Monday, March 14, 2011

பஹாமாஸ் விஜயம் - 3

முதல் நாள் இரவு கப்பலில் சாப்பாடு முடிந்ததும் ஒரு சின்ன வாக்கிங் போயிட்டு ரூமுக்கு வந்தால் ஒரு பொம்மை செய்து கட்டிலின் மேலே தொங்க விட்டிருந்தார் எங்கள் அறையை சுத்தம் செய்யும் ஒரு கப்பல் சிப்பந்தி லீ ராய். அது என்னங்கரதை பதிவின் கடைசியில் கொடுத்திருக்கேன். நாங்கள் கப்பலில் இருந்த நான்கு நாட்களும் காலையில் வந்து அறையை சுத்தம் செய்து, படுக்கையை சரி செய்து, எல்லா இடத்தையும் பளபளவென்று செய்து எங்க வீட்டு அம்மணி கிட்ட நல்லா திட்டு வாங்க ஒரு வசதி செய்து விட்டு போயிடுவார். சும்மா சொல்லகூடாது செய்யர வேலையை ஒழுங்காதான் செய்யறார். மறுபடி இரவு 8 மணிக்கு வந்து படுக்கையை சரி செய்து, சோபாவை படுக்கையாக மாற்றிவிட்டு, துண்டு சோப்பு சீப்பு எல்லாம் மாத்திட்டு, ஒவ்வொரு தலையணை மேலும் ஒரு சின்ன சாக்கலேட் வெச்சுட்டு, ஒரு துண்டுல சின்ன பொம்மை செய்து தொங்க விட்டுட்டு போயிடுவார்.

சாப்பாடு பரிமாறும் சிப்பந்திகளின் தலைவர் நம்ம மும்பையை சேர்ந்த ஒருவர். எங்களை ரொம்ப நல்லா பார்த்துகிட்டார், ஆனா அப்பப்ப வந்து சின்னதா ஜல்லி அடிச்சுட்டு போயிடுவார்.

ராத்திரி ரூமுக்கு வந்தா கப்பலின் ஆட்டம் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம்ன்னா சாதாரண ஆட்டந்தான், ஆனா அதோட எஃபெக்ட் கேப்டன் பிரபாகரன் படத்தில ரம்யா க்ருஷ்ணன் போட்ட கெட்ட ஆட்டத்தை விட கேவலமா ஒரு ஆட்டம் என் காதுக்குள் போட்டு எப்படா இது நிக்கும்னு தோணித்து. இப்படி இருக்கும்னு பல பேர் சொன்னதால, கப்பல் ஏற்றதுக்கு முன்னாடியே, காதுக்கு பின்புறம் தடவ ஒரு தைலம், கைல போட்டுக்க க்ரிப், உள்ளுக்கு சாப்பிட மருந்துன்னு ஒரு சின்ன மெடிகல் ஷாப்பே கைல இருந்தது. அதையெல்லாம் போட்டுகிட்டு ரூமை விட்டு வெளியில வந்ததும் என்னவோ பெரிய போருக்கு போற மாதிரி ஒரு பில்டப் கிடைச்சுது. இதுலயும் ஒரு ஆச்சர்யமான விஷயம், மஹிமாவுக்கும் மாதுரிக்கும் ஒரு சின்ன ஆட்டமும் இல்லாம சாதாரணமா விளையாடிகிட்டு இருந்தாங்க, அது எப்படின்னு தெரியலை.

இப்படியாக பலப் பல எதிர்பார்புகளோட துவங்கிய எங்கள் கப்பல் பயணத்தின் முதல் நாள் சின்ன ஆட்டம் பாட்டங்களோட முடிய மறுநாள் காலை கோகோகே பீச்சு போவதாகப் ப்ளான் (எனக்கு தெரிஞ்சு க கா கி கீ கு கூ கெ கே தானேன்னு ப்ளேடு போடாதீங்க) இது ராயல் கரீபியன் கப்பல் கம்பெனியின் சொந்த தீவு.

செவ்வாய் விடிய காலையில் அந்த தீவின் அருகில் நங்கூரம் போட்டு கப்பலை ஆடாமல் அசையாமல் நிறுந்தி விட்டு, “ஹும் வாங்க வாங்க”ன்னு மிரட்டாத குறையா கூப்பிட்டு போனாங்க. நாம எப்படி பட்ட ஆளு, சாதாரணமாவே ப்ரேக் ஃபாஸ்ட்ன்னு ஒன்னு வெச்சா பொளந்து கட்ற கூட்டம், இப்படி பலப் பல வகைகளை வெச்சு வேணும்னா சாப்பிடுன்னு சொன்னதுக்கு அப்புறம் சாபிடலைன்னா அவங்க மனசு கஷ்டப்படுமில்லையா அதனால அந்த வெரைட்டியான ப்ரேக் ஃபாஸ்ட்டை ஒரு காட்டு காட்டிட்டு பொறுமையா விடிய காலைல தீவுக்கு போனவங்க எல்லாம் கப்பலுக்குத் திரும்ப வர ஆரம்பிக்கும் போது நாங்க சாவகாசமாக தீவுக்கு புறப்பட்டு போனோம்.

நாங்க போயிட்டு வந்த கப்பல்
தீவுல ஸ்நார்கலிங் என்ற ஒரு பயிற்சிக்கு பணம் கட்டியிருந்தோம். நான் பெரிய பருப்பு மாதிரி, ‘எவ்வளவு ஆழம் இருக்கும்”ன்னு கேட்டதும் ஒரு சிப்பந்தி “அது ஒன்னும் பெரிசில்ல ஒரு அடில இருந்து 4 அடிவரைக்கும் ஒரு பகுதி, உனக்கு தோதா ஒரு 15 ல இருந்து 35 அடி வரைக்கும் இன்னோரு பகுதி”ன்னு என் நீச்சல் திறமையை அவன் கொடுத்த ஸ்விம் ட்ரெஸ்சை நான் போட்டுகிட்டு நின்ன ஸ்டைல பார்த்தே கண்டுபிடிச்சிட்டான். அவனை அமெரிக்காவின் துப்பறியும் சாம்புன்னு அறிவிக்கலாம்னா அவனுக்கு பாவம் தமிழ் தெரியாதேன்னு விட்டுட்டேன். மகா ஜனங்களே காசு நிறைய இருந்தா இப்படி ஸ்நார்கலிங்குகெல்லாம் பணம் கட்டாம என்கிட்ட கொடுங்க உங்க பெண்/பையன் கல்யாணத்துக்கு குடும்பத்தோட வந்து வயிறார சாப்பிட்டுட்டு, வாய் நிறைய வாழ்த்திட்டு, ஒரு சின்ன சோப்பு டப்பா பரிசா கொடுக்கறேன்.

சரி பணத்தை கட்டிட்டோமேன்னு ஸ்நார்கலிங் போகலாம்னு தண்ணில இறங்கினா, கச்சா முச்சான்னு காலெல்லாம் கல்லு கல்லா குத்துது, சரி நம்ம ரேஞ்சுக்கு இதுலெல்லாம் போகமுடியாதுன்னு வெளில வரலாம்னா, நம்ம வீட்டுக்காரம்மா, “ஏங்க கொடுத்த காசுக்கு ஒரு தடவை நல்லா தண்ணில நனைஞ்சுட்டாவது வாங்க, இப்படி வெறும வந்தா அக்கம் பக்கத்துல பார்த்தா நம்மள பத்தி தப்பா நினைப்பாங்க” ன்னு அன்பாக எடுத்து சொன்னதும், சரி நம்மள வெச்சு இன்னிக்கு காமெடி பண்ணரதுன்னு முடிவு பண்னிட்டாங்கன்னு தெரிஞ்சுது. நானும் குட்டைல ஊறின ஒரு ஜந்து மாதிரி எவ்வளவு நேரம்தான் இருக்கரது, சின்ன சின்ன வாண்டுங்கள்லாம் சூப்பரா நீச்சல் அடிக்கும் போது, நமக்கு அது தெரியாதுன்னு அவங்களுக்குத் தெரியரதுக்கு எவ்வளவு நேரம் ஆகும், சொல்லுங்க. நாம பள்ளிக்கூடத்தில வெளில முட்டி போட்டு கிட்டு இருக்கர அழகைப் பாத்து டீச்சரே “ஹூம் போனா போகுது நாளைக்கு ஒழுங்கா பாடம் படிச்சிட்டு வந்திடுன்னு” சொல்ல வெச்சவங்களாச்சே, ஒரு 30 நிமிஷத்துக்கு அப்புறம் எங்க வீட்டில “ஏங்க இப்படியே தண்ணில இருந்தா உடம்புக்கு ஏதாவது வந்திடப் போகுது, போதும் வந்திடுங்க”ன்னு சொல்ற வரைக்கும் தண்ணிலயே இருந்து மைக்கேல் பெல்ஃப்ஸ், பதக்கம் வாங்கிட்டு வந்த ஸ்டைல் தோக்கரமாதிரி வந்தம்ல.

அந்தத்தீவு ஆனா அநியாயத்துக்கு அமைதியா இருக்குங்க. அங்கு கடை போட்டிருந்த பல பேர எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சா, அவங்க எல்லாம் கப்பல்ல வேலை செய்யரவங்க. இது கப்பல் கம்பெனியோட சொந்தத் தீவு அதனால கப்பல்ல மக்களை கொண்டுவரும்போது, கடைக்கு வேலைக்கும் ஆட்களையும் கொண்டு வந்துடராங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா, இது எப்படி இருக்கு.

இங்க ஒரு க்ளாஸ் பாட்டம் ட்ரிப்ன்னு ஒன்னு இருக்கு கண்டிப்பா போய் பாருங்க, தண்ணி ஸ்படிகம் மாதிரி இருக்க, அதுல இருக்கர மீன்களை பாக்கரது அழகோ அழகு. அப்பப்ப சுறா – பயப்படாதீங்க நம்ம நடிகர் விஜய் இல்லை, நிஜ சுறாமீன், டால்ஃபின், கடல் பசு எல்லாம் பாக்கலாம். இந்தத் தீவுல நம்ம குழந்தைகளை கொஞ்சம் காபந்து பண்ணி கூட்டிகிட்டு போய், கூட்டிகிட்டு வரணும். அங்கங்க சில பல இளஞ்சோடிகள் ரொம்ப ‘அன்யோன்யமா’ இருப்பாங்க, அவ்வளவா நல்லது இல்லை சொல்லிட்டேன்.

ஆஹா ஆனந்தமா இருக்கேன்னு அங்கங்க கட்டித் தொங்க விட்டிருக்கர தூளியில கொஞ்சம் படுத்தா அட அட அந்த சுகமே தனிங்க. தூளின்னா என்னவா? அதாங்க ஹம்மாக். என்னங்க இது தமிழ் பாடத்துக்கு விளக்கமா கோனார் நோட்ஸ் கேக்கர இஸ்கூல் பசங்க மாதிரி கேள்வி கேக்கரீங்க.

ஆமா கதையை எங்க விட்டேன், ஆங் தூளில படுத்துகிட்டு ஒரு சின்ன தீவுல காத்து வாங்கிகிட்டு இருந்தேன், பட்டுன்னு எங்க வீட்டுகாரம்மா வந்து “என்னங்க இன்னிக்கு ஃபார்மல் நைட் அதனால கப்பலுக்கு போய் நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டுதான் சாப்பிட போகனும் ஞாபகம் வெச்சுக்கங்க”ன்னு சொல்லி ஃப்யூஸை பிடிங்கிட்டாங்க. ஃபார்மல் ட்ரெஸ் போட்டுகிட்டு போய் சாப்பிடனும்னா கோட்டு டை போட்டு, கல்யாண ரிசப்ஷன் போல அலங்காரம் பண்ணிகிட்டு போகனும்னு அர்த்தம். எந்த மடையன் இப்படி ஒரு ஏற்பாடு பண்ணினானோ அவனை கொஞ்சம் தனியா கவனிக்கனும். சும்மா சொகுசு கப்பல் ஏறி பஹாமாஸ் பாத்தமா, போக வர கப்பல்ல சுத்தி சுத்தி வந்தமா, தேவைப்பட்ட போதெல்லாம் சாப்பாடு அறைக்கு போய் கிடைச்சதையெல்லாம் சாப்பிட்டமா, நல்லா நாலு அஞ்சு பவுண்டு எடையை ஏத்தினமான்னு இல்லாத, இப்படி கோட்டு டைய்ன்னு படுத்தராங்க. நாங்க போன கப்பல் பரவாயில்லையாம், என் மனைவிக்கு தெரிஞ்ச ஒருத்தர் இது மாதிரி ஒரு கப்பல்ல போகனும்னு எடையை குறைச்சுட்டுப் போனாங்களாம், அப்படி ஒரு கண்டிஷன் இருந்த்தாம் அவங்க கப்பல்ல.

ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லாம விட்டுட்டேன். கப்பல்ல அங்கங்கே காமிராவும் கையுமா 4-5 ஆட்கள் அலைவாங்க இங்கன நில்லுங்க அங்கன நில்லுங்கன ஒரு படம் எடுக்கறேன்னு அலப்பரை பண்ணி படம் எடுப்பானுவ, அங்கங்க நம்மூர் கிராமத்து திருவிழால இருக்கரமாதிரி படுதா கட்டி நடுவில நம்ம எல்லோரையும் நிக்க வெச்சு படம் பிடிப்பானுவ. இவனுங்க தொல்லை இல்லாத ஒரே இடம் உங்க ரூம் மட்டும்தான். ஒவ்வொரு படமும் $19.95+ வரி, எப்படியும் ஒரு 200$ இதுல தண்டமா போயிடும தயாரா இருங்க.

நாகு, நான் அந்த சீனப் பெண் பேசியதை எழுதியதை நீங்க நிஜம்னு நம்பளைன்னு நினைக்கிறேன். உண்மையைச் சொல்லனும்னா, அந்தப் பெண்ணுக்கும் எங்களுக்கும், பிறகு எங்களுக்கும் வெயிட்டர் ஜார்ஜ்ஜுக்கும் நடந்த உரையாடலை ஒரு சின்ன காமெடி நாடகமாகவே போடலாம். ஆனால், அந்தப் பெண் மற்றும் ஜார்ஜ் போன்ற பல சீன நாட்டினர்களை அந்தக் கப்பல்ல பார்த்தேன், அவங்களோட அந்த தைரியம் நிஜமாகவே பாரட்டப் படவேண்டியதுதான். அங்கு வெயிட்டராக இருக்கும் பல இந்தியர்களையும், தமிழர்களையும் பார்த்தேன் அவர்களும் ஏறக்குறைய இவர்களைப் போலத்தான், ஆனால் ஆங்கிலம் கொஞ்சம் சுமாராகப் பேசுகிறார்கள் அவ்வளவுதான். நாகு பின்னூட்டத்தில் சொன்னது போல் 6 மாதத்திற்கு ஒரு முறை இந்தியா போகலாம். மற்ற நாள் எல்லாம் கப்பலிலேயே இருக்கிறார்கள். எப்படின்னு தெரியலை.

இந்தப் பதிவின் ஆரம்பத்தில டவலில் செய்து மாட்டியிருக்கிறது குரங்கு பொம்மை. இதை எப்படி செய்யரதுன்னு ஃப்ரீயா க்ளாஸ் எடுத்தாங்க, ஆனா அதை செய்யர வேகத்துல ஒரு மண்ணும் ஞாபகத்துல இல்லை.

சரி அடுத்த பதிவில் நசாவு, பஹாமாஸ் விஜயம் பத்தி பார்க்கலாம். அதுக்கு முன்னாடி கப்பல்ல இருந்து நாங்க பார்த்த சூரிய அஸ்தமனம் பார்த்திட்டு போங்க. நான் தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி ஒன்னும் சொல்லலைங்க, நீங்கள் படித்துக் கொண்டிருப்பது எங்களோட பஹாமாஸ் விஜயம் பத்திதாங்க. நம்புங்க.

-முரளி இராமச்சந்திரன்.

10 comments:

  1. மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. கடைசிவரையும் பிரமாதம்.

    - நரசிம்மன், சென்னை.

    ReplyDelete
  2. துப்பறியும் சாம்பு படம் எங்கே? :-)

    ReplyDelete
  3. //சூரிய அஸ்தமனம் பார்த்திட்டு போங்க. நான் தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி ஒன்னும் சொல்லலைங்க//

    :-)

    யாரய்யா அங்கே? இந்த ஆளுக்கு ஒரு பொட்டி குடு. கனவு காண்றத நிறுத்துவாரு... :-) :-)

    ReplyDelete
  4. எனக்கு இந்த கப்பல் பயணத்துல கொஞ்சங்கூட பிடிக்காதது இந்த கோட்டு சூட்டு. வேலைக்கே அதெல்லாம் போடறதில்ல. விடுமுறைக்கு போவும்போது போடனுமா...சர்த்தான் போங்கடா. என்ன பண்றது... நம்ம மட்டும் அரைநிஜார் போட்டுட்டு போனா, பாத்திரம் தேய்க்க அனுப்பிடுவான்னு ஒரு பயம் :-)

    முரளி - சூப்பரா போகுது... இன்னைக்கு சாப்பாட்டுல என்ன ஜுஸ் குடிக்க வச்சாங்க?

    ReplyDelete
  5. முரளி,

    வைரமுத்து கடலுக்கு போய் தண்ணீர் தேசம்ன்னு வச்ச மாதிரி
    நீங்கள் இதுக்கு கப்பல் தேசம்ன்னு தலைப்பு வச்சு இருக்கலாம்.
    தண்ணிக்குள்ள முத்து எடுக்கலியா ? சும்மா நின்னுட்டு தான் வந்தீங்களா ?
    என்னத்த கப்பல்ல போய் ? நம்மாளு ஒருத்தன் கூடவா சிக்கல ?
    உங்களை பார்த்த ஒருத்தர், முரளி கூட ஒரு வாரம்னு ஒரு மெகா தொடர் எழுத போறாராம்.
    உஷாரா இருங்க சொல்லி போட்டேன்.

    எங்க வீட்டில குரங்கு பொம்மை அழகா இருக்கு, அது எப்படி செய்றதுன்னு கேட்டு வாங்கன்னு
    ஒரே நச்சரிப்பு. அதை இங்க சொல்லிடுங்க, இல்லேன்னா உங்கள் வீட்டுக்கு வந்து விடுவாங்க.

    வேதாந்தி

    ReplyDelete
  6. நாகு,
    நரசிம்மன் சாருக்கு நன்றியைச் சொல்லிடுங்க.

    என்னாது எனக்கு ஒரு பொட்டியா, ஹை, என்னங்க நான் எப்பங்க உதய சூரியனைப் பத்தி தப்பா பேசினேன். அவரு நல்லவரு வல்லவரு, நாலுந் தெரிஞ்சவரு. உதயசூரியன் வாலக.

    நாகு: "யோவ் பொட்டி அம்மா கொடுக்கராங்க"

    முரளி: "என்னாது அம்மாவா, சொல்லவேயில்லை. உதயசூரியன் ஊத்திகிச்சு. உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கே அளித்து குடும்ப ஆட்சிக்கு மூடுவிழா நடத்துங்கள். புர்சி தல்வி வால்க."

    இது எப்ப்ப்புடி.

    என்னது இன்னைக்கு சாப்பாட்டுல என்ன ஜூஸா? தண்ணி, லெமனெட் இதத் தாண்டி ஏதாவது கேட்டீங்க சார்ர்ர்ர்ர் னு அந்தப் பொண்ணு ஆரம்பிச்சுடும்.

    வேதாந்தி: பதிவிலயே எழுதிட்டேனே, அவங்க சொல்லித்தந்த வழிமுறை ஞாபகமெல்லாம் வெச்சுக்க முடியாத படி பயங்கர வேகமா செஞ்சுட்டு "ஆங் ஆச்சு" ன்னு சொல்லிட்டு வேற வேலைக்கு போயிட்டாங்க. எங்க வீட்டுக்கு எப்பவேணா வரலாம், எனக்கும் வேதாந்தி யாருன்னு தெரிஞ்சுடும்.

    முரளி

    ReplyDelete
  7. வேதாந்தி,

    வைரமுத்து கடலுக்கு போய்தான் தண்ணீர் தேசம் எழுதினாரா இல்லை .....

    ஓ என்னை பார்த்ததுக்கே ஒருத்தர் என்னோட ஒருவாரம்னு மெகாத்தொடர் எழுதப்போறாரா, ஐயோ பாவம் அவர் தலையெழுத்து யார்கிட்ட அடிவாங்கப் போறாரோ.

    முரளி.

    ReplyDelete
  8. முரளி,

    மிகவும் ரசிச்சு படிச்சேன். வெகு சுவையாய் போயிண்டு இருக்கு உங்க பஹாமாஸ் பயணம்.

    ReplyDelete
  9. வடுவூர் குமார், வருகைக்கு நன்றி. சாம்பு படம் ஹி ஹி எடுக்க மறந்திடுச்சு. நாம ஸ்நார்கலிங்ல தீவிரமா இருந்ததில அவரைப் படம் எடுக்கத் தோணலை.

    முரளி.

    ReplyDelete
  10. மீனா,
    நன்றி. சில இலவச குறிப்புகள் பதிவு 5-ல வருது அதுவரைக்கும் விடாம படிங்க.

    முரளி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!