Monday, June 27, 2011

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்?

காலங்கள் எப்படி மாறி விட்டன? ஒரு தொண்ணூறுக்கு முற்பட்ட காலங்களில் நாம் எப்படி இருந்தோம், இப்போது எப்படி மாறி விட்டோம்? ஏகப்பட்ட விஷயங்கள் மாறி விட்டன. அதில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

அன்று.

காலை 5 : 30 க்கு எந்தோ சப்தங்கள். வாசலில் சென்று பால் வாங்கும் சப்தம். (பால் சற்று முன் கறக்கப் பட்டது, அந்த சூடு இன்னும் ஆறவில்லை ) சுமார் ஆறு மணிக்கு எழுகை - ஆல் இந்திய ரேடியோ-வில் "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்" என்று TMS பக்தி பாடல்களோடு நாள் ஆரம்பிக்கிறது. பல் தேய்த்து விட்டு ஏதாவது தின் பண்டத்தை முழுங்கினால், ஜெயா பாலாஜி இன்று என்ன செய்தி என்று தொடங்குகிறார். அது முடிந்தவுடன் வாசலில் எப்போதடா பேப்பர் காரரின் பெல் சத்தம் கேட்கும் என்ற எதிர் பார்ப்பு. கொஞ்ச நேரத்தில் தினமலர் வந்து சேர்கிறது. சிறு போட்டியை சமாளித்து அதை மேய்ந்து விட்டு ஒரு வாளி தண்ணீரில் ஒரு குளியல். தலை சீவி பாண்ட்ஸ் பவுடர் இட்டு விட்டு காலை உணவுக்குத் தயார். கிடைக்கும் கொஞ்ச சமயத்தில் ஏதாவது பாட புத்தகங்களை ஒரு சிறு பார்வை. சனி கிழமைகளில் குமுதம், கல்கண்டு வந்தால், பல நாட்கள் வைத்திருந்து படிக்கும் அளவுக்கு ஏகப்பட்ட விஷயங்கள்

காலை உணவு - இட்டலி, தோசை போன்ற அற்புதமான பலகாரங்களுடன் காலை உணவு ஆரம்பிக்கிறது. அது முடிந்தவுடன், மதிய உணவை எடுத்துக்கொண்டு தோழர்களுடன் ஒரு நெடிய நடை பயணம் ஆரம்பிக்கிறது. புத்தகக் கூடையில் கனம் தாங்காமல் இந்தக்கை, அந்தக்கை என்று போராட்டம். கூடையும் கீழ் விளிம்பில் ரசம், சாம்பார் முன்பு சிந்தியதின் தடயங்கள். நடக்கும்போது, ஒரு சைக்கிள் இருந்தால் நம் வாழ்க்கை எப்படி சொர்க்க மயமாக இருக்கும் என்ற சுகமான கற்பனைகள். கூட நடக்கும் சில தோழர்களோடு சில சமயம் சண்டை, சில சமயம் சேக்கா. அதற்குத் தகுந்தால் போல சம்பாஷணைகள். அடுத்த மாதம் சொந்தக்காரரின் வீட்டு கல்யாணத்திற்கு வெளியூர் செல்லும் விவரத்தை தோழர்களிடம் சொல்லும்போது அவர்களிடம் ஒரு சிறிய பொறாமை. வழியில் உள்ள திரை கொட்டகையில் படம் மாற்றி இருப்பானா என்று ஒரு ஆவல். மாற்றிய படம் சொத்தையாக இருந்தால் ஒரு ஏமாற்றம். நல்ல படமாக இருந்தால் வீட்டில் எப்படி அனுமதி வாங்குவது என்ற தீவிர ஆலோசனை. வழியில் தாண்டி செல்லும் கணபதி, லயன் பஸ்களில் செல்லும் பிரயாணிகளை பார்த்து ஒரு சிறிய பொறாமை. எப்போதாவது கிராஸ் செய்யும் சில அம்பாசடர் கார்களை பார்த்து, என்றாவது ஒரு நாள் காரில் போக வேண்டும் என்று ஒரு நப்பாசை. அம்பாசடர் அல்லாத பியட் போன்ற கார்கள் சென்றால், அந்த அரிய விவரத்தை நண்பர்கள் மற்றும் வீட்டில் உடனடியாக சொல்ல ஒரு ஆர்வம்.

ஒரு வழியாக அப்பாடா என்று பள்ளியில் சென்று கூடையை வைத்து சில சிறிய விஷயங்களை பேசும்போது பெல் அடிக்க காலை assembly தொடங்குகிறது. அது முடிந்தால் நீண்ட வகுப்புகள். எவ்வளவு நன்றாக படித்தாலும், அடிப்பதற்கு ஆசிரியர்கள் ஏதாவது காரணம் கண்டு பிடிப்பார்கள். ஏதாவது ஒரு நாள் அடி வாங்காமல் வந்து விட்டால், அது ஒரு பொன்னாள்.

கூடுமான வரை இடையில் பசிப்பதில்லை. ஒரு வழியாக மதிய உணவிற்கான இடை வேளை. அவரவர் சாப்பாடு எடுத்துக்கொண்டு, பிடித்த நண்பர்களோடு ஏதாவது கதை பேசி கொண்டு சாப்பாடு. சாப்பிட்ட பின் பாத்திரம் கழுவ பைப்பில் கொஞ்சம் அடிதடி. இதில் சில சமயம் சம்படம் மற்றும் தூக்கு வாளியின் விழிம்புகள் நெளிந்து வீட்டில் திட்டு வாங்க வாய்ப்புகள் அதிகம். சாப்பிட்ட உடன் பள்ளிக்கு அருகே உள்ள சில வீடுகளில் சென்று தண்ணீர் கொடுங்கள் என்ற வேண்டுகோள். சில வீடுகளில் தருவார்கள். சில வீடுகளில் துரத்துவார்கள். சில பணக்கார மாணவர்கள் வாட்டர் பாட்டில் போன்ற அரிய பொருட்களைக் கொண்டு வருவார்கள் . பள்ளிக்கருகில் உள்ள அதிருஷ்ட சாலிகள், வீட்டில் சென்று உண்ணுவார்கள். ஆனால் நண்பர்கள் அவர்களுடன் வருவதைக் கடுமையாகத் தவிர்ப்பார்கள்.

உணவு உண்டவுடன், சில வசதியுள்ள மாணவர்கள் குச்சி ஐஸ் பற்றும் சில தின் பண்டங்களை வாங்கித் தின்பார்கள். அதைக் குறித்து பெரிதளவும் பொறாமை படுவதில்லை. (பழகி விட்டது). மத்தியானம் போரடிக்கும் பாடங்கள் ஒரு தவிப்பை ஏற்படுத்தும். எப்போதாவது வகுப்பில் சாக்பீஸ் தீரும் போதோ, தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் இருந்து ஏதாவது எடுத்து வரவோ ஆசிரியர் அனுப்பும்போது, மற்ற மாணவர்களின் ஒரு வயிற்றெரிச்சல். அந்த இரண்டு நிமிட சுதந்திரத்தில் ஒரு அலாதி இன்பம். எப்போதாவது விமான சத்தம் கேட்டால், எல்லாரும் ஓடி சென்று பார்க்கலாம்.

வகுப்பறையில் உள்ள ஒரு சில ஓட்டைகள் மூலம் சூரிய வெளிச்சம் சில இடங்களில் விழும். அதன் மூலம், ஓரளவுக்கு கடைசி பெல் அடிக்கும் நேரத்தை கணிக்கலாம். ஜன்னல் ஓரத்தில் உள்ள மாணவர்கள், அவ்வப்போது பெல் அடிக்க பள்ளி பியூன் வருவானா என்று சூரிய வெளிச்சத்தையும் ஜன்னலையும் மாறி மாறிப் பார்ப்பார்கள்.

ஒரு வழியாக பெல் அடிக்கும்போது உலகை வென்ற ஒரு திருப்தி. பரபரப்பாக ஒரு வெளியேற்றம். சிறு விளையாட்டுகள் முடிந்து போக ஒரு ஆசை. ஆனால் uniform அழுக்கானால் வீட்டில் வரப்போகும் விளைவுகளைக் குறித்து ஆலோசிக்கும்போது, வேண்டாம் என்ற தீர்மானம்.

மீண்டும் ஒரு நெடிய நடை பயணம். அத்தி பூத்தாற்போல தெரிந்த ஒருவர் சைக்கிளில் வருவார். வீட்டிக்கு ஒரு இலவச பயணம். 45 நிமிட நடை மிச்சம். அந்த நாட்களின் இனிமை நெடு நாள் மனதில் நிற்கும். வீட்டில் சென்றவுடன் ஒரு சாப்பாடு. பின்பு இருட்டும் வரை விளையாட்டு. கிரிக்கட் போன்ற விளையாட்டுகள் சென்னை போன்ற மாநகரங்களிலே மாத்திரம் உள்ள சமயம். அதனால் விளையாட்டுகள் சீசன் மாறும்.

செல்லாங்குச்சி(கில்லி), டயர் உருட்டுதல், கபடி, முதுகில் கை வைத்து தாண்டுதல், கோலிக்காய், ஓடி விளையாடுவது போன்றவை முக்கியமானவை. பெண் தோழிகள் இருந்தால் நொண்டி அடிப்பது, சில்லு தாண்டுவது, தாயம், பல்லாங்குழி, கோல கொலையா முந்திரிக்கா போன்ற விளையாட்டுகளையும் ஆடலாம். ஊர்களுக்கு தகுந்தாற்போல பட்டாம் பூச்சி பிடித்தல், வைக்கபோரில் குதித்தல் போன்ற விளையாட்டுகளும் உண்டு. விளையாட்டு பொருட்கள் பற்றி கேள்வி பட்டதுண்டு. அதிகம் பார்த்ததில்லை. சிக்கி முக்கி கல்லில் சிவப்பு விளக்கு எரியும் ஒரு கார் பக்கத்து வீடு பையன் வைத்து பார்த்ததுண்டு. தீபாவளிக்கு வாங்கும் துப்பாக்கிகள் பல வருடங்கள் பாதுகாக்கப்படும்.

பஸ்ஸில் வெளியூர் செல்லும்போது உட்கார இடம் கிடைத்தால் சந்தோஷம். ஜன்னல் ஒட்டி கிடைத்தால் வேடிக்கை பார்த்துக்கொண்டே பொழுது போவதில் ஒரு பூரிப்பு.. இன்னொரு பேருந்தை முந்தும்போது அடுத்த பேருந்தில் இருக்கும் பயணிகளைப் பார்த்து ஒரு ஏளனம். ஓட்டுனர் அருகே இருக்க முடிந்தால், ஸ்பீடோ மீட்டரை எட்டி பார்ப்பதில் ஒரு ஆனந்தம். இப்படிப் பல சிறிய சந்தோஷங்கள் ஈடு இணையற்றவை.

மாலை நேரம் குழந்தைகள் விளையாடும் சமயம் பெரும்பாலும் தந்தைகள் வெளியில் செல்வதுண்டு. அவர்கள் எங்கே போகிறார்கள் என்று கேட்டால் கடுமையான கோபத்தை நேரிடலாம். அவர்கள் வெளியில் செல்லும் நேரத்தில் தாய்க்குலங்கள் அருகில் உள்ள வீடுகளின் வாசலில் அமர்ந்து மற்ற வீடுகளின் கதைகளைப் பேசுவது வழக்கம்.

அப்பாக்கள் வீட்டுக்கு வரும் முன்னர் விளையாட்டை முடித்து விட்டு வீட்டுக்கு வர வேண்டியது அவசியம். தூரத்தில் அவர் வரும்போது அம்மாக்கள் மெதுவாக கலைந்து வீட்டுக்கு சென்று உணவை தயார் செய்வார்கள். அப்பா நுழையும் போது குறைந்த பட்சம் படிப்பது போல் நடிப்பது பிள்ளைகளின் வழக்கம்..

இரவு 7 : 15 மணிக்கு சரோஜ் நாராயண சாமி ஆகாசவாணியில் நாட்டு படைப்புகளை கரகரத்த குரலில் விவரித்து முடிக்கும் போது, உணவுக்கு ஆயத்தமாகலாம். டயபடீஸ் அதிகம் பாதிக்காத (அல்லது அறியப்படாத) காலமானது கொண்டு, சப்பாத்தி அதிகம் தலை காட்டாத காலம். நல்ல ஒரு தமிழ் உணவுக்கு பின், தேவை என்றால் சிறிது நேரம் படிப்பு, எட்டரைக்குப் பின் உறங்கத் தயார். குளிர்ந்த பாயும், இலவம் பஞ்சு தலையணையும். ஆஹா, என்ன ஒரு உறக்கம்.

ஒன்பது மணிக்குப் பின் ஒரு நிசப்தம். ஊரங்கு சட்டம் இட்டது போல ஒரு சூழ்நிலை. சினிமா இரண்டாவது ஆட்டம் பார்ப்பவர்களை மக்கள் கொஞ்சம் ஒதுக்கி வைப்பதும் போலீஸ் காரர்கள் அவர்களிடம் சந்தேகப்பட்டு டிக்கெட் கேட்டு, இல்லா விட்டால் சந்தேக கேசில் லாக்-அப் கொண்டு போவதும் வழக்கம்.

சாப்பிடும் ஹோட்டல்கள் பஸ் ஸ்டாண்டுகள் பக்கத்தில் பார்த்ததுண்டு. அதில் என்ன உண்டு, யார் சாப்பிடுவார்கள் என்று தெரியவில்லை. ஒரு முறை வெளியூர் செல்லும்போது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நெல்லை வசந்த பவனில் சாப்பிட்ட ஒரு அற்புதமான அனுபவம்.

கல்யாண அழைப்புகளை உறவினர்களை எங்கிருந்தாலும் தேடி பிடித்து நேரில் சென்று அழைத்தார்கள். கல்யாண வீடுகளுக்கு செல்லும்போது, குடும்பத்தோடு சில நாட்கள் சென்று, அங்கு இருக்கும் வேலைகளை பகிர்ந்து கொண்டு, இருக்கும் உணவை உண்டு விட்டு , கிடைத்த இடத்தில் படுத்துக்கொண்டு கல்யாணம் முடிந்து எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம்.

பெரும்பாலான நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ பெரிய அளவுக்கு பணமோ சொத்தோ கிடையாது. அதனால் பொறாமைப்பட வாய்ப்புகள் இல்லை. சொத்து தகராறுகள் குறைவு. (சொத்து இருந்தால் தானே?) உறவினர்களை வழி அனுப்ப குழந்தைகளை பஸ் நிலையத்துக்கு கூட அனுப்புவதுண்டு. உறவினர்கள் 25 அல்லது 50 பைசாவை குழந்தைகளிடம் தருவார்கள். அதில் சிறிய ஆசைகளை பூர்த்தி செய்வதுண்டு.

மக்களிடம் பணமில்லை. பணம் அல்லாத உதவிகளை மக்கள் மதித்தார்கள். உறவினர்கள் எந்த நேரத்தில் வந்தாலும் மனம் கோணாது சாப்பாடு தயார் செய்தார்கள். வங்கிகள் பணம் போடுவது பற்றி கேள்விப்பட்டதுண்டு. புது துணிகள் தீபாவளிக்கும் மட்டுமே சாத்தியம். பிறந்த நாட்கள் பள்ளிக்கு சேரும் நாட்கள் மட்டுமே பிரயோஜனப்படும்.

ரேடியோவில் நேயர் விருப்பம் வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்று வரும். அதை தவற விடுவதில்லை. தொலை காட்சி வைத்திருக்கும் அதிர்ஷ்ட சாலிகள், வாரம் ஒரு தமிழ் படம், ஒரு ஒளியும் ஒளி பார்க்கலாம். அரை மணி நேரம் வயலும் வாழ்வும் பார்க்க கூட மக்கள் தயாராக இருந்தார்கள். கிரிக்கெட் இந்தி கமெண்டரி கேட்க வேண்டிய கட்டாயத்தில், ஏக் சௌ பச்பந்த் என்று சொன்னால் 155 அன்று அறியும் அளவுக்கு இந்தி புலமை இருந்தது. எந்த படம் ஆனாலும், கொட்டகை சென்று படம் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவமாக இருந்தது. தீபாவளிக்கு ஆயிரத்தில் ஒருவன் அல்லது அடிமைப்பெண் போன்ற படங்கள் எத்தனை தடவை வந்தாலும் ஆரவாரமான வரவேற்புடன் மக்கள் சென்று பார்த்தார்கள்.

சைக்கிள் வைத்திருந்தவர்கள் பாக்கியசாலிகள். போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது பெரும் ரௌடிகளிடம் மாத்திரமே புல்லட், ஜாவா, எஸ்டி, ராஜ்தூத் போன்ற பைக்குகள். ஊரில் கார் வைத்திருப்பவர்கள் எண்ணி விடலாம்.

15 பைசா கார்டு மூலம் ஊருக்கு திரும்பி வந்த விபரம் அறிவிக்கலாம். ரெண்டு மூன்று நாட்களுக்கு பின்தான் அது கிடைத்தாலும், அதில் திருப்தி. 35 பைசா செலவழித்தால் ரகசியங்களை பரிமாறிக் கொள்ளளலாம். தபால்காரர் வரும்போது ஒரு பரவசம்.

சில கசப்பான விஷயங்கள் இல்லாமல் இல்லை. படித்தாலும் வேலை உறுதியில்லை என்ற நிலைமை.

பெரிய அளவுக்கு மக்களிடம் பண புழக்கம் இல்லை. ஆனால் ஆசைகள் அதிகம் இல்லை. குழந்தைகளை படிக்க வைத்து, கல்யாணம் பண்ணி கொடுப்பது மாத்திரமே ஒரே குறிக்கோள். சொந்த வீடு கட்டுவது, சொத்து வாங்குவது ஆகிய ஆசைகள் இருந்தாலும், அதையே நினைத்து தூக்கத்தை யாரும் இழக்கவில்லை.

இன்று எப்படி மாறி இருக்கிறது?

அறிமுகம் இல்லாத பலர் அடுத்த வீடுகளில். நடக்க இடம் இல்லாத apartment -கள். காலையில் வீட்டுக்கு குளிர்ந்த பாக்கெட் பால் வருகிறது. அவசர அவசரமாக அலுவலகத்துக்கு கிளம்ப கணவனும் மனைவியும் தயார் ஆகிறார்கள். எல்லோருக்கும் காலையில் கெல்லாக்ஸ் சீரியல். மத்தியானத்துக்கு அவசரமாக தயார் செய்யப்பட்ட அல்லது fridge -ல் உள்ள ஒரு பழைய உணவு.

பள்ளிக்கு அழைத்து செல்ல ஒரு ஸ்கூல் வான் அல்லது ஒரு ஆட்டோ வருகிறது. கணவன் மனைவி ஒரு டூ வீலரில் கிளம்புகிறார்கள். பலப் பல SMS தகவல்கள் நடுவில். அதில் ஒரு தேவை இல்லாத நாட்டம்.

பள்ளியில் தொலைகாட்சி சானல்களில் உள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றி நண்பர்களுக்குள் ஒரு ஆராய்ச்சி. அப்பா புதிதாக வாங்கி இருக்கும் மொபைல் போன் பற்றி ஒரு பெருமை.

மாலை வீட்டிக்கு வந்ததும் பல் வேறு ஸ்நாக்குகள். (குர் குரே, லேய்ஸ் சிப்ஸ்). பின்பு நண்பர்களுடன் கிரிக்கெட். இரவு வீட்டிக்கு வந்ததும், இன்று சமைக்கலாம அல்லது வெளியில் சென்று chineese food சாப்பிடலாமா என்று ஆலோசனை.

பின்பு தொலைக்கட்சியில் பத்திருபது சானல்களில் பல்வேறு சீரியல்கள், படங்கள், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள். பழைய பாடல்களை அடிக்கடி பார்க்கவும் கேட்கவும் செய்து அவற்றின் அருமைகள் போயின.

கல்யாண அழைப்புகள் மொபைல் போனிலும் கடிதத்திலும் மாத்திரமே. இனி கொஞ்ச நாள் கழித்து facebook மூலம் மட்டுமே அழைப்பு வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கல்யாணங்களுக்கு இப்போது யாராவது ஒருவர் மட்டுமே, அதுவும் விடுமுறை நாட்களில் வந்தால் மட்டுமே. கல்யாணம் முடிந்த உடனே கண் இமைக்கும் முன்பு மறைந்து விடுவார்கள்.

எந்த பொருளானாலும் தவணை முறையில் உடனே வாங்கிப் போட வேண்டியது. வீடு, கார், பைக், டிவி எதுவும் விதி விலக்கல்ல. வீடு சாமான் கூட கிரெடிட் கார்டு மூலம் வாங்கி விட்டு பின்னால் கொடுக்கலாம். கிரெடிட் கார்டு பணம் அடைக்க முடியா விட்டால் வீடு மாற்றி கொஞ்ச நாள் தலை மறைவாய் நடக்கலாம்.

சினிமாக்கள் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றால் நூற்றுக்கணக்கான ரூபாய்களை டிக்கட்டுக்கும், ஆட்டோக்களுக்கும், ஐஸ்கிரீம்களுக்கும் கொட்ட வேண்டும். பின்பு மலிவு விலையில் VCD /DVD . இல்லாவிட்டால் இருக்கிறது இன்டர்நெட். ஓசியில் படம் பார்த்தாலும், மனுஷன் பார்ப்பானா இந்த படத்தை என்று அலுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் கொஞ்ச நாளிலேயே உலக தொலை காட்சிகளில் முதன் முதலாக வரும்.

எப்போதோ வாங்கப்பட்ட பூர்வீக சொத்துக்கோ அல்லது பழைய வீட்டுக்கோ இன்று நிலத்துக்கு விலை கூடி இருந்தால், குடும்பத்தில் அடிதடி, வெட்டு குத்து. உறவினர்களுக்குள் பொறாமை. வேலை கிடைத்தால் சொர்க்கம் என்ற நிலைமை பொய், எவ்வளவு சம்பளம் வந்தாலும் திருப்தி இல்லை என்ற ஒரு சூழ்நிலை.

மாணவர்கள் இயற்கை திறன் கொண்டு படிப்பது போய், அவர்களிடம் படிப்பைத் திணித்து மதிப்பெண்கள் ஜிம்பாப்வே currency போல ஆகி விட்டது. எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் படிக்க ஏதாவது ஒரு வகையில் பண வசூல்.

எப்போது பார்த்தாலும் மொபைல் போனில் ஒரு பார்வை. யாரோடாவது வெட்டி பேச்சு. அல்லது யாராவது அனுப்பிய உபயோகமில்லாத SMS -ஐ forward செய்தல். இல்லாவிட்டால் FM ரேடியோவை ஸ்பீக்கர்-இல் போட்டு அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை. எங்கு நின்றாலும் பல்வேறு ரிங் டோன்-களின் சத்தம் மூலம் காதில் ஒரு இரைச்சல்.

இன்னும் இருபது வருடங்கள் போனால் எப்படி இருக்கும்?

8 comments:

 1. ரொம்ப நல்ல இருக்கு இந்த பதிவு. பழைய காலங்களை மனதில் ஓட விட்டு விட்டீா்கள். எங்கள் ஊாில் இன்றும் நீங்கள் எழுதிய சிலது நடந் கொண்டு தான் இருக்கிறது.

  ReplyDelete
 2. அருமையான பதிவு, சத்யா. அதுவும் 70களில் பண்ருட்டி பள்ளிநாட்களை படம் பிடித்து போட்டு விட்டீர்கள். ஒரு நாள் கழிந்தது - புதுமைப் பித்தன்(?) கதை போல காலையில் தொடங்கி இரவுப் படுக்கை வரை ஒரு நாள் வாழ்ந்த அனுபவம் கிடைக்கிறது. அந்தக் காலத்தில் ஒன்பது மணி இரவு செய்தி கேட்பதே அபூர்வம்.  நேயர் விருப்பம் - அப்பாவின் மர்பி ரேடியாவில் - அதை வைத்தே ஐந்து கதை எழுதலாம் - கேட்பதற்காக காத்திருந்த காலம். ரேடியோவில் வரும் நாடகங்களும் அருமை.

  இந்தக் காலத்து வாழ்க்கை படிக்கவே சோகமாயிருக்கிறது. யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கால வாழ்க்கையில் குழந்தைகள் நினைவு கொள்ளுமாறு என்ன இருக்கிறது என்று. பசங்களைத்தான் கேட்க வேண்டும்.

  ஆமாம் - அந்தக் கால தினத்தை அழகாக விவரித்து இருக்கிறீர்கள். இந்தக் கால அனுபவம் எப்படி கிடைத்தது. கேள்வி ஞானமா(ஐயா வேதாந்தியாரே - ஒரு பேச்சுக்கு சொன்னேன்) இல்லை அனுபவ ஞானமா?

  ReplyDelete
 3. நினைவு நாடாக்களை பின்னோக்கி சுழலவிட்ட விதம் அருமை. நீங்கள் கூறிய அனைத்தும் (அன்றைய) முற்றிலும் உண்மை. இன்றைக்கு அவை சுவைப்பது உண்மை எனில், அன்றைக்கு அவை கசந்ததும் உண்மையே ! அதுபோல இன்றைய கசப்பான (நாம் நினைக்கிறோம், நம் பிள்ளைகள் நினைக்கிறார்களா? தெரியவில்லை!) வாழ்வும், நாளை இனிக்கலாம்.

  நாகு >> நீல. பத்மநாபன், ஒரு சாமான்யணின் ஒரு நாள் நிகழ்வை ஒரு நாவலில் எழுதியிருக்கிறார். அதைத் தான் குறிப்பிடுகிறீர்களா எனத் தெரியவில்லை.

  ReplyDelete
 4. //கல்யாண அழைப்புகள் மொபைல் போனிலும் கடிதத்திலும் மாத்திரமே. இனி கொஞ்ச நாள் கழித்து facebook மூலம் மட்டுமே அழைப்பு வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. //

  இப்போவே facebook மூலம் மட்டுமே அழைப்பு வர ஆரம்பிச்சிட்டது.

  மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம்! எங்க பக்கத்துக்கு வீட்டு பெரியவர் தன்னுடைய சிறு வயதில் காலணா காசிற்கு மூட்டை அரிசி வாங்கிய கதையை நான் சிறுவனாக இருக்கும்போது சொல்லுவார். அப்போதெல்லாம் இவர் என்ன இன்னும் பழசையே அசை போட்டுட்டு இருக்காருன்னு தோணும். அந்த மாற்றங்கள் எத்தனை பாதிப்பை உருவாக்கியிருக்கும் என்று இப்போது நமக்கு தெரிகிறது! அதை அனுபவித்தவற்கு மட்டுமே அதன் அருமை தெரியும்! ஆனால் இப்ப ஒவ்வொரு பத்து வருடங்களுக்குள் எவ்வளவு மாற்றங்கள். இந்த வேகமான வளர்ச்சி நல்லதா கேட்டதா என்று தெரியவில்லை. வேகமான வாழ்கையில் எதுவும் இனிக்கவில்லை.

  ReplyDelete
 5. Cricinfo கமெண்டரியில் ஒருவரின் நினைவுகள்:

  Dhinesh: "While going through Sid's preview, I recollected the 1997 Barbados test from my memory. I was 10 years old at that time and since there was no ESPN network in our village, used to hear the next day morning 6 am All India Radio English News to know the scores. Chasing a vicotry target of 120 and with 2 for no loss as the overnight score, I was eagerly waiting to hear the Indian victory in the next day morning AIR news only to be shell shocked after hearing what happened actually. I was literally crying for the whole morning after hearing the news. Still it hurts."

  ReplyDelete
 6. சதங்கா - +1-ல் தமிழ் துணைப்பாடம் எனக்கு மறக்கவில்லை இன்னும். புதுமைப்பித்தன்தான். :-)

  https://encrypted.google.com/search?q=ஒரு+நாள்+கழிந்தது

  ReplyDelete
 7. @நாகு: உங்களிடம் இருந்து தப்பிக்கவே முடியாது. இன்றைய அனுபவம் மேம்போக்காகவே எழுத முடிந்தது. இன்றைய பள்ளி, கல்லுரி மாணவர்களின் வாழ்க்கையை அறிய அங்கு சென்று சில நாட்கள் இருந்தாலே தெரியும். அல்லது சினிமாவில் பார்த்து ஊகம் செய்ய வேண்டும். நாம் எதிர் பார்க்கும் அளவுக்கு விபரங்கள் தரும் இளைய தலைமுறை தொடர்புகள் இல்லை. இருந்தாலும் அவர்களிடம் நாம் எதிர் பார்க்கும் விபரங்களைக் கறப்பது கஷ்டம்.

  ReplyDelete
 8. கொஞ்ச நேரத்தில் என் சின்ன வயசிற்கு கொண்டு போய் விட்டீர்கள். அனைத்தும் உண்மை! அதனால் தான், நீங்கள் எழுதியதில் உள்ள எழுத்துப்பிழையும் கருத்துப்பிழை இல்லாமல் பொருந்தியிருக்கிறது! (போய் என்பது பொய் என்று வந்திருப்பதை சொன்னேன்!)

  //வேலை கிடைத்தால் சொர்க்கம் என்ற நிலைமை பொய்,//

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!