பண்ருட்டியில் எங்கள் வீட்டில் எப்போதும் நண்பர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். பக்கத்து ஊர்களான கடலூர், விழுப்புரத்தில் கலைக்கல்லூரிகள் இருந்தன. தினமும் மாணவர்கள் ரயிலில் போவார்கள். விழுப்புரத்திலாவது கல்லூரி ரயில்நிலையத்துக்கு அருகில் இருந்தது. கடலூரில் ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு பேருந்தில் வேறு போகவேண்டும். இருந்தாலும் மாணவர்களுக்கு ரயில் சீசன் பாஸ் சலுகையில் கிடைப்பதால் அனைவரும் ரயிலில்தான் போவார்கள். பண்ருட்டியில் இருந்து தினமும் சிதம்பரத்தில் இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கு போன மாணவர்களும் உண்டு.
அண்ணன்கள் வீட்டில் இருக்கும்போது கடலூர் மாணவர்கள் காலையில் வீட்டுக்கு வந்துவிட்டு ரயிலடிக்குப் போவார்கள். அதில் ஒருவர்தான்…
ராஜா!
ராஜா என்கிற முருகன். வீட்டிற்கு ஒரே பிள்ளை. அம்மா செல்லம் என்று நினைவு. என்னுடைய நினைவுகளில் தங்கியது இவரின் ஒரு வினோத பழக்கம். நடந்து வரும்போதும், உட்கார்ந்திருக்கும்போதும் கைவிரல்களை நீட்டி மடக்கிக் கொண்டே இருப்பார். நான் சிலநாள் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏன் அப்படி செய்கிறார் என்று மண்டையை உடைத்துக் கொண்டேன். ஒரு நாள் அவரிடமே கேட்டு விட்டேன். என்ன செய்கிறீர்கள் விரல்களை?
டைப் அடிக்கறேண்டா!
டைப்பா!!!???
ஆமாம்! அப்போதுதான் டைப்ரைட்டிங் வகுப்பில் சேர்ந்திருந்தார். எழுத்துக்கள் இடம் பழகும்வரை மனசுக்குள்ளே ஏதாவது வார்த்தை சொல்லி அதை எப்படி டைப் செய்வது என்று பழகிக் கொள் என்று டைப்பிங் வாத்தியார் உபதேசம் செய்தாராம். இவர் அதற்கு ஒரு படி மேலே போய், நாமெல்லாம் சிறுவயதில் காற்றில் கிடார் வாசிப்போமே, அது மாதிரி காற்றில் டைப் அடித்துக் கொண்டிருந்தார். நடக்கும்போது, உட்கார்ந்திருக்கும்போது காதிலோ கண்ணிலோ விழும் சொற்களை காற்றில் டைப் அடித்துக் கொண்டே இருப்பார்.
ராஜா என்றதும் அடுத்து நினைவுக்கு வருவது சங்கராபரணம். அதில் ஆண்டாளு என்ற சிறுமி திண்ணையில் ஒரு பாட்டு வாத்தியாரிடம் பாட்டு கற்றுக் கொள்ளும் காட்சி வரும். அந்த வாத்தியார் கர்நாடகமாக இன்னும் பாடிக் கொண்டிராமல் நவீனமாக பாடவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். அப்போது வீதியில் வரும் சங்கர சாஸ்திரி வாத்தியாரை திட்டிவிட்டுப் போவார். அந்த காட்சி ராஜாவுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. எப்போது வந்தாலும் சங்கராபரணம் கேஸட்டில் அந்த இடத்திற்கு தள்ளி கேட்போம். அதை கேட்பதைவிட அந்தக் காட்சியை ராஜா ரசிப்பதைக் காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் முதல் முறை கேட்பது போல் ஒரு பரவசத்தில் இருப்பார். சிரிப்பை அடக்க முயல்வார். அதுவும் அந்த "ராக்கெட்லு ஜாக்கெட்லு ஜெட்லு" வரும்போது அடக்கவே முடியாது. அப்படி சிரிப்பார். பிறகு வாத்தியார் "புரோச்சேவா ரெவருரா"வை பிரித்து மேயும்போதும் தாங்க முடியாமல் சிரிப்பார். அந்த காட்சி முடிந்தவுடன் கேஸட்டை நிறுத்தி விடுவோம். அடுத்த சில நிமிஷங்கள் ராஜா தெரிந்தவரை அந்த டயலாக் எல்லாம் சொல்லிச் சொல்லி சிரிப்பார். தவறாமல் "ராக்கெட்லு ஜாக்கெட்லு" உண்டு. வீடே அதிரும்.
ராஜா சில தெலுங்கு ஜோக்குகள் சொல்வார். ஒரு தமிழன் ஆந்திராவில் ரயிலில் போய்க் கொண்டிருந்தானாம். ஒரு இடத்தில் ரயில் நின்றவுடன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனிடம் தமிழில் "இது என்ன ஊர்" என்று கேட்டானாம். அவன் கேட்டது புரியாமல் "ஏமண்டி" என்றானாம். ஓஹோ அப்படியா, நன்றி! அடுத்த ஊர் வந்தவுடன், அதே கேள்வி. அவனும் "ஏமண்டி" என்று பதில். சரி அது மேல் ஏமண்டி, இது கீழ் ஏமண்டி போல இருக்கும் என்று அமைதியாகி விட்டான். அடுத்த ஊரில் அதே நடந்தது. தமிழனுக்கு வந்ததே கொலைவெறி. என்னடா நானும் பாக்கறேன், ஒவ்வொரு ஊரிலும் ஒரே பெயரை சொல்லி ஏமாத்தற, என்ன பாத்தா நக்கலா தெரியுதான்னு அடிக்கப் போனானாம். பதறிப் போன தெலுங்கன் கொட்டகா, கொட்டகா என்றானாம். ஓ - இந்த ஊர் கொட்டகாவா - ஒழுங்கா சொல்ல வேண்டியதுதானே என்று அமைதியானானாம்.
ராஜாவின் வீட்டருகில் ஒரு இளம் தம்பதி குடியிருந்தார்கள். அந்த தம்பதிகளின் சண்டை தெருவில் பிரசித்தம். ஒவ்வொரு முறை வரும்போதும் அன்றைய சண்டை குறித்து ராஜா கதை சொல்வார். அதில் ஒரு நாள் நினைவில் நிற்கிறது. அன்று சண்டை அதிகமாகி ஒரே களபரம். சாமான்கள் எல்லாம் உருண்டது. திடீரென கதவைத் திறந்து கணவன் எடுத்தார் ஓட்டம். யாரோ எதோ காரணம் சொல்லி உள்ளே போய் பார்த்தால். நிறைய தட்டு பாத்திரம் எல்லாம் இரைந்து கிடந்தன. அனைத்துக்கும் மேலே - சுவற்றில் டால்டாவோடு ஒட்டிக் கொண்டிருந்த கரண்டி!
இப்போது பண்ருட்டி வாட்சப் குழுவிலும் ராஜா கலக்கிக் கொண்டிருக்கிறார்.