Sunday, April 26, 2009

படம் பாரு கடி கேளு - 27



அதெல்லாம் முடியாதும்மா. ஓட்டு போட்டவங்களுக்கு இந்த ஒரு விரலில் தான் மை வெக்க முடியும். நீ எல்லா விரலிலும் "நக பாலீஷ்" போட சொல்றியே. அடுத்த தேர்தலில இதுக்கே ஒரு சட்டம் கொண்டு வரணும் போலிருக்கே!

படம் பாரு கடி கேளு - 26



ஏதோ செல் போனுக்கு தான் மாடலிங் செய்ய கூப்பிட்டாங்கன்னு வந்தா இவ்வளவு பெரிய போனை என் தலையில மாட்டிட்டாங்க!

Friday, April 17, 2009

கில்லாடிப் பையன்!

இந்தியாவில் லோகசபை தேர்தல் ஆரம்பித்திருக்கிறது. 'உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகத்தின்' தேர்தல். இந்த தேர்தலில் என்னைக் கவர்ந்த வேட்பாளர்: சரத்பாபு! சினிமா நடிகர் சரத்பாபு இல்லை!

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சரத்பாபு. அவரைப் பற்றி நான் இன்னும் சொன்னால், சொந்த கல்லூரி பெருமை பேசுகிறான் என்று நீங்கள் தள்ளிவிடாமல் இருக்க - இதோ இட்லிவடையாரின் பதிவில் நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

தென்சென்னையில் வாழும் உங்கள் உற்றார் உறவினர் அனைவரையும் இவருக்கு ஓட்டுப் போடச்சொல்லுங்கள்.

வெற்றி பெற வாழ்த்துக்கள், சரத்!

Wednesday, April 08, 2009

கில்லாடி பசங்க - 2

ரிச்மண்ட் வட்டார அறிவியல் போட்டியில் வேதியியல்  பிரிவில் முதல் பரிசு வாங்கிய விஜய் கோவிந்தராஜ்,  சூட்டோடு சூடாக மாநில சுற்றில் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறான்.

சென்ற வார இறுதியில் வர்ஜினியா மாநில அளவில் நடந்த அறிவியல் போட்டியில் வேதியியல் பிரிவில் இரண்டாம் பரிசு வாங்கியிருக்கும் விஜய் கோவிந்தராஜுக்கும், அவனது பெற்றோர் ஷோபனா, கோவிந்தராஜுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

விவரங்கள் இந்தத் தளத்தில்.(விரைவில் வரும்)

Monday, April 06, 2009

கில்லாடி பசங்க...

ரிச்மண்டிலிருக்கும் தமிழ் குடும்பத்து சிறுவர் சிறுமியர் படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரர்கள். சமீபத்தில் நடந்த அறிவியல் போட்டிகளில் நம்ப பசங்க வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். மிட்லோதியனில் வசிக்கும் பார்கவி, கணேஷ் தம்பதியினரின் மகன் தருன் ஜுனியர் பிரிவில் பொறியியல் போட்டியில் வெற்றி வாகை சூடியிருக்கிறான். மேற்குக் கோடியில் வசிக்கும் ஷோபனா, கோவிந்தராஜ் தம்பதியினரின் மகன் விஜய் சீனியர் பிரிவில் வேதியியல் போட்டியில் வென்றிருக்கிறான். தருனுக்கும், விஜய்க்கும் வாழ்த்துக்கள்!


முழுப் பட்டியல் இங்கே....


கீழே இருக்கும் படத்தில் இருக்கும் டென்னிஸ் போட்டி முடிவுகளைப் பாருங்கள்.


டேவிஸ் போட்டி முடிவுகள் மாதிரி தெரிகிறதா? எல்லாம் நம்ப உள்ளூர் செய்திதான். உயர்நிலைப் பள்ளி டென்னிஸ் போட்டிகள் முடிவுகளின் மாதிரிதான் இவை. உயர்நிலைப்பள்ளி டென்னிஸ் குழுக்கள் மேல் தடுக்கி விழுந்தால் நம்ம பசங்க மேல்தான் விழவேண்டும். ஹென்ரைகோ பள்ளியில் வித்யா, வெங்கட் தம்பதியினரின் மகன் அர்ஜுன், செல்வி,மோகன் தம்பதியினரின் மகன் விக்னேஷும், வனஜா, பொருளாளர் நாராயணன் தம்பதியினரின் மகன் அஷ்வினும் கலக்குகிறார்கள். டீப் ரன் பள்ளியில் பிருந்தா, சங்கர் தம்பதியினரின் மகன் பரணி சங்கர், வேதா, சேகர் நாகேந்திரா தம்பதியினரின் மகன் ஜெயந்த். காட்வின் பள்ளியில் ஷீலா, கார்த்திகேயன் தம்பதியினரின் மகன் அர்ஜுன்!

ச ில போட்டி முடிவுகள் இதோ....

இவர்களிடம் இருந்து பெரியவர்களைக் காக்கத்தான் சென்ற முறை 20-25 வயது, 26-34 வயது, 35-37.5 வயது என்று பல பிரிவுகளாக தமிழ் சங்க டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றதாக ஊரில் வதந்தி.


பசங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா என்று பெரியவர்கள் சென்ற மார்ச் 28ல் 10 கிலோமீட்டர் பந்தயத்தில் கலந்து கொண்டார்கள். நானும் குடும்பத்தோடு கலந்து கொண்டேன். எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் (தமிழில் என்ன) எண்பது வயதான சங்கர் கலாவர்! ரிச்மண்டில் வசிக்கும் விஷால் உபாத்யாவின் தந்தை மூன்றாவது முறையாக கலந்து கொள்கிறார். சென்ற செயற்குழுவின் பங்கேற்பு அபாரம். நான், பொருளாளர் அரவிந்தன், செயலாளர் லஷ்மியின் கணவர் ஹரி(செயலாளரும் ஓடவேண்டியது கடைசி நிமிஷத்தில் ஜகா), பொதுச்சேவை சரண்யாவின் கணவர் சத்யா என்று கலக்கிவிட்டோம். இந்த குழுவின் மானத்தைக் காப்பாற்ற தலைவரின் மனைவி சாவித்திரி ஓடினார்கள். கூடவே ஷீலா கார்த்திகேயன்(கார்த்திக் க. நி. ஜ). ரவிச்சந்திரன் திருவேங்கடத்தானும்(லாவண்யா க.நி.ஜ), அஷோக் செட்டியும், ஜெயா செல்லையாவும் ஓடிய மற்ற பிரபலங்கள்.

முப்பதாயிரம் பேர் கலந்து கொண்ட இப்போட்டி கலகலவென்று திருவிழா மாதிரி இருந்தது. பலவகையான மனிதர்கள்! ஒரு கர்ப்பிணிப் பெண் என்னை விட வேகமாக ஓடினார். நிறைய பேர் மாறுவேஷத்தில் ஓடினார்கள். கர்ப்பிணிப்பெண்ணும் மாறுவேஷமோ என்று ஒரு சம்சயம்!


இந்த ஓட்டப்பந்தயப் போட்டிகளின் முடிவுகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நான் ஏதாவது இப்படி சுட்டி கொடுத்தால், நாந்தான் எல்லோர் வயதையும் அம்பலப்படுத்தி விட்டேன் என்று கழுவேற்றி விடுவார்கள். ஏன் வம்பு? :-) திறமையிருந்தால் உங்களுக்கு தெரிந்த பெயர்களை நீங்களே தேடிக் கொள்ளுங்கள். படங்களையும் பார்க்கலாம் இந்தத் தளத்தில். மாறுவேடத்தில் ஓடியவர்கள் படங்களையும், பல பந்தயப் படங்களையும், சிறுவர் ஓட்டப் பந்தய படங்களையும் பாருங்கள்.


என்ன, அடுத்த வருடம் நீங்களும் ஓடுகிறீர்களா?

Wednesday, March 11, 2009

உங்களுடைய செக் இஞ்சின் லைட் சரி செய்து விட்டீர்களா?

உங்களுடைய காரில் செக் இஞ்சின் லைட் எரிய ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னை மாதிரி பயந்தாங்குளிகள் அடித்துப் பிடித்து ஓடிப்போய் மெக்கானிக்கிடம் காரை கொண்டுபோய் சொத்தை எழுதிக் கொடுத்து விட்டு வருவோம். அதே ஒரு கால்வலியோ, முதுகுவலியோ, நெஞ்சுவலியோ வந்தால் ஒழுங்காக டாக்டரிடம் போகாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருப்போம். ஒரு காருக்கு செலுத்தும் அக்கறை கூட நம் உடல் நலத்தில் செலுத்துவதில்லை.

சென்ற வாரம் ஒரு நண்பருக்கு இப்படித்தான். இரண்டு நாட்களாக நெஞ்சுவலி என்று உடல்வலி மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை, மூன்றாம் நாள் அவர் மனைவி காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு போனார். அங்கே அவர் உடலை பரிசோதித்துவிட்டு உடனே எமர்ஜென்சிக்கு அனுப்பிவிட்டார்கள். அவருக்கு வந்தது மாரடைப்பு. மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு பிறகு ரத்தக்குழாயில் இருந்த இரண்டு அடைப்புகளை சரி செய்து அனுப்பியிருக்கிறார்கள். நாற்பதுகளில் இருக்கும் நண்பர் நிறைய டென்னிஸ் ஆடுபவர், சுறுசுறுப்பாக, இருக்கும் அனைத்து சங்கங்களிலும் ஈடுபட்டு நிறைய தொண்டு செய்பவர். அவருக்கு மாரடைப்பு வந்தது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

ஆகவே உங்களுக்கு எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். நல்ல உடல்நலத்தோடு இருந்தாலும் ஆண்டுக்கொரு முறை உடல்நலப் பரிசோதனை (annual physical checkup)செய்து கொள்ளுங்கள். அதுவும் நாற்பதை தாண்டிவிட்டால் இது மிகவும் கட்டாயம். கொழுப்பெடுத்து எது செய்கிறீர்களோ இல்லையோ - உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதுவும் இக்கால அன்றாட வாழ்க்கையில் நமக்கு நடப்பது, ஓடுவது எல்லாம் மிகவும் குறைந்திருக்கையில், நமது உணவு அதற்கேற்றார்போல மாறாதிருப்பது, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக முக்கிய காரணம். இப்போதும் ஒன்றும் காலதாமதமாகவில்லை. இந்த சனிக்கிழமை மானுமென்ட் அவின்யுவில் பத்து கிலோமீட்டர் ஓடலாம் வருகிறீர்களா?

Monday, March 02, 2009

ஆயிரம் புரதம் மடித்த அபூர்வ சிகாமணி

நமக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் கொடுக்கலாமென்றிருந்தார்கள். நான் பெருந்தன்மையாக அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் ஏதாவது ஒரு பட்டம் வாங்கிக் கொண்டால்தான் ஆயிற்று என்று வற்புறுத்தினார்கள். அவர்கள் அன்புத்தொல்லை தாங்காமல் நான் வாங்கிக் கொண்ட பட்டம்தான் -  ஆயிரம் புரதம் மடித்த் அபூர்வ சிகாமணி!

 

என்னய்யா மடிக்கிற என்கிறீர்களா? நீங்களும் மடிக்கலாம் இங்கே சென்று... நான் அனுப்பினேன் என்று சொல்லாதீர்கள். உங்களையும் மடித்து விடுவார்கள். உங்கள் வீட்டில் கணினி சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால்,  அதையும் புரதம் மடிக்க வைக்கலாம். இதனால் பல வியாதிகளின் அடிப்படை குணாதிசயங்களை அறிந்து கொண்டால் உங்களுக்கு புண்ணியம்.

அதென்னய்யா புரதம் மடிப்பது என்று கேட்பவர்கள்  http://folding.stanford.edu தளத்தில் சென்று படித்து தெரிந்து கொள்ளலாம். வர வர நான் ஒன்று சொன்னால், மக்கள் வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள். அதனால் நான் அந்த விளையாட்டுக்கு வரவில்லை :-)

இப்படிக்கு.

திரு. ஆயிரம் புரதம் மடித்த அபூர்வ சிகாமணி

படம் பாரு கடி கேளு - 25



சார், லாலு சார் தயவு செய்து சீக்கிரம் inspect பண்ணிட்டு போங்க சார். நீங்க inspect பண்ண வர்றீங்கன்னு காலையிலிருந்து என்னை இப்படியே படுக்க வெச்சுட்டாங்க. பாத்ரூம் கூட போக விடலே.

Friday, February 27, 2009

யாரந்த சதங்கா?

மனுஷன் விகடனில் அவர் கவிதைக்கு லிங்க் கொடுத்ததையே மின்னஞ்சலில் தெரியப்படுத்தியிருந்தார். இப்போது அடக்கம் ஜாஸ்தியாயிடிச்சுன்னு நினைக்கிறேன்.

 விகடனில் கதை வெளியாயிருப்பதை சொல்லவே இல்லை. அடுத்த முறை கூப்பிடட்டும், பேசிக்கொள்கிறேன்...

வாழ்த்துக்கள், சதங்கா. மென்மேலும் உயர வாழ்த்துக்கள். பாலு மகேந்திரா ரகுமானை சொன்ன பாணியில், ஏதோ நான் பதிவுலகத்துக்கு அழைத்துவந்த மனிதர் கதை விகடனில் வந்திருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!

Thursday, February 26, 2009

ஈழத்துப் பாப்பா பாடல்

ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
தலைவிதி இதுதான் பாப்பா.



  ---      ---   ---



எழுதியது யாரென்று தெரியவில்லை. நெஞ்சை பிசையும் பாடல். வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு நீர்வை மகள் அனுப்பினார்.... 

ஒரு ஈழத்து நண்பர் சொன்னார்: " எனக்கு இந்த பிரச்சினை எப்படி முடியும் என்று கூட கவலையில்லை. சீக்கிரம் முடிந்தால் நிம்மதி"... 

எனக்கு மீண்டும் மீண்டும் கானா ப்ரபாவின் பதிவின் முகப்பில் அவருடைய சிரித்த முகத்திற்கு கீழே இருக்கும் வரிகள்தாம் மனதில் ஓடுகின்றன...  

ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்....

என்று தணியும் இந்தத் துயரம்?