Sunday, June 19, 2011

நம்மை கவர்ந்த தமிழ் திரை உலகம்: பாகம் 2

நம்மை கவர்ந்த தமிழ் திரை உலகம்: தொடர்ச்சி .....
முள்ளும் மலரும்

சிறு வயதில் (ஒரு 10 வயது இருக்கும்) ஒருவர் என்னிடம் கேட்டார். "முள்ளும் மலரும்", இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியுமா? நான் "thorn and flower " என்று கூறினேன். அவர் "thorn too blossoms " என்று என்னை திருத்தினார். முள்ளும் மலரும் படத்தை பார்க்காத வரையில் என்னால் இந்த அர்த்தத்தை உணர்ந்திருக்க முடியாது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு தமிழ்த் திரை உலகில் ஒரு தனி அடையாளம் உருவாக்கி தந்த ஒரு படம் என்றால் அது மிகையாகாது. தான் முதன் முறை திரைக்கதை எழுதிய "வள்ளி" திரைப்படம் "முள்ளும் மலரும்" படத்தில் ரஜினி காந்துடைய தங்கை வேடத்தின் பெயரின் பின் அழைக்கப்பட்டது என்றால் நாம் ரஜினியின் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.
கதாபாத்திரங்கள்
காளி (ரஜினி) - கிராமத்தில் ஒரு வின்ச் இயக்குனர். வள்ளி (ஷோபா ) - ரஜினியின் தங்கை . மங்கா (படாபட் ஜெயலக்ஷ்மி ), குமரன் (சரத்பாபு ) - இஞ்சினியர்.
kadhai
அப்பா அம்மா இல்லாத சூழ்நிலையில் தங்கையை பாசத்தோடு வளர்த்து மறுக்கிறான் காளி. வின்ச் இயக்குனாராக வேலை செய்து கொடிருக்கும் போது, கிராமத்து மக்களுக்கு இலவசமாக வின்ச்-ஐ அவ்வப்போது இயக்கி அவர்களை கீழிருந்து மேல் வர உதவுகிறான்.
ஒரு நாள், புதிய இஞ்சினியராக குமரன் பதவி எடுக்கிறார். கிராமத்திற்கு வரும் முதல் நாள், ரஜினி வின்ச்-ஐ இலவசமாக இயக்குவதை பார்த்து விட்டு, இனி இயக்கக் கூடாது என்று உத்தரவு இடுகிறார். அப்போது முதல் காளிக்கும், குமரனுக்கும் இடையே ஒரு கசப்புணர்ச்சி உருவாகிறது.
மங்கா அந்த ஊருக்கு வருகிறாள். மங்காவுக்கும் காளிக்கும் இடையே காதல் உருவாகிறது. அதே நேரத்தில் குமரனும் வள்ளியைக் காதலிக்கிறார்.
இந்த சூழ்நிலையில், ஒரு நாள் குடி போதையில் பாட்டு பாடி விட்டு ரோடில் தூங்கும் போது, ஒரு லாரி காளியின் கையில் ஏறி, காளி ஒரு கையை இழக்குமாறு சூழ்நிலை உருவாகிறது. அதன் மூலம் அவன் வேலையையும் அவன் இழக்கிறான்.
அப்போது, குமரன் வள்ளியை பெண் கேட்கிறார். காளி "எனக்கு உங்களை பிடிக்கவில்லை" என்று கூறி மறுத்து விடுகிறான். அப்போது மற்ற உறவினர்களும் மங்காவும் சேர்ந்து குமரன்-வள்ளி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். காளியிடம் உனக்கு வர இஷ்டம் இருந்ததால் வா, இல்லா விட்டால் இந்த கல்யாணம் நாங்கள் நடத்தி வைப்போம் என்று எல்லோரும் கூறுகிறார்கள்.

இறுதிக் காட்சி
உறவினர்கள் வள்ளியை அழைத்துக்கொண்டு திருமணத்திற்கு கிளம்புகிறார்கள். அப்போது காளி வள்ளியிடம் மட்டும் கேட்கிறான். உனக்கு இந்த அண்ணன் மேல் இஷ்டம் இருந்ததால் என்னோடு வா என்று. அவளும் அரை மனதோடு மறுத்து விட்டு கல்யாணத்துக்கு கிளம்புகிறாள். காளி மன வேதனையோடு பின்னால் நிற்க எல்லோரும் போக ஆரம்பிக்கிறார்கள். கடைசி நிமிடத்தில். வள்ளி பின்னால் திரும்பி அண்ணனை பார்த்து விட்டு, ஓடி வந்து கட்டி பிடித்து, எனக்கு என் அண்ணன்தான் முக்கியம் என்று கதறி அழுகிறாள். காளி அவளை கட்டி அணைத்துக்கொண்டு திரும்பிப பார்த்து, ஸ்தம்பித்து நிற்கும் உறவினர்களிடம் "எல்லாரும் இப்போ தெரிஞ்சிக்கிடீங்களா, என் தங்கச்சிக்கு யாரு முக்கியம்னு? எனக்கு இனிமே ஒண்ணுமே வேண்டாம். நான் இப்போ ஒரு காரியம் பண்ண போறேன். என் தங்கச்சிக்கு பிடிச்சவருக்கே அவள கல்யாணம் பண்ணிக்க எனக்கு முழு சம்மதம்" அன்று கூறி அவளை அனுப்பி வைக்கிறான்.
படத்தின் சிறப்புகள்
மணி ரத்னத்தினால் மிகவும் அபிமானிக்கப்பட்ட இயக்குனர் மகேந்திரன் ஆவார். மக்களின் இயல்பான வாழ்க்கையை தத்ரூபமாக எடுப்பதில் மகேந்திரன் தன்னுடைய இந்த முதல் படத்திலேயே தனி முத்திரையை பதித்துள்ளார்.
இந்த ரஜினிகாந்துடைய நடிப்பு இன்னும் எல்லோராலும் பாராட்டப்பட்டு, இந்த ரஜினி எங்கே உள்ளார் என்று ரசிகர்கள் கேட்கும்படி நடித்துள்ளார். அவரை டிஸ்மிஸ் செய்யும் செய்தியை சரத்பாபு சொல்லும்போது, "ரெண்டு கை, ரெண்டு காலு இல்லாட்டி கூட பொழச்சுக்குவான், இந்த காளி ஒரு கெட்ட பையன் சார்" அன்று சொல்லும்போது தியேட்டரே அதிரும்.
பின்னணி இசைப்பதிவு செய்யப் படாத இந்த திரைப் படத்தின் பதிவை (Positive) விநியோகஸ்தர்கள் பார்த்த போது, வாங்க மறுத்து , பின்னணி இசை முடிந்தவுடன், போட்டி போட்டு வாங்கி இருக்கிறார்கள். பின்னணி இசை இந்த படத்தின் உயிர் நாடி என்று சொன்னால் அது மிகை ஆகாது. செந்தாழம் பூவில் பாட்டு, காலத்தால் அழியாதது. அடி பெண்ணே, நித்தம் நித்தம் நெல்லு சோறு, ராமன் ஆண்டாலும் ஆகிய பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை.
இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு சகாப்தம் என்றே சொல்ல வேண்டும்.

8 comments:

 1. ரஜினி-மகேந்திரன் கூட்டணியின் முதல் அணியை நினைவூட்டியதற்கு நன்றி. 'செந்தாழம்பூவில்' இசையாலும், கவிதையாலும், ஜேசுதாசின் குரலினிமையாலும் நெஞ்சில் நிலைத்திருக்கும் பாடல். 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்' - இந்திய/தமிழக வாக்காளர்களின் மனநிலையை எப்போதும் விளக்கும் பாடல் :-)

  ReplyDelete
 2. உடனடியாக நான் you tube - இல் இந்த பாடல்களை கேட்டு ரசித்தேன். நினைவு படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 3. சத்யா,
  மிக அருமையான நினைவுகள். உங்கள் பதிவு மீண்டும் படம் பார்ப்பது போல் இருந்தது.
  உங்களின் முதல் பதிவிற்கு மறுப்பு எழுத நினைத்து, இந்த பதிவிற்கு வாழ்த்து அனுப்பிகிறேன்.
  பாரதி ராஜா ஒரு திறமைசாலி. அவர் கிராமங்களுக்கு காதலை எடுத்து சென்று ஒரு கலாச்சார சீரழிவை உண்டாக்கியவர் என்று
  எனக்கு ஒரு அபிப்ராயம். நீங்கள் கிழக்கு சீமையிலே, கருத்தம்மா படங்களை உதாரணம் காட்டலாம்.
  மகேந்திரன் போல் சில யதார்த்த வாதிகள் இருப்பதால் நல்ல படங்களும் நமக்கு கிடைத்தன.
  முள்ளும் மலரும் குடும்பத்துடன் பார்க்கலாம். ஆனால் பதினாறு வயதினிலே அப்படி இல்லை.
  நீங்கள் சொன்ன விஷயம் எல்லாம் உண்மை. சினிமாவிற்கு மைல் கல். அந்த படம் வந்த பிறகு
  பேருந்து நிறுத்தங்களில் தான் அந்த படத்தின் பஞ்ச் டயலாக் பேச பட்டது.
  சமுதாயம் என்ன கற்றுக் கொண்டது?

  வேதாந்தி

  ReplyDelete
 4. நான் ஒன்றும் பாரதிராஜா ரசிகனில்லை. பாரதிராஜாவுக்கு முன்னால் யாரும் காதலையோ, கிராமத்து காதலையோ படம் எடுக்கவில்லையா என்ன? அவர் படம் மட்டும்தான் கலாச்சார சீரழிவை உண்டாக்கியது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

  சினிமாக்காரர்கள் நாலு சில்லறை பார்ப்பதற்காக படம் எடுக்கிறார்கள். அதில் சமுதாயம் கற்றுக்கொள்ள பாடம் இருக்கவேண்டுமென்பது என்ன வேதாந்தமோ? :-)

  அப்படியே சமுதாயம் கற்றுக்கொள்ளுமாறு இருக்கும் பாடல்களை(தூங்காதே தம்பி, சட்டி சுட்டதடா, போனால் போகட்டும் போடா...) கேட்டு யாராவது திருந்தியிருக்கிறார்களா என்ன?

  என்னைக் கேட்டால் பாரதிராஜா படங்களைவிட அதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் பட பாத்திரங்களை உண்மை என்று நம்பி முதல்வர் ஆக்கியதை விட ஒரு சிலர் காதல் பித்து பிடித்து அலைந்தது எவ்வள்வோ தேவலாம். :-)

  ReplyDelete
 5. சத்யா, முதலில் ஒரே வாரத்தில் ரெண்டு (நல்ல) பதிவு போட்டதற்கு ஒரு பெரிய ஓ போடவேண்டும். (நான் பார்த்ததில் இன்னும் நினைவில் நிற்கும் முதல் படம் அன்னக்கிளி! அதை விட்டுவிடாதீர்கள்) முள்ளும் மலரும், உதிரிபூக்கள் இரண்டும் எனக்கு பிடித்தவை! 'செந்தாழம்பூவில்' எந்த காலத்தில் கேட்டாலும் ஒரு இனிமை! பாரதிராஜாவிற்கு நான் பெரிய ரசிகனில்லை. ஆனால் அவரது கிராமத்து கதையை விட சிகப்பு ரோஜாக்கள் எனக்கு பிடித்தது! தொடர்ந்து எழுதுங்கள்! ///வேதாந்தி: சமுதாயம் என்ன கற்றுக் கொண்டது?/// சினிமாவை பார்த்து திருந்துவதும் கேட்டுபோவதும் பற்றி எத்தனை பட்டிமன்றம் போட்டாலும் தீராது. நாகு சொன்னதுபோல படம் பார்த்து யாரும் திருந்துவதில்லை. //வேதாந்தி: கிராமங்களுக்கு காதலை எடுத்து சென்று ஒரு கலாச்சார சீரழிவை உண்டாக்கியவர் // காதல் என்பது கலாசார சீரழிவு என்கிறீர்களா? இல்லை கிராமங்களுக்கு காதலை எடுத்து சென்றது கலாசார சீரழிவா? ஆனால் பாலசந்தரை விட பாரதிராஜா ஏதும் கலாச்சார சீரழிவு செய்துவிடவில்லை என்பது என் கருத்து. இன்னும் கொடுமை, சிலர் பாலசந்தரை பின் பற்றி அதேபோல தகாத உறவுகளை மையமாக வைத்து இப்போதும் படம் எடுகிறார்கள்! அந்த படத்தை பெண்கள் கூட ரசித்து விமர்சிப்பது இன்னும் கொடுமை.

  ReplyDelete
 6. @வேதாந்தி: நான் திரைப் படங்களை பொழுது போக்கு அம்சமாகவே கருதுபவன். சினிமாவில் நாம் ஆசைப்படும் விஷயங்களை அவ்வப்போது கனவு காணுவதோடு விட்டு விடுவேன். அதனால் பொதுவாக திரைப்படங்கள் சமுதாயத்துக்கு நல்ல தாக்கங்களை உண்டாக்குகிறதா அல்லது சீரழிவை உண்டாக்குகிறதா என்ற வாதங்களுக்கு போவதில்லை. குடும்பத்தோடு பார்க்க புடியும் என்பதில் முள்ளும் மலரும் திரைப்படம் "பதினாறு வயதினிலே" -ஐ விட சிறந்தது என்பதில் ஐயம் இல்லை. பொதுவாக பதினாறு வயதினிலே திரைப்படம் தமிழக திரை உலகிலே ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் நமக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. ஜெயகாந்தன் -> அன்னக்கிளி உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். இளையராஜாவைப் பற்றி எழுதவே ஒரு 20 வார தொடர் வேண்டும். அன்னக்கிளி நான் ஒரு முறை பார்த்து இருக்கிறேன்.

  ReplyDelete
 8. //அன்னக்கிளி நான் ஒரு முறை பார்த்து இருக்கிறேன்.//
  அப்போ மத்த படமெல்லாம் வாரம் ஒருமுறையா? :-)

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!