Tuesday, January 31, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 2



சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?


பளார்னு கன்னத்தில் அறைந்தது போலிருந்தது இவ்வரிகளைப் படித்தபோது !!! இன்றுவரை என்ன‌த்த‌ ப‌ண்ணிதான் கிழிச்சோம் நாமெல்லாம் !!! அர‌சிய‌ல்வாதியாக‌ட்டும், திரைத்துறையின‌ராக‌ட்டும், எத்தொழில் செய்ப‌வ‌ராக‌ட்டும், அட‌ சாதார‌ண‌ ச‌க‌ ம‌னித‌னாக‌ட்டும் ...

நல்வழி, மூதுரை, ராமாயணம், மகாபாரதம் இப்படி எண்ணற்ற இதிகாசங்களை வழிவழியாகப் படித்தோம், படித்துக் கொண்டு வருகிறோம். எல்லாம் படித்தும், இன்னும் சூதும் வாதும், ஏச்சும் பேச்சும் வளர்ந்து வந்திருக்கின்றனவே அன்றி குறைந்ததாய் தெரியவில்லை. இன்றைய கார்ப்பரேட் உலக வாழ்வு ஒன்றே இதற்குச் சிறந்த உதாரணம். அரசியல்வாதிங்க எல்லாம் இவங்க மேசையில தூசு. மேலதிகார வர்க்கத்தின் அரவணைப்பிருந்தால் டீ பாய் கூட குறுகிய காலத்தில் பீப்பாய் ஆகிடலாம். 'சர்வைவல் ஆஃப் தெ ஃபிட்டஸ்ட்'னு இதற்கு சால்ஜாப்பு வேறு. 'உண்மைக‌ளைப் ப‌டித்து வாழ‌முடியுமா ? என்ன‌ங்க‌ நீங்க‌ இன்னும் அந்த‌க் கால‌த்து ஆளு மாதிரி இருந்துகிட்டு (அதற்குள் நம‌க்கு 50 - 60 அக‌வை தந்த தமிழ்சங்க பிரசிடென்ட் ஐயாவுக்கு நன்றிகள் :)) 'ப‌டிச்சோமா, முடிச்சோமா, அடுத்து எவ‌ன‌டா க‌வுக்க‌லாம்னு பாப்பீங்க‌ளா, அத‌ விட்டுட்டு' என்று தான் இருக்கிற‌து இன்றைய‌ உல‌க‌ம். பட்டுக்கோட்டையார் அன்றைக்கு (அநேக‌மா 40 - 50 ஆண்டுக‌ளுக்கு முன்) எழுதிய மேற்கண்ட பாடலில் உலகம் இன்றும் துளியும் மாற‌வில்லை என்ப‌து எவ்வ‌ள‌வு நித‌ர்ச‌ன‌ம்.

வளர்ந்த(தாக நினைக்கும்) ஜென்மங்களிடம் சொல்லி என்ன‌ பிர‌யோஜ‌னம்? 'ஐந்தில் வ‌ளையாத‌து ஐம்பதிலா வ‌ளையும்?!' நாளைய உலகம் யாருடைய‌ கையில்? இன்றைய சிறுவர்கள் தானே நாளைய உலகினர். நாம் அடிப்பதும், திட்டுவதும், சாப்பிடாத பிள்ளையைப் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவதும் தானே செய்கிறோம். அல்லது இதற்கு நேர்மாறாக, எதுகேட்டாலும் வாங்கித் தந்து, செல்லம் கொடுத்து அவர்களைப் பிஞ்சிலேயே சிதைக்கிறோம். சிறுவர்களைப் பற்றி பட்டுக்கோட்டையாரின் சிந்தனையே வேறாக இருந்தது. எடுத்தார் பேனாவை, தெளித்தார் க‌ன‌லை.


சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா!
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா!( சின்னப்பயலே)

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி! (2)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ
தரும் மகிழ்ச்சி! (2)

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி! --- (சின்னப்பயலே)

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா - தம்பி
மனதில் வையடா!
வளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ
வலது கையடா - நீ
வலது கையடா!

தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா! நீ
தொண்டு செய்யடா! (தனிமையுடமை)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா - எல்லாம்
பழைய பொய்யடா!

வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு (வேப்பமர)
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க!

வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை (வேலையற்ற)
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே! நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே! நீ
வெம்பி விடாதே!

(திரைப்படம் : அரசிளங்குமரி 1958)

ஒரே பாடலில், அறிவு, காலம், பொதுவுடைமை, மூட ந‌ம்பிக்கை என மிகத் தெளிவாகச் சிறுவர்களுக்கு புரியும் வண்ணம் எழுதி, 'மனிதனாக வாழ்' எனப் பிஞ்சிலேயே விதைத்தான் அன்றே.

பொதுவா ஒரு பாடல் பற்றி எழுத நினைத்தால், மிகச் சிறந்ததாக நாம் நினைக்கும் சில வரிகளை மட்டும் கோடிட்டு, போல்ட் ஃபான்ட் போட்டு காண்பிப்போம். மற்றொன்று படிக்கிறவருக்கு போரடிக்காம இருக்கணும் என்றும் எண்ணுவோம். அப்படி இப்பாடலில் சிலவரிகளை மட்டும் சிறப்பானது எனப் பிரித்து எடுக்க முடியவில்லை. மாறாக, இப்பாடல் வரிகள் முழுதுமே நம்மைச் சிந்திக்க வைக்கிறது, வைக்கும். ஒவ்வொரு வரியும் சாட்டையாடியாய் நம்மேல் விழும் வரிகள். இப்பாடலின் ஒருசில வரிகள் என் தனித் தளத்தில் (தாய்க் கட்சியில் இருந்து பிரிந்துவிடவில்லை என நாகுவுக்கு நினைவு'படுத்துகிறேன்') முதன்மை வாக்கியங்களாக போட்டுக் கொண்டதில் பெருமை கொள்கிறேன்.

'அவ‌ன‌ நிறுத்த‌ச் சொல்லு நான் நிறுத்த‌றேன்' என்ற‌ புக‌ழ் பெற்ற‌ ந‌கைச்சுவைக் காட்சி நாமெல்லாம் திரைவ‌ழி அறிந்த‌தே. எல்லாவ‌ற்றையும் கூர்ந்து நோக்கின், எல்லாம் எங்கேயோ இருந்தே எடுக்கப்படுகிறது. கீதையின் சாராம்சம் போல, 'நேற்று உன்னுடைய‌து இன்று என்னுடைய‌து' என்று ஆகிவிட்ட‌து. இதுவே, நாளை மற்றொருவ‌ருடைய‌து ஆக‌லாம். பட்டுக்கோட்டையாரின் கீழ்வரும் பாடலில் இருந்து கூட மேற்சொன்ன நகைச்சுவை காட்சி பிறந்திருக்கலாம். திருடுவ‌தும், திருடும் கூட்ட‌மும், அதனைத் தடுக்கப் பாடுபடும் ச‌ட்ட‌மும், முடிவில் திருட‌னாய் ஆகிவிடாதே, அதுவே திருட்டை ஒழிக்கும் ந‌ல்ல‌ செய‌ல் என்றும் சிறுபிள்ளைக்குப் புரியும் வ‌ண்ண‌ம் எளிய‌ த‌மிழில் நல்வழி த‌ந்த‌மை ப‌ட்டுக்கோட்டையாரின் வ‌ல்ல‌மை. அத‌னைப் புரிந்து அத‌ன்வ‌ழி ந‌ட‌க்காத‌து இன்றைய மனித குலத்தின் பேராசை அன்றி வேறேது ?!


திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது (2)
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது (2)
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது (2)
திருடாதே ... பாப்பா திருடாதே ...
(திரைப்படம் : திருடாதே 1961)

ஐந்து பைசா திருடினாலும் திருட்டு தான் (உபயம்: அன்னியன் திரைப்ப‌ட‌ம்), ப‌ல்லாயிர‌ம் கோடி திருடினாலும் திருட்டு தான் (உப‌ய‌ம்: 2ஜி ஸ்பெக்ட்ர‌ம் குழுவின‌ர்). முன்ன‌தில் மாட்டுவோர் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு நாலைந்து மாதங்களுக்கு நடமாட முடியாமல் தவிப்பர். பின்ன‌தில் மாட்டினோர் நாலைந்து மாத‌ங்களில் ப‌ல‌த்த‌ வ‌ர‌வேற்பிற்குப் பிற‌கு க‌ட்சியில் முக்கிய‌ அந்த‌ஸ்த்தைப் பெறுவ‌ர். 'ப‌ட்டுக்கோட்டை பாப்பாவுக்குத் தான‌ சொன்னாரு, ந‌ம‌க்கு எங்கே சொன்னாரு' என்ற‌ல்லவா இப்படிக் கூட்டங்கள் அலைகிற‌து.

எவ்வளவு சீக்கிரம் தூங்கினாலும் மறுநாள் காலையில் அடிக்கும் அலாரத்தையும் மீறி, தூக்கம் வரும் பாருங்க. அட அட ... அசத்தாலா அப்படியே அமுக்கிப் போடும் நம்மை. ஆனாலும் தொடர முடியாத நிலை. இன்றைய கார்ப்பரேட் உலகில் இதற்கும் நாம் பழகிக்கொண்டோம். சட்டுபுட்டுனு எழுந்தோமா, வண்டிய மிதிச்சு, அல்லது முன்னாடிப் போறவன மிதிச்சு, அடிச்சுப் பிடிச்சு அலுவலகம் ஓடறோமானு இருக்கிறோம். இந்த ஆழ்ந்த தூக்கத்தை அன்றி, அன்றைக்கு திண்ணை தூங்கிப் பசங்களுக்காகவே நிறைய பாடல் பாடியிருக்கிறார் பட்டுக்கோட்டையார். அவற்றை இனிவரும் பதிவுகளில் எழுத எண்ணம். அது சார்ந்த ஒரு பாடல், கீழ்வரும் வரிகளில் பார்ப்போம். இப்பாடலில் வ‌ரும் முத‌ல் வ‌ரி பின்னாளின் மிக‌ப் பிர‌ப‌ல‌ம் அடைந்த‌வை. திரைப்ப‌ட‌த்தின் பெய‌ராக‌வும் வைக்க‌ப்ப‌ட்ட‌து. இது த‌ம்பிக்கு பாடிய‌ பாட்டு. என்ன‌ருமைத் த‌ம்பி தூங்கிக் கிட‌ந்து சோம்பேறி எனும் ப‌ட்ட‌ம் வாங்கிவிடாதே, விழித்தெழு என்று உசுப்பேற்றும் பாட‌ல்.

அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார் (2)
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆ
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன் போல்
குறட்டை விடடோரெல்லாம் கோட்டை விட்டார்

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(திரைப்படம் : நாடோடி மன்னன் 1958)

பாப்பாவிடம் ஆரம்பித்து, சின்ன பயலுக்கு சேதி சொல்லி, தம்பிக்கு அறிவுறைத்து என இவை எல்லாம் நாம் சிறுவர்களாய் இருந்த‌ வயதில் கேட்டு வந்த பாடல்கள் தான். பட்டுக்கோட்டையாரின் வரிகளிலேயே, 'பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது' என்பது போல, வளர்ந்த பின் நம் குணம் முற்றிலும் மாறி, படிச்சதெல்லாம் ம‌றந்து போச்சு. படிச்சு என்னத்த கிழிச்சோம். நாடும் நாமளும் மோசமா போய்கிட்டே தான் இருக்கோம் !!!


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...



Sunday, January 29, 2012

ஆன்மீகச் சொற்பொழிவுகள்

ராதே ராதே


கலிபோர்னியாவிலிருந்து இயங்கும் Global Organization for Divinity (GOD) (http://godivinity.org/) என்ற தொண்டு நிறுவனமும், தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் பக்தர்களால் நடத்தப் பட்டு வரும் மதுரமுரளி-சைதன்ய மஹா ப்ரபு நாம பிக்க்ஷா கேந்ரா (http://www.madhuramurali.org/) (http://www.namadwaar.org/) என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து ஸ்ரீ பூர்ணிமா ஜி அவர்களால் அமெரிக்காவின் பல பகுதிகளில் சொற்பொழிவுகளை நடத்தி வருகின்றனர். ஸ்ரீ பூர்ணிமா ஜி அவர்கள் நமது ரிச்மண்ட் நகரில் தங்கி வரும் பிப்ரவரி மாதம், 3, 4 மற்றும் 5 தேதிகளில் சொற்பொழிவாற்ற இருக்கிறார். சொற்பொழிவு நிகழ்ச்சி விவரங்கள்:


Universal Aspects of Hinduism
On Friday, 2/3/2012 5:30 pm – 7:30 pm @ UVA, Charlottesville, VA

Glory of Mahamantra
On Saturday, 2/4/2012 6:00 pm – 7:30 pm @ Residence of a devotee at Broadmoor Apartments, Richmond, VA
Blissful Path to Everlasting Bliss
On Sunday, 2/5/2012 - 3:00 pm - 5:00 pm
@ Hindu Center of Virginia, 6051, Springfield Road, Glen Allen, VA [Directions]


மேலும் விவரம் வேண்டுவோர் மாலதி முரளியை (804) 747-7997 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது gbyes@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது http://godivinity.org/ என்ற வலைதளத்திலிருந்து தெரிந்து கொள்ளவும்.

Radhe Radhe


Non profit organization Global Organization for Divinity (GOD) (http://godivinity.org/) of California, joins hands with a non profit organization madhuramurali - Chaithanya Maha Prabhu Naama Bhiksha Kendra of Chennai (http://www.madhuramurali.org/) (www.namadwaar.org) run by the followers of Sri Sri Muralidhara Swamiji in bringing spiritual speaker Sri Poornima Ji who is giving Discourses at various places in USA. Sri Poornima Ji will be staying in Richmond and giving lectures on February 3rd, 4th and 5th. Schedules of these lectures are given above. Please inform your friends, relatives, associations you are all part of to spread this news and attend these lectures and get benefited.

If you require further details on the satsang schedules, please contact Malathi Murali @ (804) 747-7997 or send an email to gbyes@yahoo.com or visit http://godivinity.org/.


ராதே ராதே

சங்கத் தமிழ் மூன்றும் தா!

மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் கலாசார, மொழி பாரம்பரியங்களை போற்றிக் காப்பது என்னை எப்பொழுதும் வியக்க வைக்கும். இங்கு ரிச்மண்டில் எனக்கு  இலங்கை, மலேசியா, சிங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் கயானா நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது என்னை மூக்கில் விரல் வைக்க வைப்பார்கள். உதாரணமாக எனது மலேசிய நண்பர் சேகரின் மூலம்தான் 'ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும்' என்ற பழமொழியின் அர்த்தம் தெரிந்தது.  ஆமை புகுந்தால் வீட்டுக்கென்ன ஆகும்? அந்த ஆமை வெறும் ஆமையல்ல. பொறாமை!

கயானா நண்பர்களின் வீட்டு பஜனைக் கூட்டத்தில் அவர்கள் வாசித்த டன்டால்  எனும் கருவியின் பிண்ணனியும் சுவாரசியமானது. கரும்புத் தோட்டத்து மாட்டு வண்டியின் அச்சை இசைக்கருவியாக பயன்படுத்தி தங்கள் கலாசாரத்தை காத்திருக்கிறார்கள்.

இன்னும் இது போல பல சொல்லிக் கொண்டு போகலாம். இன்றைய நிகழ்வுக்கு வருகிறேன்.  நேற்று  ஒரு நண்பரின் மகளின் நிச்சயதார்த்தத்துக்கு போய்விட்டு அதற்குப் பிறகு எங்கள் மலேசிய நண்பர்களின் வீட்டுக்குப் போய் ஓய்வாகக் கதை பேசிக் கொண்டிருந்தோம். வீட்டில் அன்றாடம்  தமிழ் மிகக் குறைவாகப் பேசும் சராசரி இந்தியத் தமிழகக் குடும்பங்கள் போன்ற குடும்பம்தான் இவர்களும் :-).  பேச்சு நமது பழக்கவழக்கங்களில் இருந்து பிரார்த்தனை, பூஜை, பாடல்கள் என்று போய்க் கொண்டிருந்தது. சிறு வயதில் கற்ற இறைவாழ்த்து பாடல்கள் பல இருந்தும் நிறைய மறந்துவிட்டது என்று  இரண்டு மலேசியக் குடும்பத்தினர் பேசிக் கொண்டிருந்தனர்.  இன்னும் எதெல்லாம் நினைவிருக்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வீட்டு இல்லத்தரசி தன் இனிய குரலில் ஒரு பாடலைப் பாடி எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

இந்தப் பாடல் சத்தியமாக எனக்குத் தெரியாது.  தமிழகத்தில் வளர்ந்த எத்தனை பேருக்கு இந்தப் பாடல் தெரியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  சற்று இந்தப் பாடலைப் பார்ப்போம். ஔவையின் நல்வழியில் வரும் கடவுள் வாழ்த்து இது.


பிள்ளையாரிடம் முத்தமிழ் அறிவைக் கேட்பது போல் அமைந்திருக்கிறது இப்பாடல். ஆனால் அவருடைய பதிவில் இப்பாடலுக்கு  மேலும் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்கிறார் சுந்தர வடிவேல்.

*நண்பரின் வேண்டுகோளுக்கிணங்கி அவரது வீடியோவை நீக்கிவிட்டேன்.

Friday, January 27, 2012

இராகுல் திராவிட்

இராகுல் திராவிட்

ஆஸ்திரேலியப் பயண வெள்ளை அடிப்பிற்க்குப் பிறகு, இராகுல் திராவிட் ஒய்வு பெறப் போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அது உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், திராவிட் நம் எல்லாருடைய நன் மதிப்பைப் பெற்றவர் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தத் தொடரின் மிக மோசமான தோல்வியின் பாதிப்பில் ரசிகர்கள் இவர் மீதும் சேறை வாரி இறைப்பது தவிர்க்க முடியாத ஒன்று.

ரசிகர்களுக்கு தற்காலிக ஞாபக சக்தி இழப்பு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. இங்கிலாந்து பயணத்தின் வெள்ளை அடிப்பில் இவர் மட்டுமே விழலுக்கிறைத்த நீராக மூன்று சதங்கள் அடித்ததை நாம் மறந்து விட்டோம், அல்லது அதை உதாசீனப் படுத்துகிறோம். அதே போல, இந்திய அணி ஒரு வேளை இந்த ஒரு நாள் தொடரை குருட்டாம் போக்கில் வென்று விட்டால், இந்திய அணியைத் தூக்கி வைத்துக் கொண்டாடி, மேலும் தந்துல்கர் சதம் அடித்து விட்டால் புளகாங்கிதம் அடைந்து பாரத ரத்னா கமிட்டியைக் கரித்துக் கொட்டவும் நாம் தயங்க மாட்டோம்.

எப்படி இருந்தாலும் இவரது நெடிய கிரிக்கெட் பயணத்தை கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம். புள்ளி விபரங்கள் இணைய தளத்தில் தாராளமாகக் கிடைக்கும், அதனால் அவற்றை விட்டு விட்டு, என் நினைவில் உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு முறை இந்திய சுமார் ஐந்து ஓவர்களில் ஐம்பது ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில், மனோஜ் பிரபாகரும் , நயன் மோங்கியாவும், கொஞ்சம் கூடக் கூச்சப் படாமல், முயற்சியே செய்யாமல் ஐந்து ஓவர்களைக் கடத்தி முடித்தார்கள். அதன் விளைவாக இருவரும் அடுத்த ஆட்டத்தில் இருந்து துரத்தப் பட்ட போது, இவர் அணியில் சேர்க்கப் பட்டார். ஆனால் விளையாடவில்லை. பின்பு கங்குலியோடு இணைந்து அறிமுகமாகி சொற்ப ரன்களில் அறிமுக சதத்தை இழந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் தனக்கென்று ஒரு இடத்தை ஸ்தாபித்த இவர், கடின உழைப்பின் மூலம் மட்டுமே எல்லா சாதனைகளையும் அடைந்திருக்கிறார். தந்துல்கரின் கால கட்டத்திலே அறிமுகமாகியதால், இவரது சாதனைகளின் நாம் பொருட் படுத்தவில்லை என்பது தனி மனித வழிபாட்டில் அல்ப சந்தோஷம் அடையும் நம் நாட்டின் சாபக்கேடு.

ஒரு நாள் போட்டியில் நன்றாக விளையாடும் திறன் படைத்த இவர், ஒரு கூட்டுக்குள் அடைபட்டது போல அந்தத் திறமைகளை சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை. ஆலன் டோனால்டைத் தலைக்கு மேலே சிக்சர் அடித்து அவரிடம் கடும் திட்டு வாங்கி இருக்கிறார். காலில் போட்டால் தூக்கத்தில் கூட நான்கடிக்கும் இவர், விரட்டல், மடக்கல், தூக்கல் என்று எல்லா விதமான அடி முறைகளிலும் திறன் வாய்ந்தவர். குறிப்பிடும்படி எந்த ஒரு குறைபாடும் இல்லாதவர். ஒரு நாள் போட்டிக்குத் தகுதி இல்லாதவர் என்று கருதப் பட்ட இவர், பத்தாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்திருப்பதும், கிட்டத் தட்ட 40 சராசரியும் வைத்திருப்பது ஒதுக்கப் பட்ட விஷயங்கள்.

வெல்லவே முடியாத ஆஸ்திரேலிய அணியை 2003 - ல் வென்ற போது அந்த டெஸ்டில் இரட்டை சதம் அடித்தவர். ஸ்லிப்பில் இன்றி அமையாத பிடிப்பாளராக மாறி 200 க்கு மேல் பிடித்திருக்கிறார். இவர் அணித் தலைவராக இருந்ததில் 2007 உலகக் கோப்பை தோல்வியின் கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

நமக்கு துவக்க ஆட்டக்காரர் கிடைக்க விட்டால், துவக்க ஆட்டக் காரராக அனுப்பப் படுவார். (இல்லா விட்டாலும் நம் அணியின் வண்டவாளத்துக்கு இவர் கிட்டத் தட்ட துவக்க ஆட்டக்காரர் தான்). கொஞ்ச நாள் ஆறாவது இடத்திலும் ஆடி இருக்கிறார்.

சுயநலம் இல்லாமல் அணிக்காக ஆடி, கடின உழைப்புக்கு உதாரணமாக விளங்கும் இவரது சாதனைகளை இந்த தருணத்தில் நினைவு கூர்ந்து வணங்குவோம்.

Thursday, January 26, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 1

சினிமாவின் பால் நாட்டம் கொண்டோரும், அல்லது திரைப்படப் பாடல் வரிகளில் காதல் கொண்டோரும், இவரை சட்டென மறக்க இயலாது. இவர் பற்றி அறியாதார் கூட, இவரது ஒரு பாட்டைக் கேட்டால் போதும், இவர் யாரென அறிந்து கொள்ள பிரியப்படுவார்கள். சினிமாவின் மூலமே நமக்கெல்லாம் அறிமுகம் என்றாலும், தான் கொண்ட கொள்கையிலிருந்து, அரசியல் ஆகட்டும், நாடகம் ஆகட்டும், சினிமாவாகட்டும், பொதுவுடமைச் சித்தாந்தம் ஆகட்டும், சற்றும் மாறாமல், ஆரம்பம் முதல் கடைசி வரை, தன் பாடல் வரிகளில் அதைக் கையாண்டவர். நம் மனதில் என்றும் எளிதில் நினைவில் கொள்ளும் பேராற்றல் கொண்டவர், அவர் தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

'கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும்...' இங்ஙனம் தான் ப‌ட்டுக்கோட்டையாரைப் ப‌ற்றிச் சொல்கின்ற‌ன‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ள். அநேக பிரபலங்களைப் போலவே பட்டுக்கோட்டையாரும் பள்ளிக்குச் சென்று அதிகம் படித்தவரில்லை. தந்தையின் வழியிலும், அண்ணனின் வழியிலும், சிறிது காலம் திண்ணைப் பள்ளியிலும் கற்றறிந்தார். அவ்வளவே. மிகச் சிறு வயதிலேயே, பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கையில் அவர் இயற்றிய‌ பாடல்:

ஓடிப்போ ஓடிப்போ
கெண்டைக் குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே
கெண்டைக் குஞ்சே - கரை
தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே !


ஒரு நாள், வயல் வேலை செய்து கொண்டு சிறிது ஓய்வெடுக்கையிலே, அருகில் இருக்கும் குளத்தில் பட்டுக்கோட்டையாரின் கவனம் செல்கிறது. அங்கே கெண்டைக் குஞ்சுகள் துள்ளி விளையாடும் அழகைக் கண்டு ரசிக்கிறது அவர் மனம். அடுத்த நிமிடம், சிந்தனை வயப்பட்டவரின் நெஞ்சினில் சித்தாந்த வரிகள் பிறக்கிறது. மேற்கண்ட வரிகளை, 'என்ன பிரமாதம்... சாதாரண வரிகள் தானே?' என்று எண்ணலாம். அப்படி எண்ணுவது மாபெரும் தவறு என்பது சற்று ஆழ்ந்து படித்தால் புரியும் நமக்கு. இதனுள்ளும் ஒரு சமூகக் கருத்தைத் திணித்து, எளிமையாய் (நமக்கெல்லாம் புரியனும்ல !) படைத்த வல்லமை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

'மனம் ஒரு குரங்கு', ஒரு இடத்தில் நில்லாது தாவிக்கிட்டே இருக்கும். குணம்? ... நிற்கிறதோ, தாவுகிறதோ, ஆனால், பல வகைகளில் இன்றும் பரிணமிக்கிறது. 'மிருகத்திலிருந்து வந்து விலகி ஆனால் மிருகத்தை விடக் கேவலமாய் இருக்கிறாயே' என எப்படி இவ்வளவு எளிமையாய், வலிமையான வரிகளில் !!! சொல்ல வார்த்தைகள் இல்லை ...

உறங்குகையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம்- ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்குதல் முதலைக் குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய்
வாழுதடா

பொறக்கும் போது - மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது

(படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957)

இச்சுத்தா இச்சுத்தா ... மான் புலியை வேட்டையாடும் இட‌ம் க‌ட்டில், மே மாச‌ம் தொன்னித்தெட்டில் மேஜ‌ர் ஆனேனே ... போன்ற‌ க‌ருத்துச் செரிவு மிக்க பாடல்களைத் தந்து, க‌விஞ‌ர்க‌ள் ப‌ல‌ர் திரைப்ப‌ட‌ப் பாட‌ல்க‌ளுக்குத் த‌னி மகுட‌ம் சூட்டி எங்கேயோ கொண்டு சென்றுவிட்ட‌ன‌ர். இவை எல்லாம் பெண்களை இழிவுப‌டுத்துவ‌தாயில்லை? இவை போன்ற‌‌ பாட‌ல்க‌ளைப் பெண் பாட‌க‌ர்க‌ளே பாடியிருப்ப‌து தான் வேத‌னைக்குறிய‌து. இவ‌ற்றிற்கு நேர்மாறாக‌, அந்த‌க் கால‌த்திலேயே (பெரிய‌ விஷ‌ய‌முங்க‌ !) பெண்க‌ளை ம‌தித்து, அவ‌ளுக்கும் ஒரு ம‌திப்பைத் த‌ந்து மெருகேற்றிய பட்டுக்கோட்டையாரின் க‌‌ன‌ல் வ‌ரிக‌ள்...

பொறுமை இழந்திடலாமோ?
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ? - நான்
கருங்கல்லு சிலையோ
காதலெனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ?

(ப‌ட‌ம்: க‌ல்யாண‌ப் ப‌ரிசு)

தமிழ் சினிமா மறபுப்படி வ‌ழக்கம் போல ம‌ர‌த்தைச் சுற்றி, காதலனும் காதலியும் ஓடி ஆடிப் பாடும் பாட்டு. சிற்சில இடைவெளி ஓட்ட‌ங்க‌ளுக்குப் பின் ஒரு ம‌றைவில் நிற்கும் காத‌லியின் விர‌லை, லேசாக‌த் தொட்டு விடுவான் காத‌லன். அவ்வ‌ள‌வு தான், அந்த‌ அம்மாவுக்குக் கோப‌ம் பொத்துக் கொண்டு வ‌ந்துவிடும். 'அடே அறிவு கெட்ட‌வ‌னே, என்னை மான‌ப‌ங்க‌ப் ப‌டுத்த‌ நினைத்த‌ மூட‌னே, உன்னைப் போய் காத‌லித்தேன் பார்' என்றெல்லாம் சீற‌வில்லை. பொறுமை இழந்து புரட்சியில் இறங்கிடாதே, எல்லாம் கல்யணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம் என்ற இதமான சீற்றம் கொண்ட காதலியின் வரிகள் மேலே. இது அன்றைக்கு. இன்று நிலைமையோ வேறு. நேரா 'கட்டிப்புடி கட்டிப்புடி டா ... கண்ணாலா கண்டபடி கட்டிப்புடி டா...' தான்.

'தானத்தில் சிறந்த தானம் எது?' அப்படீன்னு எங்க ஹோம் மினிஸ்டர் கிட்ட கேட்டேன். அவங்க படக்குனு 'என்னது? கண்தானமா?'னு சீரியஸா கேக்க ... அதையினும் மிஞ்சியது ...'நிதான‌ம்' என்றேன். ந‌ம‌க்கு எப்ப‌டி இந்த‌ அறிவு ஞான‌ம் என்று அவ‌ங்க‌ளுக்கு ஒரே ச‌ந்தேக‌ம். முக‌த்திலேயே கேள்வி ப‌ட‌ர்ந்த‌து. ம‌ரியாதை (?!) நிமித்த‌ம் அவ‌ங்க எதும் கேக்க‌ல‌ :)

எம்.ஜி.யாரும் கலைவாணரும் நடித்த‌ 'சீர் மேவு குரு பாதம்' என்று தொடங்கும் கேள்வி ப‌தில் பாட‌ல். எளிமையான கேள்விக‌ள் அழுத்தமான பதில்கள். காய்ந்தவன் வயிறு பற்றியும், நயவஞ்சகனின் நாக்கு பற்றியும் உறைக்கும் பதிலில் நம் உடல் சிலிர்ப்பது உறுதி. க‌‌லைவாண‌ர் கேள்வி கேட்க‌, ஒத்தை வார்த்தையில் எம்.ஜி.ஆர். ப‌தில‌ளிப்பார்.

எத்தனை தானந்தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்
...
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
சொல்லிப்பிட்டியெ
...
புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
நான் சொல்லட்டுமா
சொல்லு
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சரிதான் சரிதான் சரிதான்
...
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது
(படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957)


இன்று, அதே ஒத்தை வார்த்தையில் பாடல் எழுதச் சொன்னால், நமது கவிஞர்கள் இப்படித் தான் எழுதுகிறார்கள். சமீபத்தில் வ‌ந்த ஒரு பாட‌ல், ந‌ம்மை எல்லாம் கிற‌ங்க‌டிக்கும் ... 'ஒத்த‌ சொல்லால எ(ன்) உசிர் எடுத்து வச்சிகிட்டா ... ரெட்ட கண்ணால ... என்ன தின்னாடா'



மேற்க‌ண்ட 'சீர் மேவு குரு பாதம்' பாட‌ல் ஒருசில‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் 'கிளௌன் சுந்தரம்' என்பவர் எழுதிய‌தாக‌க் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. ச‌ரியான‌ த‌க‌வ‌ல் தெரிந்த‌வ‌ர்க‌ள் தெரிய‌ப்ப‌டுத்துங்க‌ள். த‌க்க‌ ச‌ன்மான‌ம் நாகு ஐயா வ‌ழ‌ங்குவார்.


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Sunday, January 22, 2012

ரயில் பயணங்களில்

இந்த மாதம் 7-ம் தேதி நியூயார்க் டைம்ஸ்  தினசரி பத்திரிகையில் ஒரு செய்தி.

நியூயார்க் நகரத்தில் மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகம் இல்லாத விடியற்காலத்தில் நான்கு மணி அளவில் ஒரு பிரயாணி பயணம் செய்த கொண்டிருந்தார். கூட்டம் அதிகம் இல்லாததாலும்  எதிர் வரிசை காலியாக இருந்ததாலும்  ஒரு காலை எதிர் சீட்டில் வைத்தபடி தூங்கிவிட்டார். அப்படி பயணம் செய்வது குற்றம் என்று கூறி காவல்துறை அதிகாரி அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்தார். மாஜிஸ்டிரேட்டிடம்  அந்த பிரயாணியை ஒப்படைத்து  12  மணி நேரம் கழித்துதான் அவரை விடுதலை செய்தனர். அவர்  அபராதத் தொகையாக  50 டாலர் கட்டினார்.

            பயணம் செய்யும்போது இங்கிதம் இல்லாமல் நடந்து கொண்டு சக பிரயாணிகளுக்கு இடையூறு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதாம். காவல்துறையினர் இது போன்ற விஷயங்களில் கடுமையாக நடந்துகொண்டு  சிறிய குற்றங்களுக்கு கூட நடவடிக்கை எடுப்பது தொடர்ந்து நடப்பதாக புகார்  எழுந்துள்ளது.  இப்படி நடவடிக்கை எடுப்பதால் மெட்ரோ ரயிலில் குற்றங்கள் குறைந்திருப்பதாக காவல்துறை தரப்பில் பேசப்படுகிறது.


          சென்ற நவம்பர் மாதத்தில் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிரயாணி கைது செய்யப் பட்டார். அவர் ஒரு சர்க்கரை நோயாளி. காலியாக இருந்த எதிர் சீட்டில் கால் வைத்துக் கொண்டு உட்கார்ந்த நிலையில் இன்சுலின் போட்டுக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருக்கின்றனர். ஆகையால் சில மணி நேரம் அவர் இன்சுலின் இல்லாமல் இருக்க நேர்ந்தது. அவர் மயக்கமடைந்து கீழே விழ காவல் துறையினர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். மூன்று நாள் மருத்துவமனை வாசத்துக்கு  பிறகு வீடு திரும்பியிருக்கிறார். அது விஷயமாக அரசாங்கத்துக்கு 150,000 டாலர் செலவானது என்றும் அந்த பத்திரிகைச் செய்தி கூறுகிறது.


       இந்தியாவிலிருந்து வந்திருக்கும் எனக்கு இந்த செய்தி கேட்கவே வேடிக்கையாக இருந்தது. சிரித்து முடித்த பிறகு எனக்கு ஏற்பட்ட ரயில் பயண அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. இந்தியாவில் எதிர்  சீட்டில் உட்கார்ந்திருப்பவர் மேலே கூட கால் போட்டுவிட்டு  கவலைப்படாமல் இருக்கும் பிரயாணிகளை நிறையவே பார்த்திருக்கிறேன். இது சம்பந்தமாக  பயணிகளுக்கு இடையில்  வாக்குவாதமோ சண்டையோ வந்தால் பக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் கூட நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடுவார்கள். தொடரும் சண்டை சில சமயம் ஊர் போய்ச் சேரும் வரை கூட நீடிப்பதுண்டு. வடநாட்டு பகுதிகளில் ரயில் சண்டை இன்னும் உக்கிரமாக இருக்கும். அசந்தால் சாமான்களைக் கூட  ஆட்கள் மேல் அடுக்கிவிடும் வேடிக்கை நடப்பதுண்டு.


     இரண்டாம் வகுப்பு பயணத்தைப் பொறுத்தவரை வடநாட்டு பகுதிகளில்  ரிசர்வேஷன் பெட்டிகளுக்கும் ரிசர்வேஷன் இல்லாத பொதுப் பெட்டிகளுக்கும் (ஜெனரல் கம்பார்ட்மென்ட்) இடையில் அதிக வித்தியாசம் இருக்காது. ரிசர்வ் செய்தவர்களும் ரயிலில் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்யலாம். அவ்வளவுதான். முதல் வகுப்பு பயணம் இன்னும் அந்த அளவுக்கு மோசமாகி விடவில்லை.


        ரயில்வேயில் பணி செய்தவனாகையால் நிறைய ரயில்பயணம் செய்யும் அனுபவமும் அந்த பயணங்களில் வகை வகையான மனிதர்களைப் பார்த்து வேதனைப் பட்ட அனுபவமும் எனக்கு உண்டு. நேரடியாக பாதிக்கப்பட்டபோது சங்கடப்பட்டதும் உண்டு. ஒரு அனுபவத்தை மட்டும் இங்கே குறிப்பிடுவது சரியாக இருக்கும்.


          பதினைந்து வருடங்களுக்கு முன் திருப்பதி போயிருந்தேன். திரும்பி வரும்போது ரயிலுக்காக ஸ்டேஷனில் காத்திருந்தேன். திருப்பதியில் கூட்டத்திற்கு  கேட்கவா வேண்டும். முதல் வகுப்பு பயணிகள் தங்குவதற்கான தங்கும் அறையில் ஓய்வாக  சில நிமிடம் உட்காரலாம்  என்று எண்ணினேன். மனைவியை பெண்களுக்கான தங்கும் அறையில் உட்காரவைத்துவிட்டு முதல் வகுப்பு தங்கும் அறைக்குள் நுழைந்தேன். எல்லா நாற்காலியிலும் பயணிகள் உட்கார்ந்த்ருந்தார்கள். சிலர் குடும்பத்தோடு இருந்தார்கள்  சற்று கணித்து பார்த்தபிறகு குடும்பமாக உட்கார்ந்திருந்த ஒரு மேஜையைச் சுற்றி இருந்த ஒரு நாற்காலி காலியாக இருந்ததை கவனித்தேன். அந்த நாற்காலியில் போய் உட்காரலாமென்று அந்த இடத்தை நெருங்கினேன்.


      ஓரளவு வட்டமாக இருந்த அந்த மேஜையைச் சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலியில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அடுத்த நாற்காலியில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அந்த பெண்ணின் தாயாக இருக்கலாம். அதற்கடுத்த  நாற்காலியில் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் உட்கார்ந்திருந்தான். அடுத்த நாற்காலியில் ஒரு நடுத்தர வயது நபர் அமர்ந்திருந்தார்.  அந்த பெண் அருகில் இருந்த நாற்காலி மட்டுமே காலியாக இருந்தது. நான் நெருங்கிச் சென்றதும் அதில் உட்கார வருகிறேன் என்பதை புரிந்துகொண்ட அந்த பெண் ஒரு காலைத் தூக்கி காலியாக இருந்த அந்த நாற்காலியில் வைத்துக் கொண்டாள்.


         நான் அந்த நாற்காலியை சற்று நகர்த்தி போட்டுக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு மேல் பகுதியில் கை வைத்த அதே நேரத்தில்தான் அந்த பெண் நாற்காலியில் உட்காரும் பகுதியில் காலை வைத்தாள். நான் இதை எதிபார்க்கவில்லை. கையை எடுக்காமல் அந்த பெண்ணை  பார்த்தேன். நாற்காலியை என்பக்கம் இழுக்கலாமா என்று  யோசித்தேன். ஆனால் அப்படிச் செய்யாமல் சற்று நேரம் பேசாமலிருந்தேன். பாதம் தொடும்  வகையில் ஸ்கர்ட் அணிந்திருந்த அந்த பெண்ணுக்கு பதினைந்து அல்லது சற்று கூடுதலான வயது இருக்கலாம். காலைத் தூக்கி நாற்காலியில் வைத்ததால் சற்று சரிந்த உடையை சரி செய்த கொண்டு என்னைப் பார்த்தாள்.நான் அந்த பெண்ணையே உற்று கவனித்தேன். உடனே அந்த பெண் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். பக்கத்தில் அமர்ந்திருந்த தாயும் நிலைமையை புரிந்து கொண்டாள். நான் உட்காருவதை தவிர்க்கவே காலைத் தூக்கி நாற்காலியில் வைத்த பெண்ணிடம் எதுவும் சொல்லாமல் அவளும் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த சிறுவன் சுவாரஸ்யமாக ஏதோ தின்பண்டத்தை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவ்வளவும் ஒரு நிமிடம் நீடித்திருக்கும். நான் நாற்காலியில் கை வைத்தபடியே நின்றிருந்தேன்.

         சிறுவனுக்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த நபர், அந்த பெண்ணின் தந்தை என்று நினைக்கிறேன். அவர் தன் இருக்கையை விட்டு எழுந்திருந்து என் அருகில்  வந்தார். நான் அதைப் பொருட்படுத்தாமல் நின்றேன். அருகில் வந்தவர் நாற்காலியில் வைத்திருந்த அந்த பெண்ணின் காலில் ஓங்கி ஒரு அடி வைத்தார்; அடி சுளீரென்று நன்றாகவே விழுந்தது. உடனே அந்த பெண் எழுந்துகொண்டு சற்று பின்னே சென்றாள். உடனே அந்த பெண்ணின்  தாயும் எழுந்திருந்து கணவரிடம் ஏதோ சத்தம் போட்டாள் தெலுங்கு மொழியில்  பேசியதால் எனக்கு எதுவும் புரியவில்லை. அவரும் கோபமாக சில வார்த்தைகளை பதிலுக்கு பேசிவிட்டு என்னிடம் நெருங்கினார். என்னிடம் நாற்காலியை காட்டிஉட்காரச் சொல்லி தெலுங்கில் பேசினார். நான் எனக்கு தெலுங்கு தெரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னேன்.


        அந்த பெண் காலி செய்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு என்னையும் உட்காரச்
சொல்லி என்னிடம் கூறினார் சரளமான ஆங்கிலத்தில்பேசினார். நானும் ஒப்புக்காக சில
வார்த்தைகள் பேச வேண்டுமென்று அவரை சமாதானப் படுத்தினேன். என்ன இருந்தாலும் பெண்ணை நீங்கள் அடித்திருக்கவேண்டம் என்றேன். இதுவெல்லாம் தலைமுறை (generation gap) பிரச்னைகள்  என்றேன். என்ன தலைமுறைக் கோளாறோ, வயதில் பெரியவருக்கு இடம் கொடுத்து உட்காரவைக்க வேண்டும் என்ற அடிப்படை பண்பாட்டைக்  கூட இழந்து கொண்டிருக்கிறோம் என்று உண்மையாகவே  ஆதங்கத்துடன் கூறினார்.

      நீங்கள் ரொம்பவும் வேதனைப்பட்டீரா  என்று கேட்டார். அதெல்லாம் ஒன்றுமில்லை பொதுவாகவே இப்பொழுதெல்லாம் இது போல நடந்துகொள்ளும் இளைய தலைமுறையினர்தான் அதிகம் என்றேன்.  அந்த பெண் கண்ணை கசக்கிக் கொண்டு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தாள் அவர் எழுந்திருந்து  அந்த பெண்ணிடத்தில் போய்  ஏதோ சொன்னவுடன் அவருடைய மனைவி பெரிய குரலில் அவரிடம் எதிர்குரல் கொடுத்தாள். நான் அவரை திரும்ப அழைத்து பிரச்னையை இத்துடன் விடுங்கள் என்று கூறி வேறு விஷயத்தை பேசத் தொடங்கினேன்  அவருடைய பெயரைக் கேட்டேன்,  ஊரைக் கேட்டேன்.

          மனிதர் பண்பானவராகத் தெரிந்தார். சற்று நேரம் உலக நடப்பை மற்ற ஏதோ விவரங்களைப் பேசினார் நான் புறப்பட வேண்டிய ரயில் வரும் நேரத்தில் அவரிடம் சொன்னேன், உங்கள் பெண்ணுக்கு நான் உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும் ஒரு நல்ல மனிதரை சந்திக்க இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது உங்கள் பெண்தானே என்றேன். அவர் சிரித்துக் கொண்டே என்னிடம் விடை பெற்றுக் கொண்டார்.

               சற்று தள்ளி நின்ற அவருடைய மனைவியும் அந்த பெண்ணும் இன்னும் சமாதானமாகவில்லை என்று தெரிந்துகொண்டேன். அவர்களிடமும் சிரித்தபடியே போய் வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டேன். இரண்டு பேரிடத்திலும் எந்த அசைவும் இல்லை.
- மு.கோபாலகிருஷ்ணன்

Friday, January 20, 2012

பித்தனின் கிறுக்கல்கள் – 47

துக்ளக் 42வது ஆண்டு விழா

‘சோ’ வின் துக்ளக் ஆண்டு விழாவைப் பற்றி ப்ரஸ்தாபிக்க மட்டும் இந்தப் பதிவில்லை. அவர் நடுநிலையாளரா இல்லையா என்பதுவும் எமது பலகோடி கவலைகளில் ஒன்றில்லை. அவர் ஜெயலலிதாவை அடுத்த ப்ரதமராக முன்னிருத்தியதுவும் பெரியதில்லை. இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட படி இவர் தான் ப்ரதமராக வேண்டும் என்ற வரைமுறையில்லாததால் யார் வேண்டுமானாலும் இந்தியாவின் ப்ரதமராகலாம்.

........

உத்திரப் ப்ரதேச தேர்தல்

தமிழகத் தேர்தல்கள் நமது தமிழ் சங்கத் தேர்தல் போல சுலபமான ஒன்று என்று சொல்ல வைக்கக்கூடிய தேர்தல் உத்திரப் ப்ரதேசத் தேர்தல்.

......

சமீபத்தில் பார்த்த படங்கள்:

நண்பன்

ஒஸ்தி

வேலாயுதம்

வித்தகன்

Ides of March

சிம்ஹா (தெலுங்கு)

டான் (தெலுங்கு)

பதிவை முழுவதும் இங்கே படிக்கலாம்

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்