Saturday, June 30, 2007

வலைவலம்

கோடைகாலத்திற்கு நிறைய பேர் இந்தியாவிற்கு போய்விட்டு வருவார்கள். போகும்போதும், வரும்போதும் நேர வித்யாசத்தினால் பல தொந்தரவுகள். இந்த ஜெட்-லேகிற்கு ஒரு நிவாரணம் கண்டுபிடிக்க அர்ஜெண்டைனாவில் சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுவாரஸ்யமான முயற்சி செய்கிறார்கள். அதுசரி தலைவலி போய் 'திருகு'வலி வராதா என்று கேட்காதீர்கள். அதைப்போல இந்த செய்தியை வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று இந்த மருந்தைக் கேட்டால் நான் பொறுப்பில்லை.

மருத்துவர் என்றதும் ஞாபகத்துக்கு வருவது அமெரிக்காவில் ஒரு புது ஊருக்கு போனவுடன் ஒரு நல்ல டாக்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா? அதற்கு உதவுகிறார் பாரதி இந்தப் பதிவில். பாரதி என்றால் முண்டாசுக்காரர் இல்லை. அவரது பதிவில் சில நல்ல வலைத்தளங்களை சுட்டியிருக்கிறார். அது மாதிரியான ஒரு தளம்தான் ரெவல்யூஷன் ஹெல்த். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் அமெரிக்காவில் வலைஉலாவிற்கு AOL மூலம் வித்திட்டு பட்டை கிளப்பிய ஸ்டீவ் கேஸ்.

உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தின் பல மூலைகளில் உள்ள நல்ல விஷயங்களைப் பார்க்க வேண்டுமா - இந்த தளத்தில் பாருங்கள்.. எல்லா ஊருக்கும் போய் பாருங்கள். கஜுராஹோவிலேயே உட்கார்ந்து விட வேண்டாம்.(அங்கே இங்கே போய் 'அதே' இடத்துக்கு வரீங்களேன்னு பித்தன் குரல் விடுவது கேட்கிறது)

ஈபே கேள்விப்படாதவர்கள் இருக்கமுடியாது. இங்கிலாந்தில் வாழும் ஒரு இந்தியக் குடும்பம் ஒரு தலைகீழான ஈபே ஆரம்பித்திருக்கிறது. ஹம்ராஸ் தளத்தில் ஒரு பொருளை ஜெயிக்க வேண்டுமென்றால், நீங்கள் எல்லாரைவிட குறைந்த விலைக்கு கேட்கவேண்டும். அது எப்படி என்கிறீர்களா? அந்த குறைந்த விலைக்கு நீங்கள் மட்டுமே கேட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு பொருளுக்கு இப்படி பேரம் நடந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்:

1.20 - பத்து பேர்
1.23 - இரண்டு பேர்
1.24 - ஒருவர்
1.28 - மூன்று பேர்
1.39 - ஒருவர்

ஜெயிப்பவர் 1.24க்கு கேட்டவர். அவர் ஒருவர் மட்டும்தான் குறைந்த விலைக்கு கேட்டிருக்கிறார். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் அஸ்மத் மோனகன் எனும் தாயும் அவரது மகள்கள் ஆம்பரின், ஹென்னா. இதைப் பற்றி விவரமாக இங்கே படிக்கலாம்.

பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது என்பார்கள். ஏன் என்று தெரியாது. தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும். நான் இங்கே பேரைச் சொல்லாமல் ஊரைச் சொல்கிறேன். நம் வலைப்பதிவில் எழுதும் ஒரு நபரின் ஊரில் நடந்த சம்பவம் மிக சுவாரசியமானது. கவிச் சக்கரவர்த்திக்கு எந்த ஊரில் சமாதி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? நாட்டரசன் கோட்டைக்காரர்கள் தவிர மற்றவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். முதலில் கவிச்சக்கரவர்த்தி யாரென்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான் ஆளாளுக்கு அரசர், பேரசரர் என்று பேர் வைத்துக்கொள்கிறார்கள். நான் சொல்லுவது கம்பரைப் பற்றி. ஆனானப்பட்ட கவிச்சக்கரவர்த்தியையே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் வெட்கித் தலைகுனிய வைத்தது நாட்டரசன் கோட்டையில். கர்வமடங்கிய கம்பர் மீதமுள்ள வாழ்நாட்களைக் கழித்தது அந்த ஊரில்தானாம். அந்த சுவாரசியமான கதையை பிரபுவின் பதிவில் நீங்களே படித்துக் கொள்ளுங்கள். இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு Gods must be crazy யில் வரும் ஆதிவாசிதான் நினைவுக்கு வந்தான். அய்யய்யய்யய்யய்யய்.......


இப்படி ஒரு போராட்டம் ஆரம்பித்திருக்கிறார் ரவிசங்கர்.



புரியவில்லையா?

தமிங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டாமென்கிறார். ஆங்கில அடிமை என்ற குற்றச்சாட்டுக்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த முறையில் தட்டச்சு செய்வது மிகவும் வேகமானது என்கிறார் ரவி. வேகமான முறை என்பதற்காகவே முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன். இந்த விசைப்பலகையை பார்த்தால்தான் கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது.




ஆனால் இந்த முறை ஆங்கில மோகத்தைக் குறைக்குமென்றால், தட்டச்சும் வேகத்தை அதிகமாக்குமென்றால் கண்டிப்பாக அனைவரும் முயலவேண்டும். நான் முயற்சி செய்து பார்க்கிறேன். இப்போதே வலைபதிய உட்காரும்போது 'கருத்து' கேட்க வேண்டியிருக்கிறது. இதில் இந்த விசைப்பலகையை முயன்றால், 'கருத்து' 'புராணமாக' மாறும் அறிகுறிகள் வலுக்கின்றன.

கடேசியாக நமது வர்ஜீனியா மாவட்டத்தில் மோசமாக காரோட்டுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அடுத்த முறை கன்னாபின்னாவென்று ஓட்டி மாமாவிடம் மாட்டினால் நீதிபதி தீட்டுவது மட்டுமல்லாமல் மூன்று வருடங்களுக்கு தண்டல் கட்டவேண்டும். முழு விவரங்கள் இதோ.

5 comments:

  1. தமிழ்9க்கு நீங்கள் மாற முயல்வதில் மகிழ்ச்சி.

    கீழ் வருமாறு நினைவு வைத்துக் கொள்வது எளிதாக இருக்கும்.


    உயிர் குறில்கள் - இட நடு வரிசை
    உயிர் நெடில்கள் - இட மேல் வரிசை.
    அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.

    அதிகம் பயன்படும் க ச த ப - வல நடு வரிசை.

    அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.

    ReplyDelete
  2. நாகு

    வணக்கம்.

    ரிச்மண்ட் வாழ் தமிழ் மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் அமைந்திருக்கும் உங்கள் பதிவுகள் நன்று. மாமாக்களிடம் சீட்டு (தண்டனை) வாங்குவது பற்றிய எச்சரிக்கை தேவையானதுதான்! இங்கே உள்ளூரில் முக்கியமான சந்திப்புகளில் புகைப்பட கருவி வைத்து சிகப்பு விளக்கை உதாசீனம் செய்கிறவர்களுக்கு டிக்கெட் கொடுக்கிறார்கள் !! இதில் ஊழல் உள்ளது என வானொலிகளில் கதறுகிறார்கள் !!

    தமிழில் தட்டச்சு செய்ய புதிய பலகை பற்றி:
    Phonetics வைத்துதான் என்னால் தமிழ் தட்டடிக்க முடிந்திருக்கிறது. இவ்வாறு செய்வதால் எப்படி ஆங்கில மோகம் என எடுத்துக் கொள்ள முடியும்..? தட்டச்சு செய்ய போவது "தமிழில்" !

    தமிழில் தட்டச்சு செய்ய ஆர்வமுள்ள தமிழர்கள் வெகு குறைவாக இருக்கும் இணைய உலகில் மற்றொரு தட்டச்சு முறையை கொண்டு வருவதால் ஏதும் புதிய பயன் இருக்க போவதில்லை. பலருக்கும் பழக்கமானவை: பாமினி முறை மற்றும் அஞ்சல்+ Phonetic முறை. இவைகளை பயன்படுத்தி பழக்கமானவர்களுக்கு புதிய தட்டச்சு பலகை களைப்பைத்தான் கொடுக்கும்.

    ReplyDelete
  3. ரவி - உங்கள் tipsக்கு நன்றி.

    வாசன் - இங்கேயும் சந்திப்புகளில் படம் எடுக்கிறார்கள். வர வர எங்களூரில் சிகப்பு விளக்கை தாண்டுகிறவர்களை படம் எடுத்து கட்டுபடியாகாது என்று நினைக்கிறேன். சிவப்பு விளக்குக்கு மாறியபின்னும் ஒரு ஐந்து வண்டிகள் கடக்கின்றன :-(

    மக்களைத் தமிழில் தட்டச்சு செய்ய வைக்க நானும் எவ்வளவோ முயன்று கொண்டு இருக்கிறேன். ஊரில் என்னைக் கண்டாலே ஓடி ஒளிகிறார்கள். இவ்வளவு எளிதாக எழுத வழியிருக்கையில் நிறைய பேர் எழுதாதது எனக்கும் வருத்தம்தான்.(என்னய்யா சசி - படிக்கிறீரா இதை?). நீங்கள் சொல்வது புதிதாக எழுதத் தொடங்குவோர்க்கு பொருந்தும். நான் சொல்வது சில காலமாக எழுதுவோர்க்கு வேகம் கூடுமென்றால் முயற்சி செய்யலாமென்றுதான். சரியாக அதை சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

    நான் ஏதோ பதிவுலகில் பழந்தின்னு கொட்டை போட்டவன் என்ற நினைப்பில் சொல்லவில்லை. நானும் தமிங்கில தட்டச்சில் ஊறியவன்தான்.

    ReplyDelete
  4. வாசன் - நான் புதிதாக ஒன்றையும் பரிந்துரைக்கவில்லை. தமிழ்99 விசைப்பலகை 1999 ஆம் ஆண்டு (8 ஆண்டுகளுக்கு முன்னர் !) தமிழக அரசு மற்றும் அறிஞர்கள் ஒப்புதலுடன் தமிழுக்கு எனத் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டது. என்றாலும், தமிழ் வலைப்பதிவுலகில் இது குறித்த விழிப்புணர்வு இல்லாததாலேயே எடுத்துக் கூறினேன். இப்படி ஒன்று இருக்கிறது என்று அறியாமலேயே பலரும் தமிங்கில விசைப்பலகை பயன்படுத்தி வரக்கூடும் தானே? அதனால், தமிங்கில விசைப்பலகை பயன்படுத்துபவர்களை ஆங்கில மோகக்காரர்கள் என்று சொல்ல ஒன்றுமில்லை. நானே முதலில் தமிங்கிலத்தில் தட்டச்சு செய்து கொண்டிருந்து பிறகு தான் தமிழ்99க்கு மாறினேன். நண்பர்களுக்கு சொல்லித் தரும்போது முதலில் தமிங்கிலத்தில் செய்து காட்டி விட்டு அதன் நிறை குறைகளை வலியுறுத்தி பின்னர் தமிழ்99ஐப் பரிந்துரைப்பேன்.

    அடுத்து வரும் தலைமுறையே தமிழ் எழுத்துக்களைத் தங்கள் மனதில் ஆங்கில ஒலிகளின் பிம்பங்களாகப் பதித்துக் கொள்வது சரி என்று நினைக்கிறீர்களா? இந்தக் கேள்வி ஒரு உணர்ச்சிப் பூர்வ அரசியல் முழக்கம் போலத் தோன்றினாலும், தமிழ்99ல் வேகம், திறம் கூட என்பது உண்மை. அந்த சாதகத்துக்காகவேனும் தமிழ்99ஐப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

    ReplyDelete
  5. நாகு,

    அருமையான வலைவலம். தமிழ் தட்டச்சு இன்னும் முயலவில்லை. தமிழ்99 தட்டச்சுப் பலகையைப் பார்க்கும்போது, தமிங்கிலம் என்னவோ எளிதானதாகத் தோன்றுகிறது. ஆணி பிடுங்கவே நேரம் சரியாக இருக்கிறது. தமிழ்99 முயன்றுவிட்டு சொல்கிறேன்.

    //ஆனானப்பட்ட கவிச்சக்கரவர்த்தியையே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் வெட்கித் தலைகுனிய வைத்தது நாட்டரசன் கோட்டையில். கர்வமடங்கிய கம்பர் மீதமுள்ள வாழ்நாட்களைக் கழித்தது அந்த ஊரில்தானாம்.//

    கொஞ்சம் பெருமை சேர்க்கும் விசயம் தான். ஆனால் இன்று அவரின் சமாதி இருப்பது அவ்வூர் இளந்தலைமுறையினருக்கு தெரியுமா என்று தெரியவில்லை :(

    என் மகனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். உங்கள் பதிவைப் பார்த்துவிட்டு ... :-)

    ஆண்டுக்கொரு முறை கம்பன் விழா நடத்தப்படும். (இன்றும் தொடர்கிறதா என்று தெரியவில்லை) நான் சென்றது என் பள்ளி பருவங்களில். மூன்று நாட்கள் விழா. முதல் இரண்டு நாட்கள் காரைக்குடியிலும், மூன்றாம் நான் நாட்டரசன்கோட்டையிலும் நடைபெறும். பெரிய பெரிய தமிழரிஞர்கள், ராமாயண வல்லுநர்கள் எல்லாம் பேசுவார்கள். சுவாரஸ்யமாக இருக்கும்.

    வலைவளத்தில் கடைசிச் செய்தி 'பக் பக்' ரகம் தான்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!