Saturday, January 16, 2010

இந்தியப் பயணம் - பகுதி - 5





சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
1990–ல் பார்த்ததற்கும் இந்த முறை பார்த்ததற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதே ஆவின் கடை, அதே போல சிடு சிடு மனிதர்கள், அன்றைய காலம் போலவே ப்ளாட்பாரம் முழுவதும் குமட்டும் நாற்றத்துடன் பிச்சைக்காரர்கள் உருண்டுகொண்டிருக்கிறார்கள், ஆங்காங்கே எலக்ட்ரானிக் போர்ட் வைத்து ரயில் எவ்வளவு நேரம் தாமதம் என்று அறிவிக்கிறார்கள், இதைப் பார்க்கும் போது எப்போதோ படித்த ஜோக் ஞாபகம் வருகிறது.

பயணி ஸ்டேஷன் மாஸ்டரிடம்: என்னங்க எல்லா ட்ரெயினும் லேட்டுன்னு போட்டு இருக்கீங்க

ஸ்.மா: ஆமாங்க நாங்க என்னங்க பண்ண முடியும்.

பயணி: தினமும் எல்லா ட்ரெயினும் இவ்வளவு லேட்டா வருதே அப்புறம் எதுக்கு இந்த டைம் டேபிள் போர்ட் வெச்சு இருக்கீங்க.

ஸ்.மா: என்னங்க கேணத்தனமா கேள்வி கேக்கரீங்க, போர்ட் இல்லைன்னா உங்களுக்கும் ஏன் எங்களுக்கும் ட்ரெயின் எவ்வளவு நேரம் லேட்டா வருதுன்னு எப்படி தெரியும்.

காலை 5:20 க்கு எத்தனைக் கூட்டம் பாருங்கள். ஆனால் ஒரு நல்ல விஷயம் நாங்க செல்ல இருந்த ஷதாப்தி எக்ஸ்ப்ரஸ் 6 மணிக்கு கிளம்ப வேண்டியது 6:10 க்கே கிளம்பி விட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர், படிக்க பேப்பர், கொரிக்க சாக்லேட், பிஸ்கேட் சூசூசூசூடாக காப்பி/டீ, சற்று நேரத்தில் நல்ல சூடாக டிபன், மீண்டும் காபி என்று போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கி விட்டார்கள். ரயிலின் உட்புறம் ஒரு விமானத்தின் உட்புறம் போல அவ்வளவு செழுமை, புஷ் பாக் சீட்ஸ் என்று மிகச் சிறப்பான அனுபவம். சொன்ன நேரத்திற்கு 10 நிமிடம் தாமதமாக பங்களூரு வந்து சேர்ந்தோம். இங்கிருந்து கிளம்பும் போதே என் சகோதரர், “இங்க ரொம்ப குளிரும் அதனால நல்ல ஸ்வெட்டர், ஜாக்கெட் போட்டுண்டு வா, குழந்தைகளுக்கு தலைக்கு குல்லா, மஃப்ளர் போட்டு கூட்டிக்கிட்டு வா” என்றார். ரயிலில் இருந்து இறங்கியதும், என் பெரிய மகள் கேட்ட முதல் கேள்வி, “அப்பா, பெரியப்பா, ரொம்ப குளிரும்னு சொன்னான்னு சொன்னீயே அந்த இடம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு”. பலர் சொல்லி கேட்டிருப்பீர்கள், என் பங்கிற்கு நானும் சொல்லி விடுகிறேன். பங்களூருவில் காரில் செல்வதை விட பைக்கில் சென்றால் சீக்கிரம் செல்லலாம், பைக்கில் செல்வதை விட நடந்து சென்றால் சீக்கிரம் செல்லலாம், கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்து நடக்கவில்லை என்றால் “சீக்கிரம்” போய் சேர்ந்து விடலாம். பங்களூருவில் நாங்கள் பார்த்தது என் சகோதரின் வீடு மற்றும் என் தாய் மாமன் வீட்டைத் தவிர மூன்று இடங்கள்தான். ஒன்று குருஜீயின் அருளால் எழும்பியிருக்கும் ஒரு பெரிய ஆஞ்சநேயர் கோவில், ஒரு பளபள மால், ஒரு ஜனசந்தடி நிறைந்த சாலையில் ஒரு உணவகத்தில் இரவு உணவு.

கோவில் – இந்தக் கோவிலைப் பற்றி நான் சொல்லி தெரிந்து கொள்வதைவிட நீங்களே அடுத்த முறை பங்களூரு போனால் பார்த்து அனுபவித்து விட்டு வாருங்கள்.

மால்: பணம், பணம், பணம் இதுதான் தாரக மந்திரம். எந்தப் பொருளை எடுத்தாலும் ரூ.1000/- அல்லது அதற்கு மேல்தான் என்கிறார்கள். நம்மூரில் அது சல்லிசாக கிடைக்கிறது என்றால், அது சரி அங்கிருந்து எடுத்துட்டு வர ப்ளைட் சார்ஜ் ஆகுதில்லை என்று பதில் தருகிறார்கள். லிஃப்ட் (அதாங்க எலிவேட்டர்) விட்டு எந்த தளத்திற்கு வந்தாலும் அங்கு நம்மை வரவேற்பது குழந்தைகளின் பொருட்கள். கண்டிப்பாக 4-5 குழந்தைகள் கழுத்தை அறுத்தது போல கதறிக் கதறி அழுகிறார்கள். ஆனால் அமெரிக்கா போல “ச்சோ, ச்சோ” என்று சொல்லி சமாதானப் படுத்துவதில்லை, பளார் என்று ஒரு அறை, ஒரு குட்டு, ஒரு நறுக்கென்ற கிள்ளு என்று இன்னமும் அலற விடுகிறார்கள். அந்த தளமே தாங்க முடியாமல் ஆடுகிறது. என் சின்ன மகள் ஒரு சின்ன மர நாற்காலியை எடுத்துக் கொண்டு அதை வாங்கித்தந்தால்தான் ஆச்சு என்று அடம் பிடிக்க, நமக்கு இந்திய வழிகளில் அவளை சமாதானம் செய்ய தெரியாமல், அவள் பார்க்காத போது அந்த நாற்காலியை மறைத்து வைக்க முயன்றது, அவள் அதைக் கண்டுபிடிக்க முயன்றது என ஒரு 20-25 நிமிட விளையாட்டிற்கு பிறகு அவளே “போடா நாயே இவ்வளவு அல்பமா இருக்கியே” என்ற நிலைக்கு வந்து, விட்டு விட்டாள். குட்டி மர நாற்காலி, விலை தெரியுமா? ஒரு நாற்காலியில் முதலில் உட்கார்ந்து கொள்ளுங்கள் ரூ.3500/-. சாதாரண சின்ன நாற்காலிக்கு இத்தனை விலை என்பதைத் தாண்டி அதை எப்படி சென்னை எடுத்துச் செல்வது அதை எப்படி அமெரிக்கா எடுத்துவருவது என்ற கேள்விகள் நம்மை குடைய ஆரம்பிக்கிறது, அதை பிரித்து கோர்க்க முடியும் என்றால் கூட பரவாயில்லை, அதுவும் இல்லை.

மும்பய்

2000-ல் சேஞ் ஓவருக்காக மும்பய் வந்ததற்கும் இப்போதைய விஜயத்திற்கும் இடையில் எக்கச்சக்கமான மாற்றங்கள். கொஞ்சம் துபாய், சிங்கப்பூரை நினைவு படுத்தும் அளவில் விமான நிலையம் கலக்கலாக இருக்கிறது. டாக்ஸிக்கள் இன்னமும் அதே சீரான வரிசையில் வந்து மீட்டருக்கு மேல் எதுவும் கேட்காமல் கொடுத்தாலும் வாங்காமல் இருக்கிறார்கள். ஹூம் பிழைக்கத் தெரியாத கும்பல். விமான நிலையத்தின் அருகில் அதிகம் ஆட்டோக்களைப் பார்க்க முடியவில்லை.

இங்கு பார்த்தது நவி மும்பயில் ஒரு பெரிய மால், இரண்டு கோவில்கள், நெருலில் மிக பிஸியான சாலையில் கொஞ்சம் பொருட்களை வாங்கியது இவ்வளவுதான்.

மால்: பங்களூரு மால் போலவே இங்கும் பணம் பணம் பணம்தான். ஒரு அருமையான ஃபுட் கோர்ட் இருக்கிறது பலவிதமான உணவுகள் விற்கப் படுகின்றன. என்ன எண்ணெய் என்பது பெரிய கேள்விக் குறி.

பார்த்த கோவில்கள் இரண்டும் அருமை. ஒன்று சங்கர மடத்தைச் சேர்ந்த கல்லூரி வளாகத்தில் இருக்கும் ப்ரமாண்டமான ஆஞ்சநேயர் கோவில், தரிசிக்கச் சென்ற அன்று அனுமனுக்கு வடைமாலை சாற்றியிருந்தார்கள். 1008 வடை இருக்கிறது என்று அங்கிருந்த அலுவலகத்தில் தெரிவித்தார்கள். மற்றொன்று திருப்பதி ஏழுமலையானை நினைவுறுத்தும் பெருமால் நின்ற திருக்கோலம் ஒரு சிறு மலையில் இருக்கும் கோவில், அந்த அழகனை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

கேரளா

குருவாயூரப்பன் மனம் குளிரக் குளிர தரிசனம் தந்தார். முதல் நாள் மதியம் தரிசனம் தந்த குருவாயூரப்பன், மறுநாள் காலை நிர்மாலய தரிசனமும் தந்து “இனியாவது நல்லவனாக இரேன்” என்று சொல்லாமல் சொல்லி சிரித்தார். முதல் நாள் மாலையில் 64 யானைகளை பராமரிக்கும் யானைக் கொட்டடியில் ஒரே நேரத்தில் இத்தனை யானைகளைப் பார்த்தது மெய் சிலிர்க்கச் செய்யும் ஒரு நிகழ்வு.

ஒரு சின்ன குறை குருவாயூர் கேசவன் தரிசனம் கிடைக்கவில்லை. நிர்மாலய தரிசனத்திற்கு செல்லும் வழியில் இருக்கும் கடைகள் 24 நாலு மணி நேரமும் திறந்திருக்கிறார்கள். யாரும் அடிமாட்டு விலைக்கு கேட்கும் யாரையும் திட்டுவதில்லை, புன்னகைத்தபடி மறுக்கிறார்கள். தங்கள் கோபங்களை வாடிக்கையாளர்களிடம் காண்பிப்பதே இல்லை.

குமரகோம்:

வெம்பநாடு ஏரி, சுமார் 80 கி.மீ நீளமுள்ள ஏரி. இதில் ஏறக்குறைய 800 படகு வீடுகள் இயங்குகின்றன. நாங்கள் தங்கியிருந்த படகு வீடு இரண்டு பெட்ரூம் கொண்ட வீடு, எந்த கவலையும் இல்லாமல் இயற்கையை அனுபவிக்க முடிகிறது. குமரகோமிலிருந்து அலப்பி வரை சென்று வந்தோம், மிக அருமையான பயணம். படகு வீடுகள் சிலதில் தொலைக்காட்சி டிஷ் இருக்கிறது, சிலதில் டெக் இருக்கிறது வசதிக்கு ஏற்ப விதவிதமாக படகு வீடுகள் இருக்கிறது.

சென்னை, பங்களூரு, மும்பய், கேரளா இவற்றில் பார்த்த ஒரு ஒற்றுமை, எல்லா இடத்திலும் ஜனத்தொகை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. வேற்றுமை, கேரளாவில் நான் பார்த்தவரையில் போக்குவரத்து விதிகளை கூடுமானவரை மீற முயற்சிக்கவில்லை. சக வண்டியோட்டிகளுக்கு மரியாதை தந்து வண்டி ஓட்டுகிறார்கள். சென்னைவாசிகள் சாலையின் குறுக்கே பள்ளிக்கூட குழந்தைகள் மாதிரி கண்ட இடத்தில் தாண்டுவதை கேரளாவில் பார்க்கவே இல்லை.

தொடரும்

2 comments:

  1. //சென்னைவாசிகள் சாலையின் குறுக்கே பள்ளிக்கூட குழந்தைகள் மாதிரி கண்ட இடத்தில் தாண்டுவதை கேரளாவில் பார்க்கவே இல்லை.//

    தமிழ் கொஞ்சம் நுணுக்கமான மொழி. சென்னைவாசிகள் சாலை தாண்டுவதை கேரளாவில் பார்க்கமுடியாது. சென்னையில்தான் பார்க்கமுடியும். :-)

    நன்றாக போய்க்கொண்டிருந்த தொடர். கேரளா படகுவீட்டில் இருந்து இன்னும் திரும்பவில்லை என்று நினைக்கிறேன். சீக்கிரம் தொடருங்கள்.

    ReplyDelete
  2. நாகு,

    ஜோக்குக்கு நன்றி.

    தமிழ் சங்கத்து விழாவில் சற்றி மும்முரமாக இருப்பதாலும், இந்த மாதக் கடைசியில் இரண்டு ப்ராஜக்ட் முடிக்கவேண்டியிருப்பதாலும், கொஞ்சம் பிஸி.

    இன்னும் ஒரு நான்கு பதிவுகளில் பயணக்கட்டுரை முடிந்து விடும்.

    முரளி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!