Monday, August 01, 2011

திரைக்கதைச் சக்கரவர்த்தி கே.பாக்யராஜ்

திரைக்கதைச் சக்கரவர்த்தி கே.பாக்யராஜ் - திரும்பிப் பார்ப்போம்

தமிழ்த் திரையுலக வரலாற்றில் திரு பாக்யராஜ் அவர்களுக்கு ஒரு தனி மரியாதை நிரந்தரமாக உள்ளது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. நான் சிறு வயதில் இருந்தே - சுமார் 1980 இருக்கும், பாக்யராஜின் ரசிகன். அப்போது என்னை மிகவும் கவர்ந்தது அவரது பெரிய கண்ணாடியும், நகைச்சுவை கலந்த காட்சி அமைப்புகள்தான்.. எனக்கு நண்பர்கள் அனுப்பும் பொங்கல் வாழ்த்துக்களில் பாக்யராஜ் படம் இடம் பெற்றிருக்கும். அது போக அந்த கால கட்டத்தில் கதை , திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற நான்கு மிகப்பெரிய பொறுப்புகளை வெற்றிகரமாகச் செய்தவர்கள் இவர் மற்றும் T .ராஜேந்தர் மட்டுமே. திரைக் கதையின் பிரம்மா மற்றும் ஜனரஞ்சக இயக்குனர் என்று அழைக்கப் பட்ட இவர், குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற அடைமொழியையும் பெற்றார்.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராகத் தொடங்கி, அவர் படங்களிலேயே கதை, வசனம் எழுதி நடிகராக அறிமுகம் செய்யப்பட்டவர் இவர். சிகப்பு ரோஜாக்களில் சர்வராக ஒரு சிறிய வேடத்தில் நடித்த இவர், பதினாறு வயதிலே படத்தில் மஞ்ச குளிச்சு என்ற பாடலில் தலை காட்டி இருக்கிறார். புதிய வார்ப்புகள் படத்தில் நாயகனாக அறிமுகமான இவர் அந்த படத்தில் சொந்த குரலில் பேசாததால் இப்போது அந்தப் படத்தைப் பார்த்தால் சற்று ஏமாற்றமாக இருக்கும். புதிய வார்ப்புகளில் இவர் கையைத் தட்டிப் பாடும் வான் மேகங்களே பாட்டு, இன்றும் இனிமை. ராஜேஷ் மற்றும் வடிவுக்கரசி நடித்த கன்னிப்பருவத்திலே படத்தில், இவர் கதை வசனம் எழுதி வில்லனாக நடித்தார்.

சிறிய முடிச்சுக்களை வைத்துக்கொண்டு திரைக்கதையைப் பிரதானமாக்கிப் படங்கள் எடுப்பதில் வல்லவர் இவர். நகைச்சுவையைப் படம் முழுவதும் இழைய விட்டிருப்பார். பெரும்பாலும் திரைக்கதை மற்றும் வசனங்களைப் படப்பிடிப்பு அன்று மாத்திரமே முடிவு செய்து காட்சிகளை எடுப்பார். உதாரணமாக அந்த ஏழு நாட்கள் படத்தில் ஒரு காட்சி வரும். அதில் தாழ்ப்பாள் இல்லாத குளியல் அறையில் வெளியே காஜா செரிப்பைக் காவலுக்கு நிறுத்தி விட்டு உள்ளே செல்வார். பக்கத்து வீட்டில் ஒருவர் இறந்திருப்பார். அதற்குரிய சாவு மேளங்கள் அப்போது தொடங்கும். இசையில் ஆர்வம் கொண்ட காஜா ஷெரிப் மேளம் கேட்டவுடன் ஆட்டம் போட்டுக்கொண்டே இழவு வீட்டுக்குப் போய் விடுவார். அப்போது அம்பிகா கதவைத் திறந்து பெரும் களேபரமாகி, பாக்யராஜ் கடுப்பின் உச்சக்கட்டத்தில் காஜா ஷெரிப்பை நடு ரோட்டில் வைத்துக் கும்முவார். இந்தக் காட்சி அமைத்த நாள் அன்று பாக்யராஜ் படபிடிப்புக்குப் போகும் வழியில் ஒரு சாவு மேளத்தைப் பார்த்திருக்கிறார். அந்த சூழ்நிலையில் உதித்த காட்சி இது.

தன்னுடைய படங்களில் தானே கதாநாயகனாக நடித்து அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதை இவரது வலிமையாக மாற்றினார் . சுமதி, சுலக்க்ஷனா, பிரவீணா, பூர்ணிமா ஜெயராம், ஊர்வசி, அம்பிகா போன்ற பல்வேறு நடிகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். குடும்ப சூழ்நிலைகளை அனுசரித்து உண்டாக்கிய, நகைச்சுவை கலந்த காதல் கதைகள் இவரது பெரும் பலமாக இருந்தது. பொய் சாட்சி, விடியும் வரை காத்திரு போன்ற படங்கள் சற்று மாறுபட்டிருந்தன. திரைக்கதை மற்றும் நகைச்சுவையை மாத்திரமே கொண்டு "இன்று போய் நாளை வா" திரைப்படத்தை வெளியிட்டார். மௌன கீதங்கள் மற்றும் முந்தானை முடிச்சு படங்களில் வந்த இரட்டை அர்த்த வசனம் மற்றும் முருங்கைக்காய் சமாசாரங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இவரது படங்களில் அவை தொடர்ந்து, தனி முத்திரை பெற்றார். (அதனால் இவர் படங்கள் பார்க்க வீட்டில் தடை விதிக்கப் பட்டது என்பது வேறு விஷயம். முந்தானை முடிச்சு படம் நாளை கடைசி என்று போஸ்டரில் ஒட்டிய பின், வீட்டில் அழுது புரண்டு படம் பார்க்க சம்மதம் வாங்கியது ஒரு பெரிய சாதனை)

முந்தானை முடிச்சின் வரலாறு காணாத வெற்றிக்குப் பிறகு, அந்த அளவுக்கு எதிர்பார்ப்பைச் சமாளிப்பது பாக்யராஜ்க்குப் பெரும் சவாலாக அமைந்தது. அடுத்து வந்த தாவணிக்கனவுகள் அந்த அளவுக்கு வெற்றியைப் பெற முடியவில்லை. சின்ன வீடு படம் நகைச்சுவை இருந்தாலும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதன் பின் இந்தியில் சில முயற்சிகள் செய்தார். பின்பு 1987 -ல் வந்த எங்க சின்ன ராசா நன்றாக ஓடியது. இந்த சமயத்தில் MGR அபிமானியான இவர் சிறிது அரசியல் சாயம் பூசினார். அடுத்து வந்த இது நம்ம ஆளு படத்தில் ஜாதி வேறுபாட்டை மையமாக்கினார். இதன் பின்பு வந்த எந்தப் படமும் பரபரப்பாக பேசப்படவோ ஓடவோ இல்லை. இவரது வலிமை இவர் கதா நாயகனாக நடிக்கும் படங்களாகவே இருந்ததால், மற்ற நடிகர்களை வைத்து இவர் முயற்சி செய்யவே இல்லை. இவர் கதாநாயகனாக நடிப்பது சிரமம் மற்றும் மாறி வரும் ரசனை ஆகிய சூழ்நிலைகளில் இவரது திரைப்பட எதிர்காலம் கேள்விக்குறி ஆனது.

விஜயகாந்தை வைத்து சொக்கத்தங்கம் என்ற திரைப்படத்தை நடிக்காமல் இயக்க மட்டும் செய்தார். படம் ஓரளவுக்குப் பரவாயில்லை என்றாலும், மாறி விட்ட ரசிகர்களின் மனதில் இது பழைய திரைப்படம் போல் நடிகர்/நடிகையர், திரைக்கதை, காட்சி அமைப்புகள் இருந்ததால் சரியாக ஓடவில்லை. தன் மகளை நாயகியாக வைத்து இயக்கிய "பாரி ஜாதம்" சுமாராக ஓடியது. பின்பு மகனைக் கதாநாயகனாக வைத்து வந்த சித்து+2 ஓடவில்லை.

இவரது படங்களில் காட்சிகளில் உள்ள நகைச்சுவை போக, இவரது நடனம் கூடுதல் நகைச்சுவையைத் தரும். இவரது நடன அசைவுகள் உடற் பயிற்சி ஆசிரியர்களை வெட்கப்பட வைக்கும். அழகிய விழிகளில், அந்தி வரும் நேரம் போன்ற பல பாடல்கள் இவரது நடனத் திறமைக்குச் சாட்சி.

பாக்யராஜின் திரைக்கதை எழுதும் திறமையும், அவரது நகைச்சுவை கலந்த காட்சி அமைப்புகளும் அவருக்குத் தமிழ் திரை உலக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு இடத்தை அளித்துள்ளன. இவரது உதவி இயக்குர்கள் பலர் திறமை வாய்ந்தவர்கள். பார்த்திபன், லிவிங்க்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோர் இவரது பள்ளியில் பயின்றவர்கள். இனி, அவர் இயக்கிய படங்களை வேகமாக ஒரு பார்வை பார்ப்போம். பாடல்களின் youtube இணைய முகவரி இணைக்கப்பட்டுள்ளது..

இவர் முதலாவதாக இயக்கிய சுவரில்லாச் சித்திரங்கள் படத்தில் காஜா ஷெரிப் காஜா போடும் தையல் கடைச் சிறுவனாக வந்து காஜா என்ற அடை மொழியைப் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படத்தில் கவுண்டமணி மற்றும் கல்லா பெட்டி சிங்காரத்தின் நகைச் சுவைக் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. காதல் வைபோகமே என்ற பாட்டு மலேசியா வாசுதேவனின் பிரபலமான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தில் பாக்யராஜ் சுதாகருடன் இன்னொரு நாயகனாக நடித்திருந்தார். சுமதி அறிமுகமானார். பாமா ருக்மணியில் இரண்டு பெண்டாட்டி கதையில் நடித்து இயக்கினார்.. இதில் இவருடன் நடித்த நடிகை ப்ரவீனாவை இவர் திருமணம் செய்து கொண்டார். பாமா ருக்மணியில் வந்த "நீ ஒரு கோடி மலர் தூவி உருவானவள்" பாட்டு கேட்க இப்போதும் சுவை.

ஒரு கை ஓசை திரைப் படத்தில் ஊமையாக நடித்திருந்தார். இந்தப் படம் நன்றாக ஓடியதா என்ற விபரம் தெரியவில்லை. இதற்கு அடுத்து வந்த "இன்று போய் நாளை வா" ஒரு மறக்க முடியாத படம். முழு நீள நகைச்சுவைப் படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு மட்டுமே சேரும். இந்தப் படத்தைப் பற்றி மட்டுமே சில பக்கங்கள் எழுதலாம். இந்தப் படத்தில் இவரது நண்பர் வெங்கட்டாக நடித்த பழனிசாமி பாக்யராஜ் ரசிகர் மன்றத் தலைவர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் படத்தில் கல்லா பெட்டி சிங்காரம், இந்தி பண்டிட்டாக வரும் ஜான் அமிர்தராஜ், காந்திமதி ஆகியோர் மிகச் சிறப்பாக நடித்து இப்படத்தில் வந்த சில காட்சிகள் இன்னும் நம் மனதை விட்டு அகலாது. இந்தி பண்டிட் "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகதாதா" என்று சொல்லிக் கொடுக்கும் காட்சி அரங்கங்களை அதிர வைக்கும். வெங்கட் குஸ்தி கற்பது, பாக்யராஜ் கழுதையின் கயிறை விட்டு விட்டுத் துரத்துவது , ராஜேந்திரன் காந்திஜி உச்சரிக்க முடியாமல் தூணில் இடி வாங்குவது, கல்லா பெட்டி மற்றும் இந்தி பண்டிட் ராதிகா காதலை மறுத்தவுடன் அடி வாங்கி வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் இன்றும் வயிற்றைப் புண்ணாகும். சற்று இழுத்தடித்த இறுதிக் காட்சி காரணம், இந்தப் படம் எதிர் பார்த்த அளவுக்கு பரபரப்பாக ஓடாவிட்டாலும், ஒரு சிறிய கதையை மட்டும் வைத்துக் கொண்டு முழுவதும் திரைக்கதையை மட்டும் வைத்து எடுப்பதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

மௌன கீதங்கள் படம் வெளி வருவதற்கு முன்னால் குமுதத்தில் 1980 -ல் ஒரு தொடர் கதையாக வந்தது. இறுதிக் காட்சியை வெளியிடாமல் வெள்ளித் திரையில் காண்க என்று முடித்துத் தவிக்க வைத்து விட்டார். பின்பு நான் படம் பார்த்தது 2004 -ல் சன் டிவியில் ஒரு முறை வெளியிட்ட போதே. 24 வருடக் காத்திருந்தலுக்குப் பின் படத்தைப் பார்த்த போது கிடைத்த இன்பம் அளவிட முடியாதது. பழைய படம் என்ற எந்த ஒரு நெருடலும் இல்லாமல் பார்க்க முடிந்தது ஒரு ஆச்சர்யம். மூக்குத்திப் பூ மேலே பாட்டு ஒரு என்றும் இனிமையான பாடல். சிறுவன் சுரேஷின் நடிப்பு மிகவும் அருமை.

பின்பு வந்த விடியும் வரை காத்திரு ஒரு திகில் படமாக இருந்தது. இதில் வந்த நீங்காத எண்ணம் ஒன்று பாடல் குறிப்பிடத் தக்கது. இதன் பின்பு வந்த அந்த ஏழு நாட்கள் தமிழ்த் திரையுலகின் மைல் கற்களில் ஒன்று என்று கூறினால் மிகையாகாது. ஆனந்த விகடனில் 65 மதிப்பெண்கள் பெற்ற படம் இது. பாக்யராஜ் மலையாளம் கலந்த தமிழில் பேசிக் கலக்கினார். காஜா ஷெரிப்பின் நடிப்பு பரபரப்பாக பேசப்பட்டது. சென்னைக்கு வந்து பாக்யராஜ் வெகுளியாகப் பேசி வீடு தேடுவதும், கல்லா பெட்டியிடம் திட்டு வாங்குவதும், காஜா ஷெரிப் அடிக்கடி பாக்யராஜின் காலை வாரி விடுவதும் குபீர் சிரிப்புகள். இந்தப் படத்தில் MSV இசையில் வந்த எல்லாப் பாடல்களுமே இனிமை. எண்ணி இருந்தது ஈடேற, தென்றலது உன்னிடத்தில், சப்த ஸ்வர தேவி உனது, எல்லாமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. படத்தின் இறுதிக் காட்சி எல்லாத் தரப்பினரையும் நெகிழ வைத்தது. ராஜேஷ் மற்றும் தமிழில் அறிமுகமான அம்பிகா மிகவும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

பொய் சாட்சி திரைப் படத்தில் தன்னுடைய தவறால் ஒரு குடும்பமே நசித்து விட்டதை உணர்ந்து அந்த குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். ஓட்டலில் நன்றாக சாப்பிட்டு விட்டு செந்திலை பில் செலுத்த மாட்டி விட்டு நழுவும் காட்சி வயிறைக் குலுங்க வைக்கும்.

டார்லிங் டார்லிங் டார்லிங்கில் குழந்தைப் பருவத்தில் பிரிந்து சென்ற தோழிக்காகக் காத்திருக்கும் அப்பாவி இளைஞனாக நடித்திருந்தார். அப்பா கல்லா பெட்டி மற்றும் தங்கை இந்திராவுடன் இவர் அடிக்கும் லூட்டி மறக்க முடியாதது. ஊட்டி பங்களா வாட்ச்மேனாக வரும் கல்லா பெட்டி முதல் காட்சியில் முதலாளி தோரணையில் வருவதில் ஆரம்பித்து, பின்னர் பாக்யராஜை நம்பிக் கடன் வாங்கி ஈட்டிக்காரனின் பைக்கின் பின்னால் கயிறால் கட்டப்பட்டுப் புலம்பும் காட்சிகளில் கலக்கி இருப்பார். பூர்ணிமா ஜெயராம் வருகையை அறிந்தவுடன் இவர் பரபரப்பில் செய்யும் காரியங்கள் எல்லாமே சுவை. சங்கர் கணேஷ் இசையில் "ஓ நெஞ்சே நீ தான்" நெஞ்சை உருக்கும். பூர்ணிமாவுடன் இவர் பாடும் அழகிய விழிகளில் டூயட் இன்றும் கேட்கலாம். பிரவீணாவின் மரணத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் நாயகி பூர்ணிமாவைத் திருமணம் செய்தி கொண்டார்.,

தூறல் நின்னு போச்சில் பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை என்று தவறாக நினைக்கப்பட்ட நண்பனின் முகத்தில், அடுத்த முறை போகும்போது கரியைப் பூசிக் கூட்டிக் கொண்டு போவது நல்ல நகைச்சுவை. சுலக்க்ஷனா இந்தப் படத்தில் அறிமுகம் ஆனார். செந்தாமரை மற்றும் நம்பியார் நல்ல கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அற்புதமானவை. பூபாளம் இசைக்கும், தங்கச் சங்கிலி, ஏரிக்கரைப் பூங்காற்றே ஆகியவை அருமையான மெல்லிசைப் பாட்டுக்கள். என் சோகக் கதைய கேளு தாய் குலமே பாடல் அந்த சமயத்தில் மிகவும் பிரபலமானது.

முந்தானை முடிச்சு 1983 ஜூலை 22 -ஆம் தேதி வெளியானது. இந்த படம் அளவுக்கு பரபரப்பாகத் தமிழ் நாட்டில் எந்தப் படமும் அது வரை பேசப்படவில்லை. தமிழ் திரை உலக வரலாற்றில் முதன் முதலாக வெளியிட்ட அனைத்து அரங்கங்களிலும் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அரங்கங்களில் தாய்க்குலங்களின் கூட்டம் காரணம் கடும் நெரிசல் ஏற்ப்பட்டது. அறிமுகமான ஊர்வசி பரபரப்பை ஏற்படுத்தினார். நகைச்சுவை, சென்டிமென்ட், பாடல்கள், காட்சி அமைப்புகள், பின்னணி இசை என்று எல்லாத் தரப்பிலும் படம் கொடி கட்டிப் பறந்தது. தவக்களை மற்றும் மாஸ்டர் சுரேஷ் உட்பட சிறுவர்கள் படத்தில் கலகலப்பை ஏற்படுத்தினர். படத்தில் முருங்கைக்காய் சம்பந்தமான காட்சிகளும் வசனங்களும் முகம் சுளிக்க வைத்தாலும் பெரும் பரபரப்போடு மக்களின் வரவேற்பைப் பெற்றன. இவை பாக்யராஜின் பிற்காலப் படங்களைப் பெரிதும் பாதித்தன என்று கூறினால் அது மிகையாகாது. படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமாயின. துவக்கப் பாட்டான "விளக்கு வைக்கும் நேரத்துல", ஊர்வசி தன் எதிர்காலக் கணவனை நகைச்சுவையுடன் விவரிக்கும் "நான் புடிக்கும் மாப்பிளதான்", பாக்யராஜ், ஊர்வசியின் டூயட்டான "அந்தி வரும் நேரம்", தீபாவுடன் பாக்யராஜ் பாடும் டப்பாங்குத்தான "வா வா வாத்தியாரே வா", ஊர்வசியின் தவம் கலைக்கும் பாடான "கண்ண தொறக்கணும் சாமி" மற்றும் சென்டிமென்ட் பாட்டான "சின்னஞ்சிறு கிளியே" என்று அனைத்துப் பாடல்களும் பிரபலம் ஆயின.

முந்தானை முடிச்சின் பாதிப்பில் அவரது அடுத்த படமான தாவணிக் கனவுகள் ஒரு கோடிக்கு மேல் வியாபாரம் ஆனதாகக் கருதப் படுகிறது. முந்தானை முடிச்சின் எதிர்பார்ப்பை சமாளிக்க முடியாமல் திணறினாலும், இது ஓரளவுக்கு ஓடியது. சிவாஜி ஒரு அருமையான கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். செங்கமலம் சிரிக்குது என்ற அருமையான பாடல் இதில் உண்டு.

சின்னவீடு படத்தில் நகைச்சுவை படம் முழுவதும் இருந்தாலும் அதன் கரு மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் கடும் எதிர்ப்பைப் பெற்றது. "சிட்டுக்குருவி வெட்கப்படுது" என்ற பாடல் பிரபலமானது. நான் சிகப்பு மனிதன் என்ற ரஜினி படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் துப்புத் துலக்கும் அதிகாரியாக நடித்தார்.

எங்க சின்ன ராசா படத்தில் அதிமுக கொடி நிறத்தில் துண்டு அணிந்து "எடுடா மேளம்" அன்று பாடுவார். எம்ஜியார் மறைவிற்குப் பின் பாக்யராஜும் அரசியலில் ஈடுபட முயன்ற போது வந்த படம் இது. பாக்யராஜ் எமமுக என்ற கட்சியை ஆரம்பித்த நேரம். இப்படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்த மண்ணாங்கட்டி என்பவர் எமமுக கட்சியில் முக்கிய பங்கு வகித்தார். அப்போது வாரமலர் துணுக்கு மூட்டையில் எமமுக செய்திகள் அன்று கிண்டலடித்து ஒரு தனிப் பகுதியே வந்தது. ராதாவுடன் இணைந்து முதன் முறையாக நடித்த படம். சங்கர் கணேஷ் இசை அமைத்த இந்தப் படத்தில் பாடல்கள் பிரபலமாயின. கொண்ட சேவல் கூவும் நேரம், மாமா உனக்கு ஒரு தூது விட்டேன், தென் பாண்டி சீம ஓரமா ஆகிய பாடல்கள் பிரபலமாக இருந்தன. இரட்டை வசனக் காட்சிகள் சற்றே தூக்கல்.

அடுத்து வந்த "இது நம்ம ஆளு" ஷோபனாவிற்குத் தமிழில் மறு வாழ்வு கொடுத்தது. பிழைப்பிற்காக ஐயர் வேடம் போடும் பாக்யராஜ், சோமராஜுலுவின் ஐயர் குடும்பத்தின் நன் மதிப்பை பெற்று ஷோபனாவின் காதலை வழியில்லாமல் ஏற்றுப் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து அன்றே மாட்டிக்கொள்கிறார். பின்பு பல போராட்டங்களுக்கிடையில் சோமராஜுலு அவர்களை அங்கீகரிக்கிறார். ஜாதி வேறுபாட்டை எதிர்க்கும் கரு வெற்றியைக் கொடுத்தது. இசையும் இவரே. பாடல்கள் ஓரளவுக்குப் பிரபலமாயின. தலைப்புப் பாடலான பச்ச மலை சாமி ஒண்ணு இவரே பாடி இருக்கிறார். அம்மாடி இதுதான் காதலா நல்ல ஒரு மெல்லிசைப் பாடல். சர்ச்சைக்குரிய நான் ஆளான தாமரை, மிகப் பரபரப்பாகப் பேசப்பட்டு இன்றும் பிரபலம். பத்து லட்சம் வாசகர்களுக்கு மேலே இதைப் பார்த்திருப்பது இதன் பிரசித்தி(?)க்கு சாட்சி.

பின்பு எடுக்கப்பட்ட அவசர போலீஸ் 100 பாதியில் நின்று போன MGR -இன் அண்ணா என் தெய்வம் என்ற படத்தின் தொடர்ச்சி. சிலுக்கு சுமிதா நாயகியாக நடித்த இந்த படம் ஓடவில்லை(?). அடுத்து வந்த ஆராரோ ஆரிராரோ சுமாராக ஓடியது. மன நிலை சரியில்லாதவர்களை மையமாக வைத்து வந்த படம். பானுப்ரியா நாயகி. கொஞ்சம் நகைச்சுவை இருந்தது. அதிர்ச்சிப் பைத்தியம் நல்ல நகைச்சுவை. பின்பு வந்த பவுனு பவுனுதான் ஒரு படு தோல்வி. ரோகினி கதாநாயகியாக நடித்திருந்தார். அளவுக்கதிகமான செண்டிமெண்ட் காட்சிகள் படத்தின் தோல்விக்கு வழி வகுத்தன.

பின்பு வந்த சுந்தரகாண்டம் நல்ல நகைச்சுவைப் படம். மீண்டும் பானுப்ரியா. அறிமுக நடிகை சிந்துஜா நல்ல துறுதுறுப்பு. அதுவும் பள்ளியில் நடக்கும் ஆரம்ப காட்சிகள் குபீர் சிரிப்பு. பாடகி என்று நம்பி மணந்த பானுப்ரியா முதலிரவில் பள்ளியின் காலை வணக்கப் பாடலான "தேவனே தேவனே" என்று பாடும்போது அரங்கமே அதிரும்.

குஷ்பூ முதலிடத்தில் இருக்கும்போது வந்த படம் அம்மா வந்தாச்சு. குழந்தை செண்டிமெண்டை வைத்து எடுத்த படம். நந்தினி ஓ நந்தினி பாடல் சுமாராகப் பேசப்பட்டது. பின்பு வந்த ராசுக்குட்டி ஐஸ்வர்யாவுக்கு மறு வாழ்வு தந்தது. ஹோலி ஹோலி என்ற பாடல் சுமார். வீட்ல விசேஷங்க நல்ல ஒரு நகைச்சுவைப் படம். காணாமல் போயிருந்த சுரேஷ் நடித்திருந்தார். பிரகதி/மோகனா என்ற புதுமுக நடிகைகள். பாடல்கள் சுவை. இந்த பஸ்ஸுதான் PTC ஒரு அதிரடி. கொஞ்சம் சங்கீதம் , மலரே தென்றல், பூங்குயில் ரெண்டு ஆகிய பாடல்களும் அருமை. கோழி கூவுது புகழ் விஜி ஒரு கவர்ச்சிப் பாத்திரத்தில் நடித்திருந்தார். நகைச்சுவை உணர்வுள்ள மருத்துவராக ஜனகராஜ் கலக்கி இருப்பார்.

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படம் பாடல்களுக்காகவே பார்க்கலாம். வந்தாள் வந்தாள் ராஜ குமாரி, பாக்யராஜின் பிறந்த நாளைக் கொண்டாட மீனா ஏற்பாடு செய்யும் ராஜா ராஜாதான் ஆகிய பாடல்கள் இன்றும் கேட்கலாம். மீனா மற்றும் சார்லி அருமையாக நடித்திருந்தனர். இவரது பாட்டியாக வரும் அம்மையார் நன்றாக நடித்திருப்பார்.

பின்பு வந்த ஞானப் பழம் பற்றும் வேட்டிய மடிச்சுக்கட்டு ஆகியவை ஒன்றும் சொல்லும்படி இல்லை. சொக்கத் தங்கம் வெறும் இயக்கம் மட்டும். பாரிஜாதம் சுமாராக ஓடியது. சித்து பிளஸ் டூ ஓடவில்லை.

சமீப காலத்தில் சில படங்களில் மூத்த கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். (நினைத்தாலே இனிக்கும், சம்திங் சம்திங் போன்றவை)

நன்றி :)

Thursday, July 28, 2011

ரிச்மண்ட் தமிழ் சங்க வன போஜனம் (பிக்னிக்)

ஜூலை 24 , 2011 அன்று ரிச்மண்ட் தமிழ் சங்கம் உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் ஒரு வன போஜனம் (பிக்னிக்) ஏற்பாடு செய்திருந்தது. ரிச்மண்டில் உள்ள ஆழ ஓட்டப் பூங்காவில் (deep run park) இது நடை பெற்றது.

காலை ஒன்பது மணிக்கு சற்று முன்னர் ஆரம்பித்து தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்கள் களத்தில் இறங்கி அங்குள்ள ஏற்பாடுகளைத் தொடங்கினார்கள். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு எல்லாம் தயார் ஆனது. முதல் தமிழ் சங்க உறுப்பினருக்காகக் காத்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் டென்னிஸ் மட்டை மற்றும் பந்துகளைக் கொண்டு ஒரு சிறிய கிரிக்கெட் ஆட்டம் தொடங்கினார்கள்.

ஒரு வழியாக உறுப்பினர் பரமேஸ்வரன் மற்றும் குடும்பத்தார் முதலாவதாக வந்த போது, ஆரவாரமான கை தட்டலோடு வரவேற்கப் பட்டனர். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மற்ற உறுப்பினர்கள் வரத் தொடங்கினர். சிறுவர்களுக்கு பல்வேறு சிறு உணவுகள் மற்றும் பானங்கள் வைக்கப்பட்டு இருந்தன. சிறு குழந்தைகள் பூங்காவில் இருந்த விளையாட்டுக் கருவிகளில் ஆடத் தொடங்கினர். ஊஞ்சல்களுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டது.

மற்ற உறுப்பினர்கள் வந்தவுடன் தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பெரியகருப்பன் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வந்திருக்கும் உறுப்பினர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து பல விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். உறுப்பினர்கள் ஆரவாரத்தோடு பங்கு பெற்றனர். வித்தியாசமான "musical chair " பந்தயம் எல்லோருடைய வரவேற்பையும் பெற்றது. குழந்தைகளுக்கான தண்ணீர் நிரப்பும் போட்டி, மற்றும் வாயில் கரண்டி கொண்டு நடத்தல் ஆகியவை நடை பெற்றன. ஆண்கள் வாலிபால் ஆடினர். தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர் நிர்மலா மகேஷ் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார். தமிழ் சங்க முன் தலைவர் முரளி ராமச்சந்திரன் கௌபாய் தொப்பி அணிந்து நகைச்சுவைச் சூழ்நிலையை உருவாக்கினார்.

உச்சி வேளையின் போது பிட்சாக்கள் பாப்பா ஜான்ஸ் கடையில் இருந்து வந்து சேர்ந்தன. மூன்று வகையான பிட்சாக்கள் பரிமாறப்பட்டன. உணவு வேளை முடிந்த உடன் உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களைக் கண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அடுத்த கட்ட விளையாட்டுகள் தொடங்கின.

சிறிது நேரத்தில் தமிழ் சங்க sponsor -களில் ஒன்றான இந்திய பேஸ்ட்ரி ஹவுஸ் -ல் இருந்து சமோசா, மற்றும் puffs வந்து சேர்ந்து உறுப்பினர்களுக்குப் பரிமாறப் பட்டன. லக்ஷ்மி ஸ்ரீதர் மூலம் சுவையான தேநீர் தயார் செய்யப் பட்டது.

அதன் பின்பு குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என்று தனித் தனியாகக் கயிறு இழுக்கும் போட்டி நடை பெற்றது. உறுப்பினர்கள் ஆரவாரத்தோடு பங்கு பெற்று மகிழ்ச்சி அடைந்தனர். பலூனில் தண்ணீர் நிரப்பி உடையாமல் பிடிக்கும் போட்டி தம்பதியினருக்காக நடை பெற்றது. மலைசாமி /கவிதா தம்பதியினர் இதில் வெற்றி பெற்றார்கள். நாகு பரசு, வெங்கட் செட்டியார், சத்தியா, ஸ்ரீனி ஆகியோர் சிறிய இலக்கியக் கூட்டம் நடத்தினர்.

சுமார் இருபது உறுப்பினர்கள் கிரிக்கெட் ஆடக் கிளம்பினர். சிறுவர்கள் அதே நேரத்தில் கால்பந்து ஆடினார்கள். சத்தியவாகீசுவரன் மற்றும் ஆனந்த் அண்ணாமலை தலைமையில் இரு அணிகள் உருவாக்கப் பட்டன. பெண்களில் இருந்து கவிதா மட்டும் பங்கேற்றார்.

முதலில் மட்டை ஏந்திய சத்தியா அணி ஏழு ஓவர்களில் 76 ரன்கள் எடுத்தது. பந்து நேரிடும் முன்பே ரன்-அவுட் ஆனா மகேஷ் எதிரணியின் பெருந்தன்மையில் மட்டை ஏந்த அனுமதிக்கப் பட்டார். முக்காவாசி ரன்களை அவர் மட்டுமே எடுத்து ஏகப்பட்ட சிக்ஸர்-களை விளாசி அதன் மூலம் எதிரணியினர் அவர்களின் பெருந்தன்மைக்கு மிகவும் வருந்தினார்கள். ஆனந்த் தலைவர் என்ற முறையில் சிறப்பாகப் பந்து வீசினார். கவிதா விஸ்வாவின் தலைக்கு மேலே பந்து வீசி அவரை போல்ட் செய்து அதிர்ச்சி அடைய வைத்தார்.

பின்பு ஆடிய ஆனந்த் அணியினர் மெதுவாகத் தொடங்கினர். கவிதா ஒரு சிக்ஸர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மட்டையாளர்கள் கூடியதால் ஆனந்த் அணியினருக்கு ஒரு ஓவர் கூடுதல் ஒதுக்கப் பட்டது. நடுவர் ஸ்ரீனிவாசன் தாறுமாறாக அகலப் பந்துகளை வழங்கி கடும் எதிர்ப்பைப் பெற்று பின்பு ஒவ்வொரு அகலப் பந்தையும் வழங்குவதற்கு முன் பீல்டிங் அணியினரின் சம்மதம் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனந்ந் நன்றாக அடித்து கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையைக் கொண்டு வந்தார். செல்வாவின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் சத்தியா அணியினர் வெற்றி அடைந்தனர்.

35 குடும்பத்தினரைச் சிறந்த சுமார் 125 உறுப்பினர்கள் இந்த பிக்னிக்கில் பங்கு பெற்றனர். சில உறுப்பினர்களின் பெற்றோர்களும் இதில் பங்கு பெற்றிருந்தனர். பெரும்பாலான உறுப்பினர்கள் கடைசி வரை இருந்தனர். சுமார் ஐந்து மணிக்கு இது நிறைவு பெற்றது.

தமிழ் சங்கத் தலைவர் முத்து ஜீவானந்தம் மற்றும் பொருளாளர் தியாகா பெரும்பாலான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மார்செலின் மற்றும் செந்தில் பல்வேறு விளையாட்டுகளை நடத்தினர். சுகந்தி மற்றும் விஜி முன்னரே வந்திருந்து செயற்குழு உறுப்பினர்களை ஊக்குவித்தனர். மற்ற செயற்குழு உறுப்பினர்களும் பல்வேறு வேலைகளைப் பகிர்ந்து கொண்டு இந்த பிக்னிக்கை ஒரு சிறந்த முறையில் நடத்தினர். அவர்களுக்கு தமிழ் சங்க உறுப்பினர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புகைப்படங்களுக்கு இந்த இணைப்பை உபயோகப்படுத்தவும்.

Monday, July 11, 2011

தமிழக அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம் மற்றும் முற்போக்குக் கூட்டணிகள்

தமிழக அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம் மற்றும் முற்போக்குக் கூட்டணிகள்

அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பது "வழக்கத்தில் நைந்து போன்ற சொற்றொடர்" (cliche). இந்த ஒரு வாக்கியத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் எத்தனையோ முறை கூட்டணிகள் மாறி இருக்கின்றன. அரசியல்வாதிகள் கட்சி மாறி இருக்கிறார்கள். சந்தர்ப்பாதக் கூட்டணிக்கு ஒரு கௌரவமான பெயர்தான் முற்போக்குக் கூட்டணி. அவற்றில் சிலவற்றை சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம். கூட்டணிக்கு முன்பும் பின்பும் உள்ள சில சம்பவங்களையும் முழுமைக்காக விவரித்துள்ளேன். என்னுடைய அனுபவங்கள் 1985 -க்கு அப்புறமே. எனவே அதற்கு முன்புள்ள சம்பவங்கள் அதிகம் விவரிக்க முடியவில்லை. (இந்தப் பதிவில் தவறுகள் இருந்தால் தெரியப் படுத்தவும்)


அண்ணா மறைவிற்குப் பின் கருணாநிதி பல சாணக்யத்தனங்களுக்குப் பின் முதல்வரானார். அப்போது கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டால் என் மனைவி கூட என்னை மதிக்க மாட்டாள் என்று சொன்ன அன்பழகன், இன்னும் திமுகவில் உள்ளார். பரம விரோதிகளாய் இருந்த காமராஜரும், இராஜாஜியும் 1971 -ல் இந்திரா காந்தி மற்றும் கருணாநிதியின் கூட்டணியை எதிர்க்க அணி சேர்ந்தனர். அந்த கூட்டணி வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம். பின்பு அவசர நிலை பிரயோகத்தின் பொது எம்ஜியாரின் தூண்டுதலோடு இந்திரா காந்தி திமுக ஆட்சியைக் கலைத்தார்.

எம்ஜியார் கட்சியை விட்டு வெளியேறிய போது நெடுஞ்செழியன் பெருந்தன்மையாக (??) திமுகவில் அமைச்சராகத் தொடர்ந்தார். திமுக ஆட்சி கலைக்கப் பட்ட பின், அவர் தனிக் கட்சி தொடங்கி அதில் தோற்ற பின் கட்சியைக் கலைத்து விட்டு உடனே அதிமுகவிற்குத் தாவினார். அமைச்சர் பதவி தரும் கட்சியில் இருப்பது என்பது இவரது கொள்கை.

1977 -ல் எம்ஜியார் தனித்து நின்று வென்ற பிறகு, கருணாநிதியும் இந்திரா காந்தியும் மீண்டும் நண்பர்கள் ஆனார்கள். அந்த நட்பின் புளகாங்கிதத்தில் தமிழ் மக்கள் அவர்களை 37 மக்கள் சபைத் தொகுதிகளில் வெல்ல வைத்தார்கள். அந்த வெற்றிக் களிப்பில் கருணாநிதி 1975 -ல் தன ஆட்சி கலைக்கப் பட்டதிற்க்குப் பழி வாங்கும் விதமாக அதிமுக ஆட்சியில் கலைக்க வைத்தார். உடனே நடந்த சட்ட சபைதேர்தலில் தலா 110 தொகுதிகளில் நின்ற காங்கிரஸ்-திமுக கூட்டணி தோல்வி அடைந்தது.

அப்போது இந்திரா காந்தி இனி திமுக கூட்டணியால் பலன் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, அதிமுக கூட்டணிக்குத் தாவினார். 1984 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியோடு அதிமுக வெற்றி பெற்றது. (இந்திராவின் மரணத்திற்குப் பின்)

எம்ஜியாரின் மரணத்திற்குப் பின் மிகப் பெரிய நகைச்சுவைகள் அரங்கேறின. நெடுஞ்செழியன் எம்ஜியாரின் மனைவி ஜானகி அம்மாளோடு முதல்வர் பதவிக்குப் போட்டி போட்டு அது கிடைக்கவில்லை என்றவுடன் உடனே ஜெயலலிதாவின் பிரிவுக்குத் தாவினார். திருநாவுக்கரசு, KKSSR , பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் ஜெயலலிதாவின் பிரிவில் இருந்தனர். அப்போது சட்டசபையில் ஏகப்பட்ட கலாட்டாக்கள் நடை பெற்று மக்களை மகிழ்ச்சிக் களிப்பில் ஆழ்த்தின. KKSSR கொஞ்சம் MLA -களை ஒளித்து வைத்து விளையாட்டுக் காட்டினார். தாமரைக்கனி பண்ருட்டியாரை ஒரு கை பார்த்து உடம்பில் கட்டு போட வைத்தார். பின்பு ஆட்சி கலைக்கப்பட்டது.

1989 தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுகவின் ஜானகி மற்றும் ஜெயலலிதா பிரிவுகள் என்று நான்கு முனைப்போட்டி நடந்தது. அதிமுகவின் இரு பிரிவுகளும் சக்தி வாய்ந்த இரட்டை இலைச் சின்னத்திற்கு சண்டை போட்டு இரண்டு பேருக்குமே வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா நெடுஞ்செழியன், பண்ருட்டி, திருநாவுக்கரசு மற்றும் அரங்கநாயகத்தைக் கட்சியை விட்டு வெளியேற்றினார். அவர்களை "உதிர்ந்த முடிகள்" என்று கௌரவமாக அழைத்தார். அவர்கள் நால்வர் அணி என்ற பிரிவை ஆரம்பித்தனர். அந்த அணி திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளுக்கு நல்ல கருக்களைக் கொடுத்தது. நெடுஞ்செழியன் மயிலாப்பூர் தொகுதியில் நின்று SV சேகரை விடக் குறைவாக ஓட்டுக்கள் வாங்கியது இன்னும் சிறந்த அரசியல் நகைச்சுவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தப் பிளவில் பெரும் பயன் அடைந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் ஜானகி அணி ஜெயலலிதா அணியோடு இணைக்கப்பட்டது. ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்த காளிமுத்து, RM வீரப்பன் போன்றவர்கள் "காலத்தின் கட்டளை" என்று கூறிக்கொண்டு ஒன்று பட்ட அதிமுகவில் இணைந்தனர். இதில் காளிமுத்து இடைப்பட்ட காலத்தில் திமுகவில் இணைந்து தோல்வி அடைந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

இந்த நேரத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி இட்டதால்தான் தோற்க நேரிட்டது என்று காரணம் காட்டி வாழப்பாடி ராமமூர்த்தி மூப்பனாருக்கு எதிராகப் போர்க்கொடி தொடுத்து காங்கிரஸ் தலைவர் ஆகி அதிமுக கூட்டணி அமைத்தார்.

ஒன்றுபட்ட அதிமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து மக்கள் சபை தேர்தலில் போட்டி இட்டதில் திமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது. VP சிங் பிரதமர் ஆனதால் திமுக கொஞ்ச நாள் தப்பித்தது.

அதன் பின், எப்படியாவது சாகும் முன் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட சந்திரசேகர் காங்கிரஸ் உதவியுடன் பிரதமர் ஆனார். அப்போது ஜெயலலிதா காங்கிரஸ் உதவியுடன் விடுதலைப்புலிகள் பெயரைச் சொல்லி திமுக ஆட்சியைக் கலைக்கக் காரணமாக இருந்தார்.

பின்பு நடை பெற்ற 1991 சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் அதிமுக வரலாறு காணாத வெற்றி பெற்றது. இடைத் தேர்தலில் பிரசார வேனில் தொங்கிக்கொண்டு சென்ற அமைச்சர் SD சோமசுந்தரம் சரித்திரத்தில் இடம் பிடித்து, சில திரைப்படக் காட்சிகளுக்கு மூலமாக அமைந்தார்.

இதன் இடையில் திமுகவில் வைகோவை ஒதுக்க ஆரம்பித்து அதன் உச்சக் கட்டமாக கருணாநிதி வைகோவால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இதை அடுத்து தன்மானச் சிங்கம் வைகோ திமுகவை விட்டு வெளியேறி மதிமுக-வைத் தொடங்கினார். கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு மாற்றாகத் தன்னை அறிவித்தார்.

அளவுக்கதிகமான பெரும்பான்மையில் இருந்த அதிமுக, ஊழலில் அதிருப்தியைப் பெற்றது. சசிகலாவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்திலும், 300 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வளர்ப்பு மகன் திருமணத்திலும் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். தனக்குப் பிடிக்காதவர்கள் மேலே ஜெயலலிதா கடும் ஆத்திரம் அடைந்தார். TN சேஷனை விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு அதிமுக தொண்டர்களை விட்டுத் தாக்கினார். சுப்ரமணிய சாமியைக் கைது செய்ய முயன்ற தோல்வியில் ஆத்திரம் அடைந்து சேரிப் பெண்களை ஆர்ப்பாட்டம் செய்ய வைத்து நீதி மன்ற வளாகத்தில் தமிழக கௌரவத்தை நடுத் தெருவில் நிறுத்தினார். தனக்குத் தொல்லையாகக் கருதிய IAS அதிகாரி சந்திர லேகாவின் முகத்தில் ரௌடிகள் மூலம் அமிலம் வீசினார் என்பது பரவலான ஊகம். இதன் உச்சக்கட்டமாகத் தனக்கும் பெரும் தலைவலியாக இருந்த தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகக் குற்றம் சாட்டி நாட்டையே அதிர வைத்தார். மக்களும், மற்ற அரசியல் வல்லுனர்களும் இத நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்கொண்டதால் பெரிய அளவுக்கு அரசியல் சாசனப் பிரச்சனைகள் வரவில்லை. எதிர்க் கட்சியாக இருந்த காங்கிரசை ஜெயலலிதா ஒரு பொருட்டாக மதிக்காமல் அதன் தலைவர்களை உதாசீனப் படுத்தினார்.

1996 தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, காங்கிரஸ் மூப்பனார், சிதம்பரம் போன்ற தலைவர்கள் தலைவர்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டி இட வேண்டும் என்று மேலிடத்தை வலியுறுத்தினர். அது வரை தலையை ஆட்டி வந்த மேலிடம்(!), அதிமுகவுடன் கூட்டணி என்று திடீரென்று முடிவு செய்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த குமரி அனந்தன் கடைசி நிமிடம் வரை மூப்பனாரோடு இருந்து விட்டு, திடீரென்று டெல்லி சென்று தலைமை(?)க்குக் கட்டுப் படுவதாக அறிக்கை விட்டார். (காங்கிரசை எதிர்த்துக் கட்சியை விட்டு விலகி இந்திரா காந்தி படத்தை எரித்து விட்டு கா.கா.தே.கா என்ற கட்சியைத் தொடங்கிப் பின்பு அதைக் கலைத்து விட்டு காங்கிரசிலேயே மீண்டும் சேர்ந்தவர் குமரியார் என்பது குறிப்பிடத் தக்கது.) தொண்டர்கள் ஆத்திரம் அடைந்து குமரி அனந்தன் மற்றும் நரசம்மராவின் படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கொதித்தெழுந்த மூப்பனார் த.மா.கா கட்சியைத் தொடங்கினார். எழுத்தாளர் சோ-வின் முயற்சியோடு த.மா.கா திமுக-வோடு கூட்டணி சேர்ந்தது. பாட்ஷா படப் பரபரப்பிற்குப் பின் அரசியலில் குதிப்பார்(?) என்று எதிர்பார்க்கப் பட்ட ரஜினியும் இதற்க்கு ஆதரவு தெரிவித்து ஒரு சலசலப்பு உண்டாக்கினார். தேர்தல் பிரசாரத்தில் ஆளே இல்லாத பொதுக் கூட்டங்களில் குமரி அனந்தன் பேசிக் கொண்டிருந்த புகைப்படச் செய்திகள், மக்களை மகிழ வைத்தன.

இடைப்பட்ட சூழ்நிலையில் ஜாதியை முன்னிலை வைத்து டாக்டர் ராமதாஸ் பாமக கட்சியை வளர்த்து 70 சீட்டு கேட்டு திமுகவிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார். தமாகா வந்தவுடன் திமுக ராமதாசைக் கை கழுவியது. வைகோவும் ராமதாசும் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தியதில் கூட்டணிக்கு யார் தலைவர்(?) என்பதில் உடன்பாடு வராத காரணத்தால் அந்தக் கூட்டணி முறிந்தது.

காங்கிரஸ்-அதிமுக கூட்டணி வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. தனித்துப் போட்டி இட்ட மதிமுக ஒரு இடம் கூட வெல்லவில்லை. பாமக நான்கு இடங்களில் வென்று, ஜாதி ஓட்டிற்கு மதிப்பு உள்ளதை வெளிப்படுத்தியது.

பாபர் மசூதி இடிக்கப்பட சூழ்நிலையில் BJP மதச் சார்புள்ள கட்சியாகப் பறை சாற்றப்பட்டு எல்லோருடைய எண்ணமும் யார் வந்தாலும் பரவாயில்லை, பிஜேபி வரக்கூடாது என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்தன. 13 நாள் பிஜேபி ஆட்சிக்குப் பிறகு மக்களவையில் தேவ கௌடா பிரதமராகிப் பத்திரிகைக்காரர்களுக்கு எப்போதும் சுவாரஸ்யமான செய்திகளைத் தந்தார். காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியை தினமும் நமஸ்காரம் செய்து காலத்தைக் கழித்தார். கடுமையான உழைப்பின் காரணம், இவருக்குப் பொதுக்கூட்டங்களில் மாத்திரமே தூங்க வாய்ப்பு கிடைத்தது.

திமுக அரசு ஜெயலலிதா உட்பட அனைத்து அதிமுக அமைச்சகள் மேலும் ஊழல் வழக்குகள் தொடர்வதிலேயே கவனம் செலுத்தியது. ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் தேவகௌடா தொக்கப்பட்டு IK குஜ்ரால் கொஞ்ச நாள் பிரதமராக இருந்தார். பின்பு ஆட்சி கவிழ்ந்தது. 1998 -ல் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், ஜெயலலிதா ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். அது வரை தமிழ் நாட்டில் தீண்டத் தகாத கட்சியாக இருந்த பிஜேபி-யுடன் கூட்டணி அமைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்தார். கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை வசை பாடி வந்த வைகோ இந்த முற்போக்குக் கூட்டணியில் சேர்ந்தார். ரஜினி மீண்டும் திமுக/தமாகா கூட்டணியை ஆதரித்தார். ஆனால் தேர்தலில் அதிமுக கூட்டணி முன்னிலை பெற்று பிஜேபி ஆட்சி அமைத்தது. இந்த முறை பிஜேபி 13 மாதங்கள் தாக்குப் பிடித்தது. ஜெயலலிதாவின் பரம விரோதியாக இருந்த சுப்ரமணிய சாமி சோனியா காந்தியோடு ஜெயலலிதாவை அழைத்து ஒரு தேநீர் விருந்து வைத்து நாரதர் கலகம் உருவாக்கினார். அதில் கடுப்பாய திமுக, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் அந்தர் பல்டி அடித்து, எங்களது முதல் எதிரி ஊழல்தான் என்று கூறி, பிஜேபி-யை ஆதரித்தது. அப்படியும் தீர்மானம் தோற்று பிஜேபி ஆட்சியை இழந்தது.

பின்னர் வந்த 1999 மக்களவைத் தேர்தலில், வைகோ காலத்தின் கட்டாயத்தில் திமுகவோடு கூட்டணி சேர்ந்தார். ராமதாசும் திமுகவோடு இருந்தார். பிஜேபி-யின் வரவால் தமாக திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அவர்கள் தனியாக நின்று பூஜ்யம் பெற்றார்கள். திமுக கூட்டணி முன்னிலை பெற்றது. பிஜேபி கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது.

இதன் பிறகு நடந்த 2001 மாநில தேர்தலில் பல திருப்பங்கள். கூட்டணி மாற வேண்டும் என்றால் தலைவர்கள் பொதுவாகத் தயங்குவார்கள். பத்திரிகையாளர்களைச் சந்திக்க பயப்படுவார்கள். டாக்டர் ராமதாஸ் இதில் ஒரு புதிய சரித்திரம் படைத்தார். கூட்டணி மாறக் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் இருப்பதில் இவர் வல்லவர். கூட்டணி மாற இவருக்குத் தேவை பல்லிளுப்பும் ஒரு பூங்கொத்தும் மட்டுமே. திமுக கூட்டணியில் மத்திய ஆட்சியில் அமைச்சர்கள் பதவியில் இருந்து கொண்டே இவர் ஜெயலலிதாவைச் சந்தித்து மலர்க்கொத்தைக் கொடுத்துக் கூட்டணி அமைத்தார். என் குடும்பத்தில் யாரவது பதவி கேட்டால் என்னைச் செருப்பால் அடியுங்கள் என்று முழங்கிய இவர், கூச்சமே இல்லாமல் தன் மகனுக்கு மருத்துவத் துறையைக் கேட்டு வாங்கி அழகு பார்த்தார்.

1996 -ல் அதிமுக கூட்டணியை எதிர்த்து மாத்திரமே ஆரம்பிக்கப்பட தமாகா, இந்த முறை அதிமுக கூட்டணியில் சேர்ந்தது. இதில் மூப்பனார் கடும் அதிருப்தியைச் சம்பாதித்தார். ப.சிதம்பரம் இந்த முடிவை எதிர்த்துத் தனிக் கட்சி ஆரம்பித்தார்.

வைகோ திமுக கூட்டணியில் சேர்ந்த போது கடும் எதிர்ப்பைச் சந்தித்தார். சமாளித்து முன்பு செல்லும்போது, கூட்டணிப் பங்கீடில் உடன்பாடு இல்லாத சூழ்நிலையில் தனியாக நின்றார். திமுக ஸ்டாலினின் பிடிவாதத்தில் கூட்டணிகளின் அதிருப்தியைப் பெற்றது. தேர்தலில் படு தோல்வி அடைந்தது. வைகோ பல தொகுதிகளில் ஓட்டைப் பிரித்துத் திமுகவின் தோல்விக்கு வழி வகுத்தார். ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, பழி வாங்கும் விதமாக கருணாநிதி, ஸ்டாலின், முரசொலி மாறன் ஆகியோரைக் கைது செய்து புளகாங்கிதம் அடைந்தார். இதனிடையே மூப்பனாரின் மறைவிற்குப் பின் தமாகா காங்கிரசோடு இணைக்கப்பட்டது.

அதன் பின்பு நடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திமுக மீண்டும் காங்கிரசோடு கூட்டணி அமைத்தது. அதிமுக பிஜேபி-க்குத் தாவியது. (இதன் பின்னணி அதிகம் தெரியவில்லை, அயோத்யா பிரச்சினை என்று google கூறுகிறது). இதில் ரஜினிகாந்த் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ரஜினி இதில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதும் அல்லாது, அணி அவர் சொல்லுக்கு மதிப்பில்லை என்ற சூழ்நிலை உருவானது. இந்த சமயம் டாக்டர் ராமதாஸ் மீண்டும் திமுக கூட்டணிக்குத் தாவி ஐந்து தொகுதிகள் வென்றார். வைகோவும் திமுகவோடு சமரசம் ஆகி நான்கு தொகுதிகள் வென்றார். அப்போது அவர் பொடா சட்டத்தில் சிறையில் இருந்தார். கருணாநிதி அவரை வெளியே கொண்டு வர முயற்சிகள் செய்தார்(?).

இதன் பின்பு 2006 சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடில் அதிருப்தி அடைந்த வைகோ மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்து கேலிக்கு ஆளானது மட்டும் அல்லது, அவரது எதிர் காலத்தையே கேள்விக்குறி ஆக்கினார். கொஞ்சம் நகைச்சுவை தர வேண்டி , திமுகவில் வெகு நாள் இருந்த சரத்குமாரும் விலகி அதிமுகவில் சேர்ந்தார். இருவரும் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தனர்.

திமுக தனிப் பெரும்பான்மை இல்லாமலேயே ஆட்சி அமைத்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தர மறுத்து விட்டது. அதே சமயம் மத்திய அரசில் பங்கு பெறத் தயங்கவில்லை.

இந்த தருணத்தில் திமுகவில் குடும்பச் சண்டைகளில் தயாநிதி மாறன் தொலை தொடர்புத் துறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்பு வந்த ராஜா மூலம் நடந்த கூத்துக்கள் எல்லாருக்கும் தெரியும்.

பின்பு 2009 -ல் நடந்த மக்களவைத் தேர்தலில் ராமதாஸ் மீண்டும் அதிமுகவிற்குத் தாவினார். வைகோ அதிமுகவில் தொடர்ந்தார். திமுக கூட்டணி தோல்வி அடையும் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனாலும் வெற்றி பெற்றது. பண பலம் என்ற பரவலான குற்றச்சாட்டு இருந்தது. பாமக எல்லாத் தொகுதிகளிலும் தோற்று பெரும்பாலான மக்களின் வரவேற்பைப் பெற்றது.

பின்பு சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ராமதாஸ் மீண்டும் திமுக அணிக்கு ஓடி வந்தார். 2006 -ல் ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு எதிராகப் புரட்சி தொடங்கிய விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தானும் அதே குட்டையில் ஊறிய மட்டை என்பதைத் தெளிவு படுத்தினார். ஜெயலலிதா ஓரிலக்க எண்ணிக்கையில் இடம் தருவதாகக் கூறி வைகோவைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாத குறையாக வெளியற்றி அவர் தேர்தலில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்யும் அளவுக்கு விரக்தியில் தள்ளினார். காங்கிரஸ் 2G ஊழலை வைத்து திமுகவை மிரட்டி 60 சீட்டுகள் வாங்கியது.

திமுக குடும்ப அரசியல் மற்றும் 2G ஊழலின் பிரதிபலிப்பில் படு தோல்வியைச் சந்தித்தது. ராமதாசுக்கு மீண்டும் பட்டை நாமம். காங்கிரஸ் சட்டியில் இல்லாமலேயே அகப்பையில் எடுக்க முயன்று உண்மை நிலையை இப்போது உணர்ந்திருக்கலாம்.

முடிவு

அரசியலில் சந்தர்ப்ப வாதம் என்பது இன்றி அமையாதது. (இதை இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது வைகோ. இவர் மழை பெய்யும் போது உப்பு விற்கக் கிளம்புவார். காற்றடிக்கும்போது உமி விற்கக் கிளம்புவார்)