Thursday, April 24, 2014

கப்பல் ஓட்டிய தமிழனும், காலில் விழும் தமிழனும்





  கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. செய்த குற்றம் சொந்த நாட்டு விடுதலைக்குப் போராடியதுதான்.
அவர் தண்டனை அனுபவித்து வெளியே வந்தபோது அவரை சிறைவாயிலில் வரவேற்க ஒரே ஒருவர் மட்டும் வந்திருந்தார். வெளியே வந்த வ.உ.சி.யை பிள்ளைவாள் என்று உரத்த குரலில் அழைத்தார். வெளியே காத்திருந்த மனிதர். அந்த ஒருவரை யாரென்று சிதம்பரம் பிள்ளையால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு குஷ்ட ரோகத்தால்  அவர் உடலும், முகமும் மாறியிருந்தது. அந்த ஒருவர்தான் தியாகி.சுப்ரமணீய சிவா.
     இது சோகம் நிறைந்த சுதந்திரப் போராட்ட கால வரலாறு..
2006 ம் ஆண்டு ஒரு அரசியல்வாதி 3 ஆண்டு சிறை வாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார்.
  அமைச்சராக இருந்த காலத்தில் லஞ்சம் வாங்கியதாகவும் வருமானத்துக்கு மேல் சொத்து சேர்த்ததாகவும் பேராசிரியர் பொன்னுசாமி மேல் குற்றச்சாட்டு. குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதி மன்றம் அவருக்கு 3 ஆண்டு  சிறைத் தண்டனை வழங்கியது. சமீப காலத்தில்  லஞ்ச ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட ஒரே அரசியல்வாதி பேராசிரியர் பொன்னுசாமிதான்.
    சிறையிலிருந்து வெளீயே வந்த போது அவரை பத்தாயிரம் பேர் ஊர்வலமாகச் சென்று அவரை வரவேற்றார்கள். வெளியே வந்த சில மாதங்களுக்குப் பிறகு அவர் தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை..
   தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைக்கவில்லை..
    சமீபத்திய தேர்தல் பிரச்சார காலத்தில் பேராசிரியர் பொன்னுசாமி மீண்டும் அம்மா முன்னிலையில் அ.தி.மு.க..வில் சேர்ந்தார்
  தன்னுடைய அம்மா விசுவாசத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட 13-4-2014  நாளிதழான இந்து வில்  ஒரு முழு பக்க விளம்பரம் செய்திருக்கிறார்.அந்த விளம்பரம் வேறு சில தமிழ் தினசரிகளிலும்  வந்திருக்கிறது.. விளம்பரச் செலவு மட்டும் பல லட்சத்தைத் தொட்டிருக்கும் எவ்வளவு ஆனால் என்ன? எல்லாம் முத்லீடுதானே?
அம்மா காலடி நிழலில் திரும்பவும் இடம் கிடைத்து விட்டதே 
  அம்மா படத்துடன் வெளீயாகியிருக்கும் அந்த முழுபக்க விளம்பரத்தின்
அடிமை வாசகத்தை அந்த தமிழைப் படித்து மகிழுங்கள்.



       நன்றி          நன்றி         நன்றி

அம்மா   
     தங்களை நம்பினோர் கெடுவதில்லை  ?
    தங்களின் திருவடியின்றி
    வேறேதும் எனக்கு அடைக்கலமில்லை.
 கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் ,இதய தெய்வம், தங்கத் தாரகை
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் 

     புரட்சித்தலைவி அம்மா அவர்களே “

 தாயுள்ளத்தோடு என்னை மீண்டும் கழகத்தில் இணைத்து கழகப் பணியாற்றிட நல்வாய்ப்பு வழங்கியமைக்கு தங்களின் பொற்பாதங்களில்
கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி பணிந்து வணங்குகிறேன்.

      தங்களின் உண்மை விசுவாசி

    பேராசிரியர் க. .பொன்னுசாமி எம்.எஸ்சி பி.எல்
          முன்னாள் அமைச்சர். திருச்சி புறநகர் மாவட்டம்.
 
- மு. கோபாலகிருஷ்ணன்

5 comments:

  1. சமீபத்தில்தான் வ.உ.சி. சிறைவாசம் முடிந்துவந்து வாழ்க்கை நடத்த எவ்வளவு அல்லலுற்றார் என்பதைப் படித்தேன். ஊர் மாறி கடை வைத்து, நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.

    அன்னை வீட்டுக்கு தண்ணீர் குழாய் போட்ட அதிகாரியை விளாசிய காமராஜரும் இந்த மண்ணில்தான்.

    எங்கே தப்பு ஆரம்பித்தது? :-(

    ReplyDelete
  2. நாகு: என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்குமா என தெரியவில்லை..? பெயர்: வாசன், இருப்பது : நியு மெக்ஸிக்கோ மாநிலத்தில் - 1982 லிருந்து. இங்கே ஊரில்/மாநிலத்தில் முதல் தடவையாக, இருக்கும் வெகு சில தமிழர்கள் ஒரு தமிழ்ச்சங்கம் நடத்த முனைப்புகள் செய்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு சங்கம் வளர என்ன செய்யலாம் என கொஞ்சம் அறிவுரை சொல்லுங்கள்; நன்றி.

    | திரு.பொன்னுசாமி பற்றி படித்தேன், வேதனையாக உள்ளது இவர் போன்றோரை (சிறையிலிருந்து வெளிவந்தவுடன்) பலர் வரவேற்க வந்தனர் என படிக்க. அவமானமும் கூட, ஏனெனில் சுற்றி வளைத்து, ஏதோ ஒருவகையில் எனக்கு இந்த பேர்வழி உறவினர் :(

    ReplyDelete
  3. வாசன்,

    வருகைக்கு நன்றி. உங்களை நன்றாக நினைவிருக்கிறது. புத்தூர் SSPTயில் படித்தவர். அமெரிக்க மருத்துவர்கள் கைவிரித்தபின் இந்தியாவில் ஒரு இயற்கை மருத்துவம் மூலம் ரத்தப் புற்று நோயை குணப்படுத்திக் கொண்டவர் - சரிதானே?

    ஆமாம் உங்கள் கொள்ளிடத்தில் ஏன் இன்னும் பதிவு வெள்ளம் வரவில்லை? காவிரிக் கற்பனையில் இன்னும் நீர் நிரம்பவில்லையா?

    தமிழ்ச் சங்கம் வளர - செயற்குழு உறுப்பினர்கள் மனம் தளராமல் இருப்பதுதான் முக்கியம். கூட்டம் வராவிட்டாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள். சங்கத்தை இழுத்து மூட ஆலோசனை கொடுப்பதற்கு ஆளே குறைவிருக்காது. குறிப்பிட்ட வயதினருக்காக மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரைம் - முக்கியமாக குழந்தைகள் - பங்கெடுக்குமாறு நிகழ்ச்சிகள் இருக்கட்டும். பிக்னிக், கலைநிகழ்ச்சி, விளையாட்டு என்று கலந்திருக்கட்டும். ஒரே செயற்குழு என்று இருக்காமல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையேனும் புதுக்குழு வந்தால் புது நிகழ்ச்சிகள், புது சிந்தனைகள் வரும். எங்கள் தமிழ்ச் சங்கத்தைப் போல...

    ReplyDelete
  4. என்னது தானைத்தலைவியின் தாளடி பணிந்திருக்கும் அண்ணன் பொன்னுசாமியின் உறவினர் அமெரிக்காவிலா!!! அவருக்கு அமெரிக்க அரசாங்கம் எந்த பதவியையும் தராததைக் கண்டித்து, அடுத்த 8 மணி நேரத்துக்கு உண்ணாவிரதம் கடைபிடிக்கப் போகிறேன்.
    வாழ்க அண்ணன் பொன்னுசாமி, வளர்க அவரது உறவினர் வாசன்.

    நாகு, இப்படித்தான் தப்பு ஆரம்பிச்சுது. எங்கன்னு சின்னபுள்ளத்தனமா கேக்கரீங்களே, ஈரோட்டு கிழவர் கழகத்தை உடைச்சு வாய்ப்பேச்சு கும்பல் ஒன்னு எப்போ அரசியல்ல களம் இறங்கிச்சோ அப்போ ஆரம்பிச்சது தப்பு. அதை இன்னும் புரிஞ்சுக்காம நாம இருக்கரது நம்ம தப்பு.

    முகோ. சின்னதா சொன்னாலும் சூப்பரா சொல்றீங்க.

    முரளி

    ReplyDelete
  5. :)) இது தன்னேர்ச்சியான உறவு. தன்னேர்ச்சி = விபத்து.

    இவரை சந்தித்தது கூட கிடையாது!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!