நீண்ட கால இடைவெளிக்குப் பின் சென்ற வாரம் சொந்த கிராமத்துக்குப் போயிருந்தேன். உறவினர் ஒருவர் வீட்டில் ஒரு விசேஷம். பேருந்தை விட்டு இறங்கி தெருவில் நுழையும்போதே தாமதமாகி விட்டது. நிகழ்ச்சி நடக்கும் வீட்டை நெருங்குவதற்கு முன் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு என் பால்ய நண்பர் ஒருவர் வரவேற்றார்.
வா வா நீ இன்றைக்கு வருவாய் என்று எதிர்பார்த்தேன். உன்னிடம் நிறைய பேச வேண்டும் என்றார்.
அதற்கெல்லாம் இப்போ நேரம் இல்லை. ஏற்கெனவே நான் லேட்டாக வந்திருக்கிறேன் என்றேன். அப்படி பேச விசேஷமா என்ன இருக்கு என்று கேட்டேன்.
எல்லாம் நாட்டு நடப்பு பத்திதான், உன்னிடம் கேட்டால் சில விஷயங்கள் புரியும் என்றார். அதற்கெல்லாம் இப்போ நேரம் இல்லை என்றபடியே நடையைக் கட்டினேன் அவர் விடுவதாக இல்லை.சாப்பாடு முடிந்து ஊருக்குத் திரும்பும் போது வந்தால் போதும் என்றார்.நான் பதில் ஏதும் பேசாமல் வேகமாக நடந்து நிகழ்ச்சி நடக்கும் வீட்டை அடைந்தேன்.
என்னுடைய பால்ய நண்பர் என்னை விட மூன்று வயது இளையவர். கிராமத்தில் விவசாயம் செய்து பிழைப்பை ஓட்டிவிட்டு ஓய்ந்து உட்கார்ந்தவர். அவர் ஒரு காலத்தில் அரசியல்வாதி.எந்த கட்சியிலும் சேர்ந்தவராச் சொல்ல முடியாது. மாறி மாறி ஏதாவது ஒரு கட்சியை ஆதரித்து பேசி எல்லோரிடமும் விவாதம் செய்வார். முதலில் காங்கிரஸ், பிறகு சுதந்திரா கட்சி, பிறகு தி.மு.க.
தேர்தல் காலத்தில் குரலை உயர்த்தி எல்லோரிடமும் வேகமாகப் பேசுவார். ஆனால் எந்த கட்சியிலும் சேர்ந்து தேர்தலில் வேலை செய்ததாகத் தெரியவில்லை
அவருடைய உலகத் தொடர்பு தினத்தந்தி பேப்பர்தான். அந்த பேப்பரை கையில் வைத்துக் கொண்டு சில சமயங்களில் படித்துக் காட்டி தெருவில் உள்ளவர்களுக்கு அரசியல் விளக்கம் கொடுப்பார் கேட்டவர்கள் காலம் கெட்டுப் போச்சு என்று கூறிக் கொண்டு நகர்வார்கள் மற்றபடி பழக நல்ல மனிதர் தெருவில் எல்லோருக்கும் தேவையான உதவிகளைச் செய்வார். பம்பாயில் பையனுக்கு நல்ல உத்தியோகம் அப்பாவையும் அம்மாவையும் மறக்காமல் நன்றாக கவனித்துக் கொள்ளும் பையன். இவருக்கும் அதிக தேவைகள் இல்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சி முடிந்து விருந்து சாப்பிட்டு விட்டு நான் புறப்பட்டேன்.சொல்லி வைத்தாற் போல வீட்டு வாசலில் நின்று கொண்டு வழி மறிப்பது போல வரவேற்றார். எனக்கும் வேறு வழி இல்லை. அவரோடு சில நிமிடங்களை கழிக்கலாம் என்று தீர்மானித்தவனாக திண்ணையில் போட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்தேன்
எது பற்றி பேச வேண்டும் உடனே விஷயத்துக்கு வா நான் பஸ்ஸை பிடித்து காலாகாலத்தில் வீடு போய்ச் சேர வேண்டும் என்றேன். கையில் தினத்தந்தி வைத்திருப்பதை பார்த்து இன்னும் இந்த பேப்பரை விடவில்லையா? என்றேன்.
நீ இந்த ஊருக்கு வந்து எவ்வளவு நாளாச்சு உலகம் எவ்வளவு மாறிப் போச்சு அதைப் பற்றி உன்னிடம் கேட்டால் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம் அதற்குத்தான், என்றார்
இந்த வயதில் புரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய் காலம் கெட்டுப் போச்சு என்று அலட்டிகொள்வதை விட்டு உன் வேலையைப் பாரேன் என்றேன்
அப்படியெல்லாம் இருக்க முடியலையே என்று சொல்லிவிட்டு சற்று நேரம் மவுனமாக இருந்தவர் ஒரு கேள்வி கேட்டார் ஆமாம் போன வருஷம் ஒரு மோடி வந்தார், இந்த வருஷம் ஒரு மோடி வந்திருக்கிறாரே இவர் யார்? என்றார். எனக்கு உடனடியாக எதுவும் புரியவில்லை என்று நினைத்தாரோ என்னவோ திரும்பவும் தொடர்ந்தார்
போன வருஷம் வந்த மோடி பிரதம மந்திரியாக வந்து விட்டார். இந்த மோடி யார் என்று விளக்கமாகக் கேட்டார். இவர் எங்கே வந்து உட்காருவார் என்று அப்பாவித்தனமாகக் கேட்டார்
நான் சிரித்துக் கொண்டே :போன வருஷம் வந்த மோடி வளர்ச்சி மோடி” ; இந்த வருஷம் வந்திருப்பவர் விளையாட்டு மோடி” என்றேன்
ஆமாம் அந்த வளர்ச்சி மோடியும் விளையாட்டு மோடியும் அண்ணன் தம்பியா? இல்லை உறவுக் காரர்களா ? என்று கேட்டார் இல்லை இல்லை அவர் வேறு இவர் வேறு இரண்டு பேருக்கும் எந்த உறவும் இல்லை என்றேன்
அப்படியா? மோடி என்றவுடன் இரண்டு பேரும் உறவுக்காரர்கள் என்று நினைத்தேன். நீ ஒரு முறை ஒரே ஸர்னேம் உள்ளவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சொல்லியிருப்பதாக நினைவு என்றார். நான் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய பழைய விஷயத்தைக் கிளறினார்
வடநாட்டில் குடும்பப் பெயராக இருக்கும் சில பெயர்களைச் சொல்லி அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாயிற்று.
அப்படின்னா வளர்ச்சி மோடிக்கும் விளையாட்டு மோடிக்கும் எந்த ஒட்டும் இல்லை,உறவும் இல்லை என்கிறாயா என்றார்.
ஆமாம் ஆமாம், அவர் வேறு இவர் வேறு அதாவது எந்த குடும்ப உறவும் கிடையாது” என்று திரும்பச் சொன்னேன் அவர் எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் இவர் பெரிய தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர்
அப்படியா ? என்றார்
அவர் ஆரம்ப காலத்திலிருந்து அரசியல்வாதி இந்த புதிய மோடி பெரிய பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளை என்றேன்
.அப்படியானால் உன்க்கு ஏதோ தெரிந்திருக்கிறது மேலே சொல்லு” என்றார்.
மேலும் தொடர்ந்தேன் இந்த பணக்கார வீட்டுச் செல்லப்பிள்ளை சட்டம் படிக்க அமெரிக்காவுக்குப் போனார்.அங்கே போதைப் பழக்கத்தால் ஜெயிலுக்குப் போனார். படிப்பை பாதியிலேயே விட்டு இந்தியா திரும்பினார்
அம்மாவைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்த அவருடைய அம்மாவின் நண்பர் ஒருவரையே காதலிக்கத் தொடங்கினார்
அதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது.காரணம் அந்த பெண் மோடியை விட பத்து வயது மூத்தவர் கவலைப்படாமல் அந்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டார்.
ஐயய்யோ இது என்ன அநியாயம். இந்த புது மோடி அப்படியா? என்றார். இதுக்கெல்லாம் நீ ஏன் அலட்டிக்கிறே? மேலிடங்களில் இதெல்லாம் சகஜமப்பா என்று சமாதானப்படுத்தினேன் ”மேலே சொல்லு” என்றார் நண்பர் இப்போதைக்கு என்னை விடப்போவதிலை என்று தெரிந்து கொண்டேன்.விவரமாகச் சொல்லத் தொடங்கினேன்
இந்த லலித் மோடிக்கு 54 வயதுதான் ஆகிறது ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் வியாபாரியாக வளர்ந்துவிட்டார்
அது என்ன கிரிக்கெட் வியாபரம் ?
உன் பிள்ளை கிரிக்கெட் ரசிகன் என்று சொல்லியிருக்கிறாய்.
”ஆமாம் டி.வி.யில் பந்து அடித்தாலே எழுந்து குதிப்பான் இவ்வளவு வயசாகியும் இன்னும் அவன் மாறவே இல்லை” என்றார்.
உன் பிள்ளை கிரிக்கெட் ரசிகன். பந்து அடிக்கும் டெண்டூல்கர் கிரிக்கெட் விளையாட்டு வீரர் டெண்டூல்கர் பந்து அடித்தவுடன் பின்னணீயில் ஒருவர் பேசிக்கொண்டெ இருப்பார்.அவர் பேசும்போது டெண்டூல்கர் எப்படி விளையாடுகிறார் எந்த போட்டியில் எவ்வளவு ரன் எடுத்தார் எவ்வளவு சதம் எடுத்தார் என்று சொல்லிக் கொண்டிருப்பார். அவர் கிரிக்கெட் விமர்சகர்.இவர்களையெல்லாம் சேர்த்து விளையாட வைத்து விமர்சனம் செய்ய வைத்து ரசிகர்களை குஷிப்படுத்தி இதற்காக முதல் போட்டு வியாபாரம் செய்பவர்தான் கிரிகெட் வியாபாரி என்றேன்
வியாபாரத்தில் நல்ல வருமானமோ?
கொஞ்ச நஞ்சமல்ல கோடி கோடியாக வருமானம். உனக்கும் எனக்கும் சோறு போடும் விவசாயிகள் இந்தியா முழுவதும் விவசாயத்தில் எவ்வளவு முத்லீடு செய்கிறார்களோ அதைவிட அதிக பணம் கிரிக்கெட் வியாபாரத்தில் புரள்கிறது”என்றேன்
பல ஆயிரம் கோடி என்கிறார்களே அது உண்மையா ? ஆமாம் அதைத் தவிர கணக்கில் வராத கறுப்புப் பணம் வேறு இதில் உண்டு இதைத் தவிர கிரிகெட்டில் சூதாட்டம் வேறு இருக்கிறது அதிலும் பல கோடி புழக்கம் உண்டாம்
ஐயய்யோ காலம் கெட்டுப் போச்சு,ரொம்பவும் கெட்டுப் போச்சு என்றார். சூதாட்டம்ன்னு சொன்னவுடன் தான் காலம் கெட்டுதா? அதான் மகாபாரத காலத்திலிருந்தே சூதாட்டம் இருக்கே” என்றேன்
நீ உடனே பழைய கதைக்குப் போகாதே.புது மோடியைப் பற்றி சொல்லு என்றார் நண்பர். அப்படின்னா விளையாட்டுன்னு நாம் சொல்றதெல்லாம் வெறும் விளையாட்டு இல்லை அதுக்குமேலே “என்றார்
இந்த புது மோடி கிரிக்கெட் விளயாட்டில் பல ஆயிரம் கோடி சம்பாதித்தார்.. பல ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டார்.ஹவாலா வழக்கிலும் இவருக்குத் தொடர்பு உண்டு. சென்னை கிரிக்கெட் சங்கத்திடம் மோசடி செய்த்தாக 2012ல் இவர் மீது ஒரு வழக்கு பதிவாகி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.மொத்தம் 17 வழக்குகளில் அவர் குற்றவாளியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்.
இவர் மீது உள்ள எல்லா வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட தொகை 2500 கோடி ரூபாய் தப்பித்தேன் பிழைத்தேன் என்று லண்டனுக்கு ஓடிப் போய்விட்டார
அதற்குப் பிறகு இந்திய அரசாங்கம் அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டது அதாவது இனிமேல் அவர் இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு எந்த வெளிநாட்டுக்கும் போகமுடியாது. ஒருவேளை இந்தியாவுக்குத் திரும்பி வரலாம் ஆனால் அவர் வரமாட்டர்.
இந்த நிலையில்தான் அவர் லண்டனிலிருந்து வெளிநாடு போக மத்ய அரசாங்கத்தில் மந்திரியாக இருக்கும் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் உதவியை நாடி இருக்கிறார். அந்த அம்மாளும் மனிதாபிமானத்தோடு உதவி செய்து அவரை வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கிறார்
ஆமாம் அந்நியச் செலாவணி வழக்கில் ஈடுபட்டு ஒடிப்போன குற்றவாளிக்கு மந்திரி எப்படி உதவலாம்? என்றார் நண்பர்.அதான் மனிதாபிமானம் என்கிறாரே மந்திரி” என்றேன்.
அந்நியச் செலாவணி மோசடிசெய்து வெளிநாட்டில் பணம் பதுக்கியவர்களிடமிருந்து பணத்தைக் கொண்டுவந்து ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பதாக வளர்ச்சி மோடி தேர்தல் நேரத்தில் பேசினாரே” என்றார் நண்பர
ஆமாம் அதற்கென்ன இப்போ.அதான் தேர்தல் முடிந்து போச்சே” என்றேன்
.இல்லை, இந்த புது மோடி மோசடி செய்த பணத்தை மீட்டால் எத்தனை 15 லட்சம் தேறும்” என்றார் நண்பர்.
அந்த கணக்கையெல்லாம் நீயே பார்த்துக்கொள் எனக்கு கணக்கு வராது” என்றேன்.
மனிதாபிமானத்துக்கு அளவே இல்லையா? என்றார். அந்த மாதிரி ஆளுக்கெல்லாம் மனிதாபிமானம் அதிகம் தான்.அதனால்தான் மோடி சம்பந்தப்பட்ட எல்லா வழக்குகளிலும் மந்திரியின் கணவர்தான் வழக்கறிஞர் இப்பொழுது இல்லை கடந்த 25 வருஷமாக அவர்தான் மோடியுடைய எல்லா மோசடி வழக்குகளிலும் வாதாடிக் கொண்டிருப்பதாக கேள்வி என்றேன் கடைசியாக அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்ட வழக்கில்தான் வேறு வக்கீல் ஆஜரானார் அந்த வக்கீல் கூட மந்திரியின் மகள்தான் என்றேன்.
அப்படின்னா உறவு ரொம்ப நாளா நீடிக்கிற உறவு போல இருக்கு. குடும்பமே நல்ல மனிதாபிமானமுள்ள குடும்பமாத் தெரியுதே, என்றார் அப்படித்தான் தெரியுது” என்றேன்.
ராஜஸ்தான் முதல் அமச்சருடனும் லலித் மோடி ரொம்ப உறவோடு இருக்கிறார். நீண்டநாளாக குடும்ப நண்பர்களாம். அதோடு வியாபாரத்தில் கூட்டாளிகள். கூட்டாக ஹோட்டல் நடத்துகிறார்களாம். முதல் அமச்சருடன் அவருக்கு இருக்கும் நெருக்கத்தால் அவரை ராஜஸ்தானத்தில் சூப்பர் முதல் அமச்சர் என்று சொல்வார்களாம்.
அவருடைய நலனுக்காக முதல் அமைச்சர் ராஜஸ்தானத்தில் ஒரு சட்டத்தையே மாற்றியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள் முதல்அமைச்சருக்கு நெருக்கமாக இருக்கும் துணிச்சலில் லலித் மோடி ஒரு போலிஸ் அதிகாரியை பொது இடத்தில் பலர் முன்னிலயில் கன்னத்தில் அறைந்தாராம்.. அப்போதே அவருக்கு சனியன் பிடித்தது.ஒரு வகையாக சமாளித்துக் கொண்டார். பெரிய கலகம் தவிர்க்கப்பட்டது.
அவருக்கு உதவியாக முதல் அமைச்சர் எழுதிய கடிதங்கள் அம்பலமாகியிருக்கிறது.
முதலில் முதல் அமைச்சர் அது என்னுடைய கைய்யெழுத்தே இல்லை என்றார். பிறகு அது தன் கையெழுத்து தான் என்று ஒப்புக்கொண்டார். குட்டு அம்பலமாகிவிட்டது. எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.ஓடிப்போன குற்றவாளிக்கு உதவிய மந்திரிகள் பதவி விலக வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்
இவ்வளவு நடந்திருக்கே வளர்ச்சி மோடி என்ன சொல்றார்.அவர் பெரிய பேச்சாளராமே நல்லா பதில் சொல்லியிருப்பாரே”என்றார் நண்பர்.
இது பற்றி அவர் வாயே திறக்கலே இதெல்லாம் அவருக்கு சின்ன விஷயம் என்றேன்.வாயே திறக்கலையா”என்றார் அப்படியில்லை.யோகா செய்யச் சொல்லி பேசினார் குப்பையெல்லாம் அள்ளச் சொல்லி பேசினார்.என்றேன்.அது சரி குப்பையெல்லாம் அள்ள வேண்டியதுதான் ஆனால் ஒன்னு இதையெல்லாம் பார்த்தால் நீ ஆரம்பத்திலே சொன்னையே அந்த மோடி வேறு இந்தமோடி வேறுன்னு. அது தப்பு எனக்கு என்னமோ ரெண்டு மோடியும் ஒன்னுதான்னு தோணுது” என்றார். புரிந்து கொண்டால் சரி ”என்று கூறிவிட்டு நடையைக் கட்டினேன்.
. - மு.கோபாலகிருஷ்ணன்
மு.கோ,
ReplyDeleteஉங்க பதிவுல நிறைய சொல்ல வந்துட்டு கொஞ்சம் அங்க இங்க போயிட்டு வந்த மாதிரி இருக்கு. இது வரைக்கும் நீங்க சொல்ல வந்ததை நேரடியாகத்தான் சொல்லி பார்த்து இருக்கேன். திடீர்னு ஒரு கேரக்டரை கொண்டு வந்து அவர் மூலமா சொல்ல வேண்டிய கட்டாயம் என்னன்னு யோசிச்சு பாக்கரேன் புரியலை.
ஒரு வேளை சொல்ல வந்த விஷயத்துல இருக்கர ஆழமா இல்லை உங்களுக்கு உள்ளேயே இருக்கர சில நம்பிக்கை தகர்வதில் இருக்கர வலியான்னு தெரியலை. ஆனா உங்க நம்பிக்கையை நரேந்திர மோடி இழக்க ஆரம்பிச்சுட்டார்ங்கரது தெளிவா தெரியரது. நான் இன்னும் இழக்கலை. சீக்கிரம் ரிச்மண்ட் வாங்க நிறைய விவாதிப்போம்.
முரளி.