Saturday, March 27, 2021

மிகப் பெருமைக்குரிய இந்தியச் சமையலறை - ஒரு பார்வை (The Great Indian Kitchen)

நேற்று The Great Indian Kitchen திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பதிவிட்டு வெகு நாட்கள் ஆகி விட்டன. இதை ஒரு வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கிறேன். இந்தப் படத்தில் காட்சி அமைப்புகளே முக்கியம், இறுதிக் காட்சி எப்படி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உண்டாவது உண்மை, அதனால் நான் அதை விவரிக்கப் போவதில்லை.

கதை சாராம்சம்: ஒரு படித்த பெண், பழைய ஆச்சாரங்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கப் படுகிறாள். ஒவ்வொரு நிமிடமும் அவள் சமையலறையில் அல்லாடுவது படத்தின் முக்கியக் கரு. வித விதமான உணவு வகைகளைச் சமைப்பது மட்டுமல்ல, பாத்திரங்களை நாள் முழுவதும் கழுவுவது, அளவு கடந்த வீட்டு வேலைகள் செய்யும் பரிதாபத்திற்குரிய மருமகள் மற்றும் கொஞ்சம் கூட ஒரு இரக்கம் இல்லாமல் உணவுக் கழிவுகளை விட்டு விட்டுக் கை கழுவிச் செல்லும் குடும்பத் தலைவர்களை இந்தப் படம் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.

மென்மையான குணாதிசயம் உள்ளவராகக் காட்டியிருக்கும் மாமனார்தான் அதிகப் பட்சமான அட்டூழியங்களைச் செய்கிறார். மிக்ஸி, வாஷிங் மெசின் ஆகியவற்றைத் தன் சாமர்த்தியமான பேச்சில் ஒதுக்கி வைத்துக் கருணையே இல்லாமல் மருமகள் தலையில் வேலைகளைக் குவிக்கிறார். ஓட்டலில் நாகரீகமாக நடக்கும் கணவன், வீட்டில் அதைச் செயல்படுத்த மறுக்கும்போது, அதைக் கேட்கும் மனைவியிடம், அப்படித்தான் இருப்பேன், நீ என்ன கேட்பது என்று கொக்கரிக்கிறார். கணவரும் மாமனாரும் மருமகள் வேலைக்குப் போவதைச் சாதுர்யமாகத் தடுக்கிறார்கள்.

அதே கண்ணியவான்கள், மருமகள் மாத விடாயில் இருக்கும் போது, அவளை ஒதுக்கி வைத்து வேலைக்காரி சாப்பாட்டில் கூச்சமில்லாமல் உண்கிறார்கள். (Hypocrites - கபடதாரிகள்?). அப்போது அங்கு இருக்கும் மாமனாரின் சகோதரி, அவளின் படுக்கையைப் பிடுங்கி தரையில் படுக்கச் சொல்லி, குடும்பப் பெண்களின் சீரழிந்த வாழ்க்கைக்கு, ஆண்கள் மட்டும் காரணமல்ல என்று உணர்த்தி, படம் பார்க்கும் ஆண்களின் வயிற்றில் பால் வார்க்கிறார். 

உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருக்கும் நாயகிக்கு, பொங்கி எழும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கணவன் மற்றும் மாமனார் அய்யப்பன் மாலையின் போர்வையில், அவர்களின் அட்டகாசங்கள் அதிகமாகி, நாயகி கொதித்தெழுந்து நீதி நாடுகிறாள்.

நாயகி அளவுக்கு தீர்மானங்களை எடுக்கும் தைரியமோ, சுதந்திரமோ,  சூழ்நிலைகளோ 99.99 சதவீதம் பெண்களுக்கு உண்டாகப் போவதில்லை. ஆனால் படத்தைப் பார்க்கும் நமக்கு, நம்மை சரிபடுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அந்தக் காலத்தில் நினைவிருக்கிறது. பொறுப்பற்ற உறவினர்கள் வீட்டுக்கு வந்து பல நாட்கள் தங்கி இருந்து உண்டு விட்டுப் போவார்கள். வேலை முழுவதும் அன்னையர்க்கு. அதற்கு நன்றியோ பலனோ கிடையாது. விருந்தோம்பல் என்ற போர்வையில், நம் குடும்பப் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்குக் கணக்கே கிடையாது. இதில் மாமனார், மாமியார், நாத்தனார் கொடுமைகள் தனி. இது எதுவுமே நடப்பது அறியாமல் இருக்கும் பொறுப்பற்ற கணவர்கள் பாதி, தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத பெரும்பான்மையான கையாலாகாத கும்பல், பிறகு இப்படித்தான் இருப்போம் என்று ஆணாதிக்கம் பிடித்த கயவர் கூட்டம். பெண்களும் மருமகள் ஸ்தானத்திலிருந்து நாத்தனாராகவோ, மாமியாராகவோ மாறும் போது, யான் பெற்ற கொடுமைகள் மற்ற மருமகள்கள் பெறட்டும் என்ற ஒரு கீழ்த்தரமான எண்ணம்.

இவர்கள் பெரும்பாலும் மாறப் போவதில்லை. அடுத்த முறை உங்கள் தட்டுக்களைக் கழுவாமல் மேசையில் இடும்போதோ, வேலை முடிந்து ஓய்வெடுக்கும் மனைவியிடமோ தாயாரிடமோ தேனீர் கேட்கும் போதோ, தயவு செய்து ஒருமுறை யோசியுங்கள் 



 

3 comments:

  1. சத்யா,
    நாம் பட உரைத்துள்ளீர்கள் மற்றும் பெண் மீதான தினிப்பையும் உரித்துள்ளீர்கள். இன்றைய சூழலில் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்று சொல்லிக் கொண்டு பாதி நாள் வெளியில் சாப்பிடும் நிலை தான். உப்புமாவிற்கே mix வந்துவிட்டது.
    கதையைப் படித்தவுடன் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.
    நன்றி

    ReplyDelete
  2. நயம் பட என்பது நாம் பட என்று எழுத்துப் பிழை ஆகிவிட்டது.

    ReplyDelete
  3. திரைப்படத்தை அழகாக விவரித்துள்ளீர்கள். சமையலறையில் பெண்களின் சலிப்பான வேலை மற்றும் ஆண்கள் பெண்களின் கடின உழைப்பை எவ்வாறு புறக்கணிக்கிறார்கள் என்பது துல்லியமாக சித்தரிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி (சத்தியா).

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!