Saturday, May 05, 2007

மாறினால் மறக்க முடியுமா ?

"சைலூ, இன்னிக்கு சாயந்திரம் சீக்கிரம் கெளம்பிடு. ஞாபகம் இருக்குல்ல ?" என்று கேட்ட வண்ணம் சாதத்தைக் குழைத்துப் பாலையும், தயிரையும் ஊற்றிக் கிளறினாள் சொர்ணா.

"எப்படி மறக்க முடியும்" ... சரிக்கா, என்றாள் சைலஜா.

சாதத்தை இரு டப்பாக்களிலும், உருளை வருவலை மற்றிரு டப்பாக்களிலும் அடைத்தாள் சொர்ணா.

கைப்பைகளில் மதிய உணவைத் தினித்துக் கொண்டு மாடிப் படியிறங்கினர் இருவரும்.

இவர்கள் அறை தள்ளி இடப்புறம் வினோதினி, வலப்புறம் எதிர் அறையில் ராஜி. அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அதுவரை அமைதியாய் இருந்த அந்த இருண்ட படிக்கட்டு டக், டக், டக் என்று ஜட்கா வண்டிப் பாதையானது. மெல்லப் போங்கடீ என்று சன்னமாய்க் கத்தினாள் சொர்ணா.

இந்த ஓட்டப் படிக்கட்டு என்னமோ நம்ம ஹைஹீல்ஸ்ல தான் ஒடையற மாதிரி திட்டும் அந்த 'பிங்க் பேந்த்தர்'. வார்டனின் அறை தாண்டும் போது சற்றே எட்டிப் பார்த்துச் சொன்னாள் ராஜி. சூப்பர் பேருக்கா. பாரு தூங்கும் போது கூட ரோஸ் பவுடர் அடிச்சிருக்கறத.

ஒரே ஹாஸ்டலில் தங்கியிருந்தும், ஹே, இந்த பொட்டு எங்கே வாங்கினே ? இந்த துப்பட்டா சூப்பரா இருக்கே ? அவ நெயில் பாலிஸ் பாருங்கடீ, கலர் different-ஆ இருக்கே ? என்று நித்தம் எழும் பல்லாயிரம் கேள்விகளையும் கேட்டுக் கொண்டே ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தனர் அனைவரும். சைலு, சிரிப்பை வெளியிலும், இருக்கத்தை உள்ளிலும் தாங்கி அவர்களைத் தொடர்ந்தாள்.

காரை ஸ்டார்ட் செய்தாள் ராஜி. சைலு, நீ நேத்து முன்னாடி ஒக்காந்தே, இன்னிக்கு அது முடியாது. மரியாதயா பின்னாடி வா என்று கடிந்தாள் வினோதினி.

பாவம் விடுடி. அவ ஒக்காந்திட்டுப் போறா. சின்னக் கொழந்த மாதிரி அடிச்சிக்கறீங்களே என்று அங்களாய்த்தாள் சொர்ணா. பரவாயில்ல, இந்தா ஒக்காந்துக்கோ என்று சினுங்கலுடன் பின் சீட்டுக்கு வந்துவிட்டாள் சைலு.

பழைய மஹாபலிபுரம் கடற்கரை சாலையில் பயணித்து, பதினைந்து நிமிடத்தில் அலுவலகம் அடைந்தனர். ராஜி, இன்னிக்கு நாங்க சீக்கிரம் கெளம்பிடுவோம். " சாயந்திரம் எங்களுக்கு காத்திருக்காத சரியா" என்ற சொர்ணாவிற்கு தலையசைத்து அவரவர் கட்டிடங்களுக்குச் சென்றனர்.

வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. தலைப்பிலேயே வீண் என்று தெரிந்த மின்னஞ்சல்கள் சிலவற்றை திறக்காமலே அழித்தாள். மணி பதினொன்றாகும் போது, டீ குடிக்கப் போலாம் வரியாடா என்ற ஜெமிமாவுடன் சென்றாள். ஜெமிமா கேட்டாள், ஒரு மாதிரியா இருக்கியே ஏதும் பிரச்சினையா ? உங்க TL பரந்தாமன் கூட லீவுலல இருக்காருனு கேள்விப்பட்டேன் !

அவரு எப்பவுமே பிரச்சினை இல்லடி. மாட்யூல் நேரத்துக்கு முடிச்சி டாகுமெண்ட் அடிச்சிட்டாப் போதும். சூப்பர் type.

எனக்கும் வாச்சிருக்கே ஒரு சிடுமூஞ்சி. பேரப் பாரு "சுந்தர வடிவேல்". பேருக்கும் ஆளுக்கும், ஏரோப்ளேன் வச்சாலும் எட்டாது. ரெண்டு நிமிஷம் எங்கேயும் போய்டக்கூடாது. இப்பக் கூட என்னத் தேடிட்டு இருக்கும். ஜெமிமாவின் ஹிம்ம்ம்ம்மில் அத்தனை அழுத்தம் தெரித்தது.

இருக்கைக்கு வந்து அமர்ந்தாள் சைலு. ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவளை, மேசைத் தொலைபேசி மிதமாய்க் களைத்தது. அழைப்பானில் ராஜியின் பெயர்.

சொல்லுடா ராஜி.

இல்லே ... சொர்ணாக்கா கால் பண்ணிருந்தாங்க. உனக்கும் கொஞ்சம் முன்னால செல்-ல கால் பண்ணாங்களாமே. எங்கேடீ போய்ட்டே ?

செல்லை மேசையிலேயே விட்டுவிட்டு ஜெமிமாவுடன் டீ குடிக்கச் சென்றது அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

அவங்களால இன்னிக்கு சாயந்திரம் வரமுடியாதாம். ஏதோ அவங்க ப்ராஜக்ட்-ல மேஜர் டிபெக்ட்டாம். இப்ப ஆன்-சைட் கூட கான்பரன்ஸ் கால்ல இருக்காங்க. எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியாதாம்.

அக்கா 4 மணிக்கா கெளம்ப்பிடச் சொன்னாங்க. நீ ரெடியானவுடன் சொல்லு. காலையில் பார்க்கிங் பண்ண இடத்துல சந்திப்போம்.

TTK சாலை, பார்க் ஷெரட்டனில் நுழைந்தது, ராஜியின் கார். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி, கப்பூச்சினோ நோக்கிச் சென்றனர். இவர்கள் வருவதைப் பார்த்து, லேசாய்ப் புன்னகை சிந்தி வரவேற்றான் ரமேஷ். இருவரும் மவுனமாய் அமர்ந்தனர். காபி என்றான். இல்லை வேண்டாம் என்றனர்.

ஆறு மணிக்கு உங்களுக்கு மும்பை flightனு சொர்ணாக்கா சொன்னாங்களே என்று கேட்ட சைலு, அதான் ஏற்கனவே எல்லாம் சொல்லிட்டிங்கள்ல, இன்னும் எதுக்கு நேர்ல வரச்சொல்லிப் படுத்தறிங்க. பாவம் அவங்க ரொம்ப நொந்து போய்ருக்காங்க.

டிக்கெட் cancel பண்ணிட்டேன். ஆமா, சொர்ணா வல்ல ? என்ற ரமேஷ், எனக்குத் தெரியும் அவ வர மாட்டானு என்று மெதுவே முனகினான்.

விஷயம் என்னன்னா, என்னைக் கட்டிக்கரதா இருந்த அந்த மும்பைக்கார U.S. பொண்ணு, ஏற்கனவே ரெண்டு, மூனு கல்யாணம் பண்ணி divorce வாங்கினவனு இப்பத்தான் தெரிஞ்சது.

கேவலமா இல்ல, நீ எல்லாம் படிச்சவன் தானே. எல்லாம் easyயா வேணும் உனக்கு. நாலு வருஷம். எப்படிப் பழகினாங்க உன்கூட. கொஞ்சமாவது யோசிச்சியா ? ரெண்டு மாசம் மும்பையில அவ கூடப் பழகிட்டு எப்படித் தான் அக்காவ கழட்டி விட மனசு வந்துச்சோ ?

உன் கோபத்திலயும், சொர்ணாவின் கோபத்திலயும் ஆயிரம் அர்த்தம் இருக்கு. நான் இல்லேன்னு சொல்லல. நான் இப்ப மாறிட்டேன். ஒரு முடிவு செஞ்சிருக்கேன். எங்க வீட்டுல ஏற்கனவே சொர்ணாவுக்கு ஓகே சொன்ன மாதிரி, அவளையே கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன். இத மறக்காம சொர்ணாகிட்ட சொல்லிடுங்க. நான் அவள சீக்கிரம் மீட் பண்ணனும்னு சொல்லுங்க என்று கெஞ்சினான் ரமேஷ்.

நீங்க சொல்லிட்டிங்க. அவ்ள சீக்கிரம் அக்காவல மறக்க முடியுமானு தெரியல. ஆனா ஒன்னு, அவங்க மனசு மாறுகிற நிலையில இல்ல. அதுக்கு இந்த சான்றே போதும் என்று ரமேஷ், சொர்ணாவிற்கு அளித்த அன்பளிப்புக்கள், வாழ்த்து அட்டைகள், .... கடிதங்கள் அனைத்தும் அடங்கிய பையை மேசையில் வைத்துவிட்டு ராஜியும், சைலுவும் அங்கிருந்து கிளம்பினர்.

Thursday, May 03, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 13

பிஷிங்(phishing)

இதற்கு உரிய தமிழ்பெயர் இனிமேல்தான் வரவேண்டும். இது அடையாளத் திருடர்களால் கையாளப் படும் ஒருவகை தந்திரம். நமக்கு ஒரு மின்னஞ்சல் நம் வங்கி கணக்கினை சரிபார்த்துக் கொள்ளச் சொல்லி வரும் . நாம் அதன் மூலம் பயணித்து விபரங்களை அதில் இட்டோமானல் அவ்வளவுதான் நம் விபரங்கள் பிஷர் கையை அடைந்து விடும் .

பெரும்பாலும் இவ்வாறு வரும் மின்னஞ்சல்கள் நம்மைத் தூண்டும் வண்ணமே வரும் . அவ்வாறு வருதலில் உங்களுக்கு உண்மையானது எனத் தோன்றினால் கடிதம், போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக சம்மந்தப் பட்ட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பின் பதில் அனுப்பவும் .

இதுபற்றி மேலும் விபரங்கள் அறிய www.antiphishing.org

பிஷிங் செய்பவர் கையாளும் வழிமுறைகள்:

மின்ஏமாற்றுதல்(spoofing) தான் பிஷர்களின் முக்கிய ஆயுதம்.

மின்னஞ்சல் முகவரி மூலமாக ஏமாற்றுதல் - நமக்கு அனுப்பும் மின்னஞ்சலின் தலைப்பு விபரங்களை (header information)மாற்றி, அது உண்மையான மின்னஞ்சல் என நம்பவைத்து விடுவர் .

சுட்டிகள் மூலமாக எமாற்றுதல் - சுட்டிகள் எப்பொழுதும் பெயர் வேறாகவும் , அந்த இணைப்பு வேறாகவும் இருக்கும். உதாரணம் சுரேஷின் இணையதளம் இதில் சுரேஷின் இணையதளம் நம் கண்ணுக்கு தெரியும். .காம் தெரியாது. சுரேஷ்பாபு.காமை ரமேஷ்பாபு. காம் என மாற்றினாலும் வெளியில் ஒன்றும் தெரியாது. அப்பாவித் தனமாக அதை சொடுக்கி விடுவர் .

இணையதள பெயர் மூலம் ஏமாற்றுதல் - இன்டர் எக்ஸ்புளோரரில் சில குறைகள் உள்ளது. அதை பயன்படுத்தி நாம் ஒரு இணையதளத்தில் இருந்தாலும் வேறொரு தளத்தில் இருப்பதுபோல் காட்ட முடியும். இதை வைத்தும் பிஷர் நம்மை ஏமாற்றி விடுவர். இந்த குறைபாடு நம் கணிணியில் உள்ளதா இல்லையா என நாம் அறிய http://secunia.com/internet_explorer_address_bar_spoofing_test/ . சொடுக்குங்கள் . உங்கள் பிரௌசரின் அட்ரஸ்பார் பொய் முகவரியை காட்டியது என்றால் உங்க பிரௌசரில் இந்தக் குறைபாடு இன்னும் சரி செய்யப் படவில்லை என்று அர்த்தம் . பேஜ் கேனாட்பி டிஸ்பிளேயிட் வந்தால் உங்களது பிரௌசரில் இந்தக் குறைபாடு இல்லை என்று அர்த்தம்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

மே மாத லொள்ளு மொழிகள்

ஆறின கஞ்சி பழங்கஞ்சி
ஏறின கஞ்சி சுண்டக்கஞ்சி

Wednesday, May 02, 2007

அமைதி

கால வீசி நடக்கும் போது
காத்து கூந்தல் கோதும் போது
தென்றல் கொஞ்சம் தீண்டும் போது
வெள்ளி நெலவு காயும் போது
வானில் மீன்கண் சிமிட்டும் போது
வசந்த மரங்கள் அலையும் போது
மனசில் அன்பு மலரும் போது
நேசம் நெஞ்சில் நெறயும் போது
அமைதி வந்து எட்டிப் பாக்கும்
இதயக் கதவத் தட்டிப் பாக்கும்!

--கவிநயா

Tuesday, May 01, 2007

யாரிடம் கற்றோம் ?

ஆடு தழைகளைத் தின்றதாலே
நாம் கீரைகளை உண்கிறோமா ?

புலி மானைத் தின்றதாலே
நாம் ஆட்டை உண்கிறோமா ?

எல்லைச்சண்டை அவை போட்டதாலே
நாம் சண்டை இடுகிறோமா ?

கூட்டமாய் அவை திரிந்ததாலே
நாம் நட்பாய் இருக்கிறோமா ?

மீனைக் கண்டு படகையும்
மானைக் கண்டு ஊர்தியும்
பறவையைக் கண்டு விமானமும்
பல்செயலும் படைப்பும் அவைபோலே !

இயற்கையாய்ப் பலவற்றில் மிருகமே
நமது முன்னோராய் இருந்திருக்க

சத்தமிடும் பேசா மிருகத்திடம்
கற்றிருக்க நமக்கு வாய்ப்பில்லை

மார்தட்டிச் சிரிக்கும் குரங்கிடமும்
நம்மூத்தோர் கற்றுக் கொண்டதில்லை

எவரிடம் எப்படிக் கற்றுக்கொண்டோம்
பேச்செனும் மாயக் கலைதனை ?

பின்பு வந்தது குகைச்சித்திரம்
அதன்பின்னே வந்தது எழுத்துருவம்
மனதில் எழுகிற திவ்வெண்ணம்
விடை காணத்துடிக்குது எனதுள்ளம் !

Monday, April 30, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 12

அடையாளத் திருட்டு:

நமது வங்கி கணக்கின் பெயர், மற்றும் பாஸ்வேர்டுகளை திருடி அதன்மூலமாக நம் வங்கிகணக்கிலிருந்து பணத்தைத் திருடுதல்.

இன்னும் சிலர் ஒருவருடைய அடையாளங்களைத் தெரிந்துக் கொண்டு வங்கிக் கடன் அட்டைக்கு முயல்வர் . சில காலம் நல்ல முறையாக பரிவர்த்தனைகள் செய்து கடன் எல்லையை அதிகரித்து காலம் ஒத்துழைக்கையில் பெரும் தொகையை கணக்கில் ஏற்றி விட்டு காணாமல் போய்விடுவர் .

இந்தியாவில் இவை அதிகம் பிரபலம் இல்லை. ஏனென்றால் நாம் கணிணி மூலமாக பணப் பரிவர்த்தனைகள் அதிகம் செய்வதில்லை.

பாதுகாப்பு வழிமுறைகள்:(வெளிநாடுகளில் உள்ளவரையும் கணக்கில் எடுக்கப்பட்டது.)


நமது ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் விபரம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் சோசியல் செக்யூரிட்டி எண்(இருப்பின்) பாதுகாப்பாக வைக்கவும். இவற்றில் சிலவற்றைக் கொண்டு நம்மைப் போல் இன்னொருவர் கணக்கு துவங்க இயலும் .

இவற்றினை உரிய நபர்களிடம் மட்டும் தேவைப்படும் பொழுதுக் காட்டவும் .

இந்த விபரங்கள் அடங்கிய மின்னஞ்சல் மற்றும் பைல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை அழிக்கும் பொழுது இலவச ஸ்ரெட்டர் புரோகிராம் ஏதேனும் கொண்டு அழிக்கவும் .

கூடுமானவரை ஒன்று அல்லது இரண்டு கடன் அட்டைகளை வைத்திருத்தல் நலம் . அப்பொழுதுதான் அவ்வப் பொழுது அவற்றினைச் சரிபார்க்க இயலும்.

மின்னஞ்சல் மூலமாக கடன் அட்டை விபரங்களை யாருக்கும் தெரிவிக்காதீர்கள் .

இது பற்றி மேலும் விபரங்களுக்கு. http://www.idtheftcenter.org

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Friday, April 27, 2007

தமிழ் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு இசைவிழா!

ரிச்மண்ட் தமிழ் சங்கம் இந்த தமிழ் புத்தாண்டை ஒரு இசைவிழாவாக கொண்டாடுகிறது. சிறுவர், சிறுமியர் தீந்தமிழில் பாரதியார் பாடல்களையும் மற்ற சில பாடல்களையும் பாடவிருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மூத்தோர்களின் திரையிசையும் அரங்கேறவிருக்கிறது.

மற்ற விவரங்கள் இங்கே தமிழில். In English here.

இரண்டு பாடல்கள் சிறிது கேட்க வேண்டுமா? இதோ...





Wednesday, April 25, 2007

திருவாசகம்

"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்". இது நம்மில் பலருக்கும் தெரிந்த வாசகம்.

அதை சிம்பொனி இசையோடு மிக அற்புதமாய் வெளியிட்டார் இளையராஜா என்பதும் எல்லோருக்கும் தெரியும். நான்கு வருட உழைப்பு. 250 இசைக் கலைஞர்களைக் கொண்டு 2 வாரங்களில் முடித்த இசைப் பதிவு.

எல்லோருக்கும் தெரிஞ்சதையே சொல்லிகிட்டிருந்தா எப்படி-னு கேக்கறீங்களா ? சரி விசயத்துக்கு வரேன் ...

சமீபத்தில இசைத் திருவாசகத்தைப் பற்றி பணியிடத்தில், சக அமெரிக்கர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் பேச ஆரம்பிச்சது, அந்த CD-ல English Translation-ம் இருக்கு-னு. அவருக்கு கொஞ்சம் இசை பற்றி தெரியும். Bass-u, Treble-u னு நம்மல ட்ரபிள் பன்ன ஆரம்பிச்சிட்டாரு. நாம தான் ஞானசூனியமாச்சே. இந்தா புடிங்க-னு ராஜாவோட CD-ய கொடுத்து அப்போதைக்குத் தப்பிச்சிக்கிட்டேன்.

அவர் அதை கொஞ்ச நாட்கள் வரை கேக்கவே இல்லை. கேக்கலைனாலும் பரவாயில்லை, CD-ய திருப்பிக் கொடுங்க-னு சொல்ற நெலைமை. திடீர்னு ஒரு நாள் headphone மாட்டி கேக்க ஆரம்பிச்சார். சற்று நேரத்தில், நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை என்றார். அவருக்கு எங்கே தெரியும் நம்ம ராஜாவைப் பத்தி. அத பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு அமெரிக்கர், எங்கே உங்க headphone கொடுங்க-னு வாங்கிக் கேக்க ஆரம்பிச்சார்.

கொஞ்ச நேரத்தில, கண்மூடி, விரல் சொடுக்கி, தோள்களை அசைத்து ... நாம சொல்றோமே 'மெய்மறந்து', அந்த நிலைக்கு ரெண்டே நொடியில போய்ட்டாரு.

அவர் கேட்கின்ற முதல் இந்திய இசை என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லத் தேவையில்லை தமிழும் தெரியாது.

"Awesome, நான் இத இன்னிக்கு வீட்டுக்கு எடுத்திட்டு போறேன். நாளைக்குத் திருப்பித் தர்ரேனே" என்றார் கெஞ்சலாக.

"ஏன்னா என் கணவர் ஒரு பள்ளியில் இசை ஆசிரியர். கண்டிப்பா இந்த இசை அவருக்கு புடிக்கும் அதான்" என்றார். சரி என்றேன்.

மறுநாள் வழக்கம் போல வேலைக்கு வந்த போது, CD எனது தட்டச்சுப் பலகையின் அருகில் இருந்தது. என்னைக் கண்டவுடன் அருகில் வந்தார் அந்த அம்மையார். "நான் சொன்ன மாதிரியே என் கணவர் மிகவும் ரசிச்சார். சில கேள்விகள் கேக்கலாமா" என்றார்.

மீண்டும், இசை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றேன் அப்பாவியாக. இல்லை பொதுவான கேள்விகள் தான் என்று ஆரம்பித்தார்.

"பல நாடுகளின் ஏராளமான இசைகளை என் கணவர் கேட்டிருக்கார். முக்கியமானவற்றை சேகரித்தும் வைக்கிறார். அப்படி ஐநூறுக்கும் மேல் CD-க்கள் சேகரித்திருக்கிறார். இந்த மாதிரி ஒரு இசையை இது வரை அவர் கேட்டதேயில்லை. அவரு கேட்ட கேள்விகளைத் தான் நான் உங்கிட்ட கேக்கறேன்" என்றார். அவரின் கேள்விகள் "இந்த CDயின் composer யாரு, notes-லாம் எழுதினது யாரு, notes கெடைக்குமா ?". இசை பற்றி கேக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இசை பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார்.

இளையராஜாவைப் பற்றி ஒரு intro கொடுத்தும், அவர் அசந்து போன அழகைச் சொல்ல வார்த்தையில்லை. இதைத் தவிர "no kidding, he was a street musician ?!!!!"

என்ன தான் பல முறை (மெய்மறந்து) கேட்டிருந்தாலும் இவரு சொன்னதுக்கப்புறம், 'பொல்லா வினையேன் நின் பெருஞ்சீர்' என்ற இரண்டாவது track-ல, மடை திறந்த வெள்ளமென கசியற வயலின்களோட இசை, அப்பப்பா ... தேகமெல்லாம் அப்படி ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது உண்மை.

கேட்டுக் கொண்டிருக்கும் போதே மற்றொருவர் வந்து, "if you don't mind, I borrow the CD" என்று, சுழன்று கொண்டிருந்த CD-யை எடுத்துச் சென்றுவிட்டார்.

ராஜா சார் நீங்க அமெரிக்காவுலயும் திருவாசகம் CD வெளியிடறதா ரொம்ப நாள் முன்னாடி செய்தி படிச்சேன். அப்படிப் பன்னலையா ?

என்னோட CD சுத்திக்கிட்டே இருக்கு. எப்போ என் கைக்கு வருமோ ? இக்கட்டுரையின் முதல் வாக்கியத்தை இங்கே நினைத்தால் பயமாக இருக்கிறது. அதுவும் இசை கலந்த திருவாசகம்.

-----

பிழை இருப்பின் வழக்கம் போலத் தெரியப்படுத்தவும். உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டம் இடுங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா.

Tuesday, April 24, 2007

அன்பு

வறண்ட நிலத்தின் மேல்
வான் பொழியும் பூச்சொரியல்
கனத்த மனதிற்கு
மருந்திடும் மென் மயிலிறகு
துன்பத்தின் சாயலையும்
துரத்தி விடும் தேவதை
இன்பத்தை வரவழைத்து
இதம் தரும் இன்னிசை
சுட்டெரிக்கும் வெயிலினிலே
சுகந் தரும் ஆலமரம்
அலைக்கழியும் மனதிற்கு
அமைதி தரும் நந்தவனம்

அன்பு –
அது ஒரு அதிசயம்
அன்பு ஒரு அக்ஷய பாத்திரம்
எடுக்க எடுக்க நிறையும்
கொடுக்கக் கொடுக்கப் பெருகும்!

--கவிநயா

Sunday, April 22, 2007

பனி

வாராயோ என்றிருந்து வந்துவிட்டாய் நாள்கடந்து
பாராயோ என்னும்படி பாந்தமுடன் -- சீராக
இரவிலே புல்தரைப் போர்வையா யெங்கும்
பரவி விழுந்தாய் பனி

வெண் தொப்பி வாகனங்கள் விரையும்
வெண் தண்டவாளத் தார்ச்சாலை -- கண்படும்
வெண் பஞ்சுப் புல்தரை உச்சிமர
வெண் கிளைகளாய்ப் பனி

துள்ளி யோடுஞ் சிறார் கைநிறைய
அள்ளி யெடுத் தெறிய -- முள்ளைத்
தள்ளி விரையும் மாந்தர்மேல் விழும்
புள்ளி புள்ளியாய்ப் பனி

குஷியாகக் குழந்தைகளும் களமிறங்கிக் கவனமாய்
வீசியடித்த வெண் குவியல் -- பேசியே
பூசிமுடித்த பனிமனிதன் சூரியன் வரவாலே
கசிந்தோடிக் கரைந்த பனி

மீண்டும் எப்போது வருவாயோ சற்று
நீண்ட நாட்கள் உறைவாயோ -- என்றேங்கியே
உன்வரவு காணக் கண்விழித்துக் காத்திருப்பது
சின்னஞ் சிறாரின் பணி

-----

வெண்பா எழுதும் ஆசை என்னையும் தொற்றிக்கொண்டது, அதன் விளைவாய் எழுதியது, சற்று காலதாமதாய் வெளியிடுகிறேன். நிறையோ, குறையோ உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா