழைந்தான். வலப்பக்கம் நாலு வீடு தள்ளியிருந்த அவனது வீட்டின் கதவு, சாத்தியிருந்தாலும் தாழிடாமல் இருந்தது. கதவைத் தள்ளித் திறக்கையில் கேட்ட க்ரீச்சில், உள்ளிருந்து "யாரதுதுதுதுதுது" என்றது அவன் அம்மாவின் குரல்.

    நாந்தாம்மா என்றான்.

    வா ராசா .... பஸ் ஹாரன் சத்தம் கேட்டுச்சு, நீதா-னு நெனச்சேன். எப்படிப்பா இருக்கே, பரீச்சே எப்படி எழுதிருக்கே. வழக்கமான கேள்விகள் தானேயென்று தாயின் பரிவு அவ்வயதில் புரியவில்லை.

    சரிம்மா நாங்கெளம்பறேன்.

    என்னப்பா வந்ததும் வராததுமா வெளிய கெளம்பிட்ட. ஏதாவுது சாப்பிடறிய ?

    ஒன்னும் வேணாம்மா ...

    நீ இன்னிக்கு வர்ரேனு சொன்னேன். லெச்சுமி அத்தே உனக்காக நாட்டுக்கோழி கொழம்பு வச்சி எடுத்தாரேனு சொல்லியிருக்காக. சீக்கிரம் வந்துரு ராசா. கைலி மாற்றி, சரிம்மா என்றான். தந்தையின் மிதிவண்டி பக்காவாக இருந்தது. நன்றாகத் துடைத்து பளபளவென்று வைத்திருந்தார். stand எடுத்து விட்டு, வீட்டினுள்ளிருந்து அப்படியே மிதிவண்டியைத் தூக்கி, வாசல் படிகள் கடந்து, தெருவில் இறக்கிப் பாண்டி வீடு நோக்கி மிதித்தான்.

    வாடா பாலு. எப்படி இருக்கே ? பாத்து எவ்ளோ நாளாச்சு டா என்றான் பாண்டி. கை குலுக்கிக் கொண்டனர் இருவரும். துண்டு, சோப்பு டப்பா எல்லாம் கொண்டாந்திட்டியா மறக்காம ? சத்த இரு, இந்தா வந்திர்ரேன் என்று வீட்டினுள் சென்றான் பாண்டி. பரபரவென்று தன் தந்தையின் சட்டைப் பாக்கெட்டைத் துளாவினான்.

    கூடத்தில் படுத்திருந்த அவனது பாட்டி, என்னடா பாண்டி சத்தம் என்றதும், "இது மட்டும் எப்படித்தான் அது காதுல கேக்குமோ", "அதும் கண்ணும் கரெக்டா தெரியுமோ" என்று முனுமுனுத்தான். ஏ கெழவி பேசாம படு, நான் note-அ தேடிக்கிட்டிருக்கேன் என்றான்.

    அவன் சொன்னது எந்த note-u என்று அவனது பாட்டிக்குத் தெரியாமலில்லை. ஒங்கப்பன் செஞ்சத தானடா நீயும் செய்யறே, போடா போக்கத்தவனே என்று செல்லமாகக் கடிந்து, வழக்கம் போலத் தன் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள்.

    மச்சி எரநூறு தேரியிருக்கு டா. பணம் கிடைத்த சந்தோசத்தில் இருவரும் உற்சாகமானார்கள். எவ்ளோ நாளாச்சிடா மச்சி நாம சந்திச்சு. குமார் வந்திருப்பானா டா என்றான் பாலு.

    அவன் நேத்தே வந்திட்டன். நீ தான் லேட்டு ...

    நீ இன்னிக்கு வர்ர சேதி சொல்லிட்டேன் எல்லாருக்கும். இப்ப வந்திருவாய்ங்க பாரு எல்லோரும்.

    இருவரும் வெளித் தின்னையில் வந்து அமர்ந்து, அனைவரின் வரவுக்கும் காத்திருந்தனர்.

    உச்சி வெயில். படுத்திருந்த பாட்டி, 'யப்பா, முருகா' என்று ஆரம்பித்து அனைத்து சாமிகளையும் ஒருமுறை அழைத்து, தனது மஞ்சளாகிப் போன வெள்ளைப் புடவையை சரிசெய்து கொண்டு எழுந்தாள். பின்கட்டுக் க்தவைத் திறந்து வெளியே வந்தாள். கூசிய இரு கண்களையும் மெல்லக் கசக்கிக் கொண்டு அவள் வருவதைப் பார்த்து, கட்டிக் கிடந்த காங்கேயம் காளைகள் இரண்டும் எழுந்து நின்றன.

    இந்த ஆடு, கோழி எல்லாம் எப்படி அதுங்க இஷ்டத்துக்கு திரியுது. நம்மை மட்டும் ஏன் கட்டிப்போட்றாய்ங்க என்று மாடுகளுக்குத் தோன்றியிருக்குமா ? உழைப்பாளி எங்கே விட்டுட்டுப் போய்ருவியோன்னு மனிதனுக்குப் பயம், என்றும் அதுகளுக்குத் தெரியுமா ?

    காற்று தென்றலாக வருடியது வேப்பமரத்தினடியில். வெயிலின் வெக்கைத் துளியுமில்லை. களனியைக் களைந்து, பருத்திக் கொட்டைப் புண்ணாக்கு ஊரலைத் திறந்து விட்டாள். அவிழ்த்து விட்ட காளைகள் இரண்டும் மூக்குப் பிடிக்கக் குடித்தன.

    பக் பக் என்று சுற்றி சுற்றி வந்த கோழிகளுக்கும் அதன் குஞ்சுகளுக்கும் குருனை அரிசியைத் தூவினாள். அந்த நேரத்திலும் சேவல் ஓட்டின் மேல் நிழலோரமாய் நின்று கொண்டிருந்தது.

    வைக்கபடப்பினருகில் சுருண்டு படுத்திருந்த நாய், காதுகளைக் கூராக்கி, லேசாகக் கண் திறந்து பார்த்து, வாலை அங்கும் இங்கும் ஆட்டிவிட்டு மீண்டும் கண் மூடிக் கொண்டது.

    தூரத்தில் நாலைந்து சைக்கிள் வருவதைப் பார்த்துத் துள்ளி எழுந்தனர் பாண்டியும், பாலுவும். வருவது ரவி, ஆறுமுகம், கணேசன், மாரி, கோடி, மணி என்பது தெளிவாகத் தெரிந்தது. சிறிது நேரத்தில் அனைவரும் பாண்டியின் வீட்டை அடைந்தனர்.

    எல்லாரும் பரீட்சை எப்படிடா எழுதிருக்கீங்க என்று பாண்டி கேட்க, அதற்கு ஆறுமுகம், அது கெடக்கு, வழக்கம் போல பெயில் தான். அத எதுக்கு ஞாபகப்படுத்தறே, அதான் லீவு விட்டாய்ங்கள்ல, "அனுபவிக்கனும், ஆராயக்கூடாது" என்றதும் அனைவரும் சிரித்தனர்.

    சரி சரி நேரமாச்சு கெளம்புங்கடா என்று அவசரப்படுத்திய பாண்டி, இந்தா மாரி ரூவா, நம்ம ராஜா புரோட்டா ஸ்டால்ல போய், சிக்கன் சாப்ஸ், எறா பொரியல், மட்டன் குருமா, அப்புறம் ... புரோட்டா கொஞ்சமா போதும், வாங்கிட்டு நேரா நம்ம வயலுக்கு வந்திடு என்று அவனை அனுப்பினான்.

    பிரபல நண்பர்கள் குழுவின் ஆஸ்த்தான பாடகர் கானா கணேசனின் கணீர் முழக்கத்துடன் கிளம்பினர் அனைவரும். பாட்டு அலுப்புத் தட்டியவுடன், சில மாத காலப் பிரிவில் தங்களுக்கு ஏற்பட்ட அவரவரின் பல கதைகள் பேசி கல கலவென களைப்பு மறந்து பல கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துச் சென்றனர். ரெட்டைப் பாலம் தாண்டி, ரயில்வே கிராஸிங் அப்புறம் வயல் வெளி ஆரம்பம்.

    அதுவரை தெரியவில்லை, பின்பு வழி நெடுக அவ் வித்தியாசத்தை மீண்டும் பாலுவால் உணர முடிந்தது. என்ன ஒரு வெக்கை, போன விடுமுறைக்கு இப்படி இல்லியே என்று எண்ணிக் கொண்டு மற்றவர்களைத் தொடர்ந்தான்.

    சற்று தூரம் சென்றவுடன், கருவேல மர நிழலில் அமர்ந்திருந்தாள் கல்யாணப் பருவத்தைத் தாண்டிய பொன்னழகு. ஆடுகள் அங்கங்கே மேய்ந்து கொண்டிருந்தன. என்ன பொன்னழகு, எப்போ கல்யாணம், புள்ள குட்டி எல்லாம் பாக்கப் போறே என்றான் ஆறுமுகம் விசமத்தனமாய்.

    "மவராசா, நீங்க எப்ப வருவீகனுதேன் காத்திருக்கேன், நீங்க கட்டிகிறது, இந்தச் சிறுக்கி மவள !" என்று பொன்னழகு சொல்லவும், மீண்டும் சிரிப்பொலி சிதறியது. டேய் டைனமோ தலயா, பேசாம வாடா என்று ரவி சத்தம் போடவும், அமைதியானான் ஆறுமுகம்.

    தார் ரோட்டிலிருந்து பிரிந்து தாழ்வாய்க் கீழிறங்கிய வண்டிப் பாதையில், சிறிதும் தயக்கமின்றி சர் சர்ரென்று ஒருவர் பின் ஒருவராய் இறங்கினர். சிறிது தொலைவில் ஒத்தயடிப் பாதையில் பயணித்துப் பாண்டியின் வயலை அடைந்தனர்.

    வயலைச் சுற்றி வெகு தொலைவு வரை நெடுகிலும் அரையடி வெளியில் தெரியும் படி கல் நடப்பட்டிருந்தது. பாலு பாண்டியிடம் கேட்டான், என்ன மாப்ளே போன தடவை இங்க வந்ததுக்கும் இப்போ வர்றதுக்கும் நெறைய மாற்றம் தெரியுது. எவ்ளோ மரங்கள் இருந்திச்சு. கடலை, கரும்பு, நெல்லுனு எதாவுது இருக்குமே டா. பொட்டல் காடா கெடக்கு இப்ப எல்லாம் என்றான்.

    விசயம் தெரியாதா உனக்கு ?! நம்ம வயலையும், செல்லத் தொர சித்தப்பு வயலையும் தவிர்த்து எல்லாம் வெல போய்ருச்சு என்றான்.

    எதுக்கு ? புரியும் படி வெளக்கமா சொல்லுடா மாம்ஸ் என்றான் பாலு ஆச்சரியத்துடன்.

    கொஞ்ச நாள் முன்னாடி மதுரயில இருந்து ஒரு சேட்டு நம்ம நாட்டாம வீட்டுக்கு வந்தாரு. ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தாங்க. கடைசில தான் தெரிஞ்சது அவரு நம்ம வயக்காட்ட வாங்க தான் வந்திருக்காருனு. நம்மாளுக முக்காவாசி பேருகிட்ட பேசி, ஐநூறு ஏக்கர வளைச்சி வாங்கிட்டாரு.

    மதுர என்ன மதுர, நம்ம ஊர் பங்களூரூ மாதிரி ஆகிடும் பாருங்க என்றான் சாப்பாட்டுப் பொட்டலங்களுடன் வந்த மாரி. சென்னை கூட சென்றறியாத மாரி பங்களூரைச் சொன்னவுடன் அனைவருக்கும் ஆச்சரியம். ஆச்சரியப்படாதீங்கண்ணே, சென்னை வெய்யிலு கொளுத்தும்னும், பங்களூரில் வெய்யில் இருந்தாலும் கொஞ்சம் குளுகுளுனு இருக்கும்னும் கேள்விப்பட்டிருக்கேன். எல்லாம் போனாத் தான் தெரியுமா ? இந்தா இப்ப பாலண்ணே வந்திருக்காரு, திருச்சியப் பத்தி தெரிஞ்சிக்க வேண்டியதுதேன் என்றான்.

    வயல வித்துட்டுப் பொழப்புக்கு என்ன செய்யப் போறாங்க எல்லாரும் என்றான் பாலு. அவங்களே அதப்பத்திக் கவலப்படல. உனக்கேன்டா கஷ்டம் என்றான் பாண்டி. எல்லாம் டபுல் மடங்கு வெல செய்யும் மாயம். கேட்டா "வெளச்சலே இல்ல, என்ன தம்பி பண்றதுனு" சொல்றாரு சாமிக்கண்ணு அண்ணே.

    போன வருசம் கூட ஒரு செய்தி படிச்சேன், மதுரையில Tidel Park ஒன்னு வர்றதா ! அதுக்கும் நம்ம ஆளுக வயக்காட்ட வித்ததுக்கும் தொடர்பிருக்குமோ என்றான் பாலு.

    கரெக்டா புடிச்சடா பாலு. நீ லா படிக்கப் போகலாம்டா என்றான் குமார். இந்த எடத்த வாங்கின சேட்டு, இங்க தர வாரியா வீடுகள கட்டப் போராறாம். பங்களா போன்ற தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், அதற்கு ஏற்ற வசதிகள் கொண்ட மற்ற கட்டிடங்கள் எல்லாம் கட்டி ஒரு சொகுசுபுரியா ஆகப்போகுது நம்ம ஊரு, மாரி சொன்னதப் போல என்றான் குமார்.

    இங்க வீடு கட்டினா வாங்குறதுக்கு யாரு இருக்கா என்றான் பாலு.

    என்னண்ணே இப்படிக் கேட்டுட்டிங்க. இங்க தெக்கால இருந்து ஒரு ரோடு போடப் போறாய்ங்களாம். அந்த ரோடு போட்டுட்டா நம்ம ஊருல இருந்து மதுரைக்கு பத்து நிமிஷம்தேன். ஏதோ ஒரு பார்க் சொன்னிகளே, அதுக்கு இந்தியா முழுக்க இருந்து ஆளுக வருவாகளாம்ல வேலைக்கு. அவுகள கணக்குப் பண்ணித்தேன் இந்த சேட்டு எல்லாம் செட்டப்பா பண்றாரு. இப்பல்லாம் வாடகைக்கு இருக்கத விட சொந்தமா வாங்குறதுதேன் அவுகளுக்கு சவுகரியமாம்ல என்றான் மாரி.

    நாமெல்லாம் பள்ளிக்கூடம் முடிச்சி B.A., M.A.,னு படிக்கப்போவோம். அவுகள்லாம் computer படிச்சவகளாம். மாசத்துக்கே லச்சக்கணக்குல சம்பளமாம்ல என்று வியந்தான் ரவி. ஆனா ஒன்னுடா, நம்ம ஆறுமுகம் இப்படியே பெயிலாயிகிட்டே இருந்தான்னா, மாடு மேய்க்க ஒரு வயல் கூட அவனுக்கு இருக்காது பாத்துக்குங்க என்று ரவி சொல்லவும், எட்டுத் திக்கும் விட்டுத் தெரித்து வானை முட்டியது சிரிப்பலை.

    நாமும் இவர்களுடன் சேர்ந்து சிரிக்கலாமா ?! இல்லை சிந்திப்போமா ?!

    Friday, May 18, 2007

    படம் பாரு கடி கேளு - 6


    சே! கப் ஐஸ் குடுய்யான்னா குச்சி ஐஸை குடுத்து ஏமாத்திட்டான். அடுத்த தடவை கோன் ஐஸையே அபேஸ் பண்ணிடணும்.

    படம் பாரு கடி கேளு - 5


    ஸ்டாம்பு எல்லாம் அப்புறம் ஒட்டிக்கலாம். மட மடன்னு கதவை மூடுங்கையா. அமெரிக்கா போகணும்.






    படம் பாரு கடி கேளு - 4


    நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அது ஸ்பீட் லிமிட் இல்லை. நமக்கு முன்னாலே 50 காரும் 40 பஸ்ஸும் எப்போதும் இருக்கும்னு சொல்றாங்க

    படம் பாரு கடி கேளு - 3


    ஆமாம் அவரு தான் - அந்த நீல கலர் பாண்டு தான் வாயை திறந்துகிட்டு தூங்கறாரு.

    Evergreen S.P.B - இளைய நிலா பொழிகிறதே

    இந்த இனிய மாலைப் பொழுதில் உங்களுக்கு ஒரு இனிய கானம்.

    எவ்வளவு ஆண்டுகள், எவ்வளவு திரைப்படங்கள், எவ்வளவு பாடல்கள், எவ்வளவு இசை அமைப்பாளர்கள், எவ்வளவு பாடகர்கள். இன்றும் இப்பாடல் நமக்கு இனிக்கிறதென்றால், thats is S.P.B and Raja. என்ன ஒரு finish !!!

    Please click the below link to enjoy the video. கடைசியில், கண்டிப்பா நீங்களும் S.P.B. கூட சேர்ந்து ஆடுவிங்க.

    href="http://www.youtube.com/watch?v=W8l_ezoU8Lc&mode=related&search=

    என்றும் அன்புடன்
    சதங்கா

    Thursday, May 17, 2007

    வீணையடி நீ எனக்கு....

    ரிச்மண்ட் தமிழ் சங்கம் அண்மையில் தமிழ்ப் புத்தாண்டை இசைவிழாவாகக் கொண்டாடியது. நிறைய சிறுவர், சிறுமியர் தமிழில் இனிய பாடல்கள் பாடினர். பாரதியின் ஒரு பாடல் இதோ:


    இன்னும் இரண்டு மாதிரிகள் இந்த சுட்டியில் காணலாம்.

    இந்த நிகழ்ச்சிகள் அனைவற்றையும் நீங்கள் கண்டு களிக்கலாம் DVD வடிவில். விவரங்கள் மின்னஞ்சல் மூலம் விரைவில் தெரிவிக்கிறோம்.