2004ல் தமிழ் சங்க இலக்கியப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை. நம் சினிமா நான்கு வருடங்களில் மாறிவிடுமா என்ன? இன்னமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
தமிழ்த் திரையுலகம் ஒரு பார்வை
நடிகர் திலகம், மக்கள் திலகம், கலைவாணர், நடிகவேள், நாகேஷ், சாவித்திரி, பானுமதி, பத்மினி மற்றும் பலர் நடிப்பில் கொடி கட்டிய, இயக்குனர் சிகரம், இயக்குனர் இமயம், மகேந்திரன், ஸ்ரீதர் மற்றும் பலர் இயக்கத்தில் புதிய சகாப்தங்கள் படைத்த தமிழ்த் திரையுலகம் இன்று எங்கே உள்ளது என்று பார்ப்போமா?
முதலாவது தற்போது தமிழ்ப்படத்தில் நடிக்கத் தேவையான தகுதிகள். நடிகர்களை முதலில் எடுத்துக்கொள்வொம். கதாநாயகன் காவல் அதிகாரியாக அல்லாத எந்த ஒரு சமீபத்திய திரைப்படத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். கதாநாயகன் ஒரு வாரம் மழிக்காத தாடியுடன் காணப்படுவார். காரணம் பளிச்சென்று காணப்படும் நடிகரைத் தமிழ் மக்கள்(??) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்(!!) ஸ்ரீகாந்தை எடுத்துக்கொள்ளுங்கள். திருமணக்காட்சியில் கூட தாடியுடன் இருப்பார். இவர் தாடி வைத்திருந்தால் தரணி முழுவதும் இவர் பின்னால் வந்து விடுமா? தாடி இல்லாவிடில் இவர் தலையைக் கொய்து விடுவார்களா? ஏன் இந்த மூட நம்பிக்கை? அஜீத்!! இவர்தான் இந்த பாரம்பரியத்தை அமர்க்களத்தில் ஆரம்பித்து வைத்தார். அந்த உரிமையில் காவல் அதிகாரியாகக்கூட தாடியுடன் வலம் வருகிறார் ஆஞ்சநேயாவில். விஜய்!! காதலை ஏகபோக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு படத்திற்குப் படம் இறுதிக் காட்சிகளில் காதலைப் பற்றி அறிவுரைகளை அள்ளி வழங்கும் இவருக்கு தாடி வளர்வதே இல்லை. மிகவும் கடினப்பட்டு வளர்த்த சிறு தாடியுடன் ரசிகர்களை(!!!) மகிழ்விக்கிறார். காவல் அதிகாரியாக சாமியில் வரும் விக்ரம் கூட இந்த பாரம்பரியத்தை மாற்ற மனமில்லாமல் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு ஒரு காட்சியில் தாடியுடன் நடனமாடி ரசிகர்களை ஜென்ம சாபல்யம் அடைய வைக்கிறார். ஏன்! நம் சூப்பர் ஸ்டாரும் பாபாவில் ஒரு வார தாடியுடன் தோன்றி ரசிகர்களைப் பிறந்த பயனை அனுபவிக்க வைக்கிறார். உலக நாயகன் மாத்திரம் இளப்பமா? காணுங்கள் பம்மல் கே சம்பந்தம். கதாநாயகனுக்குப் பொதுவாக எல்லாமே தெரியும். பாட்டு பாடுவார், நடனம் ஆடுவார். எந்த இசைக்கருவியையும் சரளமாக வாசித்து கதாநாயகியை வியக்க வைப்பார். கராத்தே, சிலம்பு, குத்துச்சண்டை உட்பட சகல சண்டை முறைகளையும் அறிந்தவர். மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்று நினைத்து இவர் கையாளும் பல யுக்திகள் அபத்தங்களாக முடிவதுண்டு. தன் ரசிகர்(!!!)களுக்கு என்ன பிடிக்கும் என்பதை இவர் அறிந்திருக்கும் போது, அடுத்த தலைமுறை நடிக்க வந்து இவரை ஒதுக்கியிருப்பார்கள்.
தமிழ்ப்படக் கதாநாயகிக்குக் குறைந்த பட்சத் தேவை, தமிழ்நாட்டில் பிறந்திருக்கக் கூடாது. அப்படிப் பிறந்திருந்தாலும் மும்பையில் வளர்ந்ததாகப் பொய் சொல்ல வேண்டும். பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளில் தோன்றி வேண்டுமென்றே அரைகுறைத் தமிழில் பேசி ரசிகர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்ய வேண்டும். வாய்ப்புகள் குறையும் போது, எனக்கு முதலிடம், இரண்டாம் இடம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை என்றும் வாய்ப்புகள் அறவே இல்லாதபோது கன்னடத்திலும், கேரளத்திலும் முழு கவனம் செலுத்துவதாகவும் சாமர்த்தியமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை, ஆனால் அதுவே ஆபாசமாக மாறி விடக் கூடாது எனபதில் இவர் உறுதியாக இருப்பார். படத்தில் ஒரு நடனம் மட்டும் ஆடும்போது 'சங்கர் சார் படம் என்பதால் ஒத்துக்கொண்டேன், என் மார்க்கெட் ஒன்றும் சரிந்து விடவில்லை' என்று சப்பைக்கட்டு கட்டுவார். ஒரு இயக்குனரின் முதல் மனைவியாகவோ அல்லது புகழ் பெற்ற நடிகரின் இரண்டாவது மனைவியாகவோ சரணடைந்து தொலைக்காட்சி நெடுந்தொடரில் நடிக்க முடிவு செய்யும் போது இவரது வாழ்க்கை முழுமை பெறுகிறது.
அடுத்து நகைச்சுவை. நகைச்சுவை நடிகருக்கு பொது அறிவு தேவை. 'அடப்பாவி, நீ என்ன ஜார்ஜ் புஷ்ஷா? நா என்ன பின் லேடனா? மெட்ராஸ் என்ன டோரா போராவா?' என்று தற்காலிக உலக நடப்புகளைப் பற்றிப் பேசி ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும். தரக்குறைவான விஷயங்களைப் பற்றிக் கூச்சப்படாமல் பேச வேண்டும். சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை சரளமாக உபயோகப்படுத்தத் தெரிய வேண்டும். மனைவி கணவனைக் கரிக்கட்டை என்றும், கணவன் மனைவியைக் குறத்தி என்றும் அன்பாக அழைத்து ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். நாயகன் எவ்வழியோ இவர் அவ்வழி. நாயகன் பேட்டை ரௌடி என்றால் இவர் உதவியாளனாக வந்து சண்டையும் இடுவார். நாயகியிடம் நாயகனின் உள்ளே இருக்கும் ஈர மனதை பக்குவமாக எடுத்தும் சொல்வார். நாயகன் கல்லூரி மாணவர் என்றால் நாற்பது வயதாகும் இவர், கல்லூரியில் தேறாமல் பல வருடங்கள் படித்து வரும் முதிய மாணவராக வந்து ரசிகர்களை மகிழ்விப்பார். நாயகன் உயர் காவலதிகாரி என்றால் இவர் கான்ஸ்டபிளாக வந்து பெண் கான்ஸ்டபிளிடம் சில்மிஷங்கள் புரிய வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை இவர் வீணடிப்பதில்லை. மதங்களையும் மூடநம்பிக்கைகளையும் விளாசும் இவர் தற்காப்புக்கு தன் ஜாதிச் சங்கங்களை நாடுவார்.
இயக்குனருக்கு வருவோம். இவருக்கு இயக்கத் தெரிந்திருக்க அவசியமில்லை. ஒரு கதை வைத்திருப்பார். அந்தக் கதை இது வரையில் எந்தப் படத்திலும் சொல்லப்படவில்லை என்பதில் அசாத்திய நம்பிக்கை உள்ளவர். இந்தக் கதையை அங்கீகரிக்கும் ஒரு அப்பாவி தயாரிப்பாளர் கிடைத்து விட்டால் இயக்கம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று நினைப்பவர். குழந்தைகள் கூட எளிதாக ஊகிக்கும் ஒரு விஷயத்தைத் துருப்புச் சீட்டாக எண்ணி இறுதிக் காட்சியில் அமைப்பவர். ஒரு மும்பை நாயகி, அவளை இது வரை எந்த நாயகனும் செய்திராத வகையில் வித்தியாசமாகக் காதலிக்கும் ஒரு வார தாடி வைத்த நாயகன், இறுதிக் காட்சியில் நாயகன் நாயகிக்காகச் செய்யப்போகும் தியாகம், புதிதாகப்(!!) போடப்பட்டது என்ற உறுதிமொழியொடு இசையமைப்பாளர் அளித்து அயல்தேசத்தில் படம் பிடிக்கப்பட்ட சில பாடல்கள் ஆகியவற்றை நம்பி 'A, B சென்டர்ல ஓடிரும் சார், C மாத்திரம் பிக் அப் ஆயிடுச்சின்னா 2 வாரத்தில போட்டபணம் எடுத்திடலாம்' என்று தயாரிப்பாளருக்கு ஆசை காட்டுபவர். 'வழக்கமான முக்கோணக் காதல் கதை என்றாலும், ஒரு மாறுபட்ட கோணத்தில் (270 டிகிரீஸ்???) எடுத்திருக்கிறோம் என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பவர். படம் ஓடவில்லை என்றால் 'ரசனை கெட்ட ஜென்மங்கள்' என்ற பட்டத்தை மக்களுக்குத் தருபவர்.
இசையமைப்பாளர், இவருக்கு இவரே சூட்டிக்கொண்ட ஒரு பட்டம் இருக்கும். மறு உபயோகத்தில் அபார நம்பிக்கை கொண்ட இவர் ஒருபோதும் சக்கரத்தை மறுபடியும் கண்டுபிடிப்பதில்லை. பொருள் சார்ந்த முறை (OOM) யைப் பயன்படுத்தி இவர் மென்பொருள் தயாரிக்க முடிவு செய்தால் கிரேடி பூச் போன்றவர்கள் இசைத்துறைக்கு மாற வேண்டி இருக்கும். இசை அமைப்பதை ஒரு தொழிற்சாலை நடத்துவது போலக் கருதும் இவருக்குத் தரக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை இருப்பதில்லை. திரைப்பட அரங்குகளில் சிறுகடை நடத்துபவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்களின் அபிமானத்துக்கு உரியவர். பாடல்களில் கூடுமான வரை அர்த்தம் இருக்கக் கூடாது. அகராதியில் உள்ள வார்த்தைகளை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். தம்பியின் நினைவு தினத்தை 'போடாங்கோ' என்று பாடி அனுசரிக்கலாம். ஓடிப் போவது கல்யாணத்திற்கு முன்பா பின்பா என்று உபயோகமான ஆலோசனைகளை அள்ளி வழங்கலாம்.
கதைக்கு செல்வோமா? மிக எளிது. நாயகன் நாயகியை எப்படியாவது காதலிக்க வேண்டும். வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும். நாக்கை வெட்டிக் கொள்ளலாம். பார்க்காமல் காதலிக்கலாம். தொலைபேசியில் காதலிக்கலாம். முதல் காட்சியில் நாயகனும் நாயகியும் சந்தித்து எந்த தகவலும் பரிமாரிக்கொள்ளாமல் பிரிந்து விட்டு, பின்னர் படம் முழுவதும் பரஸ்பரம் தேடலில் செலவு செய்யலாம். காதல் ஒருமுறைதான் வரும், இரண்டாவது முறை வந்தால் அது காதலே அல்ல என்று காதலையே கண்டு பிடித்தது போல வசனம் பேசலாம். கண்டிப்பாக பாடல்கள் வேண்டும். நாயகனும் நாயகியும் டூயட் பாடும்போது சம்பந்தமே இல்லாமல் இருபது ஆண்களும் இருபது பெண்களும் பின்னால் ஆடி, தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்துவார்கள்.
நாயகன் முதல்வராக இருந்தாலும் சரி, தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக நடனம் ஆடி ரசிகர்களைத் திருப்தி அடையச் செய்ய வேண்டும். தென்னவனில் விஜய்காந்த் தேர்தல் அதிகாரியாக வந்து நீலம், மஞ்சள், ஊதா, சிகப்பு மற்றும் பல கலர்களில் கிரணுடன் நடனம் ஆடி அரசு அதிகாரிகள் மீது நமக்குள்ள மரியாதையை உயர்த்துவது போகப் படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை நிறைவு செயகிறார். நாயகனுக்கோ நாயகிக்கோ இறுதிக் காடசியில் வரும் நோய்கள் ஜனங்களின் மருத்துவ அறிவை அதிகரிக்கும். இறுதியாக சராசரி ரசிகன். இவனுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறியத் தலையைப் பிய்த்துக்கொள்ளும் திரைப்படக் கலைஞர்களுக்கு இவனுக்கே அது தெரியாது என்ற ரகசியம் தெரியாது. தன் அபிமான நடிகனின் உயர்ச்சியில் ஜென்ம சாபல்யம் அடையும் இவன், தன் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியைத் திரை அரங்கின் வெளியே கள்ள டிக்கெட் வாங்குவதிலும், VCD தேடி அலைவதிலும் செலவு செய்கிறான். முக்கால்வாசி நேரம் இளித்தவாயனாகவே இருக்கும் இவனே மொத்த திரையுலகின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நாயகன்.
நன்றி
ச.சத்தியவாகீஸ்வரன்.