Tuesday, September 08, 2015

7 - ஸ்டீரியோடைப்டு தேவேந்திரன்

நிறைய நேரம் மூளையை கசக்கி பிழிஞ்சு யோசிச்ச பிறகும் கூட 'stereotype' கான தமிழ் வார்த்தை என்னனு தெரியல. அதனால இந்த பதிவோட புரிதலுக்காக ‘stereotype' னே எழுதறேன். உலகத்துல எத்தனையோ விஷயத்துக்கு இது இப்படி தான் இருக்கணம் அப்படிங்கற முத்திரை இருக்கு. ஒன்னு அதுலேருந்து மாறுப்பட்டாலும் அத பத்தி முழுசா தெரியாத மக்கள் அந்த விஷயத்துக்கு அந்த முத்திரையை குத்த தான் போறாங்க. உதாரனத்துக்கு என்னுடைய தாழ்மையான கருத்தை பொருத்தவரை 80 சதவிகிதத்துக்கும் மேலான ரிச்மன்ட்' ஓடற car'களோட நம்பர் ப்லேட்' எதாவது விசித்திரமான customized text இருந்தா அது இந்தியர்களோட car தான்.

எதுக்காக இப்படி வேலை எல்லாம் விட்டுட்டு ரூம் போட்டு உக்காந்து யோசிச்சு car'க்கு பேர் வைக்கணம்? உடன்  வேலை பாக்கற ஒருத்தர் வேறு ஒரு அமெரிக்க மாகானத்திலேருந்து ரிச்மண்ட்'கு வந்துருக்கார்அவர் சொல்றார், எல்லா ஊர்கள காட்டிலும் ரிச்மண்டில் customized car name plate   போடறதுக்கான செலவு குறைச்சல். இப்படி சிறமப்பட்டு ஒரு பேர வச்சு, பல பேர் ரோட்ல car ஓட்டும் போது இது என்னவா இருக்கும்'னு cerebrum' சுருக்கி யோசிக்க வேண்டி வேற இருக்கு. 'ரேவதி'னு number plate' போட்டா அந்த car ஓட்டற அம்மாவோட பேரு 'ரேவதி'னு நினைச்சிக்கறதா இல்ல அந்த car சொந்தகாரருக்கு பிடிச்ச ராகம் 'ரேவதி'னு நினைச்சிக்கறதா? இப்படி எவனோ ஒருத்தன் car' ஏதோ பேர போட்டான்'கறதுக்காக ஊர்ல இருக்கற அத்தனை பேரும் எதாவது பேர் போட்டுக்கனமா? பல பேர் ஒரே விஷயத்த திரும்ப திரும்ப செய்யறச்சே அது அந்த இடத்துல ஒரு 'stereotype' பிறக்க வழி செய்யும்.

Anyway தலைப்புக்கு வரேன். இந்த மாறி stereotype fix பண்ணறதுல அதிகபட்சமா நம்ம கைல மாட்டி படாதபாடு பட்ட ஒரு ஆள் இந்திரன். தேவர்களுக்கெல்லாம் தேவன் மகாராஜன் தேவேந்திரன். அந்த தேவராஜன் "தேவராஜமதிராஜமாஷ்ரயே"னு எப்பேர்பட்ட சிறப்புடைய காஞ்சி தேவபெருமாளோட பெயரையே கொண்டவன். உலக்த்துல வேறு எந்த ராஜாவுக்கும் இப்பேர்பட்ட 'cliche' இருக்காது. நாடக, திரைப்பட வரலாற்றுலையே ரொம்ப stereotype பண்ணப்பட்ட கதாபாத்திரம் தேவேந்திரன் தான். இந்தியால தேசிய அளவு channel 'லேருந்து cable tv operator local channel வரை தொலைகாட்சி தொடர்களான ராமாயணம், மகாபாரதம், ஜெய ஹனுமான், ஸ்ரீ க்ருஷ்ணா, ஓம் நமஷிவாயா முதல் ஸ்வாமி ஐயப்பன், பாலாஜி, கணபதி  வரை எல்லாமுமே தேவராஜனை குறைச்சு தான் எடை போட்டு காமிச்சுருக்கு. அவர் எப்போதுமே தேவலோக அழகிகளோட cultural நிகழ்ச்சிகளையே பாத்துக் கொண்டிருக்கிறார். எப்போதும் எதையாவது முட்டாள் தனமா செஞ்சு தன்னோட பதவி, புகழ் எல்லாத்தையும் இழக்கிறார். கோடான கோடி தேவர்களின் அரசன் மாபலம் பொருந்திய ஐராவதத்தின் காவலன் எபோதுமே கோழையை போல  பயந்து பயந்து ஓடறார். அவருடைய அறிமுக காட்சி எப்போதுமே தற்கால தமிழ் படங்கள் மதுபான கடை location'ல ஆரமிக்கற மாதிரியே இருக்கு. அவர் எப்போதுமே எந்த குட்டி அசுரன கூட ஜெயிகரதில்லை. அசுரன், அசுரனோட அக்கா பையன், அசுரனோட சித்தி பையன், ஒன்னு விட்ட தாத்தா பொண்ணு அசுரன்னு எல்லார் கிட்டயுமே தோற்று போறார்.

எப்பேர்பட்ட சக்திமான், தேவலோக சூப்பர் ஹீரோ - அவரோட வீரம், விஜயம், பெருந்தன்மை, கருணை இன்னும் பல பெருமைகள் எல்லாத்தையும் சித்தரிகர மாதிரி ஒரு நாடகம் எடுது இந்த கார் number plate ரிச்மண்ட்'லேருந்து  உலகத்துக்கு உணர்த்தனம். அதுக்கு ஒரு தயாரிப்பாளர் வேணும். உங்களில் யார் அடுத்த producer? ங்கற இந்த கேள்வியோட இந்த பதிவ நிறைவு செய்றேன்.

மீண்டும் சந்திப்போம்,

vgr

Wednesday, August 05, 2015

கடிலக்கரையினிலே... ரெண்டாவது ஈ

குள்ளக் குள்ளனே
குண்டு வயிறனே
வெள்ளிக் கொம்பனே
விநாயக மூர்த்தியே!

முத்தையர் பள்ளியில் 'ரெண்டாவது ஈ' வாத்தியார் சொல்லிக் கொடுத்தது. இன்றும் எந்த  பிள்ளையார் சன்னிதியில் நின்றாலும் மனதுக்குள் சொல்லும் பாட்டு.  எங்காவது உனக்கு பிடித்த குருவை நினைத்துக் கொள் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது தங்கராசு வாத்தியார்தான். முத்தையர் பள்ளியில் ஆசிரியர்களை பெயர் சொல்லிக் குறிப்பிடுவதில்லை. ரெண்டாவது ஈ வாத்தியார், மூனாவது சி டீச்சர், நாலாவது டீ வாத்தியார் இப்படித்தான். இங்கே கிண்டர்கார்டனில் பிள்ளைகள் மிஸஸ் வாட்ஸன் என்று அழைப்பதை பார்த்து அதிர்ந்தவன் நான். இன்றும் அவசரத்தில் பெயர் மறந்து 'உங்க கணக்கு சார்' என்று என் மனைவி சொல்லும்போது பிள்ளைகள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள். 

நான் படிக்கும்போது பண்ருட்டியில் சில ஆரம்பப் பள்ளிகள்தான் இருந்தன. ஊருக்கு கிழக்குப் பக்கம் இருப்பவர்கள் முத்தையர் பள்ளியில் - முத்தைஸ்கூல்! ஊருக்கு மேற்குப் பக்கம் இருப்பவர்கள் ஏ.வி. ஸ்கூலில். நானும், நம் வெங்கட் செட்டியார் மாமனாரும் படித்தது முத்தைஸ்கூலில். ஒரே சமயத்தில் அல்ல. கான்வென்டில் படிக்க ஆசைப்படுபவர்கள்  பாலவிஹார் ஆங்கிலப் பள்ளியில் அல்லது மஹேஸ்வரி நர்சரியில் காசு கட்டிப் படிப்பார்கள். இன்னும் சில மிகவும் சின்ன துவக்கப் பள்ளிகள் இருந்தன. மணிவாத்தியார் ஸ்கூல், நகராட்சிப் பள்ளி... நானும் மஹேஸ்வரியில்தான் ஆரம்பித்தேன். அந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் கிடையாது, அங்கே படித்தால் ஹைஸ்கூல் போக முடியாது என்று கிளம்பிய புரளியால் அப்பா என்னை முத்தைஸ்கூலுக்கு மாற்றி விட்டார். கான்வெண்டில் தொடர்ந்திருந்தால் இந்நேரத்துக்கு முதல்வர் ஆகியிருக்கலாம். விதி!

முத்தையர் பள்ளியில் ஒன்னாங்கிளாஸில் இருந்து எட்டாவது வரை உண்டு. ஆனால்  வெகுசிலர்தான் எட்டாவது வரை முத்தையரிலும் ஏவி ஸ்கூலிலும் தொடர்வார்கள். மற்றவர்கள் ஹைஸ்கூலுக்கு மாறி விடுவார்கள். 

'ரெண்டாவது ஈ'க்கு வருவோம். ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டு தமிழ்ப் பள்ளிக்கு வரும்போது நிறைய மாற்றங்கள்.  தரையில் உட்காருவது,  இன்னமும் சிலேட்டில் எழுதுவது, மதிய உணவு மற்ற வகுப்பு, தெருத் தோழர்களோடு கும்பல் கும்பலாக மாந்தோப்பில் உட்கார்ந்து சாப்பிடுவது, மாந்தோப்பை கண்காணிக்கும் 'சோவை'க்கு தெரியாமல் மாங்காய் அடிப்பது, லேட்டாய் ப்ரேயருக்கு வந்தால் டிரில் மாஸ்டரிடம் அடி வாங்குவது,  மதிய உணவுத் திட்டத்தில்(பெருந்தலைவருடைய திட்டம், புரட்சித் தலைவருடையது அல்ல) சாப்பிட்டுவிட்டு சுத்தம் செய்யாமல் போயிருப்பார்கள் - நம்முடைய இடத்தில் அந்த கோதுமை சாதப்பருக்கைகளை சுத்தம் செய்வது, கரியும் கோவையிலையும் கலந்து போர்டுக்கு கரி பூசுவது, மணியடித்தவுடன் பழி வாங்க வெளியே காத்திருக்கும் மாணவ மணிகளிடம் இருந்து தப்பிப்பது என்று பலவிதம்.  ரெண்டாவதில்தான் வீரட்டன் எனக்கு அறிமுகமானான். அவன் கூட நான் ரெண்டாவது மட்டும்தான் படித்தேன். ஆனாலும் தொடர்ந்து பழக்கதில் இருந்தோம். இன்றும் பண்ருட்டி போனால் அவசியம் சந்திக்கும் ஒரு சிலரில் வீரட்டனும் ஒருவன்.  பண்ருட்டி பக்கத்தில் இருக்கும் திருவதிகை பாடல் பெற்ற ஸ்தலம் அதைப் பற்றி பிறகு விளக்கமாக கூறுகிறேன். அந்தக் கோவிலில் இருப்பது வீரட்டேஸ்வரர். அந்தப் பெயர்தான் வீரட்டனின் முழுப்பெயர். வீரட்டேஸ்வரன். 

வீரட்டன் தான் எனக்கு முதல் நண்பன். ஆங்கிலப் பள்ளியில் இருந்து வந்ததால் மற்ற மாணவர்களுக்கு ஏய்க்க நாந்தான் கிடைத்தேன். அதுவும் ஆறுமுக ஆசாரிக்கு என் மீது 'பாசம்' கொஞ்சம் கூடவே ஜாஸ்தி. திட்டுவது, அடி,உதை கிள்ளு, கொட்டு என்று வாரி வழங்கிக் கொண்டிருந்தான். வீரட்டன் நிறைய தடுக்கப் பார்ப்பான். ஒன்றும் நடக்காது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து 'அஞ்சாவது ஏ'யில் இருக்கும் என் அண்ணனிடம் சொல்லி ஒரு நாள் அழைத்து வந்தேன். வீரமாக வந்த அண்ணன் ஆறுமுக ஆசாரியைப் பார்த்து விட்டு சும்மா போய் விட்டான். எனக்கு ஒரே கடுப்பு. வீட்டுக்கு வந்து சண்டை போட்டேன் என்னடா பயந்துட்டியா என்று. அண்ணன் சொன்னான் அந்தப் பையன் தாயில்லாப் பையன், அடிக்க மனசு வரலை. அண்ணன் அடிக்காததாலோ ஏனோ அதிலிருந்து ஆறுமுக ஆசாரி நண்பனான். வகுப்பு லீடர் மாபெரும் ரவுடி சுப்பிரமணிக்கும் ஏனோ என் மீது பாசம். அந்தக் காலத்தில் சினிமா பட பிலிம்கள் - நெகட்டிவ்கள் தான் கலெக்டர் அய்ட்டம். ஒற்றை ஒற்றையாக இருக்கும். அபூர்வமாக சிலர் சுருள் சுருளாக வைத்திருப்பார்கள். நிறைய பேருக்கு எம்ஜியார் பட பிலிம்கள்தான் பிடிக்கும். நான் சிவாஜி பாசறை. சுப்பிரமணி சிவாஜி பிலிம்களை அழிக்காமல் எனக்கு அவ்வப்போது கொடுப்பான். எப்போதாவது சண்டை போட்டால் என் கண் எதிரே சிவாஜி பிலிம் கிழித்துப் போடுவான். என்ன தண்டனைடா சாமி! 

தங்கராசு வாத்தியார் ரொம்ப அமைதியானவர். கொஞ்சம் குண்டாக இருப்பார். அதனால் சில பெரிய வகுப்பு மாணவர்கள் இட்லிப்பானை என்பார்கள். ஆனால் என் வகுப்பில் அனைவருக்கும் அவரைப் பிடிக்கும். எப்போதாவதுதான் அடிப்பார். லீவ் எடுக்கும்போது அப்பா ஆங்கிலத்தில் லெட்டர் எழுதிக் கொடுப்பார். அதை தங்கராசு வாத்தியார் நிறைய நேரம் ஏனோ படித்துக் கொண்டேயிருப்பார். மற்ற மாணவர்கள் சாருக்கு இங்கிலீஷ் தெரியாது என்று கிசுகிசுப்பார்கள்.  தெரியாமலில்லை. எதுக்குடா பெங்களூர் போற என்றோ யாருக்கு கல்யாணம் என்றோ படித்துத் தெரிந்துகொண்டுதான் கேட்பார்.  ஏன் அவ்வளவு நேரம் படிப்பார் என்பது இதுவரை புரியாத புதிர். 

நீ என்ன பெரிய அப்பாடக்கர் ஆஆஆ .....

அப்பாடக்கர் என்றால் என்ன? உங்களில் அநேகம் பேருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு இதோ ஒரு விளக்கம் (இணையத்தில் படித்தது) 
""இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ். மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர். வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லபட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது. 

அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது. அப்பாடக்கர் ஸ்கோலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)""

உங்களுடைய கற்பனையில் வேறு விளக்கம் இருந்தால் அதையும்தான் சொல்லுங்களேன்! 

Sunday, July 26, 2015

வளர்ச்சி மோடியும், விளையாட்டு மோடியும்



 
       நீண்ட கால இடைவெளிக்குப் பின் சென்ற வாரம் சொந்த கிராமத்துக்குப் போயிருந்தேன். உறவினர் ஒருவர் வீட்டில் ஒரு விசேஷம். பேருந்தை விட்டு இறங்கி தெருவில் நுழையும்போதே தாமதமாகி விட்டது. நிகழ்ச்சி நடக்கும் வீட்டை நெருங்குவதற்கு முன் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு என் பால்ய நண்பர் ஒருவர் வரவேற்றார்.
   வா வா நீ இன்றைக்கு வருவாய் என்று எதிர்பார்த்தேன். உன்னிடம் நிறைய பேச வேண்டும் என்றார்.  
    அதற்கெல்லாம் இப்போ நேரம் இல்லை. ஏற்கெனவே நான் லேட்டாக வந்திருக்கிறேன் என்றேன். அப்படி பேச விசேஷமா என்ன இருக்கு என்று கேட்டேன்.
     எல்லாம் நாட்டு நடப்பு பத்திதான், உன்னிடம் கேட்டால் சில விஷயங்கள் புரியும் என்றார். அதற்கெல்லாம் இப்போ நேரம் இல்லை என்றபடியே நடையைக் கட்டினேன் அவர் விடுவதாக இல்லை.சாப்பாடு  முடிந்து ஊருக்குத் திரும்பும் போது வந்தால் போதும் என்றார்.நான் பதில் ஏதும் பேசாமல் வேகமாக நடந்து நிகழ்ச்சி நடக்கும் வீட்டை அடைந்தேன்.
        என்னுடைய பால்ய நண்பர் என்னை விட மூன்று வயது இளையவர். கிராமத்தில் விவசாயம் செய்து பிழைப்பை ஓட்டிவிட்டு ஓய்ந்து உட்கார்ந்தவர். அவர் ஒரு காலத்தில் அரசியல்வாதி.எந்த கட்சியிலும் சேர்ந்தவராச் சொல்ல முடியாது. மாறி மாறி ஏதாவது ஒரு கட்சியை ஆதரித்து பேசி எல்லோரிடமும் விவாதம் செய்வார். முதலில் காங்கிரஸ், பிறகு சுதந்திரா கட்சி, பிறகு தி.மு.. தேர்தல் காலத்தில் குரலை உயர்த்தி எல்லோரிடமும் வேகமாகப் பேசுவார். ஆனால் எந்த கட்சியிலும் சேர்ந்து தேர்தலில் வேலை செய்ததாகத் தெரியவில்லை
   அவருடைய உலகத் தொடர்பு தினத்தந்தி பேப்பர்தான். அந்த பேப்பரை கையில் வைத்துக் கொண்டு சில சமயங்களில் படித்துக் காட்டி தெருவில் உள்ளவர்களுக்கு அரசியல் விளக்கம் கொடுப்பார் கேட்டவர்கள்  காலம் கெட்டுப் போச்சு என்று கூறிக் கொண்டு நகர்வார்கள் மற்றபடி பழக நல்ல மனிதர் தெருவில் எல்லோருக்கும் தேவையான உதவிகளைச் செய்வார். பம்பாயில் பையனுக்கு நல்ல உத்தியோகம் அப்பாவையும் அம்மாவையும் மறக்காமல் நன்றாக கவனித்துக் கொள்ளும் பையன். இவருக்கும் அதிக தேவைகள் இல்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.
     நிகழ்ச்சி முடிந்து  விருந்து சாப்பிட்டு விட்டு நான் புறப்பட்டேன்.சொல்லி வைத்தாற் போல வீட்டு வாசலில் நின்று கொண்டு வழி மறிப்பது போல வரவேற்றார். எனக்கும் வேறு வழி இல்லை. அவரோடு சில நிமிடங்களை கழிக்கலாம் என்று தீர்மானித்தவனாக திண்ணையில் போட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்தேன்
      எது பற்றி பேச வேண்டும் உடனே விஷயத்துக்கு வா நான் பஸ்ஸை பிடித்து காலாகாலத்தில் வீடு போய்ச் சேர வேண்டும் என்றேன். கையில் தினத்தந்தி வைத்திருப்பதை பார்த்து இன்னும் இந்த பேப்பரை விடவில்லையா?  என்றேன்.
  நீ இந்த ஊருக்கு வந்து எவ்வளவு நாளாச்சு உலகம் எவ்வளவு மாறிப் போச்சு அதைப் பற்றி உன்னிடம் கேட்டால் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம் அதற்குத்தான், என்றார்
  இந்த வயதில் புரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய் காலம் கெட்டுப் போச்சு என்று அலட்டிகொள்வதை விட்டு உன் வேலையைப் பாரேன் என்றேன்
அப்படியெல்லாம் இருக்க முடியலையே என்று சொல்லிவிட்டு  சற்று நேரம் மவுனமாக இருந்தவர் ஒரு கேள்வி கேட்டார் ஆமாம் போன வருஷம் ஒரு மோடி வந்தார், இந்த வருஷம் ஒரு மோடி வந்திருக்கிறாரே இவர் யார்? என்றார். எனக்கு உடனடியாக எதுவும்  புரியவில்லை  என்று நினைத்தாரோ என்னவோ திரும்பவும் தொடர்ந்தார்
போன வருஷம் வந்த மோடி பிரதம மந்திரியாக வந்து விட்டார். இந்த மோடி யார் என்று விளக்கமாகக் கேட்டார். இவர் எங்கே வந்து உட்காருவார் என்று அப்பாவித்தனமாகக் கேட்டார்
நான் சிரித்துக் கொண்டே :போன வருஷம் வந்த மோடி வளர்ச்சி மோடி ; இந்த வருஷம் வந்திருப்பவர் விளையாட்டு மோடி என்றேன்
ஆமாம் அந்த வளர்ச்சி மோடியும் விளையாட்டு மோடியும் அண்ணன் தம்பியா? இல்லை உறவுக் காரர்களா ? என்று கேட்டார் இல்லை இல்லை அவர் வேறு இவர் வேறு இரண்டு பேருக்கும் எந்த உறவும் இல்லை என்றேன்
 அப்படியா? மோடி என்றவுடன் இரண்டு பேரும் உறவுக்காரர்கள் என்று நினைத்தேன். நீ ஒரு முறை ஒரே ஸர்னேம் உள்ளவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சொல்லியிருப்பதாக நினைவு என்றார். நான் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய பழைய விஷயத்தைக் கிளறினார்
வடநாட்டில் குடும்பப்  பெயராக இருக்கும் சில பெயர்களைச் சொல்லி அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாயிற்று.
   அப்படின்னா வளர்ச்சி மோடிக்கும் விளையாட்டு மோடிக்கும் எந்த ஒட்டும் இல்லை,உறவும் இல்லை என்கிறாயா என்றார். 
   ஆமாம் ஆமாம், அவர் வேறு இவர் வேறு அதாவது எந்த குடும்ப உறவும் கிடையாது என்று திரும்பச் சொன்னேன் அவர் எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் இவர் பெரிய தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர்
அப்படியா ? என்றார்
   அவர் ஆரம்ப காலத்திலிருந்து அரசியல்வாதி இந்த புதிய மோடி பெரிய பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளை என்றேன்
.அப்படியானால் உன்க்கு ஏதோ தெரிந்திருக்கிறது மேலே சொல்லு என்றார்.
மேலும் தொடர்ந்தேன் இந்த பணக்கார வீட்டுச் செல்லப்பிள்ளை சட்டம்  படிக்க அமெரிக்காவுக்குப் போனார்.அங்கே போதைப் பழக்கத்தால்  ஜெயிலுக்குப் போனார். படிப்பை பாதியிலேயே விட்டு இந்தியா திரும்பினார்  
அம்மாவைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்த அவருடைய அம்மாவின் நண்பர் ஒருவரையே காதலிக்கத் தொடங்கினார்
அதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது.காரணம் அந்த பெண் மோடியை விட பத்து வயது மூத்தவர் கவலைப்படாமல் அந்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டார்.
ஐயய்யோ இது என்ன அநியாயம். இந்த புது மோடி அப்படியா? என்றார்.  இதுக்கெல்லாம் நீ ஏன் அலட்டிக்கிறே? மேலிடங்களில் இதெல்லாம் சகஜமப்பா என்று சமாதானப்படுத்தினேன் மேலே சொல்லு என்றார் நண்பர் இப்போதைக்கு என்னை விடப்போவதிலை என்று தெரிந்து கொண்டேன்.விவரமாகச் சொல்லத் தொடங்கினேன்
  இந்த லலித் மோடிக்கு 54 வயதுதான் ஆகிறது ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் வியாபாரியாக வளர்ந்துவிட்டார்
அது என்ன கிரிக்கெட் வியாபரம் ?
 உன் பிள்ளை கிரிக்கெட் ரசிகன் என்று சொல்லியிருக்கிறாய்.
ஆமாம் டி.வி.யில் பந்து அடித்தாலே எழுந்து குதிப்பான் இவ்வளவு வயசாகியும் இன்னும் அவன் மாறவே இல்லை என்றார்.
உன் பிள்ளை கிரிக்கெட் ரசிகன். பந்து அடிக்கும் டெண்டூல்கர் கிரிக்கெட் விளையாட்டு வீரர் டெண்டூல்கர் பந்து அடித்தவுடன் பின்னணீயில் ஒருவர் பேசிக்கொண்டெ இருப்பார்.அவர் பேசும்போது டெண்டூல்கர்  எப்படி விளையாடுகிறார் எந்த போட்டியில் எவ்வளவு ரன் எடுத்தார் எவ்வளவு சதம் எடுத்தார்  என்று சொல்லிக் கொண்டிருப்பார்.  அவர் கிரிக்கெட் விமர்சகர்.இவர்களையெல்லாம் சேர்த்து விளையாட வைத்து விமர்சனம் செய்ய வைத்து ரசிகர்களை குஷிப்படுத்தி இதற்காக முதல் போட்டு வியாபாரம் செய்பவர்தான் கிரிகெட் வியாபாரி என்றேன்
வியாபாரத்தில் நல்ல வருமானமோ?
கொஞ்ச நஞ்சமல்ல கோடி கோடியாக வருமானம். உனக்கும் எனக்கும் சோறு போடும் விவசாயிகள் இந்தியா முழுவதும் விவசாயத்தில் எவ்வளவு முத்லீடு செய்கிறார்களோ அதைவிட  அதிக பணம் கிரிக்கெட் வியாபாரத்தில் புரள்கிறதுஎன்றேன்
பல ஆயிரம் கோடி என்கிறார்களே அது உண்மையா ?  ஆமாம் அதைத் தவிர கணக்கில் வராத கறுப்புப் பணம் வேறு இதில் உண்டு இதைத் தவிர கிரிகெட்டில் சூதாட்டம் வேறு இருக்கிறது அதிலும் பல கோடி புழக்கம் உண்டாம்
ஐயய்யோ காலம் கெட்டுப் போச்சு,ரொம்பவும் கெட்டுப் போச்சு என்றார். சூதாட்டம்ன்னு சொன்னவுடன் தான் காலம் கெட்டுதா? அதான் மகாபாரத காலத்திலிருந்தே சூதாட்டம் இருக்கே என்றேன்  
    நீ உடனே பழைய கதைக்குப் போகாதே.புது மோடியைப் பற்றி சொல்லு என்றார் நண்பர். அப்படின்னா விளையாட்டுன்னு நாம் சொல்றதெல்லாம் வெறும் விளையாட்டு இல்லை  அதுக்குமேலேஎன்றார்
      இந்த புது மோடி கிரிக்கெட் விளயாட்டில் பல ஆயிரம் கோடி சம்பாதித்தார்.. பல ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டார்.ஹவாலா வழக்கிலும் இவருக்குத் தொடர்பு உண்டு. சென்னை கிரிக்கெட் சங்கத்திடம் மோசடி செய்த்தாக 2012ல் இவர் மீது ஒரு வழக்கு பதிவாகி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.மொத்தம் 17 வழக்குகளில் அவர் குற்றவாளியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்.
இவர் மீது உள்ள எல்லா வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட தொகை 2500 கோடி ரூபாய் தப்பித்தேன் பிழைத்தேன் என்று லண்டனுக்கு ஓடிப் போய்விட்டார
அதற்குப் பிறகு இந்திய அரசாங்கம் அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டது அதாவது இனிமேல் அவர் இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு எந்த வெளிநாட்டுக்கும் போகமுடியாது. ஒருவேளை இந்தியாவுக்குத் திரும்பி வரலாம் ஆனால் அவர் வரமாட்டர்.
    இந்த நிலையில்தான் அவர் லண்டனிலிருந்து வெளிநாடு போக மத்ய அரசாங்கத்தில் மந்திரியாக இருக்கும் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் உதவியை நாடி இருக்கிறார். அந்த அம்மாளும் மனிதாபிமானத்தோடு  உதவி செய்து அவரை வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கிறார்
ஆமாம் அந்நியச் செலாவணி வழக்கில் ஈடுபட்டு ஒடிப்போன குற்றவாளிக்கு  மந்திரி எப்படி உதவலாம்? என்றார் நண்பர்.அதான் மனிதாபிமானம் என்கிறாரே மந்திரி என்றேன்.
அந்நியச் செலாவணி மோசடிசெய்து வெளிநாட்டில் பணம் பதுக்கியவர்களிடமிருந்து பணத்தைக் கொண்டுவந்து ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பதாக வளர்ச்சி மோடி தேர்தல் நேரத்தில் பேசினாரே என்றார் நண்பர
ஆமாம் அதற்கென்ன இப்போ.அதான் தேர்தல் முடிந்து போச்சே என்றேன்
.இல்லை, இந்த புது மோடி மோசடி செய்த பணத்தை மீட்டால் எத்தனை 15 லட்சம் தேறும் என்றார் நண்பர்.
  அந்த கணக்கையெல்லாம் நீயே பார்த்துக்கொள் எனக்கு கணக்கு வராது என்றேன்.
மனிதாபிமானத்துக்கு அளவே இல்லையா? என்றார்.  அந்த  மாதிரி ஆளுக்கெல்லாம் மனிதாபிமானம் அதிகம் தான்.அதனால்தான் மோடி சம்பந்தப்பட்ட எல்லா வழக்குகளிலும் மந்திரியின் கணவர்தான்  வழக்கறிஞர்  இப்பொழுது இல்லை கடந்த 25 வருஷமாக அவர்தான் மோடியுடைய எல்லா மோசடி வழக்குகளிலும் வாதாடிக் கொண்டிருப்பதாக கேள்வி என்றேன் கடைசியாக அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்ட வழக்கில்தான் வேறு வக்கீல் ஆஜரானார் அந்த வக்கீல் கூட மந்திரியின் மகள்தான் என்றேன்.
அப்படின்னா உறவு ரொம்ப நாளா நீடிக்கிற உறவு போல இருக்கு. குடும்பமே நல்ல மனிதாபிமானமுள்ள குடும்பமாத் தெரியுதே, என்றார் அப்படித்தான் தெரியுது என்றேன்.
 ராஜஸ்தான் முதல் அமச்சருடனும் லலித் மோடி ரொம்ப உறவோடு இருக்கிறார். நீண்டநாளாக குடும்ப நண்பர்களாம். அதோடு வியாபாரத்தில் கூட்டாளிகள். கூட்டாக ஹோட்டல் நடத்துகிறார்களாம். முதல் அமச்சருடன் அவருக்கு இருக்கும் நெருக்கத்தால் அவரை     ராஜஸ்தானத்தில் சூப்பர் முதல் அமச்சர் என்று சொல்வார்களாம்.
அவருடைய நலனுக்காக முதல் அமைச்சர் ராஜஸ்தானத்தில் ஒரு சட்டத்தையே மாற்றியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள் முதல்அமைச்சருக்கு நெருக்கமாக இருக்கும் துணிச்சலில் லலித் மோடி ஒரு போலிஸ் அதிகாரியை பொது இடத்தில் பலர் முன்னிலயில் கன்னத்தில் அறைந்தாராம்.. அப்போதே அவருக்கு சனியன் பிடித்தது.ஒரு வகையாக சமாளித்துக் கொண்டார். பெரிய கலகம் தவிர்க்கப்பட்டது.
அவருக்கு உதவியாக முதல் அமைச்சர் எழுதிய கடிதங்கள் அம்பலமாகியிருக்கிறது.
 முதலில் முதல் அமைச்சர் அது என்னுடைய கைய்யெழுத்தே இல்லை என்றார். பிறகு அது தன் கையெழுத்து தான்  என்று ஒப்புக்கொண்டார். குட்டு அம்பலமாகிவிட்டது. எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.ஓடிப்போன குற்றவாளிக்கு உதவிய மந்திரிகள் பதவி விலக வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்
இவ்வளவு நடந்திருக்கே வளர்ச்சி மோடி என்ன சொல்றார்.அவர் பெரிய பேச்சாளராமே நல்லா பதில் சொல்லியிருப்பாரேஎன்றார் நண்பர்.
இது பற்றி அவர் வாயே திறக்கலே இதெல்லாம் அவருக்கு சின்ன விஷயம் என்றேன்.வாயே திறக்கலையாஎன்றார் அப்படியில்லை.யோகா செய்யச் சொல்லி பேசினார் குப்பையெல்லாம் அள்ளச் சொல்லி பேசினார்.என்றேன்.அது சரி குப்பையெல்லாம் அள்ள வேண்டியதுதான் ஆனால் ஒன்னு இதையெல்லாம் பார்த்தால் நீ ஆரம்பத்திலே சொன்னையே அந்த மோடி வேறு இந்தமோடி வேறுன்னு. அது தப்பு எனக்கு என்னமோ ரெண்டு மோடியும் ஒன்னுதான்னு தோணுதுஎன்றார். புரிந்து கொண்டால் சரி என்று கூறிவிட்டு நடையைக் கட்டினேன்

.                                              - மு.கோபாலகிருஷ்ணன்