Monday, September 07, 2009

பத்திரமான இடம்

"மணப்பாறை மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுது போடு சின்ன கண்ணு"

என்ற பாடல் பிரபலமானது.

சினிமா பாடல்களை எல்லாம் "டப்பாங்குத்து பாட்டு" என்று வெறுத்து தள்ளும் சங்கீத ரசிகர்களை கூட சற்று நேரம் காது கொடுத்து கேட்கச் செய்யும் பாடல் அது. எல்லாவற்றுக்கும் மேலாக பாட்டில் சொல்லப்படும் செய்தியையும் கவனிக்க வேண்டும். கிராமிய பின்னணியில் அமைந்த கதைக்கு, மருதகாசி போன்ற பாடல் ஆசிரியர்கள் இப்படி எல்லாம் பாடல் எழுதினார்கள் என்ற விஷயம் இன்றைய இளம் ரசிகர்களை வியக்க வைக்கும். இப்படி பட்ட நல்ல செய்திகள் மருதகாசியின் பாடல்களில் நிறையவே இருக்கும்.

நிலத்தில் எப்படி பாடுபட வேண்டும், எப்படி விளைச்சலை பாதுக்காக்க வேண்டும் என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போவார். கடைசியாக, கிடைத்த பலனை பாதுகாப்பாக வைக்க மருதகாசி சொல்லும் முறைதான் இங்கே முக்கியம்.

"சேத்த பணத்தை சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக்கண்ணு"

ஏன் அம்மா கையில் கொடுக்க வேண்டும்?

"அவங்க ஆறை நூறா ஆக்குவாங்க செல்லக்கண்ணு" என்ற வரியுடன் பாடல் முடியும்.

சம்பாதித்தால் போதுமா? சீராக செலவு செய்து சிக்கனமாக வாழ வேண்டாமா? சம்பாதித்த பணத்தை வீட்டில் போனவுடன் மனைவி கையில் கொடுப்பதுதான் பாதுகாப்பு என்ற பாடத்தை பலபேர் சொல்வதுண்டு.வாங்கிய பணத்தை முனை முறியாமல் மனைவியிடம் கொடுத்துவிட்டு தன கைச் செலவுக்கு கூட மனைவியிடம் கைநீட்டி வாங்கி வாழும் அப்பாவி ஆண்கள் பலர் உண்டு. குடும்பத்தில் இரண்டு பேரும் சம்பாதித்தால் நிலைமை வேறு. யார் கை ஓங்கி நிற்கிறதோ, அவர்கள் ஆதிக்கம் நிலைக்கும். மனைவியிடம் எல்லா காசையும் கொடுத்து விட்டு நிற்கும் ஆண் பிள்ளைகளை கேலியாகவும் பேசுவதுண்டு. எது சரி என்பது வேறு விஷயம். ஆண் செலவாளியாக இருந்தால் நிதி நிர்வாகம் பெண்ணிடம் இருப்பது ஒரு வகையில் நல்லதுதானே. ஆனாலும் பெண்களிடம் பணத்தை கொடுத்துவிடுவதை கேலி செய்வது இன்றும் தொடர்கிறது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பெயரை இன்றும் சிலராவது நினைத்துக் கொண்டிருப்பார்கள். சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்டு சிறை சென்றவர். சுதந்திர இயக்க பாடல்களை பாடியவர். அவர் எழுதிய "மலைக்கள்ளன்" பிற்காலத்தில் திரைப்படமாக வெளி வந்தது.

இந்த நாமக்கல் கவிஞருக்கு பாராட்டு மற்றும் நிதி அளிப்பு விழா ஏற்பாடாகி இருந்தது. நிகழ்ச்சியில் ராஜாஜி நிதி முடிப்பை நாமக்கல் கவிஞர் கையில் கொடுத்தார். காமிராக்காரர்கள் போட்டோ எடுத்து முடித்தார்கள். ராஜாஜி பேச்சை தொடங்க மைக் அருகில் சென்றார். அந்த நேரத்தில் கவிஞர் நிதி முடிப்பை அருகில் இருந்த தன் மனைவி கையில் கொடுத்தார்.

இதை பார்த்த ராஜாஜி பேச்சை இப்படி தொடங்கினார். "பணம் போகவேண்டிய இடத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்து விட்டது. கவலை வேண்டாம்" என்றார்.

கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது.

மு. கோபாலகிருஷ்ணன்

4 comments:

 1. அருமையான பதிவு, கோ.கி. அவர்களே. நல்ல பாடலை நினைவூட்டியதற்கு மிகவும் நன்றி. பாடியது சீர்காழிதானே? அந்தக் காலத்தில் ஊர் பெயர் போட்டு எழுதினாலும் விஷயம் நிறைய இருக்கும். இப்போது மாமனுக்கு மயிலாப்பூரும், பேட்டை ராப்பும்தான். ஓசைக்காக வார்த்தைச்செருகல் தவிர வேறு ஒன்றும் இல்லை.


  இங்கே ப்ளாக்ஸ்பர்கில் நாமக்கல்லாரின் மகளை சந்தித்தது நினைவுக்கு வருகிறது. நாமக்கல்லாரின் பேத்தியும் மக்களை மகிழ்விக்கும்வகையில் ஸ்டேன்ட் - அப் காமெடி செய்கிறார் என்று கேள்வி.

  மேலும் பல இசையுலக சம்பவங்களை கேட்க காத்திருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
 2. அய்யா,

  இது உங்களுக்கே நல்லா இருக்கா? இவ்வளவு நல்லா ஒரு பதிவை ஆரம்பிச்சு அரைபக்கம் எழுதிட்டு படக்குனு முடிச்சுட்டீங்களே. விஷயங்கள் பல இருக்கர நீங்களே அரை பக்கம் எழுதினா, என்னை மாதிரி ஆட்கள் இனிமே துணுக்குதான் எழுதனும் போல இருக்கு.

  பதிவு அறுமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல் - மக்களைப் பெற்ற மகராசி படம் - பாடியது டி.எம். சௌந்தரராஜன். நாகு சொன்னது போல் சீர்காழி இல்லை.

  அடுத்து ஜெயகாந்தன் பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன். எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சொன்னேன், தமிழ் சங்கத்தின் செயலாளரை சொல்லவில்லை.

  அன்புடன்,

  முரளி

  ReplyDelete
 3. http://www.raaga.com/player4/?id=154670

  சீர்காழி பாடிய பாட்டை இப்படி மாத்திட்டாங்களே :-)

  ReplyDelete
 4. நாகு,

  என்ன சொல்ல வரீங்க, தப்பா பேர் போட்டுட்டாங்கன்னா? ஓ கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்னா? சரி சரி புரிஞ்சுடுச்சு.

  முரளி.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!