Sunday, December 28, 2014

இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு ஒரு புகழ் அஞ்சலி




தமிழ்த்திரை உலகின் மிகப்பெரிய இயக்குனராக வாழ்ந்த கே.பாலசந்தர் சென்ற செவ்வாய்க்கிழமை காலமானார். அவருடைய கலை உலகச் சாதனை சில சொற்களில் அடக்கமுடியாத பெருமை கொண்டது.
    60 களின் தொடக்கத்தில் பாலச்சந்தர் நாடகத்துறையில் தன் பயணத்தை மேற்கொண்டார் நான் 60 களில் சென்னையில் இருந்தபோது அவருடைய ஒரு நாடகத்தை பார்த்திருக்கிறேன். அறுபதுகளில் தமிழ்நாடகத்துறை அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை.சரிவு தொடங்கி பல வருடங்களாகிவிட்டது.அறுபதுகளில் அவர் நாடகம் நடத்திய அதே காலத்தில்தான் சோ ராமசாமி போன்றவர்களூம் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். வெறும் துணுக்குத் தோரணமாக வசனங்கள் கொண்ட நாடகங்கள்தான் பெரும்பாலும் வளர்ந்து கொண்டிருந்தது. பாலச்சந்தரின் நாடகத்தை பார்த்த பிறகு  திரும்பவும் தமிழ் நாடகம் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை எனக்குத் தோன்றியது.  
      பாலசந்தர் தன்னுடைய நாடகத்துக்கு பெரிய செட்டுகள் காட்சி ஜோடனைகள் எதையும் செய்யவில்லை.  நகைச்சுவை அளவு மிகாமல் சிக்கனமான சொற்களைகொண்டு  கதாபாத்திரங்களை பேசச் செய்தார். சிந்தனைக்குரிய செய்திகளோடு மேடை ஏறிய அவருடைய சமூக நாடகங்கள் ரசிகர்களுக்கு திருப்தியளித்தது ஓரளவுக்கு நம்பிக்கை பிறந்தது.
நான் பிற்காலத்தில் கர்நாடகாவில் வாழ்ந்த போது பல கன்னட மராத்தி நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அங்கே இன்றும் நாடகம் நல்ல முறையில்  இருப்பதை நான் அறிவேன்.ஆனால் துரதிருஷ்டவசமாக     இன்று தமிழ்நாட்டில் நாடகம் அநேகமாக இல்லை.
    சமீபத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் பெரும் செலவு செய்து நடத்திய நாடகத்தைப் பார்க்க மன்றத்தில் பாதி அளவு கூட ரசிகர்கள் நிரம்பவில்லை. இத்தனைக்கும் அனுமதி இலவசம். பலநாட்களுக்குப் பிறகு நண்பரைப் பார்த்து என்ன  செலவாகியது என்று கேட்டேன் பதினெட்டாயிரம் ரூபாய் என்றார். இனிமேல் நாடகமே போடாதீர்கள்      `
என்றேன்.அடுத்த ஆறு மாதத்தில் இன்னொரு நாடகம் போட்டார். அவர்களையெல்லாம் திருத்தமுடியாது. நான் நாடகத்துக்குப் போகவில்லை.
நல்ல வேளையாக பாலச்சந்தர் திரைப் படத்துறைக்குப் போனார். எம்.ஜி.ஆர் தான் அவரை சினிமாவுக்கு அழைத்தார். அவருடைய படத்துக்கு முதல்முதலாக  வசனம் எழுதினார். ஆனால் அவர் எம்.ஜி.ஆரை வைத்தோ அல்லது அன்று கொடி கட்டிப் பறந்த சிவாஜியை வைத்தோ ஒரு படம் கூட எடுக்க வில்லை. பிரபல நடிகர்களை வைத்து படம் எடுப்பதில் உள்ள பிரச்னைகளை அவர் அறிந்திருக்க வேண்டும். அது அவருக்கு தேவையும் இல்லை.
   நடிகர்கள் யார் ,கதாநாயகர் யார் என்று தெரிந்து படத்துக்கு போன ரசிகர்கள் நிறைந்த நாட்களில் இயக்குநர் யார் என்று விசாரித்து  படத்துக்கு ரசிகர்கள் போகும் நிலையை பாலசந்தர் உறுதிப்படுத்தினார்
அந்த நிலையை துவக்கி வைத்த பெருமை இயக்குநர் ஸ்ரீதரைத்தான்
சேரவேண்டும். கல்யாணப்பரிசு  போன்ற படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநரின் கைவண்ணத்தை ரசிகர்கள் உணரமுடிந்தது.  அந்த நிலையை தமிழ்த்திரை உலகத்தில் உறுதிப்படுத்தியவர் பாலச்சந்தர். அதனால்தான் அவர் தன்னம்பிக்கையோடு புதுமுகங்களை அறிமுகப்படுத்த முடிந்தது.ஏறக்குறைய 50 புதுமுகங்களை  பாலசந்தர் திரைஉலகத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்ற செய்தி இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அவர்களில் பலர் சாதனை.   புரிந்திருக்கிறார்கள். கமலஹாசன் ரஜனிகாந்த் விவேக் போன்றவர்கள். குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள். பட்டியல் மிக நீளம்.
    பாலசந்தர் ஒருபோதும் கதைக்களத்துக்காக சென்னை நகரத்தை விட்டு நகர்ந்ததில்லை.கிராமப்புறக் கதைகளை அவர் தொடவே இல்லை.
திரைப்படத்த்றையில் பாலசந்தர் படங்கள் கிராமப்புற தியேட்டர்களில் போணி ஆகாது என்ற நம்பிக்கை இருந்தது. அது உண்மைதான்.,.
   ஆனால் அதை அவருடைய பலவீனமாக யாரும் பார்க்கவில்லை. அந்த அளவுக்கு நகர்ப்புற மக்கள் அவர் படத்துக்கு ரசிகர்களாக மாறினார்கள் நகரத்தில் வாழும் மத்தியதர வர்க்க ரசிகன் அவருடைய படத்தைப்பார்க்கும் போது தானும் தன் குடும்பமும் சந்தித்த பிரச்னைகளை அந்த படங்களில் பார்த்தான். ரசித்தான். அழுதான். சிரித்தான்
   அவருடைய இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் நீர்க்குமிழி. நாகேஷ் படம் பார்த்தவர்களை அழ வைத்துவிட்டார்.முழுக்க முழுக்க மருத்துவ மனையில் எடுக்கப்பட்ட படம் ஒரெ செட். அதிகச் செலவு இல்லை
  உள்ளே  சுளை எதுவும் இல்லாத ஆரஞ்சு பழத்தை  நாகேஷ் கொடுக்க அதை வாங்கியவர் உள்ளே ஒன்றும் இல்லையே என்று சொல்ல நாகேஷ் நானும் அப்படித்தான் என் உள்ளே ஒன்னும் இல்லை. என்பார். கொஞசம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கும் அந்த கதாநாயகனின் நகைச்சுவையை கேட்ட ரசிகனுக்கு சிரிப்பும் வரும் அழுகையும் வரும்
    நகர்ப்புறத்து மத்யதரவர்க்க பிரச்னைகளைக் கருவாகக் கொண்ட நாவல்கள் தமிழ் நாவல் இலக்கியத்தை ஆக்கிரமித்துக் கொண்ட காலம் ஒன்று உண்டு.அதே போல் நகரத்து மத்யதர வர்க்கம் சினிமாவுக்கு குடும்பத்தோடு போன காலத்தில் படத்துறையில் பாலசந்தர் செயல்பட்டார். அவரும் அந்த பகுதியிலிருந்து வந்தவர். .   
    அவருடைய அரங்கேற்றம் படத்தை என்னுடைய கன்னட நண்பர்  ஒருவருடன் பார்த்தேன் நான் தான் அவரை அழைத்துச் சென்றேன்.  என்னைவிட வயதில் மூத்தவர். எனக்கு பல வகைகளில் அவர் குரு,. நான் அவரை குருஜி என்றுதான் அழைப்பேன். படத்தை அவ்ர் ரசித்துப் பார்த்தார் அனால் படத்தைப் பார்த்துவிட்டு அவர் கேட்ட கேள்வி சற்று சிக்கலானது. அவர் கேட்டார். ஏன் பிராமண குடும்பத்தை இப்படி காட்ட வேண்டும்? என்பதுதான்.
எனக்குக் கூட சற்று மனவருத்தம்தான்.அந்த படத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் பிராமணர்கள் பெரிய அளவில் முணுமுணுத்தார்கள். நான் சொன்னேன் பிராமண குடுமபத்தினர் கல்விக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த படம் காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம் என்றேன். என்னுடைய பதிலில் எனக்கே திருப்தி இல்லை.
கதாநாயகியை ஒரு பிராமணப் பெண்ணாகக் காட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர்.தொடர்ந்து சொன்னார். தமிழ்நாட்டைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அந்த பெண்ணை வேறு சாதியைச் சேர்ந்தவளாகக் காட்டியிருந்தால் அந்த படம் தியேட்டர்களில் ஓடியிருக்காது என்றார்.
   என்னைப் பொறுத்தவரை பாலச்சந்தர் அந்த படத்தை தன் சமூகம் பற்றிய ஒரு சுயவிமர்சனமாகக் கருதியிருக்கலாம். அனால் அரங்கேற்றம் பலரையும் பல வழிகளில் சிந்திக்க வைத்தபடம் என்பது உண்மை
  அவள் ஒரு தொடர்கதை அவருடைய படைப்புகளில் முத்தானது என்பது என் கருத்து. ஒரு மத்தியவர்க்க குடும்பப்பெண் படும் வேதனை ,அவளுடைய ஆளுமை அந்த பெண்ணீண் தன்னம்பிக்கை இவையெல்லாவற்றையும் படம் பார்த்தவர்களை சிலிர்க்க வைக்கும் முறையில் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர்.
    தி.ஜானகிராமனுடைய மோகமுள் நாவலைப் படித்த அனுபவம் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. கதை அம்சங்களில் இல்லையென்றாலும் மோகமுள் நாவலின் கதாநாயகியும் (யமுனா )
அவள் ஒரு தொடர்கதை  படத்தின் கதாநாயகியும் பல அம்சங்களில் ஒத்த குணமுடையவர்களென்று சில சமயங்களில் நான் நினைத்ததுண்டு. ஒப்புமை காட்டும் என் முறையை மற்றவர்கள் ஏற்காமல் போகலாம்
. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்
     தி.ஜானகிராமன் நாவல் படைப்புகளில் மோக முள் ஒரு சிகரம். மோகமுள் நாவலில் தன்னுடைய படைப்புத் திறனில் சிகரம்
தொட்டவர் ஜானகிராமன்.
   அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தன் படைப்புத் திறனில் சிகரம் தொட்டவர் பாலச்சந்தர் என்று நிச்சயமாகக் கூறுவேன். .  
 அவருடைய ஆன்மா சாந்தி பெற அஞ்சலி. செய்வோம்
                                  - மு.கோபாலகிருஷ்ணன்



1 comment:

  1. மன்னிக்கவும்..

    போலித்தனமான பெண்ணியம், கடுமையான இட ஒதுக்கீடு எதிர்ப்பு போன்ற சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் இவர் இரு குறிப்பிடத் தகுந்த திரை இயக்குனர் அவ்வளவே!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!