Sunday, July 12, 2009

மீனாவுடன் மிக்சர் - 8 {அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா?}

சிலரோட பேச்சில் தேன் ஒழுகும் அப்படீன்னு சொல்லி கேட்டுருக்கேன். இரண்டு நாட்கள் முன்னாடி சன் டீவியில் ஒரு பெண்மணி குழந்தை வளர்ப்பு பற்றி அப்படித்தான் ரொம்ப அழகாக, இனிமையாக, தெளிவாக பேசினாங்க. குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் அன்பாக பேசி நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டிய அவசியத்தை ரொம்ப வலியுறுத்தி சொன்னாங்க. இன்று பல அம்மாக்கள் கொத்தனார் சிமென்ட் பூசுவது போல் குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவதை பார்த்தால் நாம் சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்து விடும் போல இருக்குன்னு வருத்தத்தோட சொன்னாங்க. இன்னும் குழந்தை வளர்ப்பு பற்றி ஆச்சரியத்தக்க விஷயங்கள் நிறைய சொன்னாங்க. இவங்களை மட்டும் நான் நேரில் பார்த்தால் சாஷ்டாங்கமா காலில் விழுந்திடுவேன். அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா? இது நடக்க கூடிய ஒரு விஷயம் தானா? நினைத்தால் எட்டாக்கனி போல் ஏக்கமாக இருக்கு எனக்கு.

தினமும் இருபத்து நாலு மணி நேரத்தில் எப்படியாவது ஒரு எட்டு மணி நேரமாவது நான் என் குழந்தைகளைத் திட்டாமல் இருக்க முயற்சி செய்வேன். ஏதோ கடவுள் புண்ணியத்தில் இரவு எட்டு மணி நேரம் அவங்க தூங்கரதாலே இது முடியறது. மீதியுள்ள நேரமெல்லாம் வாளும், அம்பும் இல்லாத போர்களம் போல் அமர்க்களப்படும் எங்கள் வீடு. பீஷ்மரும், துரோணரும் மறுபிறவி எடுத்து வந்தால் கலியுக குருக்ஷேத்ரம்னு எங்க வீட்டு வாசல்லதான் தேரோட வந்து நிப்பாங்க. பள்ளி நாட்களில் காலையில் குழந்தைகளை எழுப்பி தயாராக சொல்லி கழிவறைக்குள் தள்ளி விட்டு சமையலறைக்குள் நான் வந்த பத்தாவது நிமிடம் சங்கு ஊதாமலே போர் தொடங்கி விடும் எங்க வீட்டில்.

"மணி ஆறு அம்பது. Breakfast ready. சீக்கிரம் வாடா கண்ணம்மா கீழே."

"-----------------------------"

"ஏழு பத்து. பல் தேச்சாச்சா இல்லியா? நான் வரட்டா மாடிக்கு?"

"--------------------------------"

"ஏழு பன்னண்டு. மாச மசன்னு என்னடீ பண்ணிண்டு இருக்க அங்க? "

"இன்னிக்கு Spirit wear டே அம்மா. என் ஸ்பெஷல் ஷர்ட் எங்கே?"

"எதுக்கு இவ்வளவு சீக்கிரமா கேக்கற? இன்னும் அரை மணி கழுச்சு கேக்கறது தானே? கழுதை. நேத்து ராத்திரி என்ன பண்ணின இத பாத்து எடுத்து வச்சுக்காம?"

"----------------------------------"

"வாயில் என்ன கொழுக்கட்டையா? பதில் சொல்லேண்டி."

இப்படியாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் ஒரு சாதாரண நாள் இரவு நாங்கள் படுக்கும் முன் என்னை ராட்சசியாக ஆக்கி விட்டு தான் முடியும். பொறுமையை மட்டும் கவர்மென்ட் ரேஷனில் கொடுத்தால் முதல் நாளே போய் படுத்து க்யூவில் இடம் பிடித்து ஒரு பத்து கிலோ அதிகமா வாங்கிடுவேன் நான். எங்க வீட்டில் அரியதொரு பண்டம் அது தான். சிரித்த படியே குழந்தைகளை கண்டிக்கும் முறை அறிந்த தாய்மார்கள் போர்ட் மாட்டி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தால் ரெஜிஸ்டர் பண்ண நான் தயார். ஆனால் நரசிம்ம அவதாரம் போல் காட்சி கொடுத்து பழகிய நான் பழக்கமில்லாமல் சிரித்து அன்பா பேசினால் என் குழந்தைங்க திடுக்கிட்டு போய் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சேர்த்துடுவாங்க. இந்த அஹிம்சா முறை குழந்தை வளர்ப்பை படிப்படியா தான் செயல் முறைல காட்டணும்னு நினைக்கிறேன்.

உங்கள் வீட்டில் குழந்தை வளர்ப்பு எப்படீ? அஹிம்சை முறையா? மீனா முறையா? சும்மா சொல்லுங்க.

-மீனா சங்கரன்

6 comments:

  1. சூப்பர் பதிவு.

    ஆனால் இப்படி என்னுடைய குழந்தை வளர்ப்பு முறையை 'மீனா முறை' என்று திருடியதை கடுமையாக கண்டிக்கிறேன்.

    என் பசங்க ரூம் கொஞ்சம் அதிர்கிற மாதிரி சத்தம் வந்தால்தான் அப்பா ஏதோ சொல்கிறார் என்று கவனிக்கிறார்கள். இல்லாவிடில் செவிடன் காது சங்குதான். இது ஒரு கோழி-முட்டை எது முதலில் வந்ததுபோன்ற விஷயம். அவர்கள் கேட்காததினால் நாம் கத்துகிறோமா, நாம் கத்தினால்தான் அவர்கள் கேட்கிறார்களா? :-)

    போன வார 2.3 ரிச்டர் ஸ்கேல் பூகம்பம் கூட அவர்களை பாதிக்கவில்லை. அப்பா ஏதோ சொல்ல ஆரம்பிக்கிறார். நாலுக்கு மேலே போனால் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்து விட்டார்கள்.

    ReplyDelete
  2. /அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா? இது நடக்க கூடிய ஒரு விஷயம் தானா? நினைத்தால் எட்டாக்கனி போல் ஏக்கமாக இருக்கு எனக்கு./

    ரொம்பவே நொந்துபோய் எழுதியிருக்கீங்க போலிருக்கு:-)
    என்ன, நீங்க உண்மையைப் பூசி மெழுகத் தெரியாம, அப்படியே கொட்டி ஆ'ன்னு அண்ணாந்து பாத்து ஆச்சரியப்பட்டிருக்கீங்க.

    அவங்க, கொஞ்சம் பாலிஷா இப்படியெல்லாம் இருந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்லாம சொல்லியிருக்காங்க! உண்மை என்னன்னு அவங்க வளத்த குழந்தையில்ல சொல்லணும்!

    இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?

    ReplyDelete
  3. மீனா,

    இந்த இணைப்பைப் படித்துப்
    பார்க்கவும்

    http://www.onlinevoice.info/Jan2007/00_travel.shtml

    ReplyDelete
  4. meena,what will be the reaction of ur husband in this scene? in my house a mega fight will broke out when i shout at my kids.i thought all fathers will be same like this but after reading MR.Nagu's comment i was surprised.

    ReplyDelete
  5. நாகு, கிருஷ்ணமூர்த்தி, ஜெயஸ்ரீ மற்றும் மாதங்கி,

    உங்க எல்லோருடைய வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி.

    குழந்தை வளர்ப்பு ஒரு கலைன்னு எங்க அம்மா சொல்லுவாங்க. தில்லான மோகனாம்பாள் மாதிரி இல்லைன்னாலும் சுமாரா ஒரு ஜில் ஜில் ரமாமணி அளவுக்காவது இந்த கலையை பயிலனும்னு முயற்சி பண்ணறேன். எனக்கும் என்னைப் போல் 'குழந்தை வளர்ப்பு' க்ளாசில் தட்டுத் தடவி சுமார் மார்க் வாங்கி பாசாகும் மற்ற பெற்றோர்களுக்கும் இக்கலையில் தேர்ந்து வெற்றி பெற கொஞ்சம் வாழ்த்துங்களேன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!