Monday, January 16, 2012

ஜெயலலிதா பிரதமரானால்?

ஜெயலலிதா பிரதமரானால்?

அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் அம்மையாரின் பிரசார பீரங்கியாகக் கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லாமல் செயல்பட்டு வரும் நடுநிலை(?)யாளர் சோ அவர்கள், அம்மையார் பிரதமராக பா.ஜ.க. உதவ வேண்டும் என்று முழங்கி இருக்கிறார். தேவ கவுடா போன்றவர்களே பிரதமராகி இருக்கும்போது, இந்த அம்மையார் பிரதமரானால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

அம்மையார் முதல்வராக இருந்த போது நமக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து, அவர் பிரதமரானால் என்னவெல்லாம் நடக்கும்? சில ஊகங்கள்.
  • பார்லிமன்ட் கட்டடம் சர்க்கஸ் கூடாரமாக மாற்றப்பட்டு, புதிய கட்டடம் கட்ட வின்சி நிறுவனத்திற்கு உரிமை கொடுக்கப்படும்
  • தூர்தர்ஷன் பெயர் J-தர்ஷன் என்று மாற்றப்படும்
  • முதல்வராக இருக்கும்போது ஓய்வெடுக்க வேண்டும் என்றால், ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்திற்குப் போவார். பிரதமர் ஆகி விட்டதால், இத்தாலியில் உள்ள விலை கூடிய திராட்சைத் தோட்டத்தில் இவருக்கு ஓய்வு மாளிகை கட்டப்படும்.
  • இவர் போயஸ் தோட்டத்தில் கிளம்பினால், ராயபுரம் வரை போக்குவரத்து ரத்து செய்யப்படும். டெல்லியில் இவர் கிளம்பினால், சண்டிகார் முதல் குவாலியர் வரை தரை வழிப் போக்குவரத்து நிறுத்தப்படும். விமானத்தில் பறந்தால், துபாய் முதல் சிங்கப்பூர் வரை விமானங்கள் ரத்து செய்யப்படும்.
  • சன்னா ரெட்டி இவரிடம் முறைத்துக் கொண்ட போது, அவரது பல அதிகாரங்களைப் பறிக்க இவர் சட்டங்கள் இயற்றினார், (துர்)அதிர்ஷ்ட வசமாக, அந்த சட்டங்களை அனுமதிக்கும் அதிகாரமும் ஆளுநரிடமே இருந்ததால் பல கோமாளித் தனங்கள் நிறைவேறாமல் தப்பித்தன. ஜெயலலிதா பிரதமரானால், ஜனாதிபதி பதவி பிரதமருக்குக் கீழ் செயல்படுமாறு அரசியல் சட்டம் மாற்றப்படும்.
  • ஒபாமா இந்திய பிரயாணம் செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டும். அம்மையாரிடம் முறைத்துக் கொண்டால், ஒபாமா மானபங்கப் படுத்த முயன்றதாக ஐ.நா. சபையில் முறையீடு செய்யப்படும்.
  • இவர் இன்னொரு வளர்ப்பு மகனைத் தத்து எடுக்க மாட்டார் என்று நம்புவோம், ஒரு வேளை எடுத்து விட்டால் வளர்ப்பு மகன் திருமணத்திற்கு என்னவெல்லாம் நடக்கும்?
    • budget 300 பில்லியன் டாலர்கள் (300 கோடி ரூபாய் பழைய எண்ணிக்கை)
    • இமயமலை முழுவதும் சீரியல் லைட் போடப்படும்
    • அழைப்பிதழ் தங்கத் தட்டுகளில் வைரக் கற்களால் எழுதப்படும்.
    • யானி இசை அமைப்பில், மாதுரி தீட்சித்தும், ஐஸ்வர்யா ராயும் நடனம் ஆடும் கலை நிகழ்ச்சி நடத்தப்படும்.
    • தேனிலவு சந்திரனில் ஏற்பாடு செய்யப்படும்
  • பா.சிதம்பரம் நாடு கடத்தப் படுவார்
  • எதிர்க்கட்சி M.P. களை அடித்து உதைக்க, தாமரைக்கனி குடும்பத்தினர் மூலம் பயிற்சி முகாம்கள் அமைக்கப்படும்.
  • நானூறு M.P. கள், காலில் விழுந்து வணங்குமாறு பார்லிமன்ட் கட்டடம் விஸ்தரிக்கப்படும்.
  • ஜெயலலிதா நூறாண்டுகள் வாழ, காசி விஸ்வநாதர் கோயிலில் தினமும் அர்ச்சனை செய்யப்படும்.
  • ராஜா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு அமைச்சரவையின் chief advisor ஆக நியமிக்கப் படுவார்
  • சசிகலா மீண்டும் உடன் பிறவா சகோதரியாகப் பதவி ஏற்பார். நடராஜன் அகில இந்திய அளவில் ராஜகுருவாக செயல்படுவார். பாஸ்கரன், தினகரன், திவாகரன் ஆகியோர் பல்வேறு அகில இந்திய வாரியத் தலைவர்களாக நியமிக்கப் படுவார்கள்



14 comments:

  1. சத்யா,

    சும்மா தூங்கிட்டு இருந்த சிங்கத்தை நல்லா சொறிஞ்சு விட்டுட்டீங்களே, யாரு உங்களையும் உங்க பதிவையும் தாக்கி கிறுக்கப் போறாங்களோ இல்லை கிழிச்சுத் தொங்க விடப் போறாங்களோ, தெரியலை.

    விஜய் பாணியில் சொல்லனும்னா “மாட்னடி மாப்ளே”

    கவுண்டர் பாணியில் சொன்னா “நல்லா பத்த வச்சிட்டியே பரட்டை”

    முரளி

    ReplyDelete
  2. சத்யா,

    உங்க பதிவை தாக்கரதுக்கு நிறைய பாயிண்ட்ஸ் கொடுத்து இருக்கீங்க பார்ப்போம் யார் எப்படி தாக்கராங்கன்னு, யாரும் கண்டுக்காம விட்டுட்டா நான் உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் மூலமா எழுதி சொல்றேன் அடுத்த தடவை எழுதும் போது அதையெல்லாம் தவிர்த்துட்டு எழுதிடலாம்.
    முரளி.

    ReplyDelete
  3. என்ன முரளி, அய்யாவ சீன்லயே இழுக்கலியே, அப்படியும் கோபம் வந்துடுச்சா?

    ReplyDelete
  4. இப்படி எல்லாம் விளையாடக்கூடாது. இப்ப நாடு போற போக்குல அம்மா அப்படியே பிரதமராயிட்டா, இது என்ன இதுக்கு மேலேயே(சதங்கா - இது சரிதானே) நடக்கும்.

    அய்யாவை ஒன்னும் பண்ண முடியாது. ஏன்னா அவர் அப்போ அங்கதான் காவடி தூக்கிட்டு இருப்பார்.

    ReplyDelete
  5. இது என்னடா விஷப்பரீட்சைன்னு தேடிப் பாத்தேன்.
    http://www.firstpost.com/politics/filter-coffee-politics-modi-for-pm-and-jayalalithaa-as-plan-b-182434.html

    அம்மா பிளான்-B?? - இந்த பிளான் எங்கேயும் போகாது. :-)

    ReplyDelete
  6. கட்டுரை நகைச்சுவையாக இருந்தாலும், இந்த ப்ளான்-B கணிப்பு சரியேயே :)

    தேடி (எப்படிய்யா முடியுது உங்களால?) லிங்க் கொடுத்ததற்கு நன்றி நாகு.

    ReplyDelete
  7. சத்யா,
    உங்கள் பதிவு நல்ல நகைச்சுவையாக இருந்தாலும், பலப் பல முரண்களோடு இருக்கிறது.

    ஒரு லட்சம் கோடி ஊழல் செய்யலாம், கேட்டால் அது முடிந்த விஷயம் என்று கூசாமல் சொல்லலாம். (இதைப் பற்றி நான் ஒருமுறை கிறுக்கியதாக நினைவு). ராஜா மாட்டினால், அவர் தலித் அதனால் அவரை திட்டுகிறார்கள் என்று வெக்கம் மானம் இல்லாமல் சொல்லலாம். எடுப்பு, தொடுப்புகளுக்குப் பிறந்தவர்கள் மாட்டினால், திஹார் ஜெயில் வாசலில் போய் ஓன்னு ஒப்பாரி வெக்கலாம். தமிழகத்துக்கு எந்த ப்ரச்சனையென்றாலும், ப்ரதமருக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதலாம். தூ இதெல்லாம் ஒரு பிழைப்பு.

    ஆமாம், உங்களுக்கு மாதுரி மற்றும் ஐஸ்வர்யாவின் நடனம் பார்க்கனும் என்றால் அதை ஏன் இந்தப் பதிவில் சொல்கிறீர்கள். யாருக்காவது சிக்னல் கொடுக்கின்றீர்களோ?

    நீங்கள் சொன்னது மாதிரி ஜெயலலிதாவின் ஒரே ஒரு ஆட்சிக் காலம் மகா மட்டமான ஒன்றுதான் ஆனால் அதற்குப் பிறகு வந்த ஆட்சிக் காலங்கள் எல்லாம் குறை சொல்ல முடியாத அளவுக்கு நல்ல ஆட்சிகள். ஏன் அவருடைய கடந்த ஆட்சியில் ஒரு குறை கூட கண்டுப்பிடிக்க முடியவில்லையே உங்கள் தாத்தாவால்.

    உங்களின் இந்தப் பதிவைப் படித்துவிட்டு அதீதமாக கிறுக்குவேன் என்று எதிர் பார்த்த எம் நண்பரகள் பலரின் கனவு பொய்த்துவிடும் படி இந்தப் பதிவை உங்களின் ‘உத்தமன்’ பதிவைப் போல ஒரு நகைச்சுவைப் பதிவாகத்தான் கருதமுடிகிறது.

    பித்தன் பெருமான்

    ReplyDelete
    Replies
    1. பித்தன் பெருமான், இந்தக் கட்டுரை நகைச்சுவையைக் குறிக்கோளாகக் கொண்டு எழுதப் பட்டது என்பது உண்மைதான். சில குறிப்புகள்

      உங்களது பதிலில் கருணாநிதி துவேஷம்தான் தெரிகிறது, ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்றால் கருணாநிதி மோசம் மற்றும் வேறு ஒரு உருப்படியான ஆட்களும் இல்லை என்ற கூற்றுக்களின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும் என்பது போல் உங்களது பதில் உள்ளது.

      இந்திய சரித்திரத்தில் மறக்க முடியாத அளவுக்கு மிக மோசமான ஆட்சியை நடத்தியவர் ஜெயலலிதா, அந்த ஆட்சியை ஒப்பிடும்போது அவர் பின்பு நடத்தியது மோசமில்லை (அல்லது நல்ல ஆட்சி?). அதற்காக அவரைப் பிரதமராக ஆக்கி அழகு பார்க்குமாறு அவர் என்ன செய்து கிழித்து விட்டார்? அல்லது, இந்த நாட்டின் கையாலாகாத சூழ்நிலையில் இவரைத் தவிர யாரும் இல்லையா? இவரை ஆக்குவதற்கு சுப்பிரமணிய சாமியோ அல்லது T.N.சேஷனையோ முயற்சி செய்யலாம்.

      மன்னார் குடிக் குடும்பத்தை சேர்ப்பது, பின்பு துரத்துவது போல நடிப்பது என்ற போலி நாடகங்களில் இன்னும் குளிர் காய்ந்து கொண்டு மக்களை (மேலும்) முட்டாளடிக்கும் இந்த திருந்தாத பெண்மணியிடம் நாட்டைக் கொடுப்பதற்கு, பாகிஸ்தானில் இருந்து ஒரு பிரதமரைக் கொண்டு வரலாம். இந்த அம்மாவுக்கு ஜால்ரா அடிக்க நடுநிலையாளர் என்ற போர்வையில் சோ போல சில ஆட்கள்.

      Delete
  8. சத்யா,
    எமது பதிலில் மட்டும் இல்லை, எமது பேச்சிலும் கருணாநிதியின் மீதுள்ள துவேஷம் எப்போதும் குறையாது. தமிழ் தமிழ் என்று ஜல்லியடித்து 1967-லிருந்து தமிழகத்தை சூறையாடும் தாத்தாவையும் அவரது கூட்டத்தையும் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது என்றால் உங்களுக்காக எமது கருத்தை நாம் மாற்றிக் கோள்வதாகவும் இல்லை. அதே நேரம் ஜெயலலிதாவின் காமெடிகளையும், அவரது பிதற்றல்களையும் பற்றி தவறாமல் கிறுக்குவதையும் நாம் மாற்றிக் கொள்வதாக இல்லை.


    கருணாநிதி மோசம் என்பதால் ஜெயலலிதா ப்ரதமர் ஆகவேண்டும் என்று நாம் எழுதியதாக நினைவில்லை. மேலும், நான் ஜெயலலிதா ப்ரதமர் ஆக வேண்டும் என்று “சோ” சொன்னதை ஆமோதிக்கக்கூட இல்லை. சரி உங்கள் வழியிலேயே இதை பார்ப்போம். ப்ரதமர் பதவிக்கு ஒரு தேவ கவுடா வரலாம், ஒரு லாலு ப்ரசாத் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் முயற்சிக்கலாம், ஊழல் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு ஒரு காட்டு தர்பார் நடத்திய இந்திரா காந்தி இருக்கலாம், ஏன் அதிகம் படித்தவர் என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் வைத்துக்கொண்டு நாற்காலியை இறுகப் பிடித்தபடி மன்மோகன் சிங் இருக்கலாம், ஜெயலலிதா வரக்கூடாதா? மேலே சொன்ன இவர்கள் எல்லோரும் என்ன கிழித்து ப்ரதமர் ஆனார்கள் என்று உங்களால் பட்டியலிட முடியுமா?


    இந்திய சரித்திரத்தில் மோசமான ஆட்சியை இவர் மட்டும் இல்லை, ராப்ரி தேவி, லாலு ப்ரசாத் யாதவ், ஏன் மாயாவதி எல்லோருமே தந்தபடி இருப்பதை எப்படி உங்களால் மறக்க முடிகிறது. தாத்தாவின் ஆட்சி உங்களுக்குப் பொற்காலமாக இருக்கலாம், அந்த எண்ணத்தை மாற்ற நாம் முயற்சிக்கப் போவதில்லை, ஆனால் அவரது ஆட்சியை விமர்சிக்க எமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.

    மன்னார்குடி கும்பலை இவர் துரத்தினால் என்ன, சேர்த்துக் கொண்டால் என்ன? அது போலி நாடகமாகவே இருந்தாலும் என்ன, அதில் நீங்கள் எந்த விதத்தில் பாதிக்கப் பட்டீர்கள். ஏன் அவர்கள் அங்கேயே இருப்பார்கள் என்று ஏதாவது பொட்டி கிட்டி வாங்கி விட்டீர்களா?

    இன்றைய தமிழக அரசியலின் நிதர்சனம், ஜெயலலிதா, தாத்தா இருவருக்கு மாற்று இப்போதைக்கு இல்லை. வைகோ, ராமதாஸ், விஜயகாந்த், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எல்லாம் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள். நீங்களும் உங்கள் தமிழ்சங்க வேலையை விட்டுவிட்டு தமிழக அரசியலைக் காப்பாற்ற முயலுவதாகத் தெரியவில்லை. எனக்கோ கிறுக்கவும், கிறுக்கி விட்டு அடிவாங்கி அமுக்கமாக இருக்கவும் மட்டும் தெரியும், பின் எப்படி தமிழக அரசியலில் இந்த இருவருக்கு மாற்று கொண்டு வரமுடியும் சொல்லுங்கள்.

    “சோ” நடுநிலையாளர் இல்லை சரி, அது ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபத்தை கொடுக்கிறது. உங்கள் அகராதியில் நடுநிலமையாளர் என்றால் என்ன, எந்தப் பக்கமும் சாராமல் இருப்பதா, இல்லை வீரமணி மாதிரி யார் பதவிக்கு வந்தாலும் ஜால்றா அடிப்பதா?

    ஒரு சராசரி தமிழ் எழுத்தாளரை, முத்தமிழ் காவலர், முத்தமிழ் அறிஞர் என்று வாலி, வைரமுத்து என்ற விதூஷக கும்பல்கள் புகழும்போது அதை பல பத்திரிகைகள் பரபரப்பாக முதல் பக்கத்தில் வெளியிட்டு புளகாங்கிதமடையும் போதும் அந்தப் பத்திரிகையாசிரியர்கள் நடுநிலமையாளர்களா? சமீபத்தில் நக்கீரன் பத்திரிகையில் வந்த செய்தியும், அதை தனது தினசரியில் முதல் பக்கத்தில் வெளியிட்ட ஹிந்து பத்திரிகையும் நடுநிலமையாளர்களா? ஏன் அன்னா ஹசாரே வைப் பற்றி நீங்களும் நல்ல விதமாக உங்கள் பதிவில் எழுதவில்லை, அதே சமயம் பலர் அவரைப் பற்றிய பல நல்ல கருத்துக்களை முன் வைத்தார்கள், அப்போது நீங்களும் நடுநிலமையாளர் இல்லையா?

    இப்போது பாகிஸ்தானில் நடக்கும் குழப்படிக்கு பின் நிஜமாகவே அங்கு ப்ரதமருக்கு வேலையிருக்காது என்பதால் அவருக்கு இந்திய ப்ரதமர் பதவியை தரலாம் என்ற உங்கள் ஐடியா எங்களுக்கு இப்போது புரிந்து விட்டது. ஆனால் அது நடக்காது.


    பித்தன் பெருமான்

    ReplyDelete
  9. இரண்டு மட்டைகளில் எந்த மட்டை எவ்வளவு ஊறியிருக்கிறது என்று நீங்களிருவரும் அடித்துக் கொள்கிறீர்கள்.

    மோசமான ஆட்சியை தந்தவர்கள் பட்டியல் நம் நாட்டில் மிக நீளம். அவர்கள் எல்லோரும் பிரதமர் பதவிக்கு பொருத்தமில்லைதான். அந்தக் கும்பலில் யார் வந்தாலும் ஒரே அழகுதான். தகுதியில்லாதவர்கள் பட்டியலில் இவரைவிட அவருக்கு தகுதி குறைவா, நிறைவா என்பது அர்த்தமில்லா விவாதம். ஆனால் என்ன போயஸ் கார்டனுக்கு ப்ளான் பி என்றால் கோபாலபுரத்துக்கு என்ன ப்ளான் என்ற கற்பனைகள் துவங்குவதில் என்ன தடை?

    நான் அன்னா ஹசாரே குறித்து எழுதியதன் சாராம்சம் இதுதான்: ஊழல் ஒழிப்பை எங்கேயாவது யாராவது ஆரம்பிக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்காக அவர் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நான் சொல்லவில்லை.

    ஆனால் ஒன்று - அன்னா பிரதமர்! இது ப்ளான் Z! :-)

    ReplyDelete
  10. நாகு,

    இதுக்குதான் முதல்லயே சொன்னேன். “மாட்னடி மாப்ள”ன்னு. சொன்னா கேட்டாத்தானே. ஹூம். பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரின்னு விஸ்வனாத ப்ரம்மரிஷி (அதாங்க நம்ம விசு) ஒரு சினிமாவுல சொன்னார். யார் கேக்கராங்க. அது சரி நாம சொல்றத வீட்லயே 5 வயசு வாண்டு கூட கேக்கரதில்லை, வெளியில யார் கேப்பாங்க.

    என்ன சந்தடி சாக்குல அன்னாவுக்கு ப்ரதமர் போஸ்டா!!! அட்றா சக்கை, அட்றா சக்கை, அட்றா சக்கை (கவுண்டர் பாணியில் வேகமாக படிங்க). சைக்கிள் காப் ல ஆட்டோ ஓட்டுவாங்கன்னு கேள்வி பட்ருக்கேன், இது ஜம்போ ஜெட் ஓட்ரமாதிரி இருக்கே? பாதுகாப்பு அமைச்சர் கிரண் பேடியா? சட்டம் சாந்தி பூஷணா? நிதி கேஜ்ரிவாலா, சூப்பர் காம்பினேஷன் அப்பு. அதோட தினசரி டைலாக் டிபார்ட்மெண்ட்ன்னு ஒன்னு ஆரம்பிச்சு, அதுல, பின்னூட்டப் பாவலர்கள் இருக்காங்களே, (நம்ம ப்ளாக்ல எழுதரவங்க இல்லை) விகடன், தினமலர் ன்னு பத்திரிகைல எழுதராங்களே, அவங்கள வெச்சு டைலாக் எழுதச் சொல்லி அன்னாவை விட்டு டெய்லி டிவி ல படிக்க சொல்லலாம், நல்லா பொழுது போகும். ஏன்னா கெஜ்ரிவால் சமீபத்தில சொல்லியிருக்கார் அவங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை யாராவது சொல்லுங்கன்னு. அதுக்குதான் என் சூப்பர் ஐடியா, எப்புபுபுடி, ரூம் போட்டு (வீட்லதான்) யோசிச்சேனே!!!

    ஆமா, சோ வோட துக்ளக் ஆண்டு விழால அன்னா வை போட்டு தாளிச்சு எடுத்துட்டாரு, லிங்க் http://idlyvadai.blogspot.com ல இருக்கு. என்சாய்.

    முரளி

    ReplyDelete
  11. பித்தன், அரசியல் விபத்தின் மூலம் பலர் பிரதமர் ஆகி இருக்கிறார்கள். வி.பி.சிங், தேவ கவுடா, குஜ்ரால். தேவ கவுடா வந்த சமயம் அந்த பதவி அய்யாவுக்கும் தர முயற்சித்ததாகத் தகவல் உள்ளது, நல்லவேளை அது நடக்கவில்லை, அல்லது நீங்கள் தீவிரவாதியாக மாறி இருப்பீர்கள் எண்டு நம்புகிறேன்.

    இந்திரா வந்ததைச் சாடுகிறீர்கள். ஜெயலலிதா எந்தத் தகுதியில் முதல்வர் ஆனார்? எம்ஜியார் இன்னும் உயிரோடு உள்ளதாக நம்பிக்கொண்டு இரட்டை இலையைக் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு குத்தும் புத்தி இல்லாத ஜனங்களின் மூடத்தனத்தால் மட்டுமே இவர் முதல்வரானார் என்பதை மறுக்க முடியுமா? தகுதி இல்லாத பலர் ஆகி இருக்கிறார்கள் என்ற முன் உதாரணத்தை எடுத்துக்கொண்டு இவரை பிரதமர் ஆக்குவதா? ஒருமுறை கூட முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொண்ட யோக்கியதை உண்டா? முதலில் கூரையில் ஏறிக் கோழி பிடிக்கட்டும். கூட்டணி முடிந்ததும் கூட்டணிக்குப் பாடுபட்ட கட்சித் தலைவர்களையும் கூட்டணித் தலைவர்களையும் காலில் போட்டு மிதிக்கும் இந்தத் தீக் கொள்ளியைக் கொண்டு நம் நாட்டின் தலையைச் சொறிய நடக்கும் இந்த முயற்சி வெறும் கேலிக் கூத்து.

    சினிமாக் காரர்கள் ஆட்சியில் உள்ளவர்களைப் புகழ்வது கால காலமாக நடந்து வருவது. ஜெயலலிதாவும் தமிழில் ஏதாவது கிறுக்கி இருந்தால், இதே ஜால்ராக் கூட்டம் "பொன்னியின் செல்வியே வருக, பொன்னான கவிதை தருக" என்று உளறி இருப்பார்கள்.

    ReplyDelete
  12. சத்யா,
    தூங்கும் ஒருவரை எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது. எம்ஜிஆர் இறந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் தமிழக மக்கள் இன்னமும் அவருடைய கட்சிக்கு ஓட்டளித்தால் எப்படி அதிமுக 4 முறை தோல்வியடைந்தது. முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்வது என்றால் தொடர்ந்து 10 வருடங்கள் இருப்பதா? தாத்தா எப்போது அப்படி இருந்தார் என்று சொல்ல முடியுமா? எதற்கும் இந்த தளத்தில் ஒரு முறை பார்த்துவிடுங்கள். http://en.wikipedia.org/wiki/Karunanidhi.


    ஆங்கில நாவல்கள் சிலவற்றில் கோர்ட்டில் வாதம் செய்பவர்கள் சொல்வது போல ஒரு அருமையான ஆங்கில வாசகம் சொல்வார்கள் 'I Rest my Case here'. என்று, எம்முடைய வாசகம், 'Less said the Better'. இதற்கு மேல் இந்த வி வாதத்தை தொடர எமக்கு பொறுமையில்லை. வாழ்க உமது தாத்தா பற்று, வளர்க உங்கள் அரசியல் கண்ணோட்டம்.

    பித்தன்.

    ReplyDelete
  13. மக்களே இந்த வீடீயோவ பார்ததிருக்கீங்களா: http://www.youtube.com/watch?v=erbTU2noUFs&feature=related

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!