நட்சத்திர வாரம்.
தமிழ்மணத்தின் நட்சத்திர வாரத்தின் முக்கியமான மூன்று விஷயங்கள் ஒன்று நாகு தொடர்ந்து பல விஷயங்களை ஒரே வாரத்தில் எழுதியது, இரண்டு, மீனா சங்கரன் அவர்களின் எழுத்து அறிமுகம். சற்று சிரமப்பட்டால் அவர் சிறந்த நகைச்சுவை எழுத்தாளராக மாறி நம்மையெல்லாம் கலங்கடிக்கக் கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. மூன்று, நாராயணன் அவர்கள் தமிழில் பின்னூட்டமிட்டது. முதல் முதலாக அவர் என்னுடைய ஒரு பதிவிற்கு ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டார், இப்போது அழகு தமிழில் பின்னூட்டமிட்டுள்ளார். அவர் எழுதியதும், நாகு எழுதியதும் பல எனக்கு புரியவில்லை எனவே அதைப் பற்றி நான் ஏதும் சொல்லப் போவதில்லை. நாராயண்ன் தான் உட்பட பலருக்கும் ‘தான் ஒரு சுப்புடு” என்ற எண்ணம் இருக்கிறது என்றது சற்று விவாதத்திற்கு ஏதுவானது.
நாகு, நான் மீனா அவர்களின் முதல் படைப்புக்கு பின்னூட்டமிட்டதும் என்னை வர வைத்ததற்காக மீனாவை பாராட்டியது கொஞ்சம் ஓவர். நான் யார் எழுதினாலும் எழுதாவிட்டாலும் தவறாமல் நமது வலைப்பூவை தினமும் தரிசித்து விடுவேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். நான் நமது வலைப்பூவில் எழுதாவிட்டாலும் முடிந்த வரை எனது வலைப்பூவில் அவ்வபோது சில பதிவுகளை பதிந்தே வந்திருக்கிறேன்.
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள்
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்து முடிவுகள் அமெரிக்க தேர்தல் முடிவைப் போலவே எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. 60000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல், கொலையாளி என்று தீர்ப்பளிக்கப் பட்ட சிபுசோரன் போன்றோரும், ஊழல் என்றால் உடன் நினைவுக்கு வரும் லாலு போன்றோரை வைத்து ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களோடு வெற்றியைத் தந்து தனது தலையில் தானே சேற்றை வாறி இறைத்துக் கொண்டுள்ளது இந்திய ஜனநாயகம். இதில் சென்னையில் எந்த வேட்பாளருக்கு ஒட்டை பதிவிட்டாலும் அது தி.மு.க வேட்பாளர் பெயரில் லைட் அடிக்கிறது என்ற புகாரைத் தொடர்ந்து 18 இடங்களில் மறு வாக்கு பதிவு நடந்தது. இந்த ஓட்டுப் பதிவு எந்திரங்கள் ஊழல்களுக்கு அப்பாற் பட்டவை என்று சில வருடங்களுக்கு முன்பு தனது தலைமேல் அடித்து சத்தியம் செய்தார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா.
இந்த பதிவு வெளிவரும் நேரம் மு.க. அழகிரி, ராஜா, தயாநிதி மாறன், நெப்போலின (நடிகர்) போன்றோர் மத்திய அமைச்சர்களாகியிருப்பார்கள். இது தேசத்தின் அடுத்த துரதிஷ்டம். இந்த கூட்டத்திற்குத் தலைவர் மன்மோகன் சிங். இதைப் பார்க்கும் போது எனக்கு அலிபாபாவும் 40 திருடர்கள் படம்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு அலிபாபா அவனுக்கு எதிராக 40 திருடர்களா என்று வியந்தது அந்தக் காலம், இப்போது ஒரு பொது ஜனம் அவனுக்கு எதிராக 59 திருடர்கள் சர்வ சாதாரணமாக அமைச்சர்களாக வலம் வரப் போகிறார்கள்.
இது இப்படி இருக்க தோற்றதற்குக் காரணம் சரியான கூட்டணி இல்லாதது என்பதைப் பற்றி யோசிக்காமல், வருண் காந்தி பேசியதால் ஓட்டு போய் விட்டது, மோடி அடுத்த முறை பிரதமராக வருவார் என்று இப்போதே ஆருடம் சொன்னது என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள் பா.ஜா.காவினர். அதற்கு பதில் இந்துத்வா மீது நம்பிக்கை அதீதமாக இருக்கிறதால் இனி பா.ஜா.கா வினர் அனைவரும் வேட்டி சட்டைக்கு பதில் கோமணம் மட்டும் கட்டிக் கொண்டு கையில் ஒரு கமண்டலம் எடுத்துக் கொண்டு, தலையில் ஒரு மொட்டை, கழுத்தில் ஒரு உருத்திராட்சக் கொட்டை, நெற்றியில் ஒரு பெரிய பட்டை என்று 5 வருடம் பார்லிமெண்ட்டை இடம் வலமாக அங்கப் ப்ரதட்சணம் செய்து வந்தால் ஓட்டு கிடைக்கலாம் என்று யோசிக்கலாம். ஒரு தலைவன் எப்போது தோற்கிறானோ அப்போதுதான் வெற்றியின் மீது அதீத பற்று கொள்கிறான் என்று படித்திருக்கிறேன். அது பொய் என்று பா.ஜா.கா வினர் காட்டியிருக்கின்றனர். 70 களில் இந்திரா காந்தி ஜனதா கட்சியிடம் தோற்ற பிறகு, படிப்படியாக அவர்களைப் பிரித்து சரண்சிங்கை ஆதரிப்பதாகச் சொல்லி ஜனதாவை உடைத்து அவரையும் கவிழ்த்து மீண்டும் ஆட்சிக்கு வந்து இந்தியாவை சாகும் வரையில் ஆண்டது இப்படி காரணம் தேடிப் பிடித்தல்ல. எப்போது ஒருவன் தனது தோல்வியை மற்றவர் மீது சுமத்த முற்படுகிறானோ அப்போதே அவன் மீண்டும் தோற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட்டான் என்று அர்த்தம். இதை புரிந்து கொண்டால் பா.ஜா.க சீக்கிரம் ஆட்சிக்கு வந்து விடலாம்.
ஜகஜ்ஜால சாமியார்.இந்தியாவில் பகுத்தறிவு இல்லை அதனால் போலிச் சாமியார்களிடம் மாட்டிக் கொண்டு இந்த சமுதாயம் கெட்டு குட்டிச் சுவராகியிருக்கிறது என்று இனி யாரும் சொல்ல முடியாது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமுதாயம் தனது அறிவை மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது எனவே இவர்கள் ஒரு போலிச் சாமியாரிடம் (ஆசாமி) ஏமாந்து போயிருக்கிறார்கள் என்பது முதல் வெக்கக் கேடு, இந்த சாமியார் ஒரு டுபாக்கூர் என்பது இவருடைய சொற்பொழிவுகள் சிலவற்றை யூ.ட்யூப்பில் பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது இருந்தும் இவரால் பல அறிவாளிகளை ஏமாற்ற முடிந்திருக்கிறது என்பது இரண்டாவது வெக்கக்கேடு. இத்தனை செய்தும் இவரால் இன்னமும் அமெரிக்காவில் தலை மறைவாக இருக்க முடிகிறது என்பது மூன்றாவது வெக்கக்கேடு.
“என்னய்யா, சும்மா வழ வழன்னு இழுக்கறே, அந்தச் சாமியார் யாருன்னு சொல்லு” என்று நீங்கள் அடிக்க வருவதற்குள் சொல்லி விடுகிறேன். ஜார்ஜியா மாகாணத்தில் இந்துக் கோவில் ஒன்றை நிர்வகிக்கும் செல்வம் அண்ணாமலை தான் அந்த ஜகஜ்ஜால சாமியார்.
இவரது கோவிலைப் பற்றிய பத்திரிகை ‘சித்தி’ பிரதியை நமது ரிச்மண்ட் கோவிலில் இருந்து எடுத்து வந்து பார்த்த போது இவரைப் பற்றி தெரியவந்த்தது. அதில் இவர் ஒரு சித்தர் என்பது போல சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.
சமீபத்தில் ஜார்ஜியா மாகாணம் வழியாக ரிச்மண்ட் வரும் வாய்ப்பு வந்த போதே இந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும், எப்படி நம்மை போல இருக்கும் ஒருவர் தன்னை ஒரு சித்தர் என்று கூறிக் கொள்கிறார் என்பதை நேரில் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன், அது முடியாமல் போகவே அந்த கோவிலைப் பற்றியும் அதன் நிர்வாகியான இவரைப் பற்றியும் வளைதளத்தில் சோதித்ததில் தன்னைத் தானே சித்தர் என்றும் மருத்துவர் என்றும் அழைத்துக்கொள்ளும் இவரைப் பற்றி பலப் பல மோசடி குற்றச்சாட்டுக்களும், பாலியல் குற்றச்சாட்டுக்களும் இணைய தளத்தில் குவிந்திருக்கின்றன என்பது தெரிய வந்தது.
யூட்யூபில் இருக்கும் இவரது
இந்த ஒளிப்பதிவை பார்த்தால் இவர் எப்படிப் பட்டவர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பேசுகிற 10 நிமிடத்தில் இவர் சொல்ல வருவது ஒன்றும் இல்லை, இதற்கு எதற்காக இவர் இத்தனை பேசுகிறார் என்பது தெரியவில்லை.
இவர் மீது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு, தான் ஒரு சித்தர் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது, பலரது க்ரெடிட் கார்டுகளை அவர்கள் அனுமதியின்று உபயோகப் படுத்தியது, பணம், பணம் மற்றும் பணம், மேலும் பணம் என்று அலைந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் விவரங்கள் வேண்டுவோர் இந்த தொடர்பை க்ளிக்கினால் தெரிந்து கொள்ளலாம்.
http://www.soulcast.com/post/show/201873/"Doctor-Commander"-Selvam-Sitter-is-a-fraud,-felon,-womanizer,-child-molesterஇவரைப் பற்றி அட்லாண்டா மாநகரத்தின் ஃபாக்ஸ் (FOX) தொலைக்காட்சியில் பல பகுதிகளாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவைகள்:
பகுதி – 1 பகுதி – 2 பகுதி – 3 பகுதி – 4 பகுதி - 5இணைய தளத்தில் இருக்கும் ஒளிப்பதிவை பார்க்கையில் இவர் கொஞ்சம் நடிகர் விஜயகாந்தின் சாயலில் இருக்கிறார். இவரிடம் ஏமாந்ததாக ஒரு சிலரே வெளிவந்து புகார் சொல்கின்றனர், மற்றவர்கள் ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை. இந்தக் கோயிலில் இருக்கும் திருமணம் மற்றும் பல விசேஷங்களுக்கான மண்டபத்தில் யாரும் எதையும் கொண்டுவந்து உண்ணலாம். இதில் எதையும் என்பது குறிப்பிடத்தக்கது. புலால் உண்ணலாம், மது அருந்தலாம், புகை பிடிக்கலாம். இதை இவரே தொலைக்காட்சி நிருபரிடம் சொல்ல அதை ஒரு மறைவான காமிரா மூலம் பதிந்திருக்கிறார்கள்.
சிவன் சொத்து குலநாசம் என்பார்கள் பெரியோர். இவர் செய்யும் அத்தனை செயல்களும், ஒரு சிவன் கோவிலில் இருந்து என்பது பெரிய வெக்கக்கேடான விஷயம்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com