Thursday, June 16, 2011
தெளிவு 1 - பதில் ( பூணூல் என்றால் என்ன )
தங்களின் பொறுமைக்கு தலை வணங்குகிறோம்.
பூணூல் என்றால் என்ன என்று கேள்விக்கு விடை அளிக்கும் தருணம்.
இதற்கு நிறைய விளக்கங்கள் உண்டு.
பூ + நூல் என்றும்
பூண் + நூல் என்றும் விளக்கங்களை படித்து உள்ளேன்.
நம் சமயத்தில் நூலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்கள்.
நூல் ஒரு தகவல் சம்பந்தமானது. நாம் சிறு வயதில் தீப்பெட்டியை நூலில் கட்டி தொலை பேசியாய் விளையாண்டது போல நூலை
எல்லா சடங்குகளிலும் உபயோக படுத்தியுள்ளனர்.
கோயில் விழாக்களில் யாகம் செய்யும் இடத்தில் பார்த்தால் கும்பத்தில் / கலசத்தில் நூல் சுற்றி இருக்கும்.
யாக சாலையின் அக்னி குண்டத்திற்கும், தெய்வ சிலையின் மைய பகுதிக்கும் இணைத்து ஒரு நூலையும் பார்த்து இருப்பீர்கள்.
யாகம் செய்பவர்களின் கைகளில் நூல் காப்பு கட்டப் பட்டிருக்கும்.
நூல் ஆனது தகவல் மற்றும் சக்தி பரிமாற்றத்திற்கும் துணை ஆக உள்ளது என்பது இதன் அபிப்ராயம்.
இது உண்மையா அல்லது பொய்யா என்று மற்றொரு தெளிவில் கண்டு கொள்வோம்.
திருமணத்தில் தாலி கூட நூலினால் ஆனது தான்.
இடுப்பில் அணியும் அரை ஞான கயிறும் நூலினால் ஆனது தான்.
இதனால் என்னவோ நாம் படிக்கும் செய்தி தொகுப்பு புத்தகங்களை "நூல்" என்றே கூறுகிறோம் என தோன்றுகிறது.
நூலை போல தாமரையும் தெய்வ சம்பந்த நிகழ்சிகளில் காணலாம். இது இலக்குமியின் அங்கமாகவும் கருத படுகிறது.
தாமரைத் தண்டின் நார் தான் நூலாக உபயோகத்தில் இருந்தது.
விளக்கில் திரியாகவும் பயன் படுத்தி இருந்தனர்.
எனவே பூ + நூல் என்பது பொருத்தம் என சொல்லி இருந்தனர்.
மற்றொருவரோ பூண் + நூல் = பூணும் நூல் , அதாவது அணியக் கூடிய நூல் என்று சொல்லி இருந்தார்.
அதற்கு பெரிய விளக்கங்கள் எதுவும் கொடுக்க படவில்லை.
வாரியார் அவர்களோ மிக வித்தியாசமாக சொல்லி இருந்தார். இது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எனவே இதனை நான் பொருத்தமான
பதிலாக கொடுக்கிறேன். மற்றவர்களுக்கு மறுக்கும் உரிமை உள்ளது.
புரி + நூல் என்பது தான் திரிந்து பூணூல் என்று மாறி உள்ளது.
புரி என்றால் முடிச்சு மற்றும் விளக்கம் என்றும் அர்த்தம். முடி போட்ட நூல் "புரி + நூல் "
இதனை குரு குலத்தில் படிப்பவர் மட்டுமே அணிந்து வந்தனர். படித்தவரை அடையாளம் காட்டவே இது பயன் படுத்தப் பட்டது.
அந்த காலத்தில் வேத வியாசம் பண்ணுபவர்கள் - ஆட்சி புரிபவர்கள் - மேலை நாடு சென்று தொழில் புரிபவர்கள் மட்டுமே
படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். எனவே
அந்தணர்கள் - பாடம் சொல்லி தர விரும்பியவர்கள் ,
க்ஷத்ரியர்கள் - அரசாள விரும்பியவர்கள் ,
வைசியர்கள் - வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்
மட்டுமே குருகுலம் சென்று படித்தனர்.
அவர்கள் மட்டுமே இதனை அணிந்தனர்.
முதலில் எல்லோரும் ஒரு புரி மட்டுமே அணிந்தனர்.
காலப் போக்கில் பிரமச்சாரி - ஒரு புரியும்,
குடுமபஸ்தான் - இரு புரியும்,
சன்யாசம் பெற்றவர் - முப்புரியும் அணிந்தனர்.
இது நான் கேட்ட அறிவு. உங்களின் பகிர்வை தெரிய படுத்துங்கள்.
வேதாந்தி
Tuesday, June 14, 2011
பித்தனின் கிறுக்கல்கள் – 43
தமிழக ஆட்சி மாற்றம்.
எனது முந்தைய கிறுக்களுக்கு வரலாறு காணாத கூட்டமாக 100 பேர் அலைமோதி படித்ததற்கும் பின்னூட்டமிட்ட இருவருக்கும் மிக்க நன்றி. பின்னூட்டமிட்ட சண்டியர் ஜெயலலிதாவின் ஜெகதளப் ப்ராதபங்களைப் பற்றியும் அவருடைய சமீபத்திய இலவசங்களைப் பற்றியும் எழுதச் சொன்னார். எனவே எமது சில கருத்துக்கள்.......
இந்து மதச் சின்னங்கள் ....
நடுத்தெரு அநாகரிகம் ....
..................
முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்
Thursday, June 09, 2011
அலைஸின் இறுதி ஆசைகள்
இங்கிலாந்தில் வாழும் பதினைந்தே வயதான பிஞ்சு அலைஸ் பைன் (Alice Pyne) இன்று டிவிட்டரைக் கலக்கிக் கொண்டிருக்கிறாள். புற்றுநோயுடன் கடந்த நான்காண்டுகளாக போராடிக் கொண்டிருக்கும் இச்சிறுமி தன் கடைசி ஆசைகளைத் தன் வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறாள். அதில் ஒன்று டிவிட்டரில் ட்ரென்ட் எனப்படும் அதிகமாக பேசப்படும் தலைப்பாக இருக்க வேண்டுமென்பது. டிவிட்டருலகம் அதற்கு முக்கியம் கொடுத்து அப்படியே சாதித்துக் கொடுத்திருக்கிறது. நீங்களே இங்கே பார்க்கலாம்.
அவளுடைய ஆசைகளில் சில: சுறாக்களுடன் நீந்துவது, அவளுடைய நாயை ஒரு போட்டியில் பங்கேற்க வைப்பது என்று பட்டியல் போகிறது. அவளுடைய ஒரு ஆசையை நாம் அனைவரும் மனது வைத்தால் நிறைவேற்றலாம். அனைவரும் போன் மாரோபு தானம் செய்ய பதிந்து கொள்ள வேண்டும் என்பதே அது.
அலைஸ் குறித்து வரும் செய்திகளை இங்கே பார்க்கலாம். அந்தச் சுட்டியில் டிவிட்டரில் எவ்வளவு பேர் எழுதுகிறார்கள் என்றும் பார்க்கலாம்.
இதை டிவிட் செய்யும் அனைவரும் அதோடு நிறுத்திவிடாமல் தாங்களும் போன்மாரோ தானம் செய்ய பதிந்து கொண்டு மற்றவர்களையும் பதிய வைக்க வேண்டும்.
Tuesday, June 07, 2011
பூணல் அல்லது பூணூல் என்றால் என்ன? ( தெளிவு 1 )
கேள்வி ஞானம் பற்றி கேள்விப் பட்டு இருப்பீர்கள். நீங்கள் கேள்வி கேட்டதுண்டா?
நிறைய கேளுங்கள். உங்களுக்குள்ளே கேளுங்கள், பிறரிடம் கேளுங்கள். அப்பொழுது தான் ஞானம் பிறக்கும்.
இது அல்ல கேள்வி ஞானம். ஒரு கேள்விக்கு ஆயிரம் பதில் இருக்கும். ஆனால் எல்லாம் சரியானதாக இருக்காது.
பதில் சொல்லியவருக்கோ அது சரியானதாக இருக்கும்.
இங்கே தான் குழப்பம். ஒருவருக்கு சரியாக தோன்றுவது, மற்றவருக்கு சரியாக படுவது இல்லை.
அட எதைத் தான் சரி என்று எடுத்துக் கொள்வது?
அதை நம் அறிஞர்களிடம் விட்டு விடுவோம்.
நாம் பூணல் அணிகிறோம். எதற்கு அணிகிறோம், அது என்ன என்றாவது கேட்டதுண்டா?
உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள், நான் 10 நாட்கள் கழித்து சரியான் விடை தருகிறேன்.
வேதாந்தி
Sunday, May 29, 2011
பித்தனின் கிறுக்கல்கள் – 42
திஹார் ஜெயிலில் கனிமொழி அடைக்கப் பட்டாரோ இல்லையோ, எமக்கு சில நண்பர்கள் நேரிலும், தொலைப் பேசியிலும் “என்ன இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், இதைப் பற்றி கொஞ்சம் விலாவரியாக எழுதக்கூடாதா” என்று கேட்டு நான் என்னவோ சட்ட வல்லுனர்போலவும், நாம் சொல்வதை நம் வீட்டிலேயே யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதும் இல்லை என்ற உண்மை கிஞ்சித்தும் தெரியாமல், நாம் சொல்வது சரி என்று பாவம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை ஏமாற்றாமல் இதோ நம் பக்க கருத்து.
..................
முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்
Monday, May 23, 2011
பித்தனின் கிறுக்கல்கள் – 41
சூரிய அஸ்தமனம்
சமீபத்தில் நமது வலைப்பூவில் வந்த ஒரு பதிவில் சூரிய அஸ்தமனம் என்று ஒரு படம் வெளியிட்டிருந்தார்கள். அது தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியிருக்கிறது. தி.மு.க கூட்டணியின் தோல்வி என்பது சமீபத்தில் ஜப்பானைத் தாக்கிய சுனாமியாக வந்து தாக்கி கதறக் கதற அடித்திருக்கிறது.
..................
முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்
Friday, May 20, 2011
நடுத்தெரு அநாகரிகம்
எங்கள் அருகில் ஒரு இளைஞனும் அவனுடைய மனைவியும் ஒரு பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்கள். அங்கும் இங்குமாக பலர் குடும்பத்துடன் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் பக்கத்தில் இருந்த தம்பதியினரின் குழந்தை பக்கத்தில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது.
அந்த குழந்தை பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கல்லின் மேல் ஏறிவிட்டது. யாரும் கவனிக்காத போது அந்த பெண்குழந்தை கீழே விழுந்து விட்டது. குழந்தையின் அழுகைக்குரலைக் கேட்டு நான் திரும்பிபார்த்தேன். ஓடிப்போய் குழந்தையை தூக்க முயன்றேன். அதற்குள்ளாக அந்த பெண் ஓடி குழந்தையைத் தூக்கிக் கொண்டுவிட்டாள்.
காயம் எதுவும் இல்லை. இரண்டடி உயரத்திலிருந்து சறுக்கியதால் குழந்தை பயத்தில் அழுதது. முகத்திலும் முழங்கையிலும் லேசான சிராய்ப்பு. அவ்வளவுதான். அந்த இளைஞன், சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தவன், குழந்தையின் அழுகைக் குரலைக் கேட்டு ஓடிவந்தான். என்ன, என்ன ஆனது? என்று கேட்டான்.
ஒன்னும் ஆகிவிடவில்லை விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கீழே விழுந்துவிட்டது என்றேன் நான். அந்த பெண் குழந்தையை சமாதானம் செய்தவாறு, ஒன்றுமில்லை சரியாகிவிட்டது என்று தன் கணவனுக்கு பதில் கூறினாள். அவன் குழந்தையை அவளிடமிருந்து பலவந்தமாக பிடுங்கிக் கொண்டு அந்த பெண் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான்.
நானும் என் மனைவியும் பக்கத்தில் இருந்த மற்ற பயணிகளும் திகைத்து போனோம். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு அமைதியாக நின்றார்கள். சிலர் அந்த இடத்தை விட்டு சற்று நகர்ந்து போனார்கள். நான் சமாதானமாக எதாவது சொல்லலாம் என்று வாயைத் திறந்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ மௌனமாகிவிட்டேன். பக்கத்தில் நின்றவர்களும் ஏதும் பேசவில்லை. ஆனால் அங்கே நின்ற அத்தனைபேரும் அவனை ஒரு அருவருப்போடு பார்ப்பதை என்னால் உணர முடிந்தது.
பொது இடத்தில் பலர் முன்னிலையில் அடி வாங்கிய அந்த பெண் அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் நின்றாள். குனிந்தபடியே அழுது கொண்டிருந்தாள். அந்த இளைஞனுக்கு முப்பது வயதிருக்கும். நாகரீகமான உடை உடுத்தியிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். அந்த பெண்ணுக்கு இருபத்தியைந்து வயது இருக்கலாம். நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் என்று சொல்லத் தோன்றியது.
இந்த சம்பவத்தைப் பார்த்ததும் நான் மன வேதனைப் பட்டேன். ஒரு பெண்ணை, கட்டிய மனைவியை பலர் முன்னிலையில் பொதுவிடத்தில் அடிக்கும் காட்டுமிராண்டித் தனத்தை பார்த்தும் என்னால் எதுவும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம். பிளாட்பாரத்தில் இருந்த மற்ற பயணிகளும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இளைஞன் எதையும் பொருட்படுத்தாமல் அந்த குழந்தையை தோளில் சுமந்து கொண்டு சற்று விலகிப் போய் நின்றான்.
சற்று நேரத்தில் நாங்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. நானும் என் மனைவியும் ரயிலில் ஏறி எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்தோம். துரதிஷ்ட வசமாக அந்த இளைஞனும் அவன் மனைவியும் எங்களுடைய இருக்கைக்கு நேர் எதிரில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார்கள்.
அந்த பெண் இன்னும் குனிந்தபடியே அழுதுகொண்டிருந்தால். குழந்தை அமைதியாகிவிட்டது. முகத்தில் லேசாக சிராய்ப்பு இருந்தாற்போல் தோன்றியது. அவ்வளவுதான். பலத்த அடி எதுவுமில்லை. எதாவது ஒரு வகையில் அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் "குழந்தைக்கு எதாவது முதலுதவி தேவைப்பட்டால் சொல்லு அம்மா, தாம்பரம் ஸ்டேஷனுக்கு போன்செய்து விட்டால் ரெடியாக இருப்பார்கள்", என்று அந்த பெண்ணிடம் கூறினேன்.
உண்மையில் முதலுதவி எதுவும் தேவையில்லைதான். குழந்தை இப்பொழுது அவளுடைய மடியில் கண் அயரத்தொடங்கிவிடது. அதெல்லாம் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பதுபோல் முகத்தை திருப்பிக் கொண்டாள். அந்த இளைஞன் இப்பொழுது மேலே ஏறி படுத்துக் கொண்டுவிட்டான். அவன் என்னிடம் வேறு எதுவும் பேசவில்லை. வேறு யாரிடமும் எதுவும் பேசவில்லை.
என் எண்ணம் எல்லாம் திரும்பத்திரும்ப அந்த இளைஞனுடைய ஆண் ஆதிக்க மனப்பான்மையைப் பற்றியும் கட்டிய மனைவியை பலர் எதிரில் பொதுவிடத்தில் அடிக்கும் அவனுடைய கூச்சமில்லாத அநாகரிகத்தையும் பற்றியே சுற்றிச்சுற்றி வந்தது. இவன் தன் மனைவியிடம் வீட்டில் எப்படி நடந்து கொள்வான் என்பதைப்பற்றியும் கற்பனை செய்யத்தொடங்கினேன். பொதுவிடங்களில் நடுத்தெருவில் பல வன்முறைகளையும் அடிதடிகளையும் நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. உண்மையில் அன்றைய சம்பவம் என் மனத்தை வெகுவாக பாதித்தது தூங்குவதற்கு முன் அந்த சம்பவத்தைப் பற்றியே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தேன்.
சில நாட்களுக்குப் பிறகு என்னுடைய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஏதோஒரு விஷயம் தொடர்பாக பேசும்போது ரயில் பயணத்தில் நடந்த அந்த சம்பவத்தைப் பற்றி கூறி வருத்தப்பட்டேன்.
இதை கேட்டுவிட்டு என் நண்பர் இன்னொரு சம்பவத்தை, தானே நேரில் பார்த்த ஒரு சம்பவத்தைப் பற்றி என்னிடம் கூறினார்.
அந்த சம்பவம் ஏறக்குறைய இது போன்றதுதான். சற்று வேடிக்கையானதும் கூட.
நண்பர் நகரப் பேருந்து ஒன்றில் பயணம் செய்தி கொண்டிருக்கிறார். பேருந்தில் நல்ல கூட்டம் அவருக்கு சற்று முன்னால் ஒரு ஆணும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த ஆணுக்கு நடுத்தர வயது அந்த பெண்ணும் நாற்பது வயதை தாண்டியவள் என்று சொல்லும் அளவுக்கு இருந்தாள்.
நல்ல கூட்டம் காரணமாக பேருந்து மெதுவாக ஊர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் ஆண்கள் வரிசையில் (தமிழ்நாட்டில் மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனி வரிசையில் உட்கார இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். ) இருந்த இரன்டு சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து போகிறார். இன்னொரு சீட்டில் ஒரு பள்ளி மாணவன் புத்தகப் பையுடன் உட்கார்ந்திருக்கிறான் அந்த மாணவனுக்கு 15 வயதிருக்கும். காலியாக இருந்த ஒரு சீட்டில் உட்கார நின்று கொண்டிருந்த ஒருவர் நகர்கிறார்.
அதற்கு முன்பாகவே நின்று கொண்டிருந்த அந்த பெண் அந்த சீட்டில் உட்கார்ந்து விடுகிறாள்.
அவள் சீட்டில் உட்கார்ந்த அடுத்த கணமே அவள் முதுகில் பளார் என்று ஒரு அடி விழுகிறது. அடித்தவர் வேறு யாருமில்லை. அந்த பெண்ணின் பின்னால் நின்ற அவளுடைய கணவர்தான். அடித்ததோடு நிற்கவில்லை. ஆம்பிளை பக்கத்திலே உட்கார உனக்கு சீட் கேட்குதாடி? என்று உரத்த குரலில் சத்தம் போட்டான் அவன். அந்த பெண் அலறி அடித்தபடி எழுந்து விட்டாள் பக்கத்தில் ஏற்கனவே உட்கார்ந்திருந்த அந்த மாணவனும் அதிர்ச்சியிலும் பயத்திலும் எழுந்துவிட்டான்.
மேலும் அவளை அடிக்க அவள் கணவன் வேகமாக நெருங்கினான். அவள் தலையை கவிழ்த்தபடி நின்று கொண்டிருந்தாள் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த தன்மான வீரனால் அவ்வளவு சுலபமாக கையை அசைக்க முடியவில்லை. மற்றவர்கள் மேலும் அவருடைய கை பட்டதால் அவர்கள் சத்தம் போடத்தொடங்கினார்கள்.
பக்கத்திலிருந்த ஒருவர் அவருடைய ஓங்கிய கையைப் பிடித்துக் கொண்டு, "உங்கள் சண்டையில் பேருந்தில் இருப்பவர்களை எல்லாம் அடிக்க வேண்டாம் அடிப்பதாக இருந்தால் வீட்டில் போய் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். இருவருக்கும் இடையில் வார்த்தை வளர்ந்தது. கண்டக்டர் விசிலை ஊதி பேருந்தை நிறுத்திவிட்டார்.
அதிர்ச்சியில் உறைந்து போன அந்த மாணவன் மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடத்துக்கு போய்விட்டான். ஒரு பள்ளி மாணவன் பக்கத்தில் உட்கார்ந்தால் நாற்பது வயதுப் பெண்ணுடைய கற்பு களங்கப் பட்டுப் போகும் என்று ஒரு ஆண் நினைக்கும் அவலத்தை எப்படி எடுத்துக்கொள்வது/ ? அதற்காக பொதுவிடத்தில், நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் மனைவியை அடிக்கிறான்.
Possessive என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் உடனடியாக எனக்கு நினைவுக்கு வரவில்லை. இதுபோன்று, பெண்களை பொதுவிடத்தில் இழிவாக நடத்தும் ஆணாதிக்கச் செயல்களை தமிழ்நாட்டில் அடிக்கடி பார்க்கலாம். ஒரு சிறுவன் அருகில் உட்கார்ந்த பெண்ணுடைய கற்பு பங்கப்பட்டு விடும் என்று எண்ணும் ஆண்களுடைய மனோபாவத்தை கூர்ந்து நோக்கினால் அவனுடைய வக்கிர உணர்வுகளை நன்றாக புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்கொண்ட பெண்கள் கதியை எண்ணிப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கையை தொலைத்தவர்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இப்பொழுது அந்த சிறுவன் காலி செய்த இடத்தில் அந்த நபர் போய் உட்கார்ந்துகொண்டான். இன்னும் ஏன் நிக்கிறே உட்காருடி என்று சத்தம் போட்டான். அந்த பெண் தலையை கவிழ்ந்தபடியே பழையபடியே சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.
பக்கத்தில் இருந்த ஒரு பயணி "உட்கார இடம் பிடிக்க இதுவும் ஒரு தந்திரமோ ' என்று கேட்க எல்லோரும் சிரித்தார்கள்.
பேருந்து இப்பொழுது புறப்பட்டது.
Friday, May 13, 2011
பித்தனின் கிறுக்கல்கள் – 40
தமிழகத்தில் தேர்தல்
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கிறது என்று நேற்றே இந்தப் பதிவை வெளியிட முயற்சித்தேன், சோதனையாக (யாருக்கு?) blogger.com வேலை செய்யாமல் கழுத்தறுக்க, தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு வெளியிடுகிறேன். . இந்தப் பதிவு வெளிவரும் சமயம் முடிவுகள் வர ஆரம்பித்திருக்கும் அதற்கு முன்பாக பதிந்து விடவேண்டும் என்று எழுதியதால் பல கருத்துக்களை இதில் பதிவு செய்ய முடியவில்லை. அடுத்தப் பதிவில் அவற்றைப் பற்றி விலாவாரியாக கிறுக்கி விடுகிறேன்.
நான் அதிகம் எதிர்பார்த்த ஒரு தேர்தல் என்றால் தமிழகத்தின் இந்தத் தேர்தலைச் சொல்லலாம்.
..................
முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்
Monday, May 02, 2011
வீழ்ந்தான் ஓசாமா பின் லேடன்
பாகிஸ்தானில் இஸ்லாமாத் அருகே அமெரிக்காவின் திட்டமிட்ட தாக்குதலில் ஓசாமா பின் லேடனைக் கொன்றதாக அமெரிக்க அதிபர் ஓபாமா அறிவித்தார்.
பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சட்டத்துக்கடங்காத பழங்குடியினர்(lawless tribal area) வாழும் பகுதியில் ஓசாமா பதுங்கியிருப்பதாக பாகிஸ்தான் கூறி வந்தது. ஆனால் அவன் அப்படாபாத் என்ற ஊரில் ஒரு மாளிகையில் பதுங்கியிருந்திருக்கிறான். அந்த ஊர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாதுக்கு மிக அருகில் இருக்கிறது. பாகிஸ்தானின் ஒரு கூற்று உண்மை. சட்டத்து அடங்காத பழங்குடிகள் அடங்கிய நாடு.
சென்ற ஆகஸ்டு மாதம் கிடைத்த ஒரு தகவலில் இருந்து ஆரம்பித்த ஒரு திட்டம் வெற்றியில் முடிந்தது என்றார் அதிபர் ஓபாமா.
Saturday, April 09, 2011
இந்தியாவிலும் வெடித்தது புரட்சி
இந்தியாவிலும் வெடித்தது புரட்சி – ஊழலுக்கு எதிராக – ஒன்று திரள்வோம் வாரீர் !
இந்தியாவிலும் வெடித்தது புரட்சி - ஊழலுக்கு எதிராக - ஒன்று திரள்வோம் வாரீர் !
ஊழலுக்கு எதிராக சமுதாய நல ஆர்வலர்
அன்னா ஹஜாரே (விவரங்கள்
கீழே)எழுப்பிய தீ கொழுந்து விட்டு
எரிய ஆரம்பித்து விட்டது.
"முதல் சட்ட மசோதா பாராளுமன்றத்தில்
கொண்டு வரப்பட்டு 42 ஆண்டுகள் ஆகி விட்டன.
இது வரை 8 முறை மசோதாக்கள் கொண்டு
வந்தாகி விட்டது. ஆனால் ஒன்றும்
செயல்பாட்டிற்கு வரவில்லை. ஊழல் விஷம் போல்
பரவி விட்டது.எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்.
கடைசி எச்சரிக்கையாக இன்னும் ஒரு மாத
அவகாசம் கொடுக்கிறோம்.
ஊழலுக்கு எதிரான "ஜன் லோக் பால்"மசோதாவை
மத்திய அரசாங்கம் உடனடியாக இயற்றாவிட்டால் –
ஏப்ரல் 5ஆம் தேதி முதல்,நான் சாகும் வரை
உண்ணாவிரத நோன்பு மேற்கொள்வேன்"
- என்கிற இவரது அறிவிப்பை முதலில்
துச்சமாக நினைத்த மத்திய அரசு இன்று
திகைத்து நிற்கிறது.
சட்டென்று செயலில் இறங்கி விட்டார் மனிதர் !
டில்லியில் இந்தியா கேட் அருகே நேற்று முதல்
உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஜாரே
மூட்டிய தீ நாடெங்கும் பரபர வென்று பரவ
ஆரம்பித்து விட்டது.
காங்கிரஸ் அமைச்சர் வீரப்ப மொய்லி,
சட்டம் இயற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு.
வெளி மனிதர்கள் அந்த வேலையில்
ஈடுபடத் தேவை இல்லை என்று
கூறியதற்கு, அன்னா பொங்கி எழுந்து பதில்
கொடுத்தது பிரமாதம்.
"யாரய்யா வெளி மனிதர்?
இந்த நாட்டு மக்கள் தான் இந்த அரசாங்கத்தின்
எஜமானர்கள். நீ அவர்களின் ஊழியன்.
வேலைக்காரன். அவர்களாகப் பார்த்து தான்
உன்னை உள்ளே வைத்திருக்கிறார்கள்.
- வேலைக்காரர் எஜமானரைப்
பார்த்து வெளியே போ என்பதா ?
மக்கள் விரும்பும் வரை தான் நீ அங்கே
இருக்க முடியும். மக்கள் நினைத்தால்
உன்னை வெளி ஆள் ஆக்க எத்தனை
நேரம் பிடிக்கும் " என்கிறார்.
இந்தியாவெங்கும் மக்கள்,குறிப்பாக இளைஞர்களும்
நடு வயதினரும், முக்கிய நகரங்களில் -
அன்னாவுக்கும், அவர் எழுப்பிய கோரிக்கைக்கும்
ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில்
இறங்க ஆரம்பித்து விட்டனர்.
ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில்,
எமெர்ஜென்சியின் போது கிளம்பிய எழுச்சியை
இப்போது தான் மீண்டும் காண முடிகிறது.
மக்களின் பங்கெடுப்போடும்,
பேராதரவோடும், ஒரு மகத்தான போர் -
ஊழலுக்கு எதிரான போர் -துவங்கியுள்ளது.
நம் மக்களை ஒருங்கிணைக்கவும்,
லஞ்ச ஊழலைஅடியோடு ஒழித்துக் கட்டவும் -
ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்கவும் -
அருமையான ஒரு வாய்ப்பு உருவாகி வருகிறது.
உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஜாரே
பேசும் பேச்சுக்கள் மக்களிடையே எழுச்சியை
உண்டு பண்ணுகின்றன.அவரது உரை
இந்தியில் இருப்பதால் தமிழ் மக்களை இன்னும்
சென்றடையவில்லை !
தமிழ் தொலைக்காட்சிகளோ வடிவேலு, குஷ்பு
பேச்சுக்களை காட்டுவதிலேயே குறியாக
இருக்கின்றன.
யார் இந்த அன்னா ஹஜாரே ?-
72 வயது காந்தீயவாதி.
மராட்டியர். மஹாராஷ்டிராவில் அற்புதமான
பல சமுதாயப் பணிகளில் ஈடுபட்டவர்.
நாம் அனைவரும் இன்று பயன்பெற்றுக்
கொண்டிருக்கும் (RTI)
Right to Information
தகவல் பெறும் உரிமை -க்கான காரணகர்த்தா.
பத்மபூஷண் பதக்கம் பெற்ற பெருமைக்குரியவர்.
முக்கியமான விஷயம் -
இவர் ஒரு அரசியல்வாதி அல்ல.
எந்த கட்சியையும் சேர்ந்தவரும் அல்ல.
மரியாதைக்குரிய சமுதாய ஆர்வலர்.
"ஜன் லோக் பால்" என்றால் என்ன ?
(இந்தி பெயர் – பயமுறுத்துகின்றதோ ?)
ஊழலை நம் நாட்டிலிருந்து
வேரோடு அழிக்கவல்ல அருமையான ஒரு
மாதிரி சட்ட வடிவம் தான் "ஜன் லோக் பால்"
இதன் சில முக்கிய அம்சங்கள் -
சமுதாய அக்கறையுள்ள சில முக்கிய மனிதர்கள்
(கிரண் பேடி, சந்தோஷ் ஹெக்டே,
பிரசாந்த் பூஷன் போன்ற இன்னும் சிலர் )
சேர்ந்து கலந்து ஆலோசித்து தயாரித்துள்ள -
ஊழலுக்கு எதிரான -சட்ட முன்வடிவம் இது.
மாநிலங்களிலும்(லோக் ஆயுக்தா),
மத்தியிலும்(லோக்பால்) செயல்பட தனித்தனி
அமைப்புகள்.
லஞ்சம்,ஊழல், மற்றும் குற்றச்செயல்களில்
ஈடுபடும் அமைச்சர்கள், அரசியல்வாதிகள்,
நீதிபதிகள், உயர்அதிகாரிகள்,(போலீசார் உட்பட) –
ஆகியோர் மீது -
பொதுமக்கள் யார் வேண்டுமானாலும்
இந்த அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம்.
புகார் கிடைத்த ஒரு வருடத்திற்குள் இது குறித்த
சகல விவரங்களும் தனிபட்ட அமைப்பால்
விசாரிக்கப்பட்டு, சாட்சியங்களும் ஆவணங்களும்
திரட்டப்படும்.
முதல் வருடம் முடிவடைவதற்குள் வழக்கு
பதிவு செய்யப்பட்டாக வேண்டும்.
அடுத்த ஒரு வருடம் முடிவதற்குள்ளாக
வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டாக
வேண்டும். எத்தகைய ஒரு வழக்கும் இரண்டு
வருடங்களுக்குள் முடிக்கக்ப்பட்டே ஆக வேண்டும் !
இதன் மூலம் – எத்தகைய உயர்ந்த பதவி வகிக்கும்
நபரானாலும் சரி – அவர் மீதான ஊழல் வழக்கு
இரண்டு வருடங்களுக்குள் முடிவடைந்து
தீர்ப்பு/தண்டனை அளிக்கப்பட்டாக வேண்டும்.
குற்றவாளி நிச்சயமாக 2 ஆண்டுகளுக்குள்
சிறையில் தள்ளப்பட வேண்டும்.
லஞ்ச ஊழல் வழக்குகளில் – தண்டனையோடு
நின்று விடாமல் – சம்பந்தப்பட்ட தொகை முழுதும்
குற்றவாளியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட
வேண்டும்.
இந்த அமைப்புகள் எப்படி இயங்கும் என்று கேட்கலாம்.
தற்போதுள்ள, சிபிஐ, விஜிலன்ஸ் கமிஷன் போன்ற
அமைப்புகள் லோக்பாலுடன் இணைக்கப்பட்டு,
அவற்றின் அத்தனை செயல்பாடுகளும்,
சகல அதிகாரங்கள் கொண்ட
இந்த லோக்பால் அமைப்பின் கீழ் வந்து விடும்.
தேர்தல் கமிஷன் போல், சுப்ரீம் கோர்ட் போல் -
சுதந்திரமான அமைப்பாக இது இயங்கும்.
இந்த அமைப்பு எந்த விதத்திலும் மாநில அல்லது
மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்,நடுநிலையான,
சமூகப் பொறுப்புள்ள, சமுதாய
நல அமைப்புகள் -ஆகியவை சேர்ந்து
இதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த அமைப்பின் உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்தின் எந்தவிதத்
தலையீடும் இருக்கக்கூடாது.
இன்று உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள்.
நாட்கள் செல்ல செல்ல மத்திய அரசுக்கு
இதன் உக்கிரம் உரைக்க ஆரம்பிக்கும்.
இந்த "தீ" – ஊழலை ஒழிக்க உண்டாக்கப்பட்டிருக்கும் – இந்த தீ பரவட்டும். வேகமாகப் பரவட்டும் .
----------------------------------------------------------------------------------------------------
மேலே இருப்பது மின்னஞ்சல் மூலமாக எனக்கு வந்தது. நிறைய வலைப்பதிவுகளில் இதைப் பார்க்கலாம். இதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.
முதலாக - இந்த ஜன்லோக்பால் உறுப்பினர்களை யார் தேர்ந்தெடுப்பது? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரி - சமுதாய நல அமைப்புகள்? நாளையே நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அப்படி ஒரு போர்ட் மாட்டிக் கொள்ளாதா? மறுபடியும் திருடனே திருடனை நியமிக்கும் கதை நடக்கும்...
ஒரு ஆண்டுக்குள் விசாரணை ஆரம்பித்து, அடுத்த ஆண்டுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். நியாயமாக ஒழுங்காக நடக்க வேண்டிய ஒரு விஷயத்திற்கு சட்டம் கொண்டு வரவேண்டிய நிலையில் இருக்கிறது இந்தியா!
இருக்கும் அரசியல்வாதிகளை கொஞ்ச்ச்ச்ச்ச்ச்ச்சசசம்ம்ம்ம் திருத்த எனக்கு இரண்டு யோசனைகள் தோன்றுகின்றன. ஒன்று - பதவி உச்சவரம்பு. அமெரிக்காவில் ஜனாதிபதி பதவி இரண்டு முறை மட்டும்தான் வகிக்கலாம். மாநில கவர்னர் பதவியும் இரண்டு முறை மட்டும்தான் என்று நினைக்கிறேன். அப்படி செய்தால், என் வாழ்நாள் முழுவதும் ஒருவர் முதல்வராக இருப்பது நடக்காது. அவ்வளவு புத்திசாலிகள் நிறைந்த மேற்கு வங்காளத்திலும், தமிழகத்திலும் ஜோதிபாசுவையும், கலைஞரையும் தவிர ஆளுவதற்கு யாருக்கும் தெரியாதா? இது எந்த அரசியல்வாதிக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அன்பழகனுக்கும், பன்னீர் செல்வத்திற்கும் மிகவும் பிடிக்கும் :-)
இரண்டாவது - அந்தந்த தொகுதியில் வசிக்கும் மக்கள்தான் அந்தந்த தொகுதியில் போட்டியிட வேண்டும். சிக்மகளூருக்கும் இந்திராவுக்கும், சீரங்கத்துக்கும் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் ரிஷிவந்தியத்துக்கும் என்ன சம்மந்தம்? அந்தந்த ஊர் மக்களுக்குத்தானே அந்தந்த ஊர்களுக்கான தொகுதியில் நிற்க உரிமை இருக்கவேண்டும். அதுதானே ஜனநாயகத்தின் அடிப்படை? அரசாங்கத்தில் மக்களின் பிரதிநிதி அந்தந்த மக்களிடையே இருந்துதானே வரவேண்டும்?? பண்ருட்டியில் பாட்னாவில் வாழும் ஒருவர் தேர்தலுக்கு நின்றால் கேலிக்கூத்தாகத்தானே இருக்கும்.
அப்படி செய்தால் ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் மற்றொரு ஜனநாயக மோசடியையும் தவிர்க்கலாம். எப்படியும் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையில் பங்கு அந்தந்த தொகுதியைச் சேர்ந்த கொள்ளையருக்கு போவதுதானே உண்மையான ஜனநாயகக் கொள்ளை?
ஆனால் இந்த இரண்டும் சட்டங்களாகும் வாய்ப்பு? எந்தப் பூனை அதுவே தானாக மணியைக் கட்டிக் கொள்ளும்??
மத்திய அரசு அன்னா ஹஸாரேவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் அவர் உண்ணாவிரதத்தை முடித்தார் என்று சற்றுமுன் வந்த செய்திகள் கூறுகின்றன. பார்ப்போம் என்ன ஆகிறதென்று.
----------------------------------------