காலம் கெட்ட காலம்
காலம்
என்றால் என்ன? காலம் எப்படி ஏற்பட்டது? இந்த பிரபஞ்சம் தோன்றியது எப்பொழுது? பிரபஞ்சம்
தோன்றியபோது காலமும் உடன் தோன்றியதா? பூமியில் காலம் உள்ளது போல மற்ற கிரகங்களிலும்
காலம் உண்டா? மற்ற கிரகங்களிலும் காலத்தை இதே அளவை முறை கொண்டு அளக்க முடியுமா? முடியும்
என்றால் எப்படி காலம் கணக்கிடப்படுகிறது? இதுபோன்று கேள்விகளை அடுக்கிக் கொண்டேபோனால்
படிப்பவர்களுக்கு குழப்பம் தான் வரும் நமக்கு ஏன் இந்த வம்பு என்று அடுத்த பக்கத்துக்கு
புரட்டி விடுவார்கள்.
நம் இந்து மதம் பூமியின் கால அளவையும் இதர கிரகங்களின்
கால அளவையும் வெவ்வேறானவை என்று கூறுகிறது.
இவையெல்லாம் வேதாந்திகளின் பிரச்னைகள். கேள்விகள்
விஞ்ஞானிகளும் இந்த காலத்தைப் பற்றி இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு கேள்வி
கேட்டிருக்கிறார். அந்த கேள்வி இதுதான்.
நாம் கடந்த
காலத்தை நினைவில் வைத்திருக்கிறோம். நிகழ்காலத்தை நினைவில் வைத்திருக்கிறோம். எதிர்காலத்தை
நினைவில் வைத்திருக்கிறோமா?
சிந்தித்துப்
பார்த்தால் தலை சுற்றும். குழப்பம் தான் மிஞ்சும்.
கடந்த காலத்தைப் பற்றிய நினைவும் இல்லாமல் போனால்
நல்லது என்று சில சமயம் மனிதன் நினைப்பதுண்டு ஆனால் கடந்த காலத்தை மறக்க முடிவதில்லை
மறக்க முயன்றாலும் சிலர் மறக்க விடுவது இல்லை.
நம் தமிழ்நாட்டை
எடுத்துக் கொள்வோம் ஏன் இந்தியாவையே எடுத்துக் கொள்வோம் கடந்த காலத்தை மறக்க யாராவது
தயாரா? அல்லது கடந்த காலத்தை மக்கள் மறக்க யாராவது அனுமதிப்பார்களா அரசியல்வாதிகள்,
இலக்கியவாதிகள், வரலாற்றாசிரியர்கள், பழம்பெருமை பேசியே காலத்தைக் கழிக்கும் பத்தாம்
பசலிப் பேர்வழிகள் இவர்களுடைய பிழைப்பே கடந்த காலத்தை நினைவு படுத்துவதில் தான் இருக்கிறது.
அதனால்
நாடு என்ன பாடு படுகிறது? மக்கள் என்ன பாடு படுகிறார்கள் தமிழ் பழமையான மொழியா? அல்லது
வடமொழி பழமையான மொழியா? பட்டிமன்றத் தலைப்பு.
தமிழ்நாட்டு எல்லக்குள் யாராவது வடமொழிதான் பழமையான
மொழி என்று கூறி விட்டால் அவன் கதி அதோ கதிதான். தமிழ்த் துரோகி என்று முத்திரை குத்தி
விடுவார்கள். தமிழ்நாட்டுக்கு வெளியே யாராவது தமிழ்தான் காலத்தால் மூத்த மொழி என்று
சொன்னால், அவன் இந்து மத விரோதி ஆகிவிடுவான்.
கடவுள்
உலகத்தைப் படைத்தவுடன் மனிதனைப் படைத்தான். மனிதன் பேச வடமொழியைப் படைத்தான். வடமொழிதான்
தேவ பாஷை என்று சொன்னால் தான் அவனுடைய தலை தப்பும் .
தேசத்துரோகி,
இந்துமதத் துரோகி, வெளிநாட்டு ஏஜண்ட் என்ற அர்ச்சனைகளிலிருந்து தப்பலாம்
எந்த மொழி
மூத்த மொழி, எந்த நூல் காலத்தால் முந்தைய நூல் எந்த இனம் மனித குலத்தின் முதல் இனம்
எந்த மதம் முதலில் தோன்றியது இப்படி எல்லா கேள்விகளிலும் அதற்கான பதில்களிலும் அடிப்படையான
அம்சம் காலம் தானே?
வேதங்கள்தான்
இந்தியாவில் தோன்றிய முதல் நூல் என்று சொல்கிறார்கள். அந்த வேதம் கி. மு. 1500 வாக்கில்
தோன்றியதாகவும் ஆகையால் 3500 ஆண்டுகள் பழமையானவை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
உடனே ஒரு எதிர்ப்புக் குரல் ஆவேசமாக ஒலிக்கிறது
வேதங்களுக்குக்
காலம் கிடையாது. எல்லா வேதங்களும் இறைவனால் கொடுக்கப்பட்டவை. நான்கு வேதங்களும் கி.
மு. 8000 ஆண்டு வாக்கில் எழுத்தில் வடிக்கப்பட்டன. என்று அந்த ஆவேசக்குரல் ஒலிக்கிறது.
இவர்கள்
அழுத்தமான இந்து மத நம்பிக்கையாளர்கள். மற்றவர்களுக்கு
நம்பிக்கை
இல்லையென்று பொருள் அல்ல.
நம்முடைய சமயம் கடவுளிடமிருந்து தொடங்கியது என்பதில்
இவர்களுக்கு அழுத்தமான நம்பிக்கை. எல்லா மதத் தலைவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள்
காலக் கணக்கெல்லாம் மனிதர்களுக்குத்தான். இறைவனுக்கும், இறைவன் அருளிய வேதங்களுக்கும்
காலவரயறை செய்ய மனிதனுக்கு உரிமை இல்லை. என்கிறார்கள்.
வரலாற்றை விஞ்ஞான பூர்வமாகப் பார்ப்பது என்ற பெயரால்
ஆங்கிலம் படித்தவர்கள், வேத காலத்தை பின் தள்ளி போடுகிறார்கள். அவர்கள் இந்துமத விரோதிகள்,
என்ற கூச்சல் இப்பொழுது நாடெங்கும் ஒலிக்கிறது. சமீப காலத்தில் இந்த கூச்சல் அதிகமாகிக்
கொண்டிருக்கிறது, .
இது போன்று
வரலாறு எழுதும் ஆசிரியர்கள், எழுத்தாளர்களுடைய புத்தகங்களை, தீயிட்டுக் கொளுத்த வேண்டும்
என்று ஒரு தலைவர் கூறிவிட்டார். இந்த வரலாற்றாசிரியர்கள், எல்லோரும் வாலைச் சுருட்டிக்
கொண்டு மூலையில் உட்கார வேண்டிய காலம் வந்துவிட்டது, .
வேதம்
போன்ற நூல்களின் காலத்தை நிர்ணயம் செய்வதில் வெறும் வரலாறு மட்டும் இல்லை. அங்கே மதம்
இருக்கிறது. அதனால் தான் தன் கருத்தை உரத்த குரலில் பேச யாரும் அனுமதிக்கப்படுவதில்லை
முஸ்லீம் மன்னன் படையெடுத்து வந்து சோமநாதபுரம் கோயிலை
சூறையாடினான் என்பது அடிக்கடி பேசப்படும் வரலாற்றுச் செய்தி
ஒரு முறை
அல்ல, பல மு/றை அந்த முஸ்லீம் மன்னன் படையெடுத்துக் கோயிலை அழித்தான் என்ற கதை கலந்த
வரலாறு. பள்ளிப் பிள்ளைகளுக்கு போதிக்கப்படுகிறது. பலமுறை என்று சொன்னால் மட்டும் போதுமா?
அழிக்கப்பட்ட கோயில் எவ்வளவு முக்கியமானது?இந்த தேச மக்களுக்கு பழங்கால கோயில் என்றால்
முக்கியத்வம் கூடுதலாகத் தெரியும்.
ஆகையால் சோமநாதபுரம் கோயில் 30000 ஆண்டுகள் பழமையான
கோயில்
அவ்வளவு பழமையான கோயிலை இடித்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்.
வரலாற்றாசிரியர்கள் ஆதாரங்களுடனும் தர்க்கரீதியாகவும்
இந்தியாவில் கோயில்கள் கட்டப்பட்டதெல்லாம் புத்தர் காலத்துக்குப் பிறகுதான் என்று கூறுகிறார்கள்
புத்தர் காலம் வரை இந்து சமய வழிபாட்டு முறைகளில் யாகங்களும், ஹோமங்களும் மட்டுமே முக்கியத்வம்
பெற்றிருந்தன. என்று கூறுகிறார்கள்>
. காலத்தைக்
கூடுதலாகச் சொல்வதன் மூலம் கோயிலின் புனிதம் அதிகமாகும் என்று நம்புகிறார்கள்
தமிழ் இலக்கியத்தில் உள்ள சில முக்கிய படைப்புகள்
பற்றியும் தமிழ்ப்புலவர்கள் வாழ்ந்த காலம் பற்றியும் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.
சென்ற தலைமுறையில் வாழ்ந்த பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை என்/ற தமிழ் அறிஞர் பல
நூல்களின் கால ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தமிழ் இலக்கிய் வரலாறு என்ற நூலை ஆங்கிலத்தில்
எழுதியிருக்கிறார். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக தமிழுக்குக் கலைக் களஞ்சியம் உருவானது
பிள்ளை அவர்களுடைய சீரிய முயற்சியில்தான். பெரும்பான்மையான மக்கள் பேசும் இந்தி மொழிக்குக்
கூட இன்று வரை கலைக் களஞ்சியம் தயாராகவில்லை. இந்த நிலையில் பிள்ளையவர்கள் தமிழ் மொழிக்குக்
கலைக்களஞ்சியம் தயாரித்தார்.
ஆனால் தமிழ்நாட்டில் பல தமிழ் விரும்பிகள் பிள்ளையை
தமிழ் இனத்துரோகி என்று கூசாமல் கூறுவார்கள் இன்றுவரை பல இலக்கிய மேடைகளில் அவர் மீது
வசைமாரி பொழிந்து கொண்டிருக்கிறது
காரணம்
பிள்ளை தொல்காப்பியத்தை கி. பி. முதல் நூற்றாண்டு நூல் என்று கணக்கிட்டிருக்கிறார்.
திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களையும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தையது
என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்
அவர் தெரிவித்திருக்கும் ஆதாரங்களைப் பற்றி பேசாமல்
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வசை பாடும் தமிழ் அறிஞர்களை இன்றும் பார்க்கலாம் ஏனென்றால்
அவர்கள் கூற்றுப்படி தொல்காப்பியம் தான் தமிழின் முதல் நூல். திருவள்ளுவர் கி. மு.
முதல் நூற்றாண்டு பிறந்தார். ஏசுநாதருக்கு முன் வாழ்ந்தார். தொல்காப்பியர் 7000ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்தவர் என்று சொல்லும் தமிழ் அறிஞர்களையும் பார்க்கலாம்.
இங்கே ஆராய்ந்து உண்மையைக் காண்பது என்ற நோக்கத்துக்கு
மேலாக ஓங்கி நிற்பது மொழிப்பற்று தான். பற்று அற்று சிந்தித்தால்தான் உண்மையை கண்டறிய
முடியும் என்பது ஆராய்ச்சிக்கான அடிப்படை விதி.
பல சந்தர்ப்பங்களில் ஏற்கெனவே அனுமானித்துக் கொண்ட
ஒரு விஷயத்துக்கு அல்லது தீர்மானித்த முடிவுக்கு நியாயம் கற்பிப்பதே ஆராய்ச்சி என்று
ஆகிவிட்டது, .
ராகவய்யங்கார் என்ற தமிழறிஞர் பல தமிழ்நூல்களை எழுதியிருக்கிறார்.
பல துறைகளில் ஆய்வுசெய்து எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றவர். இறை பக்தி மிகுந்த வைணவர்
நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித் துரைத் தேவருடைய ஆதரவில் தமிழ்த்தொண்டு செய்த
அறிஞர்.
அவர் ஆழ்வார்கள் காலநிலை என்ற ஒரு நூல் எழுதினார்.
அந்த நூலில் கி. பி. 4. ம் நூற்றாண்டு தொடங்கி வாழ்ந்த முதலாழ்வார்கள் ( பேயாழ்வார்,
பூதத்தாழ்வார் ஆகியோர்) மற்றும் பிற்காலங்களில் வாழ்ந்த ஆழ்வார்களின் காலம் பற்றியும்
எழுதியிருந்தார். திருமங்கையாழ்வார் கடைசியாக அவதரித்த ஆழ்வார் என்றும் கருத்து தெரிவித்தார்.
இந்த செய்திகள் அடங்கிய கட்டுரைகளை செந்தமிழ்ச் செல்வி என்ற பத்திரிகையில் தொடர்ந்து
எழுதியிருந்தார்
உடனே வைணவர்களிடமிருந்து
ஏகப்பட்ட எதிர்ப்பு தொடங்கியது. கூச்சலும் கண்டனமும் வந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார் என்ற வைணவ அறிஞர் தன்னுடைய திவ்யார்த்த தீபிகை
என்ற பத்திரிகையில் ராகவய்யங்காருடைய கருத்துக்களை மறுத்து எழுதத் தொடங்கினார். அய்யங்காரை
வைணவ சமயத் துரோகி என்று வசை பாடினார்
காரணம் அவர்கள் கூற்றுப்படி வைணவ ஆழ்வார்கள் அனைவரும்
தெய்வப் பிறவிகள் கோடான கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்கள் கேவலம் மனிதன் அறிந்த
காலக் கட்டுக்குள் அவர்களை அடக்க முயற்சிப்பது அறிவீனம் என்கிறார்கள்.
சைவ சமயம் வளர்த்த அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர்,
மாணீக்கவாசகர் ஆகிய சிவனடியார்களை நாம் அறிவோம்.
இந்த நால்வரில் திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர்
வாழ்ந்த காலம் பற்றி முரண்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.
தேவாரம் பாடிய மூவருக்குப் பின் மாணீக்கவாசகர் தோன்றி
சமயம் வளர்த்தார். என்பது பொதுவாக நிலவும் நம்பிக்கை. அனால் சில சைவ சமய அறிஞர்கள்
மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கின்றனர். மாணிக்கவாசகர் தேவாரம் பாடிய மூவருக்கும் முந்தைய
காலத்தவர் என்றும் அவர் புத்தர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல்
மாணிக்கவாசகர் புத்தரோடு வாதம் செய்து சைவ சமயத்தின் உயர்வை எடுத்துக் கூறி அவரை வாதத்தில்
வென்றார் என்றும் கூறுகிறார்கள்.
புத்தருடைய பிறப்பு, வாழ்வு, இறப்பு ஆகிய விவரங்கள்
ஒரளவு தெளிவாகவும் நம்பக்கூடிய வகையிலும் பதிவு செய்யப்பட்டிருகிக்கிறது அவர் கி. மு.
6 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புத்தர் இந்தியாவின் தென்பகுதிக்கு வந்ததாக எந்த வரலாற்றுக்
குறிப்புகளும் இல்லை.
ஆனால் சைவ சமய அறிஞர்கள் உணர்ச்சி வசப்பட்டு தங்களுடைய
நம்பிக்கையே உண்மை என்று வாதிடுகிறார்கள். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலையடிகளும்
இந்த கருத்தைத் தீவிரமாக வலியுறுத்துகிறார்.
பழமையானதெல்லாம் புனிதமானது என்ற குருட்டு நம்பிக்கையை
நாம் வளர்த்திருக்கிறோம். ஆராய்ச்சி என்ற பெயரில் இது போன்று எழுதிக் குவிப்பதில் மிஞ்சி
நிற்பது சைவ சமயப் பற்றுதான். உண்மையைக் கண்டறியும் நோக்கம் இல்லை
பழமையானதெல்லாம்
புனிதமானது என்ற மூடநம்பிக்கைக்கு மதச் சாயல் பூசப்படும்போது விபரீதங்கள் நடக்கும்
நிலை வரலாம்
. அதுதான்
அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. உண்மை நிலை என்னவென்றால் இந்தியாவில் பத்தாம் நூற்றாண்டுக்கு
முன்னர் வாழ்ந்த சமயத் தலைவர்கள், ஞானிகள், இலக்கியப் படைப்பாளிகள் அரசர்கள் வாழ்ந்த
காலம் பற்றி நம்பத் தகுந்த ஆவணங்கள். இல்லை
பல அரசர்களுடைய
பிறந்த ஆண்டு, வாழ்ந்த காலம் எதைப் பற்றியும் தெளிவான செய்திகள் இல்லை. இந்தியாவில்
வாழ்ந்த ஞானிகளில் தலையானவராக நாம் கருதும் ஆதிசங்கரர் வாழ்ந்த காலம் பற்றி கூட நம்மிடம்
ஆதார பூர்வமான செய்திகள் இல்லை.
நாடாண்ட
அரசர்கள் தங்களுடைய ஆட்சி ஆண்டைக் குறிப்பிட்டுத் தான் கல்வெட்டு, சாஸனம் ஆகியவ/ற்றை
படைத்தனர். குறிப்பிட்ட மன்னன் எந்த ஆண்டு பதவிக்கு வந்தான் என்பதை முதலில் தீர்மானித்த
பிறகுதான் அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஆண்டு பற்றி முடிவுக்கு வரமுடியும். இந்தியாவில்
ஆட்சி செய்த பல மன்னர்கள் தாங்கள் இட்ட ஆனையை தாமிரபத்திரம். கல்வெட்டுக்களில் முறையாக
ஆவணப்படுத்தவில்லை. வாய்மொழி உத்திரவு மூலம் மட்டுமே பல கட்டளைகள். காரியங்கள் நடைபெற்றன.
அதனால் நம்முடைய நாட்டு வரலாற்றில் பெரிய இடைவெளி இருக்கிறது
மொகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில்தான் எல்லா அரசாங்க
உத்திரவுகளும் நடவடிக்கைகளும் ஆவணப்படுத்தப்பட்டன. கிறிஸ்தவ சமயத்தை பரப்ப இந்தியாவுக்கு
வந்த பல பாதிரிமார்கள் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் வாழ்ந்த மக்கள் பற்றியும் அவர்கள்
சமூக வாழ்க்கை பற்றியும் நிறைய குறிப்புகளும் எழுதியிருக்கிறார்கள்.
அந்த குறிப்புகளும்
கடிதங்களும் பெரும்பாலும் அவர்களுடைய சொந்த நாட்டில் இருந்த தலைமை மதபோதகர்களுக்கு
எழுதபபட்டவை. அத்தகையகடிதங்கள், இன்றும் ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில்
உள்ள சமய நிறுவனங்களின் நூல் நிலையங்களில் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டு மக்களின் அன்றைய சமூக வாழ்க்கையைப் பற்றி
புரிந்து கொள்ள இந்த கடிதங்கள் பேருதவியாக இருந்தன
ஆகையால்
தெளிவான வரலாற்றை இந்தியாவின் எந்த பகுதிக்கும் எழுதுவது. சாத்தியமில்லாமல் போய்விட்டது.
கர்ணபரம்பரைக் கதைகளும், செவிவழிச் செய்திகளும் ஓரளவுக்கு உதவியாக இருந்தன.
ஒரே பகுதியில்
வாழும் பல்வேறு சாதியைச் சேர்ந்த மக்கள் மற்ற சாதியினரின் பழக்கவழக்கத்தை, திரித்தும்
இழிவு படுத்தியும் பேசுவதும் குறிப்புகள் எழுதுவதும் அந்த குறிப்புகளின் அடிப்படையில்
வரலாறு எழுதப்படுவதுமான துரதிருஷ்டம் நடந்திருக்கிறது
இந்த பலவீனத்தைப்
பயன்படுத்தி, பல வரலாற்றாசிரியர்கள் இந்திய, வரலாற்றை கட்டுக்கதைகளைக் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள்
பல அறிஞர்கள் கால ஆராய்ச்சி என்ற பெயரில் நூல்கள் எழுதி பணம் காண முடிந்தது.
எல்லாம் நம்முடைய போதாத காலம் என்பதைத் தவிர வேறு
என்ன சொல்லமுடியும்?
-
மு. கோபலகிருஷ்ணன்.