Wednesday, February 13, 2008

வேண்டும்!

நதியோடு ஜதிபோட்டு நான் ஆட வேண்டும் ;
நட்சத்திரப் பூப்பறித்து நான் சூட வேண்டும் !
வான் நிலவைக் கைவிளக்காய் நான் ஏந்த வேண்டும் ;
வானவில்என் வாசலிலே தோரணமாய் வேண்டும் !

கதிரவன்என் கவிதையில்தன் கனல் மறக்க வேண்டும் - நான்
காற்றாகிக் குழல் நுழைந்து மனம் மயக்க வேண்டும் !
மணம்வீசும் மலராகி நான் சிரிக்க வேண்டும் - நான்
ரீங்கார வண்டாகித் தேன் குடிக்க வேண்டும் !

சின்னச்சிற் றோடையாய்ச் சிலுசிலுக்க வேண்டும் - நான்
புத்தம்புது வெள்ளமாய்ப் புவி தழுவ வேண்டும் !
வன்னச்சிட்டுக் குருவியாய்ச் சிறகடிக்க வேண்டும் - நான்
சிறகடித்து மனம்விரித்து வான் அளக்க வேண்டும் !

பாறைக்குள் பச்சையாய் நான் துளிர்க்க வேண்டும் - நான்
பாசமுடன் உயிர்கள் தமை நேசிக்க வேண்டும் !
அன்பென்னும் ஆதார ஸ்ருதியாக வேண்டும் - நான்
ஆசைகளைக் கடந்துலகில் அறம் வளர்க்க வேண்டும் !

--கவிநயா

8 comments:

  1. ஓ.. இங்கேதான் இருக்கீங்களாக்கும் :-) நல்லாருக்கு...

    ReplyDelete
  2. கவிநயா - கவிதை அற்புதம்.
    நீங்கள் இங்கே நிறைய எழுத வேண்டும்!
    நாங்கள் படித்து மகிழ வேண்டும்!
    நீங்கள் கதைகளும் எழுத வேண்டும்!
    அனைத்து கலைகளையும் தொடர்ந்து கலக்க வேண்டும்!

    சேது - வாராது வந்த மாமணியைத் துரத்தாதீர்கள் :-) கவிநயா உங்களிடம் இருந்து ஒளிந்து கொண்டிருப்பது போல இருக்கிறது!!!

    ReplyDelete
  3. சேது, நாகு! ரொம்ப நன்றி!

    சேது, நீங்க நம்புவீங்களோ மாட்டீங்களோ, இதை போஸ்ட் பண்ணினப்ப உங்கள நினைச்சுக்கிட்டே எழுதினேன் :)

    ReplyDelete
  4. பாரதியார் ப்ராப்பர்டியா வேண்டும் என்று பாடினார். நீங்க இயற்கையை வேண்டியிருக்கிறீர்கள். அருமையான சிந்தனை. வாழ்த்துக்கள் கவிநயா.

    ReplyDelete
  5. கவிநயா,

    அருமையான கவிதை. பிறவா வரம் வேண்டும், என்று பாடியவரும் உங்களைப் போலவே வேண்டும் வேண்டும் என்று பல சொல்வார், அது போல இக்காலகட்டத்திற்கு தேவையான வேண்டும் என்பதை வரிசைப் படுத்தியிருப்பது அருமை.

    'வன்னச்சிட்டுக் குருவியாய் ' என்பது 'வண்ணச்சிட்டுக் குருவியாய்' என்றிருக்க வேண்டுமோ?

    என் கதைகளில் 'ர' வும் 'ற' வும் பல இடங்களில் இடம் மாறி இருக்கிறதாக பொதுவான ஒரு குற்றச்சாட்டிருக்கிறது, அதனால் என் கருத்து தவறாகவும் இருக்கலாம்.

    கடைசி நான்கு வரிகள் கவித்துவமாக இருந்தாலும், மூல கவிதையோடு ஒட்டாமல் சட்டென்று கருத்து சொல்ல வந்தது போல ஏதோ ஒரு சின்ன நெருடல் இருக்கிறது.

    எனக்கு உங்கள் கவிதையை எடை போடும் அளவிற்கு கவித்துவம் கிடையாது. (சதங்கா, ஸ்ரீலதா போன்றோர் செய்யலாம், அவங்க ரெண்டு பேரும் அடிக்கடி கவிதை எழுதராங்க) அதனால், எனது கருத்துக்களில் பிழை இருந்தால், தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்.

    என்னை போல ஒன்னு ரெண்டு பேர் இங்க இப்படி தப்பா விமர்சனம் எழுதரோம்னு தயவு செய்து எழுதாம இருக்காதீங்க, மன்னிச்சு விட்டுடுங்க.

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  6. நன்றி சதங்கா!விரிவான விமர்சனத்துக்கு நன்றி முரளி! நீங்க எதை 'நெருடல்'னு சொல்றீங்கன்னு எனக்குப் புரியுது. என்ன செய்யறது? எனக்குக் 'கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை' அப்படின்னு வச்சுக்கோங்க :)

    'வண்ண'த்தை 'வன்னம்'னும் எழுதலாம். பாரதியாரோட 'தீராத விளையாட்டுப் பிள்ளை'யைப் பாருங்க. 'வன்னப் புதுச் சேலை தனிலே'ன்னு எழுதியிருப்பார்.

    ReplyDelete
  7. கவிநயா,

    விளக்கத்திற்கு மிக்க நன்றி.

    'வன்னச்சிட்டுக் குருவியாய்' என்ற வரிகளில் நீங்கள் சொல்ல வந்தது Colorful என்ற அர்த்ததிலா?

    அன்புடன்,

    முரளி.

    பி.கு. இந்த வண்ணம்/வன்னம் மண்டையைக் குடைய ஆரம்பித்து விட்டது. அதனால், தான் பின்னூட்டத்திற்கு ஒரு பின்னூட்டம் போட்டு விட்டேன்.

    ReplyDelete
  8. //'வன்னச்சிட்டுக் குருவியாய்' என்ற வரிகளில் நீங்கள் சொல்ல வந்தது Colorful என்ற அர்த்ததிலா?//

    ஆமாம்; அதேதான்!

    //பி.கு. இந்த வண்ணம்/வன்னம் மண்டையைக் குடைய ஆரம்பித்து விட்டது.//

    மண்டைக் குடைச்சல் தந்ததுக்கு மன்னிக்கணும். இப்பப் போயிடுச்சா? :)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!