Thursday, January 14, 2010

இந்தியப் பயணம் - பகுதி - 2


என்னதான் வாரத்திற்கு ஒருமுறை அவர்கள் குரலைத் தொலைபேசியில் கேட்டாலும், சென்னையில் இறங்கி தாய் தந்தையரை நேரில் பார்க்கும் அந்த நேரம், அவர்கள் முகத்தில் வழியும் சந்தோஷம், வாஞ்சை எழுத்தில் வடிக்கமுடியாத ஒன்று.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் அப்பா அடித்த ஜோக் “சீக்கிரம் கதவை சாத்துடா கொசு வந்துடும்” அதை அவர் சொல்லி முடிக்கும் முன்பு எனக்கு முன்னால் ஒரு நூறு கொசு எல்லாம் பெரிய வண்டு சைசில் வீட்டிற்குள் இருந்தது. அவைகள் தங்கள் பாஷையில் “பெரிய கூட்டமா வந்துட்டாங்கப்பு, வாங்க வந்து ஒரு சாம்பிள் பார்க்கலாம்”னு பேசி வெச்ச மாதிரி சரமாதிரியாக கடிக்கத் துவங்க, நான் ஒரு ப்ரேக், குச்சுப்புடி, கராத்தே, களரி பயட் எல்லாம் கலந்து கட்டி ஆடத்துவங்க அப்பா சாவகாசமாக, “என்ன கொசு கடிக்குதா, இந்தா இதால அடி” என்று ஒரு ப்ளாஸ்டிக் டென்னிஸ் ராக்கெட்டைத் தந்தார், அதில் ஒரு பொத்தானை அழுத்தினால் விளக்கு ஒன்று எரிகிறது, இன்னொரு பொத்தானை அழுத்தியபடி விஷ்க் விஷ்க் என்று நம் முன்னால் சுற்றினால் ஒரு 20—30 கொசு அதில் மாட்டி பட பட என்று எரிந்து பொத் பொத் என்று விழுகிறது. அதைப் பார்த்ததும் என் பெரிய பெண் குஷியாகி “ஐ, அப்பா மை டர்ன்” என்று சொல்லி வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரம் அவளுடைய டென்னிஸ் திறமையைக் காட்டினாள். பிறகு அடிப்பதற்கு கொசு இல்லாமல், சிலந்தி, எறும்பு, இந்தப் பூச்சி அந்தப்பூச்சி என்று தேடித் தேடி அடிக்க ஆரம்பித்தாள். ஆமாம், இந்தக் கொசுவை ஒழிக்க ஏன் ஒரு வழியும் இல்லை என்று தெரியவில்லை. இந்தக் கொசு அழிக்கும் மட்டையை எதற்கும் இருக்கட்டும் என்று நானும் ஒன்று வாங்கி வந்திருக்கிறேன். கோடையில் வீட்டின் பின்புறம் டெக்கில் சென்று ஒரு பத்து நிமிடம் உட்கார முடியாது கொய்ங் என்று ஒரு லட்சம் பூச்சிகள் வந்து தாக்குகின்றது இந்த முறை எனக்காச்சு அவைகளுக்காச்சு, பார்த்துவிடுவோம்.

குரோம்பேட்டை, இது நான் பிறந்து வளர்ந்த ஊர். மண்வாசனை, மர வாசனை என்று ஜல்லியடிக்காமல் சொன்னால் கொஞ்சம் அமைதியான ஊர், அகரம் நாராயணன் என்ற ஒரு ரௌடி எம்.ஜி.ஆர் காலத்தில் அட்டகாசம் செய்த ஒரு நிகழ்வு, பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அடிதடிகளைத் தாண்டி பெரிய வெட்டுக் குத்து கொலை எதுவும் இல்லாத ஒரு அமைதிப் பூங்காவனம். “அப்பா! எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு, ஹும்.”

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த குரோம்பேட்டை முகம் மாறி செல்வ செழிப்பில் மின்னுகிறது. நான் வளர்ந்த எங்கள் தெருவில்மட்டும் 6-7 அடுக்குமாடி குடியிருப்புகள், அதில் ஒரு 10-15 பேரிடம் கார் இருக்கிறது. இதைத் தவிர, தெரு முழுவதும் ஒரு 10 ட்ராவல் கார்கள் 4 டூரிஸ்டர் வேன் என்று ஆங்காங்கே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். குரோம்பேட்டை ஸ்டேஷன் ரோட் நிறையவே மாறி இருக்கிறது, இந்த மாற்றம் சென்னையின் பல பாகங்களிலும் பளிச்சிடுகிறது. ஆட்டோகாரர்கள் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்கிறது, அவர்கள் வைத்ததுதான் சட்டம், கேட்பதுதான் ரேட், இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். கொஞ்சம் காலை பரப்பி வைத்து நின்றால் பட்டென்று உங்கள் கால் பக்கம் போர்ட் வைத்து ஒரு ஆட்டோ ஷெட் போட்டு விடுவார்கள். மறக்காமல் அதில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் போட்டோ இருக்கும். ஆட்சி மாறினால் இருவரையும் அழித்துவிட்டு அம்மா படம் இருக்கும், நல்ல பொழப்புய்யா இது.

தனி வீடு வைத்து இருக்கும் அனைவர் வீட்டிலும் ஒரு அடி பம்ப் இருக்கிறது. கேட்டால், “பாலாறு கனெக்ஷன் இருக்கு இல்ல அது ஒரு தொட்டில வந்து பிறகு அதிலிருந்து வீட்டு மாடில இருக்கர பெரிய டாங்குக்கு மோட்டார் போட்டு ஏத்திடுவோம், வேணும்னா அடி பம்ப் வழியா டக்குன்னு பிடிச்சுடலாம்” இது என்ன லாஜிக் என்பது தெரியவில்லை.

சென்னையில் நிறைய மாதுக்கள் கார் ஓட்டுகிறார்கள். ஹூண்டாய்(5 லட்சம்), டாடா இண்டிகா(3-4 லட்சம்) தூள் பறக்கிறது, பலர் ஹொண்டா சிடி(10 லட்சம்) வைத்திருக்கிறார்கள் என்று அசால்ட்டாக சொல்கிறார்கள். டொயோட்டா காம்ரி 25 லட்சம், எனக்குத் தெரிந்த பல வங்கி மேளாளர்கள் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு சம்பளமா வங்கிகளில் தருகிறார்கள்? அமெரிக்காவில் இருக்கிறோம், கார், வீடு எல்லாம் இருக்கிறது என்றாலும், சென்னை போனால் ஒரு ஓட்டை சைக்கிள்கூட இல்லை என்பது சற்று கேவலமாகத்தான் இருக்கு.

ரெண்டு தெரு தாண்டி இருக்கும் கோயிலுக்கு போக 25 ரூ ஆட்டோ சார்ஜ் கேட்கிறார்கள். காரணம் பெட்ரோல் லிட்டர் 50 ரூபாய், வீட்டிலிருந்து கோவில் 500 அடிதூரம், ஒரு லிட்டர் பெட்ரோலில் 45 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கிறது ஆட்டோவில், பேசாமல் சென்னைக்கு போய் ஆட்டோ அல்லது கால் டாக்ஸியில் கார் ஓட்டினா நல்ல பைசா பார்க்கலாம். 5 மணி நேரம், 50 கி.மீக்கு 500ரூபாய் வாங்குகிறார்கள். போய் இறங்கிய 4-5 நாட்களுக்கு, பெரிய பருப்பு மாதிரி “ஏங்க ஏ.சி. போடுங்க” என்றால், மறுபேச்சு பேசாமல் போட்டு விடுகிறார்கள், இறங்கும்போது,

“சார் பில் 1200 ரூபாய்”

“எப்படிங்க”,

“என்ன சார் இப்படி கேக்கரீங்க, ஏ.சி. போட்டா டபுள் சார்ஜ் சார்”

“அது சரி, இந்தாங்க”

“...”

“இன்னும் என்ன”

“ட்ரைவர் பேட்டா சார்”

“ஏங்க கார் உங்க சொந்த கார்னு சொன்னீங்க”

“ஆமாம் சார், சொந்த வண்டியா இருந்தாலும் ட்ரைவர் வேலை பார்த்தால் ட்ரைவர் பேட்டா உண்டு சார், அதுதான் கம்பெனி ரூல்.”

“ஆமா உங்க ‘கம்பெனி’ ல எத்தனைபேர் வேலை செய்றாங்க”

“நான் ஒண்டிதாங்க”

“!!!!??”

தொடரும்.

Tuesday, January 12, 2010

இந்தியப் பயணம்

இந்தியா பயணம் பற்றி போன தடவை போய் வந்த பிறகு எழுதலாம் என்று பெரிய படமெல்லாம் போட்டுட்டு வழக்கம் போல ஒரு மண்ணும் எழுதலை. இந்த முறை அப்படி இல்லாமல், சொல்லாமலேயே எழுத ஆரம்பிச்சாச்சு.

“அது சரி சொல்லுங்க சொல்லுங்க நீங்க எது சொன்னாலும் கேட்டுக்கறோம்.”

“யாருப்பா அது, ஓ நாகுவா, ஏன் என்ன ஆச்சு”

“தடயம்ன்னு ஒரு கதை யாரோ எழுத ஆரம்பிச்சாங்க ஒரு 2-3 வருஷமா தேடியும் தடயம் கிடைக்கலைன்னு ஊர்ல நாட்டுல பேச்சு அடிபடுது......”

“தடயம் கதை என்ன ஆச்சா, அது சரி, நம்ம மக்களுக்கு தமிழ் நாட்டை விட்டுட்டு அமெரிக்கா வந்து பொட்டி தட்ட ஆரம்பிச்ச உடனே ஞாபகசக்தியும் எக்கச்சக்கமா ஆயிடுத்து. அண்ணே உங்க ஞாபகசக்தில ஈயத்தைதான் காச்சி ஊத்தனும். தமிழ் நாட்டில இருந்த வரை ரூபாய்க்கு மூனு படி அரிசி, ஆளுக்கு ஒரு கலர் டீவி, இலவச நிலம் தரோம்ன டைலாக்லாம் மறந்து போய் ஜாலியா இருந்தீங்க, நம்ம கிட்ட வந்து தடயம் என்ன ஆச்சு, குறிச்சிப்பூ என்ன ஆச்சு, கூப்பர்டினோவில குஞ்சம்மா என்ன ஆச்சுன்னு சும்மா கொடையரீங்க.! ஒரு படைப்பாளிங்கரவங்க சுயமா சிந்திச்சு கதை விடலாம்னா விட மாட்டீங்களே. சரி சரி தடயம் இன்னும் ஒரு 10-15 நாட்களுக்குள்ள முடிச்சுடறேன்.”

இனி இந்தியப் பயணம்.

போன மாதம் 5ம் தேதி ஜாம் ஜாம்னு இந்தியா கிளம்ப தயாரா இருந்தோம். என் நண்பர் காலையில் சூப்பரா பேகிள்ஸ், காபி எல்லாம் வாங்கிண்டு வந்து கண்டிப்பா இன்னிக்கு ஊருக்கு போயிடுவோமான்னு மறக்காம கேட்டுகிட்டார். நானும் என் பங்கிற்கு “இப்படி டிபன் காபி எல்லாம் வாங்கி தரது இன்னிக்கு மட்டுமா இல்லை டெய்லி கிடைக்குமா”னு கேட்டேன். அதுக்கு அவர், “தினம் இந்தியா போனா தினம் கிடைக்கும்” என்றார். நான் உடனே “நீ தினமும் வாங்கிட்டு வருவேன்னா நானும் தினமும் இந்தியா போய்ட்டு வரேன், மறக்காம நாளைக்கும் வாங்கிட்டு வா” ன்னு உதார் விட்டேன். அப்போ என் நாக்கில சனி சும்மா உக்காராம சூப்பரா, ஒரு ஆடு நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார் போல இருக்கு, அப்போ அது எங்களுக்கு தெரியலை. அவர் கிளம்பி வீட்டுக்கு போனவுடன் அவசர அவசரமா மிச்சம் இருக்கர பாக்கிங் முடிச்சுட்டு, மதியம் ஒரு மணிக்கு விமானம் சரியான நேரத்திற்கு கிளம்புகிறதான்னு செக் பண்ணி பார்த்தால், மழைகாரணமாக நாங்கள் செல்ல வேண்டிய விமானம் ரத்தாகியிருப்பது தெரிந்தது. அதன் பிறகு நடந்ததை சொல்ல ஒரு 10-15 பக்கம் வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இன்று ரத்தாகிவிட்ட விமானத்திற்கு பதில் 6ம் தேதி விமானத்திற்கு போனா போகுதுன்ற ரேஞ்சில் டிக்கெட் போட்டு கொடுத்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எங்களை விமான நிலையத்தில் விட்டு விட்டு எங்களுடன் ஒரு 6 மணி நேரம் இருந்து இந்த தமாஷை பக்கத்தில் இருந்து அனுபவித்து பார்த்தவர் எங்களுக்கு காலையில் டிபன் காபி வாங்கி வந்த அதே நண்பர்.

6ம் தேதி சொன்ன படி விமானம் இந்தியா நோக்கி கிளம்பியதும்தான் “அப்பாடி நிஜமாவே இந்தியா போறோம்” னு இருந்தது.

என் நண்பர் சொன்ன படி 6ம் தேதி டிபன் காபி வாங்கிட்டு வரலை, அதை உங்களுக்கு நான் சொல்லலை, நீங்களும் நான் சொல்லி தெரிஞ்சுக்கலை சரியா.

சென்னை

எங்கள் விமானம் தோஹாவிலிருந்து கிளம்பும் போதே தமாஷ் ஆரம்பமாகிவிட்டது. என் இருக்கைக்கு முன் இருந்தவர் விமானம் ரன்வேக்கு செல்லும் வரை கைப்பேசியில் பேசி தீர்த்துவிட்டார். “ராஜு வீட்டுக்கு வந்தா அவன் போன வாரம் வாங்கிட்டு போன ரெண்டு டஜன் முட்டை இன்னும் திருப்பித் தரலைன்னு கேளு, அஹமத் நாளைக்கு வருவான் அவனை ரெண்டு நாளைக்கு தேவையானத சமைக்க சொல்லு, பக்கத்து ரூம்புகாரங்க வந்தா ஓசில சாப்பிட்டுட்டு போக விடாதே” அவர் தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன் அப்புறம் பேசிக்கொண்டிருந்த போது தெரிந்தது அவர் பேசிக் கொண்டிருந்தது அவருடைய ரூம் மேட் என்றும், அவருடைய குடும்பம் தென் தமிழ்நாட்டில் வசிக்கிறது என்றும். அவர்களை தன்னுடன் வைத்துக் கொள்ள இவருடைய விசாவில் வசதி இல்லையென்று. இருந்தாலும் ஒரு சந்தேகம் அவர் நண்பர் வாங்கி சென்ற அதே முட்டையை எப்படி திருப்பித் தருவார், அதை வெச்சு ஆம்லட் போட்டிருக்கமாட்டாரோ? இவரைக் கேட்டால் அடிப்பார் போல இருந்ததால் கேட்கவில்லை.

விமானம் சென்னையில் தரையைத் தொட்ட உடன் படக் படக்கென்று சீட் பெல்ட் அவிழ்க்கும் சத்தம் காதைத் துளைக்கிறது. விமான சிப்பந்திகள் கெஞ்சுவது எதுவும் யார் காதிலும் விழுவேயில்லை. பெரிய தமாஷ், என்னவென்றால், விமானம் கடைசியாக நின்றவுடன் ஒட்டு மொத்த கும்பலும் யாரோ கத்தி வெச்சு மிரட்டின மாதிரி படாரென்று எழுந்து நிற்கிறார்கள். எல்லோர் கையிலும் ஒரு பெரிய பெட்டி, எப்போது ஒவர் ஹெட் கம்பார்ட்மெண்டை திறந்தார்கள் எப்போது சாமான் செட்டை எடுத்தார்கள் என்பது பெரிய ஆச்சர்யம். அடுத்து எல்லோரும் ஒரே சமயத்தில் கதவை நோக்கி செல்ல முயல்கிறார்கள். வழியில் நிற்பது வயதானவரா, குழந்தையா என்பதெல்லாம் அவர்களுக்கு அனாவசியம், ஒரு தள்ளு அல்லது ஓங்கி ஒரு இடி, அதற்கு எந்த வருத்தமும் இல்லை. இதே கும்பல் தோஹாவில் பள்ளிக்கூட குழந்தைகள் போல பவ்யமாக வரிசையில் நின்று விமானம் ஏறினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் H1N1 பரிசோதனைக்காக இரண்டு காமிரா வைத்திருக்கிறார்கள். அதனை நோக்கி நடக்கையிலேயே ஒருவருக்கு ஸ்வைன் ப்ளு (பன்றிக் காய்ச்சல்) இருக்கிறதா இல்லையா என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறது. அந்த பரிசோதகர் அருகில் சென்றதும் எங்கள் இளைய மகள் லொக்கு லொக்கு என்று இறும, அந்த பரிசோதகர், “என்னங்க இப்படி இருமராங்க, ஒன்னும் ப்ரச்சனை இல்லையே” என்று கேட்டு கொஞ்சம் டென்ஷன் பண்ணி விட்டார். லஞ்சம், அன்பளிப்பு, இனாம் எல்லா கண்ராவியும் சென்னைல விமானம் இறங்கியதுமே ஆரம்பிச்சுடுச்சு. என்ன ஒன்னு விமான சிப்பந்திகள் ஏதும் இனாம் கேக்கல அவ்வளவுதான்.

ஒரு வழியாக விமான நிலையம் விட்டு வெளியில் வந்தால் ஜிவ் என்று மஹா மஹா சைசில் ஒரு பெரிய மேம்பாலம் மிரட்டுகிறது. அதன் அடியில் ஒரு கொசு மாதிரி நாங்கள் இருந்த மினி வேன் இருந்தது. தாம்பரம் நோக்கி எங்கள் வேன் திரும்ப எத்தனிக்கையில் திடீர் என்று ஒரு பெரிய லாரி லைட்டில்லாமல் ஹாரன் மட்டும் அடித்துக் கொண்டு ஒரு இன்ச் வித்தியாசத்தில் எங்களை ‘டாய்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றது. அதை அத்தனை கிட்டத்தில் பார்த்ததில் ரத்தம் ஜிவ் என்று தலைக்கு மேல் எகிறி கண்ணெல்லாம் பளிச் பளிச்சென்று மின்னல் மாதிரி வெட்டியது. வேன் ட்ரைவரோ "இதெல்லாம் சகஜமப்பா" என்ற ரேஞ்சில் எதுவுமே நடக்காதது போல இருந்தார். “என்னங்க இப்படி போராங்க” என்று கேட்டதற்கு, “ஏங்க என்ன ஆச்சு” என்று கேட்டு அவர் பங்கிற்கு அதிரடித்தார்.

பல்லாவரம் பக்கத்தில் எப்போதும் குண்டும் குழியுமாக இருக்கும் அது மாறி விடியற்காலை 4 மணிக்கே ட்ராஃபிக் ஜாம் ஜாம் என்றிருக்கிறது. இப்படியாக எங்கள் சென்னை விஜயம் ஆரம்பமாகியது.

தொடரும்.

Saturday, January 09, 2010

படம் பாரு கடி கேளு - 45


"ஸாண்டா க்ளாஸ்" வேடம் போட ஆள் இல்லைன்னு எனக்கு வேடம் போட்டு படுத்தறானே இந்த ஆளு! "சிம்னி" மேலே வேறு ஏறச்சொல்லுவானோ!

Saturday, December 19, 2009

படம் பாரு கடி கேளு - 44



நாக்க முக்கா நாக்க முக்கா அட்ராட்ரா நாக்க முக்கா
மனுஷன் செத்தா மாடு தின்னா
தோல வெச்சு மேளம் கட்டி
அட்ராட்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா

இது எப்டி இருக்கு?

Tuesday, December 15, 2009

மீனாவுடன் மிக்சர் - 16 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - நாலாவது பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம். பயணிகள் களைப்பாறும் தனி அறை.)

{முழங்கால் வரை தூக்கி கட்டியிருந்த பச்சையில் சிகப்பு கோடு போட்ட சின்னாளம்பட்டு புடவையில் ரெண்டு ஜப்பானிய சூமோ விளையாட்டு வீரர்கள் கால் நீட்டி உட்காரக்கூடிய அளவு பெரிய வட்ட சோபாவின் நடுவில் குஞ்சம்மா சப்பணம் போட்டு உட்கார்ந்திருக்கிறாள். அறைக்குள் 'குஞ்சம்மா, உனக்கு காப்பி போட தெரியுமாம்மா?' என்று கேள்வியுடன் வேகமாக நுழைந்த செந்திலின் பின்னால் மைதிலி ஓட்டமும் நடையுமாக வருகிறாள்.}

குஞ்சம்மா: யோவ், இன்னாத்துக்கு இந்த ஓட்டம் ஓடற? காந்தி தாத்தான்னு நெனப்பா ஒன் மனசுல? ஒங்க ஊட்டம்மா பாவம்யா. மலை மேலேந்து உருட்டி விட்ட கல்லாட்டமா எப்படி உருண்டுகிட்டு வருது பாரு. யக்கா, இப்படி குந்து நீ மொதல்ல.

மைதிலி: (மூச்சிரைக்க கையால் நெஞ்சை நீவி விட்டபடி) குந்தறேம்மா குந்தறேன்.

செந்தில்: அது ஒண்ணும் இல்லை குஞ்சம்மா. எனக்கு ரெண்டு வேளை காப்பி சாப்பிடலைனா உடம்பும் மூளையும் லேசா மரத்து போயிடும். இவ கிட்ட நாளை காப்பிக்கு இன்னிக்கே ஆர்டர் பண்ணியாகணும். அதான் உனக்கு காப்பி போட தெரியுமான்னு கேக்க ஓடி வரேன்.

குஞ்சம்மா: காப்பியா? அந்த கண்ணராவியயா நீங்கல்லாம் குடிக்கிறீங்க? அதுக்கு ஒரு கப்பு எலி மருந்த குடிச்சுட்டு போய் கட்டய நீட்டுங்களேன்.

செந்தில் மற்றும் மைதிலி: (அதிர்ச்சியோடு) என்னது?

குஞ்சம்மா: பின்ன காப்பீல இன்னாயா சத்திருக்கு? ஊர்ல என் தங்கச்சி குப்பம்மா இப்படி தான் காப்பி காப்பின்னு அலைஞ்சிகிட்டு குடிக்கும். இன்னா ஆச்சு? ஒரு நாள் சோர்வு சாஸ்தியாயி மயக்கம் போட்டு விழுந்திருச்சு. ஊட்டாண்ட இருக்கிற ஒரு நர்சம்மா வந்து பாத்து காப்பி குடிச்சு குடிச்சு குப்பு ஒடம்புல ரத்தத்துக்கு பதில கழனி தண்ணி தான் ஓடுதுன்னு சொல்லிட்டு போயிருச்சு.

மைதிலி: அய்யய்யோ அப்புறம்?

குஞ்சம்மா: அப்புறம் இன்னா, காப்பிய கடாசிட்டு நாங்க குடும்பத்தோட பாதாம்கீர்ல எறங்கிட்டோம். ஆனா எனக்கு இந்த பவுடர் பாதாம் பாலெல்லாம் தொண்டை குழிககுள்ள எறங்காதுக்கா. காலைல நல்லா ஒரு பிடி பாதாம் பருப்ப ஊற வச்சு, அரைச்சு, சூடா ஒரு தம்ளர் பால்ல கரைச்சி குடிக்கணும். இல்லைனாக்க ஒரு வேலை ஓடாது. நல்லா லண்டன் பாதாமா வாங்கி வச்சிருக்கா எனக்கு. அமரிக்கா ஆப்பரிக்கா பாதாம்லாம் சொத்தை. என் ஒடம்புக்கு ஆவாது.

மைதிலி: அதுக்கென்ன வாங்கிட்டா போறது குஞ்சம்மா.

செந்தில்: நாங்களாவது காப்பி குடிக்கலாமா குஞ்சம்மா? இல்ல உனக்கு அதுவும் ஒத்துக்காதா?

குஞ்சம்மா: தோ பாருயா. நெருப்பு சுடும்னு தான் சொல்ல முடியும். இல்ல குளுருது, நான் தீக்குளிச்சு தான் தீருவேன்னு நீ அடம் பிச்சா நா இன்னா செய்ய முடியும், சொல்லு? நீயே போட்டு குடிப்பென்னா அந்த கண்ணராவிய தாராளமா குடிச்சுக்க.

மைதிலி: குப்புவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டீங்கல்ல? இனிமே வீட்டுல யாருக்கும் காப்பி கிடையாது. நம்மளும் பாதாம்கீரே குடிக்கலாம்.......................... அய்யய்யோ ஏன் கால் செருப்பை கழட்டறீங்க?

செந்தில்: சும்மா உள்ள சங்கை ஊதி கெடுத்தானாம்னு கூட்ஸ் வண்டி வேகத்துல வந்தாலும் காப்பின்னு ஒண்ணு வந்திட்டுருந்ததை நானே அநியாயமா கெடுத்துண்டேனே, அதை மெச்சிக்க என் மூளையைநானே நாலு சாத்து சாத்திக்கலாம்னு பாக்கறேன்.

மைதிலி: ஏர்போர்ட்ல வந்து அச்சுபிச்சுன்னு ஏதாவது பண்ணாதீங்க.

குஞ்சம்மா: அக்கா, அண்ணே ஏதோ சொல்லிட்டு போவட்டும், விட்டிரு. ஒன் பாதாம்கீர் சூப்பரா இருந்திச்சுக்கா. அதான் தேர்வுக்கு கூட்டியார சொன்னேன். ஒரு நாலஞ்சு முக்கியமான விஷயத்த பேசிட்டோம்னா ஊட்டுக்கு கிளம்பிரலாம். எது இருக்கோ இல்லையோ, மொதல்ல எனக்கு ஒரு laptop குடுத்துருங்க என்ன? MAC இருந்திச்சுனா ரொம்ப நல்லது. இல்லேனா அதுக்குன்னு டென்சன் ஆவாதீங்க. PC வச்சிக்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். இன்டர்நெட் ஸ்பீட் மட்டும் ஒரு 120 mbps இருக்கணும். தெனமும் Facebook ல தங்கச்சி குப்பு, என் ஆயா செல்லாயி, சித்தி மவளோட ஓரவத்தி ராசாத்தி எல்லாரையும் பாக்கறேன்னு சொல்லியிருக்கேன். அதனால காலையில நான் வேலைக்கு வர கொஞ்சம் லேட்டாவும். நாஷ்டா சாப்பிடாம எனக்காக குந்தியினு இருக்காதீங்க. நான் தப்பால்லாம் நெனைக்க மாட்டேன், சரியா? பாதாம் பால் பண்ணி ஒரு லோட்டாவுலஎனக்கு விட்டு வச்சிட்டு ஒங்க ஜோலியை பாத்துக்குனு போய்கினேயிருங்க. பால் சூடா இல்லேன்னா நோ டென்சன். நா வந்து சுட பண்ணிக்குவேன்.

செந்தில்: பாத்தியா மைதிலி? எவ்வளோ நல்ல மனசு குஞ்சம்மாவுக்குன்னு. அவளே சுட பண்ணிப்பாளாம்! உன் பிரார்த்தனைக்கு முருகன் செவி சாய்ச்சுட்டான் பாரு. குஞ்சம்மா இருக்கறப்போ இனிமே என்ன கவலை உனக்கு?

-தொடரும்

-------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

Monday, December 07, 2009

பார்

"செல்லம் குடுக்காதே குடுக்காதேன்னு சொன்னா கேட்டியா"

வேலையிலிருந்து வந்த உடனே பாய்ந்தாள் அம்மா. "இன்னைக்கு என்னாச்சு அம்மா", என்றேன் சிரித்துக் கொண்டே.

அமெரிக்காவில் வளரும் பேரனுடன் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் என் அம்மாவுக்கு தினசரி குருஷேத்திரம்தான். இவர்களின் சுதந்திரமும்,பேச்சும் அவர்களின் வாழ்க்கைமுறையும் எப்போதும் ஒத்துப் போவதில்லை. என் அப்பாவாவது பரவாயில்லை. எங்களை சுதந்திரமாக வளர்த்தவர். அம்மாவுக்குத்தான் பேரனின் கேள்விகளும், நடைமுறையும் சுத்தமாக ஒத்துக் கொள்வதில்லை.

"உன் பையன் என்ன பண்ணினாலும் கண்டிக்காம இப்ப எங்கியோ போயிண்டிருக்கு பாரு", என்றாள் அம்மா. "அவன் என்ன பண்ணினாலும் சிரிச்சிண்டே இரு. நாளைக்கு ஊரே சிரிப்பா சிரிக்க போவுது."

"ஊர் சிரிக்கப் போவுதுன்னு பாத்தா நீ இங்கே எதுவும் பண்ண முடியாதும்மா. இப்ப என்ன ஆயிடிச்சு".

"அன்னைக்கி அப்படிதான் பர்த்டே பார்ட்டின்னு பசங்களும், பொண்ணுங்களும் ஒண்ணா ரா முழுக்க கூத்தடிச்சதுகள்." என்று ஆரம்பித்தாள் அம்மா.

"முதல்ல இப்பத்திய கதைய சொல்றியா?", என்றேன்.

நம்ப கண்ணு முன்னாடிதானே இருந்ததுகள் குழந்தைகள். சென்னைல சீதாவோட உத்தம புத்திரன் சனிக்கிழம அன்னிக்கு வீட்டுக்கு ராத்திரி ரெண்டு மணிக்கு வந்தானாம். அதுக்கு என்ன சொல்றே... நம்ம ஊர் எங்கியோ போயிட்டு இருக்கு. நீ இந்த ஊரப் பத்தி சொல்ல வந்துட்டே.

மகளின் பையனை இழுத்ததால், அம்மாவுக்கு பொத்துக் கொண்டு வந்தது. "அந்த ராயனும் சரியில்லை. அவன் கூட சேந்து நம்ம குமார் குட்டிச்சுவரா போவப்போறாண்டா", என்றாள் அம்மா.

"ரயன் நல்ல பையனம்மா. அவன என்னமோ உனக்கு பிடிக்கல. விடேன். சரி இன்னைக்கி என்ன ஆச்சு".

"ஆமாம் நீதான் மெச்சிக்கனும் அந்த ராயன. அவன் பாருக்கு போறானாம். இவனை அழைச்சானாம். இதுவும் போய்தான் தீருவேன்னு ஒத்தக்கால்ல நிக்குது. நீயே கூட்டிட்டு போய் உன் செலவிலேயே விஸ்கியும், பியரும் வாங்கிக்குடு".

"இந்தப் பசங்க இன்னும் ஹைஸ்கூல்கூட போகலே. நானே கூட்டிட்டுப் போனாலும் உள்ளே விடமாட்டாங்க. உன்னை ஏதோ கிண்டல் பண்ணியிருக்கானுங்க இந்த பசங்க ரெண்டு பேரும்."

"இல்லடா. இன்விடேஷனே அடிச்சி கொண்டாந்து குடுத்தான் அந்த பையன். இதோ இங்க தானே இருந்தது. ஆ... நான் பாருக்கு எல்லாம் போகக்கூடாதுன்னு அதட்டினேன். உன் புத்திர சிகாமணிக்கு கோபம் பொங்கிடிச்சி. இந்த ஊர் பத்தி எனக்கு புரியலை அது இதுன்னு கத்திட்டு அவன் ரூமுக்கு கொண்டு போயிட்டான். நீயே போய் கேளு", என்று என்னை ஏற்றிவிட்டாள் அம்மா.

எனக்கு கோபம் வரவில்லை. இது என்ன கதை என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்தான் அதிகமானது. போய் விசாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு குமாரின் அறைக்குள் நுழைந்தேன்.

ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்தேன் சிரித்துக் கொண்டே.

"அம்மா. ரயன் கூப்பிட்டிருக்கிறது வெறும் பார் இல்லை. ரொம்ப ஸ்பெஷலான பார். நம்ம ஊர்ல பசங்களுக்கு பூணுல் போடறமாதிரி, ஜூஸ் - அதாம்மா யூதர்கள் - அவங்கள்ல  பண்ற பங்க்ஷனுக்கு பேரு பார் மிட்ஸ்வா"!

மீனாவுடன் மிக்சர் - 15 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - மூன்றாவது பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

{வரவேற்ப்பு அறையின் நடுவில் மைதிலி, செந்தில் தம்பதியினர் அமெரிக்காவுக்கு வீட்டு வேலை செய்ய வந்திருக்கும் ஆட்களுக்கு முன்னால் கை கட்டி பணிவாக நிற்கிறார்கள்.}

மைதிலி: உங்க எல்லோருக்கும் வணக்கம். விமான பிரயாணம் முடிஞ்சு நீங்க ரொம்ப களைச்சிருப்பீங்கன்னு தெரிஞ்சு தான் உங்களுக்கு இந்த ஐஸ் பாதாம்கீர் கொண்டு வந்திருக்கேன். எல்லோரும் முதல்ல இதை கொஞ்சம் குடிங்க (ஒரு பெரிய கூலரையும் பேப்பர் கப்புகளையும் விநியோகம் செய்கிறாள்).

செந்தில்: அடேங்கப்பா ஐஸ் போதுமா? முறைக்காதே, பாதாம்கீர்ல ஐஸ் போதுமான்னு தான் கேட்டேன்.

மைதிலி: வீட்டுக்கு போய் எப்படா படுப்போம்னு அலுப்பா இருக்கா உங்களுக்கு? எங்களை தேர்ந்தேடுத்தீங்கன்னா உங்களை வீட்டுக்கு கூட்டிகிட்டு போக Honda Podpuller பறக்கும் காரை கொண்டு வந்திருக்கோம். ஆட்டோ போல அலுங்கல் குலுங்கல் எல்லாம் இல்லாம சுகமா பறந்து போயிடலாம். அது மட்டுமா? பிரயாண களைப்பு போக இன்னிக்கு ராத்திரி நீங்க "சூசூசீசீ" கம்பனியின் புது கண்டுபிடிப்பான 'மிதக்கும் மெத்தையில்' படுத்து தூங்கலாம். புது டிசைனர் விரிப்பெலாம் கூட போட்டு வச்சுட்டு வந்திருக்கேன். உங்க களைப்பெல்லாம் பஞ்சா பறந்து போயிடும்.

செந்தில்: உங்களுக்கு வேணும்னா இவ நல்லா கால் கூட பிடிச்சு விடுவா. அதை சொல்ல மறந்துட்டயேம்மா மைதிலி.

மைதிலி: (செந்திலின் காதுக்கு மட்டும் கேட்கும் படி) வீட்டுக்கு வாங்க உங்களை நான் பிடிக்கிறேன். எங்கே இப்ப ஒரு அம்பது தோப்புக்கரணம் போட்டு இவங்களை சந்தோஷப்படுத்துங்க பார்ப்போம்? ஒண்ணு, ரெண்டு.....

(சத்தமாக) கால் தானே, பிடிச்சு விட்டா போச்சு! அப்புறம் நான் வெஜிடரியன் புட் மணக்க மணக்க நல்லா சமைச்சு போடுவேன். உங்களுக்கு அதிக சிரமம் குடுக்க மாட்டேன். சமைக்கும் போது பாதி பாத்திரம் நானே தேயச்சுடுவேன். மிச்சத்தை நீங்க தேய்ச்சா போதும். துணிமணி தோய்ப்பதை பத்தி கவலைப்படாதீங்க. இதோ என் வீட்டுக்காரர் நல்லா தோய்ப்பார். அவர் தோச்சது போக மீதி ஏதாவது இருந்தா நீங்க தோச்சா போதும். உங்களுக்கு அதுவும் ரொம்ப அலுப்பாக இருந்தா சொல்லுங்க. நாங்களெல்லாம் வாரத்துக்கு ஒரே ஒரு துணியையே போட்டுக்க பழகிக்கிறோம். ஒண்ணும் பிரச்சனையே இல்லை.

செந்தில்: ஐயோ கப்படிக்குமே? சரி பரவாயில்லை விடு. சென்ட் அடிச்சுக்குவோம்.

ஏஜன்சி அதிகாரி: உங்கள் நேரம் முடிந்து விட்டது. அடுத்ததாக சுஷ்மா, சுரேஷ் குடும்பத்தை அரங்கத்தின் நடுவில் வந்து பேச அழைக்கிறோம்.

மைதிலி: (அவசர அவசரமாக) அறை சுவர் அடைக்கறா மாதிரி ரூமுக்கு ஒரு பெரிய டி.வி இருக்கு எங்க வீட்டுல. கிட்டத்தட்ட 500 channel ல படங்கள் வரும். வாரத்துல மூணு நாள் விடுமுறை தருவோம். நல்ல டிசைனர் துணிமணி வாங்கி ........

செந்தில்: போதும் வா. விட்டா நீ சொத்தையே இந்த வேலையாளுக்கு எழுதி வச்சிடுவியோன்னு எனக்கு இப்போ பயம்மா இருக்கு. அந்தப் பக்கம் போய் தரைல உக்காரணும் போல இருக்கு. வா போகலாம். ஆ...

மைதிலி: என்ன ஆச்சு?

செந்தில்: என்ன ஆச்சா? என் இடுப்பு கடோத்கஜன் கடுச்சு துப்பின கரும்பு சக்கையாட்டம் ஆச்சு. பிள்ளையாருக்கே தோப்புக்கரணம் போடாம டிமிக்கி கொடுத்துட்டு இருந்த என்னை இன்னைக்கு இப்படி டிங்கு வாங்கிட்டீங்களே! (இடுப்பை பிடிச்சுகிட்டு முனகறார்)

ஏஜன்சி அதிகாரி: வாழ்த்துக்கள், நீங்கள் தேர்ந்தெடுக்க பட்டிருக்கீங்க. உங்களை தேர்ந்தெடுத்த பணியாளர் குஞ்சம்மா உங்களை தனியாக நேர்முக தேர்வு செய்ய ரெடியாக இருக்கிறார். என்னோடு இந்த பக்கம் வாங்க.

மைதிலி: (சந்தோஷத்தில் கண் பணிக்க) எனக்கு தெரியும் என் முருகன் என்னை கைவிட மாட்டான்னு. வேலும் மயிலும் தான் நமக்கு துணை. வேகமா வாங்க, குஞ்சம்மாவை அனாவசியமா வைட் பண்ண வைக்க கூடாது. ஏன் நின்னுட்டீங்க?

செந்தில்: குஞ்சம்மாவை அனாவசியமா வைட் பண்ண வைக்க கூடாதா? என்ன அநியாயம்! தினம் ஆபீஸ் போயிட்டு வந்து நான் ஒரு கப் காப்பிக்கு ஒரு யுகம் வைட் பண்ணறேனே, அது மட்டும் பரவாயில்லையா? எனக்கு ஒரு சந்தேகம் மைதிலி. அது எப்படி தினம் சாயந்திரம் ஆறு மணி ஆச்சுன்னா சொல்லி வச்சா மாதிரி உனக்கு உன் தோழிங்க கிட்ட இருந்து புடலங்காய் மாதிரி நீள நீளமா போன் கால்கள் வருது?

மைதிலி: அது வேற ஒண்ணும் இல்லைங்க. எங்க லேடீஸ் க்ளப்ல சமீபத்துல 'கணவர்களுக்கு தினம் ரெண்டு கப் காப்பி அவசியமா?" அப்படீன்னு பட்டிமன்றம் நடத்தினோம். நடுவர் 'அவசியம் இல்லை' ன்னு தீர்ப்பு கொடுத்திட்டார். அதான் எல்லோரும் இப்ப கொஞ்சம் பிசியா 'கணவர் காப்பி கட்' அப்படீன்னு ஒரு petition தயார் பண்ணி கூப்பர்டினோ பெண்கள்கிட்ட கையெழுத்து வாங்கிகிட்டிருக்கோம்.

செந்தில்: லேட்டா வந்தாலும் காப்பின்னு ஒண்ணு வந்திட்டு இருந்தது. அதுக்கும் ஆப்பு வச்சிட்டீங்களா? சரி மசமசன்னு நிக்காதே. குஞ்சம்மா கிட்ட முக்கியமா ஒரு விஷயம் கேக்கணும் எனக்கு.

(விறுவிறுன்னு நடந்தபடியே செந்தில்) குஞ்சம்மா.........காப்பி போட தெரியுமாம்மா உனக்கு?

-தொடரும்

-------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

Thursday, December 03, 2009

மீனாவுடன் மிக்சர் - 14 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - இரண்டாம் பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

சான் பிரான்சிஸ்கோ விமான தளத்தின் வரவேற்ப்பு கூடம்:

ஒலிபரப்பியில் ஆங்கில அறிவிப்பு: ஜெட் ஏர்வேஸ் விமானம் 985 வந்து இறங்கியுள்ளது. பிரயாணிகள் கஸ்டம்ஸ் ..........

மைதிலி: (பரபரப்புடன்) அதோ வராங்க அதோ வராங்க. நீங்க கொஞ்சம் பேனரை தூக்கி பிடிங்க. (கண் மூடி முணுமுணுக்கிறாள்) காக்க காக்க கனக வேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க...........

செந்தில்: நீ வேணா பாரு, உன் தொல்லை தாங்காம அந்த முருகன் கூடிய சீக்கிரத்துல ஒரு நாள் ஓடி போய் லேக் டாஹோ (Lake Tahoe) பனிமலைல ஏறி ஐசாண்டவனா உக்காந்துக்க போறார். பின்ன என்ன? வீட்டுல பாத்ரூம் flush பண்ணலை, ஏசி ரிப்பேர், கார்பெட்ல கறை - இப்படி கண்ட விஷயத்துக்கும் நீ 'நோக்க நோக்க' ன்னு அவரை நோண்டினா பாவம் அவரும் தான் என்ன செய்வார், சொல்லு?

மைதிலி: இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! Benz car வாங்கி தருவோம்னு பேனர் எழுத சொன்னா அதை கோட்டை விட்டுட்டீங்க. அந்த குடும்பத்தை பாருங்க Hawaaii cruise டிக்கெட் வாங்கி தருவோம்னு அம்சமா பேனர் எழுதிண்டு வந்திருக்காங்க. நமக்கு மட்டும் இன்னிக்கு ஆள் கிடைக்கலை, இப்பவே சொல்லிட்டேன் நீங்க தான் இனி நம்ம வீட்டு ஆஸ்தான முனியம்மா.

சபீனா சர்ப் சர்வதேச ஏஜன்சி அதிகாரி: (கையில் பெரிய மைக்ரோபோனில்) வணக்கம் பெண்கள் மற்றும் சாதுஆண்களே (Ladies and gentlemen)! சபீனா சர்ப் சர்வதேச ஏஜன்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது. இன்னும் சற்று நிமிடத்தில் உங்கள் தேர்வு தொடங்கி விடும். எங்கள் வேலையாட்கள் அறையின் இந்த பக்கத்தில் உள்ள நாற்காலிகளில் அமர்வார்கள். ஒவ்வொரு குடும்பமாக வந்து அவர்கள் முன் பேனருடன் 5 நிமிடங்களுக்கு நின்று உங்களை பற்றிய சில வார்த்தைகள் பேசலாம். பணிவோடு கைகட்டி நிற்பது, தோப்புக்கரணம் போடுவது, மரியாதையுடன் பேசுவது போன்ற விஷயங்கள் தேர்வில் உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் நேரம் முடிந்தவுடன் அறையின் ஓரத்தில் போய் தரையில் உட்காரவும். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் வேலையாளுடன்ஸ்பெஷல் நேர்முக தேர்வுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.

செந்தில்: அடடா முக்கியமானதை கொண்டு வர மறந்து போயிட்டேனே!

மைதிலி: என்னத்தை மறந்துட்டு வந்தீங்க?

செந்தில்: சாமரத்தை தான். தோப்புக்கரணம் போட்டுகிட்டே சாமரம் வீசியிருக்கலாம்டி. நிச்சயம் வேலைக்கு ஆள் கிடைச்சிருக்கும் நமக்கு. அவங்கல்லாம் நாற்காலி நாமெல்லாம் தரையா? சபாஷ் சபாஷ்.

மைதிலி: ஷ்ஷ்..யார் காதுலயாவது விழப்போறது, சும்மா இருங்க. அப்புறம் அவங்க முன்னாடி நிக்கரச்ச கொஞ்சம் இடுப்பு வளைஞ்சு பதவிசா நில்லுங்க, சரியா?

ஏஜன்சி அதிகாரி: செந்தில், மைதிலி குடும்பம் இப்பொழுது அரங்கத்தின் நடுவில் வந்து பேசலாம்.

மைதிலி: நம்பள தான் கூப்பிடறாங்க, வாங்க போகலாம். இதோ வந்துட்டோம்...(பீ.டி. உஷா போல ஓடுகிறாள்)

-தொடரும்

---------------------------------------------------------------------------


-மீனா சங்கரன்

Thursday, November 26, 2009

படம் பாரு கடி கேளு - 43


தூரத்தில் நிற்கும் இருவரில் ஒருவர்: என்ன மாடசாமி அது யாரு நடு வயலில் வயலின் வாசிக்கிறது?
மற்றவர்: யோவ் முனுசாமி, அது வயலின் இல்லைய்யா அது மிருதங்கம்.
அவரு ஏதோ வாசிச்சு பயிர் வளர்க்கறேன்னு சொன்னாரேன்னு நம்ம வயலில் இடம் கொடுத்தேன். அவரு வாசிக்கிறாரு வாசிக்கிறாரு நிறுத்தவே மாட்டேங்கிறாரு. அறுவடை மேல் அறுவடை பண்ணிக்கிட்டு இருக்கேன். பரவாயில்லை. நல்ல வருமானம் தான்.

Monday, November 23, 2009

மீனாவுடன் மிக்சர் (அறிவிப்பு)

'கூப்பர்டினோவில் குஞ்சம்மா' எந்த நேரத்தில் எழுத ஆரம்பித்தேனோ தெரியலை, அந்த விமானம் பாவம் இன்னும் தரையை தொட்ட பாடு இல்லை.

ரெண்டாவது பாகம் ஏன் இன்னும் வெளியிடலைன்னு நிறைய பேர் கேக்கறாங்க. வேலை பளு அதிகம்னு கதை விடலாம்னு பார்த்தா உம்மாச்சி கண்ணை குத்திடுமோன்னு வேற பயம்மா இருக்கு. கற்பனை ஊற்று வத்தி போய் பாளம் பாளமா வெடிச்சிருக்கும் பாலைவனம் போல இருக்கு. இது தாங்க உண்மை. நிலைமை கொஞ்சம் சரியாகி எங்க வீட்டு நாயாவது சிரிக்கிற மாதிரி எழுத வந்தா உடனே அடுத்த பாகத்தை எழுதி வெளியிட்டுடுவேன், சரியா? சூளுரைத்து சொல்லறேன், இது என் அடுத்த சபதம். (ஒரு நாளைக்கு நாலு சபதம் போட்டா, இது தான் பிரச்சனை. இது எத்தனாவது சபதம்னு நியாபகம் வர மாட்டேங்குது. நல்ல காலம் Excel spreadsheet ல எழுதி வச்சிருப்பதால தப்பிச்சேன்.)

-மீனா சங்கரன்