Friday, May 20, 2011

நடுத்தெரு அநாகரிகம்

சில மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து திருச்சி வருவதற்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் நானும் என் மனைவியும் காத்துக்கொண்டிருந்தோம். திருச்சி, கரூர் வழியாக மங்களூர் செல்லும் ரயில் இன்னும் வந்தபாடில்லை. நல்ல கூட்டம் எங்கள் கம்பார்ட்மென்ட் வந்து நிற்கும் இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் நின்றோம்.

எங்கள் அருகில் ஒரு இளைஞனும் அவனுடைய மனைவியும் ஒரு பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்கள். அங்கும் இங்குமாக பலர் குடும்பத்துடன் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் பக்கத்தில் இருந்த தம்பதியினரின் குழந்தை பக்கத்தில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது.

அந்த குழந்தை பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கல்லின் மேல் ஏறிவிட்டது. யாரும் கவனிக்காத போது அந்த பெண்குழந்தை கீழே விழுந்து விட்டது. குழந்தையின் அழுகைக்குரலைக் கேட்டு நான் திரும்பிபார்த்தேன். ஓடிப்போய் குழந்தையை தூக்க முயன்றேன். அதற்குள்ளாக அந்த பெண் ஓடி குழந்தையைத் தூக்கிக் கொண்டுவிட்டாள்.

காயம் எதுவும் இல்லை. இரண்டடி உயரத்திலிருந்து சறுக்கியதால் குழந்தை பயத்தில் அழுதது. முகத்திலும் முழங்கையிலும் லேசான சிராய்ப்பு. அவ்வளவுதான். அந்த இளைஞன், சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தவன், குழந்தையின் அழுகைக் குரலைக் கேட்டு ஓடிவந்தான். என்ன, என்ன ஆனது? என்று கேட்டான்.

ஒன்னும் ஆகிவிடவில்லை விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கீழே விழுந்துவிட்டது என்றேன் நான். அந்த பெண் குழந்தையை சமாதானம் செய்தவாறு, ஒன்றுமில்லை சரியாகிவிட்டது என்று தன் கணவனுக்கு பதில் கூறினாள். அவன் குழந்தையை அவளிடமிருந்து பலவந்தமாக பிடுங்கிக் கொண்டு அந்த பெண் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான்.

நானும் என் மனைவியும் பக்கத்தில் இருந்த மற்ற பயணிகளும் திகைத்து போனோம். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு அமைதியாக நின்றார்கள். சிலர் அந்த இடத்தை விட்டு சற்று நகர்ந்து போனார்கள். நான் சமாதானமாக எதாவது சொல்லலாம் என்று வாயைத் திறந்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ மௌனமாகிவிட்டேன். பக்கத்தில் நின்றவர்களும் ஏதும் பேசவில்லை. ஆனால் அங்கே நின்ற அத்தனைபேரும் அவனை ஒரு அருவருப்போடு பார்ப்பதை என்னால் உணர முடிந்தது.

பொது இடத்தில் பலர் முன்னிலையில் அடி வாங்கிய அந்த பெண் அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் நின்றாள். குனிந்தபடியே அழுது கொண்டிருந்தாள். அந்த இளைஞனுக்கு முப்பது வயதிருக்கும். நாகரீகமான உடை உடுத்தியிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். அந்த பெண்ணுக்கு இருபத்தியைந்து வயது இருக்கலாம். நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் என்று சொல்லத் தோன்றியது.

இந்த சம்பவத்தைப் பார்த்ததும் நான் மன வேதனைப் பட்டேன். ஒரு பெண்ணை, கட்டிய மனைவியை பலர் முன்னிலையில் பொதுவிடத்தில் அடிக்கும் காட்டுமிராண்டித் தனத்தை பார்த்தும் என்னால் எதுவும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம். பிளாட்பாரத்தில் இருந்த மற்ற பயணிகளும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இளைஞன் எதையும் பொருட்படுத்தாமல் அந்த குழந்தையை தோளில் சுமந்து கொண்டு சற்று விலகிப் போய் நின்றான்.

சற்று நேரத்தில் நாங்கள் பயணம் செய்ய வேண்டிய ரயில் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. நானும் என் மனைவியும் ரயிலில் ஏறி எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்தோம். துரதிஷ்ட வசமாக அந்த இளைஞனும் அவன் மனைவியும் எங்களுடைய இருக்கைக்கு நேர் எதிரில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார்கள்.

அந்த பெண் இன்னும் குனிந்தபடியே அழுதுகொண்டிருந்தால். குழந்தை அமைதியாகிவிட்டது. முகத்தில் லேசாக சிராய்ப்பு இருந்தாற்போல் தோன்றியது. அவ்வளவுதான். பலத்த அடி எதுவுமில்லை. எதாவது ஒரு வகையில் அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் "குழந்தைக்கு எதாவது முதலுதவி தேவைப்பட்டால் சொல்லு அம்மா, தாம்பரம் ஸ்டேஷனுக்கு போன்செய்து விட்டால் ரெடியாக இருப்பார்கள்", என்று அந்த பெண்ணிடம் கூறினேன்.

உண்மையில் முதலுதவி எதுவும் தேவையில்லைதான். குழந்தை இப்பொழுது அவளுடைய மடியில் கண் அயரத்தொடங்கிவிடது. அதெல்லாம் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பதுபோல் முகத்தை திருப்பிக் கொண்டாள். அந்த இளைஞன் இப்பொழுது மேலே ஏறி படுத்துக் கொண்டுவிட்டான். அவன் என்னிடம் வேறு எதுவும் பேசவில்லை. வேறு யாரிடமும் எதுவும் பேசவில்லை.

என் எண்ணம் எல்லாம் திரும்பத்திரும்ப அந்த இளைஞனுடைய ஆண் ஆதிக்க மனப்பான்மையைப் பற்றியும் கட்டிய மனைவியை பலர் எதிரில் பொதுவிடத்தில் அடிக்கும் அவனுடைய கூச்சமில்லாத அநாகரிகத்தையும் பற்றியே சுற்றிச்சுற்றி வந்தது. இவன் தன் மனைவியிடம் வீட்டில் எப்படி நடந்து கொள்வான் என்பதைப்பற்றியும் கற்பனை செய்யத்தொடங்கினேன். பொதுவிடங்களில் நடுத்தெருவில் பல வன்முறைகளையும் அடிதடிகளையும் நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. உண்மையில் அன்றைய சம்பவம் என் மனத்தை வெகுவாக பாதித்தது தூங்குவதற்கு முன் அந்த சம்பவத்தைப் பற்றியே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு என்னுடைய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஏதோஒரு விஷயம் தொடர்பாக பேசும்போது ரயில் பயணத்தில் நடந்த அந்த சம்பவத்தைப் பற்றி கூறி வருத்தப்பட்டேன்.

இதை கேட்டுவிட்டு என் நண்பர் இன்னொரு சம்பவத்தை, தானே நேரில் பார்த்த ஒரு சம்பவத்தைப் பற்றி என்னிடம் கூறினார்.

அந்த சம்பவம் ஏறக்குறைய இது போன்றதுதான். சற்று வேடிக்கையானதும் கூட.

நண்பர் நகரப் பேருந்து ஒன்றில் பயணம் செய்தி கொண்டிருக்கிறார். பேருந்தில் நல்ல கூட்டம் அவருக்கு சற்று முன்னால் ஒரு ஆணும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த ஆணுக்கு நடுத்தர வயது அந்த பெண்ணும் நாற்பது வயதை தாண்டியவள் என்று சொல்லும் அளவுக்கு இருந்தாள்.

நல்ல கூட்டம் காரணமாக பேருந்து மெதுவாக ஊர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் ஆண்கள் வரிசையில் (தமிழ்நாட்டில் மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனி வரிசையில் உட்கார இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். ) இருந்த இரன்டு சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து போகிறார். இன்னொரு சீட்டில் ஒரு பள்ளி மாணவன் புத்தகப் பையுடன் உட்கார்ந்திருக்கிறான் அந்த மாணவனுக்கு 15 வயதிருக்கும். காலியாக இருந்த ஒரு சீட்டில் உட்கார நின்று கொண்டிருந்த ஒருவர் நகர்கிறார்.

அதற்கு முன்பாகவே நின்று கொண்டிருந்த அந்த பெண் அந்த சீட்டில் உட்கார்ந்து விடுகிறாள்.

அவள் சீட்டில் உட்கார்ந்த அடுத்த கணமே அவள் முதுகில் பளார் என்று ஒரு அடி விழுகிறது. அடித்தவர் வேறு யாருமில்லை. அந்த பெண்ணின் பின்னால் நின்ற அவளுடைய கணவர்தான். அடித்ததோடு நிற்கவில்லை. ஆம்பிளை பக்கத்திலே உட்கார உனக்கு சீட் கேட்குதாடி? என்று உரத்த குரலில் சத்தம் போட்டான் அவன். அந்த பெண் அலறி அடித்தபடி எழுந்து விட்டாள் பக்கத்தில் ஏற்கனவே உட்கார்ந்திருந்த அந்த மாணவனும் அதிர்ச்சியிலும் பயத்திலும் எழுந்துவிட்டான்.

மேலும் அவளை அடிக்க அவள் கணவன் வேகமாக நெருங்கினான். அவள் தலையை கவிழ்த்தபடி நின்று கொண்டிருந்தாள் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த தன்மான வீரனால் அவ்வளவு சுலபமாக கையை அசைக்க முடியவில்லை. மற்றவர்கள் மேலும் அவருடைய கை பட்டதால் அவர்கள் சத்தம் போடத்தொடங்கினார்கள்.

பக்கத்திலிருந்த ஒருவர் அவருடைய ஓங்கிய கையைப் பிடித்துக் கொண்டு, "உங்கள் சண்டையில் பேருந்தில் இருப்பவர்களை எல்லாம் அடிக்க வேண்டாம் அடிப்பதாக இருந்தால் வீட்டில் போய் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். இருவருக்கும் இடையில் வார்த்தை வளர்ந்தது. கண்டக்டர் விசிலை ஊதி பேருந்தை நிறுத்திவிட்டார்.

அதிர்ச்சியில் உறைந்து போன அந்த மாணவன் மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடத்துக்கு போய்விட்டான். ஒரு பள்ளி மாணவன் பக்கத்தில் உட்கார்ந்தால் நாற்பது வயதுப் பெண்ணுடைய கற்பு களங்கப் பட்டுப் போகும் என்று ஒரு ஆண் நினைக்கும் அவலத்தை எப்படி எடுத்துக்கொள்வது/ ? அதற்காக பொதுவிடத்தில், நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் மனைவியை அடிக்கிறான்.

Possessive என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் உடனடியாக எனக்கு நினைவுக்கு வரவில்லை. இதுபோன்று, பெண்களை பொதுவிடத்தில் இழிவாக நடத்தும் ஆணாதிக்கச் செயல்களை தமிழ்நாட்டில் அடிக்கடி பார்க்கலாம். ஒரு சிறுவன் அருகில் உட்கார்ந்த பெண்ணுடைய கற்பு பங்கப்பட்டு விடும் என்று எண்ணும் ஆண்களுடைய மனோபாவத்தை கூர்ந்து நோக்கினால் அவனுடைய வக்கிர உணர்வுகளை நன்றாக புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்கொண்ட பெண்கள் கதியை எண்ணிப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கையை தொலைத்தவர்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இப்பொழுது அந்த சிறுவன் காலி செய்த இடத்தில் அந்த நபர் போய் உட்கார்ந்துகொண்டான். இன்னும் ஏன் நிக்கிறே உட்காருடி என்று சத்தம் போட்டான். அந்த பெண் தலையை கவிழ்ந்தபடியே பழையபடியே சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

பக்கத்தில் இருந்த ஒரு பயணி "உட்கார இடம் பிடிக்க இதுவும் ஒரு தந்திரமோ ' என்று கேட்க எல்லோரும் சிரித்தார்கள்.

பேருந்து இப்பொழுது புறப்பட்டது.
- மு கோபாலகிருஷ்ணன்

8 comments:

 1. மிகவும் அருமையான இரு சம்பவத்தைப் பதிவு செய்துள்ளீர்கள் .. அனேக இந்தியப் பிராயணங்களில் இவை நடப்பதுண்டு.

  ஆனால் ஆண்களின் சிந்தனா வடிவம் கொஞ்சம் கூட நம் நாட்டில் மாறவில்லை எனலாம். படித்த பலரும் கூட பெண்களை, மனைவியை, காதலியை பொது இடத்தில் எப்படி நடத்துவது என்று தெரியாமல் இருக்கின்றார்கள். இப்படியான சம்பவங்கள் நடக்க இரு காரணங்கள் ஒன்று ஆண் அவனது வளர்ப்பு/குடும்ப சிந்தனை மிகவும் பிற்போக்குதனமாக இருப்பது. மற்றொன்று இப்படியான சம்பவங்களை சமூகம் செரித்துக் கொண்டு, ஏற்பதுவே ஆகும்.

  மேல்நாடுகளில் பொது இடத்தில் ஒரு பெண்ணை இப்படி அறைந்திருந்தால் - ஒன்று அது உடனடியாக செல்பேசியில் படம் பிடிகப்பட்டு யூடூயுபில் மானம் போய் இருக்கும், மற்றொன்று அங்கிருக்கும் எவரேனும் ஒருவர் உடனடியாக காவலருக்கு செய்தியை அனுப்பி விடுவர்.

  குடும்ப வன்முறையின் கீழ் அந்த ஆண் கம்பி எண்ணி இருப்பார்.

  பிரச்சனை தனிநபரிடமும் உண்டு, சமூகத்திடமும் உண்டு.

  குறைந்தபட்சம் இதனை இங்கு பதிவிட்டீர்களே - இதற்கு பெரிய ஓ ! போடவேண்டும் உங்களுக்கு.

  ReplyDelete
 2. மு.கோ.
  மீண்டும் ஒரு அருமையான, நெகிழ்வான பதிவு. இதற்கு மருந்து இது என்று ஒன்றை நாம் என்றும் கூறமுடியாது என்பது என் கருத்து. மனித மனம் எவ்வளவு விகாரமானது என்பது இப்படிப் பட்ட பல செயல்களால் பல முறை வெளிப்பட்டாலும், அதிலிருந்து பாடம் கற்போர் வெகுசிலரே.
  முரளி.

  ReplyDelete
 3. உங்களிடம் இருந்து மற்றொரு விழிப்புணர்வு பதிவு. இக்பால் சொன்னது போல வளர்ப்பு, குடும்பச் சூழல் இவைகளுக்கு முக்கிய காரணம். அனைவரையும் சமமாக மதிக்கும் எண்ணம் உள்ளிருந்து வரவேண்டிய விஷயம். சொல்லித்தந்தும் தண்டனையிட்டும் வருவதில்லை.

  ReplyDelete
 4. how to add particular label feed only in google reader

  https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US

  please forward this to others...d..

  ReplyDelete
 5. What makes the viewers stop to react against these kind of aggression?

  ReplyDelete
 6. மணி,

  வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

  இத்தகைய கொடுமை நடக்கும்போது சுற்றியிருப்பவர்கள் ஏன் ஏதும் செய்ய மாட்டென்கிறார்கள் என கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  திடீரென ஒருவன் துணைவியை அறையும் செயல் பண்புள்ளவர்களால் சற்றும் எதிர்பாராதது. அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவது எப்படி என்று தயங்கலாம்.

  ReplyDelete
 7. There appears to be some hypocrisy in all our thoughts. We do not seem to have a problem with Rama when Sita who is known for being a perfect daughter, wife and a mother had to prove her purity by going through a “fire-ordeal”, I have heard stories of young widows forced to spend the rest of their lives with their head shaved and leading a second rated life giving up all their rights have a good life in our culture. There are a very few of us that had the opportunity to have a cultural diffusion that enabled us to think beyond the limits of our cultural boundaries. Yes, they were doing something that some of us consider disgusting; these incidents alone does not make them the subject of an act of barbarism. The intent clearly is not to humiliate their wives, the concern for the kid and wife’s “Karpu” (as viewed by the rest of the people in the bus) were some of those things these guys believe cannot be compromised while hitting them in public was acceptable. The scale of maturity of civilized culture is relative; things considered acceptable in one society may be not in others. It is not a good idea to come up with an opinion about those two guys and portray them as male chauvinists. They may be the best husbands and great parents in many other ways that we all did not get to see or hear about.

  ReplyDelete
 8. ஜெ.ஐயாப்பிள்ளை அவர்களே,

  எப்படி இந்த மாதிரி மனிதர்களுக்கு ஆதரவாக உங்களுக்கு பேச/எண்ண முடிகிறது என்று எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்கள் செய்தது குழந்தைக் கரிசனத்தாலும், மனைவியின் கற்பையும் காக்க என்று பேத்தலாக ஒரு வாதம் வேறு. மு.கோ. சொல்கிறார்:
  //ஒரு சிறுவன் அருகில் உட்கார்ந்த பெண்ணுடைய கற்பு பங்கப்பட்டு விடும் என்று எண்ணும் ஆண்களுடைய மனோபாவத்தை கூர்ந்து நோக்கினால் அவனுடைய வக்கிர உணர்வுகளை நன்றாக புரிந்து கொள்ளலாம்.//

  குழந்தைக் கரிசனம் கொண்டவன் தனியாக போய் நிற்கத் தேவையில்லை. அழும் குழந்தையை கவனிக்க மனைவியை அறையத் தேவையில்லை.
  ஏதோ கலாசார வித்தியாசம் என்கிறீர்கள். பெண்களை நடுத்தெருவில் அடிப்பது எனக்குத் தெரிந்து எந்த நாகரீகத்திலும் ஏற்புடையதில்லை. தாலிபான்கள் ஆட்சி தவிர.

  என்னவோ நாம் மேற்கத்திய கலாசாரத்தில் ஊறியதால் மட்டுமே நமக்கு இது இழிவாகத் தெரிகிறது என்பது போல் போகிறது உங்கள் வாதம். இந்த சம்பவம் ஸ்பென்ஸர் பிளாஸாவில் நடந்தாலும் கேவலம்தான், சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்தாலும் அசிங்கம்தான். சித்திநாயக்கன்பட்டியில் நடந்தாலும் மோசம்தான்.

  இவர்கள் male-chavinistகள் இல்லை என்றால், வேறு யார் பொருந்துவார்கள் அந்தப் பட்டத்துக்கு. அவர்களை மனதத்துவ நிபுணரிடம் கொண்டுபோய் சான்றிதழ் வாங்கவேண்டுமா? இந்த ஒரு நிகழ்ச்சி போதாதா அந்த மிருகங்களை அடையாளம் காட்ட?

  உங்கள் அகராதியில் வேறு யார்தான் male chavinists?

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!