Thursday, August 25, 2011
ஊழலை ஒழிக்க விரும்பும் உத்தமன்
சார், என் பேரு உத்தமன். நல்லா படிச்சு இன்ஜினியரிங் காலேஜில படிச்சிட்டு சாப்ட்வேர்ல வேலை பாத்துக்கிட்டு இருக்கிறேன். தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்த ஊழல். ஆங்கிலத்துல corruption. இந்த அரசியல்வாதிகளும், போலீஸ்காரங்களும், அதிகாரிங்களும் ஊழல்ல எவ்வளவு தூரம் மோசமா இருக்காங்கன்னு நினச்சா என் ரத்தம் கொதிக்கும் சார். உங்களுக்கும் அப்படித்தானே?
காலையில வேலைக்குக் கிளம்பிகிட்டு இருக்கிறேன். முக்கியமான ஒரு onsite call இருக்கு. இன்னும் அரை மணி நேரத்துல போயாகணும். பைக்க எடுத்துட்டுக் கிளம்பினேன். இந்த எளவெடுத்த டிராபிக்ல சரியான நேரத்துக்குப் போக முடியுமா? சிக்னல்ல நின்னுகிட்டே இருக்கிறேன். தூரத்தில பார்த்தா, ஒரு டிராபிக் போலீஸ்காரன் ஒரு லாரி டிரைவர்கிட்ட ஓவர் லோடு கொண்டு வந்ததுக்காக வாதாடிகிட்டு இருக்கிறான். லாரி டிரைவர் ஒரு சின்ன புத்தகத்துல ரூபா நோட்டு வச்சு நைசா கையில குடுக்கிறான். அத வாங்கிட்டு அவன அந்த போலீஸ்காரன் சும்மா விட்டுருறான். பார்த்து இந்தியன் சினிமால வர்ற மாதிரி அவன் நரம்பிலேயே போடணும்னு தோணிச்சு. ஆத்திரத்த அடக்கிட்டு போயிகிட்டே இருந்தேன். அப்போதான் டைம் பார்த்தா இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்குது. ராயப்பேட்டை ஹை ரோடு பக்கத்துல ஒரு one way ரோடு இருக்கு, எதிர் பக்கம் தான், ஆனா போலீஸ் எப்பவாவதுதான் வருவான், அப்படியே பிடிச்சாலும் ஒரு 50 ரூபா விட்டெறிஞ்சா விட்டுருவான். ஒரு ரிஸ்க் எடுத்து போயிட்டேன். நல்ல வேளைக்கு, ஒருத்தனும் பாக்கல. ஒரு வழியா மீட்டிங் கரெக்ட் டயத்துக்குப் போயிட்டேன்.
ஒரு வழியா மீடிங்க முடிச்சுட்டு, லஞ்ச் பொன்னுசாமிக்கு ரெண்டு மூணு பேரோட கிளம்பினோம். ஒரு onsite ட்ரிப்புக்கு வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சதும் பசங்க ட்ரீட் கேட்டானுங்க. சரின்னு கண்டபடி ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம். சாப்பிடும்போது அரசியல் ஊழல்தான் ஹாட் டாபிக். நேர்மைங்கிறது அரசியல்லயும், அரசாங்க உத்யோகத்திலையும், காவல் துறையிலயும் இல்லாம போனதுனாலதான் நம்ம நாடே குட்டிச் சுவராச்சுன்னு பேசிக்கிட்டோம். கடைசியில பில்லப் பார்த்தா, ரெண்டு சைடு ஐட்டத்தோட பில் மிஸ்ஸிங். நாங்க தீவிரமா யோசிச்சோம். நமக்கு எப்படியும் எம்பது ரூபா லாபம், அதனால சர்வருக்கு பத்து ரூபா எக்ஸ்ட்ரா டிப் குடுக்கலாம்னு தீர்மானிச்சோம். டிப்ப வாங்கும்போது சர்வரோட முகத்தில என்ன ஒரு சந்தோஷம்? எங்களுகெல்லாம் ரொம்ப திருப்தி சார்.
திரும்ப ஆபீஸ் போயிட்டு மத்தியானம் கொஞ்சம் வேல செஞ்சேன். பிறகு sanjose - ல இருக்கிற என் friend கிட்ட அமெரிக்கா போற விஷயமா பேசணும். onsite -ல மீட்டிங்குக்காக ஆபீஸ் போன்-ல ISD call ப்ரீ. அதனால அதில இருந்தே கூப்பிட்டுட்டேன். அனாவசியமா ஏன் செல் போன் பில்ல நிமிஷத்துக்கு 7 ரூபா 20 பைசா ஏத்தணும்?
வெள்ளிக் கிழமை வந்தாச்சு. கொண்டாட்டந்தான். முதல்ல படம். அப்புறம் ஒரு தண்ணி பார்ட்டி. சத்யம்ல பாக்கலாம்னு பிளான். நெட்ல டிக்கெட் புல். நேர தேட்டர்லயே வாங்கிரலாம்னு பிளானு. அம்பது ரூபா டிக்கெட் வெறும் முன்னூறு ரூபாக்கி கிடச்சுது. லபக்குனு நாலு டிக்கெட் ஆயிரம் ரூபான்னு பேரம் பேசி எரநூறு ரூபா மிச்சம் பண்ணிட்டோம். அடுத்து நண்பர்களோட பார்ட்டி. ஸ்காட்ச் விஸ்கி பப்ளிக்கா வாங்க முடியாது. பார்சன் காம்ப்ளக்ஸ்ல ஒரு இடத்துல ரகசியமா கிடக்கும். வாங்கிட்டு வந்து ஒரே கூத்து.
சனிக்கிழம காலையில எந்திச்சு இன்னிக்கு நகக்கட போகலாம்னு ஒரு ஐடியா. ஒரு நண்பனோட கல்யாணம் அடுத்த வாரம். மோதிரம் வாங்கணும். பாண்டி பஜார் போனேன். ஒரு பக்க ரோடு முழுவதும் பிளாக் பண்ணி கார் பார்க்கிங் ஏரியா செட் அப்பு பண்ணி இருக்கானுங்க இந்த ஏரியா பெருந்தலங்க. பணம் கொழுத்த பசங்க. ஆளுங்கட்சிக்கு லஞ்சம் குடுத்து ஒன்வே அனுமதி வாங்கிட்டானுங்க. இதனால பஸ்செல்லாம் சுத்திப் போகணும். கடையில நுழைஞ்சி ஒரு நல்ல ஐட்டம் செலக்ட் பண்ணினேன். கடைசியில estimate -ன்னு சொல்லி ஒரு சீட்டு காட்டுனானுங்க. வருமான வரி கட்டாம இருக்க என்னல்லாம் அயோக்கியத்தனம் பண்றானுங்க? மோதிரம் 15 ஆயிரம் ரூபாய். கிரெடிட் கார்ட் நீட்டினேன். அப்ப அந்த ஆளு சொன்னான், சார், கிரெடிட் கார்டு குடுத்தா நாங்க சேல்ஸ் டாக்ஸ் 750 ரூபா சார்ஜ் பண்ணுவோம்னு, அது வேண்டாம்னா கேஷ் குடுங்கன்னு சொன்னான். நானும் பாத்தேன். 750 ரூபா சும்மா குடுக்க நான் என்ன இளிச்ச வாயனா? உள்ளயே வசதியா ATM வச்சிருக்கானுங்க. எடுத்துக் குடுத்து ஒரு வழியா வெளிய வந்தேன்.
கலிபோர்னியா நண்பன் மூலம் ஒரு H1 பண்ணி, அமெரிக்கா போறதுக்கு ஏற்பாடு பண்ணனும். டக்குனு போகணும்னா இப்ப இருக்கிற கம்பனில விட மாட்டனுங்க. ஏதாவது பொய் மெடிக்கல் சர்டிபிகேட் கொடுத்துதான் ரிலீவிங் லெட்டர் வாங்கணும். முதல்ல பாஸ்போர்ட் வாங்கணும். அவசரமா போறதுனால தக்கல்லதான் வாங்கணும். அதுவும் தெரிஞ்சவங்க மூலம் போயி காசு கீசு குடுத்தாதான் உடனே வேலை நடக்கும். அங்க இருக்கிற ஆபீசர் எல்லாருமே பெரிய லஞ்சப் பேர்வழிங்க, நடுத் தெருல வச்சு சுடணும் சார். என் கூட வேலை பாக்கிற ஒருத்தனோட அப்பாவோட நண்பர் மூலமா கொஞ்ச காசு குடுத்து ஏற்ப்பாடு பண்ணியாச்சு. 2 வாரத்துல கிடச்சுரும்னு சொன்னாங்க.
வெளிநாடு போனா இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. என்கிட்டே லோக்கல் லைசென்சே கிடையாது. அத முதல்ல வாங்கணும். RTO ஆபீஸ் பக்கம் போனேன். உலக மகா திருட்டுப் பசங்க சார். எத எடுத்தாலும் ஒரு புரோக்கர் மூலம் லஞ்சம் குடுத்தாதான் காரியம் நடக்கும்னு சொன்னாங்க. சௌதி மாதிரி இவங்கள நாடு ரோட்டுல கட்டி வச்சு கல்லால அடிச்சாதான் சார் நாடு உருப்படும். அப்புறம் விசாரிச்சப்ப, பாரம் வாங்கி நாமளே பண்ணுனா மாசக் கணக்குல ஆகும், சில சமயம் கெடக்காமயே போயிடும்னு கேள்விப்பட்டேன். ஒரு ஆளப் புடிச்சேன். அப்பதான் தெரிஞ்சுது, நம்ம பேரு ரேஷன் கார்டு, சொந்த ஊருல இருக்குது, மெட்ராசுல வாங்க முடியாதுன்னு. அந்த புரோக்கர் கொஞ்சம் காசு கூட குடுத்தா போதும், எல்லாம் சமாளிச்சு டெஸ்டே பண்ணாம வாங்கிரலாம்னு சொன்னான். நானும் பாத்தேன், நமக்கு இருக்கிற அவசரத்துல உடனே கிடைச்சாதான் உபயோகம்னு. அவன் கேட்ட 5000 ரூபாயக் குடுத்து ஒரே வாரத்துல லைசென்ஸ் வாங்கியாச்சு, உண்மையிலயே பயங்கர ஆச்சரியம் சார்,.
வெளி நாட்டுக் கனவுகளோட ராத்திரி வெளியில சாப்பிடப் போனேன். அப்போ இந்த கையேந்தி பவன் வண்டிகள் பக்கத்துல போலீஸ் பாட்ரோல் வண்டி நிப்பாட்டி மாமூல் வாங்கிட்டுப் போறதா பாத்தேன். வெக்கங் கேட்ட பொழப்பு சார் இது, இப்படி கண் முன்னாடி கூசாம லஞ்சம் வாங்குறானுங்க.
மறுநாள் திடீர்னு ஊர்ல இருந்து போனு. பாஸ்போர்டுக்கு verification பண்ண வீட்டுக்குப் போலீஸ்காரர் வந்திருக்கார். நான் இல்லன்ன உடனே அவர வந்து பாக்கச் சொல்லிட்டுப் போயிட்டார். டக்குனு எப்படி ஊருக்குப் போகுறது? அப்ப பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாரு, போலீஸ்காரர பாத்து 250 ரூபா கொடுத்தா போதும், verification ரிப்போர்ட் குடுத்துருவாருன்னு. நானும் அப்பாக்கு போன் பண்ணி, நான் ஊருக்கு வந்தா ஆயிரம் ரூபா கிட்ட செலவாகும். பேசாம 250 ரூபா குடுத்து மேட்டர செட்டில் பண்ணிருங்கன்னு. ஒரு வழியா பாஸ்போர்ட் ரெண்டே வாரத்துல வந்துருச்சு. ஒரு பெரிய தலைவலி தீந்துது.
மெட்ராஸ்ல எங்க பாத்தாலும் ரியல் எஸ்டேட் டிமாண்ட் சார், எங்க பாத்தாலும் அரசியல் வாதிகளும் ரௌடிகளும் எடத்த வாங்கிப் போட்டுட்டு வேலைய ஏத்திட்டானுங்க. பல இடங்கள்ள இவனுங்களுக்குக் கமிஷன் குடுக்காம எடமே வாங்க முடியாது. கலி முத்திப் போச்சு, இவனுங்கள மாதிரி திருட்டுப் பசங்களால ஒலகமே கொஞ்ச நாள்ல அழிஞ்சாலும் ஆச்சரியப் படரதுக்கில்ல. மெட்ராஸ்ல மதுர வாயல் தாண்டி ஒரு ப்ளாட்டு வாங்கலாம்னு பிரெண்டு ஆலோசன சொன்னான். நானும் போய் பார்த்தேன். 2 கிரௌண்டு நிலம், எட்டு லட்ச ரூபாக்கி தரதா புரோக்கர் சொன்னான். ஓரளவுக்கு நல்லா ரேட்டுன்னு பட்டுச்சி. registrar ஆபீஸ்ல ஸ்டாம்பு பத்திரம் வாங்கும்போது வெறும் ரெண்டு லட்சத்துகே முடிச்சிட்டோம், இல்லாட்டி ஸ்டாம்பு செலவே இன்னும் 60000 ரூபா ஆயிருக்கும், அந்த புரோக்கர் ரொம்ப வெவரம் தெரிஞ்சவன் சார், எல்லாம் கரெக்டா பண்ணி நல்லா காசு மிச்சம் பண்ணிக் குடுத்தான், நானே அவனுக்குக் கமிஷன் மேல 5000 ரூபா போட்டுக் குடுத்தேன்னா பாத்துக்கோங்களேன்.
பேப்பர்ல எங்க பாத்தாலும் ஊழல் நியூஸ். 2G ஊழல்ல ஒரு லட்சம் கோடின்றாங்க, சுரங்கதுல 1500 கோடின்றாங்க. கோடிக்கேல்லாம் ஒரு மரியாதையே போச்சு. இந்த அரசியல் வாதிங்கள எதிர்க்க நாதியே இல்லையா சார்? டிவி பாக்கவே வெறுப்பா இருக்கு.
ஒரு வழியா அமெரிக்கா ப்ராஜெக்ட் confirm ஆயிடுச்சு. ஊருக்குப் போய் எல்லாம் ஏற்பாடு பண்ணனும். கிரெடிட் கார்டுல கண்ணா பின்னான்னு துணி பற்றும் பொருட்கள் வாங்குனேன். வெளி நாடு போயிட்டு மெதுவா அடச்சிக்கலாம். அப்படியே குடுக்காட்டி குடியா முழுகிரும்? திருட்டுப் பசங்க எவ்வளவு வட்டி வசூல் பண்ணி இருப்பானுங்க?
ஊருக்கு ட்ரைன்ல போகணும், தக்கல்ல கூட டிக்கெட் கிடக்கல. நேரா ரயில்வே ஸ்டேஷன் போய் என் நண்பனோட மாமா அங்க இருக்கார், போய் பார்த்தேன். emergency quota - ல உடனே வாங்கிக் குடுத்தார். தங்கமான மனுஷன். பணம் முன்ன பின்ன ஆனா என்ன சார், அவசரத்துக்கு ஊருக்குப் போக முடியறது எவ்வளவு பெரிய விஷயம். இந்த ரயில்வேஸ் ஆனா ரொம்ப மோசம் சார், இவ்வளவு பெரிய ஒரு நிர்வாகத்துல எவ்வளவு ஊழல்? இத்தன வருஷத்துல மெட்ராஸ் to மதுரை ரெண்டு வழிப் பாதை இன்னும் போடல. காச எல்லாம் என்னதான் பண்றானுங்க?
ஊருக்குப் போகறதுக்கு முன்னால இன்கோமே டாக்ஸ் file பண்ணனும். ஒரு Auditor - ஐப் பார்த்தேன். அவர் சொன்னாரு, நீங்க கவலை படாதீங்க தம்பி, deduction எல்லாம் ஏதாவது போட்டு டாக்ஸ் வராம பாத்துகிடுரேன்னு. பயங்கர புத்தி சாலி சார், என் நண்பர்கள் எல்லாருமே இவர் கிட்டதான் போவோம்.
ஊருக்குப் போக இன்னும் ஒரு மாசம் இருக்கு. இப்போ ஒரே பரபரப்பு, அன்னா ஹசாரே - ன்னு ஒரு பெரியவர் ஊழலுக்கு எதிராகப் போராடிகிட்டு இருக்கிறாருன்னு. கேட்ட உடனே எனக்குள்ள ஒரு உத்வேகம். இந்த அரசியல்வாதிகள் நாட எப்படியெல்லாம் ஊழல் பண்ணி சீரழிச்சு வச்சிருக்காங்கன்னு. ஜன லோக் பால ஆதரிச்சு, அன்னா ஹசாரேக்கு ஆதரவாக ஒரு போராட்டம் நடத்த என் நண்பர்கள் எல்லாரும் ஒரு ஊர்வலமா போறாங்க சார், நானும் போறேன் சார். நீங்க?
Friday, August 19, 2011
தடியால் அடித்துப் பழுக்க வைக்க முயற்சிக்கும் அண்ணன் ஹசாரே
இந்திய அரசியலை கிட்டத் தட்ட இந்திராவின் மறைவிற்குப் பின்னர் இருந்து பின் தொடர்ந்து வரும் நான் இந்த வருடத்திற்கு முன்பு இந்த அன்னா ஹசாரே என்ற மனிதரைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லை. அதனால் யாரய்யா இந்த மனுஷர் என்று ஒரு வியப்பு. நம்முடைய அறிவின்மையா என்ற தவிப்பு.
விக்கிபீடியா உதவியோடு சில தகவல்களைப் படித்தேன். இவைதான் இவரது சரித்திரத்தின் சுருக்கம்
- வயது 74
- படிப்பு 7 - ஆம் வகுப்பு
- உத்தியோகம் - 15 வருட ராணுவ சேவை - 38 வயது வரை
- திருமணம் - இல்லை
- முந்திய சாதனைகள்
- ரலேகன் சித்தி என்ற இவரது வறண்ட கிராமத்தை ஒரு சொர்க்க பூமியாக மாற்றியது
- நிலத்தடி நீர் சேமிப்பு
- பால் உற்பத்தி
- மதுவிற்கு எதிரான போராட்டம்
- தானிய வங்கி
- கல்யாணங்களை ஒன்று கூடி நடத்தி செலவு குறைத்தல்
- கிராம சபா
- ஊழல் ஒழிப்பு
- 1991 - BVJA அமைப்பு மூலம் போராட்டம்
- 1997 - மின் கைத்தறி ஊழலுக்கு எதிரே மகாராஷ்ட்ராவில் போராட்டம்
- 2003 - காங்கிரஸ் மந்திரிகளுக்கு எதிராக உண்ணா விரதப் போராட்டம்.
இந்தியாவில் ஊழலின் அளவு காலத்திற்கு ஏற்றவாறு கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த காலத்தில் 176000 கோடிகள் அடிக்க வாய்ப்பு இல்லை, இருந்திருந்தால் அப்போதும் அடித்திருப்பார்கள்.
லோக்பால் - இது இந்தியாவின் அத்தனைப் பிரச்சினைகளையும் தீர்த்து விடுமா? ஹர்ஷத் மேத்தா பங்கு சந்தை ஊழல், ராஜீவ் காந்தியின் போபோர்ஸ் ஊழல் அப்போதெல்லாம் இவர் எங்கிருந்தார்?
ஏன்? போன மாதம் 1500 கோடி ஊழல் செய்து கையும் களவுமாகப் பிடி பட்ட போதும் ராஜினாமா செய்ய மறுத்த பிஜேபி முதல்வர் எத்தியூரப்பவைக் கைது செய்யவோ டிஸ்மிஸ் செய்யவோ இவர் போராட்டம் நடத்தவில்லையே? மகராஷ்டிரா மட்டும்தான் இவரது குறிக்கோளா?
இந்தியாவை எதிர் நோக்கி இருக்கும் அண்டை நாட்டுப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் மத்தியில் மீடியா உதவியோடு இந்திய அரசாங்கத்தின் உறுதியைக் குலைக்க இறங்கி இருக்கும் இவரது நோக்கங்களுக்குத் தெளிவான பின்னணிகள் இல்லை. இந்த ஆட்சி பொய் இன்னொருவர் வந்தாலும் இதே கதிதான்.
தடியால் அடித்துப் பழுக்க வைக்க முடியாது. லோக்பால் அமைத்தால் அந்த குழுவை குட்டிச் சுவராக்கும் வழிகளில் அரசியல்வாதிகள் இறங்குவார்கள். எந்த ஒரு புதிய முயற்சியும் படிப் படியாகவே செயல் படுத்த முடியும். எதை எடுத்தாலும் உண்ணாவிரதம் மூலம் பயமுறுத்தி சாதிக்க நினைக்கும் இந்த முயற்சி வெற்றி பெறப் போவதில்லை.
Monday, August 01, 2011
திரைக்கதைச் சக்கரவர்த்தி கே.பாக்யராஜ்
திரைக்கதைச் சக்கரவர்த்தி கே.பாக்யராஜ் - திரும்பிப் பார்ப்போம்
தமிழ்த் திரையுலக வரலாற்றில் திரு பாக்யராஜ் அவர்களுக்கு ஒரு தனி மரியாதை நிரந்தரமாக உள்ளது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. நான் சிறு வயதில் இருந்தே - சுமார் 1980 இருக்கும், பாக்யராஜின் ரசிகன். அப்போது என்னை மிகவும் கவர்ந்தது அவரது பெரிய கண்ணாடியும், நகைச்சுவை கலந்த காட்சி அமைப்புகள்தான்.. எனக்கு நண்பர்கள் அனுப்பும் பொங்கல் வாழ்த்துக்களில் பாக்யராஜ் படம் இடம் பெற்றிருக்கும். அது போக அந்த கால கட்டத்தில் கதை , திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற நான்கு மிகப்பெரிய பொறுப்புகளை வெற்றிகரமாகச் செய்தவர்கள் இவர் மற்றும் T .ராஜேந்தர் மட்டுமே. திரைக் கதையின் பிரம்மா மற்றும் ஜனரஞ்சக இயக்குனர் என்று அழைக்கப் பட்ட இவர், குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற அடைமொழியையும் பெற்றார்.
பாரதிராஜாவின் உதவி இயக்குனராகத் தொடங்கி, அவர் படங்களிலேயே கதை, வசனம் எழுதி நடிகராக அறிமுகம் செய்யப்பட்டவர் இவர். சிகப்பு ரோஜாக்களில் சர்வராக ஒரு சிறிய வேடத்தில் நடித்த இவர், பதினாறு வயதிலே படத்தில் மஞ்ச குளிச்சு என்ற பாடலில் தலை காட்டி இருக்கிறார். புதிய வார்ப்புகள் படத்தில் நாயகனாக அறிமுகமான இவர் அந்த படத்தில் சொந்த குரலில் பேசாததால் இப்போது அந்தப் படத்தைப் பார்த்தால் சற்று ஏமாற்றமாக இருக்கும். புதிய வார்ப்புகளில் இவர் கையைத் தட்டிப் பாடும் வான் மேகங்களே பாட்டு, இன்றும் இனிமை. ராஜேஷ் மற்றும் வடிவுக்கரசி நடித்த கன்னிப்பருவத்திலே படத்தில், இவர் கதை வசனம் எழுதி வில்லனாக நடித்தார்.
சிறிய முடிச்சுக்களை வைத்துக்கொண்டு திரைக்கதையைப் பிரதானமாக்கிப் படங்கள் எடுப்பதில் வல்லவர் இவர். நகைச்சுவையைப் படம் முழுவதும் இழைய விட்டிருப்பார். பெரும்பாலும் திரைக்கதை மற்றும் வசனங்களைப் படப்பிடிப்பு அன்று மாத்திரமே முடிவு செய்து காட்சிகளை எடுப்பார். உதாரணமாக அந்த ஏழு நாட்கள் படத்தில் ஒரு காட்சி வரும். அதில் தாழ்ப்பாள் இல்லாத குளியல் அறையில் வெளியே காஜா செரிப்பைக் காவலுக்கு நிறுத்தி விட்டு உள்ளே செல்வார். பக்கத்து வீட்டில் ஒருவர் இறந்திருப்பார். அதற்குரிய சாவு மேளங்கள் அப்போது தொடங்கும். இசையில் ஆர்வம் கொண்ட காஜா ஷெரிப் மேளம் கேட்டவுடன் ஆட்டம் போட்டுக்கொண்டே இழவு வீட்டுக்குப் போய் விடுவார். அப்போது அம்பிகா கதவைத் திறந்து பெரும் களேபரமாகி, பாக்யராஜ் கடுப்பின் உச்சக்கட்டத்தில் காஜா ஷெரிப்பை நடு ரோட்டில் வைத்துக் கும்முவார். இந்தக் காட்சி அமைத்த நாள் அன்று பாக்யராஜ் படபிடிப்புக்குப் போகும் வழியில் ஒரு சாவு மேளத்தைப் பார்த்திருக்கிறார். அந்த சூழ்நிலையில் உதித்த காட்சி இது.
தன்னுடைய படங்களில் தானே கதாநாயகனாக நடித்து அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதை இவரது வலிமையாக மாற்றினார் . சுமதி, சுலக்க்ஷனா, பிரவீணா, பூர்ணிமா ஜெயராம், ஊர்வசி, அம்பிகா போன்ற பல்வேறு நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். குடும்ப சூழ்நிலைகளை அனுசரித்து உண்டாக்கிய, நகைச்சுவை கலந்த காதல் கதைகள் இவரது பெரும் பலமாக இருந்தது. பொய் சாட்சி, விடியும் வரை காத்திரு போன்ற படங்கள் சற்று மாறுபட்டிருந்தன. திரைக்கதை மற்றும் நகைச்சுவையை மாத்திரமே கொண்டு "இன்று போய் நாளை வா" திரைப்படத்தை வெளியிட்டார். மௌன கீதங்கள் மற்றும் முந்தானை முடிச்சு படங்களில் வந்த இரட்டை அர்த்த வசனம் மற்றும் முருங்கைக்காய் சமாசாரங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இவரது படங்களில் அவை தொடர்ந்து, தனி முத்திரை பெற்றார். (அதனால் இவர் படங்கள் பார்க்க வீட்டில் தடை விதிக்கப் பட்டது என்பது வேறு விஷயம். முந்தானை முடிச்சு படம் நாளை கடைசி என்று போஸ்டரில் ஒட்டிய பின், வீட்டில் அழுது புரண்டு படம் பார்க்க சம்மதம் வாங்கியது ஒரு பெரிய சாதனை)
முந்தானை முடிச்சின் வரலாறு காணாத வெற்றிக்குப் பிறகு, அந்த அளவுக்கு எதிர்பார்ப்பைச் சமாளிப்பது பாக்யராஜ்க்குப் பெரும் சவாலாக அமைந்தது. அடுத்து வந்த தாவணிக்கனவுகள் அந்த அளவுக்கு வெற்றியைப் பெற முடியவில்லை. சின்ன வீடு படம் நகைச்சுவை இருந்தாலும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதன் பின் இந்தியில் சில முயற்சிகள் செய்தார். பின்பு 1987 -ல் வந்த எங்க சின்ன ராசா நன்றாக ஓடியது. இந்த சமயத்தில் MGR அபிமானியான இவர் சிறிது அரசியல் சாயம் பூசினார். அடுத்து வந்த இது நம்ம ஆளு படத்தில் ஜாதி வேறுபாட்டை மையமாக்கினார். இதன் பின்பு வந்த எந்தப் படமும் பரபரப்பாக பேசப்படவோ ஓடவோ இல்லை. இவரது வலிமை இவர் கதா நாயகனாக நடிக்கும் படங்களாகவே இருந்ததால், மற்ற நடிகர்களை வைத்து இவர் முயற்சி செய்யவே இல்லை. இவர் கதாநாயகனாக நடிப்பது சிரமம் மற்றும் மாறி வரும் ரசனை ஆகிய சூழ்நிலைகளில் இவரது திரைப்பட எதிர்காலம் கேள்விக்குறி ஆனது.
விஜயகாந்தை வைத்து சொக்கத்தங்கம் என்ற திரைப்படத்தை நடிக்காமல் இயக்க மட்டும் செய்தார். படம் ஓரளவுக்குப் பரவாயில்லை என்றாலும், மாறி விட்ட ரசிகர்களின் மனதில் இது பழைய திரைப்படம் போல் நடிகர்/நடிகையர், திரைக்கதை, காட்சி அமைப்புகள் இருந்ததால் சரியாக ஓடவில்லை. தன் மகளை நாயகியாக வைத்து இயக்கிய "பாரி ஜாதம்" சுமாராக ஓடியது. பின்பு மகனைக் கதாநாயகனாக வைத்து வந்த சித்து+2 ஓடவில்லை.
இவரது படங்களில் காட்சிகளில் உள்ள நகைச்சுவை போக, இவரது நடனம் கூடுதல் நகைச்சுவையைத் தரும். இவரது நடன அசைவுகள் உடற் பயிற்சி ஆசிரியர்களை வெட்கப்பட வைக்கும். அழகிய விழிகளில், அந்தி வரும் நேரம் போன்ற பல பாடல்கள் இவரது நடனத் திறமைக்குச் சாட்சி.
பாக்யராஜின் திரைக்கதை எழுதும் திறமையும், அவரது நகைச்சுவை கலந்த காட்சி அமைப்புகளும் அவருக்குத் தமிழ் திரை உலக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு இடத்தை அளித்துள்ளன. இவரது உதவி இயக்குர்கள் பலர் திறமை வாய்ந்தவர்கள். பார்த்திபன், லிவிங்க்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோர் இவரது பள்ளியில் பயின்றவர்கள். இனி, அவர் இயக்கிய படங்களை வேகமாக ஒரு பார்வை பார்ப்போம். பாடல்களின் youtube இணைய முகவரி இணைக்கப்பட்டுள்ளது..
இவர் முதலாவதாக இயக்கிய சுவரில்லாச் சித்திரங்கள் படத்தில் காஜா ஷெரிப் காஜா போடும் தையல் கடைச் சிறுவனாக வந்து காஜா என்ற அடை மொழியைப் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படத்தில் கவுண்டமணி மற்றும் கல்லா பெட்டி சிங்காரத்தின் நகைச் சுவைக் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. காதல் வைபோகமே என்ற பாட்டு மலேசியா வாசுதேவனின் பிரபலமான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தில் பாக்யராஜ் சுதாகருடன் இன்னொரு நாயகனாக நடித்திருந்தார். சுமதி அறிமுகமானார். பாமா ருக்மணியில் இரண்டு பெண்டாட்டி கதையில் நடித்து இயக்கினார்.. இதில் இவருடன் நடித்த நடிகை ப்ரவீனாவை இவர் திருமணம் செய்து கொண்டார். பாமா ருக்மணியில் வந்த "நீ ஒரு கோடி மலர் தூவி உருவானவள்" பாட்டு கேட்க இப்போதும் சுவை.
ஒரு கை ஓசை திரைப் படத்தில் ஊமையாக நடித்திருந்தார். இந்தப் படம் நன்றாக ஓடியதா என்ற விபரம் தெரியவில்லை. இதற்கு அடுத்து வந்த "இன்று போய் நாளை வா" ஒரு மறக்க முடியாத படம். முழு நீள நகைச்சுவைப் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு மட்டுமே சேரும். இந்தப் படத்தைப் பற்றி மட்டுமே சில பக்கங்கள் எழுதலாம். இந்தப் படத்தில் இவரது நண்பர் வெங்கட்டாக நடித்த பழனிசாமி பாக்யராஜ் ரசிகர் மன்றத் தலைவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படத்தில் கல்லா பெட்டி சிங்காரம், இந்தி பண்டிட்டாக வரும் ஜான் அமிர்தராஜ், காந்திமதி ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்து இப்படத்தில் வந்த சில காட்சிகள் இன்னும் நம் மனதை விட்டு அகலாது. இந்தி பண்டிட் "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகதாதா" என்று சொல்லிக் கொடுக்கும் காட்சி அரங்கங்களை அதிர வைக்கும். வெங்கட் குஸ்தி கற்பது, பாக்யராஜ் கழுதையின் கயிறை விட்டு விட்டுத் துரத்துவது , ராஜேந்திரன் காந்திஜி உச்சரிக்க முடியாமல் தூணில் இடி வாங்குவது, கல்லா பெட்டி மற்றும் இந்தி பண்டிட் ராதிகா காதலை மறுத்தவுடன் அடி வாங்கி வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் இன்றும் வயிற்றைப் புண்ணாகும். சற்று இழுத்தடித்த இறுதிக் காட்சி காரணம், இந்தப் படம் எதிர் பார்த்த அளவுக்கு பரபரப்பாக ஓடாவிட்டாலும், ஒரு சிறிய கதையை மட்டும் வைத்துக் கொண்டு முழுவதும் திரைக்கதையை மட்டும் வைத்து எடுப்பதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு.
மௌன கீதங்கள் படம் வெளி வருவதற்கு முன்னால் குமுதத்தில் 1980 -ல் ஒரு தொடர் கதையாக வந்தது. இறுதிக் காட்சியை வெளியிடாமல் வெள்ளித் திரையில் காண்க என்று முடித்துத் தவிக்க வைத்து விட்டார். பின்பு நான் படம் பார்த்தது 2004 -ல் சன் டிவியில் ஒரு முறை வெளியிட்ட போதே. 24 வருடக் காத்திருந்தலுக்குப் பின் படத்தைப் பார்த்த போது கிடைத்த இன்பம் அளவிட முடியாதது. பழைய படம் என்ற எந்த ஒரு நெருடலும் இல்லாமல் பார்க்க முடிந்தது ஒரு ஆச்சர்யம். மூக்குத்திப் பூ மேலே பாட்டு ஒரு என்றும் இனிமையான பாடல். சிறுவன் சுரேஷின் நடிப்பு மிகவும் அருமை.
பின்பு வந்த விடியும் வரை காத்திரு ஒரு திகில் படமாக இருந்தது. இதில் வந்த நீங்காத எண்ணம் ஒன்று பாடல் குறிப்பிடத் தக்கது. இதன் பின்பு வந்த அந்த ஏழு நாட்கள் தமிழ்த் திரையுலகின் மைல் கற்களில் ஒன்று என்று கூறினால் மிகையாகாது. ஆனந்த விகடனில் 65 மதிப்பெண்கள் பெற்ற படம் இது. பாக்யராஜ் மலையாளம் கலந்த தமிழில் பேசிக் கலக்கினார். காஜா ஷெரிப்பின் நடிப்பு பரபரப்பாக பேசப்பட்டது. சென்னைக்கு வந்து பாக்யராஜ் வெகுளியாகப் பேசி வீடு தேடுவதும், கல்லா பெட்டியிடம் திட்டு வாங்குவதும், காஜா ஷெரிப் அடிக்கடி பாக்யராஜின் காலை வாரி விடுவதும் குபீர் சிரிப்புகள். இந்தப் படத்தில் MSV இசையில் வந்த எல்லாப் பாடல்களுமே இனிமை. எண்ணி இருந்தது ஈடேற, தென்றலது உன்னிடத்தில், சப்த ஸ்வர தேவி உனது, எல்லாமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. படத்தின் இறுதிக் காட்சி எல்லாத் தரப்பினரையும் நெகிழ வைத்தது. ராஜேஷ் மற்றும் தமிழில் அறிமுகமான அம்பிகா மிகவும் சிறப்பாகச் செய்திருந்தனர்.
பொய் சாட்சி திரைப் படத்தில் தன்னுடைய தவறால் ஒரு குடும்பமே நசித்து விட்டதை உணர்ந்து அந்த குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். ஓட்டலில் நன்றாக சாப்பிட்டு விட்டு செந்திலை பில் செலுத்த மாட்டி விட்டு நழுவும் காட்சி வயிறைக் குலுங்க வைக்கும்.
டார்லிங் டார்லிங் டார்லிங்கில் குழந்தைப் பருவத்தில் பிரிந்து சென்ற தோழிக்காகக் காத்திருக்கும் அப்பாவி இளைஞனாக நடித்திருந்தார். அப்பா கல்லா பெட்டி மற்றும் தங்கை இந்திராவுடன் இவர் அடிக்கும் லூட்டி மறக்க முடியாதது. ஊட்டி பங்களா வாட்ச்மேனாக வரும் கல்லா பெட்டி முதல் காட்சியில் முதலாளி தோரணையில் வருவதில் ஆரம்பித்து, பின்னர் பாக்யராஜை நம்பிக் கடன் வாங்கி ஈட்டிக்காரனின் பைக்கின் பின்னால் கயிறால் கட்டப்பட்டுப் புலம்பும் காட்சிகளில் கலக்கி இருப்பார். பூர்ணிமா ஜெயராம் வருகையை அறிந்தவுடன் இவர் பரபரப்பில் செய்யும் காரியங்கள் எல்லாமே சுவை. சங்கர் கணேஷ் இசையில் "ஓ நெஞ்சே நீ தான்" நெஞ்சை உருக்கும். பூர்ணிமாவுடன் இவர் பாடும் அழகிய விழிகளில் டூயட் இன்றும் கேட்கலாம். பிரவீணாவின் மரணத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் நாயகி பூர்ணிமாவைத் திருமணம் செய்தி கொண்டார்.,
தூறல் நின்னு போச்சில் பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை என்று தவறாக நினைக்கப்பட்ட நண்பனின் முகத்தில், அடுத்த முறை போகும்போது கரியைப் பூசிக் கூட்டிக் கொண்டு போவது நல்ல நகைச்சுவை. சுலக்க்ஷனா இந்தப் படத்தில் அறிமுகம் ஆனார். செந்தாமரை மற்றும் நம்பியார் நல்ல கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அற்புதமானவை. பூபாளம் இசைக்கும், தங்கச் சங்கிலி, ஏரிக்கரைப் பூங்காற்றே ஆகியவை அருமையான மெல்லிசைப் பாட்டுக்கள். என் சோகக் கதைய கேளு தாய் குலமே பாடல் அந்த சமயத்தில் மிகவும் பிரபலமானது.
முந்தானை முடிச்சு 1983 ஜூலை 22 -ஆம் தேதி வெளியானது. இந்த படம் அளவுக்கு பரபரப்பாகத் தமிழ் நாட்டில் எந்தப் படமும் அது வரை பேசப்படவில்லை. தமிழ் திரை உலக வரலாற்றில் முதன் முதலாக வெளியிட்ட அனைத்து அரங்கங்களிலும் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அரங்கங்களில் தாய்க்குலங்களின் கூட்டம் காரணம் கடும் நெரிசல் ஏற்ப்பட்டது. அறிமுகமான ஊர்வசி பரபரப்பை ஏற்படுத்தினார். நகைச்சுவை, சென்டிமென்ட், பாடல்கள், காட்சி அமைப்புகள், பின்னணி இசை என்று எல்லாத் தரப்பிலும் படம் கொடி கட்டிப் பறந்தது. தவக்களை மற்றும் மாஸ்டர் சுரேஷ் உட்பட சிறுவர்கள் படத்தில் கலகலப்பை ஏற்படுத்தினர். படத்தில் முருங்கைக்காய் சம்பந்தமான காட்சிகளும் வசனங்களும் முகம் சுளிக்க வைத்தாலும் பெரும் பரபரப்போடு மக்களின் வரவேற்பைப் பெற்றன. இவை பாக்யராஜின் பிற்காலப் படங்களைப் பெரிதும் பாதித்தன என்று கூறினால் அது மிகையாகாது. படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமாயின. துவக்கப் பாட்டான "விளக்கு வைக்கும் நேரத்துல", ஊர்வசி தன் எதிர்காலக் கணவனை நகைச்சுவையுடன் விவரிக்கும் "நான் புடிக்கும் மாப்பிளதான்", பாக்யராஜ், ஊர்வசியின் டூயட்டான "அந்தி வரும் நேரம்", தீபாவுடன் பாக்யராஜ் பாடும் டப்பாங்குத்தான "வா வா வாத்தியாரே வா", ஊர்வசியின் தவம் கலைக்கும் பாடான "கண்ண தொறக்கணும் சாமி" மற்றும் சென்டிமென்ட் பாட்டான "சின்னஞ்சிறு கிளியே" என்று அனைத்துப் பாடல்களும் பிரபலம் ஆயின.
முந்தானை முடிச்சின் பாதிப்பில் அவரது அடுத்த படமான தாவணிக் கனவுகள் ஒரு கோடிக்கு மேல் வியாபாரம் ஆனதாகக் கருதப் படுகிறது. முந்தானை முடிச்சின் எதிர்பார்ப்பை சமாளிக்க முடியாமல் திணறினாலும், இது ஓரளவுக்கு ஓடியது. சிவாஜி ஒரு அருமையான கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். செங்கமலம் சிரிக்குது என்ற அருமையான பாடல் இதில் உண்டு.
சின்னவீடு படத்தில் நகைச்சுவை படம் முழுவதும் இருந்தாலும் அதன் கரு மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் கடும் எதிர்ப்பைப் பெற்றது. "சிட்டுக்குருவி வெட்கப்படுது" என்ற பாடல் பிரபலமானது. நான் சிகப்பு மனிதன் என்ற ரஜினி படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் துப்புத் துலக்கும் அதிகாரியாக நடித்தார்.
எங்க சின்ன ராசா படத்தில் அதிமுக கொடி நிறத்தில் துண்டு அணிந்து "எடுடா மேளம்" அன்று பாடுவார். எம்ஜியார் மறைவிற்குப் பின் பாக்யராஜும் அரசியலில் ஈடுபட முயன்ற போது வந்த படம் இது. பாக்யராஜ் எமமுக என்ற கட்சியை ஆரம்பித்த நேரம். இப்படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்த மண்ணாங்கட்டி என்பவர் எமமுக கட்சியில் முக்கிய பங்கு வகித்தார். அப்போது வாரமலர் துணுக்கு மூட்டையில் எமமுக செய்திகள் அன்று கிண்டலடித்து ஒரு தனிப் பகுதியே வந்தது. ராதாவுடன் இணைந்து முதன் முறையாக நடித்த படம். சங்கர் கணேஷ் இசை அமைத்த இந்தப் படத்தில் பாடல்கள் பிரபலமாயின. கொண்ட சேவல் கூவும் நேரம், மாமா உனக்கு ஒரு தூது விட்டேன், தென் பாண்டி சீம ஓரமா ஆகிய பாடல்கள் பிரபலமாக இருந்தன. இரட்டை வசனக் காட்சிகள் சற்றே தூக்கல்.
அடுத்து வந்த "இது நம்ம ஆளு" ஷோபனாவிற்குத் தமிழில் மறு வாழ்வு கொடுத்தது. பிழைப்பிற்காக ஐயர் வேடம் போடும் பாக்யராஜ், சோமராஜுலுவின் ஐயர் குடும்பத்தின் நன் மதிப்பை பெற்று ஷோபனாவின் காதலை வழியில்லாமல் ஏற்றுப் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து அன்றே மாட்டிக்கொள்கிறார். பின்பு பல போராட்டங்களுக்கிடையில் சோமராஜுலு அவர்களை அங்கீகரிக்கிறார். ஜாதி வேறுபாட்டை எதிர்க்கும் கரு வெற்றியைக் கொடுத்தது. இசையும் இவரே. பாடல்கள் ஓரளவுக்குப் பிரபலமாயின. தலைப்புப் பாடலான பச்ச மலை சாமி ஒண்ணு இவரே பாடி இருக்கிறார். அம்மாடி இதுதான் காதலா நல்ல ஒரு மெல்லிசைப் பாடல். சர்ச்சைக்குரிய நான் ஆளான தாமரை, மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டு இன்றும் பிரபலம். பத்து லட்சம் வாசகர்களுக்கு மேலே இதைப் பார்த்திருப்பது இதன் பிரசித்தி(?)க்கு சாட்சி.
பின்பு எடுக்கப்பட்ட அவசர போலீஸ் 100 பாதியில் நின்று போன MGR -இன் அண்ணா என் தெய்வம் என்ற படத்தின் தொடர்ச்சி. சிலுக்கு சுமிதா நாயகியாக நடித்த இந்த படம் ஓடவில்லை(?). அடுத்து வந்த ஆராரோ ஆரிராரோ சுமாராக ஓடியது. மன நிலை சரியில்லாதவர்களை மையமாக வைத்து வந்த படம். பானுப்ரியா நாயகி. கொஞ்சம் நகைச்சுவை இருந்தது. அதிர்ச்சிப் பைத்தியம் நல்ல நகைச்சுவை. பின்பு வந்த பவுனு பவுனுதான் ஒரு படு தோல்வி. ரோகினி கதாநாயகியாக நடித்திருந்தார். அளவுக்கதிகமான செண்டிமெண்ட் காட்சிகள் படத்தின் தோல்விக்கு வழி வகுத்தன.
பின்பு வந்த சுந்தரகாண்டம் நல்ல நகைச்சுவைப் படம். மீண்டும் பானுப்ரியா. அறிமுக நடிகை சிந்துஜா நல்ல துறுதுறுப்பு. அதுவும் பள்ளியில் நடக்கும் ஆரம்ப காட்சிகள் குபீர் சிரிப்பு. பாடகி என்று நம்பி மணந்த பானுப்ரியா முதலிரவில் பள்ளியின் காலை வணக்கப் பாடலான "தேவனே தேவனே" என்று பாடும்போது அரங்கமே அதிரும்.
குஷ்பூ முதலிடத்தில் இருக்கும்போது வந்த படம் அம்மா வந்தாச்சு. குழந்தை செண்டிமெண்டை வைத்து எடுத்த படம். நந்தினி ஓ நந்தினி பாடல் சுமாராகப் பேசப்பட்டது. பின்பு வந்த ராசுக்குட்டி ஐஸ்வர்யாவுக்கு மறு வாழ்வு தந்தது. ஹோலி ஹோலி என்ற பாடல் சுமார். வீட்ல விசேஷங்க நல்ல ஒரு நகைச்சுவைப் படம். காணாமல் போயிருந்த சுரேஷ் நடித்திருந்தார். பிரகதி/மோகனா என்ற புதுமுக நடிகைகள். பாடல்கள் சுவை. இந்த பஸ்ஸுதான் PTC ஒரு அதிரடி. கொஞ்சம் சங்கீதம் , மலரே தென்றல், பூங்குயில் ரெண்டு ஆகிய பாடல்களும் அருமை. கோழி கூவுது புகழ் விஜி ஒரு கவர்ச்சிப் பாத்திரத்தில் நடித்திருந்தார். நகைச்சுவை உணர்வுள்ள மருத்துவராக ஜனகராஜ் கலக்கி இருப்பார்.
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படம் பாடல்களுக்காகவே பார்க்கலாம். வந்தாள் வந்தாள் ராஜ குமாரி, பாக்யராஜின் பிறந்த நாளைக் கொண்டாட மீனா ஏற்பாடு செய்யும் ராஜா ராஜாதான் ஆகிய பாடல்கள் இன்றும் கேட்கலாம். மீனா மற்றும் சார்லி அருமையாக நடித்திருந்தனர். இவரது பாட்டியாக வரும் அம்மையார் நன்றாக நடித்திருப்பார்.
பின்பு வந்த ஞானப் பழம் பற்றும் வேட்டிய மடிச்சுக்கட்டு ஆகியவை ஒன்றும் சொல்லும்படி இல்லை. சொக்கத் தங்கம் வெறும் இயக்கம் மட்டும். பாரிஜாதம் சுமாராக ஓடியது. சித்து பிளஸ் டூ ஓடவில்லை.
சமீப காலத்தில் சில படங்களில் மூத்த கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். (நினைத்தாலே இனிக்கும், சம்திங் சம்திங் போன்றவை)
நன்றி :)
Thursday, July 28, 2011
ரிச்மண்ட் தமிழ் சங்க வன போஜனம் (பிக்னிக்)
காலை ஒன்பது மணிக்கு சற்று முன்னர் ஆரம்பித்து தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்கள் களத்தில் இறங்கி அங்குள்ள ஏற்பாடுகளைத் தொடங்கினார்கள். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு எல்லாம் தயார் ஆனது. முதல் தமிழ் சங்க உறுப்பினருக்காகக் காத்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் டென்னிஸ் மட்டை மற்றும் பந்துகளைக் கொண்டு ஒரு சிறிய கிரிக்கெட் ஆட்டம் தொடங்கினார்கள்.
ஒரு வழியாக உறுப்பினர் பரமேஸ்வரன் மற்றும் குடும்பத்தார் முதலாவதாக வந்த போது, ஆரவாரமான கை தட்டலோடு வரவேற்கப் பட்டனர். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மற்ற உறுப்பினர்கள் வரத் தொடங்கினர். சிறுவர்களுக்கு பல்வேறு சிறு உணவுகள் மற்றும் பானங்கள் வைக்கப்பட்டு இருந்தன. சிறு குழந்தைகள் பூங்காவில் இருந்த விளையாட்டுக் கருவிகளில் ஆடத் தொடங்கினர். ஊஞ்சல்களுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டது.
மற்ற உறுப்பினர்கள் வந்தவுடன் தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பெரியகருப்பன் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வந்திருக்கும் உறுப்பினர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து பல விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். உறுப்பினர்கள் ஆரவாரத்தோடு பங்கு பெற்றனர். வித்தியாசமான "musical chair " பந்தயம் எல்லோருடைய வரவேற்பையும் பெற்றது. குழந்தைகளுக்கான தண்ணீர் நிரப்பும் போட்டி, மற்றும் வாயில் கரண்டி கொண்டு நடத்தல் ஆகியவை நடை பெற்றன. ஆண்கள் வாலிபால் ஆடினர். தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர் நிர்மலா மகேஷ் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார். தமிழ் சங்க முன் தலைவர் முரளி ராமச்சந்திரன் கௌபாய் தொப்பி அணிந்து நகைச்சுவைச் சூழ்நிலையை உருவாக்கினார்.
உச்சி வேளையின் போது பிட்சாக்கள் பாப்பா ஜான்ஸ் கடையில் இருந்து வந்து சேர்ந்தன. மூன்று வகையான பிட்சாக்கள் பரிமாறப்பட்டன. உணவு வேளை முடிந்த உடன் உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களைக் கண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அடுத்த கட்ட விளையாட்டுகள் தொடங்கின.
சிறிது நேரத்தில் தமிழ் சங்க sponsor -களில் ஒன்றான இந்திய பேஸ்ட்ரி ஹவுஸ் -ல் இருந்து சமோசா, மற்றும் puffs வந்து சேர்ந்து உறுப்பினர்களுக்குப் பரிமாறப் பட்டன. லக்ஷ்மி ஸ்ரீதர் மூலம் சுவையான தேநீர் தயார் செய்யப் பட்டது.
அதன் பின்பு குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என்று தனித் தனியாகக் கயிறு இழுக்கும் போட்டி நடை பெற்றது. உறுப்பினர்கள் ஆரவாரத்தோடு பங்கு பெற்று மகிழ்ச்சி அடைந்தனர். பலூனில் தண்ணீர் நிரப்பி உடையாமல் பிடிக்கும் போட்டி தம்பதியினருக்காக நடை பெற்றது. மலைசாமி /கவிதா தம்பதியினர் இதில் வெற்றி பெற்றார்கள். நாகு பரசு, வெங்கட் செட்டியார், சத்தியா, ஸ்ரீனி ஆகியோர் சிறிய இலக்கியக் கூட்டம் நடத்தினர்.
சுமார் இருபது உறுப்பினர்கள் கிரிக்கெட் ஆடக் கிளம்பினர். சிறுவர்கள் அதே நேரத்தில் கால்பந்து ஆடினார்கள். சத்தியவாகீசுவரன் மற்றும் ஆனந்த் அண்ணாமலை தலைமையில் இரு அணிகள் உருவாக்கப் பட்டன. பெண்களில் இருந்து கவிதா மட்டும் பங்கேற்றார்.
முதலில் மட்டை ஏந்திய சத்தியா அணி ஏழு ஓவர்களில் 76 ரன்கள் எடுத்தது. பந்து நேரிடும் முன்பே ரன்-அவுட் ஆனா மகேஷ் எதிரணியின் பெருந்தன்மையில் மட்டை ஏந்த அனுமதிக்கப் பட்டார். முக்காவாசி ரன்களை அவர் மட்டுமே எடுத்து ஏகப்பட்ட சிக்ஸர்-களை விளாசி அதன் மூலம் எதிரணியினர் அவர்களின் பெருந்தன்மைக்கு மிகவும் வருந்தினார்கள். ஆனந்த் தலைவர் என்ற முறையில் சிறப்பாகப் பந்து வீசினார். கவிதா விஸ்வாவின் தலைக்கு மேலே பந்து வீசி அவரை போல்ட் செய்து அதிர்ச்சி அடைய வைத்தார்.
பின்பு ஆடிய ஆனந்த் அணியினர் மெதுவாகத் தொடங்கினர். கவிதா ஒரு சிக்ஸர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மட்டையாளர்கள் கூடியதால் ஆனந்த் அணியினருக்கு ஒரு ஓவர் கூடுதல் ஒதுக்கப் பட்டது. நடுவர் ஸ்ரீனிவாசன் தாறுமாறாக அகலப் பந்துகளை வழங்கி கடும் எதிர்ப்பைப் பெற்று பின்பு ஒவ்வொரு அகலப் பந்தையும் வழங்குவதற்கு முன் பீல்டிங் அணியினரின் சம்மதம் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனந்ந் நன்றாக அடித்து கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையைக் கொண்டு வந்தார். செல்வாவின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் சத்தியா அணியினர் வெற்றி அடைந்தனர்.
35 குடும்பத்தினரைச் சிறந்த சுமார் 125 உறுப்பினர்கள் இந்த பிக்னிக்கில் பங்கு பெற்றனர். சில உறுப்பினர்களின் பெற்றோர்களும் இதில் பங்கு பெற்றிருந்தனர். பெரும்பாலான உறுப்பினர்கள் கடைசி வரை இருந்தனர். சுமார் ஐந்து மணிக்கு இது நிறைவு பெற்றது.
தமிழ் சங்கத் தலைவர் முத்து ஜீவானந்தம் மற்றும் பொருளாளர் தியாகா பெரும்பாலான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மார்செலின் மற்றும் செந்தில் பல்வேறு விளையாட்டுகளை நடத்தினர். சுகந்தி மற்றும் விஜி முன்னரே வந்திருந்து செயற்குழு உறுப்பினர்களை ஊக்குவித்தனர். மற்ற செயற்குழு உறுப்பினர்களும் பல்வேறு வேலைகளைப் பகிர்ந்து கொண்டு இந்த பிக்னிக்கை ஒரு சிறந்த முறையில் நடத்தினர். அவர்களுக்கு தமிழ் சங்க உறுப்பினர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புகைப்படங்களுக்கு இந்த இணைப்பை உபயோகப்படுத்தவும்.