Friday, September 18, 2015

பாரதியின் நினைவு நாளில்



          
இன்று செப்டெம்பர் 11 ம் நாள் மகாகவி பாரதியின் நினைவு நாள். இது போன்ற நாட்களில் நான் பாரதியைப் பற்றி ஏதாவது எழுதுவதும், படிப்பதும் வழக்கம். இப்பொழுதெல்லாம் இந்த நாளில் எட்டயபுரத்துக்கு போவதை விட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது உடல் நலமும் சொந்த பிரச்னைகளும் இடம் கொடுக்காததே முக்கிய காரணம்.
 
     திடீரென்று ஒரு நினைவு இன்று பாரதி உயிரோடு இருந்தால்  எப்படி இருக்கும்? வெறும் கற்பனைதான். இருந்தாலும் அப்படி கற்பனை செய்வதில் தவறில்லையே?

   பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரைப் பற்றி பேச திருவள்ளுவர் திரும்பி வந்தால் என்று கற்பனை தலைப்பை வைத்துக் கொண்டு என்னென்னவோ  பேசுகிறார்கள்., எழுதுகிறார்கள்.
 இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பாரதி பற்றி அப்படி தலைப்பைப் போட்டு பேசலாம் என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

    அந்த எண்ணத்தில் தான் யோசனை செய்யத் தொடங்கினேன் கற்பனையை ஓடவிட்டேன்.திடீரென்று எனக்கு ஒரு பயம். இனம் தெரியாத பீதி என்று கூட சொல்லலாம் பாரதி இன்று உயிரோடு இருந்தால் மூன்று துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியிருப்பார் என்று தோன்றியது அலறிஅடித்துக் கொண்டு எழுந்திருந்தேன் நானே என்னை நிதானப்படுத்திக்கொண்டேன்.

  நல்ல வேளை வயதான காலத்தில் நடு ரோட்டில் குண்டடி பட்டு   சாவதைவிட 40 வயதில் நோய் வந்து இறந்து போனது நல்லது என்று  எனக்குப்பட்டது. நான் ஏன் அப்படி நினைத்து பயப்படுகிறேனென்று உங்களுக்கு குழப்பமும் சந்தேகமும் வரலாம். கடந்த ஒரு சில  ஆண்டுகளாக இந்தியாவில் நடக்கும் சில சம்பவங்கள் தான் இந்த பயத்துக்குக் காரணம். பாரதி வாழ்ந்த காலத்தில் பல புரட்சிகரமான கருத்துகளை துணீந்து கூறினான் எழுதினான். அதற்காக அந்நிய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாகி பல துன்பங்களை ஏற்றான் ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடவில்லை அவனுடைய பத்திரிகை தடை செய்யப்பட்டபோது பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்குப் போய் தன் தேச பக்தக் கடமையைத் தொடங்கினான் ஒரே விநாயகர் உருவில் அல்லா உள்ளிட்ட எல்லா கடவுளையும் பார்ப்பதாகக் கவிதை பாடி சமய நல்லிணக்கம் பேசினான்.
 
விரிவாக எழுத நேரமில்லை அனைவரும் அறிந்த இந்த செய்திகளை சுருக்கமாகச் சொல்லியாக வேண்டியிருக்கிறது இதே கருத்துக்களை இன்றைய காலத்தின் தேவக்கேற்ப எழுதும் எழுத்தாளர்களும் அறிஞர்களும் இன்று படும் பாட்டைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது சிறிய பட்டியல் கொடுக்கிறேன் .என் பயத்துக்குக் காரணமிருப்பதாக  நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

   M.M.பஷீர் என்ற மலையாள எழுத்தாளர் மாத்ருபூமி பத்திரிகையில்  எழுத்தச்சனுடைய ராமயணம் பற்றி பத்து கட்டுரைகள் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டார் அவர் நன்கு அறியப்பட்ட இலக்கிய விமர்சகர் மூன்று கட்டுரைகள் வெளியான நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் தபால் மூலமாகவும் பிறகு போன் மூலமாகவும் வரத் தொடங்கியது உடனே கட்டுரை எழுதுவதை நிறுத்தும்படி உத்திரவு வந்தது. எழுத்தாளர் இலக்கியத்தை விட உயிர் பெரியதென்று தீர்மானித்து மூட்டை கட்டிவிட்டார் இத்தனைக்கும் அவர் ராமாயணத்தைப் பற்றி உயர்வாகத் தான் எழுதினார் என்பதுதான் முக்கியமான செய்தி இவன் யார் ராமாயணத்தைப் பற்றி எழுத என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம். வேறு என்னவாக இருக்க முடியும்?.

 பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் மாதொருபாகன் என்ற நாவல் எழுதினார். திருச்செங்கோடு பகுதியில் ஒருசில மக்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவல். அவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். அவருடைய மனைவியும் ஆசிரியராகப் பணி செய்கிறார். அந்த நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து சிலர் கலகத்தை தூண்டிவிட்டு ஒரு குறிப்பிட்ட சாதியை குறி வைத்து அந்த நாவலில் அவமானப்படுத்தியிருக்கிறார் என்று போராடத் தொடங்கினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவரும் அந்த சாதியச் சேர்ந்தவர்தான் அவர் என்ன விளக்கம் கொடுத்தும் பயனில்லை. எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள் யாரும் இலக்கிய ரசனை இல்லாதவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. பொது அமைதி கெடும் என்ற பெயரில் ரெவின்யு அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் எழுத்தாளர் மீது நிர்ப்பந்தம் கொண்டு வந்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினார்கள். பெருமாள் முருகன் இனி எந்த கதையும் எழுத மாட்டேன் எந்த இலக்கியப் படைப்பிலும் ஈடுபடமாட்டேன் என்று சரணாகதி கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு திருச்செங்கோட்டை விட்டு வெளியூர் சென்றுவிட்டார் அவரை தோப்புக் கரணம் போடச் சொல்லாதது ஒன்றுதான் பாக்கி.அவர் இதுவரை எழுதி வெளியாகி புத்தகச் சந்தையில் விற்பனையில் இருக்கும் எல்லா நூல்களையும்  திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார். ஆக  இன்று எந்த நாவலை .,எந்த சிறுகதையை யார் எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்பதை காவல் துறையினரும் மற்ற துறை உயர் அதிகாரிகளும் தீர்மானிக்கும் நிலை வந்துவிட்டது.
 
யு.ஆர். ஆனந்தமூர்த்தி என்ற கன்னட எழுத்தாளர் 2014 ஆகஸ்ட் மாதம் இறந்தார். அவர் புகழ் மிக்க கன்னட எழுத்தாளர். ஞானபீட விருது பெற்ற ஐந்து கன்னட மொழி அறிஞர்களில் அவரும் ஒருவர் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் செயல்பட்டவர் அவர் சமய நல்லிணக்கம் பற்றியும் மதவெறியில் நடை பெறும் கலகங்கள் பற்றியும் தீவிரக் கருத்துகளை பல சமயங்களில் வெளியிட்டிருக்கிறார் அவர் கருத்துககளில் அதிருப்தி கொண்டவர்கள் ஒன்று கூடி அவர் இறந்த தினத்தன்று அவருடைய வீட்டு முன் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். வீட்டினுள் சவம் கிடக்கும் போது வெளியே மரணத்தைக் கொண்டாடும் காட்டுமிராண்டித் தனத்தை நான் முன்பு ஒரு முறை கேள்விப்பட்டிருக்கிறேன் ஒரு முறை நேரிலும் பார்த்து அதன் விளைவுகளால் மற்றவர்கள் பட்ட பாட்டையும்  நான் கண்டிருக்கிறேன்.

இதெல்லாம் பரவாயில்லை என்றுதான் தோன்றும் வெறும் மிரட்டல்தான். கொலை மிரட்டல் அடிதடி மிரட்டல் செயல்படாமல் முடங்க வைத்து மன உளச்சல் கொடுத்து தன்னுடைய மிருக பலம் வெற்றி பெற்றதாக எண்ணி ஒரு எக்காளம். இறந்தபோனவர் பிணத்தின் பக்கத்தில் கொக்கரிப்பு .இதெல்லாம் பெரிய விஷயங்களே அல்ல .மிக மிக அற்ப விஷயங்கள் இனி வருவதுதான் முக்கியம்      
பூனே நகரத்தில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபோல்கர் என்ற ஒரு அறிஞர் நடுரோட்டில் பட்டபகலில் இரண்டு இளஞர்களால் கொலை செய்யப்பட்டார். அவர் ஒரு பகுத்தறிவுவாதி நாத்திகவாதி. மூடநம்பிக்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். பில்லி, சூன்யம் நரபலி போன்ற மூட நம்பிக்கை பூஜைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார் மகாராஷ்டிர மாநிலத்தில் சென்ற சில ஆண்டுகளில் நரபலி என்று சந்தேகத்தைத் தூண்டும் பல கொலைகள் விசாரனையில் இருக்கின்றன. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
ஒர் ஆண்டுக்கு மேல் ஆகியும் தாபோல்கர் கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

  ஏறக்குறைய அதே முறையில் பூனே நகரத்துக்கு அருகில் கோலாப்பூர் நகரத்தில் கோவிந்தபன்சாரே என்பவர் கொலை செய்யப்பட்டார். காலை வேளையில் மனைவியுடன் சாலையில் நடந்து சென்ற அவரையும் அவர் மனைவியையும் மிக அருகில் பைக்கில் வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.மனைவி மட்டும் தப்பினார்  இறந்தவருடைய வயது எண்பது. அவர் நாத்தீகர் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியச் சேர்ந்த தொழிற்சங்கவாதி வழக்கறிஞர் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டவர்..பல பொது அமைப்புகளில் பங்குகொண்டு செயல்பட்டவர். சிவாஜி பற்றி அவர் எழுதியுள்ள நூல் ஏழு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாகவும் இதுவரை யாரும் கைது  செய்யப்படவில்லை. காவல்துறை நினைத்தால்தான் குற்றாவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடரும். சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறந்தபோது நடத்தப்பட்ட கடையடைப்பைப் பற்றி தன் கருத்தை  டிவிட்டரில் வெளியிட்ட ஒரு பெண் அடுத்த 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டாள்.  மூன்று நாள் காவலில் அந்த பெண் படாதபாடு பட்டாள் என்பதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும். ஆனால் காவல்துறை அப்பொழுது மின்னல் வேகத்தில் செயல்பட்டு  கைது செய்த உண்மையும் அந்த பெண்களுடைய ஜாமீனுக்கு வாதாட வழக்கறிஞர்கள் தயங்கினார்கள் என்பதெல்லாம் பழைய செய்தி பரபப்பான மொம்பை நகரமே அதையெல்லாம் மறந்து போயிருக்கும்.
 
  சென்ற ஆகஸ்ட் 30ம் தேதி கர்நாடகாவில் தார்வார் நகரத்தில் கன்னட அறிஞர் எம்.எம்.கல்பர்கி அவருடைய வீட்டில் காலை  8 மணிக்குக் கொலை செய்யப்பட்டார் .அதே மூன்று துப்பாக்கிக் குண்டுகள் அதே இரண்டு இளைஞர்கள் .அதே மோட்டார் பைக். அதாவது மூன்று கொலையும் ஒரே முறையில் நிகழ்த்தப்பட்டது. முன்னது இரண்டும் தெருவில். கல்பர்கி மட்டும் வீட்டில் கொல்லப்பட்டார் இதுதான் வித்தியாசம். எம்..எம்.கல்பர்கி எனற எழுபத்தெட்டு வயது கன்னட மொழி அறிஞர் கன்னட மொழி இலக்கியத் துறையில் பணீயாற்றியவர் கல்வெட்டு ஆய்வாளர்.40க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர் பலகலைக் கழகத் துணை வேந்தராகப்  பணி செய்தவர் இவர நாத்திகர் அல்ல வீரசைவ சமயத்தைச சேர்ந்தவர். சமய சீர்திருத்தவாதி. உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர். இது தொடர்பாக அவ்வப்பொழுது தீவிரமான கருத்துக்களை பேசிவந்தார் பல  பத்திரிகைகளில் எழுதிவந்தார்.
 
ஏதாவது ஒரு வகையில் நிறுவனமயப்பட்ட மதங்களுக்கு எதிராகப் பேசியவர்களும் எழுதியவர்களும் தேர்ந்தெடுத்துக் கொலை செய்யப்படுவது சென்ற சில ஆண்டுகளாக வாடிக்கையாகிவிட்டது
கொலை செய்யப்படுபவர் அந்த மதத்தைச் சேர்ந்தவராகக் கூட இருக்கலாம். ஆனால் அவர் மதத் துரோகி. களைந்தெறியப்பட வேண்டியவர் இதுதான் இன்றைய நிலைமை. இத் தேசத்தை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்? பொறுத்திருந்து பார்க்கவேண்டும். 
 கல்பர்கி கொலை செய்யப்பட்ட சில மணி நேரத்துக்குப் பிறகு ஒருவர்
கல்பர்கி தொலைந்தான், அடுத்த குறி கே.எஸ்.பகவான் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அவர் கைது செய்யப்பட்டார் அடுத்த அரை மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலையானார் (கே எஸ் பகவான்  என்பவர் கல்பர்கியின் ஆதரவாளர் எழுத்தாளர் )

இந்த நாட்டில் யாருக்கு ஜாமீன் கொடுக்கலாம் எதற்கு ஜாமீன் கொடுக்கலாம் என்பதற்கு என்ன சட்டம் இருக்கிறது அதை யார் தீர்மானிக்கிறார்கள் என்பது பற்றிபேசினால் குழப்பம் தான்மிஞ்சும்.  சந்தன மரக் கடத்தல் புகழ் வீரப்பன் கூட ஒரு முறை எளிதாக ஜாமீன்பெற்று வெளியே போனான் அதற்குப் பிறகு பிணமாகத் தான் கிடைத்தான் ஒரு வேளை உயிரோடு பிடித்திருந்தால் அவனுக்கும் ஜாமீன் கொடுத்திருப்பார்கள். ஆறு ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சல்மான்கான் இரண்டு மணி நேரத்தில் ஜாமீனில் வெளி வர முடியும்.. அங்ககீனமானமாகி இரண்டு ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் மட்டும் நகர்ந்து வரும் அளவுக்கு பலவீனப்பட்டுப் போன கல்லூரிப் பேராசிரியருக்கு இரண்டு ஆண்டுகளாக ஜாமீன் கிடையாது ஏனென்றால் அவர் ஒரு நக்ஸல்பாரி  ஆதரவாளர். வெளியே விட்டால் அவர் இந்த அரசாஙகத்தைக் கவிழ்த்துவிடுவார்.

 இந்த நிலையில் பாரதியார் பற்றிய என்னுடைய பயத்தில் நியாயம் இருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும் சுதந்திரம் வாங்கிய ஆறு மாத காலத்தில் காந்தியையே  கணக்குத் தீர்த்து அனுப்பி வைத்த பெருமை இந்த நாட்டுக்கு உண்டு.
                                                           -மு.கோபாலகிருஷ்ணன்.

Tuesday, September 08, 2015

7 - ஸ்டீரியோடைப்டு தேவேந்திரன்

நிறைய நேரம் மூளையை கசக்கி பிழிஞ்சு யோசிச்ச பிறகும் கூட 'stereotype' கான தமிழ் வார்த்தை என்னனு தெரியல. அதனால இந்த பதிவோட புரிதலுக்காக ‘stereotype' னே எழுதறேன். உலகத்துல எத்தனையோ விஷயத்துக்கு இது இப்படி தான் இருக்கணம் அப்படிங்கற முத்திரை இருக்கு. ஒன்னு அதுலேருந்து மாறுப்பட்டாலும் அத பத்தி முழுசா தெரியாத மக்கள் அந்த விஷயத்துக்கு அந்த முத்திரையை குத்த தான் போறாங்க. உதாரனத்துக்கு என்னுடைய தாழ்மையான கருத்தை பொருத்தவரை 80 சதவிகிதத்துக்கும் மேலான ரிச்மன்ட்' ஓடற car'களோட நம்பர் ப்லேட்' எதாவது விசித்திரமான customized text இருந்தா அது இந்தியர்களோட car தான்.

எதுக்காக இப்படி வேலை எல்லாம் விட்டுட்டு ரூம் போட்டு உக்காந்து யோசிச்சு car'க்கு பேர் வைக்கணம்? உடன்  வேலை பாக்கற ஒருத்தர் வேறு ஒரு அமெரிக்க மாகானத்திலேருந்து ரிச்மண்ட்'கு வந்துருக்கார்அவர் சொல்றார், எல்லா ஊர்கள காட்டிலும் ரிச்மண்டில் customized car name plate   போடறதுக்கான செலவு குறைச்சல். இப்படி சிறமப்பட்டு ஒரு பேர வச்சு, பல பேர் ரோட்ல car ஓட்டும் போது இது என்னவா இருக்கும்'னு cerebrum' சுருக்கி யோசிக்க வேண்டி வேற இருக்கு. 'ரேவதி'னு number plate' போட்டா அந்த car ஓட்டற அம்மாவோட பேரு 'ரேவதி'னு நினைச்சிக்கறதா இல்ல அந்த car சொந்தகாரருக்கு பிடிச்ச ராகம் 'ரேவதி'னு நினைச்சிக்கறதா? இப்படி எவனோ ஒருத்தன் car' ஏதோ பேர போட்டான்'கறதுக்காக ஊர்ல இருக்கற அத்தனை பேரும் எதாவது பேர் போட்டுக்கனமா? பல பேர் ஒரே விஷயத்த திரும்ப திரும்ப செய்யறச்சே அது அந்த இடத்துல ஒரு 'stereotype' பிறக்க வழி செய்யும்.

Anyway தலைப்புக்கு வரேன். இந்த மாறி stereotype fix பண்ணறதுல அதிகபட்சமா நம்ம கைல மாட்டி படாதபாடு பட்ட ஒரு ஆள் இந்திரன். தேவர்களுக்கெல்லாம் தேவன் மகாராஜன் தேவேந்திரன். அந்த தேவராஜன் "தேவராஜமதிராஜமாஷ்ரயே"னு எப்பேர்பட்ட சிறப்புடைய காஞ்சி தேவபெருமாளோட பெயரையே கொண்டவன். உலக்த்துல வேறு எந்த ராஜாவுக்கும் இப்பேர்பட்ட 'cliche' இருக்காது. நாடக, திரைப்பட வரலாற்றுலையே ரொம்ப stereotype பண்ணப்பட்ட கதாபாத்திரம் தேவேந்திரன் தான். இந்தியால தேசிய அளவு channel 'லேருந்து cable tv operator local channel வரை தொலைகாட்சி தொடர்களான ராமாயணம், மகாபாரதம், ஜெய ஹனுமான், ஸ்ரீ க்ருஷ்ணா, ஓம் நமஷிவாயா முதல் ஸ்வாமி ஐயப்பன், பாலாஜி, கணபதி  வரை எல்லாமுமே தேவராஜனை குறைச்சு தான் எடை போட்டு காமிச்சுருக்கு. அவர் எப்போதுமே தேவலோக அழகிகளோட cultural நிகழ்ச்சிகளையே பாத்துக் கொண்டிருக்கிறார். எப்போதும் எதையாவது முட்டாள் தனமா செஞ்சு தன்னோட பதவி, புகழ் எல்லாத்தையும் இழக்கிறார். கோடான கோடி தேவர்களின் அரசன் மாபலம் பொருந்திய ஐராவதத்தின் காவலன் எபோதுமே கோழையை போல  பயந்து பயந்து ஓடறார். அவருடைய அறிமுக காட்சி எப்போதுமே தற்கால தமிழ் படங்கள் மதுபான கடை location'ல ஆரமிக்கற மாதிரியே இருக்கு. அவர் எப்போதுமே எந்த குட்டி அசுரன கூட ஜெயிகரதில்லை. அசுரன், அசுரனோட அக்கா பையன், அசுரனோட சித்தி பையன், ஒன்னு விட்ட தாத்தா பொண்ணு அசுரன்னு எல்லார் கிட்டயுமே தோற்று போறார்.

எப்பேர்பட்ட சக்திமான், தேவலோக சூப்பர் ஹீரோ - அவரோட வீரம், விஜயம், பெருந்தன்மை, கருணை இன்னும் பல பெருமைகள் எல்லாத்தையும் சித்தரிகர மாதிரி ஒரு நாடகம் எடுது இந்த கார் number plate ரிச்மண்ட்'லேருந்து  உலகத்துக்கு உணர்த்தனம். அதுக்கு ஒரு தயாரிப்பாளர் வேணும். உங்களில் யார் அடுத்த producer? ங்கற இந்த கேள்வியோட இந்த பதிவ நிறைவு செய்றேன்.

மீண்டும் சந்திப்போம்,

vgr

Wednesday, August 05, 2015

கடிலக்கரையினிலே... ரெண்டாவது ஈ

குள்ளக் குள்ளனே
குண்டு வயிறனே
வெள்ளிக் கொம்பனே
விநாயக மூர்த்தியே!

முத்தையர் பள்ளியில் 'ரெண்டாவது ஈ' வாத்தியார் சொல்லிக் கொடுத்தது. இன்றும் எந்த  பிள்ளையார் சன்னிதியில் நின்றாலும் மனதுக்குள் சொல்லும் பாட்டு.  எங்காவது உனக்கு பிடித்த குருவை நினைத்துக் கொள் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது தங்கராசு வாத்தியார்தான். முத்தையர் பள்ளியில் ஆசிரியர்களை பெயர் சொல்லிக் குறிப்பிடுவதில்லை. ரெண்டாவது ஈ வாத்தியார், மூனாவது சி டீச்சர், நாலாவது டீ வாத்தியார் இப்படித்தான். இங்கே கிண்டர்கார்டனில் பிள்ளைகள் மிஸஸ் வாட்ஸன் என்று அழைப்பதை பார்த்து அதிர்ந்தவன் நான். இன்றும் அவசரத்தில் பெயர் மறந்து 'உங்க கணக்கு சார்' என்று என் மனைவி சொல்லும்போது பிள்ளைகள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள். 

நான் படிக்கும்போது பண்ருட்டியில் சில ஆரம்பப் பள்ளிகள்தான் இருந்தன. ஊருக்கு கிழக்குப் பக்கம் இருப்பவர்கள் முத்தையர் பள்ளியில் - முத்தைஸ்கூல்! ஊருக்கு மேற்குப் பக்கம் இருப்பவர்கள் ஏ.வி. ஸ்கூலில். நானும், நம் வெங்கட் செட்டியார் மாமனாரும் படித்தது முத்தைஸ்கூலில். ஒரே சமயத்தில் அல்ல. கான்வென்டில் படிக்க ஆசைப்படுபவர்கள்  பாலவிஹார் ஆங்கிலப் பள்ளியில் அல்லது மஹேஸ்வரி நர்சரியில் காசு கட்டிப் படிப்பார்கள். இன்னும் சில மிகவும் சின்ன துவக்கப் பள்ளிகள் இருந்தன. மணிவாத்தியார் ஸ்கூல், நகராட்சிப் பள்ளி... நானும் மஹேஸ்வரியில்தான் ஆரம்பித்தேன். அந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் கிடையாது, அங்கே படித்தால் ஹைஸ்கூல் போக முடியாது என்று கிளம்பிய புரளியால் அப்பா என்னை முத்தைஸ்கூலுக்கு மாற்றி விட்டார். கான்வெண்டில் தொடர்ந்திருந்தால் இந்நேரத்துக்கு முதல்வர் ஆகியிருக்கலாம். விதி!

முத்தையர் பள்ளியில் ஒன்னாங்கிளாஸில் இருந்து எட்டாவது வரை உண்டு. ஆனால்  வெகுசிலர்தான் எட்டாவது வரை முத்தையரிலும் ஏவி ஸ்கூலிலும் தொடர்வார்கள். மற்றவர்கள் ஹைஸ்கூலுக்கு மாறி விடுவார்கள். 

'ரெண்டாவது ஈ'க்கு வருவோம். ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டு தமிழ்ப் பள்ளிக்கு வரும்போது நிறைய மாற்றங்கள்.  தரையில் உட்காருவது,  இன்னமும் சிலேட்டில் எழுதுவது, மதிய உணவு மற்ற வகுப்பு, தெருத் தோழர்களோடு கும்பல் கும்பலாக மாந்தோப்பில் உட்கார்ந்து சாப்பிடுவது, மாந்தோப்பை கண்காணிக்கும் 'சோவை'க்கு தெரியாமல் மாங்காய் அடிப்பது, லேட்டாய் ப்ரேயருக்கு வந்தால் டிரில் மாஸ்டரிடம் அடி வாங்குவது,  மதிய உணவுத் திட்டத்தில்(பெருந்தலைவருடைய திட்டம், புரட்சித் தலைவருடையது அல்ல) சாப்பிட்டுவிட்டு சுத்தம் செய்யாமல் போயிருப்பார்கள் - நம்முடைய இடத்தில் அந்த கோதுமை சாதப்பருக்கைகளை சுத்தம் செய்வது, கரியும் கோவையிலையும் கலந்து போர்டுக்கு கரி பூசுவது, மணியடித்தவுடன் பழி வாங்க வெளியே காத்திருக்கும் மாணவ மணிகளிடம் இருந்து தப்பிப்பது என்று பலவிதம்.  ரெண்டாவதில்தான் வீரட்டன் எனக்கு அறிமுகமானான். அவன் கூட நான் ரெண்டாவது மட்டும்தான் படித்தேன். ஆனாலும் தொடர்ந்து பழக்கதில் இருந்தோம். இன்றும் பண்ருட்டி போனால் அவசியம் சந்திக்கும் ஒரு சிலரில் வீரட்டனும் ஒருவன்.  பண்ருட்டி பக்கத்தில் இருக்கும் திருவதிகை பாடல் பெற்ற ஸ்தலம் அதைப் பற்றி பிறகு விளக்கமாக கூறுகிறேன். அந்தக் கோவிலில் இருப்பது வீரட்டேஸ்வரர். அந்தப் பெயர்தான் வீரட்டனின் முழுப்பெயர். வீரட்டேஸ்வரன். 

வீரட்டன் தான் எனக்கு முதல் நண்பன். ஆங்கிலப் பள்ளியில் இருந்து வந்ததால் மற்ற மாணவர்களுக்கு ஏய்க்க நாந்தான் கிடைத்தேன். அதுவும் ஆறுமுக ஆசாரிக்கு என் மீது 'பாசம்' கொஞ்சம் கூடவே ஜாஸ்தி. திட்டுவது, அடி,உதை கிள்ளு, கொட்டு என்று வாரி வழங்கிக் கொண்டிருந்தான். வீரட்டன் நிறைய தடுக்கப் பார்ப்பான். ஒன்றும் நடக்காது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து 'அஞ்சாவது ஏ'யில் இருக்கும் என் அண்ணனிடம் சொல்லி ஒரு நாள் அழைத்து வந்தேன். வீரமாக வந்த அண்ணன் ஆறுமுக ஆசாரியைப் பார்த்து விட்டு சும்மா போய் விட்டான். எனக்கு ஒரே கடுப்பு. வீட்டுக்கு வந்து சண்டை போட்டேன் என்னடா பயந்துட்டியா என்று. அண்ணன் சொன்னான் அந்தப் பையன் தாயில்லாப் பையன், அடிக்க மனசு வரலை. அண்ணன் அடிக்காததாலோ ஏனோ அதிலிருந்து ஆறுமுக ஆசாரி நண்பனான். வகுப்பு லீடர் மாபெரும் ரவுடி சுப்பிரமணிக்கும் ஏனோ என் மீது பாசம். அந்தக் காலத்தில் சினிமா பட பிலிம்கள் - நெகட்டிவ்கள் தான் கலெக்டர் அய்ட்டம். ஒற்றை ஒற்றையாக இருக்கும். அபூர்வமாக சிலர் சுருள் சுருளாக வைத்திருப்பார்கள். நிறைய பேருக்கு எம்ஜியார் பட பிலிம்கள்தான் பிடிக்கும். நான் சிவாஜி பாசறை. சுப்பிரமணி சிவாஜி பிலிம்களை அழிக்காமல் எனக்கு அவ்வப்போது கொடுப்பான். எப்போதாவது சண்டை போட்டால் என் கண் எதிரே சிவாஜி பிலிம் கிழித்துப் போடுவான். என்ன தண்டனைடா சாமி! 

தங்கராசு வாத்தியார் ரொம்ப அமைதியானவர். கொஞ்சம் குண்டாக இருப்பார். அதனால் சில பெரிய வகுப்பு மாணவர்கள் இட்லிப்பானை என்பார்கள். ஆனால் என் வகுப்பில் அனைவருக்கும் அவரைப் பிடிக்கும். எப்போதாவதுதான் அடிப்பார். லீவ் எடுக்கும்போது அப்பா ஆங்கிலத்தில் லெட்டர் எழுதிக் கொடுப்பார். அதை தங்கராசு வாத்தியார் நிறைய நேரம் ஏனோ படித்துக் கொண்டேயிருப்பார். மற்ற மாணவர்கள் சாருக்கு இங்கிலீஷ் தெரியாது என்று கிசுகிசுப்பார்கள்.  தெரியாமலில்லை. எதுக்குடா பெங்களூர் போற என்றோ யாருக்கு கல்யாணம் என்றோ படித்துத் தெரிந்துகொண்டுதான் கேட்பார்.  ஏன் அவ்வளவு நேரம் படிப்பார் என்பது இதுவரை புரியாத புதிர். 

நீ என்ன பெரிய அப்பாடக்கர் ஆஆஆ .....

அப்பாடக்கர் என்றால் என்ன? உங்களில் அநேகம் பேருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு இதோ ஒரு விளக்கம் (இணையத்தில் படித்தது) 
""இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது. 

அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)""

உங்களுடைய கற்பனையில் வேறு விளக்கம் இருந்தால் அதையும்தான் சொல்லுங்களேன்!