Friday, July 01, 2011

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா (கோயம்புத்தூர்) - 1


கோவை என சுருக்கமாக அழைக்கப்படும் கோயமுத்தூர் நான் பிறந்து வளர்ந்த ஊர். மாசுபடாத காற்று, சுவையான சிறுவாணி குடிநீர், அதிக போக்குவரத்தில்லாத சாலைகள் ஒருகாலத்தில் (பதினைந்து வருடங்களுக்கு முன்னர்) இருந்தன. இப்போது சற்று மாறிவிட்டது. இருந்தாலும் கால மாற்றத்தால் மாசுபட்டதில்  மற்ற ஊர்களை காட்டிலும் கோவையில் சற்று குறைவே என எனக்கு பட்டது. சுற்றிலும் அடர்ந்த காடுகள், பாலக்காடு கேப் (rainshadow என்று கூறுவார்கள்) இருப்பதால் என்றும் குளு குளு வென இருக்கும்.   

கோவையின் சிறப்பு - அழகு கொங்கு தமிழ்,  சிறுவர்களை கூட "ங்க" போட்டு அழைக்கும் பண்பு. இவையிரண்டும் இந்த காலத்தில் வேறு எங்கும் பார்க்கமுடியாதவை.  எங்காவது ஆட்டோ ஓட்டுனர் "வாங்க.. போங்க.."  என்று கூப்பிட்டால் அது கோவையை தவிர வேறு ஊராக இருக்காது!

அதிகப்படியான  பள்ளிகள் , சிறந்த கல்லூரிகள் இருக்கும் ஊர். அந்த காலத்தில் பெரும் நிலக்கிழார்கள் தங்கள் செல்வத்தை மூட்டை கட்டி வைக்காமல் பல நல்ல பள்ளி/கல்லூரிகளை நிறுவினர்! எங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் சர்வ ஜனா மேல் நிலைப்பள்ளியின் தொன்மையை பற்றி சொல்லவேண்டுமென்றால், அந்த பள்ளியின்  விருந்தினர் வருகை கையேட்டில்  மகாத்மா காந்தி கையெழுத்திட்டிருக்கிறார்கிருஷ்ண்ணம்மாள் பள்ளி/கல்லூரி (ஹ்ம்ம்) வாசலில் பி-4 காவல் நிலையம் இருப்பதால் அந்த கல்லூரி தான் பெண் பிள்ளைகளை பெற்றவர்க்கு முதல் விருப்பத் தேர்வு! என் ஊரான 'பீளமேடு'வை  சுற்றி பத்து பதினைந்து கிலோமீட்டர் வட்டத்துக்குள் மட்டுமே இருபது தனியார் பள்ளிகளும்  பத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளும் உள்ளன!  பி.எஸ்.ஜி., சி..டி, எஸ்.என்.ஆர்., ஜி.சி.டி., தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, ஜி.ஆர்.டி.,  என பத்திற்கும் மேற்பட்ட சிறந்த பொறியியல் மற்றும் இரண்டு மருத்துவக்கல்லூரிகளும் அடக்கம்! ஜி.டி.நாயுடு குழுமம் சில நல்ல தொழில் பயிற்சி கல்லூரிகளை நடத்திவருகிறது

இந்த ஊரில் மட்டும் வீதிக்கு ஒருவர் கிரைண்டர், மிக்சி தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகளை நடத்துவதை பார்க்கலாம்! அது தவிர  பல பெரும் தொழிற்சாலைகள் - லஷ்மி மெசின் வொர்க்ஸ், பிரிகால் (வாகன dashboard), ஸ்பார்க் பிளக், யு.எம்.எஸ். ரேடியோ, டெக்ஸ்டூல், விஸ்கோஸ், திருப்பூர் textiles),  பஞ்சாலைகள் என வேலை வாய்ப்பிற்கு குறைவே இல்லாத ஊர்!  இந்த காலத்தில் டெக்னாலஜி பார்க் வந்தவுடன் டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ  என பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை நிறுவியுள்ளன.

  கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி! அதற்கேற்ப  மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் (கரிகால் சோழனால் கட்டப்பட்டது!), பன்னாரி அம்மன்கோனியம்மன்மாசாணியம்மன், ஐயன்கோவில்பூண்டிஈச்சனாரி விநாயகர்தண்டு மாரியம்மன்வெள்ளியங்கிரி மலைகாரமடை  கோவில் என பல புரதான சிறப்புள்ள கோவில்கள் இங்கே உள்ளன! வெள்ளி மற்றும் சனி அன்று இங்கு கூட்டம் அதிகம். எனக்கு பிடித்த கோவில் மருதமலை மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள சாரதாம்பாள் கோவில்.

நான் பார்த்த/சுற்றிய/உணவருந்திய/மனதில் நின்ற சில இடங்கள்  நேரு விளையாட்டரங்கம்,  வா.வு.சி.  பூங்கா, டாப் ஸ்லிப்ஸ் (மலை),  அட்டகட்டி மலைபகுதிஒப்பணக்கார வீதி (சகல விதமான பொருட்களும் கிடைக்கும்!), அன்னபூரணா உணவகம் (இட்லி சாம்பார்!), அங்கண்ணன் கடை (பிரியாணி), இராணி உணவகம்,  ஆர்யா பவன் (சில்லி பரோட்டா), சிக்கன் சம்பூர்ணா (என் அண்ணனின் நெருங்கிய நண்பர் கடை!),  ஸ்ரீபதி தியேட்டர் (ஆங்கில படங்கள் காண - ஹலோ யாரது.. அந்த மாதிரி படம் அல்ல, குடும்பத்துடன் காணும் படங்கள்., இந்த திரையரங்கம் இன்னும் இருக்கிறதா என தெரியாது ), கே.ஜிதியேட்டர் , சாய் பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் என பட்டியல் நீளும்தேன் மிட்டாய் (ஐந்து பைசா தான்!), சுகன்யா பேக்கரி பப்ஸ்,  டைமண்ட் சிப்ஸ்,   என்.எம்.பி பேக்கரி முட்டை பப்ஸ், தேங்காய் பன்  இன்றும் நாக்கில் எச்சில் ஊறவைக்கும்!  ஹிக்கீன்போதம்ஸ் புத்தக கடை, மணிகூண்டு கடைகள், டவுன் ஹால் துணி கடைகள், லஷ்மி காம்ப்ளெக்ஸ் (எண்பதில்  பல மாடி கொண்ட உள்  அரங்கு கடைகள்-mall. நான் முதன் முதலாக ஒலி நாடா வாங்கி பாடல்கள் பதிவு செய்தது இங்கே தான்!),  ஹோப்ஸ் காலேஜ் டீ கடை,  கரிவரதன் ரேஸ் மைதானம், ரேஸ் கோர்ஸ் சாலை (இங்கே தான் முதலில் ரோலர் ஸ்கேடிங் பழகினேன்) என பல இடங்கள்  இன்னமும் கண் முன்னே நிற்கிறது! 

கோவைக்கே உரித்தான லொள்ளு படித்தவர், படிக்காதவர், சிறியவர், பெரியவர் என எல்லோரிடமும் இருக்கும்!  அதை சினிமாவில் கொண்டுவந்து வெற்றிகண்டனர்  பல நடிகர்கள்!  பாக்யராஜ்சத்யராஜ், மணிவண்ணன், சிவகுமார்நிழல்கள் ரவி, கோவை சரளா, கௌண்டமணி என கோவையிலிருந்து சினிமாவிற்கு வந்தவர்கள் ஏராளம்தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (பின்னாளில் டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கம்  1900ஆம் ஆண்டு கட்டப்பட்டது !  இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர்! சினிமா தவிர, உடுமலை  நாராயணகவி,  ஜி.டி.நாயுடு, F1 ரேஸ் வீரர் கரிவரதன், நரேன் கார்த்திகேயன் பல பிரபலங்கள் பிறந்த ஊர்.   

வேலைக்காக மெட்ராஸ் செல்ல வேண்டியிருந்தது. வேறு ஒரு ஊருக்கு சென்ற பின் தான் நம்ம ஊரின் சிறப்புகள் நினைவிற்கு வரும்!  சிறுவாணி தண்ணீர் குடித்தவருக்கு  மெட்ராஸில் பிஸ்லேரி தண்ணீர் கூட குடிக்கமுடியாது! 'தோடா.. வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா.. சாவு கிராக்கி' என்று மெட்ராஸ் ஆட்டோகாரர் திட்டுடன் நாள் ஆரம்பமானால் உடனே கோவை மக்கள் நினைவில் வருவார்கள்! பேருந்து நிலையத்தை தாண்டி நிறுத்தாத ஓட்டுனர், அவரசரமாக ஓடி வரும் பெரியவருக்காக வண்டியை வழியில் நிறுத்தி ஏற்றிக்கொள்ளும்  ஓட்டுனர் என அடுக்கிக்கொண்டு போகலாம்ஒவ்வொரு முறை நான் பிறந்த ஊருக்கு விடுமுறையில் வரும்போதும் இந்த பண்புகள் மாறாமல் இருந்ததை எண்ணி வியந்திருக்கிறேன். அமெரிக்கா வந்தவுடன் எங்காவது ஒருவர் "சொல்லுங்'ணா" என பேசுவதை கேட்டால் உடனே போய் அவரிடம் கோவையில் எந்த இடம் என்று கேட்டதுண்டு!  சரி,  ரிச்மண்டில் கொங்கு தமிழ் மக்கள் யாராவது உண்டா

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா

இந்த பதிவை ஒரு தொடர் பதிவாக்கினால் பல இடங்களை பற்றி (விக்கி'யில் இல்லாத பல தகவல்களை) தெரிந்து கொள்ளலாம் என தோன்றியது! ஆதலால் அடுத்து நான் பண்ருட்டியாரை (அவருக்கு தெரியும் யார் என்று! உங்களுக்கு தெரியாதென்றால் அடுத்த பதிவு வரும்வரை காத்திருக்க வேண்டும்!) இந்த பதிவின் தொடர்ச்சியாக அவரது  ஊரைப் பற்றி  எழுத அழைக்கிறேன்!


14 comments:

  1. நன்றாக இருக்கிறது கொங்கு நாட்டு நினைவுகள்.

    பண்ருட்டி பத்தி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு எனக்கும் ஆசை. சூப்பர் - யாரோ எழுதப் போறாங்கன்னு சொல்லியிருக்கீங்க, பார்ப்போம்...

    ReplyDelete
  2. //பண்ருட்டி பத்தி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு எனக்கும் ஆசை.// கோயம்புத்தூர் குசும்பு படிச்சவுடனே பண்ருட்டி குசும்பு காட்டிவிட்டீர்! அடுத்த பதிவை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  3. பாக்யராஜ் ஒரு ஆளுக்காகவே கோவையை நான் விரும்புவதுண்டு. 1984 -ல் நான் கோவை வந்து ஒரு மாதம் தங்கி இருந்தேன். (கணபதிபுரம்). எங்கு பார்த்தாலும் சிறிய தொழிற்சாலைகள். கங்கா தியேட்டரில் "சரித்திர நாயகன்" என்ற சிவாஜி படம் பார்த்தது பரவசமான அனுபவம். சிறிய ஊரிலிருந்து வந்தது கொண்டு திரைப்பட "கட்-அவுட்" களை வாயைப் பிளந்து பார்ப்பேன். அப்போது "நான் பாடும் பாடல்" ஓடிக்கொண்டு இருந்தது. முக்கால்வாசி பேருந்துகள் ஏதாவது ஒரு "பாளையத்திற்குச்" செல்லும். அங்கு எத்தனை பாளையங்கள் உண்டு என்று எண்ணிக்கொண்டிருப்பது என்னுடைய அப்போதைய பொழுதுபோக்கு. சில நண்பர்களின் மனைவியர் "ங்கங்க" என்று மரியாதயை இரட்டிப்பார்கள்.

    ReplyDelete
  4. //பண்ருட்டி பத்தி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு எனக்கும் ஆசை// - நாகு - பண்ருட்டி ராமச்சந்திரன் உங்களுக்கு தெரியுமா? பலா பழம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். வேறென்ன விசேஷங்கள்?

    ReplyDelete
  5. கோயமுத்தூர் படங்கள் சிலதை சேர்த்திருந்தால் இன்னும் ஜோராக இருக்குமே?

    சத்யா: பண்ருட்டியாரை எனக்குத் தெரியும். அவருக்குத்தான் என்னைத் தெரியாது. அனைத்து பண்ருட்டி விசேஷங்களையும் இங்கே சொல்லிவிட்டால் அப்பறம் தனியாக என்னதான் எழுதுவது.

    மற்றபடி இங்கே கோயமுத்தூரின் இடியைத் திருடவேண்டாம் என்றும் ஒரு எண்ணம். :-) புரியவில்லையென்றால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. சென்னையிலிருந்து திரு.நரசிம்மன் மின்னஞ்சலில் அனுப்பியது:

    இரண்டு பதிவுகளுமே சுவாரசியமாக இருக்கின்றன. மரியாதை காண்பித்து மரியாதை பெரும் வழக்கம் சென்னை தவிர மற்ற எல்லா,
    தென்மாவட்டங்களிலும் உள்ளதே. ஆகையால்தான், அந்தக் காலத்தில் மதராஸ்காரன் என்றால் பிற மாவட்டக்காரர்கள் சற்று ஏளனமாகப் பார்ப்பார்கள்.
    ஆனால், வங்காளத் தலைநகர் கொல்கத்தாவினரை, மற்ற மாவட்டத்தார் மதிப்புடன் kolkEshiyan என்று குறிப்பிடுவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
    - நரசிம்மன்

    ReplyDelete
  7. interesting post.

    //பண்ருட்டி பத்தி ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனும்னு எனக்கும் ஆசை. சூப்பர் - யாரோ எழுதப் போறாங்கன்னு சொல்லியிருக்கீங்க, பார்ப்போம்...//

    'Nagu ve' sollittaru .. paarpoom post yaaru eluzuthara, eppo varuthu ;)

    ReplyDelete
  8. Thanks for the nice article about Coimbatore., The Sreepathy theatre in Trichy Road has become Kannan Departmental Store now., All other facts u told remain the same.,

    The 6 laning of Avinashi road has actually made the road big but lots of trees had been cut which has spoiled the nature to an extent., but no other way, as the traffic is increasing.,

    In all the 188 Traffic Signals inside the City, Surveillance Cameras have been installed and the road sense has improved a lot now.,

    I still remember during the college days, in weekends we used to drive to ooty in byke and enjoy and come back.,

    The Tamil Summit gave a good boost to Cbe as all the Govt old buses where changed to new buses., roads were relaid.,

    Once the National Highways Authority finish the work between Chengapally ( 40kms from cbe on Salem road) to Walayar ( Palakkad border), im sure we can reach Chennai in 6 hours on road from cbe.,

    All are welcome to our Coimbatore soon.,

    Rtn.N.Gopalakrishnan.

    ReplyDelete
  9. ஷர்புதீன் , நரசிம்மன்,Sathiya S , சதங்கா (Sathanga) Anonymous , நாகு - Thanks you for reading and the comments! பதிவிடும் அவசரத்தில் போட்டோகளை இணைக்க மறந்து விட்டேன். இன்று மாலைக்குள் செய்துவிடுகிறேன்!

    ReplyDelete
  10. //கோயமுத்தூர் படங்கள் சிலதை சேர்த்திருந்தால் இன்னும் ஜோராக இருக்குமே?//

    மனோரமாவும் சரத்குமாரும் கோயம்புத்தூர் பாஷைக்கு ஏக போக சொந்தம் கொண்டாடி, ரொம்ப ஓவராக்கிட்டாங்க, அளவுக்கு மிஞ்சினால்?

    ReplyDelete
  11. Coimbatore endrale siraputhaan - Makkal, andha mariyadhai, iyarkai azhaghu, thozhirchaalaigal.... Adukki konde pogalaam...

    Aduthu Panruti patri ariya aavalaga ulladhu, cause I am from Neyveli - 18 kms from Panruti.....

    ReplyDelete
  12. @ Sathiya S: நாகு கோயம்பத்தூரில் எழுதிய இடங்களை படமாக இணைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். "சினிமா படங்கள்" அல்ல என நினைகிறேன்.
    @ஐயப்பன்: வந்து படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி! அடுத்த பதிவை நாகு சீக்கிரம் போட்டுவிடுவார் என நினைகிறேன்..

    ReplyDelete
  13. Jay: படம் என்ற உடன், திரைப் படம்னு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!