Sunday, December 28, 2014

இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு ஒரு புகழ் அஞ்சலி




தமிழ்த்திரை உலகின் மிகப்பெரிய இயக்குனராக வாழ்ந்த கே.பாலசந்தர் சென்ற செவ்வாய்க்கிழமை காலமானார். அவருடைய கலை உலகச் சாதனை சில சொற்களில் அடக்கமுடியாத பெருமை கொண்டது.
    60 களின் தொடக்கத்தில் பாலச்சந்தர் நாடகத்துறையில் தன் பயணத்தை மேற்கொண்டார் நான் 60 களில் சென்னையில் இருந்தபோது அவருடைய ஒரு நாடகத்தை பார்த்திருக்கிறேன். அறுபதுகளில் தமிழ்நாடகத்துறை அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை.சரிவு தொடங்கி பல வருடங்களாகிவிட்டது.அறுபதுகளில் அவர் நாடகம் நடத்திய அதே காலத்தில்தான் சோ ராமசாமி போன்றவர்களூம் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். வெறும் துணுக்குத் தோரணமாக வசனங்கள் கொண்ட நாடகங்கள்தான் பெரும்பாலும் வளர்ந்து கொண்டிருந்தது. பாலச்சந்தரின் நாடகத்தை பார்த்த பிறகு  திரும்பவும் தமிழ் நாடகம் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை எனக்குத் தோன்றியது.  
      பாலசந்தர் தன்னுடைய நாடகத்துக்கு பெரிய செட்டுகள் காட்சி ஜோடனைகள் எதையும் செய்யவில்லை.  நகைச்சுவை அளவு மிகாமல் சிக்கனமான சொற்களைகொண்டு  கதாபாத்திரங்களை பேசச் செய்தார். சிந்தனைக்குரிய செய்திகளோடு மேடை ஏறிய அவருடைய சமூக நாடகங்கள் ரசிகர்களுக்கு திருப்தியளித்தது ஓரளவுக்கு நம்பிக்கை பிறந்தது.
நான் பிற்காலத்தில் கர்நாடகாவில் வாழ்ந்த போது பல கன்னட மராத்தி நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அங்கே இன்றும் நாடகம் நல்ல முறையில்  இருப்பதை நான் அறிவேன்.ஆனால் துரதிருஷ்டவசமாக     இன்று தமிழ்நாட்டில் நாடகம் அநேகமாக இல்லை.
    சமீபத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் பெரும் செலவு செய்து நடத்திய நாடகத்தைப் பார்க்க மன்றத்தில் பாதி அளவு கூட ரசிகர்கள் நிரம்பவில்லை. இத்தனைக்கும் அனுமதி இலவசம். பலநாட்களுக்குப் பிறகு நண்பரைப் பார்த்து என்ன  செலவாகியது என்று கேட்டேன் பதினெட்டாயிரம் ரூபாய் என்றார். இனிமேல் நாடகமே போடாதீர்கள்      `
என்றேன்.அடுத்த ஆறு மாதத்தில் இன்னொரு நாடகம் போட்டார். அவர்களையெல்லாம் திருத்தமுடியாது. நான் நாடகத்துக்குப் போகவில்லை.
நல்ல வேளையாக பாலச்சந்தர் திரைப் படத்துறைக்குப் போனார். எம்.ஜி.ஆர் தான் அவரை சினிமாவுக்கு அழைத்தார். அவருடைய படத்துக்கு முதல்முதலாக  வசனம் எழுதினார். ஆனால் அவர் எம்.ஜி.ஆரை வைத்தோ அல்லது அன்று கொடி கட்டிப் பறந்த சிவாஜியை வைத்தோ ஒரு படம் கூட எடுக்க வில்லை. பிரபல நடிகர்களை வைத்து படம் எடுப்பதில் உள்ள பிரச்னைகளை அவர் அறிந்திருக்க வேண்டும். அது அவருக்கு தேவையும் இல்லை.
   நடிகர்கள் யார் ,கதாநாயகர் யார் என்று தெரிந்து படத்துக்கு போன ரசிகர்கள் நிறைந்த நாட்களில் இயக்குநர் யார் என்று விசாரித்து  படத்துக்கு ரசிகர்கள் போகும் நிலையை பாலசந்தர் உறுதிப்படுத்தினார்
அந்த நிலையை துவக்கி வைத்த பெருமை இயக்குநர் ஸ்ரீதரைத்தான்
சேரவேண்டும். கல்யாணப்பரிசு  போன்ற படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநரின் கைவண்ணத்தை ரசிகர்கள் உணரமுடிந்தது.  அந்த நிலையை தமிழ்த்திரை உலகத்தில் உறுதிப்படுத்தியவர் பாலச்சந்தர். அதனால்தான் அவர் தன்னம்பிக்கையோடு புதுமுகங்களை அறிமுகப்படுத்த முடிந்தது.ஏறக்குறைய 50 புதுமுகங்களை  பாலசந்தர் திரைஉலகத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்ற செய்தி இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அவர்களில் பலர் சாதனை.   புரிந்திருக்கிறார்கள். கமலஹாசன் ரஜனிகாந்த் விவேக் போன்றவர்கள். குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள். பட்டியல் மிக நீளம்.
    பாலசந்தர் ஒருபோதும் கதைக்களத்துக்காக சென்னை நகரத்தை விட்டு நகர்ந்ததில்லை.கிராமப்புறக் கதைகளை அவர் தொடவே இல்லை.
திரைப்படத்த்றையில் பாலசந்தர் படங்கள் கிராமப்புற தியேட்டர்களில் போணி ஆகாது என்ற நம்பிக்கை இருந்தது. அது உண்மைதான்.,.
   ஆனால் அதை அவருடைய பலவீனமாக யாரும் பார்க்கவில்லை. அந்த அளவுக்கு நகர்ப்புற மக்கள் அவர் படத்துக்கு ரசிகர்களாக மாறினார்கள் நகரத்தில் வாழும் மத்தியதர வர்க்க ரசிகன் அவருடைய படத்தைப்பார்க்கும் போது தானும் தன் குடும்பமும் சந்தித்த பிரச்னைகளை அந்த படங்களில் பார்த்தான். ரசித்தான். அழுதான். சிரித்தான்
   அவருடைய இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் நீர்க்குமிழி. நாகேஷ் படம் பார்த்தவர்களை அழ வைத்துவிட்டார்.முழுக்க முழுக்க மருத்துவ மனையில் எடுக்கப்பட்ட படம் ஒரெ செட். அதிகச் செலவு இல்லை
  உள்ளே  சுளை எதுவும் இல்லாத ஆரஞ்சு பழத்தை  நாகேஷ் கொடுக்க அதை வாங்கியவர் உள்ளே ஒன்றும் இல்லையே என்று சொல்ல நாகேஷ் நானும் அப்படித்தான் என் உள்ளே ஒன்னும் இல்லை. என்பார். கொஞசம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் அந்த கதாநாயகனின் நகைச்சுவையை கேட்ட ரசிகனுக்கு சிரிப்பும் வரும் அழுகையும் வரும்
    நகர்ப்புறத்து மத்யதரவர்க்க பிரச்னைகளைக் கருவாகக் கொண்ட நாவல்கள் தமிழ் நாவல் இலக்கியத்தை ஆக்கிரமித்துக் கொண்ட காலம் ஒன்று உண்டு.அதே போல் நகரத்து மத்யதர வர்க்கம் சினிமாவுக்கு குடும்பத்தோடு போன காலத்தில் படத்துறையில் பாலசந்தர் செயல்பட்டார். அவரும் அந்த பகுதியிலிருந்து வந்தவர். .   
    அவருடைய அரங்கேற்றம் படத்தை என்னுடைய கன்னட நண்பர்  ஒருவருடன் பார்த்தேன் நான் தான் அவரை அழைத்துச் சென்றேன்.  என்னைவிட வயதில் மூத்தவர். எனக்கு பல வகைகளில் அவர் குரு,. நான் அவரை குருஜி என்றுதான் அழைப்பேன். படத்தை அவ்ர் ரசித்துப் பார்த்தார் அனால் படத்தைப் பார்த்துவிட்டு அவர் கேட்ட கேள்வி சற்று சிக்கலானது. அவர் கேட்டார். ஏன் பிராமண குடும்பத்தை இப்படி காட்ட வேண்டும்? என்பதுதான்.
எனக்குக் கூட சற்று மனவருத்தம்தான்.அந்த படத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் பிராமணர்கள் பெரிய அளவில் முணுமுணுத்தார்கள். நான் சொன்னேன் பிராமண குடுமபத்தினர் கல்விக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த படம் காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம் என்றேன். என்னுடைய பதிலில் எனக்கே திருப்தி இல்லை.
கதாநாயகியை ஒரு பிராமணப் பெண்ணாகக் காட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.தொடர்ந்து சொன்னார். தமிழ்நாட்டைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அந்த பெண்ணை வேறு சாதியைச் சேர்ந்தவளாகக் காட்டியிருந்தால் அந்த படம் தியேட்டர்களில் ஓடியிருக்காது என்றார்.
   என்னைப் பொறுத்தவரை பாலச்சந்தர் அந்த படத்தை தன் சமூகம் பற்றிய ஒரு சுயவிமர்சனமாகக் கருதியிருக்கலாம். அனால் அரங்கேற்றம் பலரையும் பல வழிகளில் சிந்திக்க வைத்தபடம் என்பது உண்மை
  அவள் ஒரு தொடர்கதை அவருடைய படைப்புகளில் முத்தானது என்பது என் கருத்து. ஒரு மத்தியவர்க்க குடும்பப்பெண் படும் வேதனை ,அவளுடைய ஆளுமை அந்த பெண்ணீண் தன்னம்பிக்கை இவையெல்லாவற்றையும் படம் பார்த்தவர்களை சிலிர்க்க வைக்கும் முறையில் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர்.
    தி.ஜானகிராமனுடைய மோகமுள் நாவலைப் படித்த அனுபவம் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. கதை அம்சங்களில் இல்லையென்றாலும் மோகமுள் நாவலின் கதாநாயகியும் (யமுனா )
அவள் ஒரு தொடர்கதை  படத்தின் கதாநாயகியும் பல அம்சங்களில் ஒத்த குணமுடையவர்களென்று சில சமயங்களில் நான் நினைத்ததுண்டு. ஒப்புமை காட்டும் என் முறையை மற்றவர்கள் ஏற்காமல் போகலாம்
. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்
     தி.ஜானகிராமன் நாவல் படைப்புகளில் மோக முள் ஒரு சிகரம். மோகமுள் நாவலில் தன்னுடைய படைப்புத் திறனில் சிகரம்
தொட்டவர் ஜானகிராமன்.
   அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தன் படைப்புத் திறனில் சிகரம் தொட்டவர் பாலச்சந்தர் என்று நிச்சயமாகக் கூறுவேன். .  
 அவருடைய ஆன்மா சாந்தி பெற அஞ்சலி. செய்வோம்
                                  - மு.கோபாலகிருஷ்ணன்



Sunday, December 07, 2014

மழலை மொழிகள்


சில சமயம் குழந்தைகளின் பதில் எதிர் பார்க்காததும் சாமர்த்தியமானதும் ஆக இருக்கும்.
எல்லா குழந்தைகளுமே  அறிவு ஜீவி ஆக இருப்பது உண்மை. ஆனால் நாம் தான் உணருவது இல்லை.
முக்கியமாக நம்முடைய உணர்வின் வெளிப்பாட்டை தெரிந்து தான் அதனை மேற்கொண்டு தொடரலாமா இல்லையா என்று பரீட்சிக்கிறார்கள்.  நாம்தான் அவர்களின் அளவு கோல். அவர்களின் வளர்ச்சி நம் கையில் தான் உள்ளது. எத்தனையோ பெற்றோர்கள் அதனை புரிந்து குழந்தைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த குழந்தைகள் நன்றாக இருப்பதையும் கண் கூடாக பார்த்து உள்ளேன்.

என் நண்பரின் குழந்தை என்னிடம் மிக அன்புடன் பழகும். ஏனென்றால் நான் நிறைய கதை சொல்லுவேன். ஒரு சமயம் அவர் வீட்டிற்கு சென்ற சமயம், காக்காவும் வடையும்  கதையை கூறினேன். கதை முடிந்ததும் என்ன தெரிந்து கொண்டாய்  என்று  கேட்டது தான் தாமதம். பொய் புகழ்ச்சி , திருடுதல்  பற்றி ஏதாவது சொல்லும் என்று பார்த்தால் அது சொன்ன பதில் என்னை மௌனமாக்கியது.
குழந்தை சொன்ன பதில் " சாப்பிடும் போது பேசக் கூடாது"  என்பது தான்.
உடனே அதன் அம்மாவை பார்த்தேன். அவர்களும் என்னைப் போலவே திகைத்து நின்றார்கள்.

அடுத்த சமயம் அதே குழந்தையிடம்  "கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது என்று கேட்டேன்". அதற்க்கு அதன் பதில் என்னவாக இருக்கும் என்று கொஞ்சம் யூகியுங்கள்.

வேதாந்தி

Sunday, November 30, 2014

நாட்டைக் குலுக்கிய தீர்ப்பு பகுதி 2

சென்ற செப்டெம்பர் மாதம் 27 ம் தேதி பெங்களுரு சிறப்பு நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு பற்றி காரசாரமான விவாதங்களும், பரபரப்பான சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன. திரும்பவும் தொடர்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு.
      ஆனால் எந்த பின்னணியில் இந்த தீர்ப்பு வந்தது என்பதை கவனத்தில் கொண்டால்தான், படித்த மக்கள்,நாட்டின் பொதுவாழ்வு, மற்றும் நாட்டின் ஜனநாயக அரசியல் அமைப்பின் பாதுகாப்பு பற்றி அக்கறை கொண்டவர்கள் அறிந்து அதை கவனத்தில் கொண்டால்தான் நாட்டுக்கு நல்லது. அதனால் இந்த வழக்கு தொடர்பான பல ருசிகர சம்பவங்களை, தகவல்களை காலம் கடந்தாவது எழுத வேண்டியது அவசியமாகிவிட்டது.
 இந்த வழக்கு 1996 முதல் தொடங்கி 18 ஆண்டுகள் நடைபெற்றது. 200 முறை ஒத்திவைக்கப்பட்டது. 130 முறை குற்றம் சாட்டப்பட்டவர்கள் (ஜெயலலிதாவும் மற்ற 3 பேரும் ) நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து பல மனுக்கள் கொடுத்தார்கள். அந்த மனுக்கள்  மீது கொடுத்த தீர்ப்பை எதிர்த்து பலமுறை உயர்நீதி மன்றத்துக்கும் உச்ச நீதி மன்றத்துக்கும் போனார்கள்.
 பலநாட்களில் விசாரணைக்கு வராமல் வாய்தா கேட்டார்கள் சாதாரணமாக மற்ற வழக்குகளில் ஒப்புக் கொள்ளப்படாத காரணங்களூக்காக வழக்கை ஒத்தி வைக்கக் கோரி மனு கொடுத்தார்கள். ஆஙகிலம் தெரியாது ஆகையால் சில ஆவணங்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்கள். தமிழில் மொழி பெயர்க்க வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை பணிக்கு அமர்த்தியதில் இடஒதுக்கீடுக் கொள்கை பின்பற்றப்படவில்லை என்று புகார் கூறி ஆட்சேபனை மனு கொடுத்தார்கள்.
நீதிமன்றத்துக்கு வராமல் வாய்தாவும் கேட்காமல் பல நாட்கள் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒரு நீதிபதி அழாத குறையாக சொல்லியிருக்கிறார். இந்த வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆறு மாத காலமாக எந்த விசாரணையும் நடத்த முடியவில்லை. நான் கடந்த ஆறு மாத காலமாக நீதி மன்றத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.தனிச் சிறையில் தண்டனை அனுபவிப்பது போல் உணருகிறேன் என்று கூறி அந்த நீதிபதி புலம்பியிருக்கிறார்.
   பத்து நீதிபதிகள் மாறியிருக்கிறார்கள். வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. 64 சாட்சிகள் முன்னால் சொன்ன விவரங்களை மாற்றி பேசினார்கள். அவர்களை எந்த குறுக்கு விசாரணையும் இல்லாமல் அவர்கள் கூறியது ஏற்றுக் கொள்ளப்பட்டது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்கப்பட்டார்கள் ஜெயலலிதா சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் சிலர் அரசாங்க வழக்கறி ஞர்களாக நியமிக்கப்பட்டனர்  சிலருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைத்தது.
. ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்ய்பட்டார்.நீதிபதி வேறு மாநிலத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடிப்போனார். கஞ்சா கடத்தல் வழக்கு கைவிடப்பட்டது.
   கர்நாடக அரசாங்கம் நியமித்த அரசாங்க வழக்கறிஞர் ஆச்சார்யா மீது நிர்ப்பந்தம் கொண்டு வந்து அவரை வழக்கை விட்டுவிலகச் செய்ய முயற்சி நடந்தது. மாநில முதல் அமைச்சர் எடியூரப்பாவும் அவருக்குப் பின் பதவிக்கு வந்த சதானந்த கொடாவும் ஆச்சர்யாவை பதவியிலிருந்து மாற்ற முயற்சி செய்தார்கள். பலிக்கவில்லை. இனம் இனத்தோடு சேரும் என்ற பழமொழி இங்கே நினைவுக்கு வரும்.
கடைசியாக வழக்கறிஞர் ஆச்சார்யாவே சலித்துப்போய் பதவியை ராஜினாமா செய்தார்.
  இந்த அனுபவத்தைப்பற்றி ஆச்சார்யா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் அந்த புத்தகத்தில் 15 பக்கங்களீல் பல விவரங்களை கூறியிருக்கிறார், ஜெயலலிதா வழக்கைப் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம் அதற்கு வாய்தா புராணம் என்று பெயர் வைக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்
   சொத்துக்கள் வாங்கிக் குவித்த விவரங்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவை
32 பினாமிக் கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அந்த 32 கம்பெனிகளீல் 9 கம்பெனிகள் ஒரே நாளில் பதிவு செய்யபட்டிருக்கிறது
இந்த நிறுவனங்கள் எந்த பொருளையும் உற்பத்தி செய்யவில்லை.எந்த பொருளையும் வாங்கவில்லை, விற்கவில்லை. ஆனால் அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் அவ்வப்போது பணம் செலுத்தப்பட்டது.ஜெயலலிதா பெயரில் ஏற்கெனவே இருந்த 12 வங்கிக் கணக்குகளோடு இந்த 32 நிறுவனங்களும் 52 கணக்குகளை தொடங்கின.
   இந்த நிறுவனங்கள் பெயரிலும் தனிப்பட்ட நபர்கள் (ஜெயலலிதா மற்ற மூவர் ) பெயரிலும் வங்கியில் பணம் செலுத்தப்பட்டது.29-11-1994 முதல்-     12-1-1995 முடிய 35 நாட்களில் 1 கோடி 20 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டி ருக்கிறது.
இந்த நிறுவனங்களைப் பதிவு செய்த அதிகாரி தன்னுடைய மேலதிகாரி உத்திரவின் பேரில் தன் வேலையைச் செய்ததாகக் கூறியிருக்கிறார் அவர்.  குறிப்பிட்ட அந்த மேலதிகாரி தற்போது பதவி உயர்வு பெற்று மாநில தேர்தல் ஆணையராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் பதிவு செய்யப்பட்ட எல்லா நிறுவனங்களிலும் இந்த 4 பேர் மட்டுமே பங்குதாரர்கள்.தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருடைய பங்குத் தொகை எவ்வளவு என்ற விவரங்கள் இல்லை.
 இந்த நிறுவனங்கள் தொடங்கிய காலத்திலிருந்து எந்த வருமான வரிக் கணக்கையும் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததில்லை. வருமானவரி கட்டியதில்லை.
 இந்த நிறுவனங்கள் பெயரிலும் நான்கு தனிநபர்கள் பெயரிலும் சென்னை நகரத்திலும் அதையொட்டிய பகுதிகளிலும் 300000 (மூன்று லட்சம் )சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகள்,வணிக  நிறுவனங்கள் நிலம் வாங்கப்பட்டது
மொத்தமாக மாநிலத்தின் பல பகுதிகளில் 3000 (மூவாயிரம் ) ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது, வாங்கும் போது எந்த சரியான வழிமுறைகளும்  அனுசரிக்கப்படவில்லை
   இந்த சொத்துக்களை பதிவு செய்ய ரிஜிஸ்டிரார் போயஸ் கார்டன் வீட்டுக்குப்போய் பதிவு செய்தார்.  ஸ்டாம்ப் சட்ட விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. வாங்குபவர்கள் குறிப்பிட்ட தொகைக்கே பதிவு செய்யப்பட்டது. 6 பத்திரங்களில் சொத்து வாங்கியவர் பெயர் கூட எழுதப்படவில்லை.  .
  900 ஏக்கர் கொண்ட கொடநாடு எஸ்டேட் 7.6 கோடிரூபாய்க்கு (ஏழு கோடி 60 லட்சம் )வாங்கப்பட்டதாக பத்திரம் பதிவாகியிருக்கிறது.
   கல்யாண வைபோகமே
தத்துப்பிள்ளை சுதாகரன் திருமணத்துக்கு ஏற்க்குறைய 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா வாக்குமூலத்தில் பெண் வீட்டார்தான் எல்லா செலவுகளையும் செய்ததாகக் கூறியிருக்கிறார்.
   ஆனால் பல செலவினங்களுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்ட காசோலைகள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெரும் மைதானத்தில் நடைபெற்ற அந்த திருமணத்துக்காக பெரியதும் மிகப் பெரியதுமான 5 பந்தல்கள் போடப்பட்டன. மிகப் பெரிய பந்தலின் பரப்பளவு மட்டும் 60000 சதுர அடி (அறுபதினாயிரம்) அடுத்த பந்தல்கள் 35000, 27000 இப்படி யாக கடைசி பந்தலின் பரப்பளவு 12000 சதுர அடி.நீர் கொண்டு செல்ல 10.கிலோவாட்ஜெனெரேட்டர்கள் பல பயன்படுத்தப்பட்டன. 1  கிலோமீட்டர் பாதைக்கு சாலை அமைக்கப்பட்டது. அரசு யந்திரம் பயன்படுத்தப்பட்டது. பல அரசாங்க ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்தார்கள்.
  நமது எம்.ஜி.ஆர்.பத்திரிகை சந்தாதாரர்கள் என்ற பெயரில் சொல்லப்பட்ட ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்தார்கள். ஆனால் 2 ஆண்டுகளூக்குப் பிறகு தொலைந்ததாகச் சொல்லப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். எல்லா ஆவணங்களும் பழையது என்று தோற்றம் கொடுப்பதற்காக புகையில் காட்டியும் கசங்கியும் இருந்த நிலையில் கொடுத்தார்கள்.ஆனால் அந்த ஆவணங்களில் காணப்பட்ட கையெழுத்துக்கள் பளிச்சென்று புதியதாக தோற்றம் கொடுத்தன. மேலோட்டமாகப் பார்க்கும்போதே செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்று தெரிந்துவிடும்.
  சிறுபிள்ளை கூட ஏமாறாத அளவுக்கு முரண்பாடாக இருந்த அந்த ஆவனங்களைக் கொண்டு நீதிமன்றத்தில் உள்ளவர்களை முட்டாளாக்கும் முயற்சி நடந்தேறியிருக்கிறது.
   இவ்வளவு விவரங்களும் 1300 பக்க தீர்ப்பில் உள்ள செய்திகள். கற்பனை அல்ல. காழ்ப்பு உணர்ச்சியில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல
 ஜெயலலிதா வீட்டிலிருந்து 23 கிலோ தங்கம்,இதர வெள்ளி, சாமான்கள் வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.இதை தவிர 42 நகைப் பெட்டிகளீல்  140 வகையான நகைகளூம் பல கைக்கடியாரங்களூம் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. இந்த நகைகள் வாங்கிய நேரம் காலம் செலவு செய்த தொகை அதற்கான வருவாய் பற்றி திருப்திகரமான பதில் கொடுக்க முடியவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு இல்லை, தெரியாது. நினைவு இல்லை என்ற  பதில்தான் வந்தது
    தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி திரும்பவும் வந்த பிறகு விசாரணை இங்கே சரியாக நடக்கவில்லை அரசாங்க வழக்கறிஞர்கள் குற்றவாளிகளோடு ஒத்துழைத்தார்கள் என்ற புகாரின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றியது. பல நிர்ப்பந்தங்களூக்கு இடையில் வழக்கு தொடர்ந்து நடந்து ஒரு வகையாக முடிவுக்கு வந்தது. உச்சநீதி மன்ற உத்திரவின்படி கர்நாடக அரசாங்கம் வழக்கை நடத்த தேவையான சகல உதவிகளையும் செய்தது
  அந்த பாவத்துக்காக இன்றைய கர்நாடக அரசாங்கத்தின் மீது பழி கூறி போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை செய்வது, தீர்ப்பு எழுதிய நீதிபதியை கொச்சைப்படுத்துவதெல்லாம் நடந்தேறியிருக்கிறது.அதோடு விடவில்லை.ஒரு போஸ்டரில் தமிழர்கள் படையெடுத்துவருவார்கள்,சிறையிலிருந்து அம்மாவை மீட்டு வருவார்கள் என்ற வாசகத்தை படிப்பதற்கு வேதனையாக இருக்கிறது. சிரிப்பும் வருகிற்து தேச ஒற்றுமையைச் சீர் குலைக்கும் சக்திகளை மக்கள் சரியாக இனம் கண்டு கொள்ள வேண்டும் .  இவ்வளவுக்கும் பிறகு  அம்மாவுக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்று யாராவது பூசி மெழுகி பேசி  பிரச்னையை திசை திருப்ப முயற்சித்தால் அவர்களுக்கு  ஒரே பதில்தான் சொல்லியாக வேண்டும். ஹிட்லர் கூட பெரும்பான்மை மக்கள் ஆதரவோடுதான் பதவியில் அமர்ந்தான்.  இதுதான் பதில்.
                                       - மு.கோபாலகிருஷ்ணன்.

Sunday, November 23, 2014

நாட்டைக் குலுக்கிய தீர்ப்பு - விளக்கம்

என்னுடைய செய்திக்கட்டுரைக்கு மறுமொழியாக ஒரு மறுப்புக் கட்டுரையே எழுதித் தள்ளிவிட்டார் நண்பர் முரளி. சோ பற்றிய என்னுடைய கருத்துதான் அவரை இப்படி வேகமாக எழுத வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
    நான் சொன்ன செய்தி தேர்தல் நேரத்தில் பல கட்சியினரால் பேசப்பட்டசெய்திதான். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி கருத்தரங்கத்தில்  கூட ஒரு பேச்சாளர் சோ பற்றிய இந்த செய்தியைக் குறிப்பிட்டுப் பேசினார். அவர் எந்த ஊடகத்தின் வழி இந்த செய்தியை மறுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. நான் துக்ளக் பத்திரிகையின் வாசகன் அல்ல…நண்பர் முரளி எழுதிய செய்தி உண்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
 அடுத்தபடியாக தமிழ்நாட்டில் மட்டுமன்றி எல்லா மாநிலங்களிலும் பிற மாநிலத்தினர் மீது வெறுப்பு இருப்பதாக அவர் கூறியிருப்பது சரியென்று எனக்குத் தோன்றவில்லை. இரு மாநிலத்தையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை கிளம்பினால், அதையொட்டி சில நாட்கள் கிளர்ச்சிகள் இருக்கலாம். அடுத்த மாநிலத்தவரைப் பற்றி அவதூறாகப் பேசலாம். ஆனால் அது நிரந்தரமான கருத்தாக சதாரண மக்களீடம் நிலை பெறுவதில்லை.
சமீபத்திய ஆந்திரா தெலிங்கானா பிரிவினைக்குப் பிறகு அரசியல்வாதிகள் பேச்சு இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையை நினைவுக்குக் கொண்டு வந்தது. இந்த நிலை சமீப காலத்தில் எல்லா மாநிலங்களூக்கும் பரவி வருகிறது என்றுதான் குறிப்பிட்டேன்.
.   தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள்தான் மொழி அடிப்படையில் அரசியல் நடத்துகிறார்கள். ஒரு வகையான தமிழ்ப் பேரின வாதத்தை தூண்டி விட்டு அரசியலில் குளிர் காய்ந்து  கொண்டிருக்கிறார்கள். ஈழப்பிரச்னை, காவிரிப் பிரச்னை, நதிநீர்ப் பங்கிட்டுப் பிரச்னை இவையெல்லாம் இந்த கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுகிறது. இது திராவிட இயக்கம் வளர்த்து விட்ட வியாதி.
 கர்நாடகாவை பொறுத்தவரையில் அந்தக் குற்றச்சாட்டைச் சொல்ல முடியாது. மற்ற மொழியினரை கீழானவராக நினைக்கும் பலவீனம் அங்கே இல்லை. பெங்களுரு நகரத்தில் 30 சதவிகித மக்கள் கன்னடம் அல்லாத மொழி பேசும் மக்கள் தமிழ், தெலுங்கு ஹிந்தி மொழி பேசுவோர் என்பது உண்மை. என்னுடைய உத்தியோக வாழ்க்கையில் 14 ஆண்டு காலம் கர்நாடகாவில் வாழ்ந்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். இந்த மாநிலத்திற்கு அந்நியமானவன் என்று நான் நினைக்கும்படி எந்த கன்னட மொழிக்காரனும் என்னிடம் நடந்து கொள்ளவில்லை. அந்த வாழ்க்கையை நினைவில் கொள்ளூம் வகையில் என்னுடைய வீட்டுக்கு ஹுப்ளீ ஹவுஸ்  (Hubli House ) என்று பெயர் வைத்தேன். ஆகையால் இது தொடர்பான முரளீயின் கருத்தை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். அலைபோல எழுந்து ஓய்ந்துவிடும் அரசியல் சம்பவங்கள் ஏற்படுத்தும் தற்காலிகமான நிலையையும் அதையொட்டிய பேச்சுக்களையும் கணக்கில் கொள்ள வேண்டாம்
 பிரச்னையை திசை திருப்பும் வகையில் பதில் அளித்தவர்களைப் பற்றித்தான் நான் கேலி செய்திருக்கிறேன். நடுநிலையாகப் பேசுகிறேன் என்று சொல்லிக் கொண்டு தன்னுடைய அரசியல் சார்பை நேரடியாகச் சொல்ல வெட்கப்படுபவர்கள் மீது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  வழக்கு தீர்ப்பு பற்றி என்னுடைய கட்டுரை பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. முரளியும் உடனடியாக மனமுவந்து பாராட்டியிருக்கிறார். நாகுவுக்கு  நன்றி. பட்டுக்கோட்டையார் பாடலை சரியான நேரத்தில் பயன்படுத்தியிருக்கிறார். வேதாந்திக்கும் நன்றி.
  நேரம் கிடைத்தால் இந்த வழக்கு பற்றி பல சுவாரசியமான தகவல்கள் தொடரும் அரசியல்வாதிகள் வழக்கு என்றால் இந்த நாட்டில் நீதிமன்றங்களும் நீதிபதிகளூம் படும் பாட்டை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
                                         - மு.கோபாலகிருஷ்ணன்.