Tuesday, January 12, 2010

இந்தியப் பயணம்

இந்தியா பயணம் பற்றி போன தடவை போய் வந்த பிறகு எழுதலாம் என்று பெரிய படமெல்லாம் போட்டுட்டு வழக்கம் போல ஒரு மண்ணும் எழுதலை. இந்த முறை அப்படி இல்லாமல், சொல்லாமலேயே எழுத ஆரம்பிச்சாச்சு.

“அது சரி சொல்லுங்க சொல்லுங்க நீங்க எது சொன்னாலும் கேட்டுக்கறோம்.”

“யாருப்பா அது, ஓ நாகுவா, ஏன் என்ன ஆச்சு”

“தடயம்ன்னு ஒரு கதை யாரோ எழுத ஆரம்பிச்சாங்க ஒரு 2-3 வருஷமா தேடியும் தடயம் கிடைக்கலைன்னு ஊர்ல நாட்டுல பேச்சு அடிபடுது......”

“தடயம் கதை என்ன ஆச்சா, அது சரி, நம்ம மக்களுக்கு தமிழ் நாட்டை விட்டுட்டு அமெரிக்கா வந்து பொட்டி தட்ட ஆரம்பிச்ச உடனே ஞாபகசக்தியும் எக்கச்சக்கமா ஆயிடுத்து. அண்ணே உங்க ஞாபகசக்தில ஈயத்தைதான் காச்சி ஊத்தனும். தமிழ் நாட்டில இருந்த வரை ரூபாய்க்கு மூனு படி அரிசி, ஆளுக்கு ஒரு கலர் டீவி, இலவச நிலம் தரோம்ன டைலாக்லாம் மறந்து போய் ஜாலியா இருந்தீங்க, நம்ம கிட்ட வந்து தடயம் என்ன ஆச்சு, குறிச்சிப்பூ என்ன ஆச்சு, கூப்பர்டினோவில குஞ்சம்மா என்ன ஆச்சுன்னு சும்மா கொடையரீங்க.! ஒரு படைப்பாளிங்கரவங்க சுயமா சிந்திச்சு கதை விடலாம்னா விட மாட்டீங்களே. சரி சரி தடயம் இன்னும் ஒரு 10-15 நாட்களுக்குள்ள முடிச்சுடறேன்.”

இனி இந்தியப் பயணம்.

போன மாதம் 5ம் தேதி ஜாம் ஜாம்னு இந்தியா கிளம்ப தயாரா இருந்தோம். என் நண்பர் காலையில் சூப்பரா பேகிள்ஸ், காபி எல்லாம் வாங்கிண்டு வந்து கண்டிப்பா இன்னிக்கு ஊருக்கு போயிடுவோமான்னு மறக்காம கேட்டுகிட்டார். நானும் என் பங்கிற்கு “இப்படி டிபன் காபி எல்லாம் வாங்கி தரது இன்னிக்கு மட்டுமா இல்லை டெய்லி கிடைக்குமா”னு கேட்டேன். அதுக்கு அவர், “தினம் இந்தியா போனா தினம் கிடைக்கும்” என்றார். நான் உடனே “நீ தினமும் வாங்கிட்டு வருவேன்னா நானும் தினமும் இந்தியா போய்ட்டு வரேன், மறக்காம நாளைக்கும் வாங்கிட்டு வா” ன்னு உதார் விட்டேன். அப்போ என் நாக்கில சனி சும்மா உக்காராம சூப்பரா, ஒரு ஆடு நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார் போல இருக்கு, அப்போ அது எங்களுக்கு தெரியலை. அவர் கிளம்பி வீட்டுக்கு போனவுடன் அவசர அவசரமா மிச்சம் இருக்கர பாக்கிங் முடிச்சுட்டு, மதியம் ஒரு மணிக்கு விமானம் சரியான நேரத்திற்கு கிளம்புகிறதான்னு செக் பண்ணி பார்த்தால், மழைகாரணமாக நாங்கள் செல்ல வேண்டிய விமானம் ரத்தாகியிருப்பது தெரிந்தது. அதன் பிறகு நடந்ததை சொல்ல ஒரு 10-15 பக்கம் வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இன்று ரத்தாகிவிட்ட விமானத்திற்கு பதில் 6ம் தேதி விமானத்திற்கு போனா போகுதுன்ற ரேஞ்சில் டிக்கெட் போட்டு கொடுத்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எங்களை விமான நிலையத்தில் விட்டு விட்டு எங்களுடன் ஒரு 6 மணி நேரம் இருந்து இந்த தமாஷை பக்கத்தில் இருந்து அனுபவித்து பார்த்தவர் எங்களுக்கு காலையில் டிபன் காபி வாங்கி வந்த அதே நண்பர்.

6ம் தேதி சொன்ன படி விமானம் இந்தியா நோக்கி கிளம்பியதும்தான் “அப்பாடி நிஜமாவே இந்தியா போறோம்” னு இருந்தது.

என் நண்பர் சொன்ன படி 6ம் தேதி டிபன் காபி வாங்கிட்டு வரலை, அதை உங்களுக்கு நான் சொல்லலை, நீங்களும் நான் சொல்லி தெரிஞ்சுக்கலை சரியா.

சென்னை

எங்கள் விமானம் தோஹாவிலிருந்து கிளம்பும் போதே தமாஷ் ஆரம்பமாகிவிட்டது. என் இருக்கைக்கு முன் இருந்தவர் விமானம் ரன்வேக்கு செல்லும் வரை கைப்பேசியில் பேசி தீர்த்துவிட்டார். “ராஜு வீட்டுக்கு வந்தா அவன் போன வாரம் வாங்கிட்டு போன ரெண்டு டஜன் முட்டை இன்னும் திருப்பித் தரலைன்னு கேளு, அஹமத் நாளைக்கு வருவான் அவனை ரெண்டு நாளைக்கு தேவையானத சமைக்க சொல்லு, பக்கத்து ரூம்புகாரங்க வந்தா ஓசில சாப்பிட்டுட்டு போக விடாதே” அவர் தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன் அப்புறம் பேசிக்கொண்டிருந்த போது தெரிந்தது அவர் பேசிக் கொண்டிருந்தது அவருடைய ரூம் மேட் என்றும், அவருடைய குடும்பம் தென் தமிழ்நாட்டில் வசிக்கிறது என்றும். அவர்களை தன்னுடன் வைத்துக் கொள்ள இவருடைய விசாவில் வசதி இல்லையென்று. இருந்தாலும் ஒரு சந்தேகம் அவர் நண்பர் வாங்கி சென்ற அதே முட்டையை எப்படி திருப்பித் தருவார், அதை வெச்சு ஆம்லட் போட்டிருக்கமாட்டாரோ? இவரைக் கேட்டால் அடிப்பார் போல இருந்ததால் கேட்கவில்லை.

விமானம் சென்னையில் தரையைத் தொட்ட உடன் படக் படக்கென்று சீட் பெல்ட் அவிழ்க்கும் சத்தம் காதைத் துளைக்கிறது. விமான சிப்பந்திகள் கெஞ்சுவது எதுவும் யார் காதிலும் விழுவேயில்லை. பெரிய தமாஷ், என்னவென்றால், விமானம் கடைசியாக நின்றவுடன் ஒட்டு மொத்த கும்பலும் யாரோ கத்தி வெச்சு மிரட்டின மாதிரி படாரென்று எழுந்து நிற்கிறார்கள். எல்லோர் கையிலும் ஒரு பெரிய பெட்டி, எப்போது ஒவர் ஹெட் கம்பார்ட்மெண்டை திறந்தார்கள் எப்போது சாமான் செட்டை எடுத்தார்கள் என்பது பெரிய ஆச்சர்யம். அடுத்து எல்லோரும் ஒரே சமயத்தில் கதவை நோக்கி செல்ல முயல்கிறார்கள். வழியில் நிற்பது வயதானவரா, குழந்தையா என்பதெல்லாம் அவர்களுக்கு அனாவசியம், ஒரு தள்ளு அல்லது ஓங்கி ஒரு இடி, அதற்கு எந்த வருத்தமும் இல்லை. இதே கும்பல் தோஹாவில் பள்ளிக்கூட குழந்தைகள் போல பவ்யமாக வரிசையில் நின்று விமானம் ஏறினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் H1N1 பரிசோதனைக்காக இரண்டு காமிரா வைத்திருக்கிறார்கள். அதனை நோக்கி நடக்கையிலேயே ஒருவருக்கு ஸ்வைன் ப்ளு (பன்றிக் காய்ச்சல்) இருக்கிறதா இல்லையா என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறது. அந்த பரிசோதகர் அருகில் சென்றதும் எங்கள் இளைய மகள் லொக்கு லொக்கு என்று இறும, அந்த பரிசோதகர், “என்னங்க இப்படி இருமராங்க, ஒன்னும் ப்ரச்சனை இல்லையே” என்று கேட்டு கொஞ்சம் டென்ஷன் பண்ணி விட்டார். லஞ்சம், அன்பளிப்பு, இனாம் எல்லா கண்ராவியும் சென்னைல விமானம் இறங்கியதுமே ஆரம்பிச்சுடுச்சு. என்ன ஒன்னு விமான சிப்பந்திகள் ஏதும் இனாம் கேக்கல அவ்வளவுதான்.

ஒரு வழியாக விமான நிலையம் விட்டு வெளியில் வந்தால் ஜிவ் என்று மஹா மஹா சைசில் ஒரு பெரிய மேம்பாலம் மிரட்டுகிறது. அதன் அடியில் ஒரு கொசு மாதிரி நாங்கள் இருந்த மினி வேன் இருந்தது. தாம்பரம் நோக்கி எங்கள் வேன் திரும்ப எத்தனிக்கையில் திடீர் என்று ஒரு பெரிய லாரி லைட்டில்லாமல் ஹாரன் மட்டும் அடித்துக் கொண்டு ஒரு இன்ச் வித்தியாசத்தில் எங்களை ‘டாய்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றது. அதை அத்தனை கிட்டத்தில் பார்த்ததில் ரத்தம் ஜிவ் என்று தலைக்கு மேல் எகிறி கண்ணெல்லாம் பளிச் பளிச்சென்று மின்னல் மாதிரி வெட்டியது. வேன் ட்ரைவரோ "இதெல்லாம் சகஜமப்பா" என்ற ரேஞ்சில் எதுவுமே நடக்காதது போல இருந்தார். “என்னங்க இப்படி போராங்க” என்று கேட்டதற்கு, “ஏங்க என்ன ஆச்சு” என்று கேட்டு அவர் பங்கிற்கு அதிரடித்தார்.

பல்லாவரம் பக்கத்தில் எப்போதும் குண்டும் குழியுமாக இருக்கும் அது மாறி விடியற்காலை 4 மணிக்கே ட்ராஃபிக் ஜாம் ஜாம் என்றிருக்கிறது. இப்படியாக எங்கள் சென்னை விஜயம் ஆரம்பமாகியது.

தொடரும்.

10 comments:

  1. தடயமா - யாரவர்?

    குறிஞ்சிப்பூ பத்தி கேட்டுக்கிட்டே இருந்தேனா, அந்த தம்பி ஊர விட்டே ஓடிப்போயாச்சு. அதனால நான் யாரையும் ஒன்னும் கேக்கல இனிமே. :-)

    குஞ்சம்மா கூப்பிடாமலே வருவா. என்ன, உங்க தோஸ்த் கிட்ட சொல்லி கொஞ்சம் பாதாம் பேகிள்ஸ் சப்ளை பண்ணனும் அவ்வளவுதான்.

    //இருந்தாலும் ஒரு சந்தேகம் அவர் நண்பர் வாங்கி சென்ற அதே முட்டையை எப்படி திருப்பித் தருவார், அதை வெச்சு ஆம்லட் போட்டிருக்கமாட்டாரோ?//
    இது சூப்பர்.

    //எப்போது ஒவர் ஹெட் கம்பார்ட்மெண்டை திறந்தார்கள் எப்போது சாமான் செட்டை எடுத்தார்கள் என்பது பெரிய ஆச்சர்யம்.//
    வேறென்ன - நீர் முட்டை, ஆம்லட் ஆராய்ச்சியில் ஆழ்ந்திருப்பீர்.


    நல்லா போயிக்கிட்டு இருந்தது. கடைசி வார்த்தை பார்த்ததும்தான் என்னவெல்லாமோ பழைய ஞாபகங்கள் :-)

    ReplyDelete
  2. என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சார் ரொம்பதான் பெரிய அமெரிக்கா பிரதமர் நினைப்புல கண்டபடி இந்தியாவ கிண்டல் அடிக்கதிங்கள் கொஞ்சம் குறைசுக்குங்கள் ஓகேவா..
    நன்றி

    ReplyDelete
  4. கிண்டல் அடிப்பதில் என்ன தவறு. கிண்டல் தானே செய்கிறார். உங்கள்ளுக்கு ஏன் எரிகிறது.
    அவர் முழுவதும் சொல்லட்டும், பிறகு என்ன சொல்கிறார் என்று பார்போம்.

    ReplyDelete
  5. நாகு,

    கடைசி வார்த்தை 'தொடரும்' பார்த்ததும் பழைய ஞாபகங்களா? தொடரும்ல என்னங்க ஞாபகம் tag.

    தமிழ் ரொம்ப நுணுக்கமான மொழி ஜாக்கிரதை சொல்லிபுட்டேன்.

    முரளி.

    ReplyDelete
  6. ஐயா அனானிகளே,

    என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணிடாதீங்க. நான் சும்மா பொழுது போகலைன்னு எழுதர ஆள். உங்க ரேஞ்சுக்கு எழுதரத்துக்கு எங்க ஊர்ல வேற ஒருத்தர் இருக்கார். உங்க வாக்குவாதத்தை அவர் எழுதினா அப்ப வெச்சுக்கங்க.

    முதல் அனானி: அமெரிக்காவில ப்ரதமரா! சுத்தம். நீங்க GKல கொஞ்சம் வீவீவீவீவீக்க்க்க்க் போல இருக்கு. நான் இன்னும் இந்தியாவை பத்தியோ சென்னையைப் பத்தியோ பிச்சு பீராயவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள உங்களுக்கு அதைப் பத்தி பயம் வந்துடுச்சா. அப்ப எழுதிட வேண்டியதுதான்.

    முரளி.

    ReplyDelete
  7. கோலிப்பையன்,
    பொங்கல் வாழ்த்துக்கு ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் சார்பில் மிக்க நன்றி,

    முரளி.

    ReplyDelete
  8. "அடுத்து எல்லோரும் ஒரே சமயத்தில் கதவை நோக்கி செல்ல முயல்கிறார்கள். வழியில் நிற்பது வயதானவரா, குழந்தையா என்பதெல்லாம் அவர்களுக்கு அனாவசியம், ஒரு தள்ளு அல்லது ஓங்கி ஒரு இடி, அதற்கு எந்த வருத்தமும் இல்லை. இதே கும்பல் தோஹாவில் பள்ளிக்கூட குழந்தைகள் போல பவ்யமாக வரிசையில் நின்று விமானம் ஏறினார்கள்."

    சரியா சொன்னீங்க முரளி. ஒவ்வொரு முறையும் இந்திய பிரயாணம் போகும் போது நம்ம மக்களின் இந்த குறிப்பிடத்தக்க ஒரு நடவடிக்கை என்னை ஆச்சர்யபடுத்த தவறினதில்லை. இந்திய மண்ணில் கால் வைக்க பரபரப்பு இருக்கும் தான். அதுக்குன்னு இப்படியா?

    குஞ்சம்மாவை தேடறீங்களா? நல்ல லண்டன் பாதாம் அல்வா ஒரு கப் ரெடி பண்ணீங்கன்னா (பேகல்லாம் வேண்டாம்), நாகு சொன்ன மாதிரி, அவ தானா தேடி வருவா. என்னது? குஞ்சம்மா முகவரி வேணுமா? அவசியமே இல்லைங்க. எனக்கு அனுப்பி வைங்க. சேர்க்க வேண்டிய இடத்தில் நான் சேர்த்துடறேன்.

    :-)

    ReplyDelete
  9. முதல் அனானி அவர்களே,

    இந்தியாவை நான் சாடுவதாக நினைக்கிறீர்களே, இதோ இந்த பதிவரின் வலைப்பூவைப் பாருங்கள். இவர் அமெரிக்காவில் சில காலங்கள் தாற்காலிகமாக இருந்துவிட்டு சென்னை வந்திருக்கிறார் இவருடைய பதிவைப் பார்த்துவிட்டு அவைகள் சரியா தவறா என்று சொல்லுங்கள்:

    http://aveenga.blogspot.com/2009/12/blog-post.html

    முரளி.

    ReplyDelete
  10. வணக்கம் மீனா,

    பாதாம் அல்வா சாப்பிட இப்படி ஒரு பிட்டா, அதுக்கு நாகுகூட கூட்டணியா, விளங்கிடும். கேக்கரதுதான் கேக்கரீங்க நல்லா கேக்கலாமே, பாதாம் அல்வா அதுவும் ஒரு பெரிய தங்க பாத்திரம் முழுக்க கொண்டு வந்து உங்கிட்ட கொடுக்கனும்னு கேக்கலாமே. எப்படியும் நான் எதுவும் கொடுக்கப் போரது இல்லை அதுக்காக சின்னதா ஏன் கேக்கரீங்க, கேக்கரத பெரிசா கேட்டாதான் என்ன?

    முரளி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!