Thursday, April 24, 2014

நினைவிற்குத் தேன்

ஆடி அசைந்து பள்ளி நுழைந்து
வெயிலும் நிழலும் அப்பிய முற்றத்தில்
அணிவகுத்து நின்று கடவுளை வாழ்த்திய காலை
நிழல் தேடி வட்டமிட்டு அமர்ந்து
கதை பேசிப்பேசி காகம் விரட்டி
கட்டித்தந்ததை உண்ட மரத்தடி மதியம்
ஆவலாய்க் காத்திருந்து மணிச்சத்தம் கேட்டவுடன்
ஆர்ப்பரித்த்து வெறியோடு வளாகம் விட்டு
அங்கும் இங்குமாய்ச் சிதறி ஓடிய மாலை
தன்னைவிடப் பிரம்பை நம்பிய ஆசிரியர்கள்
கேட்கக் கேட்கத் தாலாட்டாய் மாறும் அவர்கள் குரல்
கண்விழித்துக் கண்ட பகல் கனவு
சமைக்காத போதும் சாம்பார் மணக்கும் சத்துணவுக்கூடம்
கவனம் ஈர்த்த கிருத்துவக் கல்லூரிப் பெண்கள்
இடை இடைச் செரித்த பாடம்
பதைபதைக்கப் புரட்டிய வினாத்தாள்
படித்ததை எழுதி முடித்த நிம்மதிப் பெருமூச்சு
அறிவையும் ஆன்மாவையும் தொட்ட சிந்தனைகள்
இவை அனைத்தும் தந்த அனுபவம் கொண்டு
நான் நானாக உருவாகத் துவங்கிய கருவறை
கார்லி கலைக் கோயில்
- வாசு சண்முகம் 



5 comments:

  1. நல்லவிதமா சொன்னா, கேக்க மாட்டெங்கறாரு இந்த வாசு. இப்படி சுட்டுப் போட்டு பொழக்கற பொழப்பு ஒரு பொழப்பான்னு முரளி கேக்கறாரு. :-)

    ஆமா - கார்லிக்கே இவ்வளவு பில்டப்பான்னு ஒரு கார்லி மாணவரே கேக்கறாராம்.

    அது போகட்டும். அப்படியே என்னை எங்க பண்ருட்டி முத்தையர் பள்ளிக்கு கூட்டிட்டுப் போயிட்டீங்க... அருமையான நினவலைகள். அப்படியே பின்னாடி ஒரு 'நான் எண்ணும்பொழுது' டியூன் வேற ஓடுது...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நன்றி நாகு.

    முரளி, மண்டபத்தில் எழுதிக் கொடுத்தது நான் தான், அது நடந்து முடிந்த கதை :)
    என்ன குறை கண்டீர் கார்லியில், கூறும், கூறிப்பாரும்!!!

    ReplyDelete
  4. வாசு - முரளிக்கு கார்லியில் ஒரே ஒரு குறைதான். கிரிக்கெட்டில் அவருடைய அணியின் ஜென்ம எதிரியாம். அவர் பக்கத்துப் பேட்டைக்காரர்.

    ReplyDelete
  5. என்னது குறையா, அதுவும் கார்லியிலா, ரொம்ப சின்ன குறைதான். நாங்க எங்க பள்ளியில முழு பேண்ட் போட்டுட்டு பள்ளிக்கூடம் போயிட்டிருந்தப்போ அதே வகுப்பை கார்லியில படிச்ச சக நண்பர்கள் அரை டவுசர்தான் போட்டுட்டு வரனும்னு அடம் பிடிச்ச கார்லி மேனேஜ்மெண்ட்டை குறை சொல்றதா? மழை பெஞ்சா லீவ் விடர எங்க இஸ்கூலு எங்க, புயலே அடிச்சாலும் பள்ளிக்கூடம் வெச்சு எங்க நண்பர்களை டார்ச்சர் பண்ணின அவங்களை குறை சொல்றதா.

    இன்னா போதுமா அல்லாங்காட்டி இன்னும் வோணுமா?

    யாருட்ட.....

    முரளி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!