Tuesday, April 15, 2014

இந்தியத் தேர்தல் குறித்து மு.கோ...



     சென்ற 2011 ம் ஆண்டு நான் ரிச்மண்ட் வந்து சில மாதம் தங்கியபோது தமிழ்ச்சங்க நண்பர்கள் கூட்டத்தில் பேச என்னை அழைத்தார்கள். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நேரம் அது. அமெரிக்கா வாழ் தமிழர்கள் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பி  நிறையவே கேள்விகளைக் கேட்டார்கள். அரசியல் பேசுவதை நான் விரும்பவில்லை என்றாலும் அவர்களுடைய கேள்விகளுக்கு நான் தொகுப்பாகக் கொடுத்த பதில் சற்று அரசியலாகவே அமைந்தது. சிலருக்கு என்னுடைய நிலைப்பாடு திருப்தி அளிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும் பலர் மகிழ்ச்சி அடைந்தார்கள். நிறையவே செய்திகளைத் தெரிந்து கொண்டதாகக் கூறினார்கள்.
   நான்  எதிர்பார்த்ததை விட  அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் ஆர்வத்தோடு தமிழ்நாட்டு அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கிறார்கள், அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
    இப்பொழுது இந்தியாவில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் பல கட்டங்களாக தேர்தல் நடக்கும்.
    இந்த நேரத்தில் சுவையான செய்திகளுக்கு குறைவே இல்லை. வாய் விட்டுச் சிரிக்கவும் செய்திகள் உண்டு. நமுட்டுச் சிரிப்போடு நிறுத்திக் கொள்ளவும் செய்திகள் உண்டு.
இந்த தேர்தலில் அநேக மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்ப்பது புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் சாதனை பற்றித்தான். டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின் மக்களின் ஆர்வம் கூடியிருப்பதாகச் சொல்வதில் உண்மை இருக்கிறது.
பத்திரிகைகள் சூடான செய்திகளை வெளியிட்டு பரபரப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மாலையில் வெளியாகும் தினசரிகள் இரண்டு மடங்கு கூடுதலாக அச்சிடப்படுவதாக பத்திரிகை நண்பர்  ஒருவர் கூறுகிறார்.       
    டீக்கடை பெஞ்சுகளுக்கு ஏகக் கிராக்கி. கடைகளில் டீ கூடுதலாக விற்பனையாகிறது. 
   இப்பொழுதெல்லாம் மக்கள் பொதுக் கூட்டங்களுக்கு அதிகமாகப் போவதில்லை. வேட்டியை மடித்துக் கொண்டு மண் தரையில் உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்காக எதிர்க்கட்சித் தலைவர்களை ஏக வசனத்தில் பேசும் வாய் வீச்சுப் பேச்சாளர்களின் கூட்டங்களுக்கு யாரும் போவதில்லை. ஆகையால் கூட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதிகளில் ஜீப்பை நிறுத்திக் கொண்டு சுருக்கமாகப் பேசி வாக்கு கேட்கிறார்கள். பெரிய கூட்டங்களுக்கு ஆகும் செலவுக்கு உண்மையான கணக்கு காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆனையம் கூறிவிட்டது. அதனால் கூலிப் பேச்சாளர்களுக்கு இப்பொழுது கிராக்கி குறைந்து விட்டது. வருமானம் சரியாக இல்லாததால் இந்த கூலிப் பேச்சாளர்கள் கட்சி மாறத் தொடங்கி விட்டார்கள். 
   தேர்தலுக்கு முதல் நாள் இரவில் பணம் பட்டுவாடா செய்வதெல்லாம் பழைய பழக்கம் இப்பொழுதெல்லாம் பணம் இரண்டு மூன்று தவணையாக பட்டுவாடா ஆகிறது. நிலைமையை கண்காணித்து பணம் கொடுக்கப்படுவதாக தகவல். ஏழை, எளிய மக்கள் வாழும் குடிசைப் பகுதிகள் சேரிகளில் மட்டும் பணம் மொத்தமாகக் கொடுத்த காலம் மாறிவிட்டது. மத்திய தர வர்க்கம், அலுவலகம் செல்லும் மக்கள் வாழும் பகுதிகளுக்கும் பணம் சென்றடைகிறது. பெண்களுக்கு ரகசியமாக தட்டில் பணம் வைத்துக் கொடுக்கப்படுவதாகத் தகவல்.
சமூகத்தின் எல்லா பகுதி மக்களும் ஏதாவது ஒரு வகையில் ஊழலை ஏற்றுக் கொள்பவர்களாக இருப்பதை உணர முடிகிறது. ஊழலுக்கு யார் காரணம் என்பதைப் பொருத்து ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்வினை மாறுபடுகிறது .காங்கிரஸ் ஊழலை எதிர்ப்பவர்கள் அம்மா ஊழலைப் பற்றி வாய் திறப்பதில்லை.சாதாரண பொது மக்களே இன்று பல வகையான ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
    அரசியல் தலைவர்களின் சவால் விடும் பேச்சுக்கு குறைச்சலே இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களூக்கு மட்டுமல்ல,தேர்தல் ஆனையத்துக்கும் சவால் விடத் தொடங்கி விட்டார்கள் தமிழ்நாட்டு அம்மா தேர்தல் ஆனையத்துக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாகக் கூறியிருக்கிறார்..பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
  கொல்கத்தா அம்மா ( மமதா பானர்ஜீ ) ஒரு படி மேலே போய்விட்டார்.சமீபத்தில் எதிர்க்கட்சியின் புகாருக்குள்ளான 8 அதிகாரிகளை மாற்றும்படி தேர்தல் ஆனையம் மேற்கு வங்க அரசாங்கத்துக்கு உத்திரவு பிறப்பித்தது. 
 அடேயப்பா’ உடனே அம்மா போட்ட சத்தம் கொல்கத்தா  நகரத்தையே அதிர வைத்தது..டி.வி.யில் அம்மா பேச்சை கேட்டு எனக்கு பயம் என் வீட்டு டி.விக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று  அவ்வளவு உரத்த குரல். ஆனையத்துக்கு அம்மா விட்ட சவாலைக் கேட்டு டெல்லியில் ஒரே கலக்கம்..தேர்தல் ஆனையத்து உத்திரவை ஏற்றுக் கொள்ள முடியாது அதிகாரிகளை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். கொல்கத்தா அம்மா...வந்து பார் ஒரு கை பார்க்கிறேன் என்ற பாணியில் பேசினார். அதோடு நிற்கவில்லை.காங்கிரசும் கம்யூனிஸ்ட்களும் பிஜே,பியும்  சேர்ந்து தனக்கு எதிராகச் செய்யும் கூட்டுச் சதி இது என்று கூச்சல் போட்டார். 
   அடுத்த நாள் நடந்ததுதான் வேடிக்கை .தலைமைத் தேர்தல் ஆனையர்”உத்திரவு அமுல் நடத்தப்பட்டவிட்டால் மாநில அரசாஙத்தின் தலைமைச் செயலாளர்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அதோடு மேற்கு வங்கத்தில் தேர்தலை ஒத்திவைக்கவும் தயங்க மாட்டேன் என்றார் .
   அடுத்த நாளே அம்மாஇறங்கி வந்துவிட்டார்.சம்பந்தப்பட்ட 8 அதிகாரிகளையும் மாற்றி உத்திரவு போட்டார். 
   இப்படி கூச்சல் போடவும் வேண்டாம்.. போட்ட கூச்சலின் எதிரொலி அடங்குவதற்கு முன் சரணாகதி அடையவும் வேண்டாம் .ஆனால் இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்று சொல்லி சிரித்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். எப்படி ஆனாலும் 2014 ம் ஆண்டு பொதுத்  தேர்தலில் இந்த சவால் உடன் சரணாகதி தான் மறக்க முடியாத ஜோக்காக இருக்கும் என்று நினைக்கிறேன் 
தேர்தல் ஆனையத்தின் அதிகாரம் என்ன என்பதை முதன் முதலாக உணர்த்திய டி. என். சேஷனை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
   வாய் விட்டுச் சிரிக்கவும் எத்தனையோ வாய்ப்புகள் கிடைக்கத்தான் செய்கிறது.
  மும்பையில் சிவசேனா தலைவர் ராஜ் தாக்கரே பேச்சைக் கேட்டால் கவலையை மறந்து சிரிக்கலாம்.கூட்டத்தில் கூடியிருந்த மக்கள் ஓயாமல் சிரித்துக் கொண்டெ இருந்தார்கள். அவர் மராத்தியில் பேசினார் .மொழி தெரியாமல் கூட அவருடைய அரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய அரசியல் தரத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.பேச்சில் பெரும்பகுதி சோனியா காந்தி பேச்சை மிமிக்ரி செய்து பேசினார்..ஒரே கை தட்டல்.இடைவிடாத சிரிப்பு. அலைகள். அந்த பேச்சைக் கேட்டு ரசிக்கும் மக்களின் அரசியல் தரத்தையும் எடை போடலாம்.
    அவருடைய தந்தை சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரேயும் அப்படித்தான் மிமிக்ரி செய்து பேசுவார் என்று கேள்விப்பட்டேன் .பரம்பரை வியாதிகளுக்கு அவ்வளவு எளிதில் மருந்து கிடைக்கப் போவதில்லை.
    2011 ல் ஆட்சிக்கு வந்தவுடன் மின் பற்றாக்குறையை தீர்த்துவிடப்போவதாக அம்மா வாக்குறுதி கொடுத்தார். 3 ஆண்டுகள் ஆகியும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.மின்வெட்டு நேரம் அதிகமாகும் அபாயம் இருக்கிறது.அதன் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள்  பல இன்னும் திறந்தபாடில்லை. 
     கூடங்குளம் அனுமின் நிலையத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே கிடைக்கிறது அனால் பிரச்னை தீர்ந்தபாடில்லை/..இப்போதைய மின்வெட்டுக்கு காங்கிரஸ் ஆளும் மத்திய அரசாங்கமும் தி.மு.கவும் செய்த கூட்டுச் சதிதான் காரணம் என்று அம்மா சமீபத்தில் கண்டு பிடித்திருக்கிறார் அந்த உண்மையை எல்லா பொதுக் கூட்டங்களிலும்  சொல்லிவிட்டு சதிகாரர்களூக்கு பாடம் புகட்டுவேன் என்று சபதம் போடுகிறார்..
  கோடை வெய்யில் சுட்டெரிக்கும் இந்த நேரத்தில் சலிப்பில்லாமல் வோட்டு வேட்டையில் இறங்கியுள்ள வேட்பாளர்களீன் நிலையைப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது அதிலும் பாருங்கள் பெண் வேட்பாளர் நிலை இன்னும் பரிதாபம் அம்மா கட்சியச் சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் வாக்கு கேட்கப் போன  கிராமத்தில் ஒரு அம்மன் கோயில். .அங்கே போய் அம்மனை கும்பிடப் போன வேட்பாளருக்கே சாமி வந்துவிட்டது. உடனே ஊர் மக்கள் கூடி சாமியாடிய வேட்பாளரிடம் அருள்வாக்கு கேட்க அம்மன் எல்லோருக்கும் அருள்வாக்கு சொல்லியது..பிள்ளை வரம். ,குடும்ப விவகாரம் இதையெல்லாம் பற்றி அம்மன் அருள்வாக்கு சொன்னதெல்லாம் நமக்கு முக்கியமில்லை. 40 தொகுதிகளிலும் அம்மா கட்சியே ஜெயித்து அம்மாவினுடைய ஆட்சி நாட்டுக்கு வரப் போவதாக சொன்ன அருள்வாக்குதான் மிக முக்கியமாகப் பேசப்பட்டது 
   சாமியே சொல்லிவிட்ட பிறகு ஏன் கவலை அம்மா ஆட்சிதான் மத்தியிலும் என்கிறார்கள் தொண்டர்கள். .இவர்களூடைய கடவுள் பக்தியைப் பார்த்து நான் மெய் சிலிர்த்துப் போனேன் 
      மதுரை ஆதீனம் தமிழ்நாட்டின் முக்கியமான சைவத் திருமடங்களீல் ஒன்று..அந்த மடத்தின் தலைமைப் பீடத்தில் இருக்கும் தற்போதைய ஆதீனம் அடிக்கடி அரசியலுக்கு வந்து வந்து போவார்.அது அவருடைய பொழுது போக்கு. இது எவ்வளவோ தேவலாம் .பொழுதுபோக்காக எதை எதையோ செய்துவிட்டு மாட்டிக் கொண்டு பல சாமியார்கள்  அவமானப்பட்டு நிற்கிற இந்த காலத்தில் இந்த சாமியார் பொழுது போக்காக அரசியலுக்கு வருவதில் தவறே இல்லை இது தேர்தல் காலம் கேட்கவா வேண்டும்?
அவர் சொல்லிவிட்டார். சைவம் தழைக்கவும் சிவபெருமானுடைய அருள்தமிழ்நாட்டுக்கு முழுமையாகக் கிடைக்கவும் அம்மா ஜயலலிதா 40 இடங்களில் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று அதற்கான ஆசியையும் அம்மாவுக்கு வழங்கிவிட்டார்.அதோடு நிற்கவில்லை. ஊர் ஊராகப் போய் கூட்டங்களீல் பிரச்சாரமும் செய்கிறார்.
    சென்ற ஆண்டு இதே ஆதீனம் தான் தன்னுடைய மடத்துக்கு இளவல் பட்டத்தை நித்யானந்தாவுக்கு (சினிமா நடிகை ரஞ்சிதா புகழ் )கொடுத்து பட்டம் கட்டினார் பிரச்னை பெரிதாக வெடித்தது .சில மாதங்களில் நித்யானந்தாவை கழற்றிவிட்டார்.தொடர்ந்து பல சிக்கல்கள்.இது தொடர்பான வழக்கு  நீதி மன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. எப்படியோ நித்யானந்தாவிடமிருந்து மடத்தைக் காப்பற்றிக் கொண்டு விட்டார். மதுரை ஆதீனம் நாட்டை எப்படி காப்பாற்றப் போகிறாரோ  பொறுத்திருந்து பார்க்க வேண்டும்  .  .
   ஸ்ரீராமுலு பெல்லாரியில் ராஜா மாதிரி வாழும் அரசியல் பிரமுகர். பி.ஜே.பியிலிருந்து வெளியேறி எடியூரப்பா போலவே தனிக்கட்சி தொடங்கி சென்ற சட்ட சபைத் தேர்தலில் பி.ஜே.பி.க்கு தண்ணி காட்டியவர். இப்பொழுது எடியூரப்பா போலவே திரும்பவும் பிஜே.பி யில் ஐக்கியமாகி விட்டார் 
  சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களுடைய கடுமையான எதிர்ப்பையும் மீறி ஸ்ரீராமுலு கட்சியில் சேர்க்கப்பட்டார் .சேர்ந்தவுடன் பெல்லாரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடவும் வாய்ப்பு கிடைத்தது..எல்லாம். மோடி தயவில்தான்.என்று சொல்கிறார்கள். இந்த செய்திகள் எல்லாம் சமீப காலத்திய செய்திகள்
  இப்பொழுது அவரைப் பற்றிய லேட்டஸ்ட் நியூஸ்தான் மிக முக்கியம்
பெல்லாரி தொகுதி வேட்பாளர் ஸ்ரீராமுலுவின் தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரங்களும் 10 கோடி ரூபாய் பணமும் அவருடைய நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து காவல் துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள் மோடி படம் போட்ட 5000 (ஐயாயிரம் ) புடவைகளும் கைப்பற்றப்பட்டதாக தகவல்
பெல்லாரி மக்கள் துரதிருஷ்ட சாலிகள் இனாமாகக் கிடைக்கவிருந்த பணத்தையும் புடவைகளையும் இழந்து நிற்கிறார்கள். 
திருச்சியில் சென்ற 2011 சட்டசபைத் தேர்தல் காலத்தில் விடியல் காலை நேரத்தில் பேருந்துவில் (பஸ் ) 5 கோடி ரூபாய் கைப்பற்றாப்பட்டது. இன்று வரை யாரும் அந்த பணத்துக்கு உரிமை கோரி வரவில்லை.
இப்படி கோடிக்கணக்கில் பறிமுதல் ஆகும் போது காவல் துறையினரும் கணிசமான தொகையை அமுக்கிவிடுகிறார்கள் இது தொடர்பாக ஒரு
இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணி இடைநீக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்   
  தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 34 கோடிரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயகத் தேர்தல் நாள் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது..

இப்போதைக்கு இவ்வளவுதான். முடிந்தால் இன்னும் தொடரும். 
                               - மு.கோபாலகிருஷ்ணன்

     

1 comment:

  1. சூப்பர். நிறைய எழுதுங்கள் இந்திய தேர்தலைப் பற்றி. பாஜக தேர்தலில் வெற்றி பெறுமா என்பது இப்போதைய கவலையாக இருக்காது என்று தொன்றுகிறது. வென்று, யார் ப்ரதமர் என்பதில் ஒரு பெரிய அடி தடி இருக்கப்போகிறது என்று தோன்றுகிறது. பெரியவர் அத்வானி கடைசி நேரத்தில் என்ன கூத்தடிக்கப் போகிறாரோ தெரியவில்லை.
    முரளி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!