மாம்பலம்
சமத்துவம் என்பதை மாம்பலத்தில் மிகச்சரியாக தெரிந்து கொள்ள முடியும். ஒருபுறம், பல லட்சங்களுக்கு ஒரே ஒரு நகையை விற்கும் கடையும் இருக்கிறது. நூறு ரூபாய்க்கு பல பொருட்களை விற்கும் கடையும் இருக்கிறது. பல லட்சரூபாய் மதிப்புள்ள கார் ஓடும் அதே சாலையில் அருகே, இன்னிக்கோ நாளைக்கோ உடைந்துவிடக்கூடிய நிலையில் இருக்கும் வண்டியில் மாங்காய், வெள்ளரிக்காய், நெல்லிக்காய் விற்கும் பாட்டிகள் இருக்கிறார்கள். விற்பனை உரிமம் வழங்கப் பட்ட திரைப்பட குறுந்தகடுகள் விற்பனைசெய்யும் கடைகளின் வாசலில் நாளை வெளிவர இருக்கும் திரைப்படத்தின் குறுந்தகடுகள் அமோகமாக விற்கப்படுகிறது. சூப்பர் டூப்பர் உணவகங்கள் இருக்கும் அதே தெருவில் கையேந்தி பவன் வண்டியைச் சுற்றியும் கூட்டம் அம்முகிறது. துணிக்கடை/நகைக் கடைகளில் உள்ளே நுழைய, வெளியே வர க்யூ நிற்கிறது. இக்கடைகளில் இருக்கும் கூட்டத்தை பார்த்து விட்டும் இன்னமும் இந்தியா ஏழை நாடு என்று மேலை நாடுகள் சொல்வதை கேணத்தனமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
பாத்திரக் கடையோ, நகைக் கடையோ, துணிக்கடையோ சரவணா ஸ்டோர்ஸை முடிந்தால் தவிர்க்கவும், நாம் எவ்வளவுக்கு பொருட்கள் வாங்கினாலும், நம்மை ஒரு திருடன் என்கிற நினைப்போடுதான் பார்க்கிறார்கள், மதிக்கிறார்கள். துணியென்றால், நல்லி, குமரன், ஆரெம்கேவி/போதீஸ் (பரவாயில்லை ரகம் தான் இருந்தாலும் நூறு சரவணா ஸ்டோர்ஸ்க்கு சமம்), நகையென்றால் ஜி.ஆர்.டி இதுதான் என் கணக்கு. இதுதான் சரி என்று சொல்வதற்கில்லை ஆனால், சரவணாஸ் போல சொத்தைக் கடையில் பொருட்களை வாங்க எனக்கு விருப்பமில்லை. சரவணாஸில் வேலைப்பார்க்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
“ஏங்க உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை”
“10 மணி கண்டிப்பா உண்டு, இந்த மாதிரி க்ரிஸ்மஸ், தீபாவளி, பொங்கல் டைம்ல 12-14 மணிநேரம் உண்டு”
“சம்பளம்”
“தராங்க சார்”
“அதில்லைங்க. எவ்வளவு தராங்க”
“புதுசுன்னா 3000 ரூ”
“உங்களுக்கு”
“எனக்கு 6000 ரூ”
“எப்படி பத்துது உங்களுக்கு”
“கஷ்டம்தாங்க”
“வேற வேலை ட்ரை பண்றதுதானே”
“எல்லா இடத்திலேயும் இதே சம்பளம்தாங்க”
இந்த உரையாடல் எனது நண்பர் ஒருவரைப் பார்த்து விட்டு மின்ரயிலில் வரும் போது சரவணாஸ் பணியாளர் ஒருவரிடம் பேசியது. நல்ல வேளை இந்த உரையாடல் சரவணாஸ் கடையின் உள்ளே நடைபெறவில்லை. அங்கு சாதா உடையில் பல மேற்பார்வையாளர்கள் சுற்றி சுற்றி வந்து கண் கொத்திப் பாம்பைப் போல பணியாளர்களை கண்காணிப்பதிலிருந்து, வாடிக்கையாளர்களை நோட்டம் பார்ப்பதுவரை செய்கிறார்களாம், அங்கு இப்படி யாராவது வாடிக்கையாளர்களிடம் பேசியிருந்தால், சீட்டைக் கிழித்து உடனே வீட்டிற்கு அனுப்பிவிடுவார்களாம்.
ஆந்திராவில் கொத்தடிமைகள் இருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன், சரவணாஸில் நேரில் பார்க்கமுடிகிறது. இது அனேகமாக ரத்னாஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் போன்ற கடைகளிலும் இருக்கிற ஒன்று.
ரங்கநாதன் தெருவில் இரண்டு கடைகள்தான் இருக்கிறது ஒன்று சரவணாஸ், இரண்டு ஜெயச்சந்திரன். ரங்கநாதன் தெருமுழுவதும் ஒரு 10-12 கடைகளில் வியாபித்திருக்கிறார்கள், உஸ்மான் ரோடிலும் தலா 3-4 கடை இருக்கிறது. உணவகம், இனிப்பகம், பர்னிச்சர், பாத்திரம், நகை, துணி என்று ஆளுக்கு 5-6 கடை வைத்திருக்கிறார்கள். நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த பல கடைகளை வாங்கி இந்த இரண்டு பேரும் ராஜாங்கம் நடத்துகிறார்கள்.
பக்தி
கோவில்களில் இருக்கும் கூட்டத்தை பார்த்தால், பக்தியைத் தாண்டி எல்லோருக்கும் குற்றவுணர்ச்சியும், பயமும் அதிகமாகியிருக்கிறதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ரிச்மண்ட் நண்பர் ஒரு தகவல் தந்தார். தமிழ்நாட்டில் பல கோயில்கள் அவர்களுக்கு வரும் வரும்படியை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார்கள் என்றார், நிஜமா என்று தெரியவில்லை. சபரிமலை சீசனில் கோவில்களில் பூஜையென்பது ஒரு சாதாரண நிகழ்வாக இருந்தது, இப்போது பெரிய்ய்ய்ய்ய பானர், பானரில் பாதியிடத்தை மறைத்து 8-10 பேர் புகைப்படம், தெருவை அடைத்து மெல்லிசை கச்சேரி, ஆடம்பர விளம்பரம் அதோடு நன்கொடை கேட்டு விண்ணப்பம் என்று படாடோபமாக இருக்கிறது. இதில் ஹரிஹர சுதன் விடுபட்டு போய் விட்டார். குரு பெயர்ச்சிக்கு ஸ்பெஷல் பூஜை 75 ரூ, ரெகுலர் பூஜை 25 ரூ என்று விளம்பரம் கோவில் கோவிலா பானர் வைத்து இருக்கிறார்கள்.
பிச்சைக்காரர்கள்:
சென்னையில் பிச்சைக்காரர்கள் புதிய உத்தியைக் கையாளுகின்றனர். ஒரு பெரிய கர்சீஃப் சைஸ் ஒரு மஞ்சள் துணியை(பைக் துடைக்க உபயோகப் படுத்தலாம் என்று என் நண்பன் சொன்னான்) அல்லது காது குடையும் பட்ஸ் அல்லது அ, ஆ, இ, ஈ தமிழ் புத்தகம் அல்லது ABCD புத்தகம் ஆளுக்குத் தகுந்தாற்போல் 5 ரூ – 10 ரூ வரை விற்கிறார்கள். வேண்டாம் என்றால், “ஐய்ய்யா சாசாசாப்பிட்டு ந்நாநாநாளு ந்நாநாளாச்சுய்ய்ய்யா, ஏதாதாதாவது தர்மம் பண்ணுங்கைய்ய்ய்ய்யா” என்று உரத்த குரலில் வேற்று மொழிக்காரர்கள் தமிழில் பேசுவது போல இழுத்து இழுத்து பிசிரில்லாமல் பேசி பிச்சையெடுக்கிறார்கள். மறுத்து அவர்களைத் தாண்டி நடக்க முயன்றால், அழுக்க்க்க்க்கான கையால் உங்கள் சொக்காயை நன்கு கறை படும் அளவுக்கு பிடித்து இழுத்து மீண்டும், “ஐய்ய்யா ….” என்று ஆரம்பிக்கிறார்கள். “போம்மான்னு சொல்றேன்ல” என்று நகர்ந்தால், பச்சை பச்சையா திட்டாமல், வானவில் மாதிரி விதவிதமா திட்டத்துவங்குகிறார்கள். இவர்களைப் பார்த்து பரிதாபப் படுவதா அல்லது கோபப்படுவதா என்று தெரியவில்லை. பரிதாபப்பட்டு ஒருவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் போச்சு, அடுத்த அரை நொடியில் உங்களைச் சுற்றி ஒரு 100 பேர் கை நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு மூதாட்டி, கொஞ்சம் உரிமையோடு நம் கன்னத்தையும் தடவி பிச்சை கேட்கிறார். இப்படி ஒரு மூதாட்டிக்கு 5 ரூ கொடுத்தவுடன், “ஹூம் 5 ரூபாயா, இதுல என்ன கருமத்தை வாங்க முடியும், காபியே 10 ரூபா விக்கராங்க” என்று எனக்கு இலவசமாக ஒரு எகானமி க்ளாஸ்வேறு எடுத்துவிட்டு போனார்.
தொடரும்
nice series :)
ReplyDeletesrini