Friday, September 18, 2015

பாரதியின் நினைவு நாளில்



          
இன்று செப்டெம்பர் 11 ம் நாள் மகாகவி பாரதியின் நினைவு நாள். இது போன்ற நாட்களில் நான் பாரதியைப் பற்றி ஏதாவது எழுதுவதும், படிப்பதும் வழக்கம். இப்பொழுதெல்லாம் இந்த நாளில் எட்டயபுரத்துக்கு போவதை விட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது உடல் நலமும் சொந்த பிரச்னைகளும் இடம் கொடுக்காததே முக்கிய காரணம்.
 
     திடீரென்று ஒரு நினைவு இன்று பாரதி உயிரோடு இருந்தால்  எப்படி இருக்கும்? வெறும் கற்பனைதான். இருந்தாலும் அப்படி கற்பனை செய்வதில் தவறில்லையே?

   பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரைப் பற்றி பேச திருவள்ளுவர் திரும்பி வந்தால் என்று கற்பனை தலைப்பை வைத்துக் கொண்டு என்னென்னவோ  பேசுகிறார்கள்., எழுதுகிறார்கள்.
 இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பாரதி பற்றி அப்படி தலைப்பைப் போட்டு பேசலாம் என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

    அந்த எண்ணத்தில் தான் யோசனை செய்யத் தொடங்கினேன் கற்பனையை ஓடவிட்டேன்.திடீரென்று எனக்கு ஒரு பயம். இனம் தெரியாத பீதி என்று கூட சொல்லலாம் பாரதி இன்று உயிரோடு இருந்தால் மூன்று துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியிருப்பார் என்று தோன்றியது அலறிஅடித்துக் கொண்டு எழுந்திருந்தேன் நானே என்னை நிதானப்படுத்திக்கொண்டேன்.

  நல்ல வேளை வயதான காலத்தில் நடு ரோட்டில் குண்டடி பட்டு   சாவதைவிட 40 வயதில் நோய் வந்து இறந்து போனது நல்லது என்று  எனக்குப்பட்டது. நான் ஏன் அப்படி நினைத்து பயப்படுகிறேனென்று உங்களுக்கு குழப்பமும் சந்தேகமும் வரலாம். கடந்த ஒரு சில  ஆண்டுகளாக இந்தியாவில் நடக்கும் சில சம்பவங்கள் தான் இந்த பயத்துக்குக் காரணம். பாரதி வாழ்ந்த காலத்தில் பல புரட்சிகரமான கருத்துகளை துணீந்து கூறினான் எழுதினான். அதற்காக அந்நிய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாகி பல துன்பங்களை ஏற்றான் ஆனாலும் தன் முயற்சியைக் கைவிடவில்லை அவனுடைய பத்திரிகை தடை செய்யப்பட்டபோது பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்குப் போய் தன் தேச பக்தக் கடமையைத் தொடங்கினான் ஒரே விநாயகர் உருவில் அல்லா உள்ளிட்ட எல்லா கடவுளையும் பார்ப்பதாகக் கவிதை பாடி சமய நல்லிணக்கம் பேசினான்.
 
விரிவாக எழுத நேரமில்லை அனைவரும் அறிந்த இந்த செய்திகளை சுருக்கமாகச் சொல்லியாக வேண்டியிருக்கிறது இதே கருத்துக்களை இன்றைய காலத்தின் தேவக்கேற்ப எழுதும் எழுத்தாளர்களும் அறிஞர்களும் இன்று படும் பாட்டைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது சிறிய பட்டியல் கொடுக்கிறேன் .என் பயத்துக்குக் காரணமிருப்பதாக  நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

   M.M.பஷீர் என்ற மலையாள எழுத்தாளர் மாத்ருபூமி பத்திரிகையில்  எழுத்தச்சனுடைய ராமயணம் பற்றி பத்து கட்டுரைகள் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டார் அவர் நன்கு அறியப்பட்ட இலக்கிய விமர்சகர் மூன்று கட்டுரைகள் வெளியான நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் தபால் மூலமாகவும் பிறகு போன் மூலமாகவும் வரத் தொடங்கியது உடனே கட்டுரை எழுதுவதை நிறுத்தும்படி உத்திரவு வந்தது. எழுத்தாளர் இலக்கியத்தை விட உயிர் பெரியதென்று தீர்மானித்து மூட்டை கட்டிவிட்டார் இத்தனைக்கும் அவர் ராமாயணத்தைப் பற்றி உயர்வாகத் தான் எழுதினார் என்பதுதான் முக்கியமான செய்தி இவன் யார் ராமாயணத்தைப் பற்றி எழுத என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம். வேறு என்னவாக இருக்க முடியும்?.

 பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் மாதொருபாகன் என்ற நாவல் எழுதினார். திருச்செங்கோடு பகுதியில் ஒருசில மக்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவல். அவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். அவருடைய மனைவியும் ஆசிரியராகப் பணி செய்கிறார். அந்த நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து சிலர் கலகத்தை தூண்டிவிட்டு ஒரு குறிப்பிட்ட சாதியை குறி வைத்து அந்த நாவலில் அவமானப்படுத்தியிருக்கிறார் என்று போராடத் தொடங்கினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவரும் அந்த சாதியச் சேர்ந்தவர்தான் அவர் என்ன விளக்கம் கொடுத்தும் பயனில்லை. எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள் யாரும் இலக்கிய ரசனை இல்லாதவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. பொது அமைதி கெடும் என்ற பெயரில் ரெவின்யு அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் எழுத்தாளர் மீது நிர்ப்பந்தம் கொண்டு வந்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினார்கள். பெருமாள் முருகன் இனி எந்த கதையும் எழுத மாட்டேன் எந்த இலக்கியப் படைப்பிலும் ஈடுபடமாட்டேன் என்று சரணாகதி கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு திருச்செங்கோட்டை விட்டு வெளியூர் சென்றுவிட்டார் அவரை தோப்புக் கரணம் போடச் சொல்லாதது ஒன்றுதான் பாக்கி.அவர் இதுவரை எழுதி வெளியாகி புத்தகச் சந்தையில் விற்பனையில் இருக்கும் எல்லா நூல்களையும்  திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார். ஆக  இன்று எந்த நாவலை .,எந்த சிறுகதையை யார் எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்பதை காவல் துறையினரும் மற்ற துறை உயர் அதிகாரிகளும் தீர்மானிக்கும் நிலை வந்துவிட்டது.
 
யு.ஆர். ஆனந்தமூர்த்தி என்ற கன்னட எழுத்தாளர் 2014 ஆகஸ்ட் மாதம் இறந்தார். அவர் புகழ் மிக்க கன்னட எழுத்தாளர். ஞானபீட விருது பெற்ற ஐந்து கன்னட மொழி அறிஞர்களில் அவரும் ஒருவர் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் செயல்பட்டவர் அவர் சமய நல்லிணக்கம் பற்றியும் மதவெறியில் நடை பெறும் கலகங்கள் பற்றியும் தீவிரக் கருத்துகளை பல சமயங்களில் வெளியிட்டிருக்கிறார் அவர் கருத்துககளில் அதிருப்தி கொண்டவர்கள் ஒன்று கூடி அவர் இறந்த தினத்தன்று அவருடைய வீட்டு முன் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். வீட்டினுள் சவம் கிடக்கும் போது வெளியே மரணத்தைக் கொண்டாடும் காட்டுமிராண்டித் தனத்தை நான் முன்பு ஒரு முறை கேள்விப்பட்டிருக்கிறேன் ஒரு முறை நேரிலும் பார்த்து அதன் விளைவுகளால் மற்றவர்கள் பட்ட பாட்டையும்  நான் கண்டிருக்கிறேன்.

இதெல்லாம் பரவாயில்லை என்றுதான் தோன்றும் வெறும் மிரட்டல்தான். கொலை மிரட்டல் அடிதடி மிரட்டல் செயல்படாமல் முடங்க வைத்து மன உளச்சல் கொடுத்து தன்னுடைய மிருக பலம் வெற்றி பெற்றதாக எண்ணி ஒரு எக்காளம். இறந்தபோனவர் பிணத்தின் பக்கத்தில் கொக்கரிப்பு .இதெல்லாம் பெரிய விஷயங்களே அல்ல .மிக மிக அற்ப விஷயங்கள் இனி வருவதுதான் முக்கியம்      
பூனே நகரத்தில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபோல்கர் என்ற ஒரு அறிஞர் நடுரோட்டில் பட்டபகலில் இரண்டு இளஞர்களால் கொலை செய்யப்பட்டார். அவர் ஒரு பகுத்தறிவுவாதி நாத்திகவாதி. மூடநம்பிக்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். பில்லி, சூன்யம் நரபலி போன்ற மூட நம்பிக்கை பூஜைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார் மகாராஷ்டிர மாநிலத்தில் சென்ற சில ஆண்டுகளில் நரபலி என்று சந்தேகத்தைத் தூண்டும் பல கொலைகள் விசாரனையில் இருக்கின்றன. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
ஒர் ஆண்டுக்கு மேல் ஆகியும் தாபோல்கர் கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

  ஏறக்குறைய அதே முறையில் பூனே நகரத்துக்கு அருகில் கோலாப்பூர் நகரத்தில் கோவிந்தபன்சாரே என்பவர் கொலை செய்யப்பட்டார். காலை வேளையில் மனைவியுடன் சாலையில் நடந்து சென்ற அவரையும் அவர் மனைவியையும் மிக அருகில் பைக்கில் வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.மனைவி மட்டும் தப்பினார்  இறந்தவருடைய வயது எண்பது. அவர் நாத்தீகர் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியச் சேர்ந்த தொழிற்சங்கவாதி வழக்கறிஞர் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டவர்..பல பொது அமைப்புகளில் பங்குகொண்டு செயல்பட்டவர். சிவாஜி பற்றி அவர் எழுதியுள்ள நூல் ஏழு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாகவும் இதுவரை யாரும் கைது  செய்யப்படவில்லை. காவல்துறை நினைத்தால்தான் குற்றாவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடரும். சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறந்தபோது நடத்தப்பட்ட கடையடைப்பைப் பற்றி தன் கருத்தை  டிவிட்டரில் வெளியிட்ட ஒரு பெண் அடுத்த 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டாள்.  மூன்று நாள் காவலில் அந்த பெண் படாதபாடு பட்டாள் என்பதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும். ஆனால் காவல்துறை அப்பொழுது மின்னல் வேகத்தில் செயல்பட்டு  கைது செய்த உண்மையும் அந்த பெண்களுடைய ஜாமீனுக்கு வாதாட வழக்கறிஞர்கள் தயங்கினார்கள் என்பதெல்லாம் பழைய செய்தி பரபப்பான மொம்பை நகரமே அதையெல்லாம் மறந்து போயிருக்கும்.
 
  சென்ற ஆகஸ்ட் 30ம் தேதி கர்நாடகாவில் தார்வார் நகரத்தில் கன்னட அறிஞர் எம்.எம்.கல்பர்கி அவருடைய வீட்டில் காலை  8 மணிக்குக் கொலை செய்யப்பட்டார் .அதே மூன்று துப்பாக்கிக் குண்டுகள் அதே இரண்டு இளைஞர்கள் .அதே மோட்டார் பைக். அதாவது மூன்று கொலையும் ஒரே முறையில் நிகழ்த்தப்பட்டது. முன்னது இரண்டும் தெருவில். கல்பர்கி மட்டும் வீட்டில் கொல்லப்பட்டார் இதுதான் வித்தியாசம். எம்..எம்.கல்பர்கி எனற எழுபத்தெட்டு வயது கன்னட மொழி அறிஞர் கன்னட மொழி இலக்கியத் துறையில் பணீயாற்றியவர் கல்வெட்டு ஆய்வாளர்.40க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர் பலகலைக் கழகத் துணை வேந்தராகப்  பணி செய்தவர் இவர நாத்திகர் அல்ல வீரசைவ சமயத்தைச சேர்ந்தவர். சமய சீர்திருத்தவாதி. உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர். இது தொடர்பாக அவ்வப்பொழுது தீவிரமான கருத்துக்களை பேசிவந்தார் பல  பத்திரிகைகளில் எழுதிவந்தார்.
 
ஏதாவது ஒரு வகையில் நிறுவனமயப்பட்ட மதங்களுக்கு எதிராகப் பேசியவர்களும் எழுதியவர்களும் தேர்ந்தெடுத்துக் கொலை செய்யப்படுவது சென்ற சில ஆண்டுகளாக வாடிக்கையாகிவிட்டது
கொலை செய்யப்படுபவர் அந்த மதத்தைச் சேர்ந்தவராகக் கூட இருக்கலாம். ஆனால் அவர் மதத் துரோகி. களைந்தெறியப்பட வேண்டியவர் இதுதான் இன்றைய நிலைமை. இத் தேசத்தை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்? பொறுத்திருந்து பார்க்கவேண்டும். 
 கல்பர்கி கொலை செய்யப்பட்ட சில மணி நேரத்துக்குப் பிறகு ஒருவர்
கல்பர்கி தொலைந்தான், அடுத்த குறி கே.எஸ்.பகவான் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அவர் கைது செய்யப்பட்டார் அடுத்த அரை மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலையானார் (கே எஸ் பகவான்  என்பவர் கல்பர்கியின் ஆதரவாளர் எழுத்தாளர் )

இந்த நாட்டில் யாருக்கு ஜாமீன் கொடுக்கலாம் எதற்கு ஜாமீன் கொடுக்கலாம் என்பதற்கு என்ன சட்டம் இருக்கிறது அதை யார் தீர்மானிக்கிறார்கள் என்பது பற்றிபேசினால் குழப்பம் தான்மிஞ்சும்.  சந்தன மரக் கடத்தல் புகழ் வீரப்பன் கூட ஒரு முறை எளிதாக ஜாமீன்பெற்று வெளியே போனான் அதற்குப் பிறகு பிணமாகத் தான் கிடைத்தான் ஒரு வேளை உயிரோடு பிடித்திருந்தால் அவனுக்கும் ஜாமீன் கொடுத்திருப்பார்கள். ஆறு ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சல்மான்கான் இரண்டு மணி நேரத்தில் ஜாமீனில் வெளி வர முடியும்.. அங்ககீனமானமாகி இரண்டு ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் மட்டும் நகர்ந்து வரும் அளவுக்கு பலவீனப்பட்டுப் போன கல்லூரிப் பேராசிரியருக்கு இரண்டு ஆண்டுகளாக ஜாமீன் கிடையாது ஏனென்றால் அவர் ஒரு நக்ஸல்பாரி  ஆதரவாளர். வெளியே விட்டால் அவர் இந்த அரசாஙகத்தைக் கவிழ்த்துவிடுவார்.

 இந்த நிலையில் பாரதியார் பற்றிய என்னுடைய பயத்தில் நியாயம் இருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும் சுதந்திரம் வாங்கிய ஆறு மாத காலத்தில் காந்தியையே  கணக்குத் தீர்த்து அனுப்பி வைத்த பெருமை இந்த நாட்டுக்கு உண்டு.
                                                           -மு.கோபாலகிருஷ்ணன்.

15 comments:

  1. ​பாரதியும், பெரியாரும் இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகி இருந்திருக்காதோ?

    ReplyDelete
  2. என்னுடைய பாரதியின் நினைவுநாளில் கட்டுரைக்கு விமர்சனமாக எழுதிய நண்பருக்கு பதில் சொல்லும் வகையில் சில கருத்துகள்

    பாரதி இன்னும் கொஞசநாள் இருந்திருந்தால் என்ற பேச்சுக்கே இடம் இலலை. இருந்திருந்தால் அவரை உயிரோடு விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்பதே என் பயம்.அந்த கருத்தைத்தான் கட்டுரையின் மைய்யப் பொருளாக வைத்திருந்தேன் தன்னுடைய சாதியைப் பற்றி துணிவுடன் சுயவிமர்சனம் செய்யும் பெருந்தன்மை பாரதியார் ஒருவருக்குத்தான் இருந்தது அதனால் அவர் பல சோதனைகளைச் சந்தித்தார். பெரியாரைப் பொறுத்தவரை அவருடைய கோபமே அவருக்கு எதிரி. அலுக்கச் சலிக்க 95 வயது வாழ்ந்துவிட்டார் இன்னும் கொஞ்ச நாள் கூட வாழ்ந்து என்ன சாதித்திருக்கப் போகிறார்.ஒரு சாதியை ஒழித்துவிட்டால் எல்லா சாதிகளும் ஒழிந்து போகும் என்ற அவருடைய பகற்கனவு பகற்கனவாகவே முடிந்தது.கிராமப் பொருளாதாரத்தையும் சமூக அமைப்பையும் சரியாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளாததின் வி/ளைவு அது. இன்று கிராமங்களில் தலித் துகளுக்கு எதிரான வன்முறையில் முன்னுக்கு நிற்பவர்கள் ஒரு காலத்தில் பெரியாருடைய கொடியை உயர்த்திப் பிடித்தவர்கள். இன்று கிராமக் கோயில்களில் (பணக்காரக் கோயில்களீல் மட்டும்) அவர்கள்தான் அறங்காவலர்கள் ஒரு காலத்தில் பிராமணர்கள் செய்த தவறை இப்பொழுது அவர்கள் அரசாங்க ஆதரவோடு செய்கிறார்கள். மதத்தின் சரியான பங்களிப்பை கவனத்தில் கொள்ளாமல் பெரியார் பேசிய வறட்டு நாத்திகம் அதிகநாள் நீடிக்கவில்லை அதற்கு மாறாக இன்று மதம் வெகு ஆக்கிரோஷமாக வன்முறையில் இறங்கியிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு சாதியும் ஒரு மதம் கிராமக் கோயில்கள் சாதியின் மேலாண்மையை காட்டும் களம். எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கும் மக்கள் அவர்களை கொம்பு சீவத்தான் இடஒதுக்கீடுப் போராட்டம் பயன்பட்டது. இப்பொழுது குஜரத்திலும் அந்த நாடகம் தொடங்கிவிட்டது .சாதியையும் மதத்தையும் பயன்படுத்தி குளிர் காய்ந்தவர்கள் சூடு பொறுக்காமல் ஒட வேண்டிய காலம் நெருங்கி விட்டதாகவே நினைக்கிறேன்.எதிர்காலத்தில் பெரியார் சிலைகளை விட அதிக எண்ணீக்கையில் சாதி தலைவர்கள் சிலைகள் நகரத்துத் தெருக்களை வழிமறிக்கத் தொடங்கும்.இதுதான் தமிழ்நாட்டின் எதிர்காலம். மு.கோபாலகிருஷ்ணன்.

    ReplyDelete
    Replies
    1. அம்மா முடியல

      Delete
    2. ஐயா வணக்கம்.

      நாம் இங்கு பாரதியார் அல்லது பெரியார் என்று குறிப்பிடுவது அந்த தனி மனிதர்களை அல்லவே. அவர்களது கருத்துக்களையும் துணிவையும் தானே.
      இருவருமே சாதியைத் தான் விமர்சித்தனர். இன்னும் குறிப்பாக ஒரே சாதியைத்தான் விமர்சித்தனர். அவர்களது "மேட்டுக்குடி" மனப்பான்மை இருவருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது. பல தருணங்களில் ஒன்று போல சிந்தித்தவர்கள். They were almost brothers from different parents. Yes, no exaggeration here.

      பெரியாரும் பாரதியும் எதிர்த்த அந்த ஆதிக்க மனம் இன்னும் ஒழியவில்லையே? அவர் இன்று இருந்திருந்தால் திருச்செங்கோட்டின் கவுண்டர்களையும் தருமபுரியின் வன்னியர்களையும் எதிர்த்திருப்பார். அவரது காலத்தில் எந்த சாதியினர் பெரிதும் சாதியைப் பேசினாரோ, ஆதரித்தனரோ, எளிய மக்களை ஏய்த்தனரோ (exploited) அவர்களை எதிர்த்தார். அதற்க்கு அவர்கள் பயன்படுத்திக் கொண்ட மதத்தின் மீதும் கோபம் கொண்டார். இன்று மதம் வெகு ஆக்ரோஷமாக வன்முறையில் இறங்கி இருக்கிறது என்கிறீர்களே, அதுவே அவர் செய்தது சரி என்று சொல்லவில்லை?

      ஆமாம், நாத்திகர்கள் வன்முறையில் இறங்குவதிலையே ஏன்? வன்முறையாளர்கள் ஆத்திகர்களாகவே இருக்கிறார்களே ஏன்?
      பெரியார் சொன்னது சரியோ?

      95 வயது வரை "அலுக்கச் சலிக்க" வாழ்ந்தாரா? இன்னும் கொஞ்ச நாள் கூட வாழ்ந்து என்ன சாதித்திருக்கப்போறாரா?
      உங்கள் பதிலில் 2ம் பாதியை திரும்மவும் படித்துப் பாருங்கள். நீங்களே அவருக்காக ஏங்குகிறீர்கள் (You are missing him).

      Delete
  3. அம்மா முடியல

    ReplyDelete
  4. நாத்திகர்கள் வன்முறையில் இறங்குவதில்லையா? சரிதான். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நாத்திகர்கள் யாரும் இல்லை. அது பெரியாருடன் போயிற்று. இப்போதெல்லாம் ஓட்டுக்காக பார்ப்பன துவேஷம், இந்துமத துவேஷம் மட்டும்தான் இருக்கிறது. பாரதி போல் யார் தாம் சார்ந்த இனத்தை, ஜாதியை விமர்சிக்கிறார்கள்? மு.கோ. சொன்னது போல பார்ப்பனர் இடத்தை மற்ற ஜாதிக்காரர்கள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். ஜாதி ஒழியவில்லை. தலித்துக்களும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். ஜாதிவாரி அரசியல் மேலோங்கி இருக்கிறது. பெரியார் சொல்வாராம். பார்ப்பனர்களை கவனித்துவிட்டு சில ஜாதிகளை குறிப்பிட்டு அவர்களை கவனிக்கவேண்டும் என்பாராம். எப்படி கவனிப்பது. ஓட்டு வேண்டுமே?

    ReplyDelete
  5. நாகு,

    "நாத்திகர்கள் வன்முறையில் இறங்குவதில்லையா? சரிதான்."
    சரிதான்-ங்கிறது . சரிதானா, சரி இல்லைங்கறீங்களா? கொயப்பரீங்களே.
    சரின்னு சொல்றீர்ன்னே எடுத்துக்கிறேன். ஆம். வெறி ஏற்றுவதும், ஏற்றிக் கொள்வதும் மதவாதிகளுக்கு எளிது.

    "தமிழகத்தைப் பொறுத்தவரையில் நாத்திகர்கள் யாரும் இல்லை. அது பெரியாருடன் போயிற்று."
    அரசியல் தலைவர்களைப் பற்றி ***மட்டும்*** குறிப்பிடுகிறீர் போல.
    நானறிந்த வரையில் இன்றைய பெரிய தலைவர்களில் எவரும் தன்னை நாத்திகராய் காண்பித்துக் கொள்வதில்லைதான். இன்றைய நிலையில் தன்னை நாத்திகன் என்று சொல்லிக்கொள்வது அவர்களது வாணிபத்தை பாதிக்கும். Conflict of interest.
    மக்களில் நாத்திகர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

    "மு.கோ. சொன்னது போல பார்ப்பனர் இடத்தை மற்ற ஜாதிக்காரர்கள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். ஜாதி ஒழியவில்லை. தலித்துக்களும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். ஜாதிவாரி அரசியல் மேலோங்கி இருக்கிறது. பெரியார் சொல்வாராம். பார்ப்பனர்களை கவனித்துவிட்டு சில ஜாதிகளை குறிப்பிட்டு அவர்களை கவனிக்கவேண்டும் என்பாராம். எப்படி கவனிப்பது. ஓட்டு வேண்டுமே?"

    ஆக , பெரியார் (அல்லது அவர் போன்ற ஒருவர்) இல்லாமை பெரும் பிரச்சினை என்கிறீர். மிகச் சரி.

    பாருங்கள், நாம் மூவருமே* ஒரே கருத்தைத் தான் சொல்கிறோம். பெரியாரின் தேவையை உணர்கிறோம்.

    *மு.கோ, நான், நீங்கள்.

    ReplyDelete
  6. பெரியார் இல்லாதது பெரும் பிரச்சினைதான். யாரும் பெரியாரை குறை சொன்ன மாதிரி எனக்கு தெரியவில்லை. அவர் ஆரம்பித்ததை தொடராமல் இருக்கிறோம். தி.க. போன்ற இயக்கங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். மூட நம்பிக்கை, ஜாதி,மத மூர்க்கத்தனங்களை குறி வைக்க வேண்டும்.

    இன்றைய பெரிய தலைவர்களில் யாரும் நாத்திகராய் காண்பித்துக் கொள்வதில்லையா!!??? மிக முக்கியமான கட்சியின் தலைவரை விட்டு விட்டீர்களே? :-)

    ஆமாம் அப்பாவி அந்தணர்களை பிடித்து அடித்து பூணுலை அறுப்பது வன்முறையில்லாமல் எதில் சேரும்?

    ReplyDelete
  7. பாரதியின் நினைவுநாளில் 2
    என்னுடைய முந்தைய கட்டுரைகள் எதுவும் இவ்வளவு விமர்சனத்தைப் பெற்றதில்லை..சில இலக்கிய கட்டுரைகள் கூட
    எத்தனை பேருடைய கவனத்தைக் கவர்ந்தது என்பது பற்றி எனக்கு பல நேரங்களில் சந்தேகம் வந்தது உண்டு.
    மாறாக பாரதி நினைவு நாளீல்கட்டுரை நிறைய சிந்திக்க வைத்திருக்கிறது. எதிர்வினை ஆற்றச் செய்திருக்கிறது உண்மையில் ஒரு சூடான விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது.
    நண்பர்கள் குறிப்பிட்டபடி பெரியாரிடம் எனக்குள்ள மரியாதை எந்த வகையிலும் குறைந்ததல்ல.ஆனால் என்னுடைய வருத்தம் அவர் தவறான குறி வைத்துத் தாக்கினார்.என்பதுதான்.சாதி அமைப்புக்கு பிராமணர்கள் மட்டுமே காரணம் அவர்கள் மட்டுமே லாபம் அடைந்தனர். என்று மக்களை நம்ப வைத்தார்..படிநிலைச் சாதி அமைப்பில் பிராமணரல்லாத மேல்சாதியினர் அனுபவித்த அதிகார சுகம் .செய்த குழப்பங்கள் ஆகியவற்றை பெரியார் கவனத்தில் கொள்ளவில்லை.அந்த பிராமணரல்லாத மேல்சாதியினர் பிராமணர்களூக்கு எதிரான போராட்டத்தில் பெரியாரை பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த உண்மையை பெரியார் அறிந்திருந்தார். ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை.
    இன்று கூட திராவிடக் கழகம் பாரதியாரை ஏற்றுக் கொள்ளவில்லை இதுதான் உண்மை.என்ன சீர்திருத்தம் பேசினாலும் பாரதி ஒரு பார்ப்பான்.அந்த கோணல் பார்வையிலிருந்து இன்று கூட தி.க தொணடன் விடுபடவில்லை. இது தொடர்பான கசப்பான பல அனுபவங்கள் எனக்கு உண்டு.
    மு.கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  8. ​​​ஐயா, ​வணக்கம்.
    ​மீண்டும் நானே.

    ​"யாரும் பெரியாரை குறை சொன்ன மாதிரி எனக்கு தெரியவில்லை"
    :-)

    "தி.க. போன்ற இயக்கங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்."
    நாம் பொது மக்கள், ஏன் அவர்களைச் சார்ந்திருக்க வேண்டும்?
    பெரியாருக்குப் பின் தி.க-வும் மற்ற பெரிய இயக்கங்களைப் போலவே வழி மாறி 'சொத்தைக் காக்கும்' அமைப்பாகி விட்டது என்பது என் போன்றோரின் எண்ணம். அடுத்த கட்டத்துக்கு நகற்ற வேண்டிய பொறுப்பு நம்முடையது. நாம், மக்களே பொறுப்பு. We shouldn't expect someone to babysit us all the time. அவர் ஆரம்பித்து வைத்தார். பிறகு தொடர வேண்டியது நம் பொறுப்பு.

    தி.க-வினர் 'பெரியார்' என்ற ப்ரண்ட்-ஐ வைத்து வண்டி ஒட்டிக் கொண்டிருகிறார்கள். எனக்கு அவர்களைப் பற்றிய அக்கறை இல்லை. They have become very irrelevant.

    ஆனால், 'பெரியார் இல்லாமை' வேறு பல வேண்டாத விளைவுகளை உண்டாக்கிக் கொண்டிருகிறது. ("மு.கோ: மதம் வெகு ஆக்கிரோஷமாக வன்முறையில் இறங்கியிருக்கிறது...").
    நாமும் தொடராமல், பெரியார் போன்ற ஒருவர் சாட்டையை சொடுக்கவும் இல்லாமல் போக, நிலைமை இக்கட்டுரையில் சொல்லிருப்பது போன்ற மோசமான நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

    "மிக முக்கியமான கட்சியின் தலைவரை விட்டு விட்டீர்களே? :-)"
    இதில் இரண்டு பொருட் பிழைகள் உள்ளன.
    1. மிக முக்கியமான கட்சியின் தலைவர்.
    2. அவர் நாத்திகர் என காண்பித்துக் கொள்கிறார்.
    இரண்டுமே தவறு.

    "அவர் தவறான குறி வைத்துத் தாக்கினார்.என்பதுதான்."
    "படிநிலைச் சாதி அமைப்பில் பிராமணரல்லாத மேல்சாதியினர்...பெரியார் கவனத்தில் கொள்ளவில்லை".
    தவறு. படிநிலை அமைப்பில் உச்சத்தில் இருப்பதாக சொல்லிக் கொண்டவர்களை முதலில் எதிர் கொண்டார். அவர் எதிர்த்து அந்தப் படிநிலையையே. அதில் முதல் கண்ணியில் /படியில் தங்களை இருத்திக் கொண்டதால் அவர்களது சமூக அந்தஸ்த்து குறித்து கேள்வி எழுப்பினார். Questioned their unfair social-status.

    ஒருவேளை அவர் காலத்திலேயே அந்த படிநிலையை (hierarchy) உடைக்க முடிந்திருந்தால் அடுத்தடுத்த படிகளில் இருந்தவர்கள்/இருப்போர் சூட்டை உணர்திருப்பர்.

    "பாரதியாரை ஏற்றுக் கொள்ளவில்லை இதுதான் உண்மை.என்ன சீர்திருத்தம் பேசினாலும் பாரதி ஒரு பார்ப்பான்.அந்த கோணல் பார்வையிலிருந்து இன்று கூட தி.க தொணடன் விடுபடவில்லை. இது தொடர்பான கசப்பான பல அனுபவங்கள் எனக்கு உண்டு."
    தி.க-வே மொத்த குத்தகைதாரர் இல்லை ஐயா. தனி மனித தாக்குதல்களோ கசப்பான நிகழ்வுகளோ கண்டிப்பாக சரியானவை அல்ல. உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்கு என் வருத்தங்கள்.


    ReplyDelete
  9. ​​
    ஹலோ மைக் டெஸ்டிங்..
    1 2 3..

    இன்னாபா அல்லாரும் சோக்கா பேசிகினு இருந்தீங்கோ.
    டப்புன்னு முயூட் ஆய்டீங்கோ. இன்னா ஆச்சு?

    இப்படிக்கு,
    நானும் அனானிமஸ் தான்.

    ReplyDelete
  10. கட்டுரையின் மையக் கருத்தை ஒதுக்கி விட்டு பெரியார், பாரதியை சுற்றியே சிந்தனையை ஓட விட்டோம். அந்த உண்மையை கவனிக்கவும் தவறிவிட்டோம் .உண்மையில் சுதந்திரமாக கருத்துகளை வெளியிட்ட குற்றத்துக்காக குண்டுக்கு இரையான முன்று பேரைப் பற்றியும் அவர்கள் பற்றியும் அவர்களுடைய கருத்துகள் பற்றியும் அதிகம் பேசியிருக்க வேண்டும்,சுதந்திர இந்தியாவில் மத அடிப்படை வாதத்துக்கு முதல் பலியான காந்தியின் பிறந்தநாளில் இது பற்றி நிறைய பேசியிருக்க வேண்டும்

    பரவாயில்லை வேறொரு சந்தர்ப்பத்தில் இதுபற்றி புதிய கோணத்தில் விவாதிப்போம். எப்படியாயினும் நண்பர் அனனிமஸ இது விஷயமாக எல்லோரையும் உசுப்பிவிட்டிருகிகிறார்
    அவருக்கு நன்றி - மு.கோ.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. அனானி அண்ணே,
    நாங்க முயூட் ஆனா என்ன. நீங்க பேசறதுதானே?

    ReplyDelete
  13. இன்று காந்தி பிறந்ததினம். துப்பாக்கிச்சூடு நடக்கிறது, மத தீவிரவாதம் மேலோங்கியிருக்கிறது. மு.கோ. சொல்வது போல் மத்திய பிரச்னைக்கு வருவோம்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!