"அமெரிக்காவிலிருந்து தாய்நாடு திரும்பும் இளைஞர் (!) வில்லனை சமாளித்து, லஞ்சம் கொடுத்து ஊருக்கு நல்லது செய்கிறார் !"
இந்த ஒரு வரி (பழைய) கதைக்கு,
படமாக்க செய்த செலவு 80 கோடிக்கும் மேல்.
பில்ட்அப்-களுக்கு பஞ்சமே இல்லை.
நின்றால் ஒரு செய்தி, நடந்தால் ஒரு செய்தி.
சென்னையில் பால் குடம், பீர் குடம் அபிஷேகம் (எங்கே போய் முடியுமோ ?!)
10 ரூபா டிக்கட் ப்ளாகில் (நம்ம blog இல்லிங்கோ !) 500 ரூபாய்க்கு சென்னையில் விற்றிருக்கிறார்கள்.
திருச்சியில் 500 ரூபா நோட்டில் காந்தி இருக்குமிடத்தில் இவர்.
முன்னாள், இன்னாள் முதல் அமைச்சர்களுக்கு பிரத்தியேக காட்சி (அதிக கமிட்மென்ட் இல்லாத நமக்கே ஆயிரம் வேலை இருக்கும்போது, இவர்களால் எப்படி இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிகிறது என்று நினைக்கிறபோது வியப்பாகத் தான் இருக்கிறது !)
இதெல்லாம் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும், இணையச் செய்திகளிலும் வெளியானவை.
வலைப் பதிவர்கள் இதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல,
முதல் விமர்சனம் போட்டாச்சில்ல என்கிறார் ஒருவர்.
ஒருவர் சொல்கிறார் பாபா படம் போல் ஆகவேண்டும் என்று.
இன்னொருவர் சொல்கிறார் 100 நாள் என்ன 1000 நாள் ஓடும் என்று.
படத்தை பார்ப்பதைப் புறக்கணியுங்கள் என்கிறார் கோபத்துடன் ஒருவர்.
logic விசயத்தில் நம்ம ஊர் என்றில்லை வெளிநாடுகளில் அடிக்காத கூத்தா என்கிறார் இன்னொருவர்.
அவர் கர்நாடகத்துக்காரர், தமிழனுக்கு உதவி செய்வதில்லை என்கிறார் மற்றவர்.
கர்நாடகம், காவிரி, தமிழன், ஒரு கோடி, இப்படி பல விசயங்களையும் அலசி அதிரவைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சரி, விசயத்துக்கு வருவோம்.
பால் குடம் எடுப்பவருக்கும், பீர் பாட்டில் உடைப்பவருக்கும் நோக்கங்கள் இருக்கலாம். அவர்களைப் பொருத்தவரை என்றாவது ஒருநாள் 'தலைவர்' அரசியலுக்கு வருவார். நாமலும் நாலு காசு பார்க்கலாம் என்று.
படித்த, பண்புள்ள, பல நாடுகளில் வாழும் நாமும் 'சிவாஜி' பில்ட்அப்புக்கு சத்தமில்லாமல் உதவுகிறோம். ஒரு படம் நல்லா இருந்தா பாருங்கள். தாராளமா விமர்சனம் செய்யுங்கள். ஆனால் இன்றைக்கு தமிழ்மணத்தின் அனைத்துப் பக்கங்களிலும் நாம் காண்பது 'சிவாஜி' பற்றிய செய்தியே. இது சற்று வேதனை தரும் விசயம்.
நாம் பார்க்க, படிக்க, அனுபவிக்க, பகிர்ந்துகொள்ள எவ்வளவோ விசயங்கள் இருக்கும்போது, ஒரு பொழுதுபோக்குப் படத்திற்கு இத்தனை நேரம் செலவழிப்பது நாம் எல்லோருமே சிந்திக்க வேண்டிய ஒன்று. இந்தக் கால சூழலுக்கு பொழுதுபோக்கு மிக அவசியமான ஒன்று என்று மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தப் பொழுதுபோக்கு கொஞ்சம் ஓவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
உங்களுடைய பதிவுகள் வெறும் பின்னூட்ட எண்ணிக்கைக்கும், site traffic-க்கும் ஆக இருக்கும் பட்சத்தில் எனது கருத்துக்களை நீங்கள் நிராகரிக்கலாம். உங்களுக்கும் பீர் பாட்டில் உடைப்போருக்கும் வித்தியாசமில்லை என்பது எனது தாழ்மையான எண்ணம்.
இந்தா அந்தா என்று படமும் ரிலீஸாகிவிட்டது. இத்துடனாவது 'சிவாஜி' எனும் அக்கப்போர் ஓயவேண்டும் என்றும் மனம் குமுறும் வாலிபர் (!)