Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Tuesday, November 10, 2009

சங்கீதத் துறை மாற்றங்கள்

தமிழ் நாட்டில் நல்ல் இசை நிகழ்ச்சியை கேட்பதெல்லாம் அரிதாகிவிட்டது. சென்னை நகரத்தில் ஆண்டு இறுதியில் ஒரே காலத்தில் பல மன்றங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. மற்ற நகரங்களில் இத்தகைய மன்றங்கள் சரியாக செயல்படவில்லை. முன்பெல்லாம் திருவிழா காலங்களில் நடைபெறும் சங்கீத நிகழ்ச்சிகள் கூட வேறு வகையாக போய்விட்டது.

நகரங்களில் பல விழா காலங்களில் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் திரைப்படப் பாடல்களே இடம் பெறும் இந்த மெல்லிசை நிகச்சிகளில் இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

20ம் நூற்றாண்டுக்கு முன்பு கர்நாடக சங்கீதத்திற்கு என்று தனியாக நிகழ்ச்சிகள் நடைபெற்றதில்லை. ஹரிகதா பாணியில் கதை சொல்லும் நிகழ்ச்சிக்கு இடையில் கர்நாடக பாணியில் கீர்த்தனைகள் பாடப்பட்டன. முழுவதுமாக கீர்த்தனைகளை பக்கவாத்தியங்களுடன் பாடும் வகையில் நிகழ்ச்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் தொடங்கின.

மெல்லிசை வகையில் சேரக்கூடிய ஜனரஞ்சகமான பாடல்கள், தெருக்கூத்து, நாடகம் ஆகிய மேடைகளில் பாடப்பட்டன. திரைப்பட வளர்ச்சி பெரிய அளவில் நிகழ்ந்த பிறகு மெல்லிசைக்கான தனி மேடை அமைந்தது. பெரும்பாலும் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் அந்த மேடைகளில் பாடினார்கள்.

மேடைகள் தனியாக அமைந்து நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் ஏற்பட்டது போலவே பக்க வாத்தியங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. மெல்லிசை நிகழ்ச்சிகளில் பக்க வாத்தியங்களின் ஆதிக்கம் அதிகம்.

கர்நாடக சங்கீத மேடையின் நிலைமை வேறு. அதிகமான எண்ணிக்கையில் பக்க வாத்தியங்கள் கொண்ட கச்சேரிகள் இப்பொழுதெல்லாம் அநேகமாக நடைபெறுவதில்லை. மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் இப்படி எல்லா பக்க வாத்தியக் கலஞர்களுக்கும் தொகை கொடுப்பது சற்று கடினமானதாகப் போய்விட்டது முக்கிய காரணம்.

இப்பொழுது பெரும்பாலும் இரண்டே பக்க வாத்தியங்களுடன் நிகழ்ச்சி அமைவது வாடிக்கையாகி விட்டது. சிக்கனமான நிகழ்ச்சிக்கு வயலின் மிருதங்கம் இவை இரண்டும்தான் பிரதான இசைக் கருவிகள் என்ற நிலை வந்து விட்டது.

ஒரு காலத்தில் ஹார்மோனியம் என்ற இசைக் கருவி கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் இடம் பெற்றது. இன்று அந்த இசைக் கருவி கர்நாடக இசை மேடையை விட்டு இறங்கி விட்டது.

சங்கீதம் கற்றுக் கொடுக்கும் பாட்டு வாத்தியார் ஹார்மோனியத்துடன்தான் முதல் பாட்டைத் தொடங்குவார். ஆலந்தூர் விசுவநாதய்யர் என்ற சங்கீத வித்வானுடைய ஹார்மோனியம் வாய்திறந்து பேசுவது போல இருக்கும்.

மெல்லிசை நிகழ்ச்சி மேடைகளில் ஹார்மோனியம் தொடர்ந்து வாசிக்கப்படுகிறது. நாடக மேடைகளிலும் இன்றும் அது உண்டு.

1930, 1940 களில் உறையூர் காதர் பாட்சா என்ற ஹார்மோனிய இசைக் கலைஞர் நாடக மேடைகளில் கொடி கட்டிப் பறந்தார். விளம்பர நோட்டீஸ்களில் நாடகத்தின் பெயரை எந்த அளவில் அச்சடிக்கிறார்களோ அந்த அளவில் பெரிதாக காதர்பாட்சாவின் பெயரை அச்சிட்டு விளம்பரம் செய்வார்கள். இரண்டு காட்சிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் அவருடைய ஹார்மோனியம் தன் இசையால் ரசிகர்களை கட்டிப் போடும்.
ஆனால் என்ன காரணமோ, பல சங்கீத வித்வான்கள் ஹார்மோனியத்தை கை கழுவி விட்டார்கள். பாரதியார்கூட ஹார்மோனியத்தை நல்ல சங்கீதத்தின் விரோதி என்று எழுதியிருக்கிறார். வானொலி நிலையங்களில் ஹார்மோனியம் அனுமதிக்கப் படுவதில்லை.

வயலின் ஒரு ஐரோப்பிய இசைக் கருவி. இன்று கர்நாடக இசை மேடையில் வயலின் ஒரு உறுதியான இடத்தைப் பிடித்து விட்டது. மிகக் குறைந்த பக்க வாத்தியம் கொண்ட நிகழ்ச்சிகளிலும் ஒரு இடம் வயலினுக்கு நிச்சயமாக உண்டு.

சமீபத்தில் காலமான திரு. குன்னக்குடி வைத்தியநாதனுடைய வயலின் இசையை இந்த தலைமுறையினர் கேட்டிருக்கலாம். அவருடைய வயலின் வாய் திற்ந்து பேசும், பாடும், அழும், சிரிக்கும், அவர் மட்டும்தான் அசுர வாத்தியமான தவில் மேளத்தை பக்க வாத்தியமாக வைத்துக் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

ஆனால் சில சுத்த கர்நாடக சங்கீத ரசிகர்கள் குன்னக்குடியின் இசையை கர்நாடக பாணியாக ஏற்றுக் கொள்வதில்லை.

இப்படி எல்லா துறையிலும் அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் ஏற்படும் மாற்றங்களை யாரும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. கர்நாடக சங்கீதத்தில் கடந்த பத்தாண்டுகளில் பல புதிய அம்சங்கள் தலையெடுத்திருக்கிறது. இந்த மாற்றங்களெல்லாம் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் மொழி தொடர்பான விஷயம் கர்நாடக சங்கீத உலகில் பெரிய விவாதத்தை தொடங்கி வைத்து அது இன்றளவும் முழுமையாக முடிந்து விட்டதாக சொல்ல முடியாது.

அந்த விவாதம் தான் தமிழ் இசை தொடர்பான விவாதம்.
19ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் கர்நாடக இசையில் பெரிய எழுச்சி ஏற்பட்டது அதுதான் தியாகராஜ சுவாமிகளின் பிரவேசம். அவருடைய கீர்த்தனைகள் சங்கீத உலகத்துக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான அவருடைய சாகித்யங்கள் தெலுங்கு மொழியின் அழகோடும் சங்கீத இலக்கணம் முழுவதுமாக பொருந்தி பாவத்தோடும் நெஞ்சைத் தொடும் பக்திப் பரவசத்தோடும் பாடுவதை எல்லோரும் ஈடுபாட்டோடு கேட்கத் தொடங்கினார்கள்.

அவருடைய கீர்த்தனைக்ள் பெருமளவில் பாடத் தொடங்கிய பிறகுதான் இசை நிகழ்ச்சிக்கு என்று தனி மேடை அமைந்தது என்று கூட சொல்லலாம். காலப்போக்கில் தியாகைய்யரின் கீர்த்தனைகளே இசை மேடையின் முழு நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டன. மற்றபடி தீட்சிதர், புரந்தரதாசர் பாடல்கள் எல்லாம் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இடம் பெற்றன. தெலுங்கு, வடமொழி கீர்த்தனைகளுக்கு இடையில் இசைக் கலஞர்கள் தமிழ் மொழி கீர்த்தனைகளை மறந்தே போய் விட்டார்கள். தமிழ் மொழியில் அருணாசல கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர் ஆகியோர் பாடிய, இயற்றிய கீர்த்தனைகளுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது.

தியாகைய்யருடைய மேன்மையான கீர்த்தனைகளுக்கு இருந்த செல்வாக்கு தமிழ்நாட்டிலேயே தமிழ் இசை பாடல்களை பின்னுக்குத் தள்ளும் நிலை ஏற்பட்டது. கர்நாடக இசை மேடையில் தமிழ் மொழிப்பாடல்களுக்கு இடம் கொடுக்காத நிலை பற்றி நியாயமான வருத்தம் பலருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய சங்கீதத்துக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒரு மாநாடு பரோடா நகரத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து இசைக் கலைஞர்களும், இசைத் துறை ஆய்வாளார்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்தைத் தெரிவித்தனர்.

1916ம் ஆண்டு நடைபெற்ற அந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் செர்ந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் கலந்து கொண்டார். ஆபிரகாம் பண்டிதர் ஏற்கனவே கர்நாடக இசை, தமிழ் இசை, பண் வகைகள் பற்றி ஆராய்ச்சி செய்து பல கட்டுரைகள் எழுதியிருந்தார். அவர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்ற நூல் பழங்காலத்திய பண் வகைகளைப் பற்றி தெளிவான விளக்கம் கொண்டதாக உள்ளது. தன்னுடைய கருத்துக்களை எடுத்து சொல்லும் நோக்கத்துடன் தஞ்சாவூர் சங்கீத வித்யா மகா ஜன சங்கம் என்ற சங்கத்தை நிறுவினார். அந்த அமைப்பு மூலம் பல தமிழ் கீர்த்தனைகளை எழுதி இசை அமைத்து கர்நாடக பாணியில் பாடும் முறைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார்.

நாட்டு விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபை இந்தியாவில் பல கலைகள் புத்துயிர்ச்சி பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தது. குறிப்பாக இந்தியாவின் இசை பாரம்பரியம் காக்கப்படுவது பற்றி பலர் ஆர்வம் காட்டினார்கள். 1927ம் ஆண்டு காங்கிரஸ் மகாசபை வருடாந்திர கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டின் வரவேற்புக்குழு மாநாட்டுச் செலவு போக மீதம் இருந்த தொகையை நிதி உதவியாக கொடுத்தது. அதை மூலதனமாக கொண்டு மியூசிக் அகாடெமி என்ற அமைப்பை உருவாக்கினர். மியூசிக் அகாடெமி ஆண்டு தோறும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதுடன் இசைத் துறை தொடர்பான ஆராய்ச்சி நடக்கவும், இசைப் பயிற்சி கொடுத்து இளைய தலைமுறை இசைக் கலைஞர்களை உருவாக்குவதிலும் செயல் பட்டு வருகிறது. ஆனால் தமிழ் மொழியில் உள்ள கீர்த்தனைகளை பாடவேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் நிறைவேறவில்லை. பலர் இது பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

உ.வே. சாமிநாதய்யர் தமிழர்கள் இசையும், இசைக் கருவிகளும் என்ற தலைப்பில் சென்னையில் ஒரு ஆராய்ச்சி சொற்பொழிவு நிகழ்த்தினார். அந்த சொற்பொழிவில் பழைய தமிழ் பண்களுக்கு சமமான கர்நாடக இசை ராகங்களை எடுத்து விளக்கி அவற்றில் உள்ள வேற்றுமை ஒற்றுமைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

சி.ஆர். சீனிவாச அய்யங்கார் என்ற அறிஞர் மியூசிக் அகாடெமி ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கான கோடைக்கால இசைப் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்துப் பேசினார். தன் உரையில் தமிழில் கீர்த்தனைகள் இல்லை என்ற வாதத்தை மறுத்து தன் இளமைப் பருவ காலத்தில் மேடைகளில் பாடப்பட்ட அருணாசல கவிராயர், கவி. குஞ்சர பாரதி பாடல்களைக் குறிப்பிட்டு அவற்றின் மேன்மையை விளக்கினார்.

செட்டிநாட்டரசர் ராஜா அண்ணாமலைச் செட்டியார் சிதம்பரம் கல்லூரியில் சங்கீதத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார்.

சங்கீதத்திற்கு மொழி கிடையாது. சங்கீதமே ஒரு தனி மொழி. ஆகையால், கர்நாடக சங்கீதத்தில் மொழிப் பிரட்சினையை எழுப்பக் கூடாது என்று சிலர் வாதம் செய்தனர். சில சமயங்களில் தமிழ் இசைக் கோரிக்கைகளுக்கு ஜாதி வர்ணம் பூசும் முயற்சியும் நடந்தது. ஆனால் பல முன்னணி இசைக் கலைஞர்களும், கல்கி போன்ற பத்திரிகையாளர்களும் தமிழிசை வளர்ச்சியின் அவசியம் பற்றி தொடர்ந்து வலியுறுத்தினார்கள். கல்கி தன்னுடைய பத்திரிகையில் தமிழிசை பற்றி தொடர்ந்து வலியுறுத்தி எழுதினார். நாமக்கல் கவிஞர் போன்ற இலக்கியத்துறை சார்ந்தோரும் வலியுறுத்தினர்.

பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன் ஆகியோர் புதியதாக பல நல்ல தமிழ் கீர்த்தனைகளை எழுதினர். பாபநாசம் சிவன் எழுதிய சில திரைப் படப் பாடல்களும் தமிழ் இசை நிகழ்ச்சி மேடைகளில் பாடத்தக்க அளவில் தகுதியானவையாக அமைந்தது.

தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்களில் தமிழிசைக்கு சரியான அளவில் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழிசை சங்கங்கள் வைத்தது. தமிழ் மொழி ஆர்வலர்களும், இசை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தியதால் இன்று கர்நாடக இசை மேடையில் தமிழிசை ஓரளவுக்கு இடம் பெறத் தொடங்கி விட்டது. கர்நாடக இசைத் துறையில் கடந்த பல ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. இசைக் கருவிகளில் மாற்றம், ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் மென்மையான செல்வாக்கு, இப்படி எவ்வளவோ மாற்றங்களும் ஏற்படுத்தாத சலசலப்பை சங்கீத உலகில் தமிழ் இசை பற்றிய விவாதம் ஏற்படுத்தி விட்டது.

இதற்கு முக்கியமான காரணம் சங்கீத உலகத்திற்கு அப்பாற்பட்ட சமூக காரணங்கள். அந்த பிரச்சனையில் நுழைவது நம்முடைய நோக்கமல்ல, அதற்கான நேரமும் இல்லை.

மு. கோபாலகிருஷ்ணன்.

Monday, December 01, 2008

ரிச் மெலடிஸ் இன்னிசை இரவு

சென்ற சனிக்கிழமை மாலை ரிச்மண்டில் ஆர் சி லாங்கன் துவக்கப்பள்ளியில் ரிச் மெலடிஸ்(RichMelodies)குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. தயா என்று அழைக்கப்படும் பால் ஞானோதயனின் குழுவினர் அசத்தினார்கள். ரிச்மண்ட் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான அனைத்து பாடகர்களும்(தயா, ஜெயக்குமார், ரமேஷ், கலா, நாராயணன், அரவிந்தன், சிவாந்தி, அங்கிதா, சுதா, சுரேஷ், அஸ்வின், சூர்யா மற்றும் பலர்) அழகாகப் பாடி மகிழ்வித்தார்கள்.
நிகழ்ச்சியை ஜெயந்த் கீபோர்டில் வசீகரா பாடலுடன் துவக்கினான். ஆர்த்தி கிளாரினட்டில் 'ஒரு மாலை'யுடன் தொடர்ந்தாள். இருவரும் அற்புதமாக வாசித்தார்கள்.
கார்த்திகேயனும் அட்லாண்டாவில் இருந்து வந்த ஒரு பெண்மணியும் நிகழ்ச்சியை வழங்கினார்கள்.

நிறைய குழந்தைகளும், பெரியவர்களும் பிரமாதமாகப் பாடினார்கள். என் நினைவில் நிற்பது சூர்யா கணீர்க்குரலில் திருத்தமாக பாடிய 'உன்னை அறிந்தால்' பாட்டு. அஸ்வின் பாடிய ராப் கலந்த பொன்மகள் வந்தாள் ரிமிக்ஸும் அட்டகாசம். பெரியவர்கள் பாட்டு வரிசை மிக நீளம். யாரையாவது விட்டு விடப்போகிறேன் என்ற பயத்தால் அனைவரையும் விட்டுவிடுகிறேன் :-)

உணவிற்குப் பின் டிஜே வைத்து மக்களின் ஆட்டம் கூட சூப்பர். படங்கள் இங்கே....(முழுதாகப் பார்க்க இங்கே)

Friday, October 24, 2008

அட பரவாயில்லையே

யூட்யூப் காட்டி கொஞ்ச நாளாச்சே. அதான். பாருங்க இந்த ஊர்க்காரங்க நம்ப கச்சேரில கலக்கறாங்க.



கனக்டிகட் மாநிலத்தில் இருக்கும் வெஸ்லாயன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களாம். வெகு ஜோர்.

Thursday, October 18, 2007

ராம்ஜியின் இசை மழலை

இன்று மின்னஞ்சலில் ஒரு திருமண அழைப்பு வந்திருந்தது. அதில் ஆங்கிலத்தில் Issai Mazhalaiயின் கச்சேரி என்றிருந்தது. முதலில் மழை என்று எழுதுவதில் எழுத்துப்பிழை என்று நினைத்தேன். சரி கூகுளாண்டவரிடம் முதலில் கேட்கலாம் என்று பார்த்தால் ஒரே ஆச்சரியம். சிறிய பெரிய குழந்தைகளை வைத்து அபஸ்வரம் ராம்ஜி நடத்தும் இசைக்குழு இது.

யூட்யூபில் தேடினாலும் நிறைய கிடைக்கிறது. சில பாடல்களைப் பார்த்தேன். எனக்கு பிடித்த பிபரே ராமரஸம் பாடலை இந்த குட்டிப்பையன் அனந்தராமன்(நம்ம ஊர்ல இப்படி ஒரு பேரா?) கலக்கிப் போட்டிருக்கிறான் பாருங்கள். என்ன குரல், என்ன திறமை.... அற்புதம். அதுவும் எப்படி அனுபவித்துப் பாடுகிறான்.... பெரிய ஆளாக வருவான் பாருங்கள்.




இசை மழலையைப் பற்றி என் நண்பனிடம் கேட்டேன். இவ்வளவு நாள் எந்த குகையில் இருந்தாயடா என்கிறான். மூன்று வருஷங்களாக ஜெயா டீவியில் வருகிறதாம் இ.ம. பார்க்கலாம் என்னைப் போல் குகைவாசிகள் எத்தனை பேர் என்று....


குகையில் இருந்து வெளியே வந்தால் எவ்வளவோ விஷயங்கள் தெரிகிறது. இங்கே பாருங்கள். மருதமலை மாமணியேன்னு ஒரு சின்ன பையன். சும்மா அதிருதுல்ல...

Saturday, June 16, 2007

பிரமிக்க வைக்கும் பிரபலங்கள் - 2

என்னோட ஆர்வமெல்லாம் இசை தான். சிறு வயதில், என் அண்ணனோடும், தம்பியோடும் சேர்ந்து இந்தியா முழுக்கசுத்தி நாடகங்களுக்கு இசை அமைச்சிருக்கேன்.

ஹார்மோனியம் தான் பிரதான வாத்தியம். பிறகு சென்னைக்கு வந்து பியானோவும், கித்தாரும் கத்துக்க ஆரம்பிச்சேன்.

அப்புறம் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் டிப்ளமோ பயின்று தங்கப் பதக்கம் பெற்றேன்.

ஆண்டவன் கிருபையில என்னோட வாரிசுகளையும் இசைத்துறையில பேர் சொல்ற அளவுக்கு கொண்டுவந்திட்டேன்.

இசைக்கு அப்புறம் எனக்கு புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் நிறைய உண்டு.



  • பிரபலம் யாருனு கண்டுபுடிச்சிருப்பீங்க, அவரே தான். இளையராஜா என்று அழைக்கப்படும் டேனியல் ராசய்யா அவர்கள்.


  • இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பல இந்திய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


  • இவரது இசையில் முதல் படமான அன்னக்கிளியில் வந்த 'மச்சானப் பாத்திங்களா' பாட்டு இன்றளவும் பேசப்படுகிறது.


  • சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான விருதுகள் பெற்றவர், தன் மாநிலம் தன்னை கெளரவிக்கவில்லையே என்ற தாக்கத்திற்கு ஆளானவர். பின்பு கலைமாமனி, இசைஞானி போன்ற பட்டங்கள் கிடைத்தது.


  • ஆசிய கண்டத்திலிருந்து ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளர்.


  • ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.


  • காட்சியை விவரித்தவுடனே காகிதத்தில் இவருக்கு இதென்று notes எழுதிக் கொடுத்திடுவார். அவசரத்துக்கு எழுதற notes-ஆக இல்லாமல் அத்தனை துல்லியமாக இருக்கும் என்று இவரைப் பற்றி ப்ரமித்தவர் பிரபலமான இயக்குனர் மணிரத்தினம் அவர்கள்.


  • அரைமணி நேரத்தில தன்னால் ஒரு திரைக்கு இசை அமைக்க முடியும் என்றவர்


  • பஞ்சமுகி என்ற கர்நாடக ராகத்தை கண்டுபிடித்தவர்.


  • மக்களைக் கவரும் வண்ணம் இசையால் பல பல திரைப்படங்களை வெற்றிகரமாக்கி ஓடச் செய்து திரையில் பல ஹீரோக்களை உருவாக்கியவர்.


  • திருவாசகம் இசை வடிவில் அமைத்து புகழ் பெற்றார். அதற்கு உண்டாகும் தயாரிப்பு செலவை தன் ஒருவனால் செய்யமுடியும் என்றும் ஆனால் எல்லோரையும் சேர்த்து செய்து இது எல்லோராலும் உருவாகிய முயற்சி என்று மற்றவர்களையும் பெருமைப் படுத்தியவர்.


  • இன்னும் நிறைய ப்ரமிப்புக்கள் இளையராஜாவைப் பற்றி இருந்தாலும், பதிவின் நீளம் கருதி மிகச் சிலவே அளிக்கப்படுகிறது.

    மேலும் இவரைப் பற்றி ப்ரமிக்க சுட்டிகள் கீழே

    Internet Movie Database
    விக்கிபீடியா
    ராக்காம்மா

    Friday, May 18, 2007

    Evergreen S.P.B - இளைய நிலா பொழிகிறதே

    இந்த இனிய மாலைப் பொழுதில் உங்களுக்கு ஒரு இனிய கானம்.

    எவ்வளவு ஆண்டுகள், எவ்வளவு திரைப்படங்கள், எவ்வளவு பாடல்கள், எவ்வளவு இசை அமைப்பாளர்கள், எவ்வளவு பாடகர்கள். இன்றும் இப்பாடல் நமக்கு இனிக்கிறதென்றால், thats is S.P.B and Raja. என்ன ஒரு finish !!!

    Please click the below link to enjoy the video. கடைசியில், கண்டிப்பா நீங்களும் S.P.B. கூட சேர்ந்து ஆடுவிங்க.

    href="http://www.youtube.com/watch?v=W8l_ezoU8Lc&mode=related&search=

    என்றும் அன்புடன்
    சதங்கா

    Thursday, May 17, 2007

    வீணையடி நீ எனக்கு....

    ரிச்மண்ட் தமிழ் சங்கம் அண்மையில் தமிழ்ப் புத்தாண்டை இசைவிழாவாகக் கொண்டாடியது. நிறைய சிறுவர், சிறுமியர் தமிழில் இனிய பாடல்கள் பாடினர். பாரதியின் ஒரு பாடல் இதோ:


    இன்னும் இரண்டு மாதிரிகள் இந்த சுட்டியில் காணலாம்.

    இந்த நிகழ்ச்சிகள் அனைவற்றையும் நீங்கள் கண்டு களிக்கலாம் DVD வடிவில். விவரங்கள் மின்னஞ்சல் மூலம் விரைவில் தெரிவிக்கிறோம்.

    Wednesday, April 25, 2007

    திருவாசகம்

    "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்". இது நம்மில் பலருக்கும் தெரிந்த வாசகம்.

    அதை சிம்பொனி இசையோடு மிக அற்புதமாய் வெளியிட்டார் இளையராஜா என்பதும் எல்லோருக்கும் தெரியும். நான்கு வருட உழைப்பு. 250 இசைக் கலைஞர்களைக் கொண்டு 2 வாரங்களில் முடித்த இசைப் பதிவு.

    எல்லோருக்கும் தெரிஞ்சதையே சொல்லிகிட்டிருந்தா எப்படி-னு கேக்கறீங்களா ? சரி விசயத்துக்கு வரேன் ...

    சமீபத்தில இசைத் திருவாசகத்தைப் பற்றி பணியிடத்தில், சக அமெரிக்கர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் பேச ஆரம்பிச்சது, அந்த CD-ல English Translation-ம் இருக்கு-னு. அவருக்கு கொஞ்சம் இசை பற்றி தெரியும். Bass-u, Treble-u னு நம்மல ட்ரபிள் பன்ன ஆரம்பிச்சிட்டாரு. நாம தான் ஞானசூனியமாச்சே. இந்தா புடிங்க-னு ராஜாவோட CD-ய கொடுத்து அப்போதைக்குத் தப்பிச்சிக்கிட்டேன்.

    அவர் அதை கொஞ்ச நாட்கள் வரை கேக்கவே இல்லை. கேக்கலைனாலும் பரவாயில்லை, CD-ய திருப்பிக் கொடுங்க-னு சொல்ற நெலைமை. திடீர்னு ஒரு நாள் headphone மாட்டி கேக்க ஆரம்பிச்சார். சற்று நேரத்தில், நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை என்றார். அவருக்கு எங்கே தெரியும் நம்ம ராஜாவைப் பத்தி. அத பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு அமெரிக்கர், எங்கே உங்க headphone கொடுங்க-னு வாங்கிக் கேக்க ஆரம்பிச்சார்.

    கொஞ்ச நேரத்தில, கண்மூடி, விரல் சொடுக்கி, தோள்களை அசைத்து ... நாம சொல்றோமே 'மெய்மறந்து', அந்த நிலைக்கு ரெண்டே நொடியில போய்ட்டாரு.

    அவர் கேட்கின்ற முதல் இந்திய இசை என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லத் தேவையில்லை தமிழும் தெரியாது.

    "Awesome, நான் இத இன்னிக்கு வீட்டுக்கு எடுத்திட்டு போறேன். நாளைக்குத் திருப்பித் தர்ரேனே" என்றார் கெஞ்சலாக.

    "ஏன்னா என் கணவர் ஒரு பள்ளியில் இசை ஆசிரியர். கண்டிப்பா இந்த இசை அவருக்கு புடிக்கும் அதான்" என்றார். சரி என்றேன்.

    மறுநாள் வழக்கம் போல வேலைக்கு வந்த போது, CD எனது தட்டச்சுப் பலகையின் அருகில் இருந்தது. என்னைக் கண்டவுடன் அருகில் வந்தார் அந்த அம்மையார். "நான் சொன்ன மாதிரியே என் கணவர் மிகவும் ரசிச்சார். சில கேள்விகள் கேக்கலாமா" என்றார்.

    மீண்டும், இசை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றேன் அப்பாவியாக. இல்லை பொதுவான கேள்விகள் தான் என்று ஆரம்பித்தார்.

    "பல நாடுகளின் ஏராளமான இசைகளை என் கணவர் கேட்டிருக்கார். முக்கியமானவற்றை சேகரித்தும் வைக்கிறார். அப்படி ஐநூறுக்கும் மேல் CD-க்கள் சேகரித்திருக்கிறார். இந்த மாதிரி ஒரு இசையை இது வரை அவர் கேட்டதேயில்லை. அவரு கேட்ட கேள்விகளைத் தான் நான் உங்கிட்ட கேக்கறேன்" என்றார். அவரின் கேள்விகள் "இந்த CDயின் composer யாரு, notes-லாம் எழுதினது யாரு, notes கெடைக்குமா ?". இசை பற்றி கேக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இசை பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார்.

    இளையராஜாவைப் பற்றி ஒரு intro கொடுத்தும், அவர் அசந்து போன அழகைச் சொல்ல வார்த்தையில்லை. இதைத் தவிர "no kidding, he was a street musician ?!!!!"

    என்ன தான் பல முறை (மெய்மறந்து) கேட்டிருந்தாலும் இவரு சொன்னதுக்கப்புறம், 'பொல்லா வினையேன் நின் பெருஞ்சீர்' என்ற இரண்டாவது track-ல, மடை திறந்த வெள்ளமென கசியற வயலின்களோட இசை, அப்பப்பா ... தேகமெல்லாம் அப்படி ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது உண்மை.

    கேட்டுக் கொண்டிருக்கும் போதே மற்றொருவர் வந்து, "if you don't mind, I borrow the CD" என்று, சுழன்று கொண்டிருந்த CD-யை எடுத்துச் சென்றுவிட்டார்.

    ராஜா சார் நீங்க அமெரிக்காவுலயும் திருவாசகம் CD வெளியிடறதா ரொம்ப நாள் முன்னாடி செய்தி படிச்சேன். அப்படிப் பன்னலையா ?

    என்னோட CD சுத்திக்கிட்டே இருக்கு. எப்போ என் கைக்கு வருமோ ? இக்கட்டுரையின் முதல் வாக்கியத்தை இங்கே நினைத்தால் பயமாக இருக்கிறது. அதுவும் இசை கலந்த திருவாசகம்.

    -----

    பிழை இருப்பின் வழக்கம் போலத் தெரியப்படுத்தவும். உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டம் இடுங்கள்.

    என்றும் அன்புடன்
    சதங்கா.