Tuesday, April 15, 2008

எதிலும் உன் நினைவாய் !

ஒரு காதல் கவிதை. தலைவியைப் பார்த்து தலைவன் பிதற்றுவது.

எல்லாமே எந்திர யுகமாய் ஆவதனால், காதல் அழிந்து கொண்டு வருதோ என்று திடீர் என ஒரு எண்ணம். (அதைத் தாங்கி நிறுத்தப் போகிறேனா என்று விவாதிக்க வராதீர்கள் =;) ). எண்ணங்களை சேகரித்து வைப்போமே என எண்ணியதன் விளைவு எதிலும் உன் நினைவாய் ! கவிதை.

வழக்கம்போல வந்து வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_14.html

Monday, April 14, 2008

தமிழ்த்திரையுலகம் ஒரு பார்வை

2004ல் தமிழ் சங்க இலக்கியப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை. நம் சினிமா நான்கு வருடங்களில் மாறிவிடுமா என்ன? இன்னமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.


தமிழ்த் திரையுலகம் ஒரு பார்வை


நடிகர் திலகம், மக்கள் திலகம், கலைவாணர், நடிகவேள், நாகேஷ், சாவித்திரி, பானுமதி, பத்மினி மற்றும் பலர் நடிப்பில் கொடி கட்டிய, இயக்குனர் சிகரம், இயக்குனர் இமயம், மகேந்திரன், ஸ்ரீதர் மற்றும் பலர் இயக்கத்தில் புதிய சகாப்தங்கள் படைத்த தமிழ்த் திரையுலகம் இன்று எங்கே உள்ளது என்று பார்ப்போமா?

முதலாவது தற்போது தமிழ்ப்படத்தில் நடிக்கத் தேவையான தகுதிகள். நடிகர்களை முதலில் எடுத்துக்கொள்வொம். கதாநாயகன் காவல் அதிகாரியாக அல்லாத எந்த ஒரு சமீபத்திய திரைப்படத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். கதாநாயகன் ஒரு வாரம் மழிக்காத தாடியுடன் காணப்படுவார். காரணம் பளிச்சென்று காணப்படும் நடிகரைத் தமிழ் மக்கள்(??) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்(!!) ஸ்ரீகாந்தை எடுத்துக்கொள்ளுங்கள். திருமணக்காட்சியில் கூட தாடியுடன் இருப்பார். இவர் தாடி வைத்திருந்தால் தரணி முழுவதும் இவர் பின்னால் வந்து விடுமா? தாடி இல்லாவிடில் இவர் தலையைக் கொய்து விடுவார்களா? ஏன் இந்த மூட நம்பிக்கை? அஜீத்!! இவர்தான் இந்த பாரம்பரியத்தை அமர்க்களத்தில் ஆரம்பித்து வைத்தார். அந்த உரிமையில் காவல் அதிகாரியாகக்கூட தாடியுடன் வலம் வருகிறார் ஆஞ்சநேயாவில். விஜய்!! காதலை ஏகபோக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு படத்திற்குப் படம் இறுதிக் காட்சிகளில் காதலைப் பற்றி அறிவுரைகளை அள்ளி வழங்கும் இவருக்கு தாடி வளர்வதே இல்லை. மிகவும் கடினப்பட்டு வளர்த்த சிறு தாடியுடன் ரசிகர்களை(!!!) மகிழ்விக்கிறார். காவல் அதிகாரியாக சாமியில் வரும் விக்ரம் கூட இந்த பாரம்பரியத்தை மாற்ற மனமில்லாமல் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு ஒரு காட்சியில் தாடியுடன் நடனமாடி ரசிகர்களை ஜென்ம சாபல்யம் அடைய வைக்கிறார். ஏன்! நம் சூப்பர் ஸ்டாரும் பாபாவில் ஒரு வார தாடியுடன் தோன்றி ரசிகர்களைப் பிறந்த பயனை அனுபவிக்க வைக்கிறார். உலக நாயகன் மாத்திரம் இளப்பமா? காணுங்கள் பம்மல் கே சம்பந்தம். கதாநாயகனுக்குப் பொதுவாக எல்லாமே தெரியும். பாட்டு பாடுவார், நடனம் ஆடுவார். எந்த இசைக்கருவியையும் சரளமாக வாசித்து கதாநாயகியை வியக்க வைப்பார். கராத்தே, சிலம்பு, குத்துச்சண்டை உட்பட சகல சண்டை முறைகளையும் அறிந்தவர். மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்று நினைத்து இவர் கையாளும் பல யுக்திகள் அபத்தங்களாக முடிவதுண்டு. தன் ரசிகர்(!!!)களுக்கு என்ன பிடிக்கும் என்பதை இவர் அறிந்திருக்கும் போது, அடுத்த தலைமுறை நடிக்க வந்து இவரை ஒதுக்கியிருப்பார்கள்.

தமிழ்ப்படக் கதாநாயகிக்குக் குறைந்த பட்சத் தேவை, தமிழ்நாட்டில் பிறந்திருக்கக் கூடாது. அப்படிப் பிறந்திருந்தாலும் மும்பையில் வளர்ந்ததாகப் பொய் சொல்ல வேண்டும். பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளில் தோன்றி வேண்டுமென்றே அரைகுறைத் தமிழில் பேசி ரசிகர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்ய வேண்டும். வாய்ப்புகள் குறையும் போது, எனக்கு முதலிடம், இரண்டாம் இடம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை என்றும் வாய்ப்புகள் அறவே இல்லாதபோது கன்னடத்திலும், கேரளத்திலும் முழு கவனம் செலுத்துவதாகவும் சாமர்த்தியமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை, ஆனால் அதுவே ஆபாசமாக மாறி விடக் கூடாது எனபதில் இவர் உறுதியாக இருப்பார். படத்தில் ஒரு நடனம் மட்டும் ஆடும்போது 'சங்கர் சார் படம் என்பதால் ஒத்துக்கொண்டேன், என் மார்க்கெட் ஒன்றும் சரிந்து விடவில்லை' என்று சப்பைக்கட்டு கட்டுவார். ஒரு இயக்குனரின் முதல் மனைவியாகவோ அல்லது புகழ் பெற்ற நடிகரின் இரண்டாவது மனைவியாகவோ சரணடைந்து தொலைக்காட்சி நெடுந்தொடரில் நடிக்க முடிவு செய்யும் போது இவரது வாழ்க்கை முழுமை பெறுகிறது.

அடுத்து நகைச்சுவை. நகைச்சுவை நடிகருக்கு பொது அறிவு தேவை. 'அடப்பாவி, நீ என்ன ஜார்ஜ் புஷ்ஷா? நா என்ன பின் லேடனா? மெட்ராஸ் என்ன டோரா போராவா?' என்று தற்காலிக உலக நடப்புகளைப் பற்றிப் பேசி ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும். தரக்குறைவான விஷயங்களைப் பற்றிக் கூச்சப்படாமல் பேச வேண்டும். சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை சரளமாக உபயோகப்படுத்தத் தெரிய வேண்டும். மனைவி கணவனைக் கரிக்கட்டை என்றும், கணவன் மனைவியைக் குறத்தி என்றும் அன்பாக அழைத்து ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். நாயகன் எவ்வழியோ இவர் அவ்வழி. நாயகன் பேட்டை ரௌடி என்றால் இவர் உதவியாளனாக வந்து சண்டையும் இடுவார். நாயகியிடம் நாயகனின் உள்ளே இருக்கும் ஈர மனதை பக்குவமாக எடுத்தும் சொல்வார். நாயகன் கல்லூரி மாணவர் என்றால் நாற்பது வயதாகும் இவர், கல்லூரியில் தேறாமல் பல வருடங்கள் படித்து வரும் முதிய மாணவராக வந்து ரசிகர்களை மகிழ்விப்பார். நாயகன் உயர் காவலதிகாரி என்றால் இவர் கான்ஸ்டபிளாக வந்து பெண் கான்ஸ்டபிளிடம் சில்மிஷங்கள் புரிய வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை இவர் வீணடிப்பதில்லை. மதங்களையும் மூடநம்பிக்கைகளையும் விளாசும் இவர் தற்காப்புக்கு தன் ஜாதிச் சங்கங்களை நாடுவார்.

இயக்குனருக்கு வருவோம். இவருக்கு இயக்கத் தெரிந்திருக்க அவசியமில்லை. ஒரு கதை வைத்திருப்பார். அந்தக் கதை இது வரையில் எந்தப் படத்திலும் சொல்லப்படவில்லை என்பதில் அசாத்திய நம்பிக்கை உள்ளவர். இந்தக் கதையை அங்கீகரிக்கும் ஒரு அப்பாவி தயாரிப்பாளர் கிடைத்து விட்டால் இயக்கம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று நினைப்பவர். குழந்தைகள் கூட எளிதாக ஊகிக்கும் ஒரு விஷயத்தைத் துருப்புச் சீட்டாக எண்ணி இறுதிக் காட்சியில் அமைப்பவர். ஒரு மும்பை நாயகி, அவளை இது வரை எந்த நாயகனும் செய்திராத வகையில் வித்தியாசமாகக் காதலிக்கும் ஒரு வார தாடி வைத்த நாயகன், இறுதிக் காட்சியில் நாயகன் நாயகிக்காகச் செய்யப்போகும் தியாகம், புதிதாகப்(!!) போடப்பட்டது என்ற உறுதிமொழியொடு இசையமைப்பாளர் அளித்து அயல்தேசத்தில் படம் பிடிக்கப்பட்ட சில பாடல்கள் ஆகியவற்றை நம்பி 'A, B சென்டர்ல ஓடிரும் சார், C மாத்திரம் பிக் அப் ஆயிடுச்சின்னா 2 வாரத்தில போட்டபணம் எடுத்திடலாம்' என்று தயாரிப்பாளருக்கு ஆசை காட்டுபவர். 'வழக்கமான முக்கோணக் காதல் கதை என்றாலும், ஒரு மாறுபட்ட கோணத்தில் (270 டிகிரீஸ்???) எடுத்திருக்கிறோம் என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பவர். படம் ஓடவில்லை என்றால் 'ரசனை கெட்ட ஜென்மங்கள்' என்ற பட்டத்தை மக்களுக்குத் தருபவர்.

இசையமைப்பாளர், இவருக்கு இவரே சூட்டிக்கொண்ட ஒரு பட்டம் இருக்கும். மறு உபயோகத்தில் அபார நம்பிக்கை கொண்ட இவர் ஒருபோதும் சக்கரத்தை மறுபடியும் கண்டுபிடிப்பதில்லை. பொருள் சார்ந்த முறை (OOM) யைப் பயன்படுத்தி இவர் மென்பொருள் தயாரிக்க முடிவு செய்தால் கிரேடி பூச் போன்றவர்கள் இசைத்துறைக்கு மாற வேண்டி இருக்கும். இசை அமைப்பதை ஒரு தொழிற்சாலை நடத்துவது போலக் கருதும் இவருக்குத் தரக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை இருப்பதில்லை. திரைப்பட அரங்குகளில் சிறுகடை நடத்துபவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்களின் அபிமானத்துக்கு உரியவர். பாடல்களில் கூடுமான வரை அர்த்தம் இருக்கக் கூடாது. அகராதியில் உள்ள வார்த்தைகளை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். தம்பியின் நினைவு தினத்தை 'போடாங்கோ' என்று பாடி அனுசரிக்கலாம். ஓடிப் போவது கல்யாணத்திற்கு முன்பா பின்பா என்று உபயோகமான ஆலோசனைகளை அள்ளி வழங்கலாம்.

கதைக்கு செல்வோமா? மிக எளிது. நாயகன் நாயகியை எப்படியாவது காதலிக்க வேண்டும். வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும். நாக்கை வெட்டிக் கொள்ளலாம். பார்க்காமல் காதலிக்கலாம். தொலைபேசியில் காதலிக்கலாம். முதல் காட்சியில் நாயகனும் நாயகியும் சந்தித்து எந்த தகவலும் பரிமாரிக்கொள்ளாமல் பிரிந்து விட்டு, பின்னர் படம் முழுவதும் பரஸ்பரம் தேடலில் செலவு செய்யலாம். காதல் ஒருமுறைதான் வரும், இரண்டாவது முறை வந்தால் அது காதலே அல்ல என்று காதலையே கண்டு பிடித்தது போல வசனம் பேசலாம். கண்டிப்பாக பாடல்கள் வேண்டும். நாயகனும் நாயகியும் டூயட் பாடும்போது சம்பந்தமே இல்லாமல் இருபது ஆண்களும் இருபது பெண்களும் பின்னால் ஆடி, தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்துவார்கள்.
நாயகன் முதல்வராக இருந்தாலும் சரி, தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக நடனம் ஆடி ரசிகர்களைத் திருப்தி அடையச் செய்ய வேண்டும். தென்னவனில் விஜய்காந்த் தேர்தல் அதிகாரியாக வந்து நீலம், மஞ்சள், ஊதா, சிகப்பு மற்றும் பல கலர்களில் கிரணுடன் நடனம் ஆடி அரசு அதிகாரிகள் மீது நமக்குள்ள மரியாதையை உயர்த்துவது போகப் படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை நிறைவு செயகிறார். நாயகனுக்கோ நாயகிக்கோ இறுதிக் காடசியில் வரும் நோய்கள் ஜனங்களின் மருத்துவ அறிவை அதிகரிக்கும். இறுதியாக சராசரி ரசிகன். இவனுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறியத் தலையைப் பிய்த்துக்கொள்ளும் திரைப்படக் கலைஞர்களுக்கு இவனுக்கே அது தெரியாது என்ற ரகசியம் தெரியாது. தன் அபிமான நடிகனின் உயர்ச்சியில் ஜென்ம சாபல்யம் அடையும் இவன், தன் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியைத் திரை அரங்கின் வெளியே கள்ள டிக்கெட் வாங்குவதிலும், VCD தேடி அலைவதிலும் செலவு செய்கிறான். முக்கால்வாசி நேரம் இளித்தவாயனாகவே இருக்கும் இவனே மொத்த திரையுலகின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நாயகன்.

நன்றி
ச.சத்தியவாகீஸ்வரன்.

Sunday, April 13, 2008

அருவி

அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! சித்திரை வெயிலுக்கு இதமா அருவில வந்து கொஞ்சம் நனைஞ்சுட்டு போலாமே :)

Monday, April 07, 2008

தத்தி நடை பழகி

ஒவ்வொரு முறை தொலைபேசும் போதும், பிள்ளைகள் என்ன பண்ணுது, பேசச் சொல்லேன் என்றும், புதுசா போட்டா புடிச்சிருக்கீங்களா அனுப்பி வைங்க என்றும் நமது பெற்றோர் கேட்பது வெகுவான NRI நடைமுறையில் உள்ள ஒன்று. அவர்களைப் பற்றி இயன்றவரையில் ஒரு கவிதையில் வடித்திருக்கிறேன். வாசித்து உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_07.html

பெண்

நீங்க ஆணா இருந்தாலும் இதைப் படிக்கலாம்; தப்பில்லை.

Sunday, April 06, 2008

எது பெரிது


எந்த ஊனில் எந்தப் புற்றோ?

இந்தப் புற்றுநோயின் கொடுமை பெரிதா?
இத்தீங்கு வந்தவரின் துயரம் பெரிதா?

இந்நோயை வெல்ல முயன்ற பெவினின் உறுதி பெரிதா?
அவனுக்கு துணை நின்ற நண்பர்களின் நட்பு பெரிதா?
பலர் கண்களைத் திறந்த வினய்யின், சமீரின் சாதனை பெரிதா?
எட்டு வயது ஆதித்யாவை இழந்த பெற்றோரின் சோகம் பெரிதா?
எட்டு மாதம்கூட நிரம்பாமல் சென்ற பிரனவின் இழப்பு பெரிதா?

சிகிச்சை பெற்றுவரும் தாயைப் பிரிந்த இரு சிறார்களின் தவிப்பு பெரிதா?
மருத்துவமனையிலேயே குடியிருக்கும் இவர்தம் குடும்பத்தின் பொறுமை பெரிதா?
குழந்தைகளுடனும் மருத்துவமனைக்கும் அல்லாடும் மனைவியின் மனதிடம் பெரிதா?
மகன் படும் இன்னலை பார்க்கும் வயதான தந்தையின் சகிப்பு பெரிதா?
இவர்க்கு உதவ முடியாமல் தவிக்கும் உற்றாரின் இயலாமை பெரிதா?
இந்நோயின் தீவிரம் உணரா மக்களின் உதாசீனம் பெரிதா?

இவர்க்கு பொருத்தம் தேட உழைக்கும் நண்பர் உழைப்பு பெரிதா?
பொருத்தம் கிடைத்தவுடன் அனைவரும் அடையும் மகிழ்ச்சி பெரிதா?
பொருள் வழங்கும் அறிமுகமற்ற மக்கள் மனித நேயம் பெரிதா?
இந்நோயை வெல்ல முயலும் ஆர்ம்ஸ்ட்ராங்கின் முயற்சி பெரிதா?
எண்ணற்ற மருத்துவர்களின் ஆராய்ச்சி பெரிதா?

இவ்வனைத்தையும்விட பெரிதாக வேண்டும்

Wednesday, April 02, 2008

விதை ஒன்று செடி மூன்று (3-in-1) - Trucks & Drivers

கொஞ்சம் வித்தியாசம் செய்யலாம் என்று நினைத்து 3‍-in-1 பதிவு ஒன்று பதிந்திருக்கிறேன். இங்கே ஓடும் ட்ரக்குகள் பற்றிய பதிவு. 3-in-1, மற்றும் உட்கருத்து, எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

http://vazhakkampol.blogspot.com/2008/03/3-in-1-trucks-drivers.html

Tuesday, April 01, 2008

கார்மேகக் காகத்தின் கதை!

எல்லோரும் காக்கா நரி கதை படித்திருப்பீர்கள். அதை கவிதையாக வடித்திருக்கிறேன்.  


புழுதி படிந்த ஒரு கிராமத்தில் 
ஒரு யௌவனக் கிழவி வடை
 சுட்டு விற்று வந்தாள்
காசு பெற்று வந்தாள்

அந்த கந்தக வடையை
கவர்ந்து செல்ல அங்கே வந்தது
ஒரு கார்மேகக் காகம்
பாட்டிக்கு மட்டும் அந்த கார்மேகக் காகத்தின்  
கள்ள எண்ணம் தெரிந்திருந்தால்
அவளது கல்லறைப் பூக்கள்கூட
அவளுக்காக கண்ணீர் சிந்தியிருக்காது.

பாட்டி பாராத சமயம்
அந்த கார்மேகக் காகம் 
சந்தன மின்னல் போல் பாய்ந்து
அந்த கந்தக வடையை கவர்ந்து சென்றது

விதைக்குள் இருந்து வந்த விருக்ஷம்
அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம்
அதன் சுந்தரக் கிளைகளில் சென்று அமர்ந்தது
அந்த சொப்பனக் காகம்

பூவுக்குள் பூகம்பம்போல்
புறப்பட்டு வந்தது ஒரு நரி
அந்த நரி - நர்த்தக நரி
நாலடியார் நரி
நீதியறிந்து போதி சொல்லும்
போதி மரத்து சாதி
கார்மேகக் காகம் வைத்திருந்த அந்த வடையை
அந்த நரி பார்த்தது
உடல் வேர்த்தது
அந்த ராஜவடையை அபகரிக்க
அதன் நந்தவன மூளை
நாசவேலை ஒன்றை செய்தது

நரி
அதுவாகச் சென்றது ,
காகம் இருந்த மரத்தடியே
மெதுவாகச் சென்றது
ஆனால் அந்தக் கார்மேகக் காகமோ
இச்சக அழகியாகி ய
எச்சம் கூட போட மறந்து
அந்த வீரிய வடையை
தன் நேரிய விரல்களுக்கிடையில் வைத்து
அதன் கூர்மையை சோதித்துக் கொண்டிருந்தது

நரி பகர்ந்தது
ஓ உலக அழகியே
உள்ளூர் மோனலிசாவே
நகராட்சி ப் பூங்காவுக்குள் நுழைந்த நமீதாவே
என் அந்தப்புரத்துக்குள் அத்து மீறி புகுந்த அசினே
தீவுத் திடலில் திடும்பென  நுழைந்த திரிஷாவே
நீ பார்க்கவே எ வ்வளவு அழகு
நீ மட்டும் உன் கந்தர்வக் குரலிலே ஒரு கானம் இசைத்தால்
எருதுக்கும் விருது கிடைக்கும்
சர்ப்பம்கூட கர்ப்பம் தரிக்கும்
ஏன்,  நீருக்கும் வேர்க்கும் என்றது

இந்த இடத்தில்தான் சரித்திரம் சரிகிறது
பூகோளம் புரள்கிறது
தமிழ் தடுமாறுகிறது

நரியின் தேவ எண்ணத்திலே
ஈட்டி பாய்ந்தது
ஏனென்றால்,

 காகம் என்ன பதிலளித்தது தெரியுமா?
ஏ நர்த்தக நரியே
நான் பாடமாட்டேன்.
ஏனென்றால்

நான் நாகுவின் வாசலில் வளர்ந்த காகம்
ஆகவே மெட்டு இல்லாமல் பாட மாட்டேன்
என்று சொல்லி வடையுடன் பறந்தது

ரிச்மண்ட் மக்களே
பாசமுள்ள ரிச்மண்ட் தமிழ் மக்களே
காகத்தின் உயிரில் வசந்தம் இனித்தது
மனதிற்குள் மழை பொழிந்தது
அங்கே ஆனந்தங்கள் பரவசம்
அனுமதி இலவசம்
கார்மேகக் காகத்தின் கதை
என்னைப் பொருத்தவரை
ஒரு கருவாட்சிக் காவியம் !
கள்ளிக்காட்டு இதிகாசம் !!

பாசமுள்ள ரிச்மண்ட் வாசிகளே
நீங்கள் பள்ளிகளிலும்
பல்கலைக் கழகங்களிலும்
இந்தக் கார்மேகக் காகத்தின் கதையை
பாடத்திட்டமாக்க பரிந்துரை செய்யுங்கள்!

வணக்கம் கூறி கதை முடித்தேன் யான்.


பிகு: நானே எழுதியது என்று சொன்னால்.....  பித்தன் நெற்றிக்கண்ணைத் திறந்திடப் போகிறார். அதனால் சொல்லிவிடுகிறேன். இந்த மண்டபத்தில் சுட்டது. அதுவுமில்லாமல் ஏப்ரல் ரெண்டுக்குள் எழுத ஒரு கெடு.. அதான் ஹி.... ஹி....







Monday, March 31, 2008

என் கண்மணி

நானே எப்பவாச்சும்தான் என் வலைப்பூ பக்கம் போறேன்; ஆனா நீங்களெல்லாம் எப்பவுமே (சதங்கா மட்டும் போனாப் போகுதுன்னு... நன்றி, சதங்கா! :) அந்தப் பக்கம் வரதில்லை. இதான் என் கடைசி முயற்சி, உங்களை வர வைக்க...

என் கண்மணி

பித்தனின் கிறுக்கல்கள் - 21

ஷாருக்கான் வாரம்
இந்த வாரம் ஷாருக்கானின் மூன்று படங்கள் பார்த்தேன். இவர் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்று சொன்னால் அது உலக மகா பொய்யாக இருக்கும் இவருடைய நடிப்பு சற்று சிவாஜி காலத்து மிகை நடிப்பு வகையைச் சார்ந்தது. ஆனால் இவருடைய படங்களில் ஒரு ஒற்றுமை, எந்தத் திராபை படமானாலும் அதைத் தனது தோளில் தூக்கி சென்று காப்பாற்ற ரொம்ப பாடு படுகிறார்.

முதலில் கல் ஹோ நா ஹோ (நாளை இருக்குமோ இருக்காதோ- இது சரியான அர்த்தமா என்று தெரியவில்லை)

2003-ல் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் (இது சக்கை போடு போட்டத் தகவல் தந்தது எனது அலுவலக நண்பர், அது சரியில்லை என்றால் சொல்லுங்கள் அவரை 'சரியாக' கவனிக்கிறேன்)

கதை கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து எல்லோரிடமும் இருக்கிற ஒரு கதை. இது பாலைவனச் சோலையின் கதைதான். என்ன சுஹாசினிக்கு பதில் ஷாருக்கான். 5 தண்டச் சோறு தடிமாடுகளுக்கு பதில் அழகான ப்ரீத்தி ஜின்டாவும், சயிஃப் அலிகானும். அவர்கள் நடிப்பிலும் ஒன்றும் சோடையில்லை. யாருக்காவது ஏதாவது தேவையா, ஷாருக்கான் உதவுவார், வியாபாரம் டல்லா, ஷாருக்கான் உதவுவார், டேட்டிங்கில் ப்ரச்சனையா, ஷாருக்கான் உதவுவார், பாட்டிகளுக்கு மன உளைச்சலா கவலை வேண்டாம், ஷாருக்கான் உதவுவார். என்ன, வீடு, மனை வாங்க விற்க அணுகவும் என்று ஒரு போர்ட் போட்டுக் கொண்டு அவர் அலையாததுதான் பாக்கி. பாடல்கள் பலவும் சூப்பர். அதிலும், ப்ரெட்டி உமன் பாட்டு சங்கர் மகாதேவன் பின்னியிருந்தாலும் சரியான குத்து மெட்டு. எனக்கு பிடித்தது, சோனு நிகம் பாடியுள்ள டைடில் பாடல் 'ஹர் கடி பதல் ரஹி ஹை ரூப் ஜிந்தகி' பாடல்தான். ஆச்சர்யமான ஒரு விஷயம் ஷாருக்கானின் மிகை நடிப்பைத் தாண்டி அவரை இந்தப் படத்தில் மிகவும் ரசிக்க முடிகிறது. படம் முடியும் தருவாயில் மனதை சற்று அழுத்துகிறது ஷாருக்கானின் சில வசனங்கள்.

இரண்டாவது ஓம் சாந்தி ஓம்.
2007-ல் வெளிவந்து பாலிவுட்டில் பலரையும் ஆட்டம் காண வைத்த படம். இது சென்னையில் ரிலீஸான போது அதற்கு பெரிய கட்டவுட் வைத்து கொண்டாடினார்களாம். இந்தக் கதையும் ஒரு அடாசு கதைதான், ஹிந்தியில் ரிஷி கபூர் நடித்த கர்ஸ், தமிழில் கமல் நடித்து எனக்குள் ஒருவன் என்று வெளிவந்த அதே டப்பா கதைதான். கமல் கூட பரவாயில்லை கொஞ்சம் நஞ்சம் டான்ஸ் ஆடத் தெரியும், வெறும் சாணி மிதிக்கிற ரிஷி கபூர் நடித்த ஹிந்தி படம் தாங்க முடியாத குப்பை. இதை கலந்து கட்டி ஒரு அருமையான பொழுது போக்குப் படமாக தந்திருக்கிற ஷாருக்கானின் தைரியம், அதைவிட அதைத் தயாரித்த அவருடைய துணைவியார் கௌரி கானின் துணிச்சல் அசாத்தியம். படத்தில் எம்.ஜி.ஆர். போல காட்சிக்குக் காட்சி ஷாருக்கான் வருகிறார். கதாநாயகி புதுமுகம் தீபிகா படுகோனே. ஆம் முன்னாள் இந்திய பாட்மிட்டன் சாம்பியன் ப்ரகாஷ் படுகோனேயின் மகள்தான் இவர். ஆனால் பாவம் இவர், துணி பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி படத்தில் பல காட்சிகளில் வருகிறார். மற்றபடி பேர் சொல்லும்படி ஒருவரும் இல்லாத இந்தப் படத்தில் ஷாருக்கான் மற்றும் ஷாருக்கான் (ஒன்று முன் ஜென்மம், அடுத்தது புனர்ஜென்மம்) மட்டுமே ப்ரதானமாகத் தெரிகிறார்கள். படத்தில் எனக்கு பிடித்த காட்சி, ஷாருக் தனது நண்பனுக்கு கைத் தொலை பேசியில் பேசும் போது தனது அம்மா தயாரா என்று கேட்க அதற்கு அவர், தயார்தான் ஆனால் ரொம்ப ஓவர் ஆக்ட் பண்ணி காரியத்தை கெடுத்து விடுவார்கள் போல இருக்கு என்று சொல்ல, அதற்கு ஷாருக்கான், அதை ஒன்னும் பண்ண முடியாது அது எங்க குடும்பத்துப் ப்ராப்ளம் என்று சொல்லும் இடம் க்ளாஸ். இந்தப் படத்திலும் ஷாருக்கான் மட்டுமே இந்தப் ப்ரமாண்டமான படத்தை நகர்த்திச் செல்கிறார்.

மூன்றாவது - சக் தே இந்தியா (Go for it, India)
2007-ல் வெளிவந்த மற்றொரு படம். உலக கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தானுடன் போராடி தோற்ற இந்திய அணியின் கேப்டன் கபீர் கான் வேடத்தில் ஷாருக்கான் நிஜமாகவே நடித்துள்ள ஒரு படம். 7 வருடம் அஞ்சாத வாசம் வாழ்ந்து விட்டு, பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு கோச்சாக வருகிறார். அவர்களை கசக்கி பிழிந்து, ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தி, அந்தப் புள்ளி டீம் ஸ்பிரிட் என்று காட்டி அவர்களை உலகக் கோப்பை வெற்றி பெறச் செய்கிறார். முடிவில் இவரை 7 வருடம் தூற்றியவர்கள் அனைவரும் வாய் ஓயாமல் பாராட்டச் செய்கிறார். படத்தில் 16 இளம் பெண்கள் இருந்தும் ஒரு விகல்பம் கிடையாது, ஒரு அசிங்கமான நடனம், அசிங்கமான அங்க அசைவு கிடையாது, படம் முழுவதும் ஒரு 3-4 நாள் தாடியுடன் ஷாருக்கான் வருகிறார். ஒரு சில காட்சிகளில் ரொம்ப சாதுவாக இருக்கும் அவர், மற்ற காட்சிகளில் தன்னை மிஞ்சி ஒரு ஹாக்கி வீரர் இல்லை என்பது போல வளைய வருகிறார். பயிற்சியின் போது ஒரு பெண் பந்தை யாருக்கும் தராமல் தானே எடுத்து சென்று கோல் போட்டு விட்டு குதிக்கும் போது, அவரை அழைத்து என்னது அது என்று ஒரு வார்த்தையில் மடக்கி அவர் செய்த பிழை என்ன என்று தெரியும் வரை வெளியே நிற்க வைப்பது கலக்கல். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு பாடல் கிடையாது, கதாநாயகி யாரும் கிடையாது. வெத்து டைலாக் கிடையாது, முக்கியமாக, பஞ்ச் டைலாக் கிடையாது. இது போல ஒரு படம் செய்ய ஆமீர் கானைப் போல எனக்கும் தைரியம் உண்டு என்று நிரூபித்து இருக்கிறார். இந்த படத்திற்கு அவர் Filmfare சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார் அது மிகப் பொருத்தமானதுதான்.

53-வது Filmfare விருது வழங்கும் விழா
இதில் சிறப்பு அம்சம், ஷாருக்கானும், சயிஃப் அலிகானும் இணைந்து வழங்கிய நிகழ்ச்சி. ஆரம்பிக்கும் போதே சயிஃப் சொல்லி விடுகிறார், இது ஒரு கடுமையான நிகழ்ச்சி, இது மற்றவர்களைப் புண்படுத்துவதற்காகத்தான், எனவே தவறாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று. இப்போது தெரிந்திருக்கும் அவர்கள் எப்படி அநியாயம் செய்திருப்பார்கள் என்று. அவர்கள் பேச்சு கொஞ்சம் வரம்பு மீறியிருந்தாலும், எனக்கு பிடித்தது இருவருடைய அபாரமான மேடைப் பேச்சின் ஒருங்கிணைப்பு. இது போல ஒரு ஜனரஞ்சகமாக ஒரு நிகழ்ச்சியை தமிழில் தர ஒருவரும் இல்லை என்பது என் வருத்தம். சமீபத்தில் இதே போல தமிழில் ஒரு நிகழ்ச்சி மலேஷியாவில் நடந்தது அதில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தலைமையில் ஒரு நாடகம் இடையிடையே நடத்தினார்கள் அதில் ராதா ரவியும் இருந்தார். சிரிப்பை வரவழைக்க எல்லோருக்கும் கிச்சு கிச்சு மூட்டிவிட வேண்டியிருந்தது, அவ்வளவு அடாசு ரகம். இதில் கமல் ரஜனி பங்கேற்கவில்லை, காரணம் அவர்கள் அவ்வளவு பிஸி. தமிழ் நடிகர்கள் ஏன் இவ்வளவு போலியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

காந்தி
காந்தியடிகள் பற்றிய கட்டுரையை நாகுவின் பதிவில் படித்ததும் சமீபத்தில் எனது நண்பர்களுடன் நடந்த ஒரு சிறிய உரையாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளளாம் என்று இருக்கிறேன்.

உரையாடலில் எப்படி குஜராத்திகள் தாங்கள் ஆரம்பிக்கும் எந்த தொழிலையும் திறமையாக செய்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அவர்களின், கடின உழைப்பு, விடா முயற்சி, எந்தத் தொழிலும் கேவலம் இல்லை என்ற மன நிலை, அவர்களின் 'Kill Power' என்று நான் வாதாடினேன், 'Kill Power' பற்றி விளக்கச் சொன்ன போது நான் சொன்னேன், ஒருவன் தனது மனதில், இவரால் இது முடியும், அவரால் அது முடியும் என்றால் அது என்னாலும் முடியும் என்ற ஒரு வெறி ஒவ்வொரு குஜராத்தியின் மனதிலும் ஆழ வேறூன்றி இருக்கிறது, அது 'Will Power' என்பார்கள், நான் அதை 'Kill Power' என்பேன், காரணம், அவர்களின் அந்த வெறி அத்துணை பலம் வாய்ந்தது. ஒரு சாதாரண வக்கீல், அன்னிய மண்ணில் ஒரு முறை ஒரு நிற வெறியனால், ரயிலில் இருந்து தூக்கியெறியப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவர்களை தனது சொந்த மண்ணிலிருந்து தானாக வெளியில் செல்ல வைக்கிறார். அதற்கு அவர் பின்னால் அவருடைய சொந்த நாடே அணி திரண்டு செல்கிறது. அந்த குஜராத்தியர் இன்றும் நமது தேசத்தின் தந்தை என்று போற்றப் படுகிறார். இன்றும் மகாத்மா என்றால் அவர் நினைவுக்கு வருகிறாரே என்றேன்.

மீண்டும் தொடங்கிய விவாதத்திற்கு வருகிறேன். பொதுவாக நம்பப் படும் கருத்துக்களுக்கு மாறாக ஒரு கருத்தை அளிக்க வேண்டும் என்றால், எத்தனையோ கருத்துக்களை எடுத்து எழுதியிருக்கலாம். இங்கு அரசியலில் அனைவரும் சுத்தம் என்று எழுதியிருக்கலாம், அதிலும் இந்நாட்டின் தலைவரே பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பின்பு, அனைவரும் சுத்தம் என்ற வகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தால், ஆசிரியர்கள் அதிர்ந்து போய் A+ கூட தந்திருப்பார்கள். அல்லது சீனா ஒரு ஜனநாயகக் குடியரசு என்றோ, மத்திய கிழக்கு ஆசியா நாடுகள் சமய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று கூடி வசிக்கும் இடம் என்றோ எழுதியிருக்கலாம். என்ன ஒரு சிக்கல் அப்படி எழுதியிருந்தால், அப்படி எழுதிய மாணவர் (அ) மாணவி யார் என்று 'யாராவது' விசாரிக்க ஆரம்பித்திருப்பார்கள். காந்தியைப் பற்றி எழுதினால், யார் என்ன செய்யப் போகிறார்கள். அதோடு காந்தியை பற்றி அதிகம் தெரிந்தவர்கள், அவருடைய அஹிம்சா வழிகளைப் பற்றியும் தெரிந்தவர்கள் எனவே கண்டிப்பாக எதிர்க்க மாட்டார்கள் என்றும் தெரிந்திருக்கும்.


50% ஓட்டுக்கள் பெற்றால்தான் வெற்றி

சட்டசபைத் தேர்தல்களில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால், அவர் பதிவாகும் ஓட்டுக்களில் குறைந்தது 50 சதவீத ஓட்டுக்களைப் பெற வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாசாமி யோசனை தெரிவித்துள்ளார். இருவர் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற சட்டம் இல்லாத போது, அதிலும் அதிக பட்ச வேட்பாளர்கள் எத்தனை பேர் போட்டியிடலாம் என்ற விதி முறையும் இல்லாத போது இது எப்படி சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. கள்ள ஓட்டைத் தவிர்க்க பொது விதி இல்லை, மேலும் பதிவாகும் ஓட்டுகள் அதிக பட்சம் 65% என்னும் போது இது எப்படி சாத்தியம். இந்தக் கருத்தை என்னைப் போன்ற அரசியல் அறிவு கிஞ்சித்தும் இல்லாத ஒருவர் சொன்னால், சரி, ஏதோ அறியாமையில் பிதற்றுகிறார் என்று விட்டு விடலாம், இந்தியாவின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஒரு உயரிய பதவியில் இருக்கும் ஒருவர், அதிகம் படித்த ஒருவர் இப்படி பேசியிருக்கிறார். இது ஒரு வேளை அவருடைய மன உளைச்சலை வெளிக்கொட்டி சொன்னதோ என்னவோ, எனக்குத் தெரியவில்லை.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....
பித்தனின் மற்றப் பதிவுகளை
இங்கே படிக்கலாம்.