Thursday, November 30, 2017

அருண் பக்கங்கள் - ரசனை


விடிவுக்கு முடிவில்லாமல் சுத்தும் பூமி...
ஆரஞ்சு நிறத்தில் வெளிச்சமான வானம்...
உடையும் முன் பெரிதாகும் குமிழி...
உயிர் இல்லாவிடினும் பறக்க துடிக்கும் இறகு...
கண் பார்வை முழுவதிலும் கடல்...
கைகளை கட்ட வைக்கும் குளிர்...
இரைச்சலான அருவி...
இளஞ்சூடான வெள்ளை பனி...

கமல புராணம் - உரை ரிச்மண்ட் மக்கள்


“கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்.  நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது”  - கமலஹாசர் டிவிட்டரில்....


நாகேந்திரனார் உரை:

கடவுள் கிடையாது. ஆனால் சாதி உண்டு. கடவுளை நம்பறவன் என் சாதி.


முரளியார் உரை:

கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். 

கோயில்ல கை வெச்சுகினா அவ்வளவுதான் என் கைல நாஸ்த்தி ஆயிடுவ

நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி.

நான் சாமியை நம்பரன்னா இல்லியான்னு செக் செய்ய தாவல

நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல.

நீ நம்பிகினா உன்னை கண்டுக்காம போயிகினே இருக்கரது சாமி கெடையாது, அது இந்த பால்டீக்ஸ் ஆளுங்க செய்ரது


பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர்.

நம்பர ஆளுங்க நெற்ய டைப்ஸ் கீது, அதுங்க எல்லாம் என் ஜனம்தான்

ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது

அத்தொட்டு இந்த ஜாதி பேசிகினா அது என்னாண்ட ஆவாது,  சாமிக்கும் ஆவாது சொல்டன்.


உள்ளூர்காரர் உரை:


//கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்.  நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. 
என் கடவுள் நம்பிக்கை கோவில் கொள்ளையரை காப்பாற்றாது.

//நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல.
உன்னைக் கைவிட்டது நீ தேர்ந்தெடுத்த ஆள்வோர் செயல். நீ நம்பும் செயல்படாத ஆண்டவன் அல்ல.

//பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர்.
எல்லா வகை பக்தர்களும் என் உறவினர்.

//ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது
ஆனால் எல்லோரையும் உறவினார்ன்னு சொல்வதை சாதி ஒத்துக்காது. நாமும் சாதியை ஒத்துக்கொள்ளக் கூடாது.

Wednesday, November 22, 2017

அருண் பக்கங்கள் - ஜாதகங்கள்


வெளி வரும் நேரம் யாரும் கணிக்காமல் பிறந்தோம் ஆயினும் ஜாதகம் உருவாக்கினர் ....
மனிதனை மதம் என்ற நீரினால் குளிப்பாட்டினர்...
கல் என்ற வாயினில் கட்டாய கடவுளை திணித்தனர்...
இன்னொருவரின் விருப்பத்தில் நம் பெயரை அழைத்தனர்..

வளரும் பொழுதுகளில் நம் வார பலனை வாசித்தனர்....
வாங்கிய வேலையும் கூட குருவின் பெயர்ச்சியே என நம்ப வைத்தனர் ...
வண்டிக்கும் கூட பூசைகள் தவறவில்லை.....

இப்பொழுது வாழ்க்கையின் முக்கிய தேர்வு
வகை வகையாய் பலகாரங்களுடன் சேர்த்து வரிசையாக நிராகரிக்கப்படுகின்றனர் என் நண்பர்கள்

மணப்பொருத்தம் என்ற ஒரே வார்த்தையினால்....

அருண் பக்கங்கள் - இந்திய விடுதலை...


நாட்டுக்குன்னு நாகரிகத்தை ஐந்து திணைகள் ஆக்கி...
திட்டமிட்டு திணைக்கொரு தொழில் என பெயரிட்டு..
தொல்ல வராம இருக்க தொழிலுக்கொரு கடவுளை உருவாக்கி...
பட்ட சாராயம் காய்ச்சி படச்சவனுக்கும் படச்சுபுட்டு
நட்ட நடு நெத்தி மட்டும் விட்டு புட்டு மொத்தமா பட்டை அடிச்ச
என் பாட்டன் வழிபட்ட வழிபாடு சத்தமே இல்லாம
மொத்தமா மாறி போச்சு...

கண்மசி கவிதைகளை கண்ணியர்களே சிந்துனப்போ
மண் ஏறி வந்த பய மசியம் என்ன தான் செஞ்சானோ...
உள்ள மொழி மறந்து வெளிநாட்டு மோகம் தின்ன
உட்கார்ந்து ராஜ்ஜியம் பாருன்னு மேற்கால பிரபுவ
ஒட்டகம் கூடாரம் நொழைஞ்ச கதை ஆட்டம் உள்ள தான் சேர்த்தாங்க....

பொருள் விக்க வர்றேன்னு இருள கூட்டிகிட்டு வந்த பயலுக
அருளோட இருந்த நாட்ட அங்க அங்க துண்டாடுன சண்டாளனுங்க...

மொதல்ல மொழியறுத்தான்....முக்கியமா அறிவழிச்சான்
வெள்ள தோல கொஞ்சம் கட்டி மெல்ல நம்ம நாடு புடிச்சான்....

தர்மம்னு வளர்ந்த மண்ணுல தாறுமாறா ஆசை வெதச்சான்...
மொத்த ஊரையும் ஏப்பம் போட்டு கப்பமுன்னு கட்ட வெச்சான்...
ரத்தம் சுண்டுன எலும்பையும் நாய் வாய் விடாம உறிஞ்சத போல்
உலக போர்ல அடி வாங்கி உனக்கு தான் விடுதலைன்னு கொக்கரிச்சான்....

போற நன்னாரி பொத்திகிட்டு போயிருக்கலாம்...
சுரண்டுனது பத்தாது வளர விட கூடாதுன்னு....
மதம்னு ஒரு பெரிய மலையையே மண்ணுக்குள்ள வெதச்சு புட்டான்...
அதுக்கு மேல நான் என்ன சொல்ல அதான் நிதமும் பாக்குறீங்களே...

அப்புடியே ஒரு மதத்தான் ஆனாலும் கூடவே வளந்த சாதி கொஞ்சமும் வளர விடலையே..
அவசரத்துக்கு ரத்தம் வாங்கும் பொழுது மட்டும் ஞாபகம் வராத சாதி...

நூறு கோடி சேர்ந்து இருக்கோம்னு தான் பேரு..
வட மொழி பேசுறது தெற்குல பெரிய தப்பது....
தண்ணி கேட்குற தமிழன சுத்தி மாநிலம் துப்புது...

ஹிந்தி தெரியாதவன் இந்தியாவோட இடுப்புக்கு மேல போக முடியாது....
தெரியாம போயிட்டாலும் தெரு தெருவா சுத்த வேண்டியது தான்....

தங்கத்துல இருந்த வணிகத்தை தெளிவா ஆயிலுக்கு மாத்தி புட்டான்...
நோட்டடிக்கிற மெஷின் இருந்தும் நொண்டி மட்டும் தான் அடிக்கிறோம்..

எங்குட்டோ இருந்து வந்த கணினி இப்போ நம்மளை காக்குதுங்க....
எதிர்காலத்துல எல்லாரும் ஆயில்ல தான் ஆயுள்னு சொன்ன எங்க அண்ணாச்சி போக நம்ம...

திருக்குறளையும் கற்பனை காப்பியம்னு இன்னும் கொஞ்ச வருசத்துல சொல்லி புட்டா
ஒட்டு மொத்த பிரச்னையும் ஒரேயடியா முடிஞ்சுது
நம்ம பேரன் ஆப்பிள் ல படிப்பான் ஐரோப்பால இருந்து பிரிஞ்சது தான் இந்தியாவாம்லன்னு...

எனக்கென்னப்பா பஞ்சாயத்து....எங்கப்பன் ஆயி ஆசைக்கு ஒரு வீடு....
என் பொஞ்சாதி பிள்ளைங்களுக்காக ஒரு வீடு அப்புறம் சின்ன காரு...
வகை தொகை தெரியாம தின்ன தொப்பை வயிறையே மறச்சு கெடக்க...
சந்தனம் குங்குமம் வித தெருக்கள்ள இப்போ நெறஞ்சு கடக்க சாராயத குடிச்சு புட்டு
குப்புற தெனம் படுத்து குதூகலமா செல்ல நோண்டுனா
வருசத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டும் கேப் விடாம வர்ற மெசேஜ் தான்
தொப்புள் கொடிய பெசையுதப்பா......

அது ஆசையோட என் நண்பர்கள் அனுப்புற விடுதலை திருநாள் வாழ்த்துக்கள் மாப்ளன்ற
பல்லாயிரம் வீரம் விவேகம் நுண்ணறிவு மண்ணோடு போன கண்ணீர் கதை பொதிந்த ஒரு வரி சின்ன கவிதை.....

அருண் பக்கங்கள் - கடவுள்


வாழ்க்கையின் வருத்தத்தை போக்குவதற்கான நிவாரணி நீ என்கிறார்கள்...
இன்ப துன்பம் இல்லாவிடில் வாழ்க்கை ஏது?

மகிழ்வான தருணங்கள் உன்னால் அதனால் நன்றி தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள்...
நன்றி கேட்டுக்கொள்ள எங்கிருக்கிறாய் நீ இந்த அறிவியல் உலகில்?

கல்லிலும் கட்டையிலும் கம்பளங்களிலும் நீ என்கிறார்கள்....
அதனை உண்டாக்கும் என் கைகளில் இருந்து தான் நீ அதற்குள் சென்றாயோ?

அதிகம் பேசாதே அகராதி என் அறிவே உன்னிடமிருந்து என்கிறார்கள்...
நாகரீகம் வளராது சண்டையில் மடிந்த உலகத்தை ஒற்றுமையாக்க உபயோகிக்கப்பட்ட பயம் அல்லவா நீ?

ஒரு முறை மட்டுமே வாழப்போகும் இந்த பூலோக வாழ்க்கையிலேயே பலருக்கு நிம்மதி இல்லை....
வான அறிவியல் கண்டறியாத அந்த மற்ற லோகங்களும் வேண்டுமா?

நினைத்தது நடவாவிடில் பக்தி குறைந்து விட்டது இன்னும் ஏற்றுங்கள் என்கிறார்கள்...
இறை நாட்டம் என்பது எப்போது சமையல் குறிப்பானது?

காண கண்கள் தேவை இல்லை....உணர மனம் வேண்டும் என்கிறார்கள்...
அதற்கு கண்ணை மட்டும் மூடினால் போதுமே...கதவுக்கு வெளியில் ஏன் காக்க வேண்டும்?

நாளும் கிழமையும் தவறாது உன் அலுவலகம் வந்து வருகை பதிவேடு தந்தவனும்
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமும் உன்னை போற்றி துதித்தவனும்
நாணிய வாழ்க்கை வாழ்ந்து அழிபவனுக்கும் மூச்சு என்னோவோ ஒரே போல் தானே வெளியேறுகிறது
நான் பார்த்த வரையில்?!

அதிலும் கொடுமை உனக்காக அடித்து செத்தவர்களுக்கும் கூட சேர்த்து தான்...

இன்று இப்படி நாளை வேறு என்ற இயற்கையின் எதார்த்தம் புரியாதவர்களும்
தன்னால் நடந்தது என்பதை செருக்கில்லாமல் உணர தெரியாதவர்களும்
மீண்டும் முயலலாம் என்ற  தன்நம்பிக்கை இல்லாதவர்களும் சேர்ந்து உருவாக்கிய உருவகமே...

இது செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு மனிதன் எழுதிய உண்மையின் உரைகல்
சற்றே உரசிய கல்.....இது பலநூறு வருடங்களுக்கு பிந்தைய சந்ததிகளுக்கு
ஏனெனில் பூமி முழுவதும் நீ ஏற்கனவே பரவி விட்டாய்....

அருண் பக்கங்கள் - ஒரு கிராமத்து மென்பொறியாளன்

காலேஜ் வாழ்கையில கண்ணடிச்சப்போ தெரியல....
அவ கண்ணாடி அழுததுல காரணம் கொஞ்சம் வெளங்கிச்சு...
வேலை வெட்டி தேடும்போது வெவரம் ஏதும் பத்தல..
வாங்குன வேலைய பார்க்கையிலே வெட்டியாவே இருந்து இருக்கலாம்னு தோணுது ..

எங்க வீட்டு பொறியாலன்னு என்னைய படிக்க வெச்சாங்க..
மங்கலாக நானும் படிச்சு மதுரைல இருந்து கெளம்புனேன்.....
பட்டைய போட்டு படிச்சுகிட்டு போனாலும் நெட்டையா ஒருத்தன் வந்து உனக்கு இங்க வேலை இல்லேம்பான்...

போட்ட சட்டையும் தாகத்துல ஒரு நாளைக்கு தாங்காது...
குட்டையில கூட தண்ணீ இங்க தேங்காது.....
சென்னைன்னு அது பேரு இருந்தாலும் தொன்னையில தான் சோறு திங்கணும்....

வேண்டி வேண்டி வேலை தேட போனாலும் ஆண்டி கோலம் தான் திரும்பும் போது அதிகம்....
அந்த ஆண்டிய என் ஆத்தா அதிகமா வேண்டுனதுனாலவோ என்னவோ கடைசில ஒரு வேலைய கொடுத்தான்...
கழுத்து காலர் மேல மாட்டு கயிற கொடுத்தான்.....

செக்கு மாடு வட்டம் கூட ஆரம் மாறும்.....
பத்து வருஷம் ஆனாலும் பட்டன் மட்டும் தான்....

பக்கத்துல பொண்ணாச்சேன்னு பயத்தோட நான் இருப்பேன்..
கக்கத்துல நெருப்பெடுத்து கல கலன்னு அவ பொகைக்கிரா.....

சத்தியமா புரியலப்பா சனி ஞாயிறு என்ன பண்ணணு...
குப்புறவே படுத்து கெடப்பேன் ஹோட்டல் சாப்பாடு வேணாமுன்னு...
சத்தம் இல்லாம மாமி வீட்டு சட்டி வாசம் கொடுக்கையில
சுத்தம் பண்ணாத தொண்டை சங்கு லேசா ஊதும்....

எந்த பக்கம் போனாலும் எவனோ ஒருத்தன் குடிக்கிறான் ...
எமகாதகனா பார்த்து தான் எல்லாருக்கும் மேனேஜர் ஒருத்தன் இருக்கிறான்...
நொட்ட சொல்லி நொட்ட சொல்லியே நோக வைச்சாலும்..
பார்ட்டின்னு ஒன்னு வெச்சா பல்லுல மொகம் காட்டுறான்...

நட்டு வச்ச செடி கூட நல்ல பெரிய மரம் ஆயாச்சு
பொட்டு பணம் சேரலையே என் வீட்டு பொட்டியில
நாளைக்குன்னு ஒரு நாள் விடியும்னு நம்பிக்கைல தூங்குனாலும்
காலர் மேல கட்டுன கயிற மட்டும் கடைசி வர கழட்ட
தைரியம் இன்னைக்கும் இல்ல.....

கடைசியா ஒண்ணு மட்டும் புரியுது.....
இதுக்கு எங்கப்பன் கையில புடிச்ச மாட்டு கயிறே மேல  தான்டோய்....

அருண் பக்கங்கள் - நட்பு


அறியாத வயதினில் அவன் எறிந்த கல்லின் கரையாத காய தழும்பு நட்பு....
.
அரைக்கால் டிராயரை அவிழ்த்து விளையாட்டு காட்டினாலும்
 அழும் நீரினில் முகம் சுருங்குவதும்
கரை ஏறி கண்மாய் ஏறி நுரை பொங்க நீச்சலடித்ததும்
மழையின் கூதல் போக்க மண் பூசி விட்டதும்
பட்டாசு வெடிக்க காசில்லாத பொழுதுகளில் பாலிதின் பைகளிலே தீபாவளி காட்டியதும் நட்பு.....

தோற்றுப்போன தேர்வுகளின் முடிவுகளை நீர்த்து போக செய்யும்
நீயும் என் பக்கம் தான் நிற்கிறாய் என்ற எண்ணம்...
படிப்பதற்காக கூடிய பல இரவுகளில் நாம் படக்கதைகள் பேசியது தான் அதிகம்....

எவனோ ஒருவன் மணக்கும் பெண்ணிற்காக என் நண்பனுடன் சேர்ந்து நானும் வாங்கிய அடி
இன்னும் சிரிக்க வைக்கிறது என் இதழ்களை.......

பார்த்த பொழுதுகளில் எல்லாம் பரவசமாக பாட்டில்களை தேர்ந்து எடுத்தாலும்
என் பாதி நோயையையும்  பகிர்ந்து கொண்டவன் என் நண்பன் ......

சில நேரங்களில் சிரிக்க விட்டு, பல நேரங்களில் அழ வைக்கும் காதல் நோய்க்கான கடவுளின் மருந்து நட்பு...
எதற்காக பேசுகின்றான் என்ற எண்ணம் துளியும் எழாமல் எனக்காக நீ ஆட்டிய தலை அதன் பெருமை சொல்லும்....

திருமண சந்தையில் எடை போகும் நாட்களிலும் விடை பெற போகும் வேதனை நொடிகளிலும்
விளையாட்டாய் எனை பார்த்து நீ உரைப்பாய் ."விடுடா எல்லாமே வாழ்க்கைல வர தானே செய்யும்"....

சொட்டு சொட்டாய் சேர்த்து வைத்த நட்புதனை பட்டு நூல் முள்ளாய் கிழித்து எரிந்தது காலம்...
எட்டு வைத்து நாம் முன்னேறும் எல்லா பொழுதுகளிலும் விட்டு விட்டே செல்கின்றோம் சில நட்புகளை....

உன் துக்கத்தினை உறவுகள் இரு மடங்காக்கும்....
உன் மனைவியின் உடல் நலம் உன்னை யோசிக்க வைக்கும்...
தள்ளாத வயதினில் தாய் தந்தையிடமும் பகிர முடியாமல் நிற்கையிலே
தோளுக்கு பின் கேட்கும் ஒரு குரல் உன் உயிர் காக்கும் "என்ன ஆச்சு மாப்ள?"...........

உதிரத்தில் உறவு கொண்டாட முடியாத இந்த அதிசயத்தை சேர்த்து வைக்கும் தெருமுனை தேநீர் கடைகளுக்கு நன்றி........

அருண் பக்கங்கள் - கம்பம்


அன்றொரு நாள் மாலையிலே
அந்த மாமரத்தின் கிளையின் பின்னே ஒளிந்து விளையாடியது...

பல நேரங்களில் பசுமையாக காட்சி அளிக்கும்....
பல முகத்தினில் சிரிப்பை வரவழைக்கும்....

சில நொடி பொழுதில் மட்டும் அதன் கண்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
 ...பூ விழுந்து விட்டது என எண்ணி கொள்வேன்....

அடர்ந்த வாகனங்களால் பாவம் அதன் கண்கள் அதிக நேரம் சிவந்தே காணப்படும்.....

முன்னர் பெய்த கடும் மழையினில்
அதன் உடல் சரிந்து கிடந்தது
கண்கள் திறக்கவில்லை நெடுநேரமாய்...

எல்லோரும் முண்டியடித்து சென்று கொண்டே இருந்தனர்....
நின்று நெடுநேரம் பார்த்து கொண்டே இருந்தேன்
என்னை பார்த்து கண்ணடிக்காத அந்த சிக்னல் கம்பத்தினை.....

அருண் பக்கங்கள் - அப்பா



மொதோ தரம் முழிக்கையிலே மூச்சு கொஞ்சம் விட்டீங்க...
மூணாவதா பெத்தாலும் மொளைக்க வெச்சு ரசிச்சீக ...
காலெடுத்து வைக்கையிலே கரம் புடிச்சு நின்னீங்க...
மேலெடுத்து தூக்கி வாரி மேய்ச்சு என்ன வளர்த்தீக...
பயலுக்கு சுடு கஞ்சீனு பழைய சோத்த ருசிச்சீக...
பச்சை மொளகா போதுமுன்னு கடை பல்ல சிரிச்சீக....
காசுன்னு கேக்கும் முன்னே கைக்குள்ள ஆயிடுமே....
காய்ச்சல்ல கொதிக்கையிலே கட்டி புடிச்சா போயிடுமே...
முத்தமுன்னு கொடுத்ததில்ல மொத்தத்தையும்  கொடுத்தீக...
பெத்த புள்ளைய படிக்க வெச்சு சொத்தெதுவும் சேர்க்கலையே...
ஒன்னாம் தேதி ஆகி போனது  ரெண்டாம் நாளும் கூட மறந்து போகும்...
ஆனா ஒரு மாசமும் தவறாம உங்க சைக்கிள் முன்னாடி சக்தி ஸ்வீட்ஸ் பை ஆடும்....
பொங்கல் தீபாவளி வந்தா எத்தனை காசு கேட்டு அரிச்சிறுப்போம்....
எங்களுக்குன்னு எல்லாத்தையும் கொடுத்து புட்டு  திரி பிரிச்சு சிரிச்சு நிப்பே....
மொதோ மொறையா உன் கருப்பு முடி நரைக்கையிலே
மொத்த சத்தியும் விட்டு போச்சு....
நரச்ச முடி இருந்த இடம் நாளடைவில கொட்டி போச்சு...
இரும்பு தேகம் கொஞ்சம் இப்போ இளகி தான் போயிடுச்சே...
கரும்பு உடச்ச கரம் ரெண்டும் நரம்பு மட்டும் காட்டிடுச்சே....
தள்ளாட நா நடந்தப்போ தாங்கி தான் நின்னீக..
தாங்கி தாங்கி நீ நடக்கும் காலமுன்னு நான் காண வந்ததும் ஏன்?...
கள்ளழகர் காட்ட சொமந்த வைர தோளுக்கு என்னாச்சு
காலம் என்னும் கயிறு இறுக்கி காய்ஞ்சு போன மண்ணாச்சு....
பண பாரம் கொறைக்க நான் உன்ன விட்டு வெகு தூரம் வந்தாலும்
என் மன ஆரம் என்னவோ உன் வட்ட முகம் மட்டும் சுத்துதேப்பா.....
உன் கூட ஊரு சுத்தி ரொம்பவும் தான் நாளாச்சு...
பன்னாட வயசு ஆகி இப்போ ரொம்ப பாழ் ஆச்சே....
வயித்தில மட்டும் தான் நீ சொமக்கல....
ஆனா உன் வயசு முட்டும் சொமந்தியே....
ஒழுங்கா நீ  நடக்கையிலேயே நான் ஊரு வந்து சேரணுமே.....

நான் அப்பனாவே ஆனாலும் என் அப்பா போல மாறணுமே!!......

அருண் பக்கங்கள் - காலம்


சனிக்கிழமை காலையில் எண்ணெய் தேய்க்க வரும் அம்மாவிடம் இருந்து தப்பி ஓடுவேன் என் பம்பரத்தை எடுத்து கொண்டு........
குமார் அண்ணன் வந்த உடனேயே சில்லாக்கு ஆரம்பமாகும்....
நிழலுக்கும் வேர்க்கும் கோடை வெயிலில் தான் எங்கள் கில்லி தாண்டு உச்சமெடுக்கும்...........
பச்சை குதிரை தாண்டியே பாதி காயம் பட்டிருக்கும்........
பல்லாங்குழி ஆட பாசமாக என் அக்காள் காத்திருக்கும்.....
உள்ளங்கை வேர்த்துவிடும் கம்பு தள்ளி......
கை முட்டி தேய்ந்தது சொட்டாங்கல்லில்.....
இருட்டும் பொழுது ஒளிய தொடங்குவோம் ஒருவனை கண்டு பிடிக்க சொல்லி......
இரவின் முன்னே விளையாடுவோம் ராஜா ராணி........
வெள்ளி கிழமை மட்டுமே வரும் கோயில் யானை.....
புகை கக்கி பின்னாலே இழுத்து செல்லும் கொசு வண்டி....
மின்சாரம் தடைபட்டால் எங்கள் தெரு மெழுகின் சொர்க்கம்...
இமை மூடாமல் தானாகவே தூக்கம் சொக்கும்.....
இத்தனையும் தோன்றும் கதை போல் என் மகனுக்கு !!.....

கதையாவது கேட்க பிடிக்குமோ அவன் பிள்ளைக்கு ??.......

Thursday, November 16, 2017

தெய்வக் குற்றம்

திடீர் காப்பிப் பொடியை
வென்னீரில் கலந்து தந்தாள் பணிப்பெண்
கும்பகோணத்துக்கு மேலே பறந்து கொண்டு இருந்த
விமானத்தில்.