Sunday, January 29, 2012

சங்கத் தமிழ் மூன்றும் தா!

மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் கலாசார, மொழி பாரம்பரியங்களை போற்றிக் காப்பது என்னை எப்பொழுதும் வியக்க வைக்கும். இங்கு ரிச்மண்டில் எனக்கு  இலங்கை, மலேசியா, சிங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் கயானா நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது என்னை மூக்கில் விரல் வைக்க வைப்பார்கள். உதாரணமாக எனது மலேசிய நண்பர் சேகரின் மூலம்தான் 'ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும்' என்ற பழமொழியின் அர்த்தம் தெரிந்தது.  ஆமை புகுந்தால் வீட்டுக்கென்ன ஆகும்? அந்த ஆமை வெறும் ஆமையல்ல. பொறாமை!

கயானா நண்பர்களின் வீட்டு பஜனைக் கூட்டத்தில் அவர்கள் வாசித்த டன்டால்  எனும் கருவியின் பிண்ணனியும் சுவாரசியமானது. கரும்புத் தோட்டத்து மாட்டு வண்டியின் அச்சை இசைக்கருவியாக பயன்படுத்தி தங்கள் கலாசாரத்தை காத்திருக்கிறார்கள்.

இன்னும் இது போல பல சொல்லிக் கொண்டு போகலாம். இன்றைய நிகழ்வுக்கு வருகிறேன்.  நேற்று  ஒரு நண்பரின் மகளின் நிச்சயதார்த்தத்துக்கு போய்விட்டு அதற்குப் பிறகு எங்கள் மலேசிய நண்பர்களின் வீட்டுக்குப் போய் ஓய்வாகக் கதை பேசிக் கொண்டிருந்தோம். வீட்டில் அன்றாடம்  தமிழ் மிகக் குறைவாகப் பேசும் சராசரி இந்தியத் தமிழகக் குடும்பங்கள் போன்ற குடும்பம்தான் இவர்களும் :-).  பேச்சு நமது பழக்கவழக்கங்களில் இருந்து பிரார்த்தனை, பூஜை, பாடல்கள் என்று போய்க் கொண்டிருந்தது. சிறு வயதில் கற்ற இறைவாழ்த்து பாடல்கள் பல இருந்தும் நிறைய மறந்துவிட்டது என்று  இரண்டு மலேசியக் குடும்பத்தினர் பேசிக் கொண்டிருந்தனர்.  இன்னும் எதெல்லாம் நினைவிருக்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வீட்டு இல்லத்தரசி தன் இனிய குரலில் ஒரு பாடலைப் பாடி எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

இந்தப் பாடல் சத்தியமாக எனக்குத் தெரியாது.  தமிழகத்தில் வளர்ந்த எத்தனை பேருக்கு இந்தப் பாடல் தெரியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  சற்று இந்தப் பாடலைப் பார்ப்போம். ஔவையின் நல்வழியில் வரும் கடவுள் வாழ்த்து இது.


பிள்ளையாரிடம் முத்தமிழ் அறிவைக் கேட்பது போல் அமைந்திருக்கிறது இப்பாடல். ஆனால் அவருடைய பதிவில் இப்பாடலுக்கு  மேலும் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்கிறார் சுந்தர வடிவேல்.

*நண்பரின் வேண்டுகோளுக்கிணங்கி அவரது வீடியோவை நீக்கிவிட்டேன்.

9 comments:

  1. நாகு, இந்தப் பாடலைக் கேள்விப்பட்டிருக்கிறேன், முதல் இரண்டு வரிகள் மற்றும் கடைசி வரி மிகப் பரிச்சயம், ஆனால் அவ்வையார் எழுதியதென்று கண்டிப்பாக நினைவில்லை.

    கொஞ்சம் கிராமியப் பழமொழிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு, எழுத இருக்கிறேன், அல்லது முப்பதிற்கு மேற்ப்பட்ட பாரதிராஜா படங்களில் இருந்து கொஞ்சம் பிரயோஜனம் வேண்டாமா?

    ReplyDelete
  2. ஜெயகாந்தன் இந்தப் பாடல் அவருக்கு மிகவும் பரிச்சயமான பாடல் என்கிறார். இந்தப் பதிவை எழுதியதிலிருந்து என் மலேசிய, சிங்கை நண்பர்களிடம் என் பெயர் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. "என்னது, நாகு பாலும், தெளிதேனும்... கேட்டதில்லையா", என்று ஒருவர் கேட்பார். அதைக் கேட்டவுடன் அவரது மனைவி மயக்கம் போட்டு விழுவார். அவரைத் தண்ணீர் தெளித்து எழுப்பியவுடன் அவர் அதே கேள்வியை கணவரிடம் கேட்பார். உடனே கணவர் மயங்கிவிழுவார். இதே கதை தொடர்கிறது. நான் தான் இந்த ஊரில் தமிழையே தாங்கிப் பிடிப்பது போல ஒரு பில்ட் அப் போட்டு வைத்திருக்கிறோமே :-)

    என்னவோ நான் 'என்னடி ராக்கம்மா' போன்ற பாட்டையே கேட்டறியாத மாதிரி சீன் போடுகிறார்கள். என்னை இந்த இழிசொல்லில் இருந்து அந்த கரிமுகத்து தூமணிதான் காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete
  3. OMG! இந்த பாட்டு தெரியாதா? எங்க ஊர்ப் பக்கங்களில் குழந்தை பேச ஆரம்பிக்கும்போதே சொல்லித் தர முதல் பாடல் இதுதான்.

    ReplyDelete
    Replies
    1. Double Like! Nagu theriyama intha postla oru varthai vittaalum vittar, ellarum pottu thaakkitanga.

      Delete
  4. கவிநயா - அதுக்குள்ள மயக்கம் தெளிஞ்சிட்டுதா?

    நான் ஜொஹான்னஸ்பர்க்கில் வளர்ந்தேனா அல்லது உங்களுக்கு பினாங் பக்கமா? :-)

    பத்து கிலோமீட்டரிலேயே மழலைக்கல்வியில் இவ்வளவு வித்தியாசம் இருப்பதை உணர்ந்து நானும் ஒரு குட்டி மயக்கம் போட்டேன்...

    ஜெயகாந்தன். மயக்கம் போட ஒரு பெரிய வரிசையே நிக்குது போல :-)

    ReplyDelete
  5. நாகு, வாட் யா ? இந்தப் பாட்டு தெரியாதுன்னது சும்மா ஜோக் தான ? ;))))

    ReplyDelete
  6. வரிசை அசுர வேகத்தில் வளர்கிறது.

    இது கூட தெரியாதா? தமிழ் சங்க தமிழ் வகுப்புகளில் எல்லாம் இந்தப் பாடலில் தொடங்கிதானே நடத்துகிறோம் என்று ஒரு வாங்கு வாங்கினார், மாஜித் தல முரளி. கவிமணிக்கும் நாமக்கல்லாருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் வகுப்புகளுக்கெல்லாம் நாம் போவதில்லை என்று மீசை மண்ணைத் துடைத்து வைத்திருக்கிறேன்.

    இன்று இனிமேல் எந்த தொலைபேசி அழைப்பையும் எடுப்பதில்லை. பத்தாததுக்கு மிக முக்கியமாக மு.கோ.வுக்கு போன் போட்டு என் பதிவைப் படியுங்கள் என்று ஒரு வேண்டுகோள் வேறு.

    இப்படிக்கு,

    நுணல்.

    ReplyDelete
  7. என்னை விடுங்கள். அழகாகப் பாடியிருக்கிறாரே அவரைப் பற்றியோ, டண்டால் பற்றியோ ஆமை பற்றியோ யாரும் ஒன்றும் சொல்லக் காணோமே?

    அந்த வீடியோவை இன்றைய தினமே தூக்கிவிட வேண்டும் என்று கட்டளை வேறு வந்திருக்கிறது. ஆகவே இன்றே மீண்டும் பார்த்து விடுங்கள்.

    ReplyDelete
  8. அச்சோ பாவம் நாகு! நான் அப்பவே மறந்துட்டேன்!
    வீடியோ பாத்துட்டேன். அவங்க தமிழ் அழகா இருக்கு :)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!