அண்டிப் பிழைக்கும் அற்பர்கள்
இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களை இதை விட கௌரவமாக அழைக்க வார்த்தைகளைத் தேட வேண்டி இருந்தது. இந்திய அணி இந்தியாவுக்கு வெளியே சரியாக விளையாடாது என்பது புளித்துப் போன ஒரு சொல். ரிப் வான் விங்கிள் இருபது வருடத்திற்கு முன்பு தூங்கி இப்போது எழுந்திருந்தால், விவேக் பாணியில் "அடப் பாவி, இன்னுமாடா இப்படி" என்ற அதிர்ச்சியில் மண்டையைப் போட்டிருப்பார். அசாருதீன் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார், நான் எவ்வளவோ பரவாயில்லை என்று.
30/33/39/38/37/23/30/27/33/23/24 . என்ன தோணுகிறது? இதுதான் இந்த அணியின் வயது விபரம். சராசரி வயது 30 - க்கு மேலே. இன்னும் இரண்டு வருடம் போனால், நாற்பது வயது நிறைந்த இருவர் விளையாடும் அணியைப் பார்த்த அதிர்ஷ்டம் நமக்கு உண்டு. 19 - ஆம் நூற்றாண்டுக்குப் பின் கிழவர்கள் ஆடிய அணி என்ற பெருமையை நாம் அடையலாம்.
முதியவர்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனம் இல்லை, நாளைய ஆட்டத்தை விட, அடுத்த மாதம் கிடைக்கும் IPL சில்லறைகளுக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நாயாக அலையும் இளைய தலைமுறை. இவர்கள் வரும் விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டு பிஸ்கட் முதல் கார் வரை வாங்கிப் பெருமை அடையும் ஏமாளி ரசிகர்கள்.
இந்த அணியின் வீ(?)ரர்களை சற்று அலசுவோம். இணைய தளத்தில் உலவிய சில பட்டப் பெயர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறேன்.
சேவாக். இவர் ஒரு "செத்த"வாக். சராசரி விதிகளின் படி இதன் முன்பு இவர் இந்தத் தொடரில் சதம் அடித்திருக்க வேண்டும். இவர் அடிப்பார் அடிப்பார் என்று இலவு காத்த கிளியைப் போல ரசிகர்கள் காத்திருந்ததுதான் மிச்சம். இவர் அடிக்கும் முன், நாம் அமெரிக்கப் பொருளாதார நிலைமையை சீர்படுத்தி விடலாம்.
கம்பீர். இவர் ஒரு சொம்பீர். IPL ஏலத்தில் அதிகமாகப் பணம் வாங்கியதில் இருந்த கம்பீரம் எங்கே போனது?
திராவிட் - இந்தியப் பெருஞ்சுவர் இன்று விரிசல் விழுந்து இன்றோ நாளையோ என்று இருக்கிறது. ஸ்வரம் இருக்கும்போதே பாட்டை நிறுத்து என்ற பழமொழியை நமக்கு நினைவுக்குக் கொண்டு வருபவர். முன்பு ஒரு நாள் போட்டிகளில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் பட்டவர். டெஸ்ட் பந்தயங்களிலும் நம்மை அந்த நிலைமைக்குக் கொண்டு வரத் தீவிரமாக முயல்கிறார்.
டெண்டுல்கர் - பழைய பெருங்காய டப்பா. இன்னும் வாசனை உள்ளது. இருபது வருடங்களுக்குப் பின்பும் இவர்தான் நம் அணியின் முன்னணி வீரர் என்பது இவரது பெருமையா? அல்லது நம் அணியின் சிறுமையா? அந்த நூறாவது சதத்தை எடுத்துத் தொலைக்கட்டும் என்று அவரது பரம ரசிகர்களே புலம்பும் அளவுக்கு விரக்தியின் உச்சக் கட்டத்தில் தள்ளி இருக்கிறார்.
லக்ஷ்மணன் - இவர் ஒரு வெத்து வேட்டு. அணியில் இருந்து விரட்டுவதற்கு சற்று முன் ஒரு ஐம்பதோ , நூறோ அடித்து மீண்டும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார். ஓவரின் முதல் பந்தில் ஒற்றை ரன் எடுத்து விட்டு வால் வீரர்களை எதிரணியின் வேகப் பந்து வீச்சாளரின் மீதி ஐந்து பந்துகளை நேரிட வைத்து நாட்-அவுட் அல்ப சுகம் காணுபவர். பத்து வருடத்திற்கு முன் எடுத்த 281 - ல் இன்னும் குளிர் காய்பவர். ஆலையில்லா நம் ஊருக்கு இவர் ஒரு இலுப்பைப் பூ.
விராட் கோழி (?) - ஒரு நாள் போட்டி ஜாலி, இல்லா விட்டால் இவர் இவர் கோழி பிடிக்கத்தான் லாயக்கு. இவர்தான் இந்தியாவின் எதிர்காலம் என்றால் நம் நாட்டின் இளைய தலைமுறையின் திறமையை எடை போட்டு விடலாம்.
தோனி - உலகக் கோப்பையை எடுத்து விட்டார், இனி 28 வருடங்கள் கவலை இல்லை. 2013 முதல் டெஸ்ட் விளையாட மாட்டேன் என்று சொல்லி, இன்றைய பிரச்சனைக்கு ஒரு முன் ஜாமீன் வாங்கி விட்டார். குடிக்கும் ஒரு காலன் பால் ஒரு நாள் போதிக்கும், IPL - க்கும் சரியாகி விட்டது, இன்னும் கொஞ்சம் குடித்தால் டெஸ்ட் நன்றாக விளையாடலாம்.
பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ பரவாயில்லை, சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? குறை சொல்லும் அளவுக்கு இவர்கள் எதிர் பார்ப்பு எதுவும் கொடுப்பதில்லை.
இன்னும் இரண்டு வாரம்தான். டெஸ்ட் முடிந்து விடும், ஏழெட்டு ஒரு நாள் போட்டி உள்ளது, எப்படியாவது ஒப்பேத்தி ஒன்றிரண்டு பந்தயம் ஜெயித்து விடலாம், டெண்டுகர் சதம் அடித்து விட்டு பாரத ரத்னா வாங்கலாம், நம் அணியினர் நடந்தவை போகட்டும், இனி நடக்கப் போவது நல்லதாக இருக்கட்டும் என்று கீதையை நாடலாம். இளித்த வாய் ரசிகர்கள் ஏர்டெல் சிம்கார்டு வாங்கிப் பெருமிதம் அடையலாம்.
வாழ்க கிரிக்கெட், வளர்க நம் அணியினர் வளமுடன்