Friday, August 19, 2011

தடியால் அடித்துப் பழுக்க வைக்க முயற்சிக்கும் அண்ணன் ஹசாரே

தடியால் அடித்துப் பழுக்க வைக்க முயற்சிக்கும் அண்ணன் ஹசாரே

இந்திய அரசியலை கிட்டத் தட்ட இந்திராவின் மறைவிற்குப் பின்னர் இருந்து பின் தொடர்ந்து வரும் நான் இந்த வருடத்திற்கு முன்பு இந்த அன்னா ஹசாரே என்ற மனிதரைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லை. அதனால் யாரய்யா இந்த மனுஷர் என்று ஒரு வியப்பு. நம்முடைய அறிவின்மையா என்ற தவிப்பு.

விக்கிபீடியா உதவியோடு சில தகவல்களைப் படித்தேன். இவைதான் இவரது சரித்திரத்தின் சுருக்கம்
  • வயது 74
  • படிப்பு 7 - ஆம் வகுப்பு
  • உத்தியோகம் - 15 வருட ராணுவ சேவை - 38 வயது வரை
  • திருமணம் - இல்லை
  • முந்திய சாதனைகள்
    • ரலேகன் சித்தி என்ற இவரது வறண்ட கிராமத்தை ஒரு சொர்க்க பூமியாக மாற்றியது
      • நிலத்தடி நீர் சேமிப்பு
      • பால் உற்பத்தி
      • மதுவிற்கு எதிரான போராட்டம்
      • தானிய வங்கி
      • கல்யாணங்களை ஒன்று கூடி நடத்தி செலவு குறைத்தல்
      • கிராம சபா
    • ஊழல் ஒழிப்பு
      • 1991 - BVJA அமைப்பு மூலம் போராட்டம்
      • 1997 - மின் கைத்தறி ஊழலுக்கு எதிரே மகாராஷ்ட்ராவில் போராட்டம்
      • 2003 - காங்கிரஸ் மந்திரிகளுக்கு எதிராக உண்ணா விரதப் போராட்டம்.
2003 -க்குப் பின் ஊழல் எதிர்ப்பில் இவர் எதுவும் செய்ததாக ஒன்றும் தகவல்கள் இல்லை. "Rip van winkle " போல திடீரென்று எழுந்து கொண்டு 2011 -ல் இந்தியாவின் தலையாயப்(??) பிரச்சினையான ஊழலை ஒழித்தே தீர்வதென்று இவர் சபதம் எடுத்துக் கொண்டு அரசாங்கத்திற்குப் பெரும் தலைவலியாக மாறி இருக்கிறார்.

இந்தியாவில் ஊழலின் அளவு காலத்திற்கு ஏற்றவாறு கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த காலத்தில் 176000 கோடிகள் அடிக்க வாய்ப்பு இல்லை, இருந்திருந்தால் அப்போதும் அடித்திருப்பார்கள்.

லோக்பால் - இது இந்தியாவின் அத்தனைப் பிரச்சினைகளையும் தீர்த்து விடுமா? ஹர்ஷத் மேத்தா பங்கு சந்தை ஊழல், ராஜீவ் காந்தியின் போபோர்ஸ் ஊழல் அப்போதெல்லாம் இவர் எங்கிருந்தார்?

ஏன்? போன மாதம் 1500 கோடி ஊழல் செய்து கையும் களவுமாகப் பிடி பட்ட போதும் ராஜினாமா செய்ய மறுத்த பிஜேபி முதல்வர் எத்தியூரப்பவைக் கைது செய்யவோ டிஸ்மிஸ் செய்யவோ இவர் போராட்டம் நடத்தவில்லையே? மகராஷ்டிரா மட்டும்தான் இவரது குறிக்கோளா?

இந்தியாவை எதிர் நோக்கி இருக்கும் அண்டை நாட்டுப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் மத்தியில் மீடியா உதவியோடு இந்திய அரசாங்கத்தின் உறுதியைக் குலைக்க இறங்கி இருக்கும் இவரது நோக்கங்களுக்குத் தெளிவான பின்னணிகள் இல்லை. இந்த ஆட்சி பொய் இன்னொருவர் வந்தாலும் இதே கதிதான்.

தடியால் அடித்துப் பழுக்க வைக்க முடியாது. லோக்பால் அமைத்தால் அந்த குழுவை குட்டிச் சுவராக்கும் வழிகளில் அரசியல்வாதிகள் இறங்குவார்கள். எந்த ஒரு புதிய முயற்சியும் படிப் படியாகவே செயல் படுத்த முடியும். எதை எடுத்தாலும் உண்ணாவிரதம் மூலம் பயமுறுத்தி சாதிக்க நினைக்கும் இந்த முயற்சி வெற்றி பெறப் போவதில்லை.

20 comments:

  1. சத்யா,
    நீங்கள் ஒரு அறிவாளி. யாரையும் குறை சொல்லாதது போல் எழுதி உள்ளீர்கள். ஆனாலும் மறை முகமாக பெரியவரை குறை சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்வது போல் இவருக்கு தேசிய அரசியல் தெரியாது என்று வைத்து கொள்வோம்.
    மகாராஷ்டிராவை கட்டு படுத்த மட்டும் லோக்பால் கொண்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாநிலமும் எழுச்சி பெற வேண்டும் என்று அவர் சொல்ல வில்லை. அனைவரும் ஒரு சாமான்யன். சாமானியர் சாதிக்க முடியும் என்று சொல்ல வருகிறார்.
    நாம் எதிர்பார்ப்பது சேஷன், கலாம், ரஜினி, அருண் சோரி, போன்றோர் செய்ய வேண்டும்.
    அவர் சொல்வது எல்லாம் லோக்பால் மசோதாவை விவாதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே. ஆனால் அரசாங்கம் முறையாக
    இல்லை என்று சொல்லுகிறது. எத்தனையோ கமிஷன் வைத்து உள்ளார்கள். எதாவது தீர்வு கிடைத்ததா?

    இவர் நாட்டின் பாதுகாப்பு படையில் இருந்தவர் என்பதே போதுமானது.

    தானாக கனியாததை தடி கொண்டு கனிய வைப்பதில் என்ன தவறு.
    உங்களின் ஆதங்கம் புரிகிறது. எல்லோரும் இதை போல் செய்தால் புரட்சி வந்து விடும் என்று. நல்ல பலன் கிடைத்தால் என்ன தவறு.
    அரசியல் சாசனம் மாற்றப் பட வேண்டும்.

    தமிழ் நாட்டின் முதல்வரும், பொருளாதார மந்திரியும் 10 ஆம் வகுப்பு தான் படித்து உள்ளார்கள். இது வரை 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் எட்டாம் வகுப்பு படித்தவர். அவர்களிடம் நாம் என்ன எதிர் பார்க்க முடியும்.

    ஊழலை ஒழிக்க உங்களின் அணுகு முறை தான் என்ன?

    ஆபத்தில் உதவுபவன் திருடனாக இருந்தால் உதவியை ஏற்றுக் கொள்ளும் நமக்கு, ஏன் இதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது?

    வேதாந்தி

    ReplyDelete
  2. சத்யா,
    சினிமாவிலிருந்து அரசியலா! வாழ்த்துக்கள் மற்றும் வருக வருக என வரவேற்கிறேன்.

    உங்களுடைய அன்னா ஹசாரேவைப் பற்றிய கருத்தில் சில எமக்கும் உடன்பாடு உண்டு, சி ல ஏற்க முடியாமல் இருக்கிறது.

    2003 க்கு பிறகு சமீப காலம் வரை இவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாமல் இப்போது என்ன திடீரென ஊழல் எதிர்ப்பு என்று கேட்பது சரியில்லை. காந்தி தென் அமெரிக்காவில் புகைவண்டியிலிருந்து தள்ளிவிடப்படும் வரை ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டிருந்ததை தீவிரமாக உணராமல் இருந்தவர் அதனால் அதற்கு முன்பு வரை ஆங்கிலேயர்கள் சரியாக இருந்தார்கள் என்று அர்த்தம் இல்லை. அவருக்கு அப்போதுதான் தெரிந்தது அதன் பிறகு அவர்களை எதிர்க்க ஆரம்பித்தார்.

    அன்னா வின் நோக்கம் சில இடங்களில் சரியாக செயல் பட்டிருக்கிறது. பல இடங்களில் சறுக்கியிருக்கிறார். சமீபத்திய இவரது செயல்கள் இதை நன்கு ப்ரதிபலிக்கிறது. இவர் மஹாத்மாவின் மறுபிறவி என்று பலர் சொல்லிச் சொல்லி தானும் அதை நம்ப ஆரம்பித்திருக்கிறார். இவர் இன்னமும் பக்குவமடையாத ஒரு நிலையில்தான் இருக்கிறார். பலமுறை சமய சந்தர்ப்பம் தெரியாமல் பேசிவிட்டு பிறகு அதை உடனே மாற்றிக்கொண்டு தான் தெளிவில்லாமல் இருப்பதை பறைசாற்றுகிறார். இவருக்கு கூடும் கூட்டத்தை பார்த்து இவருக்கே தனது நிலை தெரியாமல் பேச ஆரம்பித்திருக்கிறார். கூடுகிற கூட்டம் ஒரு ஓட்டு கூட போடாது என்பது இவருக்கு புரிய கொஞ்ச நாட்கள் ஆகும்.

    வேதாந்தி: சத்யா எந்த இடத்திலும் அன்னா 7ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார் இதனால் இவர் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது என்று சொல்ல வில்லை. அவருடைய பயோடேட்டாவை தரும்போது அவரது படிப்பைப் பற்றி எழுதியிருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். சேஷன் அருண் ஷோரி (சோரி இல்லை) சொல்லி யார் கேட்டார்கள் என்று திடீரென்று அவர்களை இழுத்திருக்கிறீர்கள். கலாம் சொன்னது எல்லோரும் கனவு காணுங்கள் இந்தியா 2020 ல் வல்லரசாகிவிடும் என்றார், ரைமிங்காக இருக்கிறது என்று சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன். ரஜனி சொல்லி அவரது ரசிகர்களே கேட்காமல் 2006ல் அவர் எதிர்த்த பாமாக அமோகமாக 10 தொகுதியிலும் வெற்றி பெற்றது மறந்து விட்டதா?

    எனது பின்னூட்டம் ஒரு பதிவு அளவுக்குப் போவதால் கூடிய விரைவில் இதைப் பற்றி ஒரு பதிவிடுகிறேன்.

    பித்தன்.

    ReplyDelete
  3. @வேதாந்தி: பதிலுக்கு நன்றி. சேஷன் தேர்தல் கமிஷனின் சக்தியை வெளிப்படுத்திய போது அவரது அதிகாரத்தைப் பிரயோகப் படுத்தினார், அதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு தண்ணீர் காட்டியது மட்டும் அல்லாது அவரது எண்ணங்களை செயல்படுத்திக் காட்டினார். அதன் மூலம் தேர்தல் கமிஷன் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக மாறியது. அன்னா ஹசாரே ஒரு கிராமத்தை முன்னேற்றிக் காண்பித்திருக்கிறார். ஊழலுக்கு எதிராக பல சிறிய போராட்டங்களை நடத்தி இருக்கிறார். நாட்டில் மிகப் பெரிய மாற்றம் ஒன்றை உருவாகும் முயற்சி பாராட்டத் தக்கது, அதே சமயத்தில் அதை மிரட்டல் மூலம் சாதிக்க நினைப்பது ஒரு தவறான முன் உதாரணம். இவரது திட்டத்தை ஒத்துக்கொள் , அல்லது ஆட்சியை விட்டு வெளியேறு என்று சவால் விடுகிறார். 100 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசாங்கத்தைப் போகச் சொல்லும் உரிமை இவருக்கு இல்லை. மீடியா, படித்த மேதாவிகள், வெளி நாட்டுப் பத்திரிகைகளின் நாட்டம் இவற்றின் மூலம் கிடைத்த வரலாறு காணாத வரவேற்பு மற்றும் புகழின் போதையில் இந்த நாட்டின் ஸ்திரத் தன்மையைச் சீர் குலைக்கும் ஆபத்தான ஒரு காரியத்தில் இறங்கி இருக்கிறார். இதன் மூலம் ஆட்சி கவிழ்ந்தால், மற்றொரு அரசாங்கம் வந்து இதை நிறைவேற்றப் போகிறதா? அப்படி இருக்கும்போது இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதில் என்ன பிரயோஜனம்? நான் சிகப்பு மனிதன் படத்தில் (ஒரிஜினல் death wish movie) ரஜினி காந்த் இரவு நேரம் வெளியில் சென்று கொள்ளைக்காரர்களை வேட்டை ஆடுவது போன்ற காட்சிகள் திரைப்படத்திற்கு மாத்திரமே சரி வரும், நடை முறைக்கு ஒவ்வாது. சமாதானமான முறையில் படிப் படியாக செயல் படுத்த முயல்வதே சரியான அணுகுமுறை. இன்னும் தொடங்கவே இல்லை, அதற்குள் உச்சத்தில் நின்று கொண்டு இவர் நினைத்ததை சாதிக்க நினைப்பது முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய ஒரு விஷயம். அரசியல் சாசனத்தில் மாற்றம் உண்டு பண்ண வேண்டும் என்றால், இவர் அரசியலில் இறங்கி வெற்றி பெற்றாலே முடியும், சும்மா மக்களைத் தூண்டி விட்டு அதில் குளிர் காய நினைத்தால், அது நீண்ட நாள் நிலைக்காது. ஊழலை ஒழிக்க வேண்டிய முயற்சிகள் வேண்டும், ஆனால் அந்த முயற்சிகள் நம் நாட்டின் அமைதிக்கும், பொருளாதாரத்திற்கும் ஊறு விளைவிக்கும் என்ற சூழ்நிலை வந்தால், அதற்க்கு ஊழலே பரவாயில்லை. இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் NRI மக்களை முதலில் கஸ்டம்ஸ்-இல் இந்தியா போகும்போதோ அல்லது அமெரிக்கா வரும்போதோ தங்களின் உடமைகளைப் பொய் சொல்லாமல் declare செய்யச் சொல்லுங்கள், பின்பு நாம் ஊழலைப் பற்றிப் பேசலாம்.

    ReplyDelete
  4. @நாகு: கண் முன்னால் நடக்கும் ஊழலை உதாரணமாக எடுத்துக் கொண்டு அதன் மூலம் ஒரு தீர்வு கண்டு பிடிப்பது ஒரு சரியான முன் உதாரணமாக அமையும். 2G ஊழலையோ அல்லது நிலக்கரிச் சுரங்க ஊழலையோ காட்டி லோக்பால் இதை எப்படித் தடுத்திருக்கும், எப்படி தண்டித்திருக்கும் என்று காட்டி இருந்தால் அதன் மதிப்பே வேறு. கூரையில் ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போக நினைத்த கதை. ஒரு PhD தியரி இங்கு கறிக்கு உதவாது. இவரது முயற்சிக்கு அரசாங்கம் பணிந்தால் நாளை பல பேர்வழிகள் சமூகக் காவலர்கள் பெயரில் இது போல போராட்டங்களை ஆரம்பித்து அரசாங்கத்திற்குப் பெரும் தலைவலியை உருவாக்குவார்கள். அதைத் தூண்டி விட்டு எதிர்க் கட்சிகளும். மீடியாவும் குளிர் காய்வார்கள். இவரது மிரட்டல்கள் தவறான முன்னுதாரணம், தற்காலிக வெற்றியைக் கொடுத்தாலும், பேராபத்தில் முடியும்.

    ReplyDelete
  5. @பித்தன்: ஆதரவுக்கு நன்றி, இவரது திடீர் ஞானோதயம் ஒரு சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது, நியாயமாகக் கூட இருக்கலாம், ஆனால் தவறான அணுகுமுறை சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அதைப் பற்றிக் கேட்டால், பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போங்கள் என்று ஆத்திரப்படுகிறார். வேகம் அளவுக்கு விவேகம் இல்லை.

    ReplyDelete
  6. சத்யா - ஹசாரேவின் போக்கு சந்தேகமூட்டுகிறதுதான். ஒரு அரசாங்கத்தை மிரட்டும்விதம் சரியில்லைதான்.

    லோக்பாலில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. நடைமுறையில் சாதிக்க முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி என்பதும் புரிகிறது.

    லோக்பால் ஊழலைத் தடுக்காது. நடந்த ஊழலை விசாரித்து தண்டிப்பதுதான் லோக்பாலின் பணி எனக்குப் புரிந்த வரை. லோக்பாலின் அதிகாரிகள் ஊழல் செய்பவர்களை மிரட்டி பணம்வாங்கும் ஆபத்தும் இருக்கிறது. திருடனிடம் திருடும் ஆபத்து :-)

    உண்ணாவிரதம் செய்து மிரட்டும் வேலை நம் நாட்டுக்கு புதிதில்லை. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் கொன்று குவித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கிழவர் எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து உண்ணாவிரதம் செய்து மிரட்டி கொலைக்கோரத்தை நிறுத்தியிருக்கிறார். சூரியனே மறையாத ஆங்கில சாம்ராஜ்யத்தை உண்ணாவிரதம் மூலம் விரட்டியிருக்கிறார். அந்தக் கிழவர் மாதிரிதான் இந்தக் கிழவர் இல்லை. ஆகவும் முடியாது. இவரை ஆட்டுவிப்பது அமெரிக்காவாக இருக்கட்டும் அல்லது சீனாவாகவோ இருக்கட்டும். நாட்டின் ஸ்திரத்தன்மை ஊழலை விசாரிப்பதால்தான் போகிறதா? 100 கோடி மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசு 2ஜி ஊழல் செய்தால் தட்டிக் கேட்பதுதான் ஜனநாயகம். நாட்டின் ஸ்திரத்தன்மை இவரால் போகவில்லை. 2ஜி, விளையாட்டுப் போட்டி ஊழல் என்று அடுக்கடுக்காகப் போகும் அவலத்தை பார்த்து வெறுத்துப் போன மக்களின் ஆதரவால்தான் ஆடுகிறது நாட்டின் ஸ்திரத் தன்மை என்பது என் எண்ணம். கத்தியின்றி ரத்தமின்றி வரும் யுத்தத்தில் சேர 'சத்தியா'வின் வேதாந்தத்தை நம்பும் அனைவரையும் அழைக்கிறேன். :-)

    கடைசி வரிகளை சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டாம். கொஞ்சம் வார்த்தை ஜால டகில் விட்டேன் அவ்வளவுதான். கிழவர் ஞாபகம் வந்ததும், நாமக்கல்லாரின் புதல்வியை வர்ஜினியாடெக் பக்கம் பார்த்த ஞாபகம் வந்தது. அதுதான் அவர் வரிகளை திருடினேன். :-)

    ReplyDelete
  7. @நாகு: என்னுடைய அபிப்ராயத்தில் நமது இந்திய தேசம் மத்திய அளவில் 176000 கொடிகளும், மாநில அளவில் 1500 கோடி அளவில் ஊழல்களைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்குப் பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறது. மக்களைப் பொறுத்த வரை, இவை செய்தித்தாள் பரபரப்பைத் தவிர வேறொன்றும் அல்ல. அதே நேரத்தில் நமது அடிப்படை வாழ்வில் பிணைந்து கிடக்கிற ஊழல்களை சரி செய்ய ஜன லோக் பால் முயற்சி எடுக்கிறதா என்று தெரியவில்லை. மக்களது அன்றாட வாழ்க்கையில் புகுந்து விளையாடும் கீழ் மட்ட ஊழல்களை ஒழிக்க லோக் பால் எந்த அளவுக்கு முயல்கிறது? நம் நாட்டின் சாபக்கேடே காவல் துறையும், அதிகார வர்க்கமும் தான். இவர்கள் இரண்டு பேரின் துணையில்தான் அரசியல்வாதிகள் துள்ளுகிறார்கள். இந்த இரண்டு துறைகளையும் சுத்தப் படுத்த ஜன லோக் பால் முயல்கிறதா? ஜன லோக் பால் விக்கியில் படித்தேன். இவர்களின் ஆசை (??) பகல் கனவில் கூட நிறைவேறுமா என்பது சந்தேகம். அதே நேரத்தில் அரசாங்க லோக் பால் வெறும் சப்பைக்கட்டு. இந்த கோமாளித்தனத்திற்கும் சப்பைக்கட்டிற்கும் இடையில் ஒரு நடை முறையில் சாத்தியமான வழி இருக்கிறதா?

    ReplyDelete
  8. எனக்குத் தெரிந்தவரை லோக்பால் அனைத்து அரசு ஊழியர்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும். அதில் பிரதமரையும் சேர்க்கவேண்டுமா என்று பெரிய சண்டை. ஆக அமைச்சர்கள் முதல் கொண்டு பஞ்சாயத்து குமாஸ்தா வரை லோக்பால் அதிகாரத்துக்கு கீழே வருவார்கள்.

    லோக்பால் ஊழலை ஒழிக்காது. சட்டம் எப்படி குற்றத்தை ஒழிக்காதோ அதே மாதிரி. ஊழல் செய்தால் தண்டிக்க ஒரு அமைப்பு அவ்வளவே. இப்போதும் லஞ்ச ஒழிப்பு துறை, ஊழலுக்கு எதிராக சட்டங்களும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பலனில்லை. ஏனெனில் அவற்றை நிர்வாகிப்பதும் அதே அதிகாரிகள்தான், அரசாங்கம்தான். லோக்பால் காகிதத்தில் நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் எப்படி நடக்கும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறிதான். ஆனால் அரசின் அதிகாரத்தில் இல்லை என்றாலும் பெருமளவு அரசு கட்டுப்பாட்டில் இருக்கும். அரசு ஐந்தாண்டுகளுக்கொரு முறை மாறும். ஆக அவர்கள் பதவியேற்றியவர்கள் இருப்பார்கள். That will work as check and balance. அமெரிக்க ஜனாதிபதிகள் தங்கள் கொள்கைசார்ந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை நியமிப்பது மாதிரி என வைத்துக் கொள்ளலாம்.

    லோக்பால் வந்தாலும் தமிழகத்தில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் லோக்பாலில் உட்காருவார்கள். அதை தவிர்க்க முடியாது. ஆனால் ஒரு மட்டை இன்னொரு மட்டையை கொஞ்சமாவது கண்டிப்போடு நடத்துமல்லவா?

    நீங்கள் சொல்வது போல் ஹசாரேவின் லோக்பாலுக்கும், அரசின் ஜோக்பாலுக்கும் இடையே ஒரு தங்கபால் தான் கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு எல்லோரும் நாக்கை வழிக்க வேண்டியதுதான். :-)

    ReplyDelete
  9. சேஷன் ஒரு நல்ல உதாரணம். தேர்தலை சீர்திருத்தவே முடியாது என்று உட்கார்ந்திருந்த தேர்தல் கமிஷன் இப்போது எப்படி வேலை செய்கிறது. எல்லா ஊர்களிலும் தேர்தலை சீர்திருத்திய அதே சேஷன் பீஹாரில் மண்ணைக் கவ்வினார். அப்படி ஒரு சில தேர்தல்களில் பணம்,படை விளையாடினாலும், தேர்தல் நடப்பதே இப்போது எவ்வளவு முன்னேறி இருக்கிறது. எங்கள் கையை கட்டிப்போட்டு விட்டார்கள் என்று கலைஞர் புலம்பும்வரை...

    அதேமாதிரி மாற்றம், கொஞ்சமாவது லோக்பால் மூலம் வராதா என்பதே என் கனவு.

    நான் பெங்களூரில் தாசில்தார், கலெக்டர் மாதிரி அதிகாரிகளை தெருவில் கூட்டம் போட்டு மக்கள் கேள்விகள் கேட்டு கிழி கிழி என கிழித்ததை பார்த்திருக்கிறேன். லோக்பால் வந்தால் கேள்வியுடன் தண்டனையும் வரும். கொஞ்சமாவது வரும். ஒரு சில வட்டங்களிலோ, மாவட்டங்களிலாவது அவசியம் வரும்.

    ReplyDelete
  10. இந்தப் பதிவைப் பாருங்க...

    http://savukku.net/home1/1180-2011-08-22-19-20-49.html

    ReplyDelete
  11. ippOdhaiya mirattal maRRum uNNAvirathap pOraattam vandha kaaraNam aimbathu, aRupadhu ANdukaLaaga idhupOnRa sattam koNdu varuvathaagach cholli paavlaa kaatti varum arasukaL maRRum makkaLavaikaLaith thaarkkuchchi kuththi ezhuppi Ottuvathuthaan. ivarin aadharavaaLargaL uththamargaLaa enbathu sariyaana kELvi anRu. podhuvaagavE Or ezhuchchi perumbaanmaiyaridam vandhiruppadhaagaththaan naan uNarkiREn. mahaathmaavum birlaa mudhaliyOridam udhavi peRRaar. idhu oru nalla mudivukku varum enRu naan nambukiREn.

    ReplyDelete
  12. பிரதமரை லோக்பால் வரம்புக்குள் வர சொல்வது எப்படி மிரட்டல் ஆகும்? 2G , கமான் வெல்த், ஆதர்ஷ், அதற்கும் முன்னால் போபோர்ஸ், இன்னும் மறந்து போன எத்தனையோ ஊழல்கள்..... விசாரணை நடந்து முடிவதற்குள் குற்றம் புரிந்தவர், துணை போனவர், வழக்கு தொடுத்தவர் அனைவரும் மர்கயா... போபால் அன்டேர்சன் வழக்கு மறந்து விட்டதா ?
    அரசு துறைகளில் ஒரு வேதனையான நிலை என்றென்றும் மாற்றமுடியாமல் இருக்கிறது... ஊழியரின் மேல் குற்றம் சுமத்துபவர், விசாரணை அதிகாரி, ஊழியரின் பதிலின் மீது நடவடிக்கை எடுப்பவர், மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்குபவர் அனைத்துமே ஒரே ஆள்தான். இந்த நிலை அரசியலில் மட்டுமாவது மாற ஒரு சந்தர்ப்பம்.. வெளிநாடு வாழ் இந்தியர்களே விசயத்தின் வீரியம், தேவை புரியாமல் இடுகையும் பதில் இடுகையும் என்று வார்த்தை ஜாலம் ஆடாதீர்கள்..

    ReplyDelete
  13. veLinaadukaLil vaazhum indhiyaril palar pOraattaththukku aadharavu kodukkiRaargaL. oru silarthaam kuRai kaaNukinRanar. mElum, uLnaattu indhiyar silarum edhirkkiRaargal: arundhathi raai (nERRaiya hindhu idhazh), mainaaritty makkaL - muslim & kristthuvar

    ReplyDelete
  14. ரா. நரசிம்மன் - தமிழ் மாற்று இப்போதைய மிரட்டல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் வந்த காரணம் ஐம்பது , அறுபது ஆண்டுகளாக இதுபோன்ற சட்டம் கொண்டு வருவதாகச் சொல்லி பாவ்லா காட்டி வரும் அரசுகள் மற்றும் மக்களவைகளைத் தார்க்குச்சி குத்தி எழுப்பி ஓட்டுவதுதான். இவரின் ஆதரவாளர்கள் உத்தமர்களா என்பது சரியான கேள்வி அன்று . பொதுவாகவே ஓர் எழுச்சி பெரும்பான்மையரிடம் வந்திருப்பதாகத்தான் நான் உணர்கிறேன் . மகாத்மாவும் பிர்லா முதலியோரிடம் உதவி பெற்றார் . இது ஒரு நல்ல முடிவுக்கு வரும் என்று நான் நம்புகிறேன் .

    ReplyDelete
  15. சத்யா,
    உங்கள் பதிவு இங்கு ஒரு நல்ல விவாதத்தை துவக்கியிருக்கிறது. நான் ஞாயிறன்று நமது கோவிலில் உங்களப் பார் த்து பேசிக் கொண்டிருந்த போது இருந்த கருத்திலிருந்து இப்போ கொஞ்சம் மாறியிருந்தாலும், கூடுமானவரை உங்க கருத்துதான் எனக்கும். பூனைக்கு யார் மணி கட்டறதுன்னு நாம எல்லாரும் சும்மா இருந்தா பூனை நல்லா திருடிண்டுதான் இருக்கும். எலியை அடிச்சு சாப்டுண்டுதான் இருக்கும். அத மாத்தரதுக்கு இவர் வரது நல்லதுன்னுதான் எனக்கும் தோணுது. அதே சமயம், இவர் வெச்சதுதான் சட்டம், இவர் சொன்னதுதான் வேதம்ன்னா, " த்தோடா" ந்னுதான் சொல்லத்தோணுது. இவர காந்தியோட கம்பேர் செய்தா அத விட ஒரு பெரிய ஜோக் கிடையாது. காந்திக்குன்னு சில கொள்கைகள் இருந்தது, இவருக்கு நாளுக்கொரு கொள்கைன்னு இருக்கரப்போ, இவரால இந்த திடீர் ப்ரபலத்ல இருந்து முன்னேறி மக்களை வழி நடத்தர பக்குவம் இருக்கரமாதிரி தெரியலை. அரசாங்கத்தோட பேச்சுவார்த்தைன்னா, ப்ரதமர் சரி, ராகுல் காந்தி என்ன இந்திய அரசாங்கத்தை நடத்தர தலைவரா? இதெல்லாம் விட பெரிய காமெடி, சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பிச்ச 2ம் நாளோ, 3ம் நாளோ சரியா தெரியலை, அவர் கும்பல் நாங்க பேச்சுவார்த்தைக்கு தயார்ன்னு குரல் கொடுக்க ஆரம்பிச்சாச்சு. நான் கோவில்ல உங்க கிட்ட சொன்னா மாதிரி, இவர உண்ணாவிரதம் இருக்க சொல்லிட்டு, இவர சுத்தி ஒரு 5000 பேரை விட்டு நல்லா டெல்லி டிக்கி, பானி பூரி, ஜிலேபி, சமோசான்னு மணக்க மணக்க சாப்பிட சொன்னா போதும், ரெண்டாம் நாளே உண்ணாவிரதத்தை முடிச்சுட்டு உண்ணரவிரதம் ஆரம்பிச்சிருப்பாரு. இதுல ஒரு பெண்மணி, லோக்பால் வரலைன்னா பொதுமக்கள் முன்னா டி நிர்வாணமாக நடனம் ஆடுவேன்னு எச்சரிக்கை கொடுத்திருக்கா ர். இதனால் கூட்டம் இன்னமும் கூடும்ன்னு நினைக்கிறேன். எப்படியோ தமாஷுக்கு மேல தாமாஷ் நடக்குது. கூடவே எதாவது நல்லது நடந்தா சரி.
    முரளி

    ReplyDelete
  16. அய்யா குயிலார் அவர்களே,

    உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி. வெளி நாடு வாழ் இந்தியர்கள் என்று ஏசக் கூடாது.
    குயிலை போலவே உங்களின் எழுதும் கருப்பாக உள்ளது.

    இங்கு அண்ணாவின் நோக்கம் நல்லது தான் . எல்லோரும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கலாம்.
    ஆனால் நாம் நினைப்பது எல்லாம் நல்லது என்று நினைக்க கூடாது.
    அண்ணாவின் பிடிவாதம் தான் பிடிக்காத ஒன்று. முதலில் பில்லை விசாரிக்க சொன்னார்.
    இப்பொழுது நடைமுறை படுத்து என கட்டளை இடுகிறார். இது தவறான வழி காட்டுதல் ஆகும்.

    இன்றைய அவசியத்தை மட்டும் நினைவு கூர்ந்து சட்டம் இயற்றக் கூடாது. அதன் பலம், பலவீனம் எல்லாம் தெரிந்து சட்டம் இயற்ற வேண்டும்.
    லோக்பால் ஊழலை கட்டு படுத்தும் என்கிறார்கள். எப்படி இவர்கள் ஊழலை கண்டு பிடிப்பார்கள்?
    யாரேனும் புகார் செய்தால் மட்டுமே இந்த சட்டம் பாயும். புகார் செய்பவர்களை அடக்கினால் எப்படி கண்டு பிடிப்பீர்கள் ?
    நம் அரசியலும் சரி, அதிகாரிகளும் சரி, தன் பங்கு கிடைக்க வில்லை என்றால் மட்டுமே ஊழல் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த போராட்டம் கொஞ்சம் ஓவராக தான் தெரிகிறது.
    அடக்குமுறை காட்டாத அரசு என்பதால் எதனையும் திணிக்க முயல கூடாது.

    இவ்வளவு சொல்லும் குயிலாரே உங்கள் தொகுதியில் நடக்கும் அக்கிரமங்கள் பற்றி நீங்கள் போலீசில்
    புகார் செய்தது உண்டா ? கண்டிப்பாக இருக்காது. ஏனென்றால் எவனாவது புகார் செய்வான் நாமும் சேர்ந்து கொள்ளலாம்
    என்று தான் இருப்பீர்கள். கேட்டால் உங்கள் குடும்பத்தை யார் கவனிப்பது என்று ஒரு பழைய புராணம் பாடுவீர்கள்.
    பிறருக்காக கொடி பிடிக்காமல் நன்றாக அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள்.
    நீங்கள் அண்ணாவுடன் சேர்ந்து உண்ணா விரதம் இருக்கிறீர்களா, அதுவும் கிடையாது.
    பின் யாருக்கு நீங்கள் ஆதரவு?

    உங்களின் மறு பதிப்பில் இதன் வீரியத்தை கொஞ்சம் தெளிவாக விவரித்து எழுதுங்களேன்.

    முரளி உங்கள் கருத்து மிக்க சரி.

    வேதாந்தி

    ReplyDelete
  17. வேதாந்தியாரே,

    சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது உங்கள் வாதம். குயிலரசன் எழுதியதை நன்றாகப் படித்துப் பாருங்கள்.

    வெளி நாடு வாழ் இந்தியர்கள் என்று நம்மை அழைத்ததில் தவறு என்ன? NRI என்பதை தமிழில் சொல்லியிருக்கிறார். அது ஏன் உங்களுக்கு ஏசுவது போலிருக்கிறது? :-)

    //குயிலை போலவே உங்களின் எழுதும் கருப்பாக உள்ளது.//
    இது கொஞ்சம் ஓவர்.

    //ஆனால் நாம் நினைப்பது எல்லாம் நல்லது என்று நினைக்க கூடாது.//
    அவன் நினைப்பது கெட்டது என்று ராவணன் கூட நினைக்க மாட்டான். ஆகவே அவரவருக்கு அவருடைய எண்ணம் நல்லதுதான். எப்படி வேதாந்தம்?


    //அண்ணாவின் பிடிவாதம் தான் பிடிக்காத ஒன்று. முதலில் பில்லை விசாரிக்க சொன்னார்.
    இப்பொழுது நடைமுறை படுத்து என கட்டளை இடுகிறார். இது தவறான வழி காட்டுதல் ஆகும்.//

    எனக்குத் தெரிந்தவரை அவர் அவருடைய 'பில்'லை ஆராய்ந்து,விவாதித்து சட்டமாக்குங்கள் என்றுதான் சொல்லுகிறார். அப்படியே சட்டமாக்குங்கள் என்று சொல்கிறாரா என்ன? - விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.

    //இன்றைய அவசியத்தை மட்டும் நினைவு கூர்ந்து சட்டம் இயற்றக் கூடாது.//
    ஊழலைத் தடுப்பது இன்றைய அவசியமா என்ன? சென்ற வருடம் அது தொல்லையில்லையா?

    // எப்படி இவர்கள் ஊழலை கண்டு பிடிப்பார்கள்?
    யாரேனும் புகார் செய்தால் மட்டுமே இந்த சட்டம் பாயும். புகார் செய்பவர்களை அடக்கினால் எப்படி கண்டு பிடிப்பீர்கள் ?//
    அது சரியான கேள்விதான். நான் சொல்லியமாதிரி நாடெங்கிலும் பயன்படாவிட்டாலும், சில பல இடங்களிலாவது பயன்படும். கொஞ்ச நாளானால் அனைத்து இடங்களிலும் பயன்படும். திமுக ஆட்சி வரையும்தான் மதுரையில் அழகிரியின் அட்டகாசம். அதுமாதிரி.

    //நம் அரசியலும் சரி, அதிகாரிகளும் சரி, தன் பங்கு கிடைக்க வில்லை என்றால் மட்டுமே ஊழல் குற்றம் சாட்டுகிறார்கள்.//
    சரிதான். லோக்பால் வந்தால் ஊழலில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுவார்கள். ஊழலை விசாரிப்பவனுக்கும் ஊழல் செய்தவனுக்கும் கொஞ்சமாவது தொடர்பு இல்லை என்கிறபோது.

    //அடக்குமுறை காட்டாத அரசு என்பதால் எதனையும் திணிக்க முயல கூடாது.//
    அப்படியா? :-)

    //பிறருக்காக கொடி பிடிக்காமல் நன்றாக அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள்.//
    பிறருக்காக குயிலரசன் கொடி தினமும் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் கொடி பிடிக்காவிட்டால் சிலவை ஸ்தம்பித்துவிடும் :-)

    //நீங்கள் அண்ணாவுடன் சேர்ந்து உண்ணா விரதம் இருக்கிறீர்களா, அதுவும் கிடையாது.
    பின் யாருக்கு நீங்கள் ஆதரவு?//

    அதாவது அண்ணாவுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்காவிட்டால், அது பற்றி பேச அருகதையில்லை என்கிறீர்கள். நல்ல வேதாந்தம் இது.

    இதே வாதத்தை கொஞ்சம் திருப்பினால், இப்படி ஒரு கேள்வி வரும். ஊழல் தடுப்பை இப்படி தாக்குகிறீர்களே, உங்களுக்கு எவ்வளவு பெட்டி கிடைத்தது? அவ்வளவு அபத்தம் உங்கள் கேள்விகளில்.

    ReplyDelete
  18. நாகு,

    வேதாந்தம் என்பதுவே சிறு பிள்ளை தனம் தான். ஏனென்றால் சிறு பிள்ளை பேசுவது யாருக்கும் புரியாது.
    வேதாந்தமும் அப்படித் தான். ஆனால் புரிந்தவுடன் மிக்க நிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
    உங்களுக்கு தான் எத்தனை பாசம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் குணம் உள்ளவர். நீர் வாழ்க, நின் சுற்றம் வாழ்க.
    அப்பொழுது தான் மீண்டும் தாக்க மாட்டீர்கள். முன்பு பித்தன், இப்பொழுது நாகு.

    குயிலரசன் எழுதி உள்ளது வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தியாவில் நடக்கும்
    விசயங்களில் முழுமையான வீரியம் மற்றும் விவரம் தெரியவில்லை என்று. அதனை தான் நான்
    NRI மக்களை ஏச வேண்டாம் என்று சொல்லி இருந்தேன். அதனால் தான் அது கருப்பு என்றும் சொல்லி இருந்தேன்.
    மற்றவர்களை புண்படுத்துவது நம் நோக்கம் அல்ல.
    குயிலாரை வாழ்த்தி விட்டு தான் என் பதிவை எழுதி இருந்தேன்.

    அண்ணாவின் பரிந்துரைகள் ஏற்கப் பட்ட பின், காங்கிரஸ் அதனை மறுக்க கூடாது என்று சொல்லுகிறார்.
    அதனை எந்த உறுப்பினர் எதிர்க்கிறார் என்பதை நேரடி ஓளி பரப்ப வேண்டும் என்கிறார். கருத்து சுதந்திரத்தை
    அவமதிக்கிறார்.

    நாகு இப்படி கிழி கிழி என்று கிழிப்பார் என நான் நினைக்க வில்லை. இப்படி தெரிந்திருந்தால் முன்பே பங்கு பேசி இருந்திருப்பேன்.
    என்னைப் போல் வேதாந்தம் பேசி உள்ளது வரவேற்கத் தக்க மாற்றம்.
    ஊழல் எதிர்ப்பை நான் வரவேற்கிறேன். என் முதல் பதிவை பார்த்தால் என் ஆதரவு தெரிந்திருக்கும். காலம் செல்ல செல்ல
    அவரின் பிடிவாதம், சத்யா சொல்லியது போல் அவர் புகழ் போதையில் மயங்கி விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.

    இத்தனை காலம் பொருத்து விட்டோம். இதில் அவசரம் காட்டாமல் நிதானம் கடைப்பிடித்து இருக்கலாம் என நினைக்கிறேன்.
    இவரின் அவசரத்தால், லோக்பாலின் உன்னதம் கெட்டு விடுமோ என்ற ஆதங்கமும் தான்.
    அண்ணாவின் அடுத்த நடவடிக்கை ராம்தேவின் உண்ணா விரதத்திற்கு ஆதரவு.
    இதனால் இவர் அரசை மிரட்டும் செயல்களில் இறங்கி உள்ளார் என்று சொல்ல முடியும்.

    தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்து இருந்தார். இப்பொழுது முதல்வரும் சரி எதிர்க் கட்சி தலைவரும் அமைதி காத்து
    வருகின்றனர். இன்னும் சொல்ல போனால் கலாம் போன்றவர்கள் ஆதரவு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சந்தேகத்தை அதிக படுத்துகிறது.
    அண்ணாவின் பிடிவாதம் லோக்பால் ஒரு தனி அரசாக செயல் படவேண்டும் என்பது போல் உள்ளது.
    லோக்பால் உறுப்பினர் மீதும் ஊழல் குற்றம் சாட்டலாம், ஆனால் யார் விசாரிப்பது ?

    உருவாக்கும் போதே இதன் உலகளாவிய ஆற்றலை கட்டு படுத்த கூடிய வழிகளையும் எண்ணி பார்க்க வேண்டும்.
    நாகு, உங்கள் பங்கு எவ்வளவு என்று சொல்லுங்கள். நான் லோக்பாலில் முறையிட வேண்டும்.

    வேதாந்தி

    ReplyDelete
  19. அண்ணா அவசரப்படுகிறார் என நான் நினைக்கவில்லை. லோக்பால் 1968ல் இருந்து நடந்துவரும் விஷயம். நாற்பதாண்டுகளாக பலரும் முயன்று வரும் சட்டம். அனைத்து கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்டதை கட்சிகளல்லாத ஒரு இயக்கம்தான் கேட்கமுடியும். அண்ணாதான் Right to Information Actன் காரணகர்த்தா.

    அவர் செய்வது எல்லாம் சரி என்று சொல்லவில்லை. அவர் என்ன செய்ய சொல்கிறார் என்பதில்தான் எனது ஆர்வம். ஸ்விஸ் வங்கி கணக்குகள் முதல் லோக்பால் வரை எந்தக் கட்சியும் ஆதரிக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் இப்படி ஒரு இயக்கம்தான் கொஞ்சம் அரசியல்வாதிகளை கொஞ்சம் பயம்காட்டும். பத்து, பதினைந்து எம்.பி.க்களை வைத்துக் கொண்டு ஆட்சியைக் காப்பாற்ற எனக்கு ஐந்து மந்திரி கொடு என்கிற பேரங்களைவிட இந்த மிரட்டல்கள் எவ்வளவோ மேல்.

    வேதாந்தியாரே. நான் கைக்குட்டையை போட்டுவிட்டு வந்திருக்கிறேன் ஜன்லோக்பால் அதிபர் நாற்காலியில். கிடைத்தால் உங்களை தென்மண்டல நாய(க்)கர் நீங்கள்தான். :-) நீங்கள் வாங்கிய பெட்டிகளைவிட அதிகமாக குடோன் குடோனாக வாங்கலாம்.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!